பொய்

MRSA
பொய் என்பது என்ன? உண்மைக்குப் புறம்பானவற்றைக் கூறுவது, நிகழ்த்துவது அல்லது சுட்டுவது என்று வைத்துக் கொள்ளலாம். பொய்கள் இரண்டு வகைப்படும்; சுடும் பொய்கள், சுடாத பொய்கள். “எங்க வீட்டு சுந்தரி அற்புதமா கோலம் போடுவா” என்று அமெரிக்க மாப்பிள்ளைக்காக அம்மாக்கள் சொல்வதைச் சுடாத பொய் வகையில் சேர்க்கலாம். சுந்தரி சியாட்டிலில் கோலம் போடுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு. அப்படியே அங்கே பிரமாதமாகக் கோலம் போடாமல் கிறுக்கித் தள்ளினாலும் அடுத்தவீட்டு அமெரிக்கப் பொம்பளை வந்து பார்க்கப் போவதில்லை. அப்படியே அவர் பார்த்தாலும் “ஓ வெரி ப்ரெட்டி” என்று கையைப் பிடித்து முத்தம் கொடுப்பதற்குத்தான் சாத்தியங்கள் அதிகம். அந்த அம்மணி நாலாவது வீட்டுக்குப் போய் “யூ நோ, சுண்டரி ஈஸ் வெரி பேட் அட் கொலம்” என்று முகவாய்க்கட்டையைத் தோளில் இடித்துக் கதை பேசச் சாத்தியங்கள் மிகவும் குறைவு. மறுபுறத்தில், வழக்கு நடக்கும்பொழுது ஜோடிக்கப்பட்ட சாட்சியங்களை வைத்துக் கொண்டு மரணதண்டனை வாங்கித்தரவும் பொய்கள் பயன்படலாம். அவை சுடும்.

வள்ளுவர் ஒருபடி மேலே போய் “புரை தீர்ந்த நன்மை பயந்தால்” பொய்யை உண்மையின் கணக்கில் எழுதலாம் என்று சொல்லிவிட்டார். அதாவது, ஒருவருக்கு அதனால் நன்மை கிடைக்கும் என்றால் (வேறு யாருக்கும் கெடுதல் இல்லாமல்) தாராளமாகப் பொய் சொல்லலாம். சாகப் போகிறார் என்று தெரிந்தவரிடம் பல நாட்கள் டாக்டர்கள், “ஒன்னுமில்லை சார், பாருங்க நீங்க ஜாம் ஜாம்னு எழுந்த நடப்பீங்க” என்று முடிந்தவரைச் சொல்லிக் கொண்டிருப்பதை வள்ளுவர் கணக்குப்படி அந்தப் பக்கத்தில் தாராளமாக வரவு வைக்கலாம். இதற்காக, தெரிஞ்சா எங்கப்பா வருத்தப்படுவார் என்று சொல்லிக் கொண்டு “இல்லப்பா சத்தியமா சிகரெட் பிடிக்கல்ல, சீச்சீ… நாம் போயி… இதெல்லாம்…” என்று மழுப்புவது கட்டாயம் புரைதீர்ந்த சமாசாரம் கிடையாது. ஆனாலும் அவரவர்கள் வசதிப்படி கணக்குப்புத்தகத்தின் கோட்டை இந்தாண்டையும் அந்தாண்டையும் நெகிழ்த்திக் கொண்டிருப்பது என்னமோ உண்மைதான்.

யார் பொய் சொல்கிறார்கள்?

எல்லோரும் சொல்கிறோம். அட, ஒத்துக்குங்க, நீங்களும்தான். பூமியில் மானிட ஜென்மம் எடுத்தவர்கள் புரைதீர்ந்த, தீராத வகைப் பொய்களைத் தினசரி சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சந்தோஷமான விஷயம் என்னவென்றால் இவற்றில் பெரும்பாலானவை சுடாதபொய்கள்தான். என்ன இப்ப ஒத்துக்கிறீங்களா? இல்லை, நீங்கள் ஒத்துக்கொள்வதற்காகச் சொல்லப்பட்ட பொய் இல்லையிது.

