அணு ஆற்றலின் அன்னை - லீஸ மெய்ட்னர்

Lise Meitner
படம் 1 அணுக்கரு இயற்பியலாளர் லீஸ மெய்ட்னர் (1878-1968)

அது 1945-ஆம் ஆண்டு. இரண்டாம் உலகப்போர் என்ற பேரவலம் முடிவுக்கு வந்து சில மாதங்களே ஆகியிருந்தன. நவம்பர் குளிரில் ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ஒரு விஞ்ஞானிகள் குழு கூடியிருந்தது. மிகச் சில அறிஞர்களையே கொண்டிருந்த அந்தக் குழு, அதற்கு முந்தைய ஆண்டு போரினால் தடைபட்டிருந்த வேதியியல் நொபெல் பரிசுக்குத் தகுதியானவர்களைக் குறித்து விவாதித்தது. அவர்களுக்கு நீண்ட நேரம் தேவைப்படவில்லை. ஜெர்மனியின் ஆட்டோ ஹான் விருதுக்கு முழுதும் தகுதியானவர் என்ற முடிவுக்கு வந்தனர். அணுக்கருப்பிளவை முதலில் செய்து காட்டியவர் ஹான். அணுவில் பொதிந்து கிடக்கும் அளப்பரிய ஆற்றலை உலகுக்குத் தெரியவைத்தவர். அந்த ஆற்றலில் இன்னொரு முகம் உலகம் அதுவரை சந்தித்திராத பேரவலமான அணுகுண்டு. அது ஹிரோஷிமாவிலும் நகசாகியிலும் நூறாயிரம் மனிதர்களை அழித்தது. அதன் அதிர்வுகள் ஓய்ந்திருக்காத அந்த நாட்களில் ஆட்டோ ஹானின் சோதனையின் முக்கியத்துவம் சற்றே அறிவியல் ஆர்வம் இருந்தவர்களுக்குக்கூடத் தெரிந்திருந்தது.

அந்தப் பேரறிஞர்கள் குழு ஹானுடன் இணைந்து நொபெல் பரிசைப் பெறவேண்டிய இன்னொரு அறிவியலாளரை முற்றிலும் தவறவிட்டது – லீஸ மெய்ட்னர். நொபல் குழு ஏன் பரிசு கொடுக்கிறோம் என்று விரிவாக அறிக்கைகளில் விளக்குவார்கள். ஆனால் ஏன் ஒருவருக்குப் பரிசு கொடுக்கவில்லை என்பது பற்றிய விவாதங்களில் தலைப்படுவதில்லை. பின்னாட்களில் பலரும் அவர்கள் மெய்ட்னரை அங்கீகரிக்கத் தவறியதைக் குறித்து ஆராய்ந்திருக்கிறார்கள். அதற்கு ஐந்து காரணங்கள் இருந்திருக்கலாம் என்பது ஊகம்.

  • வேதியியல் பரிசுக்குழுவில் இருந்தர்களுக்குப் போதுமான கோட்பாட்டு இயற்பியல் (theoretical physics) பின்புல அறிதல்கள் இல்லை. எனவே துறையிடை (interdisciplinary) ஆய்வை அவர்களால் சரியாக அளந்தறிய முடியவில்லை.
  • அந்தக் காலங்களில் ஸ்வீடன் அறிவியல், அரசியல் ரீதியாக பிற ஐரோப்பிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்பில் இல்லை. எனவே அவர்களுக்கு அணுப்பிளவு கண்டுபிடிப்பு எப்படி நடந்தது என்று முழுதுமாகத் தெரிந்திருக்காது.
  • பொதுவில் ஸ்வீடிஷ் விஞ்ஞானிகளுக்கு ஜெர்மன் அறிவியல் மீது பெரும் மதிப்பு இருந்தது. அவர்கள் சொல்வதெல்லாம் சரியாக, முறையாக இருக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை.
  • ஹிட்லரின் ஆதிக்கத்தில் ஜெர்மனியில் யூத அறிவியலாளர்களின் பங்கு எப்படிக் குறைத்துச் சொல்லப்பட்டது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எல்லாவற்றையும் விட, ஐந்தாவதாக லீஸ மெய்ட்னர் ஒரு பெண் விஞ்ஞானி என்பதுதான் ஆகப் பெரிய காரணமாக இருந்திருக்கக்கூடும். அதுவரை மூன்று முறைதான் பெண்கள் அறிவியலில் நொபெல் பரிசு பெற்றிருந்தார்கள்; மறி க்யூரி (Marie Curie) – 1903- இயற்பியல், 1911- வேதியியல்), இரின் ஜோலியோ-க்யூரி (Irène Joliot-Curie) – 1935-வேதியியல்). எனவே ஒரு பெண்ணுக்கும் நொபெல் பரிசு கொடுக்கலாம் என்ற சிந்தனை அவர்களுக்கு இயல்பாக இருந்திருக்க வாய்ப்பில்லை.

லீஸ மெய்ட்னர் (Lise Meitner) மெய்ட்னர் 1878-ஆம் ஆண்டு வியென்னா நகரில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர் அவருக்கு அளித்த முதற்பெயர் எலிஸ் (Elise), ஆனால் விருப்பப் பெயரான லீஸ என்பதே நிலைத்தது. அவருடைய தந்தை ஆஸ்திரியாவில் வழக்கறிஞாராகப் பணியாற்ற அனுமதிக்கப்பட்ட முதல் யூதர். அவர் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்டிருந்தார், தன் பெண்களைப் படிக்க ஊக்குவித்தார். லீஸவின் குடும்பத்தில் எட்டு குழந்தைகள். அதில் ஐந்து பெண்களில் நால்வர் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டம் பெற்றனர். இதிலிருந்து லீஸவின் பெற்றோர் அன்றைய வழக்கங்களுக்கு மாறாகக் கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தை அறியலாம். அந்தக் கால ஆஸ்திரியாவில் அறிவு சார்ந்த துறைகளில் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட ஒரே வேலை பள்ளிக்கூட ஆசிரியைதான். எனவே அவர் பிரெஞ்சு ஆசிரியையாக ஆவதற்கான பயிற்சிகளைப் பெறத் தொடங்கினார். ஆனால் அவருடைய மனம் அறிவியலிலேயே சென்றது. பதினான்காம் வயதில் பள்ளித் தேர்ச்சி பெற்றார். மேல் வகுப்புகளில் அப்பொழுது பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. 1897-ல் ஆஸ்திரியாவில் பெண்கள் உயர்கல்வி கற்கலாம் என்று விதிகள் தளர்த்தப்பட்டன. பல்கலைக்கழகத்துக்குத் தயார் செய்யும் உயர் வகுப்பில் லீஸ உடனேயே சேர்ந்தார். இடைப்பட்ட நாட்களில் சுய முயற்சியால் வீட்டிலேயே தொடர்ந்து கணிதமும் அறிவியலும் கற்றுக் கொண்டிருந்ததால் அவரால் எளிதில் தேர்ச்சி பெற முடிந்தது.

Otto Hahn
வேதியியலாளர் ஆட்டோ ஹான் (1879-1968)

1901-ஆம் ஆண்டு லீஸ வியென்னா பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கே இயற்பியல் மேதை லுட்விக் போல்ட்ஸ்மானின் (Ludwig Boltzmann) கற்பித்தலால் அவருக்கு இன்னும் ஆர்வம் அதிகமானது. 1906-ஆம் ஆண்டு ‘சீரற்ற பொருள்களில் வெப்பக் கடத்தல்’ (Wärmeleitung im inhomogenen Körper) என்ற தலைப்பிலான ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்ற இரண்டாவது ஆஸ்திரியப் பெண் லீஸ (1903-ஆம் ஆண்டு ஓல்கா ஸ்டெய்ன்ட்லர் (Olga Steindler) முனைவர் பட்டம் பெற்றிருந்தார்). அப்பொழுது பிரபலமாகிக் கொண்டிருந்த கதிரியக்கம் குறித்த ஆய்வுகளைத் தொடங்கினார். ஆல்ஃபா கதிர்கள் உலோகங்களில் சிதறல் குறிந்த அவருடைய கண்டுபிடிப்புகள் பின்னாட்களில் எர்னஸ்ட் ரதர்போர்ட் (Ernest Rutherford) அணுக்கரு அமைப்பு குறித்த அனுமானங்களை உருவாக்க உதவியது.

