காலம் அறிவியல் சிறப்பிதழ்

(கனடாவிலிருந்து வெளிவரும் ‘காலம்’ இலக்கிய சஞ்சிகையின் இருபத்தைந்தாவது இதழ் ‘அறிவியல் சிறப்பிதழ்’ ஆக வெளிவந்தது. இதற்கு நான் சிறப்பாசிரியராக இருந்தேன். இந்த சிறப்பிதழில் வெளியான எனது முகப்புரை)

தமிழ் வர்த்தகப் பேரேடுகளில் அறிவியல் என்பதற்கு எள்ளளவும் இடம் கிடையாது. சொல்லப்போனால் அறிவியல் முறைகளுக்கு முற்றும் எதிராக இயங்குபவை அவை. ‘ஏன்’ என்ற கேள்வியைக் கேட்கவிடாமல் மூளையை மழுங்கச் செய்வதில்தான் அவற்றின் வர்த்தக வெற்றி அடங்கியிருக்கிறது. எனவே முனைந்து மூளைச்சலவையில் அவை தொடர்ந்தும் ஈடுபடுகின்றன. அவ்வப்பொழுது ஒன்றும் அரையுமாக வரும் சமாச்சாரங்கள் தனிமனிதர்களின் நட்சத்திர அந்தஸ்து காரணமாகவே நிகழ்கின்றன. அவையும் பெரும்பாலான நேரங்களில் அந்தத் தனிமனிதர்களின் நூலகப் பரிமாணங்களைப் பறைசாற்றுபவைகளாக இருக்கின்றனவே அல்லாமல் வாசகனுக்கு ஆர்வமூட்டுபவையாக இருப்பதில்லை. இந்த ஒன்றும் அரையும் பெரும்பாலும் நுட்பத்தின் விளைவாய்க் கிடைக்கும் பிரமிப்பூட்டும் கருவிகளைப் பற்றிய வருணணைகளாகத்தான் இருக்கும். மாறாக அடிப்படை அறிவியல் சார்ந்து தமிழில் படிப்பதற்கென்று ஒன்றும் கிடைப்பதில்லை.

Kalam 25
வெகுஜனப் பத்திரிக்கைகளில்தான் இந்த நிலை என்றால் அறிவுப்புலம் சார்ந்து இயங்குபவையாகக் கருதப்படும் சிற்றிதழ்களிலும் அறிவியலுக்குப் பெரும்பாலும் இடமிருப்பதில்லை. இவற்றில் இலக்கியம் கடந்தவற்றுக்கு இடமில்லை என்றில்லை. ஒவ்வொரு மூன்றாவதும் நாடக, ஓவிய, நாட்டார் கலை, சினிமா சிறப்பிதழ்களாகத்தான் சிற்றிதழ்களில் மலர்ந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அறிவியலுக்கு என்னமோ இதுவரை சிறப்பிதழ் என்று எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. ஏழாவது வட்ட அரசியல்வாதி, சூப்பர் ஸ்டார் நடிகர், தொலைகாட்சி சித்தி, நுணி நாக்குப் பின்ன்ணிப் பாடகர், வெட்டியொட்டும் இசையமைப்பாளர், கர்நாடக இசைப் பக்கவாத்தியக்காரர், அச்சுப்பிச்சு துணுக்குத்தோரண நாடகாசிரியர் என்று நட்சத்திரங்கள் மண்டிக்கிடக்கும் உலகில் அறிவியலாளர் என்று ஒருவருடைய பெயரையுமே தெரியாமல் அறிவுஜீவியாக நம்மூரில் வாழ்க்கை நடத்துவது சாத்தியமான காரியம்தான். பிரபலமாக இருக்கும் ஹாலிவுட் நடிகை, ஹிப்-பாப் பாடகர் என்று நுணிவிரலில் தெரிந்துவைத்திருக்கும் நம்மூர் இணைய தலைமுறைக்கு இன்றைக்கு முக்கியமான விஞ்ஞானி யார் என்று தெரியவேண்டிய அவசியமிருப்பதாகத் தெரியவில்லை. உண்மை என்னவென்றால் நடிகையையும் பாடகரையும் தெரிந்துகொள்ள, துய்க்க அறிவியல்/தொழில்நுட்பத்தின் பங்கு அத்தியாவசியமானதாக இருக்கிறது.

