ஐன்ஸ்டைனின் மனைவி

Mileva Einstein

ஆல்பர் ஐன்ஸ்டைனின் ‘அற்புத ஆண்டு’ என்று 1905 அறியப்படுகிறது. அந்த வருடத்தில், அவர் ஒளிமின் விளைவு அதையட்டி எழுந்த ஒளியின் குவாண்டம் கோட்பாடு, ப்ரொனியன் இயக்கதின் அணுக்கோட்பாடு, விசேடச் சார்நிலைக் கோட்பாடு என்று மூன்று மாபெரும் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார். எல்லாவற்றுகும் மேலாக, ஒரு அறிவியல் சமன்பாடு சொல்லு என்று கேட்டால் பெரும்பாலன சாதாரணர்கள் உடனே \( E=mc^2 \) என்று சொல்வார்கள். இவ்வளவு பிரபலமான, எளிமையான சமன்பாடுதான் அணுக்களைப் பிளந்து சக்தி எடுக்க மனிதனுக்கு உதவியாக இருக்கிறது. இதுவே இன்று உலகம் முழுவதும் அணுமின் நிலையங்களாக மின்சார சக்தியைத் தினமும் தந்து கொண்டிருக்கிறது. இதன் தீயவிளைவு, ஹிரோஷிமா, நாகசாகியும் சந்தித்த அழிவுகள். இவை ஒவ்வொன்றும் நூறு வருடங்களுக்குப் பிறகு இன்றும் அசைக்க முடியாத கோட்பாடுகளாக நிலைபெற்றிருக்கின்றன. (அதைக் கொண்டாடும் முகமாக இந்த வருடம் இயற்பியல் வருடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது).

ஐன்ஸ்டைன் - மிலேவா காதல்

ஐன்ஸ்டைனுடயவை என்று அறியப்படும் இந்தக் கண்டுபிடிப்புகளில் அவரது முதல் மனைவி மிலேவா மாரிச்க்குப் (Mileva Marić) பெரும்பங்கு உண்டு என்று சிலர் சொல்லுகிறார்கள். இந்தக் கண்டுபிடிப்புகளில் மிலேவா-வுக்கு உரிய இடம் கொடுக்கப்படவில்லை என்றும், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவரை மறக்கடித்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். ஐன்ஸ்டைன் பள்ளிக்கல்வி முடிந்து உயர்கல்விக்கு ஸ்விஸ் நாட்டிற்கு வந்தபொழுது, மிலேவா மாரிச் என்ற செர்பியப் பெண்ணைக் கண்டார். ஐரோப்பாவின் மிக உன்னதக் கல்விக் கூடங்களில் ஒன்றாகக் கருதப்பட்டது (கருதப்படுவது) ஸ்விஸ் பாலிடெக்னிக் (Eidgenய்ssische Technische Hochschule, ETH Zurich, நம்மூர் ஐஐடிக்கள் இதை மாதிரியாகக் கொண்டவை). இங்கே நுழைவது மிகவும் கடினம், ஐன்ஸ்டைன் பிற மாணவர்களைவிடக் குறைந்த வயதிலேயே இங்கே வந்தவர். அங்கே இயற்பியல் வகுப்பில் இருந்த ஒரே பெண் மிலேவா, கணிதத்தில் மிகவும் தேர்ச்சிபெற்றவராக இருந்தார். இவர் அவ்வளவு அழகானவர் கிடையாது, பிறவியிலேயே இடுப்பில் இருந்த எலும்புப் பிசகினால் சரியாக நடக்க முடியாதவர், ஐன்ஸ்டைனைவிட நான்கு வயது மூத்தவர். இதையெல்லாம் கடந்து இருவருக்கும் காதல் வந்தது. இவர்கள் காதலுக்கு ஐன்ஸ்டைனின் அம்மா பலத்த எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர் திருமணத்திற்கு முன்னால் ஒரு குழந்தையும்கூடப் பிறந்தது. படிப்பு முடிந்தவுடன் ஐன்ஸ்டைன் வேலைதேடி இத்தாலிக்குச் சென்றுவிட மிலேவா ஜூரிச்சிலேயே தங்கினார். தொடர்ந்து ஸ்விஸ் திரும்பிய ஐன்ஸ்டைன் அங்கே காப்புரிமை அலுவலகத்தில் வேலையில் சேர்ந்ததும், வீட்டாரின் எதிர்ப்புகளை ஒதுக்கி மிலேவா-வை மணந்தார்.

அந்த சமயத்தில் (1905) ஆம் ஆண்டில்தான் ஐன்ஸ்டைனின் அற்புத வெளியீடுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. மெதுவாக ஐன்ஸ்டைன் புகழடையத் தொடங்கினார். பின்னர் இருவருக்கும் இடையில் பிளவு வந்தது. இதற்குப் பின் ஐன்ஸ்டைன் பலசமயங்களில் பெண்வயப்பட்டார். அவருடைய சொந்தக்காரப் பெண் உட்பட பலருடனும் ஐன்ஸ்டைனுக்குத் தொடர்புகள் இருந்தன. பின்னர் அவர்களில் ஒருவரை ஐன்ஸ்டைன் இரண்டாம் மனைவியாக ஏற்றார். இரண்டாம் உலகப்போரில் யூதர்கள் கொடுமைப்படுத்தப்பட அங்கிருந்து அமெரிக்க வந்து பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். அதே சமயத்தில் ஐன்ஸ்டைனிடமிருந்து விவாகரத்து பெற்ற மிலேவா-வும் அவர்களின் இரண்டு குழந்தைகளுடன் அமெரிக்கா வந்தார்.

ஐன்ஸ்டைன் - மிலேவா இரண்டு பேரின் மறைவிற்குப் பிறகு ஐன்ஸ்டைனின் கண்டுபிடிப்புகள் பலவற்றில், குறிப்பாக கணிதச் சமன்பாடுகள் அதிகமுள்ள விசேடச் சார்நிலைக் கோட்பாட்டில் (Special Theory of Relativity) மிலேவாவுக்கு மிகப் பெரும்பங்குண்டு என்றும், தன்னுடைய மனைவிக்கு அறிவுலகில் கொடுக்க வேண்டிய முக்கிய இடத்தைத் தானே அபகரித்துக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு இருக்கிறது.

