நஞ்சான அமுது

MRSA

இன்றைக்கு மனிதச் சமுகத்தை அச்சுறுத்தும் மாபெரும் சவால்களாக எவற்றைக் கூறலாம்? ஏழைநாடுகளின் உணவுப் பிரச்சினை, அணு ஆயுதங்கள், ஆயுதப்பரவல், இணையத்தீவிரவாதம், உலகளாவிய சூடேற்றம்,

இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய காலத்தில் உலகில் சாவுக்கு முக்கிய காரணியாக இருந்தவை தொற்றுநோய்கள். பாக்டீரியாக்கள் பூஞ்சைகள், மற்றும் வைரஸ்களால் பரவக்கூடிய இவ்வகை நோய்களுக்கு சீன, ஐரோப்பிய, இந்திய மற்றும் மத்தியக் கிழக்கு நாடுகளின் தொல்மருத்துவத்தில் பல்வேறு மூலிகைகள் மற்றும் எண்ணெய்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. கிராம்பு, பட்டை, லாவண்டர், பொதினா உள்ளிட்ட பல தாவரங்களின் இலைகள், பட்டைகள், பூக்கள், அவற்றின் வடிநீர்கள், மூலிகை எண்ணெய்கள் போன்றவையும் சல்ஃபர் போன்ற கனிமங்களின் குழம்புகளும் தொற்றுநோயகளுக்கு மருந்துகளாகப் பயன்படுத்தப்படன. இவற்றில் எதுவுமே தொற்றுநோய்களைப் பெரிதளவில் கட்டுப்ப்டுத்த ஏற்றனவல்ல. 1928 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் ப்ளெம்மிங் பெனிசிலின் எனும் நுண்ணுயிர் எதிர்ப்பியைக் கண்டுபிடித்தார். தொடர்த வருடங்களில் பாக்டீரியங்களால் பரவக்கூடிய பல வியாதிகள் பெனிசிலின் குடும்பத்தைச் சார்ந்த மருந்துகளால் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டன. இரண்டாம் உலக்ப்போரில் காயமுற்றவர்கள் தொற்றுநோய்களால் பீடிக்கப்படுவது பெனிசிலின் மூலம் மட்டுப்படுத்தப்பட்டது.

நுண்ணியிர் எதிர்ப்புகள்

தொடர்ந்து பல்வேறு நுண்ணுயிரிகளால் பரவும் நோய்களுக்குத் திறன்வாய்ந்த மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. 1943ஆம் ஆண்டு பெனிசிலின் பெருமளவில் பயன்பாட்டுக்கு வரத்தொடங்கியது. பெனிசிலின்-வகை மருந்துகள் ஒரு குறிப்பிட்ட வகை பாக்டீரியாக்களுக்கு மாத்திரமே எதிர்ப்புத்திறன் கொண்டவை. இவ்வகை மருந்துகளை குறுவீச்சு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Narrow Spectrum Antibiotics) எனக் குறிப்பிடுவார்கள். 1950 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட டெட்ராசைக்ளின் போன்ற மருந்துகள் பல்வேறு பாக்டீரியாக்களுக்கு எதிர்ப்பாக அமையும். இவை பொதுவில் பெருவீச்சு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Broad Spectrum Antibiotics) எனப்படும். நோயின் மூலம் தெரியாமலேயே (எந்த வகை பாக்டீரியாவால் பீடிக்கட்டிருக்கிறார் எனத் தெரியாமல்) பெருவீச்சு மருந்தைப் பரிந்துரைப்பதன் மூலம் தொற்றுநோய்கள் எளிதில் கட்டுப்படுத்தமுடியும் என்ற நிலை உருவானது. மருத்துவர்கள் பரவலாக நுண்ணியிர் எதிர்ப்பிகளைப் பரிந்துரைக்கத் தொடங்கினார்கள். அதிலிருந்து நுண்ணுயிரிகள் எதிர்ப்பு யுகம் தொடங்கியது எனலாம். போர்களிலும் விபத்துகளிலும் காயமுற்றவர்களுக்குத் தொற்றுநோயகள் பீடிக்காமலிருக்கத் தடுப்பாக நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சிறுநீர்க்குழாய்களில் ஏற்படும் தொற்றுகளுக்கு மாற்றாக, பாலியல் நோய்களுக்கு மருந்தாக, கருவிலிருக்கும் சிசுக்களுக்குத் தொற்றுநோய் தடுப்பாக, இருதயம், சிறுநீரகம் உள்ளிட்ட மாற்றுருப்புச் சிகிச்சைகளிம் பொழுது தொற்றுகள் பரவாமலிருக்க என பல வகைகளில் இவை தடுப்பு மற்றும் குணமளிக்கும் சர்வரோக நிவாரணிகளாகப் பயன்படுகின்றன, புற்றுநோய்களுக்கு வீரியமிக்க வேதிச்சிகிச்சை மற்றும் கதிரியக்கச் சிகிச்சைகள் அளிக்கப்படும்பொழுது நோய்த் தடுப்புத்திறன் பெரிதும் குறைகிறது. இந்நிலையில் நுண்ணியிர் எதிர்ப்பிகள் அதிக அளவில் பரிந்துரைக்கப்படுகின்றன.

