ஹான்ஸ் அல்ப்ரெஹ்ட் பேத்தா
அஞ்சலி : ஹான்ஸ் அல்ப்ரெஹ்ட் பேத்தா
வரலாறு கண்ட அற்புதமான விஞ்ஞானிகளில் ஒருவரான ஹான்ஸ் பேத்தா மார்ச்சு 6, 2005 அன்று தனது தொன்னூற்றெட்டாவது வயதில் இயற்கை மரணம் எய்தினார். மாபெரும் மேதைகளால் அதிஅற்புத இயற்பியலாளர் என்று புகழப்பட்டவர் ஹான்ஸ் பேத்தா. அவரது கண்டுபிடிப்புகள் சூரியன் மற்றும் விண்மீன்களில் சக்தி உருவாகும் விதம், இரண்டாம் உலகப்போரில் வெடிக்கப்பட்ட அணுகுண்டு, கண்டம் தாவும் ஏவுகணைகள் (Intercontinental Ballistic Missiles) , விண்னோடங்கள் (Space Shuttles) உள்ளிட்ட இந்த நூற்றாண்டின் மிக முக்கியமானவற்றுள் இடம்பெறுகின்றன. விண்மீன்களில் அணுக்கரு வெப்பவிளைவுகளால் (Thermonuclear Reactions) சக்தி தோன்றும் விதத்தை விளக்கியதற்காக 1967ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசைப் பெற்றவர் பேத்தா.
ஹான்ஸ் அல்ப்ரெஹ்ட் பேத்தா (Hans Albrecht Bethe) 1906 ஆம் ஆண்டு இப்பொழுது ஆஸ்திரியாவில் இருக்கும் ஸ்ட்ராஸ்புர்க் (அப்பொழுது அகண்ட ஜெர்மானியப் பேரசின் ஒரு பகுதி) நகரில் பிறந்தார். (தந்தை கிறிஸ்துவர், தாய் யூதர்).
பின்னர் 1926ஆம் ஆண்டு உன்னதமான இயற்பியல் ஆசிரியரான அர்னால்ட் ஸொமெர்ஃபெல்ட் (Arnold Sommerfeld)-இடம் ம்யூனிக் (Munich) பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பயின்றார். அவை குவாண்டம் இயற்பியலின் அற்புத வளர்ச்சி நாட்கள். அப்பொழுது துகள்களாக அறியப்பட்ட எலெக்ட்ரான்களுக்கு அலைப்பண்பு உண்டு என்று தெரியவந்தது. அதன் இரகசியங்களில் கவரப்பட்ட பேத்தா படிகங்களின் ஊடாக எலெக்ட்ரான்கள் செல்லும்பொழுது அவற்றின் தன்மைகளில் ஏற்படும் மாறுபாடுகள் குறித்த ஆய்வை மேற்கொண்டார். அதற்கான முனைவர் பட்டத்தைப் பெற்றார்.
பின்னர் ஹிட்லர் ஜெர்மானியப் பேரரசராக ஆனபொழுது பல யூதர்கள் தங்கள் பதவிகளை இழந்தார்கள். அவர்களுள் பேத்தாவும் ஒருவர். பின்னர் உயிருக்குப் பயந்து ஜெர்மனியை விட்டு நீங்கி ஐக்கியக் குடியரசில் தஞ்சம் புகுந்தார். அங்கே மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் பணியாற்றினார். அதன்பின் 1935ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொர்னெல் பல்கலைக்கழகத்தில் வேலையில் அமர்ந்தார். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் அணுகுண்டு தயாரிப்புக்காக லாஸ் அலமோஸ் தேசிய ஆய்வுக்கூடத்திற்குப் பணிக்கப்பட்டது, மற்றும் பணிவிடுப்பு வருடங்களைத் தவிர தொடர்ச்சியாக மரணத்திற்கு முன்வரை கொர்னெல் பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றினார். (கிட்டத்தட்ட எழுபது வருடச் சேவை).
