ரோசலின் ஃப்ராங்க்ளின் - மறுக்கப்பட்ட மரபியல் மாமேதை
மரபணு
இரவின் காரிருளில் மினுக்கும் மின்மினிப்பூச்சியைக் கண்டு வியக்காத குழந்தைகள் கிடையாது. ஆனால் அதன் இரகசியத்தைக் கண்டுகொள்ள மனித வரலாற்றில் பலநூறு ஆண்டுகள் தேவையாயிருந்திருக்கின்றன. மின்மினியின் ஆழத்தில் - நம் கண்களால் காணவியலா அடியாழத்தில் செல்களின் மூலக்கூறுகளிடையே பொதிந்து கிடக்கும் மரபியில் விந்தையை நாம் அடையாளம் கண்டு அரை நூற்றாண்டுகளே ஆகின்றன. அந்த இரகசியத்தின் பலன்கள் இந்த ஐம்பதாண்டுகளில் அளவிடமுடியாதவை. ஜேம்ஸ் வாட்சனும் ப்ரான்சிஸ் க்ரிக்கும் டி.என்.ஏவைக் கண்டுபிடிக்கவில்லை, ஆனால் அவர்கள் அதன் அமைப்பை ஆய்ந்தறிந்தார்கள். ஒரு டி.என்.ஏ-வைப் பிரிந்த்து நீட்டினால் அது கிட்டத்தட்ட மூன்றடி நீளம் இருக்கும். முற்றிலும் A, C, G, T என்ற நான்கு எழுத்துக்களால் மாத்திரமேயான இரகிசியப் புத்தகம் அது. அதை மீண்டும் சுருட்டி மடித்தால் அது ஒரு அங்குலத்தில் ட்ரில்லியனில் ஒரு பங்கு அளவிற்குச் சுருண்டு கொள்ளும், அப்படிச் சுருங்கும் அது நம் உடலில் இருக்கும் எல்லாச் செல்களிலும் பொதிந்து கொள்ளும் . அதனிடம் இன்னொரு புதிய மனிதனை உருவாக்குவதற்குத் தேவையான எல்லா செய்முறைகளும் அடக்கம்; இனப்பெருக்கத்தின் பொழுது தன்னைத் தானே சுயநகலாக்கம் செய்துகொள்ள வல்லது டி.என்.ஏ. ஒரு மூலக்கூறின் அமைப்பைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுவது அதன் செயற்பாடுகளை விளங்கிக் கொள்வதற்கும், அதன் பயனாகப் புதிய பயன்பாடுகளை உருவாக்குவதற்கும் அடிப்படையானது. அந்த வகையில் டி.என்.ஏ மூலக்கூறின் அமைப்பு நவீன மரபியலின் தோற்றுவாயாக அறியப்படுகிறது.
டி.என்.ஏ-வின் அமைப்பு இரகசியத்தைக் கண்டறிந்தற்காக 1962-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நொபெல் பரிசு, ஜேம்ஸ் வாட்சன் (James Watson), ஃப்ரான்சிஸ் க்ரிக் (Francis Crick), மாரிஸ் வில்கின்ஸ்க்குச் (Maurice Wilkins) சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இவர்களுள் வாட்சன், க்ரிக் இருவரும் டி.என்.ஏ-வின் அமைப்பைக் கண்டறிந்தவர்களாக அறியப்படுகிறார்கள். ஆனால் உண்மையில் இவர்களுக்கு இணையாக அந்தப் பரிசைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய இன்னொருவர் உயிருடன் இல்லை. (நொபெல் பரிசு இறந்தவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை). நொபெல் பரிசு ஒருபுறமிருக்க, இன்றைய மரபியலின் முதுகெலும்பாக விளங்கும் டி.என்.ஏவின். இரகிசியைத் கண்டறிந்ததில் ரோசலின் ஃப்ராங்கிளின் (Rosalind Franklin) பங்கு முழுமையாக அங்கீகரிக்கப்படவில்லை. 1920 ஆம் ஆண்டு பணக்கார யூத குடும்பத்தில் பிறந்த ரோசலின் 1941-ல் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழத்தில் பட்டம் பெற்றார். பின்னர் பிரான்சிலும் இங்கிலாந்திலும் பணியாற்றிய அவர் தனது 37-ஆம் வயதில் காலமானார். குறுகிய அந்த வாழ்க்கையில் ரோசலினின் சாதனைகள் அபாரமானவை; அந்தச் சாதனைகளின் புகழ் அவருக்கு மறுக்கப்பட்ட விதம் விந்தையானது. பணியாற்றிய காலத்தில் அறிவியல் சோதனைகளில் அவருக்கிருந்த பேரார்வமும் மேலாக அவற்றில் அவர் செலுத்திய தீர்க்கமான, பிழைகளுக்கிடமில்லா துல்லியமும் பிரபலமாக அனைவராலும் மதிக்கப்பட்டது. அவருடைய கறார் நோக்கின் காரணமான அவர் ‘இணைந்து பணியாற்ற இயலாதவர்’, ‘பொறுமையற்றவர்’ ‘ஆதிக்கவாதி’ என்று பலராலும் புறக்கணிக்கப்பட்டார்.