ஐன்ஸ்டைனின் தனிப்பட்ட வாழ்க்கையொன்றும் அவ்வளவு உயர்ந்ததாக இருக்கவில்லை. சிறிய வயதில் அவர் உடல் குறைபாடுள்ளவர் என்று அவருடைய அம்மா கவலைப்பட்டிருக்கிறார். படிப்பில் அவ்வளவாக பிரகாசிக்காத ஐன்ஸ்டைனைப் பற்றி அவர் கவலைப்பட்டிருக்கிறார். பின்னர் அவர் நன்றாகப் படிக்க ஆரம்பித்த நாட்களில் மிலேவாவின் மீது நாட்டம் கொள்வதைத் தீவிரமாக எதிர்த்திருக்கிறார். (மிலேவா செர்பியர், கீழை வைதீக முறை கிறிஸ்தவர், ஐன்ஸ்டைன் யூத குடும்பத்தைச் சேர்ந்தவர். புத்தகப் புழுவான தன் மகன் இன்னொரு புத்தகப் புழுவை விரும்புவதை அம்மா விரும்பவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக மிலேவாவின் அழகின்மையும், உடற்குறைவும்…). மேலதிகமாக, இருவரும் ஸ்விஸ் பாலிடெக்னிக்கில் தேர்ச்சியடையவில்லை. இருவருக்கும் வேலைகிடைப்பது மிகவும் கஷ்டமாக இருந்திருக்கிறது. இத்தனைக்கும் இடையில்தான் ஆல்பர்ட்டும் மிலேவாவும் மணந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரிடையே காதல் அந்த அளவிற்குத் தீவிரமாக இருந்திருக்கிறது.

சர்ச்சைகள்

ஐன்ஸ்டைனின் மறைவிற்குப் பிறகு வெளியான “காதல் கடிதங்கள்” (மிலேவாவுக்கும் ஐன்ஸ்டைனுக்கும் இடையில் நடந்த கடிதப் பரிமாற்றங்கள்) பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியிருக்கின்றன. ஐன்ஸ்டைனின் புகழில் மிலேவாவின் உரிய இடம் மறுக்கப்பட்டிருக்கிறது என்ற கருத்தை முதன் முதலில் வெளியிட்டவர் தெஸான்கா த்ர்புஹோவிச்-கியூரிச் (Desanka Đurić-Trbuhović) என்ற பெண், ஆல்பர்ட் ஐன்ஸ்டனின் நிழலில் (In the Shadow of Albert Einstein) என்று தலைப்பிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் சார்நிலை குறித்த முடிவுகள் பெரும்பாலும் மிலேவாவினுடையவை என்று தொனிக்க எழுதப்பட்டிருந்தன. ஆனால் துரதிருஷ்டவசமாக தெஸான்காவின் தரவுகள் எல்லாமே வாழ்வழிச் சான்றுகள்தான்.

ஆனால், இதுவே பலருக்கும் போதுமானதாக இருந்தது; அவர்கள் இதைத் துவக்கமாகக் கொண்டு ஐன்ஸ்டைன் சம்பந்தப்பட்ட அனைத்து உரையாடல்கள், புகைப்படங்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றைத் துருவி ஆராயத் தொடங்கினார்கள். ஐன்ஸ்டைன்-மிலேவா காதல் கடிதங்கள் பதிப்பிக்கப்பட்ட பொழுது அவற்றில் பல இடங்களில் “நம்முடைய ஆராய்ச்சி”, “நம் கண்டுபிடிப்புகள்”, “நம் கருத்துகள்” என்ற பதங்கள் ஐன்ஸ்டைனால் எழுதப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எல்லாவற்றையும் விட மிக முக்கியமான தரவு, ரஷ்ய இயற்பியலாளர் ஆப்ராம் இயா·பே (Abram Ioffe) என்பவரின் எழுத்துபூர்வச் சான்றிலிருந்து கிடைத்தது. இயா·பே 1905-ஆம் ஆண்டு வாக்கில் ஜெர்மனியில் வில்ஹெம் ரண்ட்கென் (Wilhem Röntgen) என்பவரின் (இவர்தான் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்தவர்) ஆய்வகத்தில் வேலைசெய்து வந்தார். ரண்ட்கென் அப்பொழுது இயற்பியல் உலகின் மிக முக்கியமான ஆய்வேடான “அனலன் டெர் பிஸிக் (Annalen der Physik) என்ற சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்தார். அவரிடம் பதிப்பிற்காக வந்த ஐன்ஸ்டைனின் சார்நிலை பற்றிய ஆய்வேட்டில் ஐன்ஸ்டைன் மற்றும் மிலேவாவின் பெயர்கள் முதலில் இருந்ததாகவும் பின்னர் அதில் மிலேவாவின் பெயர் நீக்கப்பட்டு ஐன்ஸ்டைனின் பெயர் மாத்திரம் பதிப்பிக்கப்பட்டதாகவும் எழுதியிருக்கிறார். (துரதிருஷ்டவசமாக காதல் கடிதங்கள் வெளியாகி இந்த விஷயம் சூடுபிடித்த காலத்தில் ஆப்ராம் இயா·பே உயிருடன் இல்லை).

இதன் பிண்ணனி விபரங்களை ஐன்ஸ்டைனின் மனைவி என்று தலைப்பிடப்பட்ட செய்தியரங்கத்தில் (PBS.org) அறியலாம். இவையெல்லாம் அறுபது நிமிடங்களுக்கு ஓடும் ஆவணப்படத்தின் உரைவடிவங்கள். முடிந்தால் இந்த ஆவணத்தைப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்).

இதை வைத்துக் கொண்டு மிலேவாவுக்கு அநீதி இழைக்கப்பட்டது, காலம் காலமாக நடப்பதைப் போல இந்தப் பெண்ணும் ஒடுக்கப்பட்டிருக்கிறாள், உலக மாமேதை என்று சொல்லப்படும் ஐன்ஸ்டைன் உண்மையில் அறிவுத் திருட்டில் ஈடுபட்ட அயோக்கியன் என்ற ரீதியில் பலர் எழுதியிருக்கிறார்கள். ஐன்ஸ்டைன் பெயர் போடும் பொழுது விற்பனை சாத்தியம் இருக்கும் நிலையில் எத்தனை நாட்களுக்குக் கதாநாயகனாக அவரை வைத்துப் படமெடுப்பது, வில்லனாக மாற்றினால் இன்னும் நன்றாக ஓடுமல்லவா?

