காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

MRSA

மெய்காணலில் அறிவியல் வழி

வே. வெங்கட்ரமணன்

இலக்கியத் தோட்டம், கவிஞர் சேரன் அவர்கள் தொகுக்கும் நிகழ்வு, இதில் என்னைப் போன்ற சாதாரணன் பேச என்ன தகுதியிருக்கிறது என்று அழைப்பாளர்கள் கருதியிருப்பார்கள்? திரு செல்வம் அவர்களிடமிருந்து அழைப்பு வந்த அடுத்த சில நாட்கள் என் மனதைத் அரித்து இன்றுவரை விடைகாணமுடியாத கேள்வியாக உறுத்திக் கொண்டிருக்கிறது. இங்கேயுள்ள பார்வையாளர்களில் மிகவும் குறைவான இலக்கியப் பரிச்சயம் உள்ளவனாக நானாகத்தான் இருக்கமுடியும். இலக்கிய வாசிப்பு - மிகவும் குறைவு; படைப்பு -ஏதுமில்லை. இப்படிப்பட்டவனுக்கு இங்கிருக்க அருகதை உண்டா? என்னை இலக்கிய மேடையேற்ற அமைப்பாளர்களுக்கு மிகுந்த தைரியம் வேண்டும்.

கடந்த இரண்டு வாரங்களாக நான் கண்டறிந்த ஒரே தகுதி - கருத்தரங்கின் மையத் தலைப்பான “காமஞ் செப்பாது கண்டது மொழிய” அறிவியலாளனாக நான் பெற்ற பயிற்சி மட்டும்தான்.

இறையனார் பாடியதாக அறியப்படுவதும், அது தருமி எனும் வறியவனின் ஏழ்மையைப் போக்க சிவபெருமானின் உதவியெனவும் திருவாலங்காட்டுக் கல்வெட்டு தொடங்கி கடம்பவன புராணம், தமிழ் விடுதூது, ஈஸ்ட்மென் கலர்த் திரைப்படம் வரையிலும் பாடல் பெற்றதுமான கவிதை இது;

கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற் செறியெயிற் றரிவை கூந்தலின் நறியவு முளவோநீ யறியும் பூவே

‘ஈற்றயலடி மூச்சீராகவும் மற்றயவை நாற்சீராகவும், பெரிதும் ஈரசைச் சீர்களால் ஆக்கப்பட்டதாகவும், ஈற்றுச்சீர் ஏ, ஓ, ஈ, ஆய், என் -என்பனவற்றுள் ஒன்றால் முடிவதாயுமுளதால் இதனை நேரிசையாசிரியப்பாவாமாம் என்ப சான்றோர்’ என்று பா இலக்கணத்திற்கு உதாரணமாவும்,

‘இயற்கைப் புணர்ச்சிகண் இடையீடு பட்டு நின்ற தலைமகன், தலைமகளின் நாணின் நீக்குதற்பொருட்டு மெய்தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல், இடம்பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல், நீடு நினைந்திரங்கல், கூடுதலுறுதல், சொல்லிய நுகர்ச்சி வல்லே பெறுதல், முதலாயினவற்றை அவளின்பால் நிகழ்த்திப் பாடுமாறாயின் இது களவியலின்பாற்படுமாம்’ என்று அகப்பொருள் இலக்கணம் சொல்லிக் கொடுக்கவும்,

“பொதியப் பொருப்பன் மதியக் கருத்தினைக், கொங்குதேர் வாழ்க்கைச் செந்தமிழ் கூறிப், பொற்குவை தருமிக் கற்புடனுதவி, என்னுளங் குடிகொண்டிரும்பய னளிக்கும், கள்ளவிழ் குழல்சேர் கருணையெம் பெருமான்” என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டவன் ஆலவாய் இறையனாரா, அல்லது தனது கவித்திறத்தால் இன்னொருவன் ஏழ்மைபோக்க முயன்ற முதுகவி ஒருவனா எனக் கல்வெட்டாராச்சியாளர்கள் விவாதிக்கவும்,

திருவிளையாடல் காட்சியில் மேலோங்கி நிற்பது நாகேஷின் நகைச்சுவைத் திறனா, சிவாஜி கணேசனின் நடிப்புத் திறனா, திரையருட் செல்வர் நாகராஜின் இயக்குநர் திறனா - என்று சாலமன் பாப்பையாக்களும், லியோனிகளும், பட்டிமண்டபம் கட்டவும்,

உதவிய பாடலை முன்னிருத்தி மெய்காணலில் அறிவியல் வழியைச் சொல்லும் என்னுடைய முயற்சி இது.

அறிவியலும் இலக்கியமும்

இன்றைய சமூகங்களில் பொதுவிலும், குறிப்பாகத் தமிழ்ச் சமூகத்திலும், சராசரி மனிதர்களையும் அறிவியலையும் தனிப்படுத்தும் போக்கு தலைப்பட்டுக் காணப்படுகின்றது. அறிவியலும் இலக்கியமும் (பொதுவில் மானுடவியல் துறைகளும்) எதிர்ப்பட்ட இருதுருவங்களாகச் சித்தரிக்கப்படுகின்றன. இதற்குக் காரணிகள் இரண்டு; முதலாவது, பொதுவில் குறைபட்டுக் காணப்படும் அறிவியல் அறிவு. இரண்டாவது, அறிவியலை அழிவு சக்தியாகவும் மானுடவியல் கலைகளை மனிதனை உய்விக்க வந்த மேம்பட்ட சக்திகளாவும் சித்தரிக்கும் போக்கு. ஒன்றிலிருந்து மற்றதைத் தவிர்க்கும் மனப்பான்மை இதற்குப் பேருதவி புரிகின்றது. பொதுவில் அறிவியலாளர்கள் பிற கவின்கலைகளில் ஆர்வம் காட்டுவதைக் காணமுடிகின்றது. மாபெரும் இயற்பியலாளர்களான் ஐன்ஸ்டைன் வயலின் வாசிப்பில் திறம்பட்டவராக விளங்கினார். ரிச்சர்ட் ஃபெய்ன்மான் மத்தள வாத்தியங்களிலும் ஓவியங்களிலும் ஆர்வம்கொண்டிருந்தார். சர் சி.வி. ராமன் மிருதங்கத்தின் அதிர்வுகளை பெஸல்ஸ் சார்புகளைக் கொண்டு விளக்கமுடியும் என நிரூபித்தார். சராசரி அறிவியலாளர் ஒருவர் இலக்கியத்திலோ, இன்னிசையிலோ, ஓவியத்திலோ, அல்லது வேறு கவின்கலைகள் ஒன்றிலோ பயிற்சி இல்லாவிட்டாலும் ஆர்வம் கொண்டிருப்பவராக இருப்பார். இதைப் பொதுமைப்படுத்துவதிலும் தவறில்லை - சராசரி மனிதனுக்கு எல்லாமும் முக்கியம்தான். இன்னொரு முறையில் ஆராய்ந்தால் - தகவல் வெள்ளம் பெருகியோடும் இன்றைய வாழ்வில், எந்த ஒரு துறையின் வளர்ச்சியும் மற்றதனுடன் இயைந்தே செல்லவேண்டியிருக்கிறது. விளையாட்டிலும், இசைத் துறையிலும் அறிவியல் விளைத்திருக்கும் முன்னேற்றங்கள் அளவிட முடியாதவை. பொதுவில் இலக்கியத்தில் அறிவியலின் நேரடி பாதிப்பு கண்கூடாகத் தெரியாவிட்டாலும், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் வாழும் சமூகத்தை நாம் அனுகும் விதத்தில் மாற்றம் விளைத்திருப்பதையும் அதனூடாகப் படைப்பிலக்கியத்தின் போக்கு மாறுவதையும் காணமுடியும்.