கண்டுபிடிப்பு
1950-வாக்கில் உயிரிகளின் செல்களில் டி.என்.ஏ-வின் இன்றியமையாத பயன்பாடுகள் அறியப்பட்டன. தொடர்ந்து அம்மூலக்கூறின் அமைப்பைத் தெரிந்துகொள்ள உலகின் பல முன்னணி அறிவியலாளர்கள் முனையத் தொடங்கினார்கள். இவர்களுள், அமெரிக்காவின் லினஸ் பாலிங் (Linus Pauling), இங்கிலாந்தின் ரோசலின் ப்ராங்க்ளின், ஜேம்ஸ் வாட்ஸன், ப்ரான்சிஸ் க்ரிக், மாரிஸ் வில்கின்ஸ் போன்றோர் முக்கியமானவர்கள். அந்தக் காலகட்டத்தில் டி.என்.ஏ-வின் அமைப்பைக் கண்டறிந்தால் நொபெல் பரிசும், மேலாக அறிவியல் உலகில் மங்காப் புகழும் நிச்சயம் என்பது உறுதியாயிற்று. ஒருபுறத்தில் ஒருவருடன் ஒருவருக்குக் கடும்போட்டியிருக்க மறுபுறத்தில் ஒருவரின் புரிதல் மற்றவரை அடுத்தகட்டத்திற்கு இட்டுச்செல்ல உதவியாகவும் இருந்தது. 1951-ல் வாட்சன் மாரிஸ் வில்கின்ஸின் எக்ஸ்.ரே படிகவியில் (X-ray Crystallography) குறித்த விளக்கவுரையைக் கேட்டு டி.என்.ஏ-வின் மீது ஆர்வம் கொண்டார். அமெரிக்காவிலிருந்து மேற்படிப்புக்காக இங்கிலாந்து வந்த ஜேம்ஸ் வாட்ஸன், கிரிக்குடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். அதே சமயத்த்தில் அமெரிக்காவில் லினஸ் பாலிங் தொடர்புள்ள பல புரதங்களின் அமைப்பைத் தொடர்ச்சியாகக் கண்டுபிடித்துக் கொண்டிருந்தார். வாட்சனும், க்ரிக்கும் (பெண்கள் கூந்தலைப் பின்னலிடுவதைப் போன்ற) மூன்று இழைகளைக் கொண்டு பிணைந்த அமைப்பு மாதிரியை முன்வைத்தார்கள். ஆனால் அந்த அமைப்புவடிவில் இருந்த தவறைக் கண்டுப்டிக்க ரோசலினுக்கு நீண்ட நேரமாகவில்லை.