இன்றைய புரிதலின்படி உண்மை நிலை என்ன?

ஐன்ஸ்டைனின் மறைவிற்குப் பிறகு அவரது சொத்துக்களையும் காப்புரிமையையும் இஸ்ரேல் நாட்டிலிருக்கும் ஹீப்ரூ பல்கலைக்கழகத்திற்கு எழுதிவைத்துவிட்டார். அங்கே அவை ஆவணப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சொல்லப்போனால் Albert Einstein என்ற பெயரே வர்த்தக உரிமையுள்ளது (ஹீப்ரூ பல்கலையின் வசம்), எனவே சில விஷயங்களில் அவர் பெயரைப் பயன்படுத்தும் பொழுது Albert Einstein(TM) என்று வர்த்தச் சின்னக் குறிபோட்டு எழுதவேண்டியிருக்கிறது. இந்த ஐன்ஸ்டைன் சமாச்சாரங்களை நிர்வகிக்கும் குழுவின் மீது பலருக்கும் அதிருப்தி இருக்கிறது. அவர்கள் ஐன்ஸ்டைனின் கடிதங்கள், கட்டுரைகள், புகைப்படங்கள் போன்றவற்றை ஆவணப்படுத்துகையில் ஐன்ஸ்டைன் மீதிருக்கும் பிம்பம் கலையாமல் இருக்கப் பாடுபடுகிறார்கள் (அதில் அவர்களுக்கு வர்த்தக இலாபம் இருக்கிறதல்லவா?) என்ற குற்றச்சாட்டிருக்கிறது.

இதற்கு மறுபுறத்தில் ஐன்ஸ்டைன் என்ற தனிமனிதரின் மாபெரும் இயற்பியல் சாதனைகள்மீது, குறிப்பாக, ஒரே வருடத்தில் அளவிடமுடியாத சாதனைகள் மீது, பலருக்கும் அவநம்பிக்கைகள் இருக்கின்றன. எனவே, இவர்கள் ஒவ்வொரு விஷயத்தையும் தூண்டித்துருவி ஆராய்கிறார்கள்.

உண்மை நிலை

அடிப்படையில் சார்நிலைத் தத்துவத்திற்கு மிலேவா சொந்தம் கொண்டாட மூன்று காரணிகள் இருக்கின்றன; ஐன்ஸ்டைன் ஒரு கணித மேதை இல்லை, மிலேவா கணிதத்தில் சிறந்தவர், சார்நிலைத் தத்துவம் கணிதச்சிக்கல்கல் நிறைந்தது. ஐன்ஸ்டைன் கணிதமேதை இல்லை என்று சொல்ல அவரது பள்ளி ஆசிரியர் ஹெர்மான் மின்கோவ்ஸ்கி (Hermann Minkowski), ஐன்ஸ்டைனை கணிதத்தில் “சோம்பேறி நாய்” என்று விளித்தது பெரிதும் உதவுகிறது. ஐன்ஸ்டைனே கணிதத்தில் தன்னுடைய திறமைக்குறைவை ஒத்துக் கொண்டிருக்கிறார்; “படிக்கும் நாட்களில் இயற்கையைப் புரிந்துகொள்ள கணிதத்தின் உதவி வேண்டும் என்பதை நான் தெளிவாக உணர்ந்திருக்கவில்லை”. மாறாக மிலேவா கணிதத்தில் சிறந்தவர் என்ற சான்றுகளைப் பெற்றவர். இதைத்தான் பலரும் முன்வைக்கிறார்கள்.

ஆனால், ஐன்ஸ்டைனின் திறமை குறைவு என்பதை அப்படித் தனித்து எடைபோட்டுவிட முடியாது. அளப்பறிய இயற்பியல் மேதமையைக் கொண்டிருந்த ஐன்ஸ்டைன் “அவருடைய இயற்பியல் திறனை ஒப்பிடும்பொழுது கணித்ததில் குறைவானவராக இருந்தார்” என்று சொல்வதுதான் சரியாக இருக்கமுடியும். அதாவது, ‘அவரது தகுதிக்கு’ அது குறை என்பதாகத்தான். மறுபுறத்தில் மிலேவாவின் கணித உன்னதத்தையும் அதே அளவில்தான் மதிப்பிடவேண்டும். ‘வசதிகள் அதிகமில்லாத, ஏழை செர்பியாவிலிருந்து முளைத்தெழுந்த, ஒடுக்கப்பட பெண்ணினத்தைச் சார்ந்த மிலேவா’ - கணிதத்தில் சிறந்தவர் என்று சொல்வதுதான் சரி. அதாவது அவர் உலகத் தரத்திற்கு முதல்நிலை கணிதவியலாளர் என்பது எங்கும் நிரூபிக்கப்படவில்லை. சொல்லப்போனால், இருவரும் சேர்ந்து படித்த காலங்களில் ஐன்ஸ்டைன் 11 மதிப்பெண்கள் (மொத்தம் 12) வாங்கிய பொழுது மிலேவா 5 மதிப்பெண்களைத்தான் பெற்றிருந்தார். எனவே ஐன்ஸ்டைனை ஒரு கணித மடையன் என்று முன்னிருத்துவது தவறு.

சார்நிலை கணிதச் சமன்பாடுகளைக் கொண்டதுதான். ஆனால் அப்படியன்றும் நெட்டி கழற்றும் கணக்குகள் அல்ல. இதைக் கூடச் செய்ய இயலாதவராக ஐன்ஸ்டைனை முன்னிருத்துவது அவருடன் இணைந்து பணியாற்றிய யாராலும் முடியாத காரியம். மேலும் இதற்கான கணிதச் சட்டகம் ஹெந்ரிக் லொரான்ட்ஸ் (Hendrik Lorentz) என்பவரால் ஏற்கனவே கட்டப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில்தான் சார்நிலையின் இயற்பியல் விளக்கங்களை ஐன்ஸ்டைன் மேலெழுப்பினார். எனவே சார்நிலையின் கணிதத்தை மிலேவா செய்தார் என்று சொன்னாலும், மிலேவா லொரான்ட்ஸின் தோள்கள் மீது ஏறி நின்று ஐன்ஸ்டைனின் இயற்பியல் கோபுரங்களைக் கட்ட உதவினார் என்பதுதான் சரியாக இருக்கும். கவனிக்கவும், இப்படிச் சொல்லும்பொழுது மிலேவாவை திறமையில்லாத பெண்மணி என்று ஒதுக்குவது தவறு. கட்டாயம், பெண்களுக்கு உரிமை மறுக்கப்பட்ட அந்தக் காலங்களில் மிலேவாவின் அறிவியல் சாதனைகள் அற்புதமானவைதான்.