எனினும் இலக்கியவாதிகள் - அதிலும் குறிப்பாகத் தமிழ் இலக்கியவாதிகளிடையே அறிவியல் ஒரு தவிர்க்கவேண்டிய துறையாகக் கருதப்பட்டு வருகின்றது. இது அறிவியலில் தேர்ச்சிபெற்ற சில இலக்கியவாதிகளுக்கும் பொருந்தும். சேரியில் நான் வாழ்ந்தவிதம் என் சமூகப்பார்வையைச் செதுக்கியது என்றும், என் சிறையுலக அனுபவங்கள் என்னுடைய படைப்பை வழிநடத்தின என ஒரு அரசியல்வாதி(?)யும் சொல்லும்போது மெய்சிலிர்க்கும் நாம் என் அறிவியல் தர்க்க பயிற்சி பாத்திரங்களின் முரண்பாடுகளை ஆராய்ந்து வடிவமைக்க உதவியது என்று சொன்னால் புருவத்தை உயர்த்த தயாராக இருக்கின்றோம். முடியாட்சி வாழ்விருந்தும், புராணங்களிலிருந்தும், படிமங்களைத் தருவித்த தமிழிலக்கியம், நாம் வாழும் காலத்தின் முத்திரையான அறிவியலிருந்து படிமங்களைப் பெற முயலாதது வியப்பாக உள்ளது. இடதுகையில் தொலையியக்கியையும் வலதுகையில் செல்பேசியையும் சுமந்துகொண்டு உலவும் இன்றைய சமூகத்திற்கு அறிவியலுடன் ஆழ்மனத் தொடர்பில்லை, அதை ஊடகமாகவும், படிமமாகவும் கொண்டு படைக்கப்படுவது இலக்கிய நிலைக்கு உயரமுடியாது என விலக்கும் போக்குதான் காணப்படுகின்றது.

இந்த அறியாமையின் இன்னொரு முகம், அறிவியலையும் அறிவியலாளர்களையும் தீய சக்திகளாக எடை நோக்குவது. அறிவியலில் அடிப்படை நோக்கம் ஒருபொழுதும் அழிவாக இருக்கமுடியாது. உண்மையான அறிவியலின் ஒரே நோக்கம் மெய்காணல். இன்றைக்கு நாம் அறிந்த வழிகளில் மாயத்திலிருந்து உண்மையைக் கண்டறியும் கருவிகளில் அறிவியல் முதலிடம் பெறுகின்றது.

அறிவியல் வழி என்பது என்ன?

சுருக்கமாகச் சொல்லப்போனால் அறிவியல் வழி என்பது

  1. பிரபஞ்சத்தின் ஒரு கூறினை உற்று நோக்கல்.
  2. அதைப்பற்றி ஒரு தற்காலிக விளக்கத்தை உருவாக்கல். இதற்க்குக் கற்பிதம் எனப்பெயர்
  3. அந்தக் கற்பிதத்தைக் கொண்டு பிரபஞ்சத்தின் வேறொன்றை அனுமானித்தல்
  4. அந்த அனுமானத்தை ஆய்வுகளைக் கொண்டு சோதித்தல் (அல்லது/மற்றும்) மீள்காணல். அதன் முடிவுகளுக்கொப்ப கற்பிதத்தை மாற்றியமைத்தல்
  5. அனுமானம் - ஆய்வுகளைத் திரும்பத் திரும்பச் செய்து கற்பிதத்தை சுத்திகரித்துத் திறமான கோட்பாடாக்கல்.

அவ்வாறான கோட்பாடு ஒரு குறிப்பிட்ட (அறிவியல்) விதியாக வடிவெடுக்கிறது. அத்தகைய விதிகள் ஒரு ஒருங்கமைச் சட்டகத்தை நமக்குத் தருகின்றன. அந்தச் சட்டகத்தின் வழியே தொடர்பான பிற அனுமானங்களை உருவாக்கவும், சோதனைகளை நிகழ்த்தி அவற்றின் அடிப்படை வழிகளைத் தெளியவும் முடிகின்றது.

இந்த இடத்தில் அறிவியல் வழி குறித்துப் பொதுமைப் படுத்தி அதனை தத்துவார்த்தப் பாதைகளில் விவாதிக்க முடியும். வெறும் வார்த்தைகளிலான தர்க்கங்களில் எனக்குப் பொதுவில் நம்பிக்கைக் குறைவு. எந்த ஒரு அறிவியலாளனும் கோட்பாடுகளை உதாரணங்கள் கொண்டு விளக்கவும் விவாதிக்கவும் முற்படுவான். எனவே அறிவியல் வழி என்ன என்பதை ஒரு எளிதான உதாரணத்தைக் கொண்டு விளக்க முயல்கிறேன்.

விதியின் தோற்றம்

பல நூறாண்டுகளாக மனிதன் வானத்தை உற்று நோக்கி வியந்திருக்கிறான். கோள்கள் பலவும் பூமியைப் போலவே சூரியனைச் சுற்றி வருவதை இரவில் வானத்தைப் பார்த்தே அறிந்திருக்கிறான். நாளடைவில் அவற்றின் சுற்றி வரும் பாதையைப் பற்றிய வியப்பு உண்டாகத் தொடங்கியது. பிறகு அவை குறிப்பிட்ட நேரத்தில் தோராயமாகக் குறிப்பிட்ட இடத்தில் இருப்பதை உறுதியாக அறிந்திருக்கிறான். டைக்கோ பிராஹே (Tycho Brahe) எனும் டேனிஷ் செல்வந்தர் ஒருவருக்கு தினமும் இரவில் வானத்தை உற்று நோக்கி, கோள்களின் இருப்பிடங்களைத் துல்லியமாகக் குறித்துவைக்கும் பொறுமை இருந்திருக்கிறது. அவருடைய அந்தக் குறிப்புகள் மிகவும் முக்கியமானவை. கோள்கள் பற்றிய நம்முடைய இன்றைய கருத்துத் தெளிவுக்கு டைக்கோ பிராஹேயால் விதை ஊன்றப்பட்டது.