வேறொரு புறத்தில் எக்ஸ். கதிர்களின் உதவிகொண்டு டி.என்.ஏ-வின் அமைப்பை ஆராய்ந்துகொண்டிருந்த ரோசலின், 1952-ல் டி.என்.ஏ-பி என்ற மூலக்கூறின் துல்லியமான படிகவியல் வரைபடத்தைப் பெற்றார். இது புதிரின் ஒரு முக்கிய புள்ளியை விடுவித்தது. தொடர்ந்து மாரிஸ் வில்கின்ஸ்க்கும், ரோசலினுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இதற்குச் சமரசத் தீர்வாக, டி.என்.ஏ-வின் ஏ-வடிவத்தை ரோசலின் ஆராயவும், பி-வடிவத்தை வில்கின்ஸ் ஆராயவும் அவர்கள் ஆய்வக நிர்வாகம் உத்தரவிட்டது. அதற்கு அடுத்த வருடத்தில் லினஸ் பாலிங் வேறொரு மூன்று இழை வடிவத்தை முன்வைத்தார். அதிலிருக்கும் குறைபாடுகளைச் சொல்ல மாரிஸ் வில்கின்ஸைப் பார்க்கப் போன வாட்சனுக்கு டி.என்.ஏ-பியின் எக்ஸ்.ரே முடிவுகளை வில்கின்ஸ் காட்டினார். அந்த படங்களின் மூலம் இரட்டை இழை வடிவம் வாட்சனுக்குப் புலப்பட்டது. அடினைன் (A), தையமின் (T), சைட்டோஸைன் (C ), குவானைன்(G) என்ற நான்கு ஆதார மூலக்கூறுகளைக் கொண்டது டி.என்.ஏ. அதுநாள் வரை ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த அனைவரும் ஆதார மூலக்கூறுகள் டி.என்.ஏயின் இழைகளில் வெளிப்புறமாகப் அமைத்திருப்பதாக நம்பியிருந்தார்கள். மேலும் அவை அடினைன் - அடினைன் அல்லது குவானைன் - குவானைன் என்று இரட்டையாக இணைந்திருப்பதாகக் கொண்டே வடிவமைத்துக் கொண்டிருந்தார்கள். முதன்முறையாக வாட்சனும் கிரிக்கும் அடிணைன் தையமினோடும், சைட்டோஸைன் குவானைனோடும் பிணைந்திருக்கலாம் என்று ஊகித்தனர். அந்த ஆதார மாற்றத்தைச் செய்ததுமே டி.என்.ஏ-யின் அழகிய இரட்டையிழை வடிவம் உறுதியாயிற்று. தொடர்ந்து இந்த வடிவத்தை அவர்கள் ‘நேச்சர்’ என்ற முன்னணி ஆய்வுச் சஞ்சிகையில் வெளியிட்டதும், நொபெல் பரிசைப் பெற்றதும் வரலாறு.
சர்ச்சைகள்
கிட்டத்தட்ட எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளும் இப்படித்தான் நிகழ்கின்றன. அட்டையில் வெட்டப்பட்ட ஒட்டுப் படம் போன்றவையே இந்தப் புதிர்கள். முழுப் புதிரையும் விடுவிக்கப் பலரும் முயற்சி செய்வார்கள். பலரும் பல்வேறு கோணத்திலிருந்து அணுக, கொஞ்சம் கொஞ்சமாகப் புதிரின் முழுவடிவமும் புலப்படத் தொடங்கும். அந்த நிலையில் புதிரின் மிசக் சிக்கலான, ஆதாரப் புள்ளியை விடுவிப்பவருக்கு மற்ற துண்டுகள் எங்கே ஒட்டும் என்பது தெளிவாகும். அவரே அந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவராக அறியப்பட்டாலும். அறிவியல் ஒரு தொடரோட்டம். தன் முன்னோடிகளின் தோளில் நின்றே ஒருவர் அடுத்த கண்டுபிடிப்பை நிகழ்த்துகிறார். மேலோட்டமாகப் பார்த்தால் இங்கும் அதே நிகழ்ந்திருக்கிறது. டி.என்.ஏ-வின் வடிவமைப் கண்டுபிடித்ததில் வாட்சன், ரோசலின், வில்கின்ஸ், பாலிங், க்ரிக் என அனைவரின் பங்களிப்புகளும் இருந்திருக்கின்றன. மாமேதை பாலிங்கின் தவறுகளை முன்வைத்தே வாட்சன் டி.என்.ஏவின் சரியான வடிவத்தைக் கண்டடைந்தார். ஆனால் இத்தனைக்கும் நடுவில் ரோசலின் ப்ராங்க்ளினின் பங்களிப்பு அதிகம் அங்கீகரிக்கப்படாமல் மறைக்கப்பட்டிருந்தது.