ரஷ்ய ஆய்வாளர் ஆப்ராம் இயா·பே “முதலில் ஐன்ஸ்டைன்-மிலேவா என்று பெயரிடப்பட்டு ‘அனலன் டெர் ·பிஸிக்’ சஞ்சிகைக்கு வந்தக் கட்டுரையில் பின்னர் மிலேவாவின் பெயர் நீக்கப்பட்டது” என்று சொல்வதும் மிகவும் அதிகாரபூர்வமானதாக இல்லை. அந்தக் காலங்களில் முதன்மை ஆய்வாளர்கள் பதிப்பிற்குச் சமர்ப்பிக்கப்பட்டு சரிபார்க்க அனுப்பப்படும் கையெழுத்துப் பிரதிகளைத் திறமையிலும், நிலையிலும் குறைந்த தங்கள் கீழ்நிலை ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களிடம் கொடுக்கும் வழக்கம் இருந்ததில்லை. ரன்ட்கென் அடிப்படையில் ஒரு சோதனையாளர்; கருத்தியல் ரீதியான சார்நிலைக் கட்டுரை அவரிடம் சரிபார்க்க வந்ததாக நம்புவதற்கில்லை (அதைச் சோதித்து ஏற்றுக்கொள்ளும் பின்புலம் அவருக்குக் கிடையாது). மாறாக, உலோகங்களில் எலெக்ட்ரான்களின் பாய்ச்சல் பற்றிய கருத்தை வழங்கிய பால் ட்ரூட் (Paul Drude), அல்லது ஒளியியல் மற்றும் வெப்பவியலில் பல அற்புதக் கருத்துக்களை மொழிந்த மாக்ஸ் ப்ளாங் (Max Plank) போன்ற முதல்தர கருத்தியல் இயற்பியலாளர்களிடம்தான் சென்றிருக்க வாய்ப்பிருக்கிறது. இவர்களும் அனலன் டெர் ஃபிஸிக் சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இருந்தார்கள். இதற்கான கூடுதல் ஆதாரம், சார்நிலை வெளியிடப்பட்டு மூன்று வருடங்கள் கழித்து இதன் பிரதி வேண்டும் என்று ரண்ட்கென் ஐன்ஸ்டைனிடம் கேட்டுப் பெற்றிருக்கிறார். முதலின் தானே சோதித்து, தரமானது என்று சான்றளித்து வெளியிட்டிருந்தால் ரண்ட்கெனுக்கு இதன் பிரதி தேவைப்பட்டிருக்காது.

இந்த இடத்தில் ஐன்ஸ்டைன் சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் மூன்றாம் நிலை ஊழியராக வேலைபார்த்து வந்த நாட்களில் அவருடைய சகாவான வெரோ பெஸ்ஸோ (Vero Besso)-வைப் பற்றிக் குறிப்பிட்டாகவேண்டும். காப்புரிமை அலுவலகத்தில் வேலை குறைவான நேரங்களில் ஐன்ஸ்டைன் தன்னுடைய இயற்பியல் சாகசங்களில் ஈடுபடிருக்கிறார். அப்பொழுது அவர் பெஸ்ஸோவிடம் நிறைய விவாதித்திருக்கிறார். பிரபலமடைந்த பலவருடங்களுக்குப் பின்னர் தன்னுடைய அந்த நாட்களை நினைவுகூறும் ஒரு சொற்பொழிவில், “ஆண்டொன்றுக்கும் மேலாக நான் சார்நிலைப் புதிரில் மூழ்கியிருந்தேன். கிட்டத்தட்ட மேற்க்கொண்டு செல்லத் தேவையான எல்லா வழிகளுமே அடைபட்டுவிட்டதாகத்தான் தோன்றியது. ஆனால் ஒரு நாள் பெஸ்ஸோவிடம் விவாதித்துக் கொண்டிருக்கும்பொழுது கிடைத்த ஒரு கருத்துதான் என்னை முற்செலுத்தியது”. மறுநாள் பெஸ்ஸோவின் கதவைத் தட்டி “நன்றி, பெஸ்ஸோ! நான் சார்நிலைப் புதிரை முற்றிலுமாக விடுவித்துவிட்டேன்” என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். இதற்குச் சரியாக ஐந்து வாரங்களில் ஐன்ஸ்டைன் சார்நிலையைப்பற்றி முற்றிலுமாக எழுதி முடித்திருக்கிறார். உண்மையில் பெஸ்ஸோ எந்த அளவிற்கு இதற்குப் பங்களித்திருக்கிறார் என்று தெரியவில்லை, ஆனால் கட்டாயம் ஐன்ஸ்டைனின் அலைபாயும் சிந்தனைகளை ஒரு புள்ளியில் குவிக்க பெஸ்ஸோவின் விவாதங்கள் உதவின என்று எல்லோராலும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. ஐன்ஸ்டைனின் புதிருக்குத் தொடர்பான விஷயங்கள் எர்னஸ்ட் மாஃக் (Ernest Mach) என்பவரின் ஒளி பற்றிய ஆய்வுகளில் இருக்கின்றன என்று பெஸ்ஸோதான் ஆற்றுப்படுத்தியிருக்கிறார்.

சார்நிலையில் மாத்திரமல்லாது, பொதுவில் ஐன்ஸ்டைனின் இயற்பியல் ஆளுமையை பெஸ்ஸோ பெரிதும் பாத்திருக்கிறார். நிலையில்லா அலைச்சல்களைப் பற்றிய ப்ரௌனியன் இயக்கம் (Brownian Motion) தொடர்பான வெப்ப இயக்கவியல் (Thermodynamics) கோட்பாடுகளை ஐன்ஸ்டைனுக்குப் புரியவைத்திருக்கிறார் பெஸ்ஸோ. சில நேரங்களில் பெஸ்ஸோ அளவுக்கு அதிகமாகத் துல்லியமான விபரங்களைத் துருவிக் கேட்கிறார் என்று ஐன்ஸ்டைன் சலித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இறுதியில் அந்தத் துல்லிய விபரங்களிலிருந்துதான் ஐன்ஸ்டைனுக்குத் தேவையான விடைகள் கிடைத்திருக்கின்றன. சார்நிலையிலும், ப்ரௌனியன் இயக்கத்திலும் பெஸ்ஸோவின் பங்கு துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்டதைப் போல மிலேவாவின் பங்கிற்குச் சான்றில்லை.