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஜெர்மனியில்தான் மாபெரும் இயற்பியல் கண்டுபிடிப்புகள் உருவாகிவந்தன. எனவே, லீஸ சமகால இயற்பியலைச் சரியாகக் கற்க வேண்டுமென்றால் பெர்லின் நகருக்குச் செல்லவேண்டும் என்ற முடிவை எடுத்தார். அப்பொழுது ஜெர்மனியில் பெண்களுக்கு ஆராய்ச்சி மானியமோ, ஊதியமோ அளிப்பது வழக்கமில்லை. லீஸவின் தந்தை செலவுக்குப் பணம் கொடுக்க, லீஸ பெர்லின் ஃப்ரெய்ட்ரிக் வில்ஹெல்ம் பல்கலைக்கழகத்தில் (Friedrich-Wilhelms-Universität zu Berlin) சேர்ந்தார். அங்கே மாமேதை மாக்ஸ் ப்ளாங்கின் (Max Planck) வகுப்பில் அமர்ந்து கற்கத் தொடங்கினார். விரைவிலேயே ப்ளாங் நண்பரானார். மாக்ஸ் ப்ளாங் பொதுவில் பெண்கள் பல்கலைக்கழகத்தில் சேருவதை எதிர்த்தவர். ஆனால் அவரால் லீஸவின் நுண்ணறிவை மெச்ச முடிந்தது, அவரை விட்டுக்கு வரவேற்று அவருடன் இயற்பியல் விவாதித்தார், தன் மகள்களுடன் நட்பைப் பேணிக்கொள்ள இடமளித்தார். வகுப்பு நேரம் போக நேரடி ஆய்வில் ஈடுபட தனக்கிருக்கும் ஆர்வத்தை, குறிப்பாகக் கதிரியக்க ஆய்வு குறித்த ஆர்வத்தைப் பிற பேராசிரியர்களிடமும் லீஸ சொன்னார். அதன் வழியே வேதியியல் துறையின் ஆட்டோ ஹான் (Otto Hahn) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. ஹான் பிற ஆண்களைப் போல இல்லாது லீஸவை சமமாக மதித்ததால் அவருடன் இணைந்து பணியாற்றுவது எளிதாக இருந்தது. விரைவில் ஹானுக்கும் லீஸவுக்கும் நட்பு உருவானது. அவர்கள் கூட்டாகச் சோதனைகளில் ஈடுபடத் துறைத்தலைவர் எமில் பிஷரிடம் (Emil Fischer) ஆய்வகத்திற்கான இடம் கேட்டார்கள். பிஷர் அறைகளச் சுத்தம் செய்வதைத் தவிர பிற காரியங்களுக்கு பெண்களை அனுமதிக்காதவர். “அவள் அடித்தளத்திலேயே இருப்பாள், ஆய்வு நிறுவனத்தின் பிற பகுதிகளில் நுழைய மாட்டாள் என்றால் எனக்கு அது பரவாயில்லை” என்று ‘பெரிய மனதுடன்’ அனுமதியளித்தார். லீஸ அடித்தளத்தில் புழக்கத்தில் இல்லாதிருந்த தச்சுப் பட்டறையைச் சுத்தம் செய்து தனக்கான ஆய்வகத்தை வடிவமைத்துக் கொண்டார். வருவாய் இல்லாமல் இருந்ததால், முதல் சில வருடங்களுக்கு பெர்லின் நகரில் ஒரு மிகச் சிறிய தங்குமிடத்தில்தான் வசித்தார். வெறும் ரொட்டித் துண்டுகளும் காப்பியுமே அவருக்கான உணவுகளாகின. புகைப் பழக்கம் அவருடைய பசியைப் போக்கிக் கொள்ள உதவியது.

லீஸவைப்போல் ஆட்டோ ஹானும் சம்பளம் இல்லாமல் அவருடைய தந்தை அளித்த பண உதவியிலேயே வாழ்ந்து வந்தார். லீஸவின் தந்தை வியென்னாவிலிருந்து அனுப்பவதைவிட ஹான் தன் தந்தையிடம் பெற்ற உதவி சற்று அதிகம், எனவே அவரால் அதிகம் பிரச்சனைகள் இல்லாமல் வாழ முடிந்தது. இருவரும் முழுமையாக அறிவியல் சோதனைகளில் இணைந்து செயல்பட்டார்கள். இருவரும் மிகப் பொருத்தமான சக-ஆய்வாளர்களாக இருந்தார்கள்; ஹான் உள்ளுணர்வின் அடைப்படையில் சளைக்காமல் தொடர்ச்சியாகச் சோதனைகள் செய்யக்கூடியவர், மறுபுறம் லீஸ தர்க்கபூர்வமாக சிந்தித்து எல்லாவற்றையும் புரிந்துகொள்ளக் கூடியவர். இவர்களின் நட்பும் பரஸ்பர மரியாதையும் 30 வருடங்களுக்கு மேலாக நீடித்தது. ஆண் என்பதால் ஹானுக்கான அங்கீகாரம் விரைவிலேயே கிடைத்தது. ஹான் 1907-ஆம் ஆண்டு இணைப்பேராசிரியரானார், ஊதியம் பெறத் தொடங்கினார். மறுபுறம் லீஸவின் நிலையில் பெரிய மாற்றமில்லை, அதே வறுமைதான். தச்சுப் பட்டறை அவர்களுடைய கதிரியக்க ஆய்வுகளால் மாசடைந்தது. இருவரும் கதிரியகத்தால் அடிக்கடி தலைவலி, தலைசுற்றல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளானார்கள். 1910-ஆம் ஆண்டு மாக்ஸ் ப்ளாங் லீஸவை தன் உதவியாளராகச் சேர்த்துக் கொண்டு அவருக்கு ஒரு சிறிய பண உதவியைத் தரத் தொடங்கினார். அடுத்த வருடம் ப்ராஹ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியை வேலைக்கு அழைப்பு கிடைத்தது. ஆனால் பணம் முக்கியம் இல்லை, முதல்தர ஆய்வைத் தொடர பெர்லினில் இருப்பதே சரியானது என்று அந்த வேலையை அவர் மறுத்துவிட்டார்.

Lise Meitner
லீஸ மெய்ட்னரும் ஆட்டோ ஹானும் (1912)

1908-09-ஆம் ஆண்டுகளில் ஹான்-லீஸ இணைந்து தொடர்ச்சியாக ஒன்பது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார்கள். இவற்றில் அதி-ஆற்றல் அடிப்படைத் துகள்கள் (எலெக்ட்ரான், புரோட்டான்) அணுக்களுடன் மோதும்பொழுது ஏற்படும் ஆற்றல் மாற்றத்தையும், அதேபோலத் தன்னிச்சையான கதிரியக்கத்தின் பொழுது அணுக்களில் ஏற்படும் ஆற்றல் மாற்றங்களையும் விளக்கினார்கள். இதனடிப்படையில் ‘கதிரியக்கப் பின்நகர்வு’ (radioacitve recoil) என்ற கருத்துருவாக்கத்தையும் முதன்முறையாக விளக்கினார்கள். இவற்றுக்கான சோதனைகளை இருவருமாக இணைந்து நடத்தியிருந்தாலும், அவற்றின் அடிப்படை இயற்பியல் கணக்கீடுகளையும் விளக்கங்களையும் லீஸ மெய்ட்னரே அளித்தார்.

1918-ல் ஹான்-மெய்ட்னர் இரட்டையர் கடுமையான உழைப்பின் வெற்றியாக அணுவெண் 91 கொண்ட ப்ரோட்டாக்டீனியம் (protactinium) என்ற தனிமத்தின் நிலையான ஐஸோடோப்பைக் கண்டுபிடித்தார்கள். இந்தத் தனிமம் ஏற்கனவே அறிந்திருக்கப்பட்டாலும், ஹான்–மெய்ட்னர் தான் அதன் நிலையான ஐஸோடோப்பைப் பிரித்தெடுத்ததுடன் அதன் பண்புகளையும் முழுமையாக அளவிட்டார்கள். இந்த மிக முக்கியமான கண்டுபிடிப்பு ஆய்வுலகில் நிரந்தர மதிப்பையும், கெய்ஸர் வில்ஹெல்ம் ஆய்வுக்கழகத்தில், ‘கதிரியக்க இயற்பியல் ஆய்வகம்’ என்று அவருக்கான ஆய்வுக்கூடத்தையும் லீஸவுக்குப் பெற்றுத் தந்தது. கொல்லை வாசல் வழியாக மாத்திரமே அல்லாது கட்டத்தின் முகப்பு வாசல் வழியாக லீஸ வேலைக்கு வர முடிந்தது. “இந்த வேலை வீட்டுச் சன்னல்களுக்குத் திரைச்சீலை போன்ற வசதிகளை வாங்கப் போதுமான பணத்தைத் தரும்” என்று லீஸ நிம்மதி அடைந்தார். ஒரு வழியாக 1922-ல் பெர்லின் பல்கலைக்கழகம் அதன் அரங்குகளில் பேருரைகளை ஆற்றும் கௌரவத்தைத் தந்தது. ஆனால் அப்போதும் அவருக்கு நேரடியாக பேராசிரியர் பட்டத்தைத் தர ஆண்கள் மட்டுமே நிறைந்த பல்கலைக்கழகம் தயாராக இல்லை. எனவே பணி-நிரந்தரமற்ற இணைப்பேராசிரியர் (Nicht-beamteter Außerordentlicher Professor) என்றே நியமித்தார்கள். அதாவது எப்பொழுது வேண்டுமானாலும் அவரை உடனடி வேலை நீக்கம் செய்ய முடியும். பேராசிரியர் என்ற பதவியைப் பெற மெய்ட்னர் இன்னும் நான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்பொழுது அவருக்கு வயது நாற்பத்தெட்டு; சராசரி ஆண் 28-32 வயதில் பெறும் மதிப்பை உலகத்தர ஆய்வாளர் லீஸ மெய்ட்னருக்குத் தர இருபதைந்து வருடங்கள் கூடுதலாகத் தேவைப்பட்டிருக்கிறது.

