விழைந்த்தும் விளைந்ததும்
On this page
- அறிதலின் துவக்கம்
- மருந்தெதிர்க்கும் நுண்ணியங்கள்
- தானியங்கிச் சமரன்
- போர் - அண்மையிலிருந்து சேய்மைக்கு
- போர் எந்திரன் வடிவாக்கம்
- முதல் நகர்வு முழுவெற்றியல்ல
- மாறிவரும் போரின் வரையறை
- மாறிவரும் படைத்திரட்சி உத்திகள்
- போரும் அமைதியும்
- கொலைவெறியும் குற்றவுணர்வும்
- போர் எந்திரன் - நுட்ப எளிமை
- உணர்ச்சிகளற்ற போர்வீரன்
- இன்னொரு அணுப்பரவல் - அதன் மேலும்
- விதைத்ததும் விளைவதும்
(2018 மார்ச்சு 31 அன்று ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபத்தில் ‘‘அறிவியல் தமிழ்’ கருத்தங்களில் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். பின்னர் காலம் இதழுக்காக உரையாக்கம் செய்யப்பட்டது)
வயகார எதற்குக் கண்டுபிடிக்கப்பட்டது, எந்த அளவிற்குப் பயனளிக்கிறது என்பன குறித்து நான் சொல்லப் போவதில்லை, தேவையுமில்லை. ஆண்மைக் குறைபாடுக்கு வயகரா கடந்த இருபது வருடங்களாக முதன்மையான மருந்தாக இருந்து வருகிறது. ஆனால் இதே நீலநிறக் குளிகை அலாஸ்கா, மற்றும் வடகனேடிய ரெயிண்டீர் மான் இனத்தையும், கவசச் சீல்களையும் பேரழிவிலிருந்து காப்பாற்றும் மாமருந்தாக இருக்கிறது என்று நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும்?
அருகிவரும் உயிரனங்களைக் குறித்தும் நம்மில் பலருக்கும் கவலையுள்ளது. வயகராவின் துணைகொண்டு இவற்றைக் காப்பற்றலாம் என்று தற்பொழுது தெரிய வந்துள்ளது. கவலைப்படாதீர்கள், இதற்க்காக பெங்கால் புலிகளையும் வெள்ளைக் காண்டாமிருங்களையும், பனிச்சிறுத்தைகளையும் பிடித்து அவற்றுக்கு வயகரா மாத்திரைகளைத் தினமும் புகட்ட வேண்டியதில்லை. அப்படியே முயன்றாலும் அவற்றின் செயல்திறன் மிகுந்து இனம் பெருக வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. சீனாவின் பெரும் பாண்டா, இந்தியாவின் பெங்கால் புலிகள், ஆப்பிரிகாவின் வெள்ளைக் காண்டாமிருகங்கள் உள்ளிட்ட பல விலங்குகள் முற்றாக மறைந்துபோகக்கூடிய அபாயமிருக்கிறது. எனவே நாடுகள் பலவும் இவற்றைக் காக்கப் பெருமுயற்சிகளெடுத்து வருகின்றன. உயிரினங்களின் மறைவுக்கு மனித குலத்தின், குறிப்பாக ஆண்களின் செய்ல்திறனிழப்பு ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. கடற்குதிரைகள், காண்டாமிருகக் கொம்புகள், பச்சைக் கடலாமைகள், புலிகள், பனிச் சிறுத்தைகள் எனப் பல மிருகங்கள் (மனித)ஆண்களின் கலவித்திறனை மேம்படுத்த வேட்டையாடப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் அழிவின் விளிம்பிலிருக்கின்றன. இதற்கு ஒரே காரணம், கலவித்திறன் மேம்படும் என்ற ஆதாரமற்ற காரணிதான்.
அலாஸ்காவின் ரெயிண்டீர் மானின் கொம்பு ஆண்களின் கலவித்திறன் மேம்பாட்டிற்கு மருந்தாகிறது என சீனாவின் பண்டை மருத்துவத்தில் நம்பிக்கையிருக்கிறது. 1998 ஆம் ஆண்டு வயகரா அறிமுகப்படுத்தப்பட்டது, அதேவருடம் ரெயிண்டீர்கள் வேட்டை மூன்றில் இரண்டு பங்க்க்கு மேலாகக் குறைந்தது. இதே அலாஸ்கா, வடகனடா பகுதியில் காணப்படும் மிக அரிதான கவசச்சீல்களின் ஆண்குறியை உட்கொள்வது ஆண்மையை அதிகரிக்கும் எனச் சீனமருத்துவம் நம்புகிறது. 1997 ஆம் ஆண்டில் இருபதாயிரம் கவசச் சீல்கள் பிடிக்கப்பட்டு அவற்றின் ஆண்குறிகள் சீனாவிற்குக் கள்ளத்தனமாகக் கடத்தப்பட்டன. வந்தது வயகரா, அடுத்த ஆண்டிலேயே இந்த வேட்டை பாதியாகக் குறைந்துபோயிற்று. அரைக்குவளைத் தன்னீருடன் அரைநொடியில் விழுங்கக்கூடிய, விலை குறைந்த மருந்து கிடைக்கத் தொடங்கியபின் ஆப்பிக்கக் காடுகளில் காண்டாமிருகத்தையும், சைபீரியக் குளிரில் பனிச்சிறுத்தையையும் துரத்த வேண்டிய அவசியம் சீனர்களுக்குக் குறைந்துபோயிற்று. அடுத்த முறைத் தொலைக்காட்சியில் வயகரா விளம்பரம் வரும்பொழுது காண்டாமிருகத்தின் சார்பாக அதற்கு மானசீகமாக நன்றி சொல்வீர்கள் என நம்புகிறேன்.
அறிதலின் துவக்கம்
இன்றைய உலகின் அன்றாட வாழ்வில் அறிவியலின் பங்கு மறுக்கமுடியாதது. அறிவியலாளர்களின் முதன்மை நோக்கு கண்டறிதல். இயற்கை குறித்த நம் புரிதல்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சொல்வது அறிவியலின் இலக்கு. இப்புரிதல்களின் விளைவாத் தொழில்நுட்பம் உருவெடுக்கிறது. பயன்படுதன்மை நுட்பத்தின் முக்கிய காரணி. அடிப்படை அறிவிலுக்குப் பயன்பாட்டில் பெரிதும் முக்கியத்துவமில்லை. தெரியாதன தெரிதலும், தெளியாதன தெளிதலுமே அறிவியலாய்வின் இலக்குகள். அடிப்படைக் கண்டுபிடிப்புகளினால் சமூகத்திற்கு நேரடி நன்மைகள் விளைவதில்லை. வெட்டுவிளிம்பு கண்டுபிடிப்புகளினால் பயனடைய சில சமயங்களில் அரை நூற்றாண்டுக்கு மேலாகக் கூடும். உதாரணமாக, லேசர் குறித்த அடிப்படைக் கண்டுபிடிப்பு, கருத்தாக்கம் 1905-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. ஆனால் ஆய்வுரீதியான முதல் லேசர் கருவி 1960-ஆம் ஆண்டில்தான் வடிவமைக்கப்பட்டது. அப்பொழுதுங்கூட அதற்குப் பயனேதுமில்லை. வினாவைத் தேடும் விடை என்று ஒரு பத்தாண்டுகள் இதைவைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் திண்டாடினார்கள். 1974-ஆம் ஆண்டுதான் முதன்முறையாக, இன்றைக்கும் அதே பயனிலிருக்கும் பேரங்காடி பட்டைக் குறி படிப்பான் (Bar Code Reader) வடிவமைக்கப்பட்டது. இன்றைக்குத் தகவல் நுட்பம், இணையம், கணினி, தகவல் சேமிப்பு, கண் அறுவைச் சிகிச்சை, லேசர் பற்றவைப்பு, லேசர் பச்சைக் குத்துதல், லேசர் பச்சை நீக்குதல், எனப் பல வழிகளின் அது பயன்படுகிறது. அறிவியல் நுட்பமாகப் பரிணமிக்கும்பொழுது அதன் திறனை உனரத்தொடங்கும் நாம் அதை எல்லாவழிகளிலும் கையாளத் தலைப்படுகிறோம்.