வாட்சன், க்ரிக், வில்கின்ஸ் இவர்களுக்கு இணையான அறிவியல் மேதை ரோசலின். என்றபோதும் அவருடைய பங்களிப்பு இருட்டிக்கப்பட்டது. கறாரான சோதனையாளரான ரோசலின் போட்டியில் ஈடுபட்டிருந்த எல்லாரையும்விட மிகத் துல்லியமான எக்ஸ்.ரே படங்களைப் பதிவு செய்தார். அவர் பதிவு செய்த டி.என்.ஏ-பி முடிவுகளைக் கண்டபின்னரே வாட்சன் இரட்டை இழை மாதிரியை உருவாக்க முடிந்தது. இருந்தபோதும் நேச்சர் ஆய்வுக்கட்டுரையின் கடைசிப் பத்தியில் ‘போகிறபோக்கில்’ ரோசலினின் பங்கு குறிப்பிடப்பட்டது. சோதனை முடிவுகள் கைவசமிருந்தபோதும் அவற்றைக் கொண்டு முழுப் புரிதலை ரோசலின் பெறவில்லை என்று போட்டியில் ஈடுபட்டிருந்த பிறர் குறிப்பிட்டார்கள். மாறாக, ரோசலின் கிங் கல்லூரியைவிட்டு வெளியேறுவதற்கு முன்னதாக எழுதி பதிப்பிக்கப்படாமல் (முடிக்கப்படாமல்) இருந்த கட்டுரைகளில் ரோசலின் இலக்கை வந்தடைவதற்கான அறிகுறிகள் சந்தேகத்திற்கிடமில்லாமல் தெளிவாக இருக்கின்றன. இன்னும் சில நாட்கள் இருந்தால் ரோசலின் அதே இரட்டை இழை முடிவுக்கு வந்திருக்கக்கூடும்.
புறக்கணிக்கப்பட்ட நடைமுறைகள்
வேகமின்னைதான் ரோசலினைப் போட்டியில் தோல்வியடையச் செய்ததா? அந்தக் காலங்களில் அறிவியலில் பெண்களுக்கு மிக முக்கியமான இடம் ஏதுமில்லை. சக ஆண் அறிஞர்களுக்குச் சமமாகப் பணியாற்றும் வாய்ப்புகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டன. மாரிஸ் வில்கின்ஸ்க்கும் ரோசலின் ப்ராங்க்ளினுக்கும் இடையில் பிளவு ஏற்பட்ட சமயத்தில் கிங் கல்லூரியின் இயக்குநர் மாக்ஸ் பெரூட்ஸ் (Max Perutz) இருவரையும் சமநிலையில் அனுகவில்லை. ரோசலின் பெற்ற பி-வடிவத்தின் மிகத் துல்லியமான எக்ஸ்.ரே முடிவுகளைப் புறக்கணித்து அவரை ஏ-வடிவில் மாத்திரமே சோதனை செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்தார். ரோசலினின் துல்லியமான பி-வடிவ முடிவுகள் மாரிஸ் வில்கின்ஸ்க்கு அளிக்கப்பட்டன. இதற்கு அவர் ரோசலினின் ஒப்புதலைப் பெறவில்லை.
மறுபுறத்தில் ரோசலினின் சோதனை முடிவுகளை அவர் ஒப்புதல் இல்லாமல் ஆய்வக இயக்குநர் பெரூட்ஸ் வாட்சன்-கிரிக்குக் காட்டினார். வில்கின்ஸின் ஆய்வுகள் மற்றும் ரோசலினின் முடிவுகளை முன்வைத்தே இரட்டையர்கள் டி.என்.ஏ வடிவைக் கண்டடைந்தார்கள். இருந்தபோதும் அவர்கள் ஆய்வுக்கட்டுரையில் ரோசலினுக்கு உரிய இடம் தரப்படவில்லை. டி.என்.ஏ வடிமைப்பு குறித்து எழுதிய ஆய்வுக்கட்டுரையில் இணையாசிரியராக இருக்க மாரிஸ் வில்கின்ஸை வாட்சனும் கிரிக்கும் அழைத்தனர். அந்த வடிமைப்பில் தனக்கு நேரடிப் பங்கில்லை என வில்கின்ஸ் மறுத்தார். ஆனால், வழமையான நடைமுறைக்களுக்குப் புறம்பாக அவர்கள் பெற்ற டி.என்.ஏ-பியின் முடிவுகள் ரோசலினுக்கு முறையான அங்கீகாரத்தைத் தர இரட்டையர்களுக்குத் தடையானது. தனியாக இரைதேடும் புலியைப் போன்று இலக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்த ரோசலின் கூட்டமாக வேட்டையாடிய சிங்கங்களிடம் தோற்றுப்போனார். இருந்தபோதும் போட்டி முடிவுக்கு வந்தவுடன் பெருந்தன்மையுடன் வாட்ஸனையும், கிரிக்கையும் மனதாரப் பாராட்ட அவர் தயங்கவில்லை. ஒருவகையில் ரோசலினின் இந்த மனந்திறந்த பாராட்டு அவருக்கு அங்கீகாரத்தை மறுத்த வாட்சன், கிரிக், பெருட்ஸ், வில்கின்ஸ் அனைவரையும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது.