“நம் ஆய்வுகள்” “நம் முடிவுகள்” என்றெல்லாம் ஐன்ஸ்டைனால் எழுதப்பட்ட காதல் கடிதங்களில் வருவதை வைத்துப் பலரும் மிலேவாவின் பங்கு இருக்கிறது என்று வாதிடுகிறார்கள். இதற்குத் தரவாக ஐன்ஸ்டைனின் வரிகளைத் தூண்டித் துருவி ஆராயும் அவர்கள், மறுபுறத்தில் மிலேவா ஐன்ஸ்டைனுக்கு எழுதிய காதல் கடிதங்களின் பொதுத்தொனியை மறந்துபோகிறார்கள். தான் கர்ப்பமாக இருப்பதாக மிலேவா எழுதிய கடித்ததிற்கு ஐன்ஸ்டைன் பதில் எழுதும்பொழுது முதலில் தம்முடைய (கவனிக்கவும், தனித்திருந்து செய்யும் பொழுதும் நம்முடைய என்றுதான் ஐன்ஸ்டைன் எழுதியிருக்கிறார், என்னுடைய என்று எழுதவில்லை, இது அந்த நாட்களில் அவர்களுக்கிடையே இருந்த பிணைப்பைக் காட்டுகிறது) இயற்பியல் முயற்சிகள் கனிந்துவருவதையும், சாதனை படைப்போம் என்பதில் தனக்கிருக்கும் நம்பிக்கை வலுவாகி வருகிறது என்றும் பதிலெழுதினார் ஐன்ஸ்டைன். அதே கடிதத்தில், “சீக்கிரமே நாம் மணந்துகொள்வோம். அப்பொழுது தடைகள் ஏதுமின்றி, குறுக்கீடுகள் இல்லாமல் நாம் இயற்பியலில் மூழ்கிக் கிடக்கலாம்” என்று ‘காதல் ததும்ப’ எழுதியிருக்கிறார். அதாவது, வரப்போகும் குழந்தையும் தந்தையாக அதற்குச் செய்ய வேண்டிய கடமைகளும் ஐன்ஸ்டைனுக்கு உறைக்கவேயில்லை. பொதுவில் அவர் கடிதங்களில் தன்னுடைய அறிவியல் சாகசங்களைப் பற்றித்தான் அதிகம் எழுதியிருக்கிறார். மாறாக மிலேவா, அவருடைய அறிவியலைப் பாராட்டி மாத்திரமே எழுதியிருக்கிறார். எந்தக் கடிதங்களிலும் அவருடைய அறிவியல் குறைகளைச் சோதித்தோ கடிந்துகொண்டோ தன்னுடைய மேதமையை வெளிப்படுத்தவில்லை. பொதுவில் ஐன்ஸ்டைன்-மிலேவா கடிதங்கள் காதல்போதையில் மூழ்கிக் கிடந்த இரண்டு இளம் உள்ளங்களைத்தான் பிரதிபலிக்கின்றன. சராசரி காதலர்களின் லௌகீக விஷயங்களைக் கடந்து இது காலத்தையும் வெளியையும் மறுவரையறைப்படுத்தி, உலகை அசைத்துபோடும் இயற்பியலாக இருந்ததுதான் விசேடம்.

சில செர்பிய அறிவியல் வரலாற்றாளர்கள் முன்வைக்கும் “எல்லாமே மிலேவாதான்-ஐன்ஸ்டைன் ஒரு ஒட்டுமொத்த அறிவியல் திருடன்” என்ற குற்றச்சாட்டு வலுவில்லாதது. ஏனென்றால், தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஐன்ஸ்டைன் உன்னதகக் கண்டுபிடிப்புகளை வெளியிட்டிருக்கிறார். (இவை 1905ஐப் போல உச்சமில்லாமல் இருக்கலாம், ஆனால் முதல்தர இயற்பியல் கண்டுபிடிப்புகள் என்பதில் ஐயம் இல்லை). சிலரைச் சிலகாலம் ஏமாற்ற முடியும்; பலரைப் பலகாலம்? அதிலும் குறிப்பாக இந்த நூற்றாண்டின் உன்னத விஞ்ஞானி என்ற பெயர் கிடைத்ததும் அவருடைய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் துருவித்துருவி ஆராயப்பட்ட நிலையில் ஐன்ஸ்டைனை ஒரு சாதாரணர் என்று யாரும் நிரூபித்ததில்லை. அவருடைய மேதமை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆசிரியரும் ஐன்ஸ்டைனின் வரலாற்றை எழுதியவருமான ஆப்ரஹாம் பயஸ் (Abraham Pais) இப்படிச் சொல்கிறார்; “அறிவியல் சான்றோர்கள் யாருக்காவது ஐன்ஸ்டைனுக்கு சார்நிலையை வடிக்கத் தேவையான அறிவுத்திறனில் சந்தேகம் இருக்கிறதா? கட்டயம் இல்லை”. ஆப்ரஹாம் பயஸ் ஒன்பது வருடங்களுக்கு ஐன்ஸ்டைனின் இயற்பியல் தத்துவங்களில் மேலதிக ஆய்வுகளைச் செய்தவர்.