1935 முதல் 1938 வரை பேத்தா அணுக்கருக்கள் வினைபுரிவதன் சாத்தியப்பாடுகளைக் கண்டறியும் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தார். குறிப்பிட்ட இரண்டு வகையான அணுக்கருக்கள் (உதாரணமாக ஹைட்ரஜன், ஹீலியம் இவற்றின் அணுக்கருக்கள்) ஒன்றுடன் ஒன்று கலப்பதன் நிகழ்தகவைக் (Probability) கணிப்பது குறித்த ஆய்வுகளில் தொடர்ச்சியாக விண்மீன்களில் சக்தி உருவாகும் விதத்தை விளக்க முடிந்தது. 1939 ஆம் ஆண்டு “விண்மீன்களில் சக்தி உருவாக்கம்” என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரை சூரியன் உள்ளிட்ட விண்மீன்கள் எப்படி அதியுயர் வெப்பநிலையில் தொடர்ச்சியாக எரிந்துகொண்டிருக்கின்றன என்பதைப் புரியவைத்தது. விண்மீன்களில் ஆறே ஆறுவகையான அணுக்கரு வெப்பவிளைவுகள் மாத்திரமே சாத்தியம் என்பதைக் கணித்துச் சொன்னார். நம் உயிர்வாழ்தலுக்கு இன்றியமையாத சூரிய சக்தி எங்கிருந்து உருவாகிறது என்பதைத் தெளிவுபடுத்திய இந்த ஆய்வுக்கு 1967ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பேத்தாவை அறிமுகப்படுத்திய குழுவின் தலைவர் பேத்தாவைப் பார்த்துச் சொன்னார் “உங்களைப் பல வருடங்களாகவே நோபல் பரிசுக்குப் பரிசீலித்து வருகிறோம். பிரச்சனை என்னவென்றால் உங்களுடைய ஆய்வில் எதைத் தேர்ந்தெடுத்து பரிசு கொடுப்பது என்பதுதான்”. பேத்தாவின் மாணவரும் இன்னொரு மிகச் சிறந்த விஞ்ஞானியுமான ஃப்ரீமான் டைஸன் (Freeman Dysen) இப்படிச் சொல்கிறார், “அவரது ஆய்வுகளில் குறைந்தபடசம் ஒரு பத்துப் பன்னிரண்டாவது நோபல் பரிசுக்குத் தகுதியானவை”. புகழின் உச்சியிலும், மரியாதைக்குரியவராகவும் இருந்த பேத்தாவுக்கு இன்னும் நோபல் பரிசு கிடைக்காததுபற்றி அவர் மனைவி ரோஸா ஒரு முறை “அது ஒன்றும் பெரிய இழப்பு இல்லை. பலருக்கும் இன்னும் அவருக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்பதே தெரியாது” என்று சொன்னார்.
இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜெர்மானியர்களுக்கு முன்னர் அமெரிக்கா அணுகுண்டைத் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்புடன் நாடு முழுவதிலுமிருந்த பல அற்புத விஞ்ஞானிகள் லாஸ் அலமோஸ் ஆய்வுக்கூடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டனர். இதற்கு மான்ஹாட்டன் திட்டம் (Manhatten Project) என்று பெயரிடப்பட்டது. இந்தத் திட்டத்தின் தலைவர் ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer) அணுகுண்டு குறித்த ஆய்வில் சேர்ந்துகொள்ள ஹான்ஸ் பேத்தாவை நேரடியாக அழைத்தார். பலத்த தயக்கத்தின் பிறகு, ஜெர்மானியர்கள் வெற்றி பெறுவது உலகிற்கு நல்லதில்லை என்ற கொள்கையினால் பேத்தா மான்ஹாட்டன் திட்டத்தில் இணைந்தார். அங்கே கருத்தியல் இயற்பியல் (Theoretical Physics) குழுவிற்கு அவர் தலைவராகப் பணியாற்றினார். இவருடன் இணைந்து அந்தக் குழுவில் புகழ்பெற்ற இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபெய்ன்மான் (Richard Feynman), எட்வர்ட் டெல்லர் (Edward Teller) போன்றவர்கள் அணுகுண்டு உருவாகத் தேவையான யுரேனியத்தின் அளவு, அது வெடித்தால் தோன்றக்கூடிய வெப்பம், அதனால் வளிமண்டலம் முழுவதும் தீப்பிடித்து உலகம் அழிவதற்கான சாத்தியங்கள் போன்றவற்றைக் குறித்த கணக்கீடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். இந்த ஆய்வுகளின் விளைவாக மூன்று அணுகுண்டுகள் உருவாக்கப்பட்டன, ஒன்று நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் பாலைவனத்தில் சோதனை ரீதியாக வெடிக்கப்பட்டது. மற்ற இரண்டும் ஹிரோஷிமா, நகஸாகி நகரங்களில் வீசப்பட்டன. இவற்றின் விளைவாக 250,000 மக்கள் மாண்டனர்.
