கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

“உண்மை – அது பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. ஏனெறால் அது கிணற்றின் ஆழத்தில் இருக்கிறது”. இது கிரேக்கத் தத்துவமேதை டிமொக்ரிடஸ்-இன் கூற்று. முன்பொதுயுகம் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த டிமொக்ரிடஸ் ( Democritus) பிரபஞ்சம் குறித்த அணுக்கொள்கைக்காக அறியப்படுகிறார். அவர் உருவகித்த பிரபஞ்சம் அணுக்களால் நிரம்பியது (இவை இன்றைய அறிவியலில் நாம் அறியும் அணுக்கள் அல்லன). இவை ஓயாத இயக்கங்களில் இருக்கின்றன, ஒன்றுடன் ஒன்று மோதலாம், சிதையலாம், சிதைவிலிருந்து மீண்டும் இணைந்து உயிர்பெறலாம். இந்த அணுக்களாலும் அவற்றின் இயக்கங்களாலுமான, அவற்றுக்கிடைப்பட்ட வெளியினாலுமான இப்பிரபஞ்சத்தில் படைப்பவனுக்கான தேவை இல்லை. டிமொக்ரிடஸ் ஒரு நல்ல வரைகணித வல்லுநரும்கூட.

சாக்ரடிஸ் அவருடைய மன்னிப்பு என்ற கட்டுரையில் இப்படிச் சொல்கிறார்; “ஆரக்கிள் என்னிடம் நீ எல்லோரையும்விட மிகப்பெரிய அறிவாளி என்று சொன்னது. உண்மையில் மற்றவர்களைப்போலவே எனக்கும் ஒன்றும் தெரியாது.” ஆனால் தனக்கு ஒன்றும் தெரியாது என்று அவருக்குத் தெரியும், எனவே நாம் மற்றவர்களைவிடப் பெரிய அறிவாளிதானே! ‘யாருக்கும் எதுவும் தெரியாது, ஆனால் எனக்கு இது தெரியும் (தனக்கு ஒன்றும் தெரியாதென); எனவே எனக்குக் கொஞ்சம் தெரியும்’ இது ‘சாக்ரடிஸின் முரண்போலி’ (paradox) என அறியப்படுகிறது. அவருக்குப் பின் வந்த பல தத்துவ ஞானிகள் நம் அறிதலின் எல்லை குறித்தும் மெய்மையின் தன்மை குறித்தும் தொடர்ந்து விவாதித்திருக்கிறார்கள். அந்த அறிவுமரபில் டிமெக்ரிடஸின் கூற்று மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

தத்துவம் தொடர்ந்து கலைகளுக்கான ஊற்றாக இருந்திருக்கிறது. அந்த வகையில் பிரெஞ்சு ஓவியர் ழான்-லியான் ஜெரோம் (Jean-Léon Gérôme) வடித்த, ‘கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை’ என்ற தொடர் ஓவியங்கள் தத்துவத்தின்மீது வார்த்தெடுக்கப்பட்ட கற்பனையின் உச்ச வெளிப்பாடு என்று பலராலும் போற்றப்படுகிறது.

Jean-Léon Gérôme
Jean-Léon Gérôme (1824 - 1904)