பொதுவில் பொய் சொல்வது மட்டமான செயல் என்று கருதப்பட்டாலும் சமூகத்தில் பொய்கள் சொல்பவர்கள் சிறப்பான இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது பலராலும் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இவர்களில் அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் முக்கியமானவர்கள். சில சமயங்களில் இவை தொழில் தர்மமாகக் கருதப்படுகின்றன. தன்னுடைய கட்சிக்காரரைக் கரையேற்றுவதற்கு வழக்கறிஞர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். “நல்ல வூடு சார், ஒரு பொட்டு தண்ணி உள்ள வராது” என்று ஓட்டை வீட்டைத் தலையில் கட்டுவது வீட்டுத்தரகரின் தொழில் சாமர்த்தியம். இதேபோல விளம்பரத் துறை முழுவதும் பொய்யாலோ, அல்லது தவிர்க்கப்பட்ட உண்மைகளாலோ நிறைந்தது. பொய்யால் கட்டியெழுப்பப்பட்டது நடிப்புலகம். எனவே பொய் முழுவதுமாகத் தவிர்க்கப்பட வேண்டிய விஷயமில்லை. வள்ளுவர் கணக்கு, தொழில்தர்மம் இத்யாதி என்று பொய்களுக்கு லைசென்ஸ் உண்டு. இதை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வாழ்க்கையில் முன்னுக்கு வருகிறார்கள். எனவே நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வரையறைக்கு உட்பட்டு பொய்சொல்லி பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்.

பொய்யும் சமயங்களும்

மனிதனை உய்விக்க வந்தவையாக அறியப்படும் சமயங்களிடையே பொய்யைப் பற்றிய ஒரு தீர்க்கமான முடிவு இல்லை. கிறிஸ்துவம்

" ஆனால் கோழைகள், நம்பிக்கை இல்லாதோர், அருவருப்புக்குரியோர், கொலையாளிகள், பரத்தைமையில் ஈடுபடுவோர், சூனியக்காரர்கள், சிலைவழிபாட்டினர், பொய்யர் ஆகிய அனைவருக்கும் நெருப்பு கந்தகமும், எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும். இதுவே இரண்டாம் சாவு “- (திருவெளிப்பாடு, 21:8, புதிய ஏற்பாடு) .

என்று உறுதியாகச் சொன்னாலும், பல இடங்களில் அது நெகிழ்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.உதாரணமாக ஒருவரை கிறிஸ்துவராக மாற்றுவதற்குப் பொய் சொல்வது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதேபோல ஒவ்வொரு மதமும் பொய்யைப் பற்றி இருதலையான கருத்துக்களைச் சொல்லுகின்றன. இஸ்லாத்தில் ஒருவர் உயிரைக் காப்பாற்ற, சமாதானத்தை அடைய, புனிதப் பயணத்தை மேற்க்கொள்ள பொய்சொல்லலாம் என்று ஹதீது இருக்கிறது. ஆனால் அங்கே அல்லாவிற்கும் முகம்மது நபிக்கும் பொய்யானவர்களுக்கு மன்னிப்புக் கிடையாது.

" நான் இறைதூதர் சொல்லக் கேட்டேன்; “என் மீது பொய்யானவற்றைச் சுமத்துதல் என்னையல்லாதவர்கள் மீது சுமத்துதலுக்கு ஒப்பானதல்ல. எனக்கெதிராக வலிந்து பொய் சொல்லுபவர் நரகத்தீயில் தனக்கான இடத்தை நிச்சயத்துக் கொள்கிறார்”” (ஷகீஹ் அல்-புக்ஹாரி 2.378 ) .