Kepler
படம் 1 கோள்கள் அணைத்தும் சூரியனை ஒரு வட்டப்பாதையில் சுற்றுவதாகவும், சூரியன் அவ்வட்டத்தின் மையத்தைவிட்டு சற்று விலகி இருப்பதாகவும் முதலில் கருதப்பட்டது. தொடர்ச்சியான சோதனைகளாலும் கணிப்புகளாலும் அப்பாதை நீள்வட்டம் என்றும் சூரியன் அந்த நீள்வட்டத்தின் இரண்டு குவியங்களில் ஒன்றில் இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டது.

அந்தத் தரவுகள் பின்னர் ஜெர்மானியரான யோஹனஸ் கெப்ளர் (Johannes Kepler) எனபவர் கைக்குக் கிடைத்தன. அவர் கோள்களின் பாதைகளைத் துல்லியமாக வரைபடமாக்கினார். உடனடியாக அவரது தீர்மானம் - கோள்கள் அனைத்தும் சூரியனை ஒரு வட்டப்பாதையில் சுற்றிவருகின்றன; சூரியன் அவ்வட்டத்தின் மையத்திலிருந்து சற்று விலகியிருக்கிறது என்பது. இவ்விடத்தில் உற்றுநோக்கலில் இருந்து கற்பிதம் உருவாகின்றது.

பல கோள்களின் தினசரி இருப்பிடங்களும் பொதுவில் மையவிலகு வட்டப்பாதைகளில் பொருந்திவர, செவ்வாயின் பாதையில் மட்டும் பெரும் பிழையிருப்பதைக் கண்டார். முதலில் அவர் பிராஹேயின் தரவுகளில் தவறு இருக்கக்கூடும் எனச் சந்தேகித்தார். பின்னர், பல்வேறு நாட்களில் கண்டறியப்பட்ட செவ்வாயின் பாதைகள் திட்டவட்டமாக வட்டப்பாதையிலிருந்து விலகி வருவதை அறிந்தார். அந்த இடத்தில் தனது கற்பிதத்தில் பிழையிருக்கலாம் எனச் சந்தேகப்படத் தொடங்கினார். தொடர்ச்சியான ஆய்வுகளுக்குப் பிறகு, பாதைகள் வட்டங்கள் அல்லன என்றும் அவை நீள்வட்டங்கள் என்றும் தீர்மானித்தார். அந்த நீள்வட்டத்தின் இரண்டு குவியங்களில் ஒன்றில் சூரியன் இருப்பதையும் உணர்ந்தார். அவருடைய முடிவு கோள்களின் இயக்கம் குறித்த கெப்ளரின் முதலாவது விதி என அறியப்படுகின்றது: “கோள்கள் எல்லாம் சூரியனை ஒரு குவியத்தில் கொண்ட நீள்வட்டப் பாதைகளில் சுழல்கின்றன”. இவ்விதி அன்றுதினம் வரை அறியப்பட்ட அனைத்து கோள்களுக்கும் பொருந்துகின்றன என சரிபார்க்கப்பட்டது.

தெளிவாகத் தெரிந்த விதியின் அடுத்த கட்டம் அதை நீட்டித்தல். கெப்ளரின் அடுத்த கேள்வி - சுற்றும் கோள்களின் திசைவேகம் எப்படியிருக்கிறது என்பது. நீள்வட்டப் பாதையின் எல்லா இடங்களிலும் மாறாத வேகத்தில் செல்கிறதா அல்லது மாறுபடுகிறதா என பிராஹேயின் தரவுகளைக் கொண்டு சோதித்தார். இதன்மூலம் சூரியனையும் கோள்களையும் இணைக்கும் நேர்கோடு சமகால இடைவெளிகளில் ஒரே பரப்பளவைக் கடக்கிறது என்பது தெரியவந்தது. அதாவது குவியத்தின் அருகில் கோள் இருக்கும்போது அது விரைவாகவும், தொலைவிலிருக்கும்போது மெதுவாகவும் செல்லும். இது கெப்ளரின் இரண்டாவது விதி “சூரியனையும் கோளையும் இணைக்கும் நேர்கோடு சமகால இடைவெளிகளில் சம பரப்புகளைக் கடக்கும்.”

Kepler 2
படம் 2 கோள் ஒன்றையும் சூரியனையும் இணைக்கும் நேர்க்கோடு சமகால இடைவெளிகளில் சமபரப்பைக் கடக்கும் என்பது கெப்ளரின் இரண்டாம் விதி. கெப்ளரின் இரண்டாம் விதிப்படி கோள்கள் சூரியனுக்கு அருகில் இருக்கும்பொழுது விரைவாகவும் தொலைவில் இருக்கும் பொழுது மெதுவாகவும் சுழல்கின்றன.

இதுதான் திறம் மிக்க அறிவியல் முறை - முதலாவது விதி பிராஹேயின் தரவுகளை முற்றிலுமாகப் பயன்படுத்தி கோள்களின் பாதை நீள்வட்டம் எனத் தீர்மானிக்கப் பயன்பட்டது. இந்த முதலாவது விதி இல்லை என்றால் இரண்டாவது விதி இல்லை. அதாவது முதலாவது விதியின் தர்க்கபூர்வ நீட்டிப்பு இரண்டாம் விதி. இந்த இரண்டு விதிகளும் எல்லா கோள்களுக்கும், எல்லா காலங்களிலும் பொருந்தும். இந்தச் சட்டகத்தின் அடிப்படையில் கெப்ளர் சில ஆண்டுகள் கழித்து அவருடைய மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தார் - இது, குறித்த நேரத்தில் இருவேறு கோள்களுக்கு இடையேயான தொலைவை அளக்கப் பயன்படுகின்றது. இந்த மூன்று விதிகளையும் தொகுத்தால், சூரியன்-கோள் இடையேயான தொடர்பு முதலிரண்டு விதிகளாலும் கோள்-கோள் இடையேயான தொலைவு மூன்றாம் விதியாலும் தரப்படுகின்றது. மூன்றாம் விதியைக்கொண்டு நிர்ணயிக்கப்படும் ஒரு கோளின் இருப்பிடம், இரண்டாம் விதிக்கு ஏற்றபடி சூரியனிடமிருந்து அமையவேண்டிய தொலைவில் சராசரியாக இருப்பது அவசியமாகிறது. பலராலும் உலகின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இந்த உண்மைகளை உறுதிப்படுத்தியுள்ளன. தொடர்ந்து வரும் நூற்றாண்டுகளில் மனிதன் கெப்ளர் விதிகளின்மீது ஒரு மாபெரும் கோபுரத்தையே நிர்மாணித்திருக்கிறான். அவனுடைய கணிப்புகளுக்கு ஏற்பச் செலுத்தப்படும் விண்கலங்கள் சரியான நேரத்தில் கோள்களைச் சென்றடைகின்றன. இது போன்ற சோதனை முடிவுகளால் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய பிராஹேயின் தரவுகளும், அதைக் கொண்டு உருவாக்கப்படா கெப்ளரின் விதிகளும் பொதுமை உண்மைகளாக உறுதிப்படுகின்றன.