இந்தப் பேரழிவு ஹான்ஸ் பேத்தாவை ஆயுதங்களுக்கு எதிராக முற்றாகத் திருப்பியது. அவருடைய பின்னாட்களில் ஆயுதக் குறைப்புக்காகப் பெரிதும் பாடுபட்டார். சொல்லப்போனால் ஆயுதங்களுக்கு எதிராக முன்னின்ற அறிவியலாளர்களின் அடையாளமாக ஹான்ஸ் பேத்தா அறியப்பட்டார். அடுத்த நான்கே வருடங்களில் சோவியத் ரஷ்யாவும் அணுகுண்டுச் சோதனையை நடத்தியபொழுது அமெரிக்காவில் பலத்த அச்சம் உண்டானது. கம்யூனிஸ்ட்களிடமிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள அணுகுண்டுகளுக்கு மேலான சக்தியைக்கொண்ட ஆயுதங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட்டது. அப்பொழுது மான்ஹாட்டன் திட்டத்தில் பேத்தாவுடன் பணியாற்றிய அவருடைய நெருங்கிய சகாவான எட்வர்ட் டெல்லர் ஹைட்ரஜன் குண்டுகளை உருவாக்குவது அறிவியல் ரீதியாகச் சாத்தியம் என்றும் அமெரிக்க அரசு அதில் முனையவேண்டும் என்றும் வற்புறுத்தினார். மாறாக, தொடரும் அழிவு ஆயுதங்களின் அபாயத்தை ஹான்ஸ் பேத்தா உரக்க வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் ஆயுதம் வேண்டும் விஞ்ஞானிகளுக்கு டெல்லரும், ஆயுத எதிர்ப்பு விஞ்ஞானிகளுக்கு அடையாளமாக பேத்தாவுமாக அறிவியல் உலகம் பிளவுபட்டுப் போனது.
தொடர்ந்து ஹைட்ரஜன் குண்டு தயாரிப்பதில் அமெரிக்கா மூழ்கத் தொடங்கியது. அப்பொழுது முழுமனமில்லாமல் தேச நலனுக்காக ஹான்ஸ் பேத்தா அதில் ஈடுபடத் தொடங்கினார். சொல்லப்போனால் அந்த நேரங்களில் அவருடைய கவனம் முழுவது டெல்லரின் சாத்தியக் கணிப்புகளை அறிவியல் ரீதியாகப் பொய்ப்பித்துக் காட்டுவதிலேயே சென்றது. டெல்லர் குழுவினரின் பல தவறுகளைத் தொடர்ச்சியாக ஹான்ஸ் பேத்தா அம்பலப்படுத்தினார். இதன் மூலம் ஹைட்ரஜன் குண்டுகளின் சாத்தியமின்மை புலப்பட ஆய்வுகள் நிறுத்தப்படும் என்று நம்பினார். ஆனால், நேர்மாறாக, பேத்தாவின் பொய்ப்பித்தல்கள் டெல்லர் குழுவினருக்குத் தங்கள் பிழைகளைக் களைந்து கொள்ள உதவ, அவர்கள் முனைப்புடன் ஈடுபட்டார்கள். விளைவாக ஹிரோஷிமா குண்டைவிடப் ஆயிரம் மடங்கிற்கும் மேலான சக்தியுள்ள ஹைட்ரஜன் குண்டுகளை அமெரிக்கா வெற்றிகரமாகச் சோதித்தது.