Meitner-Auger Effect
4 மெய்ட்னர் – ஓஜே விளைவு: (அ) உள்சுற்று எலெக்ட்ரானின் மீது புறஊதா அல்லது எலெக்ட்ரான் கதிர்களின் மோதல். அதில் உள்சுற்று எலெக்ட்ரான் பெயர்ந்து வெளியேறும். (ஆ) உள்சுற்றில் உண்டாகும் வெற்றிடத்தை நிரப்ப வெளிச்சுற்று எலெக்ட்ரான்களில் ஒன்று உள்சுற்றுக்கு இடம் பெயரும். அப்பொழுது இரண்டு வட்டப்பாதைகளுக்கும் இடையேயான ஆற்றல் வித்தியாசம் மற்றொரு வெளிச்சுற்று எலக்ட்ரானைத் தாக்க அது ஓஜே எலெக்ட்ரானாக உமிழப்படும்.

அணுக்களின் மீது எலெக்ட்ரான்களின் மோதல் குறித்த ஆய்வுகளை மெய்ட்னர் தொடர்ந்து நடத்திக் கொண்டிருந்தார். பிரித்தானிய இயற்பியலாளர் சார்ல்ஸ் ட்ரம்மான் எல்லிஸ் (Charles Drummond Ellis) லீஸ இருவரும் இணைந்து பல சோதனைகளைச் செய்தார்கள். 1922-ஆம் ஆண்டு இவற்றின் அடிப்படையில் லீஸ ஒரு புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். அப்பொழுது அதற்குப் பெயரிடப்பட்டிருக்கவில்லை. அடுத்த ஆண்டு பியர் விக்டர் ஓஜே (Pierre Victor Auger) என்ற பிரெஞ்சு ஆய்வாளரும் இதே விளைவை தன்னிச்சையாக ஆராய்ந்து வெளியிட்டார். அணுக்களை ஆற்றல் வாய்ந்த எலெக்ட்ரான் அல்லது புறஊதாக் கதிர்கள் கொண்டு தாக்கும்பொழுது பொதுவில் எக்ஸ்-கதிர்கள் வெளிவரும். மாறாக அணுக்களின் உள்சுற்று எலெக்ட்ரான்களை நேரடியாகத் தாக்கும்பொழுது அங்கிருக்கும் எலெக்ட்ரான் இடம்பெயரத் துளை உருவாகும், அந்தத் துளையை வெளிச்சுற்று எலெக்ட்ரான்களில் ஒன்று நிரப்பும். அதன் ஆற்றல் வித்தியாசம் மற்றொரு வெளிச்சுற்று எலெக்ட்ரானை உமிழச் செய்யும். . இது ஓஜே விளைவு (Auger effect) என்று அழைக்கப்பட்டது. ஓஜே எலக்ட்ரான்களை அளப்பதன் மூலம் பொருட்பண்புகளைத் துல்லியமாக அறியமுடியும். கிட்டத்தட்ட தொன்னூறு வருடங்கள் கழித்து, 2009 ஆண்டு இந்த விளைவைக் கண்டுபிடித்ததில் மெய்ட்னர், ஓஜே இருவரின் பங்குகள் குறித்த கட்டுரை வெளியானது. அதில் ஒஜேயின்ன் கண்டுபிடிப்புக்கு ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே மெய்ட்னர் அதைக் கண்டுபிடித்திருந்ததைத் தெளிவாக விளக்கியிருந்தார்கள். அதைத் தொடர்ந்து மெய்ட்னரின் பெயர் மறக்கப்பட்டது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தன. இருவருமே இந்த விளைவைத் தனித்தனியாகக் கண்டுபிடித்ததால், இது மெய்ட்னர்-ஓஜே விளைவு (Meitner-Auger effect) என்று அழைக்கப்பட வேண்டும் என்ற கருத்து 2019-ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் இன்றளவும் ஆய்வுக் கட்டுரைகளிலும் பாடப்புத்தகங்களிலும் இது ஓஜே விளைவு என்றே குறிப்பிடப்படுகிறது.

லீஸவுக்கும் ஹானுக்கும் இப்பொழுது தனித்தனி ஆய்வகங்கள் இருந்தாலும் இருவரும் தினசரி தவறாது சந்தித்துத் தங்கள் ஆய்வுகளைப் பற்றியும் உலகெங்கும் வெளியாகும் கதிரியக்கம், அணுக்கரு இயற்பியல் குறித்த கண்டுபிடிப்புகளைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். 1934-ல் என்றிக்கோ ஃபெர்மியின் (Enrico Fermi) ஆய்வுக்குழுவினர் அப்பொழுது தெரிந்திருந்தவற்றிலேயே கனமான அணுவான யுரேனியத்தை நியூட்ரான் கதிர்கள் கொண்டு தாக்குவதன் மூலம் இன்னும் அதிக அணு எடையுள்ள புதியத் தனிமங்களை உருவாக்க முடியும் என்று நிரூபித்தார்கள். தனிமங்கள் வேதியியலாளர்களுக்குச் செங்கற்களைப் போன்றவை, புதிய வகை கல் கிடைத்தால் இன்னும் பல அற்புதமான கட்டடங்களைக் கட்டலாம்தானே! வேதியியலாளர்கள் ஆட்டோ ஹான், ஃப்ரீட்ஸ் ஸ்ட்ராஸ்மான்(Fritz Straßmann) இணைந்து புதிய செயற்கைத் தனிமங்களை உருவாக்கும் சோதனைகளில் முனைந்தார்கள். மறுபுறத்தில் இயற்பியலாளரான லீஸ மெய்ட்னர் இந்த சோதனைகளுக்குத் தேவையான நியூட்ரான் கதிர்களின் அளவு, அதில் உள்வாங்கப்படும் ஆற்றல் போன்றவை குறித்த அடிப்படைப் புரிதல் முயற்சிகளில் ஈடுபட்டார். 1935-ஆம் ஆண்டு இந்த ஆய்வுகளில் தொகுப்பாக மெய்ட்னர் ‘அணுக்கருக்களின் அமைப்பு’ (Der Aufbau der Atomkerne) என்ற புத்தகத்தை மாக்ஸ் டெல்ப்ரூக் (Max Delbrück) என்ற சகாவுடன் இணைந்து வெளியிட்டார். அடுத்த ஆண்டு (1936) லீஸ மெய்ட்னரின் பெயர் முதல் முறையாக நொபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

இவற்றுக்கிடையே, 1933-ல் அடால்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் வேந்தரானார். நாடெங்கும் யூதர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிராக உணர்வுகள் ஹிட்லர் 1921-ஆம் ஆண்டு நாட்ஸிக் கட்சியின் தலைவரானதில் இருந்தே பெருகிவந்தன. ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடனேயே நாட்ஸிகள் யூதர்களின் மீதான நேரடித் தாக்குதல்களைத் தொடங்கினார்கள். பிறப்பால் யூதர் என்பதால் பேராசிரியரான ஏழாவது வருடத்திலேயே மெய்ட்னரிடமிருந்து அந்தப் பதவி பறிக்கப்பட்டது. 1933-க்குப் பிறகு லீஸ பொதுவிடங்களில் அவருடைய செயற்பாடுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. பதுங்கிப் பதுங்கி, புழக்கடை வழியாக மீண்டும் ஆய்வகத்துக்குள் நுழைய வேண்டியதாயிற்று. இவை ஹான்-மெய்ட்னர் ஆய்வுகளின் வேகத்தைச் சற்றும் குறைக்கவில்லை. இப்பொழுது இந்த இரட்டையரின் இலக்கு யுரேனியத்தை ஒத்த அணுக்களை அணுக்கதிர்களைக் கொண்டு தாக்கிப் புது தனிமங்களைச் சமைப்பதுதான்.

அரசியல் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருந்தது. அக்கறை கொண்ட ஹானும் பிற ஆய்வாளர்களும் லீஸவின் உயிருக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கண்டு பயப்படத் தொடங்கினார்கள். ஆனால், லீஸவின் கண்களுக்கு அவரைச் சுற்றி நெருங்கும் அபாயங்கள் குறித்து முழுமையாகத் தெரியவில்லை; அவர் ஆராய்ச்சி பற்றிய சிந்தனைகளிலேயே மூழ்கியிருந்தார். 1938-ல் ஆஸ்திரியாவை ஜெர்மனி தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதனால், லீஸ மெய்ட்னர் ஆஸ்திரியக் குடியுரிமையை இழந்தார். நீல்ஸ் போர் (Niels Bohr) அவருக்கு வேலை தருவதாகச் சொல்லி டென்மார்க்குக்கு அழைத்தார். சுவிட்ஸர்லாந்தின் பால் ஷெரர் (Paul Scherrer) என்ற இயற்பியலாளர் அவரை சுவிஸ்ல் நடக்கவிருந்த மாநாட்டுக்கு அழைத்தார், அது வழியாக லீஸ கோப்பன்ஹாகன் நகருக்குச் செல்வது எனத் திட்டம். லீஸவும் விசாவுக்கு விண்ணப்பித்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக லீஸவின் ஆஸ்திரியக் கடவுச் சீட்டு செல்லாது என டேனிஷ் தூதரகம் மறுத்துவிட்டது. லீஸவால் சுவிஸ்க்கோ, டென்மார்க்குக்கோ செல்ல முடியாது; இப்பொழுது அவர் நாடிழந்த அகதி.