இதைப் போன்ற அறிவியல் முறையின் முக்கியமான தனித்துவமும் மகத்துவமும் எவை என்றால், அவை எந்த ஒரு தனிப்பட்ட அறிவியலாளரையும் சார்ந்தவை அல்ல. பிராஹேயின் தரவுகளை பொறுமையும் திறமையும் உள்ள யாராலும் சேர்த்திருக்க முடியும். அந்த முடிவுகள் கெப்ளரைத் தவிற வேறு யாராலும் விதிப்படுத்தப்பட்டிருக்க முடியும். தான் முதலில் தீர்மானித்திருந்த வட்டப்பாதை மீது கெப்ளர் தனிப்பட்ட பிணைப்பு கொண்டிருந்தார் என்றால் அவரால் எளிதாக பிராஹேயின் தரவுகள் துல்லியமானவை இல்லை என்று ஒதுக்கியிருக்க முடியும். என்றாலும் காய்தல் உவத்தல் இன்றி அவரால் அவருடைய கற்பிதத்தையே கேள்விக்கு உள்ளாக்க முடிந்தது - முடிவில் அது இன்னும் இரண்டு விதிகளுக்கும் அடிப்படையானது. காலத்திற்கும் கெப்ளருக்கும் (பிராஹேக்கும்) விண்ணியல் ஆய்வில் தனியிடம் உருவானது. அவருடைய வட்டப்பாதை கருத்தை அவர் பிடிவாதமாக முன்னிருத்தியிந்தால் சில நாட்களுக்குள் இன்னொருவரால் அது பொய்ப்பிக்கப்பட்டுப் ஒதுக்கப்பட்டிருக்கும். இதுதான் அறிவியல் வழியின் மகத்துவம் - அறிவியலில் உண்மையைத் தவிர வேறெதற்கும் இடம் இல்லை.

அறிவியல் உண்மை

இந்த் இடத்தில் அறிவியல் உண்மை (Scientific Truth), அறிவியல் கொள்கை (Scientific principle) மற்றும் கற்பிதம் (Hypothesis) இவற்றுக்கு இடையேயான வித்தியாசங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். சூரியன் கிழக்கில் தோன்றுகிறது என்பது அறிவியல் ரீதியான நோக்கல் (Scientific Observation). அறிவியல் நோக்கம் இல்லாதவனுக்கு சூரியன் உதிப்பதும் மறைவதும் நிகழ்வுகளே கிடையாது. தினமும் சூரியனைப் பார்த்தாலும் அவன் எந்தத் திசையில் தோன்றுகிறது என்று உற்றுநோக்கித் தீர்மானிக்க முயல்வதில்லை. மனிதர்களில் இந்த அளவுக்குக்கூட ஆர்வமில்லாதவர்கள் மிகவும் குறைவு. எனவேதான் அறிவியல் நோக்கு ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உணர்வு என்கிறோம்.

சூரியன் கிழக்கில் தோன்றுவதில்லை; அது பூமி தன்னைத் தானே சுழல்வதால் ஏற்படும் தோற்றம் என அறிந்துகொள்வது அறிவியல் உண்மை . கற்பிதம் என்பது அறிவியலாளர்களுக்கு தெளிவு கிடைக்கும்வரைத் தேவைப்படும் தற்காலிக ஊன்றுகோல். கற்பிதங்கள் அறிவியலில் விரைவிலும் அடிக்கடியும் தோன்றலாம். எந்த ஒரு சோதனை முடிவையும், நோக்கையும் தெளிந்துகொள்ள அவர்கள் உடனடியாக ஒரு கற்பிதத்தை உருவாக்கிக் கொள்வார்கள். பிறகு அதன் அடிப்படையில் பிற சோதனைகளையோ (Experiments) (வானியல் துறையில் நோக்குகளையோ) மேற்கொள்வார்கள். அவற்றின் அடிப்படையில் கற்பிதங்கள் மாற்றி அமைக்கப்படும். பின்னர் திறமான பல சோதனைகளைக் கடந்து, ஒரு தெளிவான அறிவியல் கொள்கை (Scientific Theory) உருவாகும். அறிவியல் கொள்கையைப் பொதுவில் குறியீட்டுச் சட்டகம் (Symbolic Framework) எனக்கூறலாம். அது சமகாலத்தின் ஆய்வு முடிவுகளையும், நோக்குகளையும் திறமாக விளக்கக்கும் வல்லமை கொண்டது. மேலும் அதன் அடிப்படையில் புதிய அனுமானங்களையும் (Assumptions) அளிக்க வல்லது. பொதுவில் தேர்ந்த அறிவியலாளர்கள், கற்பிதங்களின் அடிப்படையில் அனுமாங்களை முன்மொழிவதில்லை. அவர்களது உள்ளுணர்வு கற்பிதங்களை ஏற்படுத்திக்கொண்டாலும், அயராத விழிப்புணர்வில் அவர்கள் அவற்றைச் சந்தேகக் கண்ணோட்டத்துடனே அணுகுவார்கள்.

உறுதியாகத் தெளியப்பட்ட கொள்கைகளை மறுதலிக்க (refute) முற்படும்போது அறிவியாலாளர்களின் வேலை இரட்டிக்கிறது. முன்மொழியப்படும் புதிய (அல்லது நீட்டிக்கப்பட்ட) கொள்கை, ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கையின் அடிப்படியில் விளக்கப்பட்ட அனைத்து சோதனை முடிவுகளையும் அதே அளவு துல்லியமாகவோ அல்லது அதிதுல்லியமாகவோ விளக்கியாக வேண்டும். அதன் மேலும், பழைய கொள்கையால் விளக்க முடியாத சோதனைகள் சிலவற்றையும் விளக்கியாக வேண்டும். பலநூற்றாண்டுகளாக ஐசக் நியூட்டனின் ஈர்ப்பு விதி ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மேற்கொள்ளப்பட்ட சில சோதனைகளின் முடிவுகளை நியூட்டனின் விதிகொண்டு துல்லியமாக விளக்க முடிவதில்லை. பின்னர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனால் முன்மொழியப்பட்ட கொள்கைகள் அவற்றைத் துல்லியமாக விளக்கின.