கார்கள், கணினிகள், தொலைக்காட்சிகள், செல்பேசிகள், பெருவிளைச்சல் உணவுப்பயிர்கள், நோய்தடுப்பூசிகள் என்று அறிவியலின் படைப்புகள் சுவாசமாக மாறிப்போயிருக்கின்ற இந்தக் காலத்தில் தாம் துய்ப்பனவற்றின் தோற்றுவாய் தெரியாமல் விலங்குகளாக வாழ்வதில் இருக்கும் பெரும் அபாயங்களை யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. நொடிக்கு நூறுமுறை சமூக அக்கறை, சகமனித நேயம் என்று முழங்கும் இலக்கியவாதிகள் ஒரு நிமிடம் நின்று இன்றைக்கு சமூக அக்கறையையும் மனித நேயத்தையும் விரல் சொடுக்கில் மாற்றிவிட்டுப்போகக்கூடிய வல்லமை எல்லாவற்றையும் விட எதற்கு இருக்கிறது என்று சிந்திப்பதாகத் தெரியவில்லை. நாம் பக்கம் பக்கமாக எழுதிப் பாதுகாத்துக்கொண்டிருக்கும் மனித நேயத்தை அரைநொடி அணுகுண்டு சுவடு தெரியாமல் அழித்துவிட்டுப் போனபிறகும் அதன் மகத்துவம் தெரியாமல் நாம் நம் போக்கிலேயே எழுதிக் கிழித்துக்கொண்டிருக்கிறோம். இதுவும் ஒருவகையில் வசதிதான்; வெடித்துப்போன அணுகுண்டைக் கண்டுபிடித்த அறிவியலாளரைப் பற்றி இன்னும் சில நூறுபக்கங்கள் எழுதிக் கிழிக்க முடிகிறதல்லவா? அழிவைச் சொல்லித்தான் அறிவியலின் மகத்துவத்தைத் தெருட்ட வேண்டிய நிலையே அவலமானதாகத்தான் இருக்கிறது.

சமீபகாலமாக சிற்றிதழ்களில் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டுதானிருக்கிறது. அவ்வப்பொழுது சிற்றிதழ்களில் அறிவியல் சார்ந்த கட்டுரைகள் வரத்தொடங்கியிருக்கின்றன. இந்த விஷயத்தில் திண்ணை மின்னிதழின் பங்கு மிக முக்கியமானது. சிறுகதைகள், கவிதைகள், இலக்கிய, அரசியல் கட்டுரைகளூடே அறிவியல் தொழில்நுட்பத்திற்கும் சம இடம் கொடுத்து வாரம் தோறும் கட்டுரைகளை வெளியிடுகிறது திண்ணை. இங்கு அடையாளம் காணப்பட்ட அறிவியல் எழுத்தாளர்கள் இப்பொழுது மெல்ல அச்சு ஊடகங்களில் தென்படத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் இதை முன்னெடுத்துச் செல்லும் முகமாக காலம் இந்த அறிவியல் சிறப்புப் பகுதியை தன் இருபத்தைந்தாவது இதழில் கொண்டுவருகிறது. ஆல்பர் ஐன்ஸ்டைன் என்ற அற்புத விஞ்ஞானி உலகை மாற்றியமைத்த மூன்று முக்கிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி நூறாண்டுகள் ஆகின்றன. உலகம் முழுவதும் பல்வேறு அறிவியல் அமைப்புகள் 2005 ஆம் ஆண்டை “இயற்பியல் ஆண்டு” என்று அறிவித்துக் கொண்டாடுகின்றன. எனவே காலம் அறிவியல் சிறப்பிதழ் மாபெரும் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு அஞ்சலியாகவும், இயற்பியலின் வெற்றிகளைக் கொண்டாடும் முகமாகவும் வெளிவருகிறது.