இன்றைய உலகின் அன்றாட வாழ்வில் அறிவியலின் பங்கு மறுக்கமுடியாதது. அறிவியலாளர்களின் முதன்மை நோக்கு கண்டறிதல். இயற்கை குறித்த நம் புரிதல்களைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சொல்வது அறிவியலின் இலக்கு. இப்புரிதல்களின் விளைவாத் தொழில்நுட்பம் உருவெடுக்கிறது. பயன்படுதன்மை நுட்பத்தின் முக்கிய காரணி. அடிப்படை அறிவிலுக்குப் பயன்பாட்டில் பெரிதும் முக்கியத்துவமில்லை. தெரியாதன தெரிதலும், தெளியாதன தெளிதலுமே அறிவியலாய்வின் இலக்குகள். அடிப்படைக் கண்டுபிடிப்புகளினால் சமூகத்திற்கு நேரடி நன்மைகள் விளைவதில்லை. வெட்டுவிளிம்பு கண்டுபிடிப்புகளினால் பயனடைய சில சமயங்களில் அரை நூற்றாண்டுக்கு மேலாகக் கூடும். உதாரணமாக, லேசர் குறித்த அடிப்படைக் கண்டுபிடிப்பு, கருத்தாக்கம் 1905-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. ஆனால் ஆய்வுரீதியான முதல் லேசர் கருவி 1960-ஆம் ஆண்டில்தான் வடிவமைக்கப்பட்டது. அப்பொழுதுங்கூட அதற்குப் பயனேதுமில்லை. வினாவைத் தேடும் விடை என்று ஒரு பத்தாண்டுகள் இதைவைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் திண்டாடினார்கள். 1974-ஆம் ஆண்டுதான் முதன்முறையாக, இன்றைக்கும் அதே பயனிலிருக்கும் பேரங்காடி பட்டைக் குறி படிப்பான் (Bar Code Reader) வடிவமைக்கப்பட்டது. இன்றைக்குத் தகவல் நுட்பம், இணையம், கணினி, தகவல் சேமிப்பு, கண் அறுவைச் சிகிச்சை, லேசர் பற்றவைப்பு, லேசர் பச்சைக் குத்துதல், லேசர் பச்சை நீக்குதல், எனப் பல வழிகளின் அது பயன்படுகிறது. அறிவியல் நுட்பமாகப் பரிணமிக்கும்பொழுது அதன் திறனை உனரத்தொடங்கும் நாம் அதை எல்லாவழிகளிலும் கையாளத் தலைப்படுகிறோம்.
இப்படிப் பலவழிகளைக் கண்டறிய முற்படும்பொழுது அது பல பக்கவிளைவுகளையும் உண்டாக்குகிறது. ஃபைஸர் நிறுவனம் முதலில் வயகராவை இருதய வலிக்கான மருந்தாகத்தான் கண்டது. மருத்துவப் புலனாய்வில் இது நெஞ்சுவலியைக் குறைக்கப் பயனற்றது எனக் கண்டறியப்பட்டது. ஆனால், நெஞ்சுவலிக்காக இதனை உட்கொண்ட பலரும் வேறுவிளைவுகளைக் கண்டார்கள். வயகரா நீலவைரமாக ஃபைஸருக்கு இருபது ஆண்டுகளாகக் காசுபொழிந்து வருகிறது. ஆனால் எல்லா நேரங்களிலும் விளைவுகள் சுகமானவையாக அமைவதில்லை.
* * *
மருந்தெதிர்க்கும் நுண்ணியங்கள்
இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலத்தில் உலகில் சாவுக்கு முக்கிய காரணியாக இருந்தவை தொற்றுநோய்கள். பாக்டீரியாக்கள் பூஞ்சைகள், மற்றும் வைரஸ்களால் பரவக்கூடிய இவ்வகை நோய்களுக்குசீன, ஐரோப்பிய, இந்திய மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளின் தொல்மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகள்மற்றும் எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. கிராம்பு, பட்டை, லாவண்டர், பொதினா உள்ளிட்ட பலதாவரங்களின் இலைகள், பட்டைகள், பூக்கள், அவற்றின் வடிநீர்கள், மூலிகை எண்ணெய்கள் போன்றவையும் சல்ஃபர் போன்ற கனிமங்களின் குழம்புகளும் தொற்றுநோயகளுக்கு மருந்துகளாகப் பயன்படுத்தப்படன. இவற்றில் எதுவுமே தொற்றுநோய்களைப் பெரிதளவில் கட்டுப்ப்டுத்த ஏற்றனவல்ல. 1928 ஆம் ஆண்டுஅலெக்ஸாண்டர் ப்ளெம்மிங் பெனிசிலின் எனும் நுண்ணுயிர் எதிர்ப்பியைக் கண்டுபிடித்தார். தொடர்ந்த வருடங்களில் பாக்டீரியங்களால் பரவக்கூடிய பல வியாதிகள் பெனிசிலின் குடும்பத்தைச் சார்ந்த மருந்துகளால் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டன. இரண்டாம் உலகப்போரில் காயமுற்றவர்கள் தொற்றுநோய்களால் பீடிக்கப்படுவது பெனிசிலின் மூலம் மட்டுப்படுத்தப்பட்டது.
பொதுவில் நம்மை நுண்ணியிரிகள் தாக்கும்பொழுது நம் இரத்தத்திலிருக்கும் வெள்ளையணுக்கள் அவற்றுடன் போராடி அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பாக்டீரியாக்கள் தொடர்ச்சியாக தங்கள் செல் சுவர்களை வலுப்படுத்தக்கூடியவை. எனவே ஓரளவுக்கு மேலாக நம் உடலின் எதிர்ப்பு சக்தி பயனற்றுப்போகிறது. குறிப்பாக உடல்நலக்குறைவானவர்கள் (கர்ப்பினிகள், காயமுற்றோர், புற்றுநோய் சிகிச்சை பெறுவோர், மாற்று உறுப்பு சிகிச்சை பெறுபவர்கள், மற்றும் சிறு குழந்தைகளும் வயோதிகர்களும் பொதுவில் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போரிடும் திறன் அதிகமற்றவர்கள்). பாக்டீரியங்கள் பெருக்கத்தின் பொழுது அவற்றின் செல் சுவர் மெலிவடையும். ஒற்றை பாக்டீரியம் இரண்டாகப் பெருகியவுடன் அவற்றின் செல்சுவர் மீண்டும் வலுவடையும். பெனிசிலின் வகை மருந்துகள் பெருக்கத்தின் முன்னர் மெலிவடையும் பொழுது அவற்றைத் தாக்கி சுவர் வலுவடைவதைத் தடுக்கும். அந்நிலையில் பாக்டீரியாக்கள் அழிந்துபோகும். எரித்ரோமைசின் வகை மருந்துகள் பாக்டீரியாக்களின் செல்களினுள்ளே இனப்பெருக்கத்துக்குத் தேவையான புரதங்கள் உற்பத்தியைத் தடை செய்வதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.