செயல்படு முறை

பொதுவில் நம்மை நுண்ணியிரிகள் தாக்கும்பொழுது நம் இரத்தத்திலிருக்கும் வெள்ளையணுக்கள் அவற்றுடன் போராடி அவற்றின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துகின்றன. பாக்டீரியாக்கள் தொடர்ச்சியாக தங்கள் செல் சுவர்களை வலுப்படுத்தக்கூடியவை. எனவே ஓரளவுக்கு மேலாக நம் உடலின் எதிர்ப்பு சக்தி பயனற்றுப்போகிறது. குறிப்பாக உடல்நலக்குறைவானவர்கள் (கர்ப்பினிகள், காயமுற்றோர், புற்றுநோய் சிகிச்சை பெருவோர், மாற்று உறுப்பு சிகிச்சை பெருபவர்கள், மற்றும் சிறு குழந்தைகளும் வயோதிகர்களும் பொதுவில் நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போரிடும் திறன் அதிகமற்றவர்கள்). பாக்டீரியங்கள் பெருக்கத்தின் பொழுது அவற்றின் செல் சுவர் மெலிவடையும். ஒற்றை பாக்டீரியம் இரண்டாகப் பெருகியவுடன் அவற்றின் செல்சுவர் மீண்டும் வலுவடையும். பெனிசிலின் வகை மருந்துகள் பெருக்கத்தின் முன்னர் மெலிவடையும் பொழுது அவற்றைத் தாக்கி சுவர் வலுவடைவதைத் தடுக்கும். அந்நிலையில் பாக்டீரியாக்கள் அழிந்துபோகும். எரித்ரோமைசின் வகை மருந்துகள் பாக்டீரியாக்களின் செல்களினுள்ளே இனப்பெருக்கத்துக்குத் தேவையான புரதங்கள் உற்பத்தியைத் தடை செய்வதன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்துகின்றன.