யூதர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட பொய்கள் சில உண்டு; சாட்சி சொல்லும்பொழுது உண்மையைச் சொல்லாமல் விட்டுவிடலாம், ஆனால் ஒட்டுமொத்தமாகப் பொய் சொல்லக் கூடாது, பணக்காரர்கள் பொறாமையைத் தவிர்க்கப் பொய் சொல்லலாம், மதாச்சாரியாரின் (டோரா ஆசிரியர்) செலவுக்குப் பணம் வசூலிக்கும்பொழுது பெண்ணின் திருமணத்திற்காக என்று பொய் சொல்லலாம்; குருக்களுக்கு என்று கேட்டால் பணம் தராமல் போகக்கூடும். ஸப்பாத் தொழுகைக்கு வீட்டுப் பெண்கள் கிளம்ப நேரமானால், லேட்டாகிவிட்டது என்று பொய் சொல்லலாம் என்று கூட நடைமுறைக்கு ஏற்றபடி டோராவில் வரையறுக்கப்பட்டுள்ளது. நாட்டைக் காக்க சத்ரியர்களும், வியாபாரத்தில் வைசியர்களும் பொய் சொல்லலாம் என்று கீதை சொல்லுகிறது.நெகிழ்வு கொண்ட இந்து மதத்தில் பொதுவில் மறுதலையான கோட்பாடுகள் இறைந்து கிடக்கின்றன.

இப்படி நீதிநெறிகளைப் போதிப்பதாக வந்த மதங்கள்கூட பொய்யைப் பற்றி தீர்க்கமாக தவிர்க்கப்படவேண்டியது என்று சொல்லவில்லை. சில வகையான பொய்களை முற்றிலும் தடைசெய்யும் இறைநூல்கள், வேறு இடங்களில் பொய் சொல்ல அனுமதிக்கின்றன. ஒருவகையில் இந்த அனுமதி பொய் சொல்லுவதை ஊக்குவித்தல் என்றுதான் கொள்ள வேண்டும்.

பொய்யின் வகைகள்

செய்ததை மறுப்பது: “இல்லை, நான் செய்யல்ல” - இதுதான் உலகிலேயே அதிகமாகப் புழங்கிவரும் பொய்யாக அடையாளம் காணப்படுகிறது. “டேய் ஏன்டா செவுத்துல கிறுக்கினே?” என்று கேட்டால் அடுத்த நிமிடம் என்னுடைய மூன்று வயது மகன் “நா இல்லேப்பா, அண்ணந்தான்..” என்று பொய் சொல்கிறான். இதில் தொடங்கி எண்பது வயதாகும், நீரிழிவு நோய்யுள்ள என்னுடைய அப்பாவிடம் ‘ஏம்பா கல்யாணத்துல பாயசம் சாப்டே?’ என்று கேட்டால், “சீ, இல்லேடா, நா எங்க சாப்டேன்” என்று அனிச்சையாகப் பொய் சொல்கிறார். இதுபோன்ற பொய்களுக்கு மனிதனின் பத்திரமற்ற உணர்வுகள்தான் காரணம் என்று ப்ராய்ட் சொல்கிறார் (இல்லையா? அப்ப வேற யாராவது இதேமாதிரி கட்டாயம் சொல்லியிருப்பார்).

செய்ததைச் செய்யாததாக்கிப் பிறர் தலையில் கட்டுவது: “நான் கிழிக்கல்லப்பா, சித்ராதான் கிழிச்சா” என்று பொடிசுகள் தங்கள் பொய்யின் திறத்தை அதிகரிக்க காரண காரியங்களைப்பிறர் தலையில் சுமத்துவதைப் பார்க்க முடியும். உலகத்திலேயே அதிகமாகப் புழங்கி வரும் பொய் என்று ஏதோ பெரிய ஆராய்ச்சிகள் நடந்ததைப் போலவும் அதில் தீர்மானமாக முடிவு கண்டதைப் போலவும் சொல்வதுகூட இந்த வகைதான். சில சமயங்களில் இது தேவையாக இருக்கிறது. ஏனென்றால் இதுதான் அதிகமான பொய் என்று வெறுமனே எழுதினால் படிக்க சுவாரசியம் வருவதில்லை. சுடாதவரை இதுவும் பரவாயில்லை. ஆனால், கொன்னுடுங்கோன்னு சாமியார் சொன்னார் என்று நேரில் இருந்து பார்த்ததைப் போலச் சொல்வது?