பெனிசிலின் 1943-ஆம் ஆண்டு பரவலான புழக்கத்திற்கு வந்தது. தொடர்ந்து டெட்ராசைக்ளின் (1950), எரித்ரோமைசின் (1953), மெத்திசிலின் (1960), ஜெண்டாமைசின் (1967), உள்ளிட்ட பல நுண்ணியிர் எதிர்ப்பிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1985க்குப் பிறகு மிகத் தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும்கூட மிகச் சில நுண்ணியிர் எதிர்ப்பிகளே சாத்தியமாயின. இம்மருந்துகளைப் பரிந்துரைக்கும் வேகம் 1970-களில் தொடங்கி முடுக்கம் பெற்றது. முன்னர் சொன்னபடி, நோயின் மூலம் தெரியாமலேயே பெருவீச்சு நுண்ணியிர் எதிர்ப்பிகளைப் பரிந்துரைக்கும் வழக்கம் தொடங்கியது. குறிப்பாக வைரஸ்களால் ஏற்படும் சாதாரண சளி, ஃப்ளூ காய்ச்சல் போன்றவற்றுக்கு ஆண்டிபயாடிக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவ்வகை நோய்களுக்கு நுண்ணியிர் எதிர்ப்பிகளால் எந்தவகையிலும் பயனில்லை. ‘எதற்கும் இருக்கட்டுமே’ என்று ஆண்டிபயாடிக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. மருந்து உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள அசாத்திய வளர்ச்சியால் நுண்ணியிர் எதிர்ப்பிகளின் விலை 1980 தொடங்கி மிகவும் சரியத் தொடங்கியது. மருந்துகளின் காப்புரிமை காலாவதியாகும்பொழுது அவற்றை எந்த நிறுவனமும் தயாரிக்கலாம் என்பதால் 1960-களில் கண்டுபிடிக்கபட்ட மருந்துகள் எண்பதுகளில் மிக மலிவான விலையில் கிடைக்கத் தொடங்கின. இவை அனைத்துமாக நுண்ணியிர் எதிர்ப்பிகளின் புழக்கத்தைப் பெருமளவு கூட்டியிருக்கின்றன.
மருந்துக்குத் தப்பிய பாக்டிரியாக்கள் பரவுவதால் தொடர்ச்சியாக பாக்டீரியாக்கள் வீரியம் பெற்று பல நுண்ணியிர் எதிர்ப்பிகளை செயலிழக்கச் செய்திருக்கின்றன. தொடர்ச்சியாக பாக்டீரியாக்கள் வலுப்பெறுவதற்கு டார்வினின் இயற்கைத் தெரிவே (Natural Selection) காரணம். நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கென பரிந்துரைப்பார்கள். நோயாளிகள் அவற்றை முழுதுமாக உட்கொண்டாக வேண்டும். உதாரணமாக 7 நாட்களுக்கு தினசரி இரண்டு மாத்திரைகள் என்று பரிந்துரைக்கப்பட்டால் அந்தப் 14 மாத்திரைகளையும் முழுதும் உட்கொள்ள வேண்டும். சிகிச்சை தொடங்கி மூன்று நாட்களில் முன்னேற்றம் ஏற்பட்டு முழுதும் குணமடைந்ததாகத் தோன்றினாலும், ஏழு நாட்களுக்கும் அதை உட்கொண்டு முடிக்க வேண்டும். முழுக்கால சிகிச்சை பாக்டீரியாக்களை முற்றிலுமாக உடலிலிருந்து ஒழிக்க முக்கியமானது. பாதியில் நிறுத்துபொழுது முற்றிலும் அழிக்கப்படாமல் பாக்டீரியாக்கள் மீண்டும் தலையெடுக்க வாய்ப்புள்ளது. அந்த நிலையில் பழைய மருந்து மீண்டும் பலனளிக்காது. முதல் மருந்தில் தப்பிப் பிழைத்த பாக்டீரியாக்கள் பொதுவில் வலுவானவை; ஓரளவுக்கு மருந்தை எதிர்க்கும் திறன் கொண்டவை. இவை பெருகும் பொழுது முன்னைக்காட்டிலும் வலுவான பாக்டீரியாக்களாகவே இருக்கும். மேலும் மருந்தெதிர்ப்புத் திறம் பெற்ற பாக்டீரியாக்கள் ஒருவிதப் புரதப் பாலங்களை உண்டாக்கிப் பிற பாக்டீரியாக்களுக்கும் அந்த எதிர்ப்புத் திறனை உண்டாக்கவல்லன.
இவற்றுக்கு இன்னும் அதிக வீரியம் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பியை உட்கொண்டாக வேண்டும். இப்படித் தொடர்ச்சியாகச் செய்யும்பொழுது பல மருந்துகள் வலுவிழக்கத் தொடங்குகின்றன.
1950-ல் அறிமுகப்படுத்தப்பட்ட டெட்ராசைக்ளினுக்கு முற்றிலும் எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரியாக்கள் 1959-ல் அறியப்பட்டன. 1960-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மெத்திசிலின், இரண்டே ஆண்டுகளில் ஒருவகை ஸ்டெஃபைலோகாக்கஸ் பாக்டீரியங்களை எதிர்க்கும் திறனை இழந்தது. 1975 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 2.4 சதவீத ஸ்டெஃபைலோகாக்கஸ் பாக்டீரியாக்கள் மெத்திசிலினுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டவையாக இருந்தன, இது 1991-ல் 29 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.
1987-ல் நிமோனியாக் காய்ச்சலை உண்டாக்கும் பாக்டீரியாக்களை பெனிசிலினிலால் முற்றிலும் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் 1997-ல் 40 சதவீதத்திற்கும் மேலானவை முற்றிலும் பெனிசிலினின் எதிர்ப்புத் திறன் கொண்டவையாக வலுபெற்றிருக்கின்றன. தொடர்ச்சியாக பல மருந்துகளுக்குத் தப்பும் வீரியமிக்க பாக்டீரியாக்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பல பாக்டீரியாக்கள் முற்றிலுமாக நுண்ணியிர் எதிர்ப்பிகளை விஞ்சும் திறன் கொண்டவையாக மாறிவிட்டிருக்கின்றன.
அடிக்கடி நுண்ணியிர் எதிர்ப்பிகளை உட்கொள்வதன் மூலம், உடலில் விஞ்சியிருக்கும் பாக்டீரியாக்களில் தொடர்ச்சியாக எதிர்ப்புத்திறன் அதிகரிக்கின்றது. இப்படி வலுப்பெற்ற பாக்டீரியாக்கள் பரவும்பொழுது அவற்றை எதிர்கொள்ள அதிக அளவு அல்லது புதுவகை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நாடவேண்டியிருக்கிறது. இவற்றிலிருந்து தப்பிப் பிழைப்பவை, இவை எல்லாவற்றுக்கும் எதிர் திறன் கொண்டவையாக இருக்கின்றன. மெத்திசிலின் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டெஃபைலோகாக்கஸ்க்கு ஒரே மாற்றாக 1996 வரை வான்கோமைஸின் என்ற புதுவகை நுண்ணுயிர் எதிர்ப்பி பயன்பட்டுவந்தது. 1996-ல் இந்த மருந்தையும் தாங்கி நிற்கக்கூடிய பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டன. எனவே இந்த நோய்க்குச் சிகிச்சையின்றி 1970களில் பலரும் இறந்துபோக நேரிட்டது.