புதிய கொள்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும்போது அறிவியலாளர்கள் பழைய கொள்கைகளை பொய் என முற்றாக ஒதுக்குவதில்லை. மாறாக பழைய கொள்கைளின் விச்சு குறுகியது என உணர்கிறார்கள். நியூட்டனின் விதி பொய்ப்பித்துப் போய்விடவில்லை; அதன் துல்லியம் குறைந்தது. நியூட்டனிலிருந்து ஐன்ஸ்டைனுக்குச் செல்லும்பொழுது ஈர்ப்பு சக்திக்கும் மேலாக காலம்-வெளி குறித்த நம்முடைய அறிதல் மேம்பட்டது. இவ்வாறாக அறிவியலாளர்கள் தமது வழித்தோன்றல்களுக்கு ஏறிநின்று உயரத் தமது தோள்களை உவகையுடன் அளிக்கிறார்கள். இன்றைக்கு அதிதுல்லியமாக இருக்கும் ஐன்ஸ்டைன் விதிகளில் மெய்சிலிர்த்துபோய் அறிவியலாளர்கள் மரத்துப் போய்விடுவதில்லை. ஐன்ஸ்டைனின் விதிகளின் எல்லைகளைச் சோதிப்பது அவர்களின் முக்கிய கடைமையாகின்றது. பெருமிதத்தோடு எல்லை கடக்கையில், நன்றியுணர்வோடு ஐன்ஸ்டைனையும் நியூட்டனையும் அவர்கள் நினைவுபடுத்திக் கொள்கிறார்கள்.

உண்மையின் நிலையாமை?

நாள்தேறும் பழையன கழியவும் புதியன புகவும் அறிவியல் உண்மைகள் நிலையற்றுப் போகின்றனவா? பொய்த்துப் போகின்றனவா? இல்லை. அறிவியலில் உண்மை என அறியப்படுவது ‘அக்காலத்தில்’ நமக்குத் தெரிந்த சோதனை முடிவுகள் அனைத்தையும் தெளிவுபடுத்துவது. 19-ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்ட இருப்புப்பாதைகள் இன்றைக்கும் பயனில் இருக்கின்றன. அந்தக் காலங்களில் குவாண்டம் இயக்கவியல் விதிகள் நமக்குத் தெரியாது. அன்றைய அறிதலின் அடிப்படையில் அவர்களால் இருப்புப் பாதைகளைத்தான் படைக்க முடிந்தது. இன்றைய குவாண்டம் இயற்பியல் விதிகள் நமக்கு அதிவேகக் கணினிகளையும் இணையத்தையும் உருவாக்கும் திறனை அளித்திருக்கின்றன. எனவே சென்ற நூற்றாண்டில் அதி சக்திவாய்ந்த கோட்பாடுகளாகக் கருதப்பட்ட செவ்வியல் இயக்கவிதிகள் இன்று நீர்த்துப் போய்விட்டன. நீர்த்துப் போனாலும் இன்றைய இருப்புப் பாதைகளை வடிவமைக்க செவ்வியல் இயக்கவிதிகளே போதுமானவை. அறிவியலில் உண்மைகள் ஒருக்காலும் பொய்த்துப் போவதில்லை, மாறாக உன்மையின் திறம் காலந்தோறும் உயர்ந்து வருகின்றது. இது அறிவியல் மெய்காணல் வழியின் அற்புதமான சக்தி.

சரியாகச் சொல்லப்போனால், அறிவியல் வழிமுறைகள் முற்றறுதி உண்மையை (Absolute Truth) நமக்குக் காட்டுவதில்லை; அப்படிக் காட்டுவதாகவும் பாசாங்கு செய்வதில்லை. அறிவியல் பாதைகள் உண்மையின் தொடுகைக்கே நம்மை இட்டுச் செல்கின்றன. முற்றறுதி உண்மை அறிவியலின் எல்லைக்குள் கிடையாது. அறிவியலாளர்களின் முயற்சிகள் அவற்றைத் தேடியல்ல. அவர்களது ஒரே நோக்கம் இயற்கையின் ஒரு கூறினை முற்றாக விளங்கிக் கொள்ள முயற்சிப்பதுதான். விண்டவர் கண்டிலர் என்று வேறெங்கோ கேட்டது நினைவிற்கு வருகிறதல்லவா?

ஆக்கமின் கத்தி

இதுவரை நாம் விளக்கியதுபோல அறிவியல் கோட்பாடுகளின் தீர்க்கங்கள் அமைதியான அழகான ஒழுங்கமைவில் நீட்டிக்கப்படுவதில்லை. மாறாக அறிவியல் உலகு குழப்பங்களும் தர்க்கங்களும் நிறைந்தது. புதிய கோட்பாடுகள் தோன்றும்போது பொதுவில் ஒன்றுக்கு மேற்பட்ட மாதிரிகள் முன்வைக்கப்படுகின்றன. பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றிடையே தீர்மானமான ஒன்று நிச்சயிக்கப்படுகின்றது. அவ்வாறு விதிகள் தீர்மானிக்கப்படுகையில் அறிவியலாளர் விதிகள் தேவைக்கு அதிகமில்லாத அளவிற்குச் சுருக்கப்படுகின்றன. அந்நேரங்களில் ஆக்கமின் கத்தி (Occam’s razor) எனும் தருக்க முறை பயன்படுத்தப்படுகின்றது. “தேவைக்கு அதிகமாக உருப்படிகளைப் பெருக்கக் கூடாது” என்பதே அது.

உதாரணமாக கெப்ளரின் விதியையே எடுத்துக்கொண்டால்:

‘கோள்கள் சூரியனைச் சுற்றி ஒரு நீள்வட்டப் பாதையில் இயங்குகின்றன, ஏனென்றால் கோள் மற்றும் சூரியன் இடையேனான சக்தி அவற்றுக்கு இடையேயான தொலைவை நிர்ணயிக்கிறது.’ அல்லது,

‘கோள்கள் சூரியனைச் சுற்றி ஒரு நீள்வட்டப் பாதையில் இயங்குகின்றன, ஏனென்றால் கோள் மற்றும் சூரியன் இடையேனான சக்தி அவற்றுக்கு இடையேயான தொலைவை நிர்ணயிக்கிறது. இந்தச் சக்தி அதிதிறன் கொண்ட வேற்றுலகவாசிகளால் தோற்றுவிக்கப்படுகின்றது.’