செய்யாததை செய்ததாக ஏற்றுக் கொள்வது: பல சமயங்களில் சிலர் செய்யாத தவறுக்குப் பொறுப்பேற்பதைப் பார்க்கலாம். 1956ஆம் ஆண்டு ராக்·போர்ட் எக்ஸ்பிரஸ் அரியலூருக்கு அருகே விபத்துக்குள்ளானது. அதில் கிட்டத்தட்ட 144 பேர்கள் செத்துப் போனார்கள். இதற்குத் தானே காரணம் என்று பொறுப்பேற்பதாகச் சொல்லி அப்பொழுதைய இரயில்வே மந்திரி லால் பஹதூர் சாஸ்திரி தன்னுடைய பதவியைத் துறந்தார். ஒருவகையில் இதுவும் பொய்தான் - பொதுநலம் கருதி பொய் சொல்வது. பலரும் சாஸ்திரியின் ‘நேர்மையைப்’ பாராட்டுகிறார்கள். வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இங்கே பொய் சொல்லுவது நேர்மையாகக் கருதப்படுகிறது.

தன்னைத்தானே சமாதானம் அல்லது திருப்திசெய்யச் சொல்லும் பொய்கள்: என்னடா வெயிட் போட்டுக்கிட்டே போறே, என்று யாரிடமாவது சொன்னால் உடனே வரும் பதில், “சீச்சீ, வெயிட்டெல்லாம் போடல, கொஞ்ச நாளா எக்ஸர்ஸைஸ் பண்றத நிறுத்தியிருக்கேன்ல அதுனாலதான், நெனச்சா ஒரே வாரத்துல அஞ்சு கிலோ கொறைக்க முடியும்” என்ற ரீதியில் இருக்கும். பல சமயங்களில் பொய் சொல்லுவது தன்னுடைய சுயத்தை நிலைநாட்டிக்கொள்ளப் பயன்படுகிறது. இது சில சமயங்களில் தன்னை மாத்திரமல்லாமல் தன்னைச் சேர்ந்தவரையும் உள்ளிட்டுப் பொய் சொல்வது தவறில்லை என்று கருதவைக்கிறது, “மாநிறம், சராசரி உயரம், குடும்ப வேலைகளில் தேர்ச்சி பெற்ற பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை” என்று வந்தால் அந்தப் பெண் கறுப்பு நிறமாகவும், குள்ளமாகவும், படிப்பு குறைவானவளாகவும் இருப்பது வழக்கம். இதே ரீதியில் மணமக்கள் விளம்பரங்கள் எல்லாவற்றிலும் பொய்கள் நெடுகத் தூவப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை.