மறுபுறத்தில் புதிய நுண்ணுயிர்க் கொல்லிகளைக் கண்டுபிடிப்பது அரிதாகிவருகிறது. கடந்த இருபது வருடங்களாகப் புது மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு புறத்தில் புழக்கத்தில் இருக்கும் மருந்துகள் பயனற்றுப் போக, மறுபுறம் புதிதாக எதுவும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லாமல் நாம் பெனிசிலினுக்கு முந்தைத்ய காலத்திற்குத் திரும்பிச் செல்கிறோமோ என்ற எண்ணம் கவலையளிக்கிறது.
டிசம்பர் 2014-ல் நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் இந்தியாவில் சென்ற ஆண்டு 58 ஆயிரம் குழந்தைகள் மருந்து எதிர்ப்புத்திறன் கொண்ட பாக்டீரியாக்களால் ஏற்பட்ட நோய்களினால் இறந்துபோனதாக அதிர்ச்சிதரும் செய்தியை வெளியிட்டது. கர்ப்பக்காலத்தில் முறைகேடாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வதால் உடலில் தேங்கிப் போன பாக்டீரியாக்கள் சிசுக்களில் நோயை விளைவிக்கின்றன. மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட இவற்தை எதிர்த்து போராட உடலில் வலுவில்லாததாலும், திறன்வாய்ந்த மருந்துகள் இல்லாததாலும் சிசுச் சாக்காடு அதிகரிக்கிறது.
தானியங்கிச் சமரன்
தானியங்கிநுட்பம் (Automation) தற்பொழுது முதிர்நிலையை அடைந்திருக்கிறது. இன்றைக்கு நீங்கள் சந்தையில $100க்குள்ளாக மிகத் திறன்வாய்ந்த பறவியை (Drone) வாங்கமுடியும். ஆளில்லா விமானங்களைப் பறவிகள் என்று அழைக்கலாம். இந்தக் குட்டிப் பறவிகளால் பல நறபயன்கள் உண்டு. பேரழிவுக்காலங்களில் மிக விரைவாகத் தகவல் திரட்ட, தேவையான பொருட்களை ஆபத்தில்லாமல் கொண்டு சேர்க்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள் பறவைக் கோணத்தில் படமெடுக்கிறார்கள். இல்லங்களுக்கு நேரடியாக பொருள்களைக் கொண்டுசேர்க்கிறார்கள், நிலவரைபடத்தைத் துல்லியமாக வரைகிறார்கள், வயல்களில் பூச்சியால் பாதிக்காப்பட்ட செடிகளை விரைவில் கண்டு, குறைந்தபட்ச பூச்சிக்கொல்லிகளைத் தூவி நோய்களைக் கட்டுப்படுத்துகிறார்கள். நேரடியாக மேகங்களை அளத்தலின் மூலம் வானிலையைத் துல்லியமாகக் கணிக்கிறார்கள். இப்படி எண்ணிலடங்கா பயன்களைத் தரும் ஆளற்ற விமானங்களுக்கு வேறொரு முகமும் இருக்கிறது.
2003 ஆம் ஆண்டு அமெரிக்கப் போர்வீரர்கள் குவைத்திலிருந்து பாக்தாத் நோக்கி நகர்ந்தபொழுது அவர்களிடம் ஒரு சமரன் (சமர்=போர், சமரன்=போர் எந்திரன், War Robot) கூட இருக்கவில்லை. சரியாக ஏழாண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது போர்முனையில் 7,000 ஆளற்ற விமானங்களும் 12,000 தரைப் போர்வாகனங்களும் போரில் இருக்கின்றன. அமெரிக்க ராணுவ தளபதி இதைப்பற்றி சொல்லும்பொழுது, “இது எங்கள் திறமையைக் காட்டுகிறது. இராக்கியப் போராளிகள் எங்கள் தொழில்நுட்பத்தைக் கண்டு அதிர்ந்துபோகிறார்கள்” என்று சொல்கிறார். மறுமுனையில் லெபனானில் இஸ்லாமிய ஆதரவு செய்தியாளர் “இது ஈவிறக்கமற்ற இறுகிப்போன அமெரிக்க, இஸ்ரேலியர்களின் இன்னொரு முகம். அவர்கள் கோழைகள் எனவே உண்மையான ஆண்களைப் போல எங்களுடன் நேரடியாகப் போரில் இறங்கத் தயங்கி இந்த எந்திரங்களை அனுப்புகிறார்கள். எப்படியாவது ஒன்றிரண்டு அமெரிக்க வீரர்களைக் கொன்றால் போதும் அவர்கள் தோற்றோடிவிடுவார்கள்.” இதே மாதிரியான இருவேறு நோக்கங்கள் முதலாம் உலகப்போர் காலத்திலும் இருந்தன. அப்பொழுது பிரஞ்சுப் படைத்தலைவர் துப்பாக்கிகளைக் குறித்து இப்படித்தான் சொன்னார். “உண்மையான ஆண்மகன் கோழையைப்போல தொலைவில் நின்று சுட்டுவிட்டு ஓட முயற்சிக்கமாட்டான். நெஞ்சுயர்த்தி அருகில் வந்து இரு கரங்களாலும் எதிரியின் மார்பில் குத்துவான்”. ஆனால் இன்றைக்குப் போர் என்பது துப்பாக்கிகள் இல்லாமல் கிடையாது. ஏன் குழுச்சண்டைகளும், கணவன் மனைவி வாக்குவாதங்களும் துப்பாக்கிச் சூட்டில் நிகழ்ந்தேறுகிறது. ஒரு காலத்தில் கல்லெறிந்தவர்களையும், வில்லம்பு கொண்டு போரிட்டவர்களையும்கூட கோழைகளாகச் சொல்லியிருப்பார்கள் என்பது நிச்சயம்.
போர் - அண்மையிலிருந்து சேய்மைக்கு
மனித வரலாற்றில் போரிடல் என்பதில் எதிரிகளுக்கிடையேயான தொலைவு தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. குகைமனிதகள் போரிட்டபொழுது ஒருவர்மேல் ஒருவர் விழுந்ந்து புரண்டிருப்பார்கள் என ஓரளவு நிச்சயமாக ஊகிக்க முடியும். பின்னர் அவன் கூர்கற்களைச் சற்று தொலைவில் நின்றபடி (எதிரி பார்க்காத சமயத்தில்) வீசியிருப்பான். தொடர்ந்து வெறும் கைவீச்சில் முடியாத தொலைவை வில்லம்பு கொண்டு எட்டியிருப்பான். பின் தொலைநோக்கி பொருத்தப்பட்ட துப்பாக்கி கொண்டு கண்ணால் துல்லியமாகக் காணமுடியாத தொலைவிலிருந்து எதிரிகளைச் சுட முடிந்தது. தற்பொழுது புவியியல் அண்மையில் இல்லாமலேயே போரில் ஈடுபடும் நிலை வந்திருக்கிறது. இது தொடர்ச்சியான பரிணாமம்தான் என்றபோதும் இன்றைய தொழில்நுட்பம் தரும் போர் சாத்தியங்களில் தானாக நேரடியாக ஈடுபடாமல், தன் கை கொண்டு இயக்காமல் எதிரியை அழிக்கும் திறன் வசப்பட போரின் வரையறை முழுமையாக மாற்றி எழுதப்படுகிறது.