என இரண்டு வகையாக நெறிப்படுத்த முற்படலாம். இந்த இடத்தில் ஆக்ஹாமின் கத்தி செயல்பட்டு அளவுக்கு அதிகமான இரண்டாவது வகையை மட்டுப்படுத்தும். ஏனென்றால், வேற்றுலகவாசிகளைப் பற்றிய சித்தாந்தம் இங்கே தேவை இல்லாதது. அதை ஒப்புக்கொண்டால் அந்த வேற்றுலகவாசிகளை அடையாளம் காணுவதும், அவர்களது தன்மை பற்றி அறிவதும், அவர்கள் செலுத்தும் சக்தியின் அளவைப் மற்ற இயற்பியல் விதிகளைக் கொண்டு அளத்தலும், அவர்கள் சக்தி செலுத்தும் பிற இடங்களைக் காண வேண்டியதும் அறிவியலாளர்களின் கடமைகள் ஆகின்றன. மாறாக முதலாம் வகையான விதிகளையே அவர்கள் பயன்படுத்துவார்கள். அந்த விதி சக்தியின் தோற்றுவாயைப் பற்றிக் குறிப்பிடாததைக் கவனிக்கவும். அது அவ்விதியின் குறைபாடாக உணரப்பட்டு ஒத்துக் கொள்ளப்படும். அப்படி ஒத்துக்கொள்ளப்பட்ட விதியைக் கொண்டு பிற இயற்கை நிகழ்வுகள் ஆராயப்படும்; அவை இந்த விதிக்கேற்றபடி சரியாக அளக்கப்பட்டால் விதியின் உண்மை நிச்சயிக்கப்படும். சக்தியின் தோற்றுவாயை அறிய மேற்கொண்டு சோதனைகள் நடத்தப்படும்; அச்சோதனைகளில் வேற்றுலகவாசிகளின் இருப்பு தேவை என்றால் அவற்றுக்கான கற்பிதங்கள் உருவாக்கப்பட்டு மாதிரிகள் முன் வைக்கப்படும். அதுவரை தேவைக்கு அதிகமாக உருப்படிகள் பெருக்கப்பட மாட்டாது.

ஆக்ஹாமின் கத்தி அறிவியலாளர்களுக்கு நடைமுறைக்கேற்ற ஒரு கட்டுக்கோப்பை வழங்குகிறது. அவர்களது கவனம் உண்மையின்று சிதறிப்போகாத வண்ணம் அது தடுக்கிறது. கிட்டத்தட்ட சாலையின் ஒழுங்கையில் வாகனம் செல்வதைப்போல அறிவியலாளர்களின் கவனம் நெறிப்படுகின்றது. அவர்கள் சக்தி விரயமாவது தடுக்கப்படுகின்றது.

இந்த இடத்தில் நன்னூல் சூத்திரமான

சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்

நவின்றோர்க் கினிமை, நன்மொழி புணர்தல்

ஆகுதல் நூலிற் கழகெனும் பத்தே

என்ற நூல் அழகிற்கான இலக்கணம் பொருந்துவதைப் பார்க்கலாம். விளங்க வைக்கப் போதுமான அளவிற்கு மாத்திரமே சுருங்கச் சொல்லுவது இலக்கியத்திலும் தேவையானதே.

அறிவியலில் மோசடி

அறிவியலாளர்களைக் காய்தல் உவத்தல் இல்லாத அவதார மனிதர்களாக சித்தரிக்க நான் முற்படவில்லை. அறிவியலாளர்களும் மனிதர்களே, அவர்களுக்கு விருப்பு வெறுப்பு உண்டு என்பதை மறுக்கமுடியாது. உண்மையில் சொல்லப்போனால் பல அறிவியல் விவாதங்களில் காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் தலைப்படுவதைக் காணலாம். உதாரணமாக, மாபெரும் இயற்பியலாளராகக் கருதப்படும் ஐசக் நியூட்டன் நுண்கணிதத்திற்குச் (calculus) முழுச்சொந்தம் கொண்டாடியதும், நுண்கணித முறைகளைத் தன்னிச்சையாகக் கண்டறிந்ததாகக் கருதப்படும் லெப்னிட்ஸின் மீது காழ்ப்புணர்ச்சி காட்டியதும் வரலாற்று உண்மைகள். எல்லாவற்றுக்கும் மேலாக லெப்னிட்ஸ் காலமானபோது எழுதிய இரங்கல் செய்தியில், அவரது உயிரைக் குடித்ததில் உவகை கொண்டதாகக் கூறியதும் வியப்பைத் தரும். தனிப்பட்ட முறையில் நியூட்டன் - லெப்னிட்ஸ் இவர்களின் ஆளுமைகளைக் குறித்து இன்றளவும் நுண்கணிததைப் பயன்படுத்தும் யாரும் பெரிதும் கவலைப்படுவதில்லை. அவர்கள் நுண்கணிதத்தின் பயனை நன்றாக அறிவார்கள். அதைக் கண்டுபிடித்த - அது நியூட்டனோ, லெப்னிட்ஸோ - மூளையை வியப்பார்கள். சக அறிவியலாளரின் இரங்கல் செய்தியில் நியூட்டன் காட்டிய கொடூரம் அவரை மாபெரும் இயற்பியலாளர் என மதிப்பிடுவதை எந்த வகையிலும் மாற்றவியலாது. மறுபுறத்தில் நியூட்டனின் அறிவியல் கண்டுபிடிப்புகளில் பிழை இருந்தால் - அவர் எவ்வளவு பெரிய அறிவியளாலர் என்றாலும் - ஒருவரும் அவற்றை மதிக்கமாட்டார்கள்.

அறிவியலாளர்கள் சோதனைகளின் முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிச் சொல்வதில்லையா? அவர்கள் தேர்ந்தெடுக்கும் மாதிரிகளில் அவர்கள் தேவைக்கேற்ப கவனம் செலுத்துவதில்லையா? சிலர் இதுபோன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி பொதுவில் அறிவியல் குறித்தும் குறிப்பாக தங்களுக்கு வேண்டாத அறிவியல் கூறுகளின் முடிவுகளையும் பயனற்றவை அல்லது பொய்யானவை என்று குற்றம்சாட்டத் தயங்குவதில்லை.

இது சோதனைகளைத் தன்னிச்சையாக இரு நபர்கள் வேறு சூழ்நிலைகளில் நிகழ்த்திச் சரிபார்க்கும் முறையைக் குறைத்து மதிப்பிடுகின்றது. உதாரணமாக, இரண்டு வேதிப் பொருட்கள் வினைநிகழ்த்தி விளையும் முடிவுகள் பலரால் பலவிடங்களிலும் சரிபார்க்கப்படும். அந்த வேதிவினையின் முடிவு இதுதான் என்று தீர்க்கமாக ஒத்துக்கொள்ளப்படும். இது மிகச்சில போலி அறிவியலாளர்களின் முடிவுகள் பாரபட்சமின்றி நிராகரிக்கப்படுவதை உறுதிப்படுத்தும். அறிவியல் நெறிமுறையில் சில தனி நபர்கள் தவறு செய்யலாம், ஆனால் மெய்காணலில் அறிவியல் வழி உண்மையானது.