மிலேவாவுடன் சேர்ந்திருந்த 1905 ஆம் ஆண்டைப் போல எப்பொழுதுமே ஐன்ஸ்டைன் சாதிக்கவில்லை என்பதை மிலேவாவுக்குச் சாதகமாகச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். சக்தியின்றி சிவம் சவமாகிவிட்டது என்று சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் ஈர்ப்பு விசையின் (Gravitational Force) பங்கை வரையறுக்காத அந்தச் சார்நிலையைக் காட்டிலும் ஈர்ப்பினால் ஒளியின் பாதை நேர்க்கோடாக இல்லாமல் வளைகிறது என்பதை வரையறுத்த பொதுமைச் சார்நிலைத் தத்துவம் (General Theory of Relativity, GTR) தொடர்ந்து ஐன்ஸ்டைனால் சாதிக்கப்பட்டது. கணித ரீதியாக இது இன்னும் சிக்கலானது. தன்னுடைய பின்னாட்களில் இயற்கையை ஒட்டுமொத்தமாகப் புரிந்துகொள்ளும் ஒரு பேரிணைப்புக் கொள்கையை (Grand Unification Theory, GUT) உருவாக்க ஐன்ஸ்டைன் முயன்றார். அதில் வெற்றி கிடைக்காமலேயே மரணத்தைத் தழுவினார். இதை ஐன்ஸ்டைனின் தோல்வியாகச் சொல்வது மடத்தனம். ஏனென்றால் அப்படியரு கொள்கை இன்னும் உருவாக்கப்படவில்லை. அதன் சாத்தியத்தை நம்பும் இந்த நூற்றாண்டின் மாபெரும் இயற்பியல் மூளைகள் ஒட்டுமொத்தமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தும் இது இன்னும் கைக்கெட்டவில்லை. எனவே, சாதாரணங்களைக் கடந்த உன்னதத்தை எட்டும் முயற்சியில்தான் அவருக்குத் தோல்வி கிடைத்திருக்கிறது. இதில் தோல்வி அவருக்கு மட்டுமல்ல, முழு மானிட குலத்துக்கும்தான். வேறு வார்த்தைகளில் சொன்னால், இன்னும் எந்த மனிதனும் ஐன்ஸ்டைனைக் கடந்துவிடவில்லை.

இறுதியாக, அப்படியன்றும் அந்தக் காலங்களில் பெண்களுக்கு அறிவியலில் இடமே கிடையாது என்பது முற்றிலும் தவறு. ஐன்ஸ்டைன் மிலேவா தம்பதிகளுக்கு முன்பே கதிர்வீச்சைக் கண்டுபிடித்து நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்ட மேரி, பியர் க்யூரி (Marie and Pierre Curie) இருந்திருக்கிறார்கள். இங்கிலாந்தின் வானவியல் ஆய்வுத் தம்பதிகள் வில்லியம், மார்கரெட் ஹக்கின்ஸ் (William and Margaret Huggins). ஏன் இவர்களுக்கு மிக அருகிலேயே பால், தத்யானா எர்ன்·பெஸ்ட்டும் (Paul and Tatyana Ehrenfest) இருந்திருக்கிறார்கள். இவர்களில் க்யூரி தம்பதியினர், எர்ன்·பெஸ்ட் தம்பதியினர் இவர்களுடன் ஐன்ஸ்டைன் தம்பதியினருக்கு நட்புகூட இருந்திருக்கிறது. அளவுகடந்த காதல் கொண்டிருந்த ஐன்ஸ்டைன் இந்த முன்மாதிரிகளையெல்லாம் மீறி முற்றாக மிலேவா-வை ஒடுக்கியிருப்பார் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை. (காதல் கசந்துபோன பின்னாட்களில் ஐன்ஸ்டைன் மிலேவாவுக்குக் கட்டுப்பாடுகள் விதித்ததும், மிலேவா ஐன்ஸ்டைனை மிரட்டி வருங்கால நோபல் பரிசுப் பணம் முழுவது தனக்கே வரவேண்டும் என்று எழுதி வாங்கிக் கொண்டதும் நடந்திருக்கிறது. ஆனால் 1905களில் ஆல்பர்ட், மிலேவா ஐன்ஸ்டைன்கள் ஆதர்ச தம்பதியினராக இருந்தது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது). காதலில் தன்னுடைய அணைத்தையும் ஆல்பர்ட்டிற்கே அர்ப்பணித்தார் மிலேவா என்று சிலர் வாதிட, அதே காதலில்தான் “நம் கண்டுபிடிப்புகள்” என்று ஐன்ஸ்டைன் எழுதிருக்கிறார் என்று ஆதரவாளர்கள் கூற இடமிருக்கிறது.

அப்படியென்றால் ஐன்ஸ்டைனின் ஆளுமையில், அவரது அறிவியல் சாதனைகளில், மிலேவாவின் பங்கென்ன?

ஐன்ஸ்டைனில் மிலேவாவின் பங்கு

படிக்கின்ற காலத்தில் இருவரும் ஒன்று சேர்ந்தே இயற்பியலைக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது ஐன்ஸ்டைனுக்கு மிகவும் தேவையாக இருந்திருக்கிறது. “நான் முதல் முறையாக ஹெல்ம்ஹோல்ட்ஸின் (Helmholtz) ஆய்வுகளைப் பற்றிப் படித்தபொழுது நீ எனக்கருகில் இல்லை என்பதை நம்பமுடியவேயில்லை” என்று மிலேவாவுக்கு எழுதியக் கடிதம் ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அளவுக்கு இருவரும் ஒன்று சேர்ந்தே படித்திருக்கிறார்கள். பின்னர் வேறு பல்கலைக்கழகம் சென்று வேலை செய்த காரணத்தால் படிப்பில் ஒருவருடம் பின்தங்கிப் போன மிலேவா, ஐன்ஸ்டைனின் பாடக் குறிப்புகளை வைத்துக் கொண்டு படித்திருக்கிறார். இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் பெரிதும் உதவியிருக்கிறார்கள்.

மிலேவா இரண்டு முறை ETH-ன் இறுதித் தேர்வில் தோற்றுப் போனார். ஏற்கனவே இவர்கள் காதலுக்கு இருவரின் பெற்றோர்களிடமிருந்து எதிர்ப்பு இருந்திருக்கிறது. இந்த நிலையில் மிலேவாவின் எதிர்காலம் முற்றிலும் ஐன்ஸ்டைனைச் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று. திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருந்த காலங்களில் இருவரும் ஒரே முறைதான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பின்னர் முதல் குழந்தை லைஸெர்ல் (Lieserl) பிறந்த பிறந்த அதே வருடம் ஐன்ஸ்டைன் சுவிஸ் காப்புரிமை அலுவலகத்தில் வேலை கிடைத்து பெர்ன் நகருக்குச் சென்றார். பெண்ணைப் பெற்றோர்களிடம் விட்டுவிட்டு மிலேவாவும் ஐன்ஸ்டைனுடன் சேர்ந்தார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு குழந்தை லைஸெர்ல்-ஐ நம்முடன் அழைத்து வரலாம் என்று ஐன்ஸ்டைன் சொல்லியிருந்தார். ஆனால், அந்தக் குழந்தை பெற்றோர்களுடன் சேர்ந்து வசித்ததே இல்லை. அது என்னவாயிற்று என்பது இன்றுவரைப் புதிராகத்தான் இருக்கிறது.