ழான்-லியான் ஜெரோம் 1824-ல் பிரான்ஸின் கிழக்குப் பகுதியுள்ள வெஸூல் என்ற ஊரில் பிறந்தார். புகழ்பெற்ற பால் தெலரோஷ் (Paul Delaroche) என்பவரிடம் ஓவியம் பயின்றார். ஜெரோம் தன் வாழ்நாளில் இறுதிப் பகுதியில் பெரும்பாலும் சிற்பக்கலையில் கவனம் செலுத்தினார். அவருடைய ஓவியங்கள் academicism என்று சொல்லப்படும் பயில்முறையைச் சார்ந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கத்தியக் கலையுலகில் பயில்முறைக் கலைகள் கோலோச்சிக் கொண்டிருந்ததன. இது ஓவியம், சிற்பம், இசை போன்று பலவற்றுக்கும் பொருந்தும். இவ்வழிக் கலைஞர்கள் பல வருடங்கள் – அதாவது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக – தங்கள் கலையைப் பயிற்சிக்கூடங்களில் ஆழ்ந்து கற்றார்கள். அதன்கூடவே புராணங்கள், வாழ்வழிக் கதைகள் போன்றவற்றையும் அவர்கள் நன்றாக அறிந்துகொள்ள வேண்டும். இவர்கள் தாங்கள் முழுநேரக் ஓவியர்களாக மாறும்பொழுது ‘நிற்க அதற்குத் தக’ என்ற வழியில் இலக்கணங்களுக்குச் சற்றும் மாறாமல் தங்கள் ஓவியங்களை வரைந்தார்கள். ஜெரோமின் ஆசிரியர் பால் தெலரோஷ் பயில்முறை ஓவியர்களில் முதன்மையான ஒருவர். எப்படிக் கலையை ஆழ்ந்து கற்பது முக்கியமோ அதே வகையில் தேர்ந்த கலைஞர்கள் தங்கள் அடுத்த தலைமுறைக்கு அதைச் சரியாகச் சொல்லிக்கொடுக்க வேண்டியதும் பயில்முறையில் அவசியம். ஜெரோம் பிரான்ஸின் முதன்மை கவின்கலைப் பள்ளியின் (École des Beaux-Arts) ஆசிரியராக இருந்தார்.

பயில்முறை ஓவியர்கள் புராணங்களிலும் காவியங்களிலும் எழுதப்பட்ட கதைகளையும் வாய்வழி நாட்டாரக்ள் கதைகளையும் துல்லியமாக வரைந்தார்கள். இவற்றின் கருத்தமைப்பில் கற்பனைக்கு இடமில்லை என்றபொழுதும், தீட்டப்படும் ஓவியத்தின் வண்ணக்கலவை, ஒளி-நிழல் அமைப்பு, காட்சிப்பொருட்களின் இட அமைப்பு போன்றவற்றில் இவர்கள் தங்கள் திறனைக் காட்டினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் உள்ளதை உள்ளபடியே சொல்லும் பயில்முறை வழக்கில் தேயத் தொடங்கியது. பிரான்ஸில் கருத்துமுறை (Impressionism) வளரத்தொடங்கியது. கருத்தோவியக் கலைஞர்கள் துல்லியத்தைப் பின்தள்ளி ஓவியம் காண்பவர் மனதில் தோற்றுவிக்கும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கினார்கள். இலக்கணம் மாறாத வழிவந்த ஜெரோம் கருத்தோவியங்களை வெறுத்தார். தன்பள்ளியில் அவற்றுக்கு இடமில்லை என்று தடுத்தார்.

காலம்தோறும் எழுதப்பட்ட இதிகாச புராணங்களும் நாட்டார் கதைகளும், அவற்றில் ஊடாடும் தத்துவங்களும் ஓவியம், சிற்பம் மற்றும் தொடர்புடைய கலைகளுக்கு கருத்தூற்றுகளாக இருந்திருக்கிறன. ஐரோப்பிய பயில்முறை கலைஞர்களுக்கு இவையே ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்கான ஆதாரங்களாக இருந்தன. ஜெரோம், டிமொக்ரடீஸின் தத்துவக்கூற்றை நான்கு தொடர் ஓவிங்களாக வரைந்தெடுத்தார்.

மெய்யும் பொய்யும் ஒரு நாள் சந்தித்துக் கொண்டன. பொய் மெய்யிடம் “இன்று இனிமையான நாள்” என்றது. மெய் வானத்தைப் பார்த்தது, நீலவானம் அற்புதமாகக் காட்சியளித்தது; ஆம் என ஒத்துக்கொண்டது. மெய்யும் பொய்யும் நீண்ட நேரம் உரையாடி, ஒரு கிணற்றடியை வந்தடைந்தன. பொய் மெய்யிடம் “கிணற்று நீர் நன்றாக இருக்கிறது, நாமிருவரும் இறங்கிக் குளிப்போமே” என்றது. சற்று சந்தேகத்துடன் மெய் கிணற்றுநீரைத் தொட்டுப் பார்த்தது, அது உண்மையிலேயே இதமாக இருந்தது. இருவரும் கிணற்றில் இறங்கிக் குளிக்கத் தொடங்கினார்கள். சில நேரம் கழித்துச் சடுதியில் வெளிவந்த பொய், மெய்யின் ஆடைகளை எடுத்து அணிந்துகொண்டு ஓடிவிட்டது. கோபத்துடன், ஆடைகளின்றி வெளிவந்த மெய்யின் கண்களில் பொய் தட்டுப்படவேயில்லை. ஆடைகளற்ற மெய்யைப் பார்த்த உலகம் வெறுப்புடனும் கோபத்துடனும் தன் பார்வையைத் திருப்பி மெய்யைத் தவிர்க்கத் தொடங்கியது. பாவம், மெய், வெட்கத்துடனும் சினத்துடனும் மீண்டும் கிணற்றுக்குள் ஒளிந்துவிட்டது. அன்றிலிருந்து உண்மையின் ஆடைகளைப் போர்த்த பொய், உண்மை எனவே உலகின் தேவைகளை நிவர்த்தி செய்துகொண்டு வலம்வந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் ஆடைகளற்ற அப்பட்டமான மெய்யை நேரில் சந்திக்கும் திராணியும் விருப்பமும் இந்த உலகிற்கு இல்லாமலாகிவிட்டது.