பொய்யின் நம்பகத்தன்மை

பொய்யின் நம்பகத்தன்மை முற்றாக அதைச் சொல்பவரின் திறமையையே சார்ந்தது. சுயமறுதலிப்பு (self-negation) என்று தர்க்கத்தின் ஒருவகை உண்டு. “இந்த வாக்கியம் பொய்யானது” “நான் ஒரு பொய்யன்” என்பதைப் போன்ற தன்னெதிர்களின் (Paradoxes) மெய்திறத்தை அறுதியிடுவது இயலாதது. இப்படியான வாக்கியங்கள் பொய்யையும் உண்மையும் பிரித்துக் காட்டலில் மொழிகளின் இயலாமையைக் காட்டுகின்றன. மொழியின் இயலாமைதான் பேச்சுத்திறனைச் சார்ந்து பொய்க்கு நம்பகத்தன்மை அளிக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் பேரழிவு ஆயுதங்கள் இராக்கில் இருக்கின்றன என்பதை முன்னிருத்தி இராக்கின் மீது போர்தொடுத்தார். தொடர்ந்து வந்த நாட்களில் அமெரிக்க அரசு இயந்திரம் முழுவதும் இந்தப் பொய்யை வார்த்தைகளின் சிலம்பாட்டங்களால் திறமையாக மறைத்து, ஜார்ஜ் புஷ் அடுத்த முறையும் ஜனாதிபதியாக உதவியது. மிகைபடக் கூறல், திசை திருப்பல், சொல்லடுக்கல், போன்ற மொழியியல் வித்தைகளெல்லாம் இங்கே பயன்பட்டன. மறுதேர்தல் சமயத்தில் பேரழிவு ஆயுதங்கள் இருந்தனவா இல்லையா என்பதைப் பற்றிய பேச்சு கிடையாது. “அவருக்குக் கிடைத்த தகவல்கள் அப்படித்தான் இருந்தன”, “என்ன, கொஞ்சம் கூடச் சேர்த்துச் சொன்னார்”, “அரசியலில் இப்படித்தான் முன்னே பின்னே இருக்கும்”, “அவர் உண்மையாகவே அப்படித்தான் நம்பினார்” என்ற ரீதியில்தான் வாதங்களெல்லாம். அதாவது முற்றறுதி உண்மை (absolute truth) என்பதைப் பற்றி யாருக்கும் கவலை கிடையாது. கடந்த ஐந்து வருட அமெரிக்க அரசியலை ஆராய்பவர்களுக்குப் பொய் என்பதன் வரையறை நீர்த்துப் போனது நன்றாக விளங்கும். புஷ்ஷின் இரண்டாவது தேர்தலை நிர்ணயித்ததே அமெரிக்கா ஈடுபட்டிருக்கும் போர்தான். அது பேரழிவு ஆயுதங்கள் என்ற பொய்யை முன்னிருந்த்தித் துவக்கப்பட்டது. பேரழிவு ஆயுதங்கள் இல்லாமை மறுதேர்தல் காலத்தில் நன்கு தெரிந்திருந்தும் புஷ் அமெரிக்க மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டார். அதற்கு முக்கிய காரணமாகச் சுட்டப்பட்டது புஷ்ஷின் நம்பத்தன்மை. அரசியலில் தற்காலத்தில் சரடுதிரிப்பவர்கள் (Spin Doctors) என்று ஒரு பெரிய கூட்டமே இயங்குகிறது. இவர்களின் முக்கிய திறமை கூட்டியும் கழித்தும் உண்மையையும் பொய்யையும் தேவையான அளவில் கலந்து பொதுமக்களிடம் நம்பகமூட்டுவது.

இருந்தாலும் காலப்போக்கில் உண்மை வெளிவருவது நிச்சயம். “ஒநாய்… ஓநாய்” என்று கூவியச் சிறுவனின் குரல் மூன்றாம் முறை எடுபடாமல் போனதைப் போல பொய் ஒரு நாள் தெரிந்துபோகும். ஆனால், தெரியும் வரை காலத்தை ஓட்டலாம், தெரிந்தால் மன்னித்து விடுவார்கள், தெரிந்தும் நம்மை ஒன்றும் செய்யமுடியாது போன்ற தந்திரங்களை முன்வைத்தே பொய்கள் சொல்லப்படுகின்றன.

பொய்சொல்லக் கற்றுக் கொள்ளுதல்

பொய்சொல்லும் வழக்கம் எப்படித் துவங்குகிறது? குழந்தை உளவியல் நிபுணர்களின் கருத்துப்படி, முதலில் பயத்தால் பொய் துவங்குகிறது. தண்ணியைக் கீழே கொட்டியது நான்தான் என்று சொன்னால் அடிவிழும் என்று பயப்படும் குழந்தை, இல்லேம்மா என்று மெதுவாகச் சொல்லிப் பார்க்கிறது. இதில் வெற்றி கிடைத்தால் இதன் பலன் அடுத்த முறை இன்னும் கொஞ்சம் உரக்க, தைரியமாக இதே போன்ற பொய்யைச் சொல்லத் தூண்டுகிறது. மாறாக இதில் தோல்வி கிடைத்தால் சற்று நின்று போகும் பொய், பின்பு வேறொரு சமயத்தில் வெளிவந்து வெற்றி பெறுகிறது. பொதுவில் பொய்கள் வாழ்க்கையில் சுலபமாக வெற்றியைத் தேடித்தருகின்றன. கஷ்டப்பட்டு உழைப்பதைவிட கொஞ்சம் பொய் சொன்னால் எளிதாகக் கைமேல் பலன் கிடைக்கிறது. இயற்பியல் விதிகளின்படி நாம் தேர்ந்தெடுக்கும் பாதைகள் எல்லாமே சுருக்கமானவை.

