February 3, 2023 in சமூகம் by வெங்கட்ரமணன்4 minutes
தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்காக இதுபோன்ற ஒரு வார்த்தை விளையாட்டை வடிவமைத்தால் என்ன என்று தோன்றியது. மனதில் தோன்றியவற்றைப் பட்டியலிட்டேன். இது கடுமையான சிற்றிதழ் வட்டாரக் கூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். அதே விதிகள்தான்; வார்த்தைகளின் பட்டியல்தான் மாறுகிறது.
நான் படிக்கும்பொழுது (1983ல் என்று நினைக்கிறேன்) சிற்றலையில் பன்னாட்டு வானொலிகளையும் கேட்கத் தொடங்கினேன். அப்பொழுது கும்பகோணம் போன்ற சிறிய நகரத்தில் எங்களுக்கு உலக நடப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்ள அது மிகவும் உதவியாக இருந்தது. முதலில் எல்லோரையும் போல BBC, Voice of America என்று தொடங்கிய ஆர்வம் விரைவில் Radio Netherlands, Radio Veritas (Phillipines) என்று விரிந்து பின்னர், இரண்டு பாண்ட் நெல்கோ டாபி ரேடியோவைப் பிளந்து அதில் இருக்கும் Tank Capacitorஐத் திருகுதல், பின்னர் தொலைபேசி ஆபீஸ் கொல்லையில் கிடைக்கும் மெல்லிய கம்பியை இணைத்து Long wire, Dipole, V-antenna என்று விளையாடி இரவு பன்னிரண்டு மனிக்கு இருபது நிமிடம் வரும் ரேடியோ பிரஸில், வாரத்திற்கு ஒரு முறை, ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் வரும் ரேடியோ நார்வேயின் பதினைந்து நிமிட நிகழ்ச்சி என்று துரத்துவதில் நீண்டது. அந்த நாட்கள் அற்புதமானவை.
அந்த சமயத்தில், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருக்கும் நண்பர்களின் வழிகாட்டலுடன் சோதனை ஒலிபரப்புகள், திருட்டுதனமாக பல்வேறு போராட்டக் குழுக்களின் வானொலிகள் போன்றவைகளில் ஆர்வம் வந்தது. இவற்றைத் துரத்திப் பிடிப்பது ஒரு சாதனைதான். ஒரு கால கட்டத்தில் ஈழத்திலிருந்து பல்வேறு போராளிகள் சிற்றலைகளில் வந்து போவார்கள் (Voice of Tamil Eelam, Voice of Tigers என்றெல்லாம் பெயர்கள் இருக்கும்). இதைப்போல கம்யூனிச நாடுகளை உய்விக்க முதலாளித்துவ நாடுகள் நிறைய செலவழிக்கும். அமெரிக்காவின் ருஷ்ய மொழி ஒலிபரப்பு மத்திய ஆசியா/கிழக்கு ஐரோப்பாவில் மழையாகப் பொழியும். சோவியத்தும் சற்றும் மனம் தளராமல் அதே அலைவரிசைகளில் அதி சக்திவாய்ந்த வெற்று சுமக்கும் அலைகளை (Carrier Waves) பரப்பி இரண்டின் இடையீட்டினால் வாய்ஸ் ஆப் அமெரிக்காவை கேட்க விடாமல் செய்யும். இப்படி பல சுவாரசியமான அறிவியல், தொழில்நுட்ப, நடப்புச் செய்தி, விளையாட்டு, இசை, போன்ற தகவல் களஞ்சியமாக சிற்றலை எங்களுக்கு விளங்கியது.
இன்றைக்கு இணையமும், துனைக்கோள் வழி தொலைக்காட்சியும், மலிவு விலை தொலைபேசிகளும், சிற்றலையின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டன. இந்த நிலையிலும் இன்னும் வானொலிக்கு முக்கியத்துவம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக இது தனிக்குழுக்கள் தங்கள் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதற்கும், தொழில்நுட்ப வசதிகள் இன்னும் வந்தடையாத நாடுகளில் செய்தி ஊடகமாகவும் இன்றைக்கும் கொடிகட்டி ஆட்சி நடத்திவருகிறது.
நான் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்றைக்கு பழைய தகவல் நிலையங்களுக்குச் சென்று சிற்றலை (பொதுவில் வானொலி) யாரால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது (நேரடியாக, சட்டபூர்வமாக ஒலிபரப்பும் நாடுகளைத் தவிர) என்று துருவப்போக அமெரிக்காவைப் பற்றிக் கிடைத்த சில ஆச்சரியமான தகவல்கள் இதோ;
அமெரிக்காவில் இன்றைக்கும் 1000க்கும் மேற்பட்ட இனவெறிக் குழுக்கள் வானொலியைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றை சராசரியாக ஒரு மில்லியன் நேயர்கள் செவிமடுக்கிறார்கள்.
தேசியக் கூட்டணி (National Alliance) எனப்படும் வலதுசாரி அமைப்பு 1992 தொடக்கம் சிற்றலையில் பல அதிர்வெண்களில் தங்கள் வெள்ளை நிறவெறிக் கருத்துக்களைப் பரப்பிவருகிறார்கள். இந்த ஒலிபரப்புகள் பல்வேறு உள்ளூர் ஏ.எம் மற்றும் பன்பலை வானொலிகளில் மறு ஒலிபரப்பப்படுகின்றன.