இது பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பிய வாய்வழிக் கதை. இது டிமாக்ரடீஸின் “உண்மை – அது பற்றி நமக்கு ஒன்றும் தெரியாது. ஏனெறால் அது கிணற்றின் ஆழத்தில் இருக்கிறது” என்ற தத்துவக் கூற்றின் கதைவடிவமும்கூட. இதை ஜெரோம் 1895 ஆம் ஆண்டு நான்கு தொடர் ஓவியங்களாக வரைந்தார். 1896-ஆம் ஆண்டு ஷாம்ப் எஸீஸ் காட்சிக்கூடத்தில் (Champs Elysées Salon) ஜெரோம் தொடரின் முதல் ஓவியமாக ‘பொய்யர்களாலும் வேடதாரிகளாலும் கொல்லப்பட்ட உண்மையின் ஆன்மா கிணற்றின் ஆழத்தில் கிடக்கிறது’ (Mendacibus et histrionibus occisa in puteo jacet alma Veritas) என்று தலைப்பிட்ட ஓவியத்தைக் காட்சிப்படுத்தினார். தொடர்ந்து ‘கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை’ (La Vérité sortant du puits) என்ற ஓவியம் இத் தொடரில் பெருத்த வரவேற்பை பெற்றது. ‘கிணற்றின் அடியிலிருக்கும் உண்மை’ (La Vérité au fond d’un puits) என்ற தலைப்பில் இன்னும் இரண்டு ஓவியங்களையும் அதே ஆண்டில் காட்சிப்படுத்தினார். இந்த நான்கு ஓவியங்களும் நெய்ப்பூச்சு (oil paint) கொண்டு வரையப்பட்டவை.

கொல்லப்பட்ட உண்மையின் ஆன்மா கிணற்றின் ஆழத்தில் கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை கிணற்றின் ஆழத்தில் இருக்கும் உண்மை கிணற்றின் ஆழத்தில் இருக்கும் உண்மை கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை

கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை – ஓவியத்தில் முதிர்ந்த செவ்வியல்கூறுகளை அடையாளம் காணமுடியும். உள்ளதை உள்ளபடியே வரையவேண்டிய எல்லை பயில்முறை ஓவியர்களுக்கு விதிக்கப்பட்டது. ஆனாலும் ஒளியையும் நிழலையும் சரியான அமைப்பில் பயன்படுத்திக் கருத்துக்கு மேலூட்டம் தருகிறார் ஜெரோம். உதாரணமாக, வலமேற்புறத்தில் சூரிய ஒளி காணப்படுகிறது. காட்சியின் முதன்மையான உண்மை எனும் பெண்ணின்மீது இல்லாமல் அவளின் பின்புறம் இருக்கும் சுவறில் ஒளியைத் தெறிப்பதன்மூலம் உண்மை இன்னும் இருளில்தான் இருக்கிறது என்ற கருத்து ஆழப்படுத்தப்படுகிறது. வரைவியல் (geometry) அடிப்படையில் அமைந்த நேர்கோடுகளும் வட்டக்கீற்றுகளும் செவ்வியல் ஓவியங்களின் அழகுக்கூறுகளில் முக்கிய இடமுண்டு. இங்கே சுவற்றின் செங்கல் கிடைமட்டத்திலும் செங்குத்தாகவும் கொண்ட கோடுகளால் ஆனது. அதேபோல கிணற்றின் மேலேயிருக்கும் சகடையின் வட்டவடிவம், அதைத் தாங்கும் கம்பியின் செங்குத்து வடிவம் இரண்டும் முற்றிலும் வடிவவியல் கூறுகளைக் கொண்டவை. இவற்றுக்குச் சற்றே மாறுபாடாக நெகிழ்தன்மையியுள்ள கிணற்றுக்கயிறு காட்டப்பட்டிருக்கிறது. கிணற்றின் அடிப்பகுதியின் வட்ட வடிவம் அதையொட்டிய படியின் செவ்வக அமைப்பு போன்றவை முற்றிலும் வரைவியல் அடிப்படையில் ஆனவை. செம்பழுப்புச் சுவர்கற்களும், கறுப்பு நிறச் சகடை, கயிறு அவற்றைத் தாங்கும் இரும்புக்கம்பி, பசுமையான தாவரங்கள் இவற்றின் பின்புலத்தில் முன்வைக்கப்படும் உண்மை எனும் பெண்ணின் வெளிறிய உடல், காட்சியின் முழுகவனத்தையும் அவள்மீது ஈர்க்கிறது. இங்கும் அவளது கருங்கூந்தல் வண்ணமாறுப்பாட்டை அழகுணர்வுடன் காட்டுகிறது. முழு ஓவியத்திலும் தூரிகையின் தீற்றுகள் சற்றும் வெளிப்படாமல் சீராக வரையப்படுவது ஜெரோம் பயின்ற பயில்முறை ஓவியக்கலையின் முக்கியக்கூறு. பின்னாட்களில் வந்த பிரஞ்சு கருத்துமுறை ஓவியர்கள் இதை உடைத்தெடுப்பதற்காகவே தூரிகைக் கீற்றுகளை முதன்மையாகவும் தெளிவாகவும் வரைந்தார்கள். கிணற்றுக்கு முந்தைய தரைவெளி, பெண்ணின் மைய அமைப்பு, பின்புலத்தில் வரும் தாவரங்கள் மற்றும் சுவர்கள் என்று முன்-மையம்-பின்புலம் என்ற தெளிவான செவ்வியல் வரையறைகளுடன் அற்புதமாக வரையப்பட்ட ஓவியம் இது.

தன் ஆடைகளைக் கண்டெடுக்க வெளிவரும் உண்மையின் முகத்தில், பொய்யைக் காணாத திகைப்பு அற்புதமாக வெளிப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டு பயில்கலை ஓவியர்கள் நிர்வாணத்தை அப்பட்டமாக வரையத் தொடங்கினார்கள். இதைப் பயில்விக்க நிர்வாண முன்மாதிரிகளை அமைப்பில் இருத்தி வட்டமாக மாணவர்கள் உட்கார்ந்து அந்தப் பெண் அல்லது ஆணின் உடற்கூறுகளை முழுவதுமாகப் பயின்று வரைவார்கள். அந்தக் காலங்களில் பெண் ஓவியர்கள் இவற்றில் பங்குபெற தடைகள் இருந்தன. பிரான்ஸில் துவங்கிய இந்த பயில்முறை ஓவியக்கலை பின்னர் இங்கிலாந்து, டென்மார்க் போன்ற நாடுகளிலும் பிரபலமாகத் தொடங்கியது.