பேத்தாவைப் பொருத்தவரை ஆயுதப் போரில் மானுடம் ஒருநாளும் வெற்றியடைய முடியாது என்பதில் உறுதியாக இருந்தார். தொடர்ச்சியான இந்த அழிவு ஆயுதங்களைக் கொண்டு இன்னும் ஒரு போர் நடந்தால் அதில் மிஞ்சும் உலகில் எந்த உன்னதமும் இருக்க முடியாது என்று சொன்னார். இப்படிப் பொதுக்கருத்துக்கு எதிராக ஆயுத ஒழிப்பை முன்னிருத்தியதால் ஹான்ஸ் பேத்தாவின் தேசப்பற்றின் மீது வெளிப்படையாகச் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்த நேரத்தில் பேத்தாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அவருடைய இளைய சகாவான க்ளௌஸ் ஃபூக்ஸ் (Klaus Fuchs) என்ற விஞ்ஞானி சோவியத் ஒற்றராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டார். இது பேத்தாவிற்குப் பேரிடியாக இருந்தது. நல்ல இயற்பியலாளர் என்று தான் நம்பிய ஃபூக்ஸ்க்கு சோவியத் ஒற்றராக வேண்டிய அவசியம் இருப்பதாக பேத்தா சந்தேகிக்கவில்லை. ஆனால் ஃபூக்ஸ் ஒற்றராகச் செயல்பட்டார் என்று நிரூபிக்கப்பட்டது.
அந்தக் காலக்கட்டம் அமெரிக்காவில் ஒடுக்குமுறை தலைவிரித்தாடியது. செனட்டர் மெக்கார்த்தி பல அறிவுஜீவிகளின் அமெரிக்கத் தேசப்பற்றைக் குறித்த சந்தேகங்களை எழுப்பினார். இவர்களுள் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ராபர்ட் ஓப்பன்ஹைமர் (மான்ஹாட்டன் திட்டத் தலைவராக அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தியவர்), ஹான்ஸ் பேத்தா போன்றவர்கள் அடக்கம். குறிப்பாக ஓப்பன்ஹைமர் இடதுசாரி சாய்வைக் கொண்டிருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டார். அமெரிக்க அணுகுண்டு ரகசியங்களை யாராவது முழுமையாக அறிந்திருக்கக் கூடும் என்றால் அது ஓப்பன்ஹைமர்தான். அவருடைய தேசபக்தி குற்றம் சாட்டப்பட்டபொழுது பேத்தா மிகவும் வருத்தத்திற்கு உள்ளானர். ஐன்ஸ்டைனைப் போலவே பேத்தாவும் மெக்கார்த்தி விசாரனைக் குழுவின் முன்பு ஓப்பன்ஹைமரின் அப்பழுக்கற்ற நடத்தைக்குச் சாட்சியம் அளித்தார். இதெல்லாம் பலன்தராமல்போக ஓப்பன்ஹைமரின் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டன.
ஓப்பன்ஹைமருக்கு ஆதரவாகச் சாட்சியளிக்க எட்வர் டெல்லரை பேத்தா நட்புரிமையில் வற்புறுத்தினார். ஆனால் டெல்லர் ஓப்பன்ஹைமர் நிர்வாகத் தவறுகள் இழைத்ததாகச் சாட்சியத்தில் சொன்னார். டெல்லர் நினைத்திருந்தால் ஓப்பன்ஹைமரின் பெயரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்றும் அவர் கைவிட்டுவிட்டார் என்றும் பேத்தா வருத்தப்பட்டார். பின்னர் ஓப்பன்ஹைமர் இறந்தபொழுது, “என்னுடைய ஒரு பகுதி - என் சகோதரன், இறந்ததைப் போல உணர்கிறேன்” என்று பேத்தா கலங்கினார்.