பெண்ணுரிமை மறுப்பு
அந்த நாட்களில் இலண்டன் கிங் கல்லூரி பெண்களைச் சமமாக நடத்தியதில்லை. ஆண் பேராசிரியர்களும் ஆய்வர்களும் தனிப்பட்ட அறைகளில் கருத்துப் பரிமாறல்களுடனும் விவாதங்களுடனும் உணவருந்த, பெண் பேராசிரியர்கள் மாணவிகளுடன் அமர்ந்து சாப்பிட வேண்டியிருந்தது. விவாதங்களின் முறையான இடம் அவருக்கு மறுக்கப்பட்டது. இந்தப் புறக்கணிப்பு ஒருவகையில் அவரை மேலும் மேலும் ஆய்வகம் நோக்கி நகர்த்தி அவரது சோதனைகளை அதிதுல்லியமாக்கியது. The Double Helix புத்தகத்தில் தனது ஆய்வுகளைக் கொண்டு தீர்க்கமான முடிவுகளுக்கு வரத் திராணியற்றவர் என்ற வகையில் வாட்சன் ரோசலின் குறித்த பிம்பத்தைக் கட்டமைத்தார். அந்தப் புத்தகத்தில் அவரை ‘ரோஸி’ என்றே குறிப்பிடுகிறார். (உயர்குடி நடைமுறைக்க்கொண்ட இங்கிலாந்து சமூகத்தில் ரோஸி என்ற பெயரால் ஒருபோது அவரை விளித்திருக்க முடியாது. பல வருடங்களுக்குப் பிறகு கிரிக் “அவரை நாங்கள் துச்சமாகவே மதிப்பிட்டிருந்தோம் என்றே தோன்றுகிறது” என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஏன் ஒருவகையில் ரோசலின்கூட பெண்களைக் குறித்த அந்த மதிப்பீடுகளைக் கொண்டவராகவே இருந்திருக்கிறார்; தனது பெறறோர்களுக்கு எழுதிய ஒரு கடிததில் ஒருவரைப் பற்றி “… அவர் பெண் என்றபோதும் மிகவும் புத்திசாலி” என்று விளித்திருக்கிறார்.
இலக்கு நோக்கிய தொலைநோக்கையும், போர்க்குணத்த்தையும் கொண்டிருந்த ரோசலின் ஆய்வகத்தின் பாதுகாப்பு நடைவரைகளை எப்பொழுதுமே பெரிதாக மதிக்கவில்லை. கதிரியக்கத்தால் பாதிக்கப்படுவோம் என்று தெரிந்திருந்தபோதும் பாதுகாப்பற்ற ஆயுவுகள் பலவற்றை அவர் மேற்க்கொண்டார். தனது முப்பந்தைந்து வயதுவரை எந்த ஆண்களுடனும் நெருங்கியிராத ரோசலின் 1955-ல் அமெரிக்காவின் கால்டெக் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த டான் காஸ்பர் (Don Casper) என்ற இளம் அறிவியளாலருடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார். ஆனால் காலம் கடந்திருந்தது. 1956-ல் அவரது அடிவயிற்றில் குறுவாளால் குத்தப்பட்டதுபோன்ற வலிப்பதாக மருத்துவரிடம் சொன்னார். விரைவில் அவருக்கு கர்ப்பபை புற்றுநோய் முதிர்ந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வகத்தில் முறையான பாதுகாப்புகளை மதிக்காததன் விளைவுகள் என்பது சர்வநிச்சயமானது. 1958, ஏப்பிரில் 16, தனது 37-வது வயதில் அந்த இளம் மேதை வாழ்நாளில் சாதனைகளுக்கு உரிய இடத்தைப் பெறாமலேயே மரித்துப்போனார்.