பக்கவிளைவுகள்

மருத்துவ வரலாற்றில் நுண்ணியிர் எதிர்ப்பிகளுக்கு ஈடாகச் சொல்லக்கூடிய கண்டுபிடிப்புகள் மிகச் சிலவே. ஒருவகையில் இருபதாம் நூற்றாண்டின் மருத்துவப் புரட்சிக்கு அடிகோலாக விளங்கியது நுண்ணியிர் எதிர்ப்பிகள் என்றால் அது மிகையில்லை. உதாரணமாக, மாற்று உறுப்பு சிகிச்சையோ அல்லது புற்றுநோய்க்கு வீரியமிக்க வேதிச்சிகிச்சையோ பெருவீச்சு நுண்ணியிர் எதிர்ப்பிகள் இல்லாமல் சாத்தியமில்லை. எத்தனையோ அறுவைசிகிச்சைகளில் நுண்ணியிர் பரவலால் ஏற்படக்கூடிய சிக்கல்கள் அவற்றின் பலனை முற்றாக இழக்கச் செயக்கூடும். ஆரம்பகாலம் தொட்டே நுண்ணியிர் எதிர்ப்பிகளின் பக்கவிளைவுகளை மருத்துவர்கள் அறிந்திருந்தார்கள். நோய் விளைவிக்கும் பாக்டீரியாக்களைக் கொல்லச் சமைக்கப்பட்ட நுண்ணியிர் எதிர்ப்பிகள் மனித உடலில் இருக்கும் பலன்தரும் பாக்டீரியாக்களையும் ஒழிக்கும். இவற்றின் பக்கவிளைவாக கடும் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, உடற்சோர்வு போன்றவை கூடவே வரும். யோனியில் ஏற்படும் தொற்றுநோய்கள் இம்மருந்துகளை உட்கொள்வதால் பெருகும் சாத்தியம் உண்டு. பெனிசிலின் உள்ளிட்ட பல மருந்துகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். சாதாரண தோல் அரிப்பு தொடங்கி உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் சிக்கல்கள் இந்த ஒவ்வாமையால் ஏற்படுகின்றன.

தடை எதிர்க்கும் நுண்ணியிரிகள்

பெனிசிலின் 1943-ஆம் ஆண்டு பரவலான புழக்கத்திற்கு வந்தது. தொடர்ந்து டெட்ராசைக்ளின் (1950), எரித்ரோமைசின் (1953), மெத்திசிலின் (1960), ஜெண்டாமைசின் (1967), உள்ளிட்ட பல நுண்ணியிர் எதிர்ப்பிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1985க்குப் பிறகு மிகத் தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்றாலும்கூட மிகச் சில நுண்ணியிர் எதிர்ப்பிகளே சாத்தியமாயின. இம்மருந்துகளைப் பரிந்துரைக்கும் வேகம் 1970-களில் தொடங்கி முடுக்கம் பெற்றது. முன்னர் சொன்னபடி, நோயின் மூலம் தெரியாமலேயே பெருவீச்சு நுண்ணியிர் எதிர்ப்பிகளைப் பரிந்துரைக்கும் வழக்கம் தொடங்கியது. குறிப்பாக வைரஸ்களால் ஏற்படும் சாதாரண சளி, ஃப்ளூ காய்ச்சல் போன்றவற்றுக்கு ஆண்டிபயாடிக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இவ்வகை நோய்களுக்கு நுண்ணியிர் எதிர்ப்பிகளால் எந்தவகையில் பயனில்லை. ‘எதற்கும் இருக்கட்டுமே’ என்று ஆண்டிபயாடிக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. மருந்து உற்பத்தித் துறையில் ஏற்பட்டுள்ள அசாத்திய வளர்ச்சியால் நுண்ணியிர் எதிர்ப்பிகளின் விலை 1980 தொடங்கி மிகவும் சரியத் தொடங்கியது. மருந்துகளின் காப்புரிமை காலாவதியாகும்பொழுது அவற்றை எந்த நிறுவனமும் தயாரிக்கலாம் என்பதால் 1960-களில் கண்டுபிடிக்கபட்ட மருந்துகள் எண்பதுகளில் மிக மலிவான விலையில் கிடைக்கத் தொடங்கின. இவை அனைத்துமாக நுண்ணியிர் எதிர்ப்பிகளின் புழக்கத்தைப் பெருமளவு கூட்டியிருக்கின்றன.

மருந்துக்குத் தப்பிய பாக்டிரியாக்கள் பரவுவதால் தொடர்ச்சியாக பாக்டீரியாக்கள் வீரியம் பெற்று பல நுண்ணியிர் எதிர்ப்பிகளை செயலிழக்கச் செய்திருக்கின்றன. 1950-ல் அறிமுகப்படுத்தப்பட்ட டெட்ராசைக்ளினுக்கு முற்றிலும் எதிர்ப்புத் திறன் கொண்ட பாக்டீரியாக்கள் 1959-ல் அறியப்பட்டன. 1960-ல் அறிமுகப்படுத்தப்பட்ட மெத்திசிலின், இரண்டே ஆண்டுகளில் ஒருவகை ஸ்டெஃபைலோகாக்கஸ் பாக்டீரியங்களை எதிர்க்கும் திறனை இழந்தது. 1975 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 2.4 சதவீத ஸ்டெஃபைலோகாக்கஸ் பாக்டீரியாக்கள் மெத்திசிலினுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டவையாக இருந்தன, இது 1991-ல் 29 சதவீதமாக உயர்ந்திருக்கிறது.