அதே ஆண்டு ஜூன் மாதம் நீல்ஸ் போர் பெர்லினுக்கு வந்தார். அப்பொழுது லீஸவின் உயிருக்கான அபாயத்தைக் குறித்த தன் கவலையை நேரடியாக அவரிடம் சொன்னார். அங்கு வந்திருந்த நெதர்லாந்து குவாண்டம் இயற்பியலாளர் ஹான்ஸ் க்ரேமரிடம் (Hans Kramers) அவரை உங்கள் நாட்டுக்கு அழைத்துக்கொள்ளுங்கள் என்று பரிந்துரைத்தார். க்ரேமர் நீல்ஸ் போரின் மாணவர், அவர் உடனடியாக அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். இதில் நெதர்லாந்தின் பிற முக்கிய இயற்பியலாளர்களான அட்றியன் ஃபோக்கர் (Adriaan Fokker), பீட்டர் டிபை (Peter Debye), டிர்க் கோஸ்டர் (Dirk Coster) போன்றவர்களும் அதற்கு உதவினார்கள். நெதர்லாந்தின் க்ரோனிங்கன் பல்கலைகழகம் (Rijksuniversiteit Groningen) அவருக்கு வேலை தர முன்வந்தது. ஆனால் மீண்டும் துரதிருஷ்டம், அதற்கு வேண்டிய பணத்தைத் தரவிருந்த ராக்கஃபெல்லர் அமைப்பு அகதியான அறிவியலாளர்களுக்குப் பணவுதவி தருவதில்லை என்று மறுத்துவிட்டது. இடையே ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் புதிதாக அமையவிருக்கும் அணுக்கரு இயற்பியல் ஆராய்ச்சிக் கூடத்தில் லீஸ மெய்ட்னருக்கு வேலை கிடைத்தது. ஆனால் ஜெர்மானிய அரசாங்கம் அறிவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியே செல்ல முழுமையான தடையை விதித்தது. லீஸவுக்கு இருந்த தப்பிக்கும் வழிகள் குறைந்துகொண்டே வந்தன. லீஸ அவருடைய தந்தையால் புரோட்டஸ்டண்ட் கிறித்துவத்துக்கு இருபது வயதிலேயே மதமாற்றம் செய்யப்பட்டு ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டிருந்தார். அவரைப் பொறுத்தவரை எந்த மதத்தையும் சாராமல் அறிவொணாராகவே வாழ்ந்து வந்தார். ஆனால் ஆரிய வெறி கொண்ட நாட்ஸியினருக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. பிறப்பால் யூதரான அனைவரையுமே ஒழித்து ஜெர்மனியைத் தூய, வலிமையான ஆரிய நாடாக உருவாக்க வேண்டும் என்று அவர்கள் வெறி கொண்டிருந்தார்கள்.

எப்படியும் லீஸவை ஜெர்மனியை விட்டு வெளியே கொண்டுவரவேண்டும் என்பதில் நெதர்லாந்துக் குழு தீவிரமாக இருந்தது. அவர்கள் லீஸவுக்கு லெய்டன் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக அழைப்பைப் பெற்றார்கள், இதன் மூலம் லீஸ நெதர்லாந்து வரத் தேவையான விசாவைப் பெறமுடியும். இதற்காக அரசாங்க ரீதியான முயற்சிகளை கோஸ்டர் மேற்க்கொண்டார். அப்படி அவர் வந்தால் எல்லையில் அவரை எளிதில் அனுமதிக்க கோஸ்டர் எல்லைப் பாதுகாப்பாளர்களிடம் நேரடியாக உறுதி பெற்றார். 1938, ஜூன் 11 அன்று கோஸ்டர் பெர்லினுக்கு வந்து பீட்டர் டிபையுடன் தங்கினார். எந்த சந்தேகமும் வராமலிருக்க லீஸ வழக்கம்போல் புழக்கடை வாசல் வழியாக அதிகாலையில் ஆய்வகத்துக்குள் வந்து இரவு எட்டு மணிவரை இயல்பான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். (ஆய்வகத்துக்குள்ளே நாட்ஸிக் கட்சியின் தீவிர உறுப்பினர்கள் பலர் இருந்தார்கள்). இடையே ஹான் அவருடைய பயணப் பெட்டியைத் தயார் செய்தார். கோடைக்காலம் என்பதாலும் சந்தேகம் வராமல் இருப்பதற்காகவும், மெலிதான ஒரிரு உடுப்புகளையும், செலவுக்கு வெறும் பத்து டாய்ச் மார்க் பணத்தையுமே வைத்தார். எட்டு மணிக்கு மேல் ஹானின் வீட்டுக்குச் சென்ற லீஸ அங்கேயே இரவைக் கழித்தார். விடைபெறும் முன், ஆட்டோ ஹான் தன் தாயார் அளித்திருந்த வைர மோதிரத்தை லீஸவின் கையில் கொடுத்தார்; வழியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் இலஞ்சமாக அதைக் கொடுத்துவிட்டுத் தப்பித்துக் கொள்ளாலம் என்பது ஹானின் யோசனை. அதிகாலையில் பெர்லின் நிலையம் வந்த லீஸ, கோஸ்டரை எதேச்சையாகச் சந்திப்பதைப் போலக் காட்டிக்கொண்டு உரையாடினார். கூட்டம் அதிகம் இருக்காத ஒரு புகைவண்டியில் இருவரும் ஏறிக்கொண்டனர். அதிகக் குழப்பங்களின்றி ஜெர்மனி எல்லையைக் கடந்து நெதர்லாந்தை அடைந்தார்கள். இரயிலில் வந்த ஜெர்மானிய எல்லைப் போலிஸார் கோஸ்டரிடம் மட்டும்தான் சோதனை செய்தார்கள். பேராசிரியருடன் கூடப் போகும் பெண்ணிடம் அவர்களுக்கு என்ன இருக்கப் போகிறது? லீஸவின் கையிலிருந்த ஹானின் தாயார் திருமண மோதிரம்கூட அதற்கு உதவியிருக்கக் கூடும்.

லீஸ மெய்ட்னரை ஜெர்மனியிலிருந்து கடத்திக் கொண்டு வந்தது மாபெரும் சிக்கலான, அற்புதமான பன்னாட்டு முயற்சி. இதில் ஆட்டோ ஹான் உட்பட்ட ஜெர்மானிய சகாக்களில் தொடங்கி, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, ஸ்வீடன் எனப் பல நாட்டு முன்னணி விஞ்ஞானிகளும் ஒருங்கே ஈடுபட்டார்கள். ஹான், போர், டிபை, கோஸ்டர் – எல்லோரும் இதை பெர்லினிலிருந்தே நடத்தினார்கள். இவர்களில் யாராவது ஒருவர் மாட்டிக்கொண்டிருந்தாலும் அனைவரின் உயிருக்கும் ஆபத்து நிச்சயம். இதற்கெல்லாம் துணிந்து அவர்கள் இதில் ஈடுபட்டது லீஸ மெய்ட்னர் என்ற அற்புத அணுக்கருவியல் அறிவியலாளர் மீது அவர்கள் கொண்டிருந்த அளவுகடந்த மதிப்பால்தான் என்பது நிதர்சனம். இப்பொழுதும்கூட மெய்ட்னருக்கு வேலை கிடையாது, நெதர்லாந்தின் விருந்தாளியாகச் சில நாட்களே இருக்க முடியும். எனவே அவர் நீல்ஸ் போரின் அழைப்பில் கோப்பன்ஹாகன் சென்றார்.

Otto Frisch
இயற்பியலாளர் ஆட்டோ ராபர்ட் ஃப்ரிஷ் (1904-1979). லீஸ மெய்ட்னரின் சகோதரியின் மகன். மெய்ட்னருடன் இணைந்து அணுக்கருப் பிளவை விளக்கியவர்.