போர் எந்திரன் வடிவாக்கம்
போர்க் கருவிகள் உலகப்பேரழகியைக் கவரும் ரஜினிகாந்தைப் போன்ற புருஷ லட்சனங்களைக் கொண்டிருக்கத் தேவையில்லை. சொல்லப்போனால் இப்பொழுது போரிலிருக்கும் கருவிகள் எந்த விதத்திலும் மனித வடிவத்திற்கு அருகில் வருவதில்லை. சில ஆட்டுக்குட்டியைப் போல நாலுகாலில் நடப்பவை, சில ஒரு சிறிய காகித விமானத்தைப் போன்றவை, இன்னும் சில வெட்டுக்கிளியைப் போலத் தத்திச் செல்லக்கூடியவை. சில நத்தைய்ப் போல ஊர்வன. 9/11-க்குப் பிறகு அமெரிக்கப் படைகளில் இவற்றுக்கான தேவை துல்லியமாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. போர்முனைக்கு ஆளனுப்பத் தேவையில்லாமல், எதிராளியை அடையாளம் காண, அருகிருந்து பார்க்க பின்னர் துல்லியமாகத் தாக்க சாத்தியமானவையாகக் கருவிகள் இருக்க வேண்டும். அப்படியான கருவிகள்தான் வடிவமைக்க, தயாரிக்க, பயன்படுத்தப்படுகின்றன.
முதல் நகர்வு முழுவெற்றியல்ல
சமரன் நுட்பத்தில் நிச்சயமாக அமெரிக்கா வேறெந்த நாட்டையும்விட மேம்பட்ட நிலையில் இருக்கிறது. ஆனால் முதலில் கண்டுபிடிப்பதோ, பயன்படுத்துவதோ ஒருபோதும் நிரந்தர வல்லமையைத் தீர்மானிக்கப் போவதில்லை. ஹி.ஜி. வெல்ஸ் என்பவரின் அறிபுனை கதையில்தான் முதன் முறையாக தரைக் கவச ஊர்திகள் (Land Ironclads) சொல்லப்பட்டன. முதலாம் உலகப்போர் காலத்தில் கவசப் போர் ஊர்தி பிரித்தானியகர்களால்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள்தான் இவற்றைப் போர்க்களத்தில் பயன்படுத்தத் தொடங்கினார்கள். ஆனால் இருபது வருடங்களுக்குள் கவச டாங்கிகளை அணிவகுப்பு முறையில் துல்லியமாகப் பயன்படுத்தல் ஜெர்மானியர்களுக்கே கைகூடியது.
டாங்கிகள், போர்விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவற்றின் வரவு தொடர்ச்சியாக போர் முறைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. போர் நுட்பத்தின்கூடவே இவை போர் தர்மங்களைக் குறித்த வரையறைகளை சிதைத்து, மாற்றி எழுதின. உதாரணமாக, நீர்மூழ்கிக் கப்பல்களை எப்படி பயன்படுத்துவது போர் தர்மம் என்பது குறித்த வேறுபாடுகள் ஜெர்மனிக்கும் அமெரிக்காவுக்குமிடையே எழத் தொடங்கியது; அது அமெரிக்கா முதலாம் உலகப் போரில் நேரடியாக ஈடுபடக் காரணமாக அமைந்தது. அதுவே பின்னர் அமெரிக்கா வல்லரசாக மாற வழிவகுத்தது. ஆரம்ப காலங்களில் எதிரிகளின் இருப்பிடங்களைக் கண்டறிய மாத்திரமே பயனான விமானம் பின்னர் விண்ணிலிருந்து குண்டுபொழியும் போர் உத்தியாக மாறியது. அந்த நிலையில் போர் வீரரகளுடன் கூடவே இலக்கிலாமல் சராசரி குடிமக்களும் போர் விமானத்தால் அழிக்கப்பட்டனர். இதன் உச்சகட்டம் ஹிரோஷிமா, நகஸாகியில் நடந்த அணுத் தாக்குதல். சில நூறு எதிரி வீரர்களை அழிக்க பல்லாயிரம் எதிரிக் குடிமக்களை பலியாக்கலாம் என்பது போர் தார்மீகமாக மாறியிருக்கிறது.
மாறிவரும் போரின் வரையறை
நவீன போர் ரோபேட்கள் இதே வரலாற்றை மீள நிகழ்த்துகின்றன. ஆளில்லா சிறு விமானங்கள், பறவிகள் மூலம் எதிரிகளைத் தாக்குவது இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும், ஏன் நேச நாடாகக் கருதப்படும் பாக்கிஸ்தானிலும் அமெரிக்காவின் முதல் உத்தியாக மாறியிருக்கிறது. ஆளில்லா விண்ணூர்திகளின் பயன்பாடும், அவற்றின் மூலம் சாதாரண குடிமக்களைக் கொல்லுதலும் கேள்வியில்லாமல் ஏற்றுக்கொள்ள்ப்பட்டிருக்கிறது. வியட்நாம் போரின்போது அமெரிக்க வீரர்களின் பெருமளவு இழப்பு சராசரி அமெரிக்க குடிமக்களுக்குப் பெரும் வேதனையளித்தபோதும் விமானங்கள் குண்டுபொழிவதற்கு பலத்த எதிர்ப்பு இருந்தது. ஆனால் இந்த முறை மனிதப் போர்வீரர்கள் நேரடியாகக் களமிறங்குவதில்லை; தூரத்திலிருந்துகொண்டு தொலையியக்கிகளின் மூலம் குறுவிமானங்களைக் கொண்டு தலிபான் போராளிகளை அடையாளம் கண்டு, குறுவிமானங்களால் குண்டுபொழிந்த்து அவர்களை அழிக்கிறார்கள். நேரடியாக அமெரிக்கப் போர்வீரர்கள் களத்தில் இல்லாமலிருப்பது இத்தகைய மறைவிருந்து தாக்குதலை பெருமளவு நியாயப்படுத்தியிருக்கிறது.
கடந்த சில வருடங்களில் பாக்கிஸ்தானின் எல்லைக்குள் 429க்கும் மேலான ஆளற்ற குறுவிமானத் தாக்குதலை அமெரிக்கா நிகழ்த்தியிருக்கிறது. இத்தனைக்கும் அமெரிக்கா பாக்கிஸ்தானுடன் நேரடியாக போரில் இல்லை; சொல்லப்போனால் பாக்கிஸ்தானை தன் நெருங்கிய நண்பனாகவும், இஸ்லாமியத் தீவிரவாதத்தின் மீதான போரில் தன் சகாவாகவுமே பாக்கிஸ்தானை அமெரிக்கா முன்னிருத்துகிறது. தோழமை நாட்டின்மீது ஆளற்ற விமானங்கள் கொண்டு தாக்குவது - தனக்கு எந்த இழப்புக்கும் இடமில்லாமல் - எந்தப் போர் தர்மத்திலும் சாத்தியமற்றது. இருந்தபோதும் இப்படியொரு தாக்குதலைத் துவங்கியதற்கோ, அதைத் தொடர்ந்து நடத்துவதற்கோ அமெரிக்காவில் எந்தவிதமான பெரும் எதிர்ப்பும் இருப்பதாகத் தெரியவில்லை. போர் ஒப்பந்தம் தேவையில்லை; போர் பிரகடனம் தேவையில்லை. நினைத்த நொடியில் குறுவிமானத்தை களமனுப்பலாம், இதில் எந்தவித தார்மீக, நடைமுறை ஐயமும் தேவையில்லை என்றாகியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க வீரர்கள் நேரடியாகக் களத்தில் இல்லை என்பதே. தன் வீரரகளுக்குச் சேதமில்லாமல் எந்த விதமான அதர்மத் தாக்குதலிலும் ஈடுபடலாம் எனப்து எந்திரன்களைக் கொண்டு நிகழ்த்தப்படும் போரின் ஆதார தர்மமாக மாறிவிடும் அபாயம் துவங்கியிருக்கிறது.