இந்த இதழில் ஐந்து முக்கிய கட்டுரைகள் வருகின்றன. முதலாவதாக ராமன் ராஜா அற்புத ஆண்டு என்று விளிக்கப்படும் 1905 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைன் வெளியிட்ட மூன்று முக்கிய இயற்பியல் கண்டுபிடிப்புகளையும் அவை உலகை மாற்றியமைத்த விதத்தையும் விளக்குகிறார். ஆங்கிலேயரின் இருநூறாண்டு அடிமைத்தளையிலிருந்து விடுபட்ட இந்தியாவை உலகில் முக்கியமான அறிவியல் சக்தியாக எழுப்பிக் காட்டிய விஞ்ஞானி ஹோமி பாபாவின் வாழ்க்கையையும் இயற்பியல், திட்டமிடல், அறிவியல் மேலாண்மை போன்ற துறைகளில் அவரது அற்புத பங்களிப்புகளையும் ஜெயபாரதன் அடுத்த கட்டுரையில் சொல்லுகிறார். எப்படி அதற்கு முந்தைய நூறாண்டுகளில் கணிதம் வளர்த்தெடுக்கப்பட்டு கருவியாக மாறி சென்ற நூற்றாண்டில் இயற்பியலை முன்னெடுத்துச் சென்றதோ அதேபோல் இப்பொழுது இயற்பியல் கருவியாக மாறி சமகாலச் சாதனை அறிவியலான உயிரியலை முற்செலுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் முனைவர் பத்மா அரவிந்தின் டி.என்.ஏ நுண்தொகுதிச் சில்லுகள் செயல்படும் விதம், அவை இன்றைய உயிர்நுட்பத்தைத் துரிதப்படுத்தும் விதம் இவற்றின் விளக்கமும் முனைவர் சுந்தரவடிவேலில் புரதங்களைப் பிணைக்கும் அடிப்படை சக்திகளைப் பற்றிய விளக்கமும் இயற்பியலின் சமகாலப் பயன்பாடுகளுக்கு உதாரணங்களாக வருகின்றன. காலம் இதழ் அறிவியலைக் கொண்டாடும் இந்த நேரத்தில் ‘காலம்’ என்ற கருத்தாக்கத்தைப் பற்றிய இன்றைய அறிவியல் புரிதல்களை முன்வைக்கிறது முனைவர் வெங்கட்ரமணனின் கட்டுரை.

இந்த அறிவியல் சிறப்பிதழ் பகுதியின் தொகுப்பாசிரியராக இருக்கும் வாய்ப்பைத் தந்த காலம் ஆசிரியர் குழுவுக்கு நான் கடமைப்பட்டவன். கடுமையான உழைப்பு தேவைப்படும் அறிவியல் துறையில் பணியாற்றுவதில் உழைப்புக்குத் தகுந்த பொருளாதார ஊதியம் கிடைப்பது மிகவும் குறைவு. அறிவியலாளர்களை முற்செலுத்தும் சக்தி மெய்காணலில் இருக்கும் ஆர்வம்தான். கூடவே தாம் கண்டவற்றைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வதில் இருக்கும் ஆனந்தம் அளவிட முடியாதது. அந்த வகையில் இந்த இதழுக்குப் பங்களிப்பாற்றிய ஒவ்வொருவரும் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டார்கள். இன்னும் சில நண்பர்கள் தவிர்க்க முடியாத வேலைப்பளுக்களின் காரணமாக வருத்தத்துடன் விலகி நிற்க வேண்டியிருந்தது. இதிலிருக்கும் ஒவ்வொரு கட்டுரையும் வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டி அவர்களை மேலும் வாசிக்கச் செய்தால் காலத்தின் அறிவியல் சிறப்பிதழ் நோக்கம் நிறைவேறியதாகக் கருதுவோம். தமிழில் அறிவியலைத் தருவதற்கு ஆளில்லை என்ற நிலையைப் போக்கி தொடர்ச்சியாக அறிவியலின் அற்புதங்களையும் சாதனைகளையும் எழுதுபவர்களை அடையாளம் காட்டுவதையும் இதன் முக்கிய நோக்கமாகக் கருதுகிறோம். அந்த வகையில் இந்தச் சிறப்பிதழ் ஒரு நல்ல துவக்கமாக அமையும் என்பது எம் நம்பிக்கை.