சில சமயங்களில் பொய் சொன்னதற்காகக் குழந்தைக்கு அடிகிடைக்கக் கூடும். அது பயத்தை அதிகரிக்கிறது. எனவே அடுத்த முறை இன்னும் திறமையான பொய் வெளிவருகிறது. அதேபோல் சில சமயங்களில் பொய் கண்டுபிடிக்கப்பட்டாலும் அதற்கான தண்டனை வழங்கப்படுவதில்லை. இப்படியான சமயங்களில் பொய் சொல்லித்தான் பார்க்கலாமே என்று தோன்றுகிறது. இன்னும் சில சமயங்களில் தன்னைவிடப் பெரியவர்கள் நெஞ்சு நிமிர்த்தி தைரியமாகப் பொய் சொல்வதைப் பார்க்க நேரிடுகிறது. “சர்க்கரையா, இல்லயே, இவர் நாளைக்குத்தான் வாங்கிக்கிட்டு வர்றேன்னார்” என்று நேற்று வாங்கிவந்த சர்க்கரையை உள்ளே வைத்துக் கொண்டு சொல்வதைப் பார்க்கும் குழந்தைக்கு பொய் சொல்வது ஒரு பெரிய விஷயமே இல்லை என்று தோன்றுகிறது. கூட்டிக் கழிந்துப் பார்த்த்தால், தண்டனை, தண்டனைக் கிடைக்காமல் இருத்தல், தப்பிக்கும் சாத்தியம், தண்டிப்பவரே பொய் சொல்வது என்று இப்படிக் குழப்பமான நிலையில் வளரும் குழந்தை பொய் சொன்னால் எளிதாக வேண்டியதை நிறைவேற்றிக் கொள்ள முடிவதால் பொய் சொல்லக் கற்றுக் கொள்கிறது.

பொய் சொல்வது மனிதர்களுக்கு மாத்திரமே சொந்தமானது என்று நினைக்க வேண்டாம். நிறத்தை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியும், இலைகளினூடே மறைந்து கொள்ளும் பச்சைப் பாம்பும் பரிணாம வளர்ச்சியில் தங்கள் சுயத்தை மறைத்து பொய்யாக நடக்கக் கற்றுக் கொண்டவை. இப்படிச் சூழலில் தன்னை மறைக்க முயலாத (நேர்மையான?) விலங்கினங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. தேனி ஆர்க்கிட் (Bee Orchid) என்று சொல்லப்படும் ஒருவகைப் பூக்கள் பார்வைக்குக் கிட்டத்தட்ட தேனீயை ஒத்ததாகவே இருக்கின்றன, இவற்றின் வடிவத்தில் ஏமாந்த தேனிக்கள் ஆர்க்கிட்டின் இதழ்களுக்கு இடையே உடலுறவு கொள்ள முயற்சிக்கின்றன. இந்த உடலுறவினால் நன்மை என்னமோ ஏமாற்றும் ஆர்க்கிட்களுக்குத்தான். எனவே மறைத்தல், மறுத்தல், பொய் சொல்லுதல் என்பவை பரிணாமம் உயிரிகளுக்குக் கற்றுக் கொடுத்த பாடம்தான். அடுத்தமுறை யாரையாவது பார்த்து “ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே” என்று பொய் சொல்லவேண்டியிருந்தால் பழியை சார்ல்ஸ் டார்வின்மேல் போட்டுவிட்டு கண்களைப் பார்த்து தைரியமாகச் சொல்லுங்கள்.