மாறிவரும் படைத்திரட்சி உத்திகள்
போருக்கு வீரர்களை அழைப்பதன் உத்தி மாறியிருக்கிறது. தோள்வலியும், மனதிடமும் கொண்ட வீரர்களின் தேவை குறைந்திருக்கிறது. திறமையாக விடியோ விளையாட்டுகளை வெல்லும் பதினாறு வயது சிறுவன் தொலைபோரில் முதன்மை வீரனாகலாம். கண்கொண்டு பார்ப்பதை நொடியில் கைகொண்டு அழிக்கும் திறமை போதும். இதுவும் இன்னொரு எக்ஸ் பாக்ஸ் (XBox) விளையாட்டுதான். துல்லியமாகச் சொல்ல வேண்டுமானால் போர்வீரனே தேவையில்லை; நுட்பன் (technician) அணைத்தையும் வழிநடத்துவான்; சாதிப்பான். இப்பொழுது அமெரிக்க விமானப்படை, தரைப்படை, கடற்படை ஆள் சேர்க்க அழைக்கும் தொலைகாட்சி விளம்பரங்கள் விடியோ விளையாட்டுகளுக்கு அடிமையான இளைஞர்களைக் குறிவைக்கின்றன. இப்படி ஆள்சேரச் சேர களத்தில் முன்னின்று போரிடும் வீரர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். இதையே ஆள்சேர்ப்பு விளம்பரங்கள் முன்வைக்கின்றன. உதராணமாக, அமெரிக்கக் கடற்படை விளம்பரத்தின் குறிக்கோள் வாக்கியம் : Working everyday to unman the front lines.
போரும் அமைதியும்
போரிடச் செல்வது என்பதன் நடைமுறையும் இப்பொழுது மாற்றியெழுதப்பட்டிருக்கிறது. மனைவி மக்களைப் பிரிந்து கொடுமையான பாலையிலோ, அடர்ந்த மழைக்காடுகளிலோ பரிச்சயமில்லாத இயற்கையையும் விலங்குகளையும், பருவங்கள்யும் எதிர்கொண்டு எதிராளியைத் தாக்குவது என்பது தேவையில்லாததாக மாறியிருக்கிறது. தன் வீட்டிலிருந்து காலை உணவு அருந்திவிட்டு காரில் ஏறிக் குழந்தைகளைப் பள்ளியில் இறக்கிவிட்டு குளிரூட்டப்பட்ட அறையில் கணினித் திரையின் முன் அமர்ந்து பல்லாயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கும் குட்டி விமானத்தைத் தொலையியக்குவது போர்வீரரின் நடவடிக்கை ஆகியிருக்கிறது. இயற்கையின் நிர்ப்பந்தங்கள் கலைத்துப் போடப்படுகின்றன. ஆப்கானில் இரவில் குளிரில் ஒடுங்கும் தலிபான் போராளிகள் மீது அமெரிக்கப் பகலில் இருந்துகொண்டு இடது கையால் கோக் அருந்தியவாறு வலது கை விசைபலகையை இயக்க குண்டுபொழியும் சாத்தியம் மெய்ப்படுகிறது. எட்டுமணி நேரப் போருக்குப் பின் மீண்டும் காரேறி வயலின் பாடம் முடித்த குழந்தையைத் திரும்ப அழைத்து வீடு வந்து மனைவியுடன் உணவருந்தி பின்னிரவில் களித்திருப்பது எந்திரன் மூலம் போரை முன்னடத்தும் அன்றாட வாழ்வாகியிருக்கிறது.
கொலைவெறியும் குற்றவுணர்வும்
நேரடியாகக் களத்தில் இருக்கும்பொழுது தன் உயிருக்கு ஆபத்து எனும் திகிலில் முன்னகர வேண்டும். எதிராளியைத் தாக்கத் தோழர்களின் வியூகம் தேவை. வெற்றிகரமாகத் தாக்கியபின் சதையும் இரத்தமும் பிளந்துகிடக்கும் சக உயிரை நேரடியாகப் பார்க்கும்பொழுது ஏற்படும் மன அதிர்வை எதிர்கொள்ள வேண்டும். சோர்ந்த உடலுடன் இலக்கு பிழைத்து ஆயுதமில்லாத குடிமகன் உயிரிழந்ததாக அறியும் பொழுது ஒருகணம் தன் வயோதிகத் தகப்பனின் உருவம் தோன்றி மறையலாம். வெற்றியிலும் தோல்வியிலும் சொல்லொண்ணா மன அழுத்தம் நிச்சயம். அகச்சிவப்புக் கதிர்களின் (Infrared) உதவியால் உடல்சூட்டைக் கொண்டு இருளில் அடையாளம் காணும் எந்திர விமானத்திற்கு ஏ.கே 47 ஏந்திவரும் எதிர் வீரனும் இரவில் கைக்கோலுடன் சிறுநீர்கழிக்க சந்தில் வரும் பாட்டியும் ஒன்றுதான். அடுத்த நொடியில் ஒற்றை விசையின் மூலம் தெளிவில்லாத அந்நபரின் மீது குண்டுபொழிய முடியும். எல்லாம் முடிந்து பகல் வெளிச்சத்தில் கிழவியை அடையாளம் கண்டாலும் பாதகமில்லை. பிழை குண்டுபொழிந்தவனிடம் இல்லை, தவறாக அடையாளம் காட்டிய சமரனின் அகச்சிவப்புக் கதிர்கள் மீதே. மாலையில் கூடைப்பந்தாட்டம் துவங்குவதற்குமுன் தொலைகாட்சி காண வீடு திரும்பிவிடலாம். இடையில் நேரமிருந்தால் அன்றைய போரின் துணுக்கை யூ ட்யூப் வீடியோவாக மாற்றி தன் வெற்றியை அடுத்த நொடியில் வலைபரப்பலாம். இது நாளை குறித்த ஊகமில்லை. இன்றைய நிதர்சனம். தற்பொழுது யூ ட்யூப்பில் அமெரிக்க ஆளற்ற குறுவிமானங்களின் நேரடித் தாக்குதல்கள் குறித்த எண்ணற்ற விடியோ துணுக்குகள் கிடைக்கின்றன. இவற்றில் சில பிண்ணனி இசைக்கோர்வையுடன் இருக்கின்றன. அடுத்த துணுக்கை ஆவலுடன் எதிர்நோக்கும் நேயர் கூட்டம் காத்திருக்கிறது. இத்தகைய துணுக்குகளுக்கு ஒரு விசேடப் பெயரும் உண்டு - War Porn. நினைவிலிருக்கட்டும்; இது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று பெயரிடப்பட்டது. இதில் சமரன் கொண்டு தொலைவிருந்து நிகழ்த்துவதை பின்னணி இசையுடன் செல்பேசியில் தரவிறக்கிப் பார்ப்பது எந்தவிதமான தர்மத்தை இளைஞர்களுக்குப் போதிக்கும்? இதனை எதிர்கொள்ளும் எதிரி எந்த தார்மீகச் செய்தியைப் பெறுவான்?