ஜெரோமின் உண்மை தொடர் ஓவியங்கள் பலவாறாக விமர்சிக்கப்படுகின்றன. ஏற்கனவே சொன்னபடி இவை டிமொக்ரடிஸின் தத்துவக்கூற்று மற்றும் சாக்ரடீஸ் முரண்போலி இவற்றின் ஓவிய வடிவங்களாகப் பெரிதும் புரிந்துகொள்ளப்படுன்றன. மறுபுறத்தில் பிரான்ஸில் பயில்முறையைப் பின்தள்ளி வெகுவாக வளர்ந்து கொண்டிருந்த கருத்துமுறை ஓவியங்களின்மீதான ஜெரோமின் வர்ணனையாகயும் முன்வைக்கப்பட்டது. கலைகளில் முதன்மையான பயில்முறை என்னும் உண்மையைப் பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டுக் கலை என்னும் ஆடையைப் போர்த்திக்கொண்டு, கருத்துமுறை என்னும் போலிக்கலை உலகில் உலாவருதாக இந்த ஓவியங்கள் சித்தரிப்பதாகச் சொல்லப்பட்டது. அதே காலகட்டத்தில், பிரெஞ்சுப் படையின் தலைவர்களுள் ஒருவரான ஆல்ஃப்ரெட் ட்ரேஃபஸ் (Alfred Dreyfus) பிரஞ்சு இராணுவ இரகசியங்களை ஜெர்மானியர்களுக்குச் சொல்லியதாகக் குற்றம்சாட்டப்பட்டு பலவாறாக வதைக்கப்பட்டார். இவர் ஒரு யூதர், இது சிறுபான்மையினருக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடும்கூட. கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்குப் பிறகு இந்தத் தேசத்துரோகக் குற்றங்களுக்கு ஆதாரம் ஏதுமில்லை என்று நிரூபணமாகியது. ட்ரேஃபஸ் விவகாரம் (L’Affaire Dreyfus ) என்று அறியப்பட்ட இது, அரசியல், இராணுவம், சமூக அமைப்பு என்ற பலவகைகளில் பிரான்சு நாட்டையே உலுக்கியது. சிறுபான்மையினர்மீது பிரான்ஸ் சமூகம் இழைக்கும் அநீதிகளின் மாதிரியாக இந்த விவகாரம் அறியப்பட்டது. புகழ்பெற்ற நாவலாசிரியர் எமில் ஸோலா (Émile Zola) ட்ரேஃபஸுக்கு இழைக்கப்படும் அநீதியை ஊடகங்களில் வலுவாக முன்வைத்தார். தொடர்ந்து, புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணித்த ஸோலாவின் சாவுக்கும் இதுவே காரணமாகச் சொல்லப்பட்டது. எனவே அந்த நாட்களில் கலை, இலக்கியவாதிகளின் படைப்புகள் ட்ரேஃபஸ் விவகாரத்தின் அடிப்படையிலும் புரிந்துகொள்ளப்பட்டன. ஜெரோம் கிணற்றிலில் உழலும் உண்மை என வரைந்தது ட்ரேஃபஸ் விவகாரத்தைப் பற்றிய அவரது விமர்சனம்தான் என்றும் சொல்லப்பட்டது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இதையும் பொதுவில் ஜெரோமின் செயற்பாடுகளையும் ஆய்ந்த பல வரலாற்றாசிரியர்கள் இறுதியாக ட்ரேஃபஸ் விவாகரத்துக்கும் ஜெரோமின் ஓவியங்களுக்கும் தொடர்பில்லை என்று முடிவுக்கு வந்தார்கள்.

இப்படிப் பலவிதங்களில் புரிந்துகொள்ளப்படுவதாலும் வெறும் ஓவியமாகவே பார்த்தாலும் செவ்வியல் கலைகளின் உச்சங்களில் ஒன்றாகக் கருதப்படுவதாலும் ஜெரோமின் ‘கிணற்றிலிருந்து வெளிவரும் உண்மை’ பிரான்ஸின் மோனாலிஸாவாக, உலகத்தின் முதல்தர ஓவியங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. முதன்மையான கலை, பிற கலைஞர்களுக்கும் படைப்பூக்கம் தரவேண்டும். அந்த வகையில் ஜெரோமின் ஓவியத்தைப் பின்பற்றி எட்வார் டெபா-பொன்ஸா Édouard Debat-Ponsan (1847-1913) இரண்டே வருடங்களுக்குப்பின் ‘அவள் மூழ்கிடவுமில்லை’ (Nec Mergitur) என்ற தலைப்பில் அந்தத் தொடரை நீட்டித்தார். தொடர்ந்து Paul Baudry (1828-1886), Antoine François Dezarrois (1864-1939) and Eugène André Champollion (1848-1901), Guillaume Dubufé (1853-1908), Jean-Jacques Henner (1829-1905), Jules Joseph Lefebvre (1836-1911) உள்ளிட்ட பல முதன்மை கலைஞர்கள் ஜெரோமின் கருத்தில் ஊக்கம்பெற்ற ஓவியங்களையும், செதுக்குச் சிற்பஙகளையும் வடித்திருக்கிறார்கள்.

– – –

solvanam.com