இந்தக் காலங்களில்தான் ஐன்ஸ்டைன் மிகத் தீவிரமாகத் தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்துகொண்டிருந்தார். அப்பொழுது பெரும்பாலான மாலை நேரங்களில் அவருடைய வீட்டில் தன் நண்பர்களுடன் இவற்றை விவாதிப்பது வழக்கம். மிலேவா பெரும்பாலான நேரங்களிம் மௌனமாக விவாதங்களைக் கேட்டுக் கொண்டிருப்பார், எப்பொழுதுதாவதுதான் பங்கெடுத்துக் கொள்வார். இந்த விவாதங்களில் பங்குபெற்ற ஐன்ஸ்டைனின் நண்பர் மாரிஸ் ஸொலோவைன் (Maurice Solovine) “மிலேவா புத்திசாலி, ஒதுங்கியே இருப்பார், நாங்கள் பேசுவதைக் கவனமாகக் கேட்பார் ஆனால் ஒருபொழுதும் எங்கள் உரையாடலைக் குறுக்கிட்டதில்லை” என்று சொன்னார். அதாவது, மிகச் சிக்கலான விஷயங்களைப் பேசும்பொழுது அவருக்குக் கருத்துத் தெரிவிக்க எதுவும் இருந்ததில்லை.

மிலேவாவின் பங்கைப் பற்றிய முக்கியமான கருத்து ஐன்ஸ்டைன் தம்பதியினரின் மகன் ஹான்ஸ் ஆல்பர்ட்டிடமிருந்து (Hans Albert) கிடைத்திருக்கிறது. (ஐன்ஸ்டைன்-மிலேவாவின் மூன்று குழந்தைகளில் நன்றாக வளர்ந்தவர் இவர்தான். கலிபோர்னியாவில் பல்கலைக்கழகப் பேராசிரியாராக இருந்தார். திருமணத்திற்கு முன்பிறந்த லைஸெர்ல் என்ற பெண்ணை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள், அது என்னவாயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. கடைசி மகனான எட்வார்ட் ஐன்ஸ்டைன் (Eduard Einstein) மனநோயாளியாக இருந்து இளம் வயதிலேயே இறந்துபோனார்). பெற்றோர்களுக்கிடையே இருந்த உறவுகளைப் பற்றி அதிகம் பொதுவில் பேசாத ஹான்ஸ் ஆல்பர்ட் “மிலேவா சில கணிதப் புதிர்களைத் தீர்க்க அவருக்கு உதவினார், ஆனால் யாராலும் அந்த சிருஷ்டிக்கு, அந்தத் தடையறாத எண்ண ஓட்டங்களுக்கு ஈடுகொடுக்க முடியாது. ஆய்வுக் கட்டுரைகளை எழுதியதும், மிலேவா அவற்றைத் திரும்பத் திரும்பச் சரிபார்த்து அஞ்சலில் சேர்ப்பார்”.

மிலேவாவின் பங்கிற்கு இதைவிடச் சரியான விளக்கம் இருக்கமுடியாது என்றுதான் ஐன்ஸ்டைனின் வாழ்வை ஆராய்ந்தவர்கள் சொல்லுகிறார்கள். அதாவது அற்புதமான கண்டுபிடிப்புகளை அதிவேகத்தில் நிகழ்த்திக் கொண்டிருந்தார் ஐன்ஸ்டைன். அவற்றின் இடையே வரும் சிறு கணக்குகளை மிலேவா செய்தார் (தரவுகளைச் சரிபார்த்தார் என்று வேறு பலர் சொல்லியிருக்கிறார்கள்). பொதுவில் கூட இருக்கும் ஒரு நெருங்கிய காரியதரிசியாகத்தான் மிலேவா இருந்திருக்கிறார். இந்த இடத்தில், ஹான்ஸ் ஆல்பர்ட் முழுக்கமுழுக்க ஐன்ஸ்டைனைப் பிரிந்திருந்த மிலேவாவினால் வளர்க்கப்பட்டவர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இவருடைய கருத்துக்கள் மிலேவாவின் ஒருதரப்புக் கூற்றுகளினால் பாதிக்கப்பட்டவை. இருந்தும் இவர் தன் தந்தையின் கண்டுபிடிப்புகளில் தாயருக்குப் பங்கிருக்கிறது என்று சொல்லவில்லை.

மிலேவா - எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களும்

ஆரம்ப காலங்களில் ஒரு அற்புதமான கணித, இயற்பியலாளராக உருவாகி வந்த மிலேவாவின் அறிவியல் வாழ்வு ஏன் சிதைந்து போயிற்று? ஏன் அவர் பெயர் சொல்லத்தக்க ஒரு கட்டுரையைக் கூடப் பதிப்பிக்கவில்லை? ஏன் அவரால் மேரி க்யூரியைப் போலவோ, தத்தியானா எர்ன்·பெஸ்டைப் போலவோ கணவனுடன் இணைத்துப் பேசப்படத்தக்க ஆராய்ச்சியாளராக உருவெடுக்க முடியவில்லை? இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், இவை முக்கியமானவையாகத் தோன்றுகின்றன; பியர் க்யூரியைப் போலவோ, பால் எர்ன்·பெஸ்டைப் போலவோ ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தன்னுடைய மனைவியின் அறிவியல் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. மிலேவாவை ஒட்டுமொத்தமாக ஒடுக்கினார் என்று சொல்வதைவிட அதைப் பற்றி அலட்சியப்படுத்தினார் (அந்த நாளின் சராசரி கணவர்களைப்போல) என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று வரலாற்றாளர்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலபேர் அடிப்படையிலேயே மிலேவா சாதிக்கக் கூடிய பெரிய மேதையல்ல என்று சொல்கிறார்கள். அடக்கமான மாணவியாகக் கற்றுக் கொள்வதற்கும், நல்ல, சுயசிந்தனையுடைய அறிவியல் சிருஷ்டிகர்த்தாவாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த வகையில் மிலேவா ஒருக்காலத்திலும் அற்புதப் படைப்பாளியாக இருந்ததில்லை என்று சொல்கிறார்கள். படிக்கும் நாட்களிலோ, திருமணத்திற்கு முன்போ, மணவாழ்க்கை கசந்துபோன பின்போ மிலேவா அறிவியலில் எதையுமே குறிப்பிட்டுச் சொல்லும்படியாக சாதித்ததில்லை என்பதை இவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அந்தக் காலங்களில் பொதுவில் உயர்கல்வி கற்கும் பெண்களுக்கு இருந்த தடைகளினால் சோம்பிப் போனார் என்பதும் உண்மையாக இருக்கலாம். எல்லாவற்றையும் மீறி முன்னுக்குவர அவரால் முடியவில்லை. அவருக்கு அறிவியல் திறமையிருந்த அளவிற்ற்குத் தன்னம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம்.