1987-ல் நிமோனியாக் காய்ச்சலை உண்டாக்கும் பாக்டீரியாக்களை பெனிசிலினிலால் முற்றிலும் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் 1997-ல் 40 சதவீதத்திற்கும் மேலான்வை முற்றிலும் பெனிசிலினின் எதிர்ப்புத் திறன் கொண்டவையாக வலுபெற்றிருக்கின்றன. தொடர்ச்சியாக பல மருந்துகளுக்குத் தப்பும் வீரியமிக்க பாக்டீரியாக்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இருந்தபோதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பல பாக்டீரியாக்கள் முற்றிலுமாக நுண்ணியிர் எதிர்ப்பிகளை விஞ்சும் திறன் கொண்டவையாக மாறிவிட்டிருக்கின்றன.

இயற்கைத் தெரிவு

தொடர்ச்சியாக பாக்டீரியாக்கள் வலுப்பெறுவதற்கு டார்வினின் இயற்கைத் தெரிவே காரணம். நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கும்பொழுது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கென பரிந்துரைப்பார்கள். நோயாளிகள் அவற்றை முழுதுமாக உட்கொண்டாக வேண்டும். உதாரணமாக 7 நாட்களுக்கு தினசரி இரண்டு மாத்திரைகள் என்று பரிந்துரைக்கப்பட்டால் அந்தப் 14 மாத்திரைகளையும் முழுதும் உட்கொள்ள வேண்டும். சிகிச்சை தொடங்கி மூன்று நாட்களில் முன்னேற்றாம் ஏற்பட்டு முழுதும் குணமடைந்ததாகத் தோன்றினாலும், ஏழு நாட்களுக்கும் அதை உட்கொண்டு முடிக்க வேண்டும். முழுக்கால சிகிச்சை பாக்டீரியாக்களை முற்றிலுமாக உடலிலிருந்து ஒழிக்க முக்கியமானது. பாதியில் நிறுத்துபொழுது முற்றிலும் அழிக்கப்படாமல் பாக்டீரியாக்கள் மீண்டும் தலையெடுக்க வாய்ப்புள்ளது. அந்த நிலையில் பழைய மருந்து மீண்டும் பலனளிக்காது. முதல் மருந்தில் தப்பிப் பிழைத்த பாக்டீரியாக்கள் பொதுவில் வலுவானவை; ஓரளவுக்கு மருந்தை எதிர்க்கும் திறன் கொண்டவை. இவை பெருகும் பொழுது முன்னைக்காட்டிலும் வலுவான பாக்டீரியாக்களாகவே இருக்கும். இவற்றுக்கு இன்னும் அதிக வீரியம் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பியை உட்கொண்டாக வேண்டும். இப்படி தொடர்ச்சியாகச் செய்யும்பொழுது பல மருந்துகள் வலுவிழக்கத் தொடங்குகின்றன.