இந்த அமைப்பும் இதைப் போன்ற பிற அமைப்புகளும், அமெரிக்க எதிர்வினையாளர்களின் குரல் என்ற போர்வையில் வெள்ளை இனவெறியை உரக்கப் பரப்புகின்றன. “அமெரிக்காவின் அரசாங்கமும் இரண்டு முக்கிய கட்சிகளும் வெள்ளையர்களுக்கு எதிரானவை, இவை திட்டமிட்டே ஐரோப்பியர்களின் குடிவரவைக் குறைத்தும் ஆசியர்களின் (குறிப்பாக இந்தியர், சீனர்கள்) எண்ணிக்கையை உயர்த்தியும் வருகின்றன. இந்த நிலையைத் தடுக்காவிட்டால் அமெரிக்காவின் அதி உன்னத இனமான வெள்ளையர்கள் சிறுபான்மையினர் ஆகிவிடுவார்கள்” என்பதே இவர்களின் முதல் கூப்பாடு. இதுபோன்ற செய்திகளைப் பத்திரிக்கைகளில் எழுத முடியாது; தொலைக்காட்சியில் ஒளிபரப்ப முடியாது. ஆனால் கிட்டத்தட்ட முக்கியத்துவம் குறைந்துபோன நிலையில் வானொலியில் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்ற நிலை.
“வாத்துகளின் குரல்” என்னும் அடைமொழியோடு KUGN என்ற வானொலி பல்வேறு இனவெறி நிகழ்ச்சிகளை பரப்பியது. இதே வானொலி ஆரிகான் பல்கலைக்கழகத்தோடும் தொடர்பு கொண்டது (அவர்கள் விளையாட்டுகளுக்கு நேரடி வர்ணனை தருவது இந்த வானொலிதான்). இதை மாணவர்கள் எதிர்க்க, பல்கலைக்கழகம் KUGN உடனான தொடர்புகளைத் துண்டிப்பதாக அறிவித்தது. உடனே, பல்வேறு வெறியர்கள் இதற்கு எதிராக கொந்தளித்துப் போனார்கள். இதில் உள்ளூர் ரிபப்ளிக்கன் கட்சித் தலைவரும் அடக்கம்.
நாஷ்வில், டென்னஸியிலிருந்து ஒலிபரப்பாகும் WorldWide Christian Radio (WWCR) உலகெங்கும் கிட்டத்தட்ட நாற்பது நாடுகளில் ஒலிபரப்பாகிறது. “தேசபக்தர்கள்” என்று வர்ணிக்கப்படும் இதன் நேயர்களுக்கு அவர்கள் பிற சமயங்களைச் சேர்ந்தவர்களை ‘எப்படி நடத்த வேண்டும்’ என்று பாடங்கள் வருகின்றன. ஒக்லஹாமா குண்டு வெடிப்பிற்கு அமெரிக்க அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டியது இந்த வானொலி.
1996ல் பாப் க்ராண்ட் என்பவர் நியூயார்க் மாநிலத்திலிருந்து ஒலிபரப்பாகும் உள்ளூர் வானொலியான WOR-AM -ல் நியூஜெர்ஸியில் இந்தியர்கள் (அமெரிக்க பிராண்ட் இல்லை, இந்திய-இந்தியர்கள்) இஸ்லின் என்ற ஊரை “கல்கத்தா போன்ற கருங்குழி” (Blackhole like Calcutta) என்று வர்ணித்தார். மறுநாள் பல இந்தியர்களின் வீடுகளின் ஸ்வஸ்திகா வரையப்பட்டது. இந்தியர்களை வெளியேற வேண்டும் பயமுறுத்தத் தொடங்கினார்கள். தொடர்ச்சியாக சில அமெரிக்க கருப்பினத்தவர்களின் இல்லங்களிலும் ஸ்வஸ்திகா வரையப்பட்டது.
ஒரு காலத்தில் க்யூபாவின் குடிமக்களுக்கு சுதந்திர தாகம் ஊட்டுவதற்காக அமெரிக்க அரசின் ஆசிகளுடன் பலரும் ப்ளோரிடா மாநிலத்திலிருந்து சிற்றலை, பன்பலையைப் பயன்படுத்தி சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள். கிட்டத்தட்ட பத்து அமெரிக்க குடியரசுத் தலைவர்கள் வந்துபோன நிலையிலும் காஸ்ட்ரோ அசைக்க முடியாத சக்தியாக இருக்க, இந்த குழுக்களுக்கு இப்பொழுது தொண்டை வரண்டுவிட்டதைப் போல் தோன்றுகிறது.
ரேடியோ நெதர்லாந்தின் ஆய்வில் வெளியான தகவல்கள், பிபிஸி வானொலியின் செய்திகள் இவற்றின் அடிப்படையில் தொகுக்கப்பட்ட பட்டியல் இது.
வரும் நாட்களில் சிற்றலையின் இன்னொரு முகமான அமைதிச் சேவையைப் பற்றி எழுதுகிறேன்.
இந்த வலைக்குறிப்பு கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது. இந்த இருபதாண்டுகளில் அமெரிக்காவில் வலதுசாரி குழுக்கள் மிகவும் வலுப்பெற்றுவிட்டன. முற்றிலும் தகுதியில்லாத ஒருவரை (டொனால்ட் ட்ரம்ப்) அவர்கள் ஒரணியில் நின்று அமெரிக்கக் குடியரசு தலைவராகத் தேர்ந்தெடுத்துவிட்டார்கள். அதன் பிறகு நிலமை இன்னும் சீரழிந்துகிடக்கிறது. இவற்றில் எல்லாம் சிற்றலையின் பங்கு ஓரளவிற்காவது இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.
முதலில் பதிப்பிக்கப்பட்டது 28 அக்டோபர் 2003
Philips Radio advertisement courtesy: http://www.oldindianads.com SW Tranmistter image courtesy: Eyreland at English Wikipedia, CC BY-SA 3.0 http://creativecommons.org/licenses/by-sa/3.0/, via Wikimedia Commons