மிலேவாவின் தன்னம்பிக்கையின்மை, தடைகள் எல்லாமே சுற்றிச் சுற்றி அவர் கணவனான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தோள்களிலேயே சுமையாக விழுகின்றன. சராசரிக்கும் மீறி தன்னுடைய மனைவியின் வெற்றிகளைப்பற்றி கவலைப்படாதவராக ஐன்ஸ்டைன் இருந்திருக்கிறார். அவருடன் கூடச் சேர்ந்து வேலைசெய்த பலரும் இப்படிச் சொல்கிறார்கள்; “ஐன்ஸ்டைன் உரத்துச் சிந்திக்கக் கூடியவர். அவருடைய எண்ணங்களை வாய்விட்டுப் பிறரிடம் சொல்வது அவர் வழக்கம். இதில் கேட்பவர் பங்கு மிகவும் முக்கியமில்லை”. இந்த அடிப்படைக் குணத்திற்குத்தான் படிக்கின்ற காலங்களில் தன்னுடன் படித்த ஒரே பெண்ணான மிலேவாவின் துணை அவருக்குத் தேவையாக இருந்திருக்கிறது. அதற்கப்பால் அவருக்குத் தோன்றிய காதல் உணர்வுகளெல்லாம் விரைவில் நீர்த்துப்போய்விட்டன.

இது இன்னொரு பெண்ணின் சோகக் கதையாக இருக்கலாம். தால்ஸ்தாய் அன்னா கரேனினாவில் “எல்லா சந்தோஷமான குடும்பங்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றன, ஆனால் சோகக்குடும்பங்கள் ஒவ்வொன்றும் தனியானவை” என்று எழுதியிருக்கிறார். அந்த வகையில் இதையெல்லாம் “ஏன் இப்படி?” என்று கேள்விகேட்பது இயலாத காரியம்.

ஐன்ஸ்டைனின் வாழ்வில் மிலேவாவின் பங்கு இப்படித்தான் இருந்திருக்கிறது. மிகச் சராசரியான அந்த நாளின் கணவனாக ஐன்ஸ்டைன் நடந்துகொண்டிருக்கிறார். ஒருபுறம் துறவியாகவும் புனிதராகவும் சித்தரிக்கப்பட்டு அவருக்குக் கோபுரங்கள் கட்டப்படுகின்றன. மறுபுறம், டி ஐன்ஸ்டைன் மனைவியின் கருத்துக்களைத் திருடிவிட்டார், வேறு நண்பரின் கருத்தை அபகரித்தார் என்று சொல்வதெல்லாம் அபத்தமாகத்தான்படுகிறது. பணம் கொட்டும்வரை இந்த மரம் உலுக்கப்பட்டுக்கொண்டிருக்கும். அற்புதமான அறிவியலாளரான ஐன்ஸ்டன் சராசரி மனிதர்களின் பலவீனங்களுக்கு அற்பாற்பட்டவராக வாழவில்லை.


தகவல் ஆதாரங்கள்

  1. Albert Einstein and Mileva Maric: A Colloboration that Failed to Develop, John Stachel, in Einstein from ‘B’ to ‘Z’, Einstein Studies Vol. 9, Birkhauser, New York.
  2. Einstein’s Wife, A documentary film, produced by Paul Humfress and David Davis, for Public Broadcasting Service (PBS). Available as DVD through http://www.pbs.org
  3. In Albert’s Shadow: The Life and Letters of Mileva Maric, Einstein’s First Wife, Milan Popovic, The Johns Hopkins University Press; 1st edition (September 29, 2003)
  4. The private lives of Albert Einstein, Roger Highfiled and Paul Carter, Faber and Faber, London.
  5. Subtle is the Lord…the Science and Life of Albert Einstein, Abraham Pais, Oxford University Press, Oxford.
  6. A. Einstein - Images and Impact, The Center for History of Physics, American Institute of Physics, http://www.aip.org/history/einstein/
  7. ஐன்ஸ்டைனின் அற்புத ஆண்டான 1905ன் நூற்றாண்டாக, 2005ஆம் ஆண்டு உலக அளவில் இயற்பியல் ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. தமிழில் இது குறித்த விபரங்கள், தகவல்கள், சுவையான கட்டுரைகளை இயற்பியல்::2005 (http://iyarpiyal.org) தளத்தில் காணலாம். (தற்பொழுது இந்தத் தளம் செயலில் இல்லை)

மேலதிகத் தகவல்கள்

(நான் இந்தக் கட்டுரையை எழுதிய பின்னர் வெளியான கட்டுரைகளும் புத்தகங்களும்)

  1. Einstein’s Wife: The Real Story of Mileva Einstein-Marić Allen Esterson & David C. Cassidy, with Ruth Lewin Sime MIT Press (2019)
  2. The debated legacy of Einstein’s first wife, Ann Finkbeiner, Nature 567, 28-29 (2019), doi: https://doi.org/10.1038/d41586-019-00741-6
  3. Getting to know Mileva Marić, Alberto A. Martínez, Physics Today 72, 7, 53 (2019); https://doi.org/10.1063/PT.3.4251
  4. Science Secrets, The Truth about Darwin’s Finches, Einstein’s Wife, and Other Myths, Alberto A. Martinez, University of Pittsburgh Press, Year: 2011

– முதல் பதிப்பு: 07 பெப்ருவரி 2005

Image: Einstein couple in Prague, 1912, Copyright: ETH-Bibliothek Zürich, Bildarchiv / Fotograf: Langhans, Jan F. / Portr_03106 / Public Domain Mark, DOI Link: http://doi.org/10.3932/ethz-a-000045751