பொய்யைக் கண்டுபிடித்தல்

பல சமயங்களில் பொய்யைப் பொய்யாலேயே எடுக்க முடியும். “நா இல்லப்பா அக்காதான்” என்று சொல்லும் சிறுவனிடம் “டேய், நாந்தான் பாத்துக்கிட்டே இருந்தேனே” என்று இன்னொரு பொய்யைச் சொன்னால், அடுத்ததாக ஒத்துக் கொள்வது நிச்சயம். பல சுடாத பொய்களை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. இதற்குக் காரணம், பொய் சொல்பவர்கள் அடிமனதில் தங்கள் தவறைத் தாங்களே ஒத்துக் கொள்கிறார்கள். நாலு முறை “ஏன்டா வெயிட் போட்ருக்கே” கேள்விக்குப் பொய் சொல்லும் நபர் கட்டாயம் அடுத்தமுறை சாப்பாட்டில் கைவைக்கும் பொழுது ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்வார். இதையெல்லாம் பொய் என்று அறுதியாக நிரூபித்தாக வேண்டிய கட்டயாம் யாருக்கும் இல்லை.

பொய்யைக் கண்டுபிடிக்கும் கருவி ஒன்றைச் செய்தாகவேண்டும் என்ற ஆர்வம் அறிவியலாளர்களுக்கு இருந்து கொண்டேயிருக்கிறது. அப்படியான கண்டுபிடிப்புகளுக்குள் மிகவும் முக்கியமானது பாலிகிரா·ப் என்று சொல்லப்படும் கருவி. பொய் சொல்பவரின் உடலில் இரத்த அழுத்தம், வெப்பம், இருதயத் துடிப்பு, தோலின் விரைப்புத்தன்மை என அசாதாரண மாற்றங்களை அளந்து அவர் பொய் சொல்கிறார் என்று இந்தக் கருவி முடிவெடுக்கும். பல விசாரனைகளில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டாலும் இதன் நம்பகத்தன்மை இன்னும் தெளிவாக அறுதியிடப்படவில்லை. சமீப காலங்களில் பொய் சொல்பவர் மூளையில் ஏற்படும் மின்னோட்ட மாறுபாடுகளை அணுக்கரு காந்த ஒத்திசைவு (Nuclear Magnetic Resonance) என்ற கருவியின் மூலம் நேரடியாக அளக்க முயற்சி செய்துவருகிறார்கள். உயிர்த்தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் இலக்காகக் கொள்ளப்பட்ட முக்கிய துறைகளில் ஒன்று பொய்.

அறிவியலும் பொய்யும்

பொய்க்கு முற்றாக இடம் மறுக்கப்பட்ட ஒரு துறை உண்டென்றால் அது அறிவியல்தான். ஆதார நம்பிக்கைகள் என்று எதுவுமில்லாத அறிவியலில் எந்த வழியிலும் பொய் ஒத்துக் கொள்ளப்படுவதில்லை. முரண்பட்ட அறிவியல் அறிக்கைகள் நாள் தோறும் வருவதைப் பலரும் இதற்கு எதிர்வினையாகச் சுட்டக்கூடும். உதாரணமாக, இன்றைக்கு ஒரு அறிக்கை மது அருந்துவது தீமை விளைவிக்கும் என்று வரும், நாளை அளவோடு அருந்துவதன் நன்மையைச் சொல்லக்கூடும். இதின் எது உண்மை-பொய் என்று பலரும் வியப்படையக்கூடும். இங்கு “அளவோடு” என்ற வார்த்தையின் இடம் மிகவும் முக்கியமானது, இதுதான் உண்மை-பொய்யை நிர்ணயிக்கிறது. (இதற்கும் அரசியலில் பேரழிவு ஆயுதங்களைப் பற்றி மிகைபட பேசுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அளவோடு என்ற முன்னடை இல்லாமல் மதுவின் நன்மைபற்றி பேசுவது அறிவியல் கிடையாது). தங்களுடைய வர்த்தகத்திற்குச் சாதகமாக நிறுவனஙகள் ஆய்வு முடிவுகளைத் திரித்துக் கூறுவதும் அறிவியலுக்குப் புறம்பானதுதான். மெய்யல்லாத வார்த்தைகளுக்கு அறிவியலில் இடம் கிடையாது.