இதுபோன்ற மோசடிகள் பணப்புழக்கம் அதிகமான மருத்துவத்துறையில் அதிகம் காணப்படுகின்றன. இன்றைக்கு நலம் விளைவிப்பதாகக் கூறப்படும் உணவுப் பொருட்களும் மருந்துகளும் நாளை அபாயகரமானவை என எச்சரிக்கப்படுகின்றன. என்றாலும், பொதுவில் மருத்துவத் துறையின் வளர்ச்சியும் நோய்தடுப்பு/தணிப்பு முறைகளும், தனிநபர் பேராசைகளையும் தாண்டி அறிவியல் வளரமுடியும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள். புகையிலை நிறுவனங்களின் மானியம் பெற்று ஆராய்ச்சி நடத்தும் சிலர் புகையிலையின் கொடுமைகளை குறைத்து மதிப்பிட்டாலும், பொதுவில் புகைபிடித்தலின் தவறுகள் மானிடகுலத்தால் உனரப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படைக் காரணம் சுயமாகப் பிழை திருத்திக்கொள்ளும் அறிவியல் வழிகள்தான்.

சேனமிட்ட குதிரைகள்

புதிய கோட்பாடுகள் உருவாகும்பொழுது பழைய சோதனை முடிவுகளை விளக்க வேண்டிய கட்டாயம் அவற்றுக்கு இருப்பதாகப் பார்த்தோம். இது முழுவதும் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் (breakthrough research) மாறுபட்ட சித்தாந்தங்கள் (alternate theories) உருவாவதற்கும் தடைவிதிக்கும் என்று தோன்றலாம். இதன்மூலம் அறிவியலாளர்கள் அவர்கள் எதைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றார்களோ அதையே அவர்கள் தேடியலைகிறார்கள், சற்றே மாறுபட்ட கருத்துக்களைச் சோதனைசெய்யத் தயங்குகிறார்கள் எனக் குற்றம் சாட்டப்படுகின்றார்கள். கடிவாளமிட்ட குதிரைகளாக நேர்பார்வையுடன் விரைவதாகத் தோற்றமளிக்கிறார்கள்,

இந்தக் குற்றச்சாட்டில் பெரிதும் உண்மையிருக்கிறது. தாம் கற்றவற்றைத் தவிர பிறவற்றில் அவர்கள் கவனம் செலுத்துவதில்லை. தம்முடைய சந்தேகங்களுக்கு விடை தேடி அவர்கள் மேற்கொள்ளும் சோதனைகளில் பொதிந்திருக்கும் புதிய உண்மைகளை அவர்கள் பல நேரங்களில் அடையாளம் காணத் தவறவிடுகிறார்கள். ஒருவகையில் இது அவர்கள் கவனம் சிதறிப் போகாதபடி தடுத்து நிறுத்துகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளைப் பிறர் மீதும் சுமத்த முடியும். உதாரணமாக, கிரிக்கெட் விளையாட்டில் மட்டையடியில் சிறந்து விளங்கும் ஒருவர், பந்துவீச்சில் தேற முயல்வதில்லை. ஆனால் முற்றிலும் புதிய அறிவியல் உண்மைகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு நோபல் பரிசு போன்ற மதிப்புகளும், அவர்களது அறிவியல் கண்டுபிடிப்புகளால் விளையக்கூடிய வணிக ஆதாயங்களும் பெரிய ஊக்குவிப்புகளாக இருக்கின்றன. என்றாலும் பொதுவில் வணிக நோக்கங்களுக்காக அடிப்படை அறிவியல் தேடல்களில் ஈடுபடுபவர்கள் அதிகம் கிடையாது. சொல்லப்போனால் வேறெந்தத் துறையையும்விட வணிக ஆதாயங்கள் அறிவியலில் மிகவும் குறைவு. இயற்கையின் புதிரில் இன்னொரு துண்டை இணைப்பதில் இருக்கும் மன நிறைவும், சக அறிஞர்களின் பாராட்டுமே அவர்களது மிகப்பெரிய ஊக்கிகள்.

அறிவியலும் நீதிநெறிகளும்.

காலம் காலமாக விவாதிக்கப்பட்டு வரும் விடயம் - அறிவியலும் இறையுணர்வும் ஒன்றுக்கொன்று எதிர் துருவங்களா? இக்கேள்விக்கு விடைகாண்பது எளிதில்லை. சமயங்களில் நம்பிக்கையில்லாவதர்களில் ஒரு குறிப்பிடத் தகுந்த வீதத்தினர் அறிவியலில் முழு நம்பிக்கையுள்ளவர்கள் என்னும் அதே வேளையில் அறிவியலில் சிறந்தவர்களில் கனிசமான அளவினர் இறைநம்பிக்கை கொண்டவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் அறிவியல் வழிகளில் முழு நம்பிக்கை உள்ள எவரும் சமயம்/சடங்குகளில் அதிருப்தி கொண்டவர்கள் எனப் பொதுமைபடுத்தலாம். (சமயம்/சடங்குகள் இறைநம்பிக்கையிலிருந்து வேறுபட்டவை என்பதை நினைவில் கொள்ளவும்). சமயங்களின் ஆதாரம் நம்பிக்கை; அறிவியலில் ஆதாரம் சந்தேகிக்கும் திறன். அந்தச் சந்தேகிக்கும் திறன் அவர்களை சமய குருக்களின் பேரிலும் சடங்குகளின் ஆதாரங்கள் பேரிலும் நம்பிக்கையற்றவர்களாக ஆக்குகின்றன, கேள்விகளை எழுப்ப வைக்கின்றன.

இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபெய்ன்மான் (Richard Feynman) கூறியதுபோல சமயங்களின் மூன்று கூறுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; வேதாந்தம், நீதிநெறி மற்றும் ஊக்கம். இவற்றில் வேதாந்தத்தின் மீதே அறிவியல் பெரிதும் சந்தேகங்களை எழுப்புகிறது. காரண-காரியங்களை தெளிவுபடுத்த இயலாமை வேதாந்தத்தின் பெரிய குறைபாடாக அறிவியலாளர்களுக்குத் தென்படுகிறது. வேதாந்தங்கள் முற்றிலுமாக நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்பவர்களுக்கு ஊக்கம் தரலாம். ஆறுதலையோ, உற்சாகத்தையோ பெற முழுதுமாக நம்பவேண்டியது கட்டாயமாகிறது. வரலாற்றில் பலமுறை அறிவியலின் கண்டுபிடிப்புகளுக்கு ஏற்றபடி சமயவாதிகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. உதாரணமாக, கிறித்துவர்கள் உலகம் தட்டையானது எனப் பிடிவாதம் பிடித்தனர், பின்னர் ஐயத்திற்கிடமின்றி தெளிவானபின் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. பரிணாமக் கொள்கைகளிலும் அவர்களது நம்பிக்கை பொய்த்துப் போனது. நம்பிக்கைகள் சரியச்சரிய தேவாலயங்களின் ஆறுதலளிக்கும் திறன் குறையத் தொடங்கியது.