ஜூலை மாத இறுதியில் ஆஸ்திரியக் கடவுச் சீட்டின் அடிப்படையில் அவரை ஸ்வீடனுக்கு அனுமதிக்க முடிவானது. நீல்ஸ் போர் அவரை இன்னும் சில நாட்களுக்குத் தன்னுடன் இருக்க வேண்டினார். எப்படியாவது முயன்று அவருக்கு டென்மார்க்கில் ஒரு நல்ல வேலையைப் பெற்றுத் தரவேண்டும் என்பது அவருடைய விருப்பம். ஆனால், அதிக நாட்கள் அவருக்குத் தொல்லை தரக்கூடாது என விரைவில் ஸ்வீடனில் புறப்பட்டார். அப்பொழுது அவருக்கு வயது அறுபது. அந்த வயதில் ஒரு புதிய நாட்டில், புதிய சூழலில், தனிமையில், தன் வாழ்வை மீண்டும் துவங்கியாக வேண்டும். அன்றைய காலங்களில் ஸ்வீடனில் பெரிதாக அறிவியல் முன்னேற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. அருகே இருந்த டென்மார்க், நீல்ஸ் போர் என்ற மாமேதையால் குவாண்டம் இயங்கியல், அணுக்கரு இயற்பியல், அணுத்துகள் இயற்பியல் என பல துறைகளில் விவாத மையமாக இருந்தது. மாறாக அவருடைய பங்களிப்புகள் பற்றி அதிகம் புரியாததால் ஸ்வீடனில் மெய்ட்னருக்குப் பெரிய மதிப்பில்லை. மிகவும் அற்ப சம்பளமும் சிறிய ஆய்வகமுமே வழங்கப்பட்டன. ஆனால் உயிருக்கான ஆபத்து தவிர்ந்த நிலையில் லீஸ மீண்டும் தன் ஆய்வுகளைத் துவங்கினார். நீல்ஸ் போர், மெய்ட்னர் தன் குடும்பத்தினரைப் பார்க்க ஆஸ்திரியா சென்றிருக்கிறார் என்று சொன்னதைப் பெர்லினில் பலரும் நம்பினார்கள். அது கோடைக்காலம் என்பதால் விடுமுறைக்குச் சென்றிருப்பது இயல்பாக நம்பப்பட்டது. ஆகஸ்டு மாதம் மெய்ட்னர் தன் வயதைக் காரணம் காட்டி கெய்ஸர் வில்ஹெல்ம் ஆய்வுக்கழகத்திலிருந்து ஓய்வு பெற விண்ணப்பித்தார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. நவம்பர் மாதம் கோப்பன்ஹாகனில் போரின் இல்லத்தில் ஆட்டோ ஹான் மீண்டும் லீஸவைச் சந்தித்தார். அரசியல் பிரச்சனைகளைப் பின்னுக்குத் தள்ளி, அவர்கள் மூவரும் அணுக்கரு இயற்பியல் குறித்த தீவிர விவாதங்களில் மூழ்கினார்கள். அதே வருடம் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு லீஸவின் சகோதரி மகன் ஆட்டோ ராபர்ட் ஃப்ரிஷ் (Otto Robert Frisch) ஸ்வீடனுக்கு வந்தார். ஃப்ரிஷின் தாயர் பியானோ கலைஞர், தந்தை ஓவியர், எனவே அவருக்கு இரண்டு கலைகளும் இயல்பாகக் கூடிவந்தன. ஆனால் தன் சித்தி லீஸவைப் போல ஆட்டோவுக்கும் கணக்கிலும் இயற்பியலிலும்தான் அதிக ஆர்வம். ஹாம்புர்க் பல்கலைக்கழகத்தில் (Universität Hamburg) அணு இயற்பியல் ஆராய்ச்சியாளராக இருந்த அவரும் லீஸவைப் போல அகதியாக வெளியேறியிருந்தார். சித்தியுடனான அந்தச் சந்திப்பில் உலகையே மாற்றி அமைக்கக்கூடிய மாபெரும் அறிவியல் கண்டுபிடிப்பை இருவருமாகச் சேர்ந்து நிகழ்த்தப் போகிறார்கள் என்பது அவருக்குத் தெரியாது.

Nuclear Fission
யுரேனியம் 235 ஐசோட்டோப்பை நியூட்ரான் கதிர் கொண்டு தாக்க அது பேரியம், கிரிப்டான் என இரண்டு தனிமங்களாகப் பிளவுபடும். இந்த அணுப்பிளவு ஹான்-ஸ்ட்ராஸ்மான் இருவராலும் சோதனை ரீதியாக நிகழ்த்தப்பட்டது. இந்த வினையைக் கருத்தியல் அடிப்படையில் மெய்ட்னர்-ஃப்ரிஷ் விளக்கினர்.

மெய்ட்னர் பெர்லினில் இருக்கும்பொழுது ஹானுடன் துவங்கிய மாபெரும் அணுக்களை (யுரேனியம், தோரியம்) அதி ஆற்றல் கதிர்களைக் கொண்டு தாக்கிப் புது தனிமங்களைக் கண்டறியும் சோதனைகளை ஆட்டோ ஹான் தன் மாணவர் ஃப்ரீட்ஸ் ஸ்ட்ராஸ்மானுடன் தொடர்ந்தார். அந்தச் சோதனையின் முடிவில் அவர்களுக்கு பேரியம் அணுக்கள் கிடைத்தன. யுரேனியத்தின் அணுவெண் 92, பேரியத்தின் அணுவெண் 56. ஏற்கனவே ஹானும் மெய்ட்னரும் இணைந்து கண்டுபிடித்திருந்த கதிரியக்கச் சிதைவின் அடிப்படையில் இதை விளக்க முடியாது. இந்தச் சோதனையின் முடிவு தங்களுக்குப் புரியவில்லை என்று ஆட்டோ, லீஸவுக்குக் கடிதம் எழுதினார். கிறிஸ்துமஸ் விடுமுறையில் பனிச்சருக்கு விளையாட்டுக்குச் சென்ற லீஸ மெய்ட்னரும் ஆட்டோ ஃப்ரிஷ்ம் இதை விவாதித்தார்கள். இந்தச் சோதனையில் பேரியம் கிடைக்க ஒருக்காலும் சாத்தியமில்லை என ஆட்டோ ஃப்ரிஷ் வாதிட்டார். ஆனால் மெய்ட்னரோ, ஆட்டோ ஹான் ஒரு முதல்தர வேதியியலாளர், கறாரான ஆய்வாளர் எனவே அவர் சோதனைகளில் எந்தத் தவறும் இருக்காது என்று தான் முழுமையாக நம்புவதாகச் சொன்னார். விளையாட்டுக்கு இடையே சற்று உட்கார்ந்த பொழுது லீஸ்வுக்கு ஒரு எண்ணம் உதித்தது. ஏற்கனவே ஜார்ஜ் காமா (Georgiy Antonovich Gamov) என்ற சோவியத் இயற்பியலாளர் அணுக்கருவின் வடிவமைப்பு ஒரு திரவச் சொட்டைப் போன்றது என்று முன்வைத்திருந்தார். அப்படியானால், திரவத் துளியின் நடுவில் அதை நெருக்கும்பொழுது அதன் இரண்டு,முனைகளும் நீட்சியடையும் அல்லவா? அந்த நிலையில் ஒரே மின்னூட்டத்தைக் கொண்ட அணுக்கருவின் இரண்டு முனைகளும் ஒன்றைவிட்டு ஒன்றை விலக்கிச் செல்ல முயலும். அப்பொழுது அந்தத் திரவத் துளி (அணுக்கரு) இரண்டாகப் பிளக்கும். அதாவது ஒற்றை யுரேனியம் (92U), பேரியம் (56Ba) மற்றும் கிரிப்டான் (36Kr) என்ற இரண்டு தனிமங்களாகப் பிளவுபடும். பிளவுற்ற இரண்டு துண்டுகளும் மாபெரும் விலக்கத்தைப் பெறும். அந்த அதிவேக விலக்கத்தால் 200 மெகா எலெக்ட்ரான் வோல்ட் சக்தி உருவாகும். இந்த மாபெரும் சக்தி எப்படிச் சாத்தியமாகிறது? லீஸ மெய்ட்னர் துவக்கத்திலிருக்கும் யுரேனியம் அணுக்கரு மற்றும் பிளவின் விளைவான அணுக்கருக்களின் பெருமண்மைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கணக்கிட்டார். இது ஒரு புரோட்டானின் பொருண்மையில் நாலில் ஒரு பகுதி. ஐன்ஸ்டைனின் மிகப் பிரபலமான mathematical expression or equation சமன்பாட்டின் அடிப்படையில் இந்தப் பொருண்மை, 200 MeV ஆற்றலுக்குச் சமம் என்பது மிகச் சரியாகப் பொருந்துகிறது.

mathematical expression or equation

பெப்ருவரி 11, 1939-ல் லீஸ மெய்ட்னரும் ஆட்டோ ஃப்ரிஷ்ம் இந்த விளைவு குறித்த ஆய்வு விளக்கக் கட்டுரையைப் பதிப்பித்தார்கள். இடையே, ஹானும் ஸ்ட்ராஸ்மானும் அவர்கள் சோதனை முயற்சியை ஆய்வுக் கட்டுரையாக வெளியிட்டார்கள். அந்தக் கட்டுரை சோதனையில் என்ன நடந்தது என்ற தீர்க்கமான முடிவு எதையும் தெரிவிக்கவில்லை மெய்ட்னர்-ஃப்ரீஷ் கட்டுரையில் விளைவை ‘வெடிப்பு’ (Zerplatzen) என்று குறிப்பிடாமல் அந்த நாட்களில் உயிரியலில் பிரபலமாக இருந்த ‘பிளவு’ (fission) என்ற சொல்லைப் பயன்படுத்தி இதற்கு அணுக்கருப் பிளவு (Kernspaltung) என்று பெயரிட்டார்கள். “இவ்விளைவில் உருவாகும் மாபெரும் ஆற்றலால் பிளவுபடும் இரண்டு பாகங்களும் அதிவேகத்துடன் ஒன்றைவிட்டு ஒன்று விலகிப் பறக்கும்” என்று விளக்கினார்கள். அடுத்த பல நூறு ஆண்டுகளுக்கு உலகையே மாற்றியமைக்கப் போகும் அணுக்கருப் பிளவு மனித குலத்துக்குப் புலப்பட்டது. கட்டுரை வெளியாவதற்கு முன் லீஸ ஹானுக்கு அணுக்கருப் பிளவையும் அதன் ஆற்றல் கணக்கீடுகளையும் எழுதியிருந்தார். ஹான் – ஸ்ட்ராஸ்மான் இரண்டாவது கட்டுரையில் தங்கள் சோதனையின் அடிப்படையில் அணுக்கரு பிளவை விளக்கினார்கள், ஆனால் மெய்ட்னரின் பெயரைக்கூடக் குறிப்பிடவில்லை.