அடிப்படை அறிவியல் உண்மைகள் மாறிக்கொண்டே இருப்பதாகப் பலரும் குற்றம் சாட்டமுடியும். உதாரணமாக இருபதாம் நூற்றாண்டின் துவக்கம் வரை, ஒரு பருப்பொருளின் இடம்-திசை வேகம் இரண்டையும் தெரிந்திருந்தால் அந்தப் பொருளின் நிலையைத் துல்லியமாக உணரமுடியும் என்ற தீர்க்கமான நம்பிக்கை இருந்தது. இதற்கு செவ்வியல் அறுதிப்பாடு (Classical Determinism) என்று பெயர். குவாண்டம் இயற்பியல், சார்நிலைக் கோட்பாடுகள் இவற்றின் வருகைக்குப் பிறகு நிச்சயமின்மை (uncertainity) போன்ற கருத்துகள் அறிவியலில் இடம்பிடிக்கத் தொடங்கின. அப்படியென்றால் செவ்வியல் அறுதிப்பாடு பொய்யா என்று கேட்கலாம். இந்த இடத்தில் பருப்பொருளின் தன்மை முக்கியமானதாகிறது. நாம் அன்றாடம் வாழ்வில் புழங்கும் பெருமப் பொருள்களுக்கு (macroscopic matter) செவ்வியல் விதிகள் முற்றாகப் பொருந்துகின்றன. ஆனால் அணுக்களின் உலகில் நிச்சயமின்மை தலையெடுக்கிறது. எனவே செவ்வியல் இயக்கவிதிகள் ‘பொய்த்துப்’ போகவில்லை, மாறாக அணுக்களின் உலகில் அவை ‘நீர்த்துப்’ போகின்றன.

அறிவியலில் பொய்க்கு இடமில்லாமல் இருப்பதன் காரணம், முற்றறுதி உண்மை (absolute truth) என்று விஷயத்தை அது தன் எல்லையில் உட்படுத்தாமல் இருப்பதே. அறிவியலில் உண்மை என்பது நம் இன்றைய புரிதலின் அடிப்படியிலானது. அறிவியல் உண்மையை அடைய முற்படுவதில்லை. தொடுகோடாக உண்மையில் அருகாமைக்கு நம்மை இட்டுச் செல்கின்றன.

பொய்யின் இடத்தை முற்றாக அறிவியல் மறுப்பதே அதன் உயர்வுக்குக் காரணம். இந்த ஒரே காரணத்தினால்தான் மதவாதிகளும், அரசியலாரும் அறிவியலுக்கு அடிபணிய வேண்டியிருக்கிறது. உருண்டையான பூமி, அது சூரியனைச் சுற்றி வருகிறது, உயிரினங்கள் தோற்றுவிக்கப்படவில்லை, அவை பரிணாம வளர்ச்சியால் உருவெடுத்தவை என்று மதங்களும் தம் அடிப்படை நம்பிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மறுபுறத்தில் எந்தவிதமான நம்பிக்கைகளும் இல்லாமல் அறிவியல் உண்மையின் திறத்தை நாளுக்கு நாள் உயர்த்திக் கொண்டேயிருக்கிறது.

இவ்வுலகில் அறிவியலுக்கு இடமிருக்கும் வரை உண்மை - பொய் என்ற வரையறையை மாற்றியெழுத யாராலும் முடியாது.

Image: Truth is next to Lie, Engraving by Peeter Baltens, Zuid-Nederlands (1528-1584), Courtesy: Rijksmuseum and lookandlearn.com, under CCO 1.0)