ஆயுத ஆராய்ச்சிகளிலிருந்து மீண்டு வந்த பேத்தா அற்புதமான அடிப்படை அறிவியல் ஆய்வுகளில் மூழ்கிப் போனார். 1947ல் லாம்ப் பெயர்வு (Lamb Shift) என்ற விளைவை முதன் முதலாக விளக்கினார். இதன் அடிப்படியில் குவாண்டம் மின்னியக்கியல் (Quantum Electrodynamics) என்ற உன்னதத் துறையே உருவானது. தொடர்ந்து உலோகங்களின் இயற்பியல் (Physics of Metals), உலோகக் கலவைகளில் ஒழுங்கு-ஒழுங்கின்மை (Order-Disorder in Alloys) குறித்த பல அற்புதக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார். மரணத்திற்கு இரண்டு வருடத்திற்கு முன்னதாகக் கூட மிக முக்கியமாக, சிக்கலான ஆய்வுகளில் தன்னுடைய 95ஆவது வயதில் ஈடுபட்டிருந்தார். 1950ஆம் ஆண்டு டைம் சஞ்சிகை ஹான்ஸ் பேத்தேவை “நாஜிக்கள் அமெரிக்காவிற்கு அளித்த மாபெரும் பரிசு” என்று போற்றியது.
பேத்தா மிகவும் எளிமையானவர். கணினி முன்னேற்றங்கள் வந்த பல வருடங்கள் கழித்தும் ஸ்லைட் ரூல் என்று சொல்லப்படும் ஒருவகை மணிச்சட்டத்தை வைத்துக் கொண்டே தன்னுடைய சிக்கலான கணக்குகளைச் செய்து முடித்துவிடுவார். “என்னுடைய சாதாரண ஆய்வுக்கு இது போதும்” என்று வேடிக்கையாகச் சொல்வார். அற்புதமான ஆசிரியரான அவர், மாணவர்களை ஆற்றுப்படுத்துவதில் மிகவும் வல்லவராக இருந்தார். மாணவரைத் தேர்ந்தெடுத்து அவரது திறமைக்கேற்ற வகையில் சிக்கலான சவால்களைப் பரிந்துரைப்பதில் வல்லவர். ஃப்ரீமன் டைசன் சொன்னது: “உலகம் முழுவதிலிருந்தும் அற்புதமான மாணவர்கள் அவரைத் தேடிவர அவர் கொர்னெலிலேயே தங்கிவிட்டார்”. வழக்கமாகச் சித்தரிக்கப்படும் விஞ்ஞானிகளின் வடிவத்தைப் போலவே, பேத்தேயும் அழுக்குக் காலணிகளுடனும் கலைந்த சட்டையுடனும் தன்னுடைய புறத்தோற்றத்தைப் பற்றிய கவலைகளற்று உலாவி வந்தார். ஒரு முறை ஒரு பத்திரிக்கையாளர், “ஒவ்வொரு முறையும் இப்படித் தப்புத்தப்பாக டைகட்டிக் கொள்ள மிகுந்த கவனமும், திறமையும் வேண்டும்”. வாழ்வின் கடைசி நாட்கள்வரை மதிய உணவைத் தன்னுடைய இளம் மாணவர்களுடன் சேர்ந்துதான் உண்டுவந்தார். தன்னுடைய பல்கலைக்கழகத்திற்கு வெளியேயும் இயற்பியல்பற்றிய அறிவுப் பரவலாக்கத்தில் ஈடுபட்டார். பள்ளிக் குழந்தைகள் தொடங்கி முதியோர் இல்லங்கள்வரை எல்லாவிதமான இடங்களிலும் இயற்பியலில் தான் கண்ட உன்னதத்தைப் பகிர்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
ட்வைட் ஐய்ஸென்ஹோவர் (Dwight Eisenhower) அமெரிக்க ஜனாதிபதியாக ஆனபொழுது பேத்தாவின் பல கருத்துக்கள் வலுப்பெற்று வெறித்தனமான ஆயுத ஆராய்ச்சிகள் குறைக்கப்பட்டன. சோவியத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆயுதக் குறைப்பு பேச்சுவார்த்தைகளில் பேத்தா முக்கிய இடம் வகித்தார். அவர் அப்பொழுது பாடுபட்ட ஆயுதச் சோதனைத் தடுப்பு ஒப்பந்தம் 1996ல் கிளிண்டன் காலத்தில்தான் நிறைவுக்கு வந்தது.