இரண்டாம் உலகப்போர் தீவிரமடைந்தது. அந்த நாட்களில் ஸ்வீடன் என்ற அறிவியல் பாலைவனத்தில் லீஸ தனியளாய் நின்றார். “…எனினும் நான் பாலைவனத்தில் வாழ்வதைப் போலப் பெருந்தனிமையை உணர்கிறேன் (… doch fühle ich mich meistens so einsam, als ob ich in der Wüste lebte)” என்று சொன்னார். 1944-ல் ஆட்டோ ஹானுக்கு இயற்பியல் நொபெல் பரிசு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டு அவர் அந்தப் பரிசைப் பெற்றார். இணைந்து ஆய்வைத் துவக்கிய மெய்ட்னரின் பெயர் இல்லை, மெய்ட்னர் இல்லாத பொழுது தொடர்ந்து ஆய்வை நடத்திய ஸ்ட்ராஸ்மான் பெயர் இல்லை, மெய்ட்னருடன் இணைந்து அணுக்கருப் பிளவு என்ற கருத்துவாக்கத்தையும் துல்லிய கணக்கீடுகளையும் உருவாக்கிய ஆட்டோ ஃப்ரிஷ்க்கும் நொபெல் பரிசில் இடம் இல்லை.

Chain Reaction
யுரேனியத்தில் கருப்பிளவு நடக்கும்பொழுது பேரியம், க்ரிப்டானாகப் பிளவுபடும். கூடவே வெளியாகும் மூன்று நியூட்ரானகள் மற்றொரு யுரேனியத்தைத் தாக்க, அதுவும் பிளவுபட்டு மேலும் மூன்று நியூட்ரானகள் வெளிப்படும். கனிசமான அளவுக்குத் தூய யுரேனியம் 236 ஐசோடோப்பு இருக்கையில் இது தொடர்வினையாக நிகழும் அப்பொழுது அளப்பரிய ஆற்றல் வெளிப்படும். இது கட்டுக்கடங்காமல் நடக்கும்பொழுது அணுகுண்டாக, பேரழிவுக் கருவியாக மாறுகிறது. மாறாக, இந்தத் தொடர்வினையைக் கட்டுக்குள் அடக்கி நிகழ்த்தினால் தொடர்ச்சியான ஆற்றல் சாத்தியமாகும். அணு மின் உலைகள் இப்படிக் கட்டுப்படுத்தப்பட்ட தொடர்வினைகளுக்காக வடிவமைக்கப்படுகின்றன.

அணுக்கருப் பிளவையும் அதனால் சாத்தியமாகும் அபரிமித ஆற்றலையும் பற்றித் தெரிந்தவுடனேயே நாடுகள் அதை வெடிகுண்டுக்குப் பயன்படுத்த முடியுமா என்று சிந்திக்கத் தொடங்கிவிட்டன. தனித்த யுரேனியக் கருப்பிளவினால் இது சாத்தியமில்லை. மாறாகக் கனிசமான அளவு தூய யுரேனியத்தைத் திரட்டி அதை நியுட்ரான் கதிர் கொண்டு தாக்கினால் சாத்தியமாகும். முதல் பிளவிலிருந்து இன்னும் மூன்று நியூட்ரான்கள் கிடைக்கும், இவை எஞ்சியிருக்கும் யுரேனியத்தைத் தாக்க, அவை பிளக்க, என இது தொடர்வினையாக (Chain reaction) மாறும் என ஹங்கேரிய அறிவியலாளர் லியோ ஸிலார்ட் (Szilárd Leó.) உணர்த்தினார். அந்த நிலையில் கட்டுக்கடங்காத பேராற்றல் (அல்லது பேரழிவு) சாத்தியம். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் ஜெர்மனி தொடர்ந்து வலுப்பெற்று வந்தது. எந்த வகையிலாவது இதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று நேச நாடுகள் முயன்றன. அமெரிக்க அரசு மன்ஹாட்டன் திட்டம் (Manhattan Project) என்ற பெயரில் இரகசியமாக உலகின் முன்னணி அறிவியலாளர்களை ஒன்று திரட்டியது (அப்பொழுது ஐரோப்பாவிலிருந்து பல முதல்தர விஞ்ஞானிகள் நாட்ஸிகளிடமிருந்து தப்பிக்க அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்திருந்தனர்). லீஸ மெய்ட்னருக்கும் மன்ஹாட்டன் திட்டத்தில் பிரித்தானிய விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து நியூ மெக்ஸிகோவின் லால் அலமோஸ் ஆய்வகத்தில் பணியாற்ற அழைப்பு வந்தது. அந்தக் குழுவின் லீஸவின் அக்கா மகன் ஆட்டோ ஃப்ரிஷ்ம் இடம்பெற்றிருந்தார். ஆனால், லீஸ அணுகுண்டு ஆய்வுகளில் பணியாற்ற மறுத்துவிட்டார். “நான் வெடிகுண்டு ஆய்வுகளில் ஒருபோதும் தொடர்பு கொள்ளமாட்டேன்” என்று தீர்க்கமான முடிவுடன் இருந்தார். 1945 ஆகஸ்ட் ஆறாம் நாள் நியூ மெக்ஸிகோ பாலைவனத்தில் அணுகுண்டுச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. அணுகுண்டை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற முடிவு இனி அறிவியலாளர்கள் கையில் இல்லை; அது அரசியல்வாதிகளின் முழுக் கட்டுப்பாட்டில்.

1945, ஆகஸ்ட் ஒன்பதாம் நாள் அமெரிக்கா ஜப்பானின் மீது அணுகுண்டை வெடித்தது. முன்னெப்போதும் கண்டிராதப் பேரழிவையும் அதைத் தொடர்ந்த மாபெரும் அவலங்களையும் மனித இனம் சுமந்தது. கேள்விப்பட்ட மெய்ட்னர் “அணுகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன்” என்று சொன்னார். அவர் மனிதர்கள் மீது அணுகுண்டு வீசித் தாக்கப்படும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அதன் சாத்தியத்தை நேச நாடுகள் ஜெர்மனிக்கு உணர்த்திப் போரை முடிவுக்குக் கொண்டுவருவார்கள் என்றே நம்பியிருந்தார். செய்தி குறித்த கருத்துக்காக அணுகுண்டைத் தயாரித்த அமெரிக்க விஞ்ஞானிகளைச் சந்திக்க முடியாது. போரில் சிக்குணடிருந்த ஜெர்மனியின் விஞ்ஞானிகளையும் விளக்கம் கேட்க முடியாது. இந்த இந்த நிலையில் ஸ்வீடன் என்ற பாலைவனத்தில் தனிமையில் இருந்த ஸீஸ மெய்ட்னரின் வீட்டுக் கதவுகள் தட்டப்பட்டன. கருப்பிளவைக் கண்டுபிடித்த நாளிலிருந்தே அதன் பேரழிவுச் சாத்தியத்தை உணர்ந்திருந்தார் மெய்ட்னர். அணுகுண்டு தொடர்பான ஆராய்சிகளில் ஒருபோதும் பங்கெடுப்பதில்லை என்ற தீர்மானத்துடன் இருந்திருந்தார். ஆனால் அமெரிக்கச் செய்தித்தாள்கள் “அணுகுண்டின் யூதத் தாய்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டன. தாங்கள் நடத்திக் காட்டிய கோரத்தின் பழியைச் சுமத்துவதற்கு வசதியாக இன்னொருவர் அவர்களுக்குத் தேவை. அவருடைய உன்னத அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு உரிய கௌரவத்தை மெய்ட்னர் பெற்றதில்லை, ஆனால் பாவச்சிலுவை அவர் முதுகில் மிக எளிதாக ஏற்றப்பட்டது. இதன் அபத்ததை நேரடியாக விளக்கியாக வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது . எனவே அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டின் மனைவி எலனார் ரூஸவெல்டுடன் (Eleanor Roosevelt) ஒரு வானொலி உரையாடலுக்கு ஒத்துக் கொண்டார். அதே நாளில் அமெரிக்கா தனது இரண்டாவது அணுகுண்டை நகஸாகி நகர் மீது வீசியது. அதனால் லீஸ மெய்ட்னர் அபார மன அழுத்ததில் இருந்தார், அவரால் சரியாகப் பேசமுடியவில்லை. கூடவே வானொலியின் ஒலியமைப்பும் சரியாக இல்லை. எனவே இன்னும் இரண்டு நாட்களில் மற்றொரு அமெரிக்க வானொலியில் நேர்முக உரையாடலை நிகழ்த்தினார். அதில் “பேராசிரியர் ஹானோ அல்லது நானோ அந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டதில்லை” என்று தீர்க்கமாக மறுத்தார். தன் மீது சுமத்தப்படும் பாவத்தை மறுத்தாக வேண்டிய அந்த நிலையிலும் தன் சகாவான ஆட்டோ ஹான் ஒரு நாட்ஸி என்று சொல்லப்படும் பழியையும் அவர் திடமாக எதிர்க்கத் தவறவில்லை. .