இந்த நிலையில் கீழைநாடுகளின் சமயங்கள் சற்று மாறுபடுகின்றன; குறிப்பாக இந்து, பௌத்த மதங்கள். பொதுவில் எதையும் சந்தேகத்திற்கிடமின்றி அறுதிப்படுத்தாத வகையில் அவற்றுக்கு அறிவியலுடன் பெரிதும் குழப்பங்கள் இல்லை. தினசரி வாழ்வில் நம்பிக்கைகளின் அடிப்படையில் பரிந்துரைகளை அள்ளி வீசாததால் அவற்றுக்கு மீசையில் மண் ஒட்டும் சாத்தியங்கள் குறைகின்றன.

சமயத்தின் மூன்றாவது கூறான நீதிநெறிதான் மனிதனின் வாழ்விற்குப் பெரிதும் அவசியமாக இருக்கிறது. நெறிப்படாத சமூகம் முன்னேறுவதில்லை. அறிவியல் வழிமுறைகளில் நீதிநெறிகளுக்கு இடமில்லை. அது முழுமையான அறிவுத் தேடல், அந்தவகையில் அது தீர்ப்புகளை வழங்குவதில்லை. என்றாலும் நெறிமுறைகளோடு ஒத்துப்போவதில் அறிவியலாளர்களுக்கு எந்தவித சிரமமும் இருப்பதில்லை. அவர்கள் வாழும் சமூகங்களில் எளிதில் இயைந்து வாழ்கிறார்கள். பிறழும் நெறிமுறைகளால் உண்டாகும் விபரீதங்களை எளிதில் அடையாளும் காணும் அவர்களுக்கு, தர்மநீதிகளின் மீது சோதனை நடத்திப்பார்க்க அவசியமில்லாமல் போகிறது. இவ்விடத்தில் அதிகம் கேள்விகளுக்கு இடமின்றி அறிவியல் வழிகளூம் சமயநெறிகளும் ஒத்துப்போகின்றன. சொல்லப்போனால் முற்றான அசைக்க முடியாத சமய நம்பிக்கைகளால் வரலாற்றில் பலமுறை தீயவை நடந்தேறியிருப்பதைக் காணலாம். மாறாக உண்மை நிலையற்றது, அது இன்றளவிலான நம் புரிதலின் அடிப்படையிலானது என்று எதையும் சந்தேகத்துடனும் ஆழம்காணும் நோக்குடனும் அணுகும் அறிவியலாளர்களுக்கு பலநேரங்களில் உலகப் பொதுநெறிகளுடன் (சமயநெறிகள் அல்ல எனபதைக் கவனிக்கவும்) ஒத்துப்போவதில் பிரச்சனை இருப்பதில்லை.

அறிவியலும் அழகியலும்

பிரபஞ்சத்துடன் இயைந்துபோகும் அறிவியலாளனுக்கு அதன் விந்தைகள் தென்படும்போது வியப்பும் ஆசுவாசமும் மேலோங்குகிறது. ஆழம் தேடியலையும் அறிவியல் மனம் தனக்குத் தோன்றும் உண்மையைக் கண்டு மெய்சிலிர்த்துப் போகிறது. அந்தத் தருணத்தில் ஏற்படும் பரவசத்தையே தனது இறையுணர்வு என மாபெரும் அறிவியலாளரான ஐன்ஸ்டைன் வருணித்தார். கோள்களின் இயக்கங்களிலும், படிகங்களின் ஒழுங்கமைவிலும், அணுக்களின் அசைவுகளிலும் அந்தப் பரவசத்தையடைய அவர்களால் முடிகின்றது.

அறிவியலைப் பற்றிய இன்னுமொரு குற்றச்சாட்டு அது அழகுணர்வைத் தவிர்க்கிறது என்பது. அறிவியல் அனுபவம் உள்ளவர்கள் யாரும் இந்தக் குற்றச்சாட்டின் ஆழமின்மையை உணர்வார்கள். பூக்களின் வண்ணங்களும் இதழ்களின் ஒருங்கமைவும், பூ நுகரும் வண்டும் யாருக்கும் எளிதில் அழகுணர்வைத் தூண்டும். அறிவியலாளர்களின் தேடல் அவர்களை வேறொரு உலகிற்கு இட்டுச் செல்கிறது. அங்கே பூக்களை அமைக்கும் அணுக்களும் அவற்றின் ஒழுங்கமைவும் தெரிகின்றது. ஒன்றின் அழிவிலிருந்து உருவாகும் அணுத்துகள் சிலவற்றில் ஒன்று தான் சிதைத்துப் பிறந்த துகளை மறு உருவாக்கும் வகை வியப்பை கவர்ந்திழுக்கிறது; ஓயாத தோற்றமும், சிதைவும் மாற்றமும், இயக்கமும் அவர்களுக்கு சிலிர்ப்பைத் தருகின்றன. அணுக்களின் உலகில் பிரபஞ்சத்தின் பிரதிபலிப்பைக் காணமுடிகிறது. அணுக்கருவை பிளப்பதால் வெளிப்படும் அளப்பறிய ஆற்றல் வசப்படுகிறது. அணுக்களின் சேர்க்கையால் விளையும் நறுமணமும் அது தும்பியைக் கவரும் காரணமும் தெரியவருகிறது. நறுமணம் வீசித் தும்பியை அழைக்கும் பூவின் மரபியல் சூக்குமம் புலப்படுகிறது. கொங்குதேரும் தும்பியாய் அறிவியலார் மெய்காண அலைகிறார்கள்; காமம் செப்பாது கண்டது மொழிதல் அவரகள் கடமையாகிறது.


காலம் சஞ்சிகை ஒழுங்கமைத்த “காமம் செப்பாது கண்டது மொழிமோ” கருத்தரங்களில் ஆற்றிய உரை, 30 மே 2002.

இந்த உரை பிறகு என்னுடைய “குவாண்டம் கணினி (யுனைட்டெட் ரைட்டர்ஸ், முதல் பதிப்பு 2003)” புத்தகத்தின் திறப்புக் கட்டுரையாகப் பதிப்பிக்கப்பட்டது.

Photo by FLY:D on Unsplash