க்ராண்ட் தெஃப்ட் ஆட்டோ (Grand Theft Auto) போன்ற நேரடி விடியோ விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தால் எளிதில் உணரலாம்; நிஜ வாழ்வில் நாம் செய்யாத, செய்வோம் என்று யோசித்துப் பார்க்கமுடியாத குரூரமான செய்கைகளை விடியோ கேம்களில் செய்யப் பலரும் ஒருபோதும் தயங்குவதில்லை. தலையைக் குறிவைத்து துப்பாக்கியால் மூளையைப் பிளந்து நிணமும் சதையுமாக வெளித் தெறிக்கும்பொழுது விடியோ விளையாட்டை யாரும் நிறுத்துவதில்லை. சமீபத்தில் அமெரிக்க ராணுவத்தின் தொலையியங்கி விமானத்தை இயக்கும் ஒரு இளம் வீரன் இப்படிச் சொல்கிறான் “இந்தப் போர் விடியோ கேம்ஸ் மாதிரிதான் இருக்கிறது”. இதன் நகைமுரண் கொடூரமானது; இப்படியொரு எண்ணைத்தை விதைக்கும், வலுவிக்கும் அமெரிக்க இராணுவம் முன்னெடுப்பது ‘தீவிரவாததிற்கு எதிரான போர்".
போர் எந்திரன் - நுட்ப எளிமை
ஆனாலும் சமரன் போரின் போக்கு அப்படியொன்றும் அமெரிக்காவுக்கோ அல்லது வேறு வல்லரசுகளுக்கோ முற்றிலும் சாதகமாக இருக்கப்போவதில்லை. கிட்டத்தட்ட 56 நாடுகள் போர்களுக்கான் சமரன் தயாரிப்பில் இறங்கியிருக்கின்றன. அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் துவங்கி சீனா, இந்தியா, ஈடாக வட கொரியா, ஈரான், பாக்கிஸ்தான் என்று பல நாடுகளும் இதில் அடக்கம். அமெரிக்கா வடிவமைக்கும் போர் எந்திரன்களின் 70% பாகங்கள் சீனாவில் தயாராகின்றன. ப்ரூக்கிங்ஸ் கழகத்தின் 21-ம் நூற்றாண்டுக்கான அமெரிக்க தற்காப்பு உத்திப் பிரிவின் இயக்குநர் பீட்டர் வாரன் சிங்கர் “சீனாவில் தயாரிக்கப்படும் வன்கலனைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு இந்தியாவில் எழுதப்படும் நிரலிகளைக் கொண்டு இயக்கப்படும் சமரன்களால் அமெரிக்கப் போர் வல்லாண்மைக்கு எந்தவிதத்தில் உத்தரவாதம் கூறமுடியும்?” என்று கேட்கிறார். வன்கலனில் (Hardware) ஒரு சிறிய மென்கலன் வழுவை (Software Bug) உள்ளிட்டோ, வைரஸ் நிரலியை இணைத்தோ இப்படியான எந்திரன்களின் கட்டுப்பாட்டை முழுமையாக வேறொருவர் கைகொள்ள முடியும். அல்லது, அமெரிக்காவுக்கு எதிராகவே இந்த எந்திரன்களைத் திருப்பிவிட முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த குட்டி எந்திரப் பொறிகளை வடிவமைப்பதோ உற்பத்தி செய்வதோ அப்படியொன்றும் கடினமானதல்ல. இவற்றை உற்பத்தி செய்ய அணு உலைகளைப் போலவோ டாங்கித் தயாரிப்புத் தொழிற்சாலை போலவோ பெரிய வசதிகளும், ஆயிரக்கணக்கான தொழிலாளிகளும், முதலீடும் தேவையில்லை. பெரும்பாலான சமரன்களை இணையத்தின் வழியாகவே வாங்கமுடியும். குடிசைத் தொழிலாக ஒரு சிறிய மேசையின் முன் அமர்ந்து இவற்றை முழுமையாகத் தயாரிக்க முடியும். தற்செயலாக எதிரிகளின் கையில் இந்தப் பொறிகள் சிக்கினால் மிக எளிதாக அவற்றைப் பிரித்து மீள்பொறியாக்கம் செய்து (Reverse Engineering) அவற்றின் அமைப்பையும் செயற்பாட்டையும் கற்க முடியும். இந்த நிலையில் தேசங்கள் கடந்த சிறு பயங்கரவாதக் குழுக்களும் மிக எளிதாக, மிக விரைவில் எந்திரன் போர்திறனைப் பெறுவது தவிர்க்க முடியாதது. சொல்லப்போனால் பல பயங்கரவாதக் குழுக்களும் எந்திரன்களை வடிவமைத்து வருகின்றன. எந்திரன்கள் வாய்க்கப் பெற்றால் வீர மரணத்திற்குப் பின் சுவர்க்கத்த்தில் எழுபத்திரண்டு கன்னியர்கள் கிடைப்பார்கள் என்றெல்லாம் போதிக்கத் தேவையின்றி உடனடியாகக் களமிறக்கலாம்.
உணர்ச்சிகளற்ற போர்வீரன்
முற்றிலும் தானியங்கிச் சமரன்கள் களமிறங்கும்பொழுது போர்க்குற்றம் என்பதன் வரையறை என்னவாக இருக்க முடியும்? எந்திரன்கள் உணர்ச்சிகளற்றவை. போர் முனையில் அவற்றின் சகா கொல்லப்படும்பொழுது அவை அழுவதில்லை; மனச்சிதைவடைவதில்லை. தொடர்ந்தும் தம் கால்களை முன்னகர்த்தியே செல்வன. எனவே அவை கொல்லும்பொழுது அங்கே சீற்றம், கோபம், பழிவாங்கல், தார்மீகம் போன்ற சிந்தனையின்றி, உணர்வுகளின்றி செயல்படுகின்றன. இவற்றால் நிகழ்த்தப்படும் போர்களுக்கு எந்தக் குற்ற வரையறை சாத்தியமாகப் போகிறது? ஊர்ந்துவரும் கவச ஊர்தியும், சக்கர நாற்காலியில் வரும் கிழவியும் இவற்றுக்குக் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஏதோ ஒரு இலக்கத்தில் பூச்சியம் ஒன்றானால் இவற்றுக்கிடையே வித்தியாசமில்லை.
எதிரிப் போர்வீரர்களைத் துல்லியமாக அடையாளம் காணுவதற்கும் அழித்தொழிப்பதற்குமாக வடிவமைக்கப்பட்ட ச மரன் இலக்கின்றி சாதாரண குடிமக்களைத் தாக்கினால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அமெரிக்க ராணுவ நிபுணர் “இதில் உண்மையில் சமூக, அறவியல், தார்மீகம் எதுகுறித்தும் பேசத் தேவையில்லை. இது தயாரிப்பு மேம்பாடு (Production Improvement) குறித்த விஷயம்” என்று சொல்லும் அவர் “ஆனால் தொடர்ந்தும் அது தவறாகச் சாதாரண குடிமக்களைக் கொன்றுகொண்டிருந்தால் அவசியம் இவற்றைக் களத்திலிருந்து மீளப்பெற்று சோதித்தாக வே ண்டும்.” என்று சொல்கிறார். இதற்குக்கும் காரணம் எந்தவிதமான தார்மீகமும் இல்லை; வெறும் வர்த்தகக் கட்டாயம்தான் (Commercial Imperative). செயல்திறனற்ற பண்டத்தைச் சந்த்தையில் யாரும் தொடர்ச்சியாக வாங்கமாட்டார்கள் அல்லவா? அதேபோல கால்களை இழந்து வரும் போர் சமரனுக்கு ஆயுட்கால மருத்துவக் கவனிப்புத் தேவையில்லை. உலையிட்டு உருக்கி உலோகத்தை மீளப்பெறலாம். சமீபத்தில் ஹாலிவுட் படங்களில் சிறந்த நூறு பாத்திரங்களையும் கொடுரமான நூறு வில்லன் பாத்திரங்களையும் பட்டியலிட ஒரு பொது வாக்கெடுப்பு நிகழ்த்தினார்கள். அந்த இரண்டு பட்டியல்களிலும் இடம்பெற்ற ஒரே ஒரு பாத்திரம் - டெர்மினேட்டர். இயந்த்திரன்கள் எவ்விதமான தார்மீக வரையறைகளும் கட்டுப்பட்டனவல்ல.