மறுபுறத்தில் அணுகுண்டு இரகசியங்களை ஜெர்மனியிலிருந்து திருடிக்கொண்டு வந்து நேச நாடுகளின் ஆய்வைத் துவக்கி வைத்தவர் லீஸதான் என்ற இன்னொரு அபத்தமும் வெளியானது. இதானால் ஜெர்மானியர் அவரைத் தேசத் துரோகியாகவும், பிற நாட்டினர் அவரைத் திருடியாகவும் பார்த்தனர். போரின் பொழுது தான் ஜெர்மனியைவிட்டு வெளியேற தாமத்தித்து குறித்து அவர் வருந்தினார். ஐன்ஸ்டைன் 1931-லேயே அமெரிக்காவுக்குச் சென்றுவிட்டார். கூடவே பல முக்கிய யூத விஞ்ஞானிகளும் ஜெர்மனியை விட்டு அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் வெளியேறினார்கள். ஆனால் ஆய்வகத்தில் மூழ்கிக் கிடந்த மெய்ட்னர் 1938-ல்தான் ஸ்வீடனுக்குச் சென்றார். அந்தத் தாமதம் முட்டாள்தனமானது மட்டுமல்லாமல், அப்பொழுது துவங்கிய ஆய்வுகள் அபாயகரமாகவும் மாறிவிட்டதை நினைத்து லீஸ விரக்தியடைந்தார்.

அறிவியல் ஆய்வுகளுக்கு ஸ்விடனில் எப்பொழுதுமே லீஸவுக்குக் கடினமாகத்தான் இருந்தது. 1939-ல் ஆட்டோ ஃப்ரிஷ் உட்பட தன் உறவினர்கள் பலர் இடம்பெயர்திருந்த ஐக்கியக் குடியரசுக்குச் செல்ல விரும்பினார். மாமேதை வில்லியம் லாரன்ஸ் ப்ராக் (William Lawrence Bragg) அவருக்கு இங்கிலாந்தின் பிரபலமான கேவன்டிஷ் ஆய்வகத்தில் வேலையளித்தார். ஆனால் அதற்குள் உலகப்போர் தீவிரமடைய, பயணம் சாத்தியமில்லாமல் போயிற்று. இரண்டாம் உலகப் போருக்கு முன் ஸ்வீடன் ஜெர்மனியின் பக்கம்தான் சாய்வாக இருந்தது, ஸ்வீடன் விஞ்ஞானிகளும் ஜெர்மன் அறிவியலாளர்களைத்தான் மதித்தனர். எனவே லீஸவுக்கு ஒருபொழுதும் அங்கே மதிப்பில்லை. அகதி வாழ்வும், ஹோலோஹாஸ்டில் தன் யூத உறவினர்களும் நண்பர்களும் கொல்லப்பட்டதாகத் தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த செய்திகளும் அவரை மன அழுத்தத்திற்கு ஆளாக்கின. இவற்றால் அவர் தனிப்பட்டுப் போனார். அவர் வேலை செய்து வந்த ஸ்வீடன் ஆய்வகம் தொடர்ந்து அவருக்குச் சம்பளம் அளிக்கப் பணம் இல்லை என்றும், வேண்டுமானால் சம்பளமில்லாமல் ஆய்வுகளைத் தொடரலாம் என்றும் சொல்லிவிட்டது. அந்த நேரத்தில் அமெரிக்காவில் வாஷிங்டன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் அவருக்கு அளித்த சில மாதங்களுக்கான வருகைதரு பேராசிரியர் அழைப்பை ஏற்றுக்கொண்டு அமெரிக்கா சென்றார். ஒருவழியாகப் பாலைவனத்தை விட்டு பைத்தியக்காரக் கூட்டத்திற்கு இடம் பெயர்ந்தார்.

வழக்கம்போல் முன்னணி ஆண் ஆய்வாளர்களுக்கு அமெரிக்காவின் முதல்தர பல்கலைக்கழகங்களில் வேலை கிடைத்ததுபோல் அல்லாமல் பெண் என்பதால் ஒரு சிறிய பல்கலைக்கழகத்திலேயே, அதுவும் நிரந்தமல்லாத, வருகைதரு பேராசிரியர் அழைப்புதான் கிடைத்தது. இன்னொரு ஜெர்மானியப் பெண் அறிவியலாளரான எம்மி நூர்த்தரைப் போல இவரும் ஹார்வர்ட், பிரின்ஸ்டன் போன்ற முதல்தர பல்கலைக்கழங்களில் இலவச உரையாற்றவும் கற்பிக்கவும் வேண்டியிருந்தது. அமெரிக்காவில் தன் பழைய சகாக்களான ஐன்ஸ்டைன், ஹெர்மான் வெய்ல், இஸிடோர் ரபை, போன்றவர்களைச் சந்தித்தார். மறுபுறம் அமெரிக்கா தன் அணுகுண்டை மாபெரும் வெற்றியாகவும், தானே இன்னும் பல பேரவலங்களை உருவாக்கியிருக்கக் கூடிய இரண்டாம் உலகப்போரை விரைவாகமுடிவுக்குக் கொண்டுவந்ததாகவும் மார்தட்டிக் கொண்டிருந்தது. அமெரிக்கப் பெண் பத்திரிக்கையாளர் அமைப்பு ‘1946-ஆம் வருடத்தின் பெண்மணி லீஸ மெய்ட்னர்’ என்று பெயரிட்டது. இதன் அபத்தம் லீஸவை வெறுப்பேற்றியது. அவரைப் பற்றிய ஹாலிவுட் திரைப்படம் தயாரிக்க அனுமதி வேண்டினார்கள், லீஸ மறுத்துவிட்டார். அதுபற்றி பின்னாட்களில் தன் சுயசரிதைக் குறிப்பில் ஆட்டோ ஃப்ரிஷ், “அது பிராட்வேயில் நிர்வாணமாக ஓடுவதற்குச் சமம்” என்று எழுதினார்.

அமெரிக்காவில் சில நிறுவனங்கள் அவருக்கு நிரந்தப் பதவி தர முன்வந்தன. ஆனால் அவருக்கு அங்கே இருப்பதற்கு விருப்பமில்லை. அதே நேரத்தில் ஹானுடன் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டிய நொபெல் பரிசு மெய்ட்னருக்கு மறுக்கப்பட்டது குறித்த வருத்தம் ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகளிடையே, குறிபபாக இயற்பியலாளர்களிடம் வலுப்பெற்றது. அவர்கள் பிராயச்சித்தமாக அவருக்கு KTH ராயல் ஆய்வுக் கழகத்தில் (Kungliga Tekniska högskolan) முதல்தர பேராசியர் வேலையை வேண்டிப் பெற்றார்கள். அவர் அதை ஏற்றுக்கொண்டு 1947-ல் ஸ்டாக்ஹோம் குடிபெயர்ந்தார். தொடர்ந்து நியூட்ரான் கண்டுபிடிக்கும் கருவிகள், மருத்துவப் பயன்பாடுகளுக்கான கதிரியக்க ஐசோடோப்புகள் போன்ற துறைகளில் ஆய்வுகளை நடத்தினார். 1948-ல் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் நடந்த தன் ஆசிரியர் மாக்ஸ் ப்ளாங் நினைவுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதன்முறையாக ஜெர்மனி திரும்பி வந்தார். இரண்டாம் உலகப்போர் முடிந்து மனமாற்றம் ஏற்பட்டு வரும் ஜெர்மனியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சில நாட்களை ஆட்டோ ஹான் குடும்பத்துடன் செலவிட்டார். பின்னாட்களில் அவருக்கு நிரந்தரமாக ஜெர்மனி திரும்ப ஆர்வமில்லாதபோதும், அவ்வப்பொழுது வந்து தன் நண்பர்களைச் சந்திப்பதை பெரிதும் விரும்பினார். பல முறை ஆட்டோ ஹானின் இல்லத்தில் தங்கினார். 1950-ல் எழுபத்தியிரண்டாவது வயதில் தன் இறுதி ஆய்வுக் கட்டுரையை நேச்சர் என்ற முன்னணி சஞ்சிகையில் வெளியிட்டார். தன் வாழ்நாட்களின் இறுதிப் பகுதியை அணு ஆயுத ஒழிப்பு, பெண் கல்வி முன்னேற்றம் போன்றவற்றுக்காகச் செலவிட்டார். 1960-ல் இறுதியாக ஐக்கியக் குடியரசுக்குக் குடிபெயர்ந்தார். அங்கே ஆட்டோ ஃப்ரிஷ் உட்பட அவருடைய பல நெருங்கிய உறவினர்கள் ஏற்கனவே குடிபெயர்ந்திருந்தனர்.

தனக்கான நொபெல் பரிசு கௌரவம் கைகூடாமல் போனதில் லீஸவுக்கு வருத்தம் இருந்தது. ஆனால் அது ஒருபோதும் ஆட்டொ ஹானுடனான நெருங்கிய நட்பை பாதிக்க அவர் விடவில்லை. 1990-ல் நொபெல் பரிசுக் குழுவின் விவாதங்கள் கொண்ட கோப்பு திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அமெரிக்க இயற்பியல் குழுமத்தின் பிஸிக்ஸ் டுடே என்ற சஞ்சிகையில் ஒரு கட்டுரை வெளியானது. அதில், “நோபல் குழுக்களின் அமைப்பு துறையிடை கண்டுபிடிப்புகளை மதிப்பிடுவதற்குப் பொருத்தமற்றதாக இருந்தது. வேதியியல் குழுவின் உறுப்பினர்கள் அவரது பங்களிப்பை நியாயமாக மதிப்பிட இயலவில்லை அல்லது விரும்பவில்லை. மேலும் போர்க் காலத்தில் ஸ்வீடிஷ் விஞ்ஞானிகள் தங்கள் சொந்த நிபுணத்துவத்தை மாத்திரமே நம்பியிருந்தார்கள். இவையே 1944 ஆம் ஆண்டு லிஸ் மெய்ட்னருக்குப் பரிசைப் பகிர்ந்து அளிக்கப்படாததன் காரணங்கள் என்று தெரிகிறது. மெய்ட்னர் வேதியியல் விருதில் இருந்து விலக்கப்பட்டதை (வேதியியல்)துறை சார்பு, அரசியல் முட்டாள்தனம், அறியாமை மற்றும் அவசரம் ஆகியவற்றின் கலவையாகச் சுருக்கமாகக் கூறலாம்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. “ஸ்வீடனிலேயே தங்கியிருந்த மெய்ட்னரின் கடிதங்கள், உரையாடல்கள் இவற்றை முழுமையாக அவர்கள் ஆய்வு செய்ருந்தால் கட்டாயம் மெய்ட்னருக்கு அந்த விருதைப் பகிர்ந்தளித்திருப்பார்கள், ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை” என்று 1962-ஆம் ஆண்டு மூலக்கூறு உயிரியல் கண்டுபிடிப்புகளுக்காக நொபெல் பரிசு பெற்ற மாக்ஸ் பெரூட்ஸ் (Max Perutz) என்ற அறிவியலாளர் சொன்னார்.