திருத்தப்படும் வரலாறு
மிகக் குறுகிய ஆயுளைப் பெற்றிருந்த ரோசலின் ப்ராங்க்ளினின் புத்தகத்தின் பின்னுரை அவரது வரலாறுக்கு இணையாக நீண்டது. 1962-ல் வாட்சன், கிரிக், வில்கின்ஸ்-க்கு நோபெல் பரிசு வழங்கப்பட்டபொழுது அவர் உயிருடன் இல்லை. எனவே நோபெல் விதிகளின்படி அவர் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. டி.என்.ஏ கண்டுபிடிப்புக்கு இருபத்தைந்து வருடங்கள் கழித்து அது குறித்து வாட்சன் The Double Helix என்ற புத்தகத்தை வெளிட்டார். முன் சொன்னதைப் போல அதில் ரோசலினின் பங்கை அவர் குறைவாகவே முன்வைத்திருந்தார். இருந்த போதும் அந்தப் புத்தகம் நடைமுறைகளுக்குப் புறம்பாக அவர் ரோசலினின் ஆய்வு முடிவுகளைப் பெற்றதைத் தெளிவாக்கியது. அதைத் தொடர்ந்து ஆய்வக நிர்வாகியான மாக்ஸ் பெருட்ஸ் ரோசலினின் அனுமதியில்லாமல் அவரது ஆய்வு முடிவுகளை வாட்சன் - கிரிக் இரட்டையர்களுக்குத் தந்ததைப் பலரும் கேள்விக்குள்ளாக்கினார்கள். பின்னர் இதுகுறித்து 1969-ல் சயின்ஸ் சஞ்சிகையில் எழுதிய விளக்கத்தில் ‘நிர்வாகத்தில் தனக்கிருந்த அனுபவமின்னையையும், தனது மேம்போக்கான அனுகுமுறையையும்’ பெருட்ஸ் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அப்பொழுது ரோசலின் இறந்து பத்தாண்டுகளாகியிருந்தன.
பின்னாட்களில் அவரைக்குறித்த பல சரித்திரப் புத்தகங்களும், ஆய்வேடுகளும் வெளியாகியிருக்கின்றன. 2000 ஆண்டில் தங்கள் புதிய உயிரியல் ஆய்வகக் கட்டிடத்திற்கு கிங் கல்லூரியினர் ஃப்ராங்க்ளின்-வில்கின்ஸ் பெயரைச் சூட்டினார்கள். பிரிட்டனில் தற்பொழுது முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருது ரோசலின் ப்ராங்க்ளின் பெயரில் ராயல் சொஸைடியால் வழங்கப்படுகிறது. அமெரிக்கப் புற்றுநோய்க் கழகம் ஆண்டுதோறும் ’ பெண் அறிவியலாளர்களுக்கான ரோசலின் ப்ராங்க்ளின் விருதை’ வழங்கிவருகிறது. பிபிஸி ஒரு வரலாற்றுப் படத்தை எடுத்தது. அவர் குறித்த பல தொலைக்காட்சி ஆவணப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அனா ஸிக்ளர் (Anna Zeigler) இயக்கிய ‘Photograph 51’ ரோசலின் பதிவு செய்த அதிதுல்லிய டி.என்.ஏ-பின் வடிவமைப்பையும் அது பெருட்ஸ், வாட்சன், வில்கின்ஸ் போன்றவர்களிடையே கைமாறியதையும் நாடகமாக்கியது. இவையெல்லாம் ஒருவகையில் ரோசலின் இழந்த அவரது முக்கியத்துவத்தைத் தற்பொழுது உறுதிப்படுத்தியிருக்கின்றன.
ஆனால் தான் வேலைசெய்யும் நாட்களின் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள ரோசலினின் முயன்றதேயில்லை. அதிதுல்லியமான, கறாரான, போர்க்குணம் கொண்ட, அழகிய அறிவியல் மேதையாகவே அவர் அறியப்பட்டார். நம் வருங்காலத்தை மாற்றியெழுதிவரும் மரபியலின் துவக்கமான டி.என்.ஏ-யின் வடிவமைப்பைக் கண்டடைந்ததில் ரோசலினின் ப்ராங்க்ளினின் பங்களிப்பு என்ன? அவர் ஒற்றைக்காட்சியில் வந்துபோன துணைநடிகரா, இல்லை அங்கீகாரம் மறுக்கப்பட்ட கதாநாயகியா? இந்தக் கேள்விக்கு ஒருபோதும் விடைகாணமுடியாது என்றே தோன்றுகிறது.