இன்னொரு அணுப்பரவல் - அதன் மேலும்
போர் எந்திரன் துப்பாக்கிகள், டாங்கிகள், போர் விமானங்கள், போன்றவற்றைப் போன்ற தொடர்ச்சியான போர் நுட்ப மேம்பாடல்ல என்பது இப்பொழுது உங்களுக்குத் தெளிவாகியிருக்கும். இது அணு ஆயுதங்களைப் போல அடிப்படை போர்ச் சட்டகத்தை மீளமைக்கும் நுட்பம். எனவேதான் விஞ்ஞானிகள் சமரன்களைப் பயன்படுத்துவதை அணு ஆயுதப் பரவலுக்கு ஒப்பிட வேண்டும் என்று வலியுறுத்துருகிறார்கள். இன்னொரு ஹிரோஷிமா - நகஸாகி அழிவுக்கு நாம் தயாராகி வருகிறோம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அணு அறிவியலாளர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டதைப் போலவே இப்பொழுது போர் எந்திரன் நுட்பர்கள் முனைந்து வருகிறார்கள். ஒரு முறை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் “நாம் செய்வது என்னவென்று தெரிந்தால் அதற்குப் பெயர் ஆராய்ச்சியில்லை அல்லவா?” என்று சொன்னர். ஒருபுறம் ஆர்வம் அறிவியலை முன்னெடுத்துச் செல்ல, மறுபுறம் அரசியலும் வர்த்தகமும் அவற்றின் பயன்பாடுகளைத் தீர்மானிக்கின்றன. ஒரு காலத்தில் புனைவுகளாக இருந்தவை இப்பொழுது ஆய்வகங்களும், தொழிற்சாலைகளிலும், போர் உத்திக்கூடங்களிலும், ஏன் தீவிரவாதிகளின் கூடாரங்களிலும் தீர்க்கமாக விவாதிக்கப்படுகின்றன. தயாரிப்பு எளிமை, பாகங்களின் தாராளச் சந்தை, சிக்கலற்ற வடிவமைப்பு போன்றவை அணுஆயுதங்களைக் காட்டிலும் எந்திரன் போரைச் சிக்கலானவையாக்குகின்றது. கட்டவிழ்ந்திருக்கும் இந்த நுட்பம் கைமீறிப் போகும் நாள் தொலைவில் இல்லை. போர், முன்னெப்பொழுதுமில்லாத ஒரு புதிய திருப்பத்தில் இருக்கிறது. ஐயாயிரம் வருடங்களாக சக மனிதனைக் கொன்றழிக்கும் ஏகபோகம் மனிதனிடமிருந்து விலகி உணர்ச்சிகளற்ற சமரன்களிடம் இடம் பெயருகின்றன. மனிதனை அழிக்கும் சக்தியை வேறொன்றிடம் நாம் கையளிக்கத் தயாராகிவருகிறோம்.
விதைத்ததும் விளைவதும்
விதைப்பது ஒன்று விளைவது வேறொன்று என்றிருக்கும்பொழுது அறிவியல் நம்மை அழிவுப்பாதைக்குத்த்தான் கொண்டு செல்கிறதா? இதை எப்படிக் கட்டுப்படுத்துவது? பலரும் உடனடியாக இன்றைக்கு இருக்கும் பல சிக்கல்களுக்கும் அறிவியலே காரணம் என்று மட்டையடியாக அடித்துச் சொல்வதைக் கேட்கிறோம். இது எந்த விதத்தில் நியாயம்?
நான் மூன்று உதாரணங்களை முன்வைத்தேன். வயகரா மாத்திரையால் எதிர்பாராத நல்விளைவு ஏற்பட்டிருக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் எதிர்ப்புத்திறனை பெற்றவையாக நம் கையை மீறிப்போகத்தொடங்கியிருக்கின்றன. தானியங்கித் தொழில்நுட்பத்தால் பல நன்மைகள் இருந்தாலும் ஆளற்ற போர்முனைகளில் முகமற்ற வீரர்களின் போக்கு போரின் வரையறையை மாற்றி எழுதியிருக்கிறது. இன்னும் நன்மை-தீமை என இருமுக உதாரணங்களை அறிவியலில் நிறையக் காணமுடியும்.
இவை ஒவ்வொன்றிலும் கவனமாக நோக்கினால், மனிதனுடயை பேராசையே அறிவியல் கண்டுபிடிப்புகளைத் திசை திருப்பியிருக்கிறது. அணுசக்தியானாலும், ஆட்கொல்லி மருந்துகளானாலும் பேரழிவுக்கு அவற்றை இட்டுச் சென்ற முடிவுகள் அரசாங்கங்களின் கையிலேயே இருந்திருக்கின்றன. இப்பொழுது அவை வர்த்தக நிறுவனங்களின் கைகளுக்கும் மாறத் தொடங்கியிருக்கின்றன. உலக வரலாற்றின் பேரழிவுகளைப் பட்டியலிட்டால், அரசியல், மதம், வர்த்தகம், தனிநபர் பேராசை எனப் பல முன்னிடங்களைப் பெறுகின்றன. இவர்களின் கைகளில் அறிவியல் ஆயுதமாகப் பயன்பட்டிருக்கிறது. எதிர்விளைவுகளைக் கவனமாக ஆராய்தலும், அவற்றைப் பற்றிய விழிப்புணர்வும் கட்டாயம் அவசியம, எல்லா நேரங்களிலும் இத்தகைய ஆய்வையும், விழிப்புணர்வையும் அறிவியலாளர்களே நமக்குத் தருகிறார்கள். அணுஆயுதப் பரவல், உலகளாவிய சூடேற்றம், தொற்றுநோய்கள், மரபுமாற்றம், எனப் பலவற்றின் கோரமுகங்களையும் தொடர்ச்சியாக அறிவியலாளர்களே பிரச்சாரம் செய்து அவற்றின் முன்னனிப் போராளிகளாகப் போரிடுவதை நாம் வரலாற்றில் கண்டுவருகின்றோம். மறுபுறத்தில் வலுவான தரவுகளின் ஆதாரமிருந்தும் உலகளாவிய சூடேற்றம், தடுப்பூசிகள் எனப் பலவற்றையும் வர்த்தகர்களும் அரசியல்வாதிகளும் முற்றாக மறுதலித்து, உலகை அழிவுநோக்கிச் செலுத்திவருகிறார்கள். (இடையில் அறிவியல் காரணிகளைத் தெரிந்துகொள்ள முனைப்பின்றி, சமூகக் காவலர்களாகத் தங்களை வரித்துக்கொள்ளும் இலக்கியவாதிகளும், மதவாதிகளும் குட்டையைக் குழப்புவது வேறு கதை). இயற்க்கையைக் கண்டறியும் ஆர்வத்தால் பக்கவிளைவுகளாக வரும் பேரழிவுகளைக் கட்டுப்படுத்த அறிவியலன்றி வேறு திறமான வழியேதுமில்லை. வாழ்க்கைத்தர உயர்வு, பிணி நீக்கம், நீண்ட ஆயுள், என இன்றைய அறிவியலைப் போல மானிடத்தைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் சென்ற, செல்கின்ற துறை ஏதுமில்லை.
Image Courtesy: Hansuan Fabregas, under CC 1.0 license