ஆனால் மெய்ட்னரின் பெயர் மறைக்கப்பட்டதில் ஹானுக்குக் கட்டாயம் பங்கு உண்டு. அந்த ஆய்வு தொடர்பாக வெளியிட்ட முதல் ஆய்வுக்கட்டுரையில், ஸ்ட்ராஸ்மானுக்கும் அவருக்கும் சோதனைகளின் மீது தீர்க்கமான முடிவு இல்லை. அதிபொருண்மை கொண்ட யுரேனியத்திலிருந்து அதில் ஐந்தில் ஒரு பங்கே பொருண்மை கொண்ட பேரியம் கிடைப்பது குறித்து அவர்களால் விளக்க முடியவில்லை. ஆனால், மெய்ட்னரின் கடிதம் கிடைத்த சில நாட்களில், மார்ச்சு 13, 1939 அன்று ஹான் எழுதிய கடிதத்தில்,

“அன்புள்ள லீஸ, இந்த முறை நாங்கள் உங்கள் ஆர்வமூட்டும் முடிவுகளுக்காக உன்னை மனமார வாழ்த்தியாக வேண்டும். உங்கள் விளங்கங்களில் எந்த ஓட்டையையும் எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை… எங்களுக்கு -ஸ்ட்ராஸ்மானுக்கும் எனக்கும் – சோதனையின் முடிவில் யுரேனியத்துக்கு மேல் என்ன வந்திருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. எப்படியோ, நீயும் ஃப்ரிஷ்ம் முதல் முறையாக, வெற்று அனுமானங்கள் ஏதுமில்லாமல் இயற்பியல் அடிப்படையில் முடிவுகளைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்.”

என்று எழுதினார். ஆனாலும் அதன் பிறகு இரண்டாவது ஆய்வுக் கட்டுரையில் அணுக்கருப் பிளவைக் குறிப்பிட்ட அவர்கள் அதை விளக்கிய மெய்ட்னர்-ஃப்ரிஷ்ஷை இணையாசிரியர்களாகச் சேர்க்கவோ அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவோகூட இல்லை. நாட்ஸிகளின் பிடியிலிருந்த ஜெர்மனியில் முறையாக (யூதரான) மெய்ட்னரின் பங்கை அறிவித்திருந்தால், தன் நிலைக்கு அல்லது மெய்ட்னரின் உயிருக்கு ஆபத்து வந்திருக்கும் என்று ஆட்டோ ஹான் நம்பியிருக்கலாம் என்று சிலர் ஊகிக்கிறார்கள். இவை இரண்டுக்குமே வலுவான சாத்தியங்கள் நிச்சயம். பின்னாட்களில் கூட இதைப் பற்றிய விவாதங்களில் ஹான் தலைப்படவில்லை. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் “லீஸ எங்கள் குழுவின் அறிவுசார் தலைவர்” என்று ஃப்ரிட் ஸ்ட்ராஸ்மான் சொன்னார். லீஸ மெய்ட்னரின் பங்கை அளவிட இதைவிட வேறு வாக்குமூலம் தேவையில்லை.

1924-1948 வருடங்களில் லீஸ மெய்ட்னரின் பெயர் வேதியியல் நொபெல் பரிசுக்குப் பத்தொன்பது முறையும், 1937-1967 ஆண்டுகளில் அவர் பெயர் முப்பது முறை இயற்பியல் நொபெல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டதாகவும் நொபெல் கழகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதைப் பரிந்துரை செய்தவர்களில் நீல்ஸ் போர், மாக்ஸ் ப்ளாங், மாக்ஸ் பான், ஆர்தர் காம்டன், டிர்க் கோஸ்டர், கஸிமிர் ஃபஹன்ஸ், ஜேம்ஸ் ஃப்ராங், ஆட்டோ ஹான், ஆஸ்கார் க்ளெய்ன், உள்ளிட்ட பல முதல்தர விஞ்ஞானிகள் அடக்கம். ஆனால் அவருக்கு ஒருபோதும் நொபெல் பரிசு வழங்கப்படவில்லை. அவர் மறைவுக்குப் பிறகு, 1997-ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட அணுவெண் 109-ஐக் கொண்ட செயற்கைத் தனிமத்துக்கு மெய்ட்னரியம் (Meitnerium) என்று பெயர் சூட்டப்பட்டது. இதற்கு முன் 1947-ல் அணுவெண் 96-ஐ கொண்ட செயற்கைத் தனிமத்துக்கு க்யூரியம் (Curium) என்று பெயரிடப்பட்டிருந்தது. அது கதிரியக்க ஆய்வுகளில் மாபெரும் சாதனைகளை இணைந்து நடத்திய மறி, பியர் க்யூரி (Marie and Pierre Curie) தம்பதியனரை இணைத்து கௌரவிக்கும்படி பெயரிடப்பட்டது. எனவே, மெய்ட்னரியம்தான் இன்றுவரை ஒரு பெண்ணின் பெயர் சூட்டப்பட்ட தனிமம் என்ற மாபெரும் கௌரவத்தைப் பெறுகிறது.

Lise Meitner
மெய்ட்னரின் கல்லறை

1959-ல் ஹான்-மெய்ட்னர் அணு ஆய்வுக்கழகம் (Hahn-Meitner-Institut Berlin für Kernforschung) என்ற அமைப்பின் துவக்க விழாவில் பெர்லின் சென்று கலந்துகொண்டார். 1966-ஆம் ஆண்டு ஹான்-மெய்ட்னர்-ஸ்ட்ராஸ்மான் மூவருக்கு அமெரிக்காவில் என்றிக்கோ ஃபெர்மி விருது வழங்கப்பட்டது. அதுதான் அமெரிக்கரல்லாதவருக்கு வழங்கப்படும் முதல் முறை. அதுவே ஆட்டோ ஹானுடன் இணைந்து லீஸ மெய்ட்னர் பெறும் முதல் விருதும் கூட, அப்பொழுது அவருக்கு வயது என்பத்தி எட்டு. விருதை நேரில் சென்று ஹானுடன் இணைந்து பெறும் உடல்நிலை அவருக்கு வாய்க்கவில்லை. எனவே அவர் சார்பாக ஆட்டோ ஃப்ரிஷ் பெற்றுக் கொண்டார். அது ஒரு கவித்துவ நிகழ்வும் கூட, நான்காவதாக அந்தக் குழுவில் இருந்திருக்க வேண்டியவர் ஆட்டோ ஃப்ரிஷ், அவர் தன் சித்திக்கான விருதை மகிழ்வுடன் பெற்றுக்கொண்டார். 1966 அக்டோபர் 27 அன்று மதியம் லீஸ மெய்ட்னர் அமைதியாக உயிர்துறந்தார். இங்கிலாந்தின் ஹாம்ஷயரில் அவர் சகோதரர் வால்டர் மெய்ட்னரின் கல்லறைக்கு அருகில் புதைக்கப்பட்டார். அவருடைய கல்லறை “இயற்பியலாளர் – ஒருபோதும் மனிதநேயத்தை இழக்காதவர்” என்ற வாக்கியத்தைத் தாங்கி நிற்கிறது. அறிவியல் ஆய்வாளர், பேராசிரியர்: வெங்கட்ரமணன்

மேலதிக வாசிப்புக்கு:

  1. Lise Meitner: A life in physics, R.L. Sime, Univ of California Press, 1996.
  2. The Amazing Story of Lise Meitner: Escaping the Nazis and Becoming the World’s Greatest Physicist. N Andrew, ‎ Pen and Sword, 2021.
  3. Über die Entstehung der β-Strahl-Spektren radioaktiver Substanzen. L. Meitner, Zeitschrift für Physik, Vol. 9, Page 131,1922.
  4. Hardouin Duparc, Olivier. “Pierre Auger – Lise Meitner: Comparative contributions to the Auger effect” International Journal of Materials Research, Vol. 100, Page 1162, 2009.
  5. A renaming proposal: “The Auger–Meitner effect”, Demetrios Matsakis, Anthea Coster, Brenda Laster, Ruth Sime; Physics Today, Vol. 72 (9), Page 10, 2019.
  6. A Nobel Tale of Postwar Injustice. Physics Today, E. Crawford, R.L. Sime, & M. Walker, Vol. 50, Page 26,, 1997.