எழுபதுகளில் அரபுநாடுகள் உருவாக்கிய எண்ணெய் பிரச்சினையின் தொடர்பாக குறைந்த செலவில், பின்விளைவுகள் அதிகமற்ற சக்தியைப் பெற அணுமின் நிலையங்களின் தேவை குறித்து அவர் உரக்க வலியுறுத்தத் தொடங்கினார். அழிவற்ற நோக்கங்களுக்கு அணுசக்தியை முழுமையாகத் தூய்க்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அந்த நேரத்தில் அதே கருத்தில் அவருடைய பழைய நண்பர் எட்வர்ட் டெல்லரும் இணைந்து கொண்டார். இருந்த பொழுதும் ஓப்பன்ஹைமருக்கு ஏற்பட்ட இழப்பு பேத்தா-டெல்லர் உறவை வலுப்படுத்தவில்லை. எண்பதுகளில் ரொனால்ட் ரேகன் அரசு மீண்டும் கண்டம்தாவும் ஏவுகணைகள், விண்வெளியில் ஏவுகணைகள் என்று ஆரம்பித்த பொழுது தன்னுடைய முதிய வயதில் பேத்தா ஆயுதக் குறைப்புக்கு வலுவூட்டும் பிரச்சாரங்கள் பலவற்றை மேற்க்கொண்டார். “ஸ்டார் வார்ஸ்” என்று பெயரிடப்பட்ட இந்த திட்டத்தில் மீண்டும் எட்வர்ட் டெல்லர் - ஹான்ஸ் பேத்தா மோதல் துவங்கியது. விண்வெளியில் வைக்கப்படும் ஆயுதங்களால் எந்த நன்மையும் இல்லை என்று பேத்தா வலியுறுத்த டெல்லர் எக்ஸ்ரே லேசர்களைப் பற்றிய இரகசியங்களைச் சொல்லத்தொடங்கினார்.
அப்பொழுது பேத்தா “நண்பரே, உங்கள் திட்டம் அருமையானது, நீங்கள் எல்லாவற்றையும் தீர்மானமாகக் கணக்கிட்டிருக்கிறீர்கள். நான் அப்படியில்லை. என் கவலை விண்வெளியில் இந்த அணுஆயுதங்களின் மோதலுக்குப் பிறகு மிஞ்சும் (அல்லது மிஞ்சாத) இந்த உலகைப் பற்றியது”. என்று சொன்னார். எதிரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதும் ஆயுதங்களைக் குறைப்பதும்தான் பாதுகாப்புக்கு ஒரேவழி என்று கருதினார். பின்னர் ஸ்டார் வார்ஸின் சாத்தியமின்மை புலப்பட அமெரிக்கா அந்த அபத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது.
இப்பொழுது ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியில் வட அமெரிக்கப் பாதுகாப்புத் திட்டம் என்ற பெயரில் கண்டம்தாவும் ஏவுகணைகளுக்கு மறு உயிர் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதிரியாகச் சுட்ட வலுவான சோவியத் இல்லாத நிலையில் வட கொரியா, ஈரான் என்ற மிகச் சாதாரண, தொழில்நுட்ப வளர்ச்சியில்லாத நாடுகளை எதிர்களாக உருவகப்படுத்தி ஆயுத வெறி மீண்டும் தலையெடுத்திருக்கிறது. அவருடைய இருப்பு மிகவும் தேவையான இந்த நேரத்தில் ஹான்ஸ் பேத்தா மறைந்துவிட்டார்.
முதலில் பதிக்கப்பட்டது: 08 மார்ச்சு 2005