தொடர்ச்சியாக நுண்ணியிர் எதிர்ப்பிகளை உட்கொள்வதன் மூலம், உடலில் விஞ்சியிருக்கும் பாக்டீரியாக்களில் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கின்றது. இப்படி வலுப்பெற்ற பாக்டீரியாக்கள் பரவும்பொழுது அவற்றை எதிர்கொள்ள அதிக அளவு அல்லது புதுவகை நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நாடவேண்டியிருக்கிறது. இவற்றிலிருந்து தப்பிப் பிழைப்பவை, இவை எல்லாவற்றுக்கும் எதிர் திறன் கொண்டவையாக இருக்கின்றன. மெத்திசிலின் எதிர்ப்புத் திறன் கொண்ட ஸ்டெஃபைலோகாக்கஸ்க்கு ஒரே மாற்றாக 1996 வரை வான்கோமைஸின் என்ற புதுவகை நுண்ணுயிர் எதிர்ப்பி பயன்பட்டுவந்தது. 1996-ல் இந்த மருந்தையும் தாங்கி நிற்கக்கூடிய பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டன. எனவே இந்த நோய்க்குச் சிகிச்சையின்றி 1970களில் பலரும் இறந்துபோக நேரிட்டது.

பரவும் எதிர்ப்புத் திறன்

பாக்டீரியாக்களில் எதிர்ப்புத்திறன் பின்வரும் வழிகளில் உருவாகின்றது;

  1. வலுவான தடைகள்; செல்சுவர்களை வலுப்படுத்திக்கொள்வதன் மூலம் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இலக்கை அடையவிடாமல் தடுத்தல்.

  2. இலக்கை மாற்றிக் கொள்ளுதல்: நுண்ணியிர் எதிர்ப்பிகள் செயல்பட அவற்றின் இலக்குகளுடன் அவை வேதிப்பிணைப்பை உருவாக்க வேண்டும். பாக்டீரியாக்கள் தங்கள் செல்களின் அமைப்பை மாற்றிக்கொள்வதன் மூலம் மருந்துகள் அவற்றுடன் பொருந்துவதைத் தடுக்கின்றன. இந்நிலையில் மருந்துகள் செயலிழக்கின்றன.

  3. நுண்ணியிர் எதிர்ப்பிகளை அழித்தல்: சில பாக்டீரியாக்கள் மருந்துகளையே நேரடியாகத் தாக்கி அவற்றை அழிக்க வல்லனவாக மாறிவருகின்றன. பீட்டா-லாக்டாமாஸஸ் (Beta-Lactamases) என்ற நொதியத்தை (enzyme) உருவாக்கி அவற்றினால் பாக்டீரியாக்களை உண்டு செரிக்கன்றன.

இவற்றில் மூன்றாவது வழிமுறையே தற்பொழுது மிகுந்த அச்சத்தை அளிக்கிறது. பாக்டீரியாக்கள் பிற பாக்டீரியாக்களுடன் ஊடாட வல்லவை. தாங்கள் உருவாக்கும் பீட்டா-லாக்டாமஸஸ் நொதியத்தை பிற பாக்டீரியங்களுக்குத் தருவதன் மூலம் பல்வேறு நோய் உண்டாக்கும் பாக்டீரியங்களும் தங்களிடையா மருந்து எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகின்றன. ஒருவகையில் படைத்திறன் இல்லாத சிறிய நாடு வல்லரசுகளுடன் இணைந்து தங்களைப் பாதுக்காத்துக் கொள்வதைப் போன்றதே இது.

2008ஆம் ஆண்டு புதுதில்லி மருந்தவமனையில் சிகிச்சை பெற்ற சுவீடன் நாட்டவரின் உடலில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வலுவான க்ளெப்ஸியெல்லா நிமோனியே (Klebsiella Pneumoniae) என்ற பாக்டீரியா பகுத்தறியப்பட்டது. இது நாளதுவரை நாம் அறிந்த உச்சத் திறன்வாய்ந்த நிமோனியா மருந்துகளுக்குத் தடைத்திறன் கொண்டதாக இருந்தது. நியூ டெல்லி மெட்டாலோ-பீட்டா-லாக்டமேஸ் (New Delhi metallo-beta-lactomase, NDM-1) மிக எளிதாக பிற பாக்டீரியங்களுக்கு எதிர்ப்புத் திறனைக் கடத்தும் சக்திகொண்டது. உலக சுகாதாரா நிறுவனம் இதைப் பாக்டீரியப் பேரழிவாக வரையறுத்திருக்கிறது.

டிசம்பர் 2014-ல் நியூ யார்க் டைம்ஸ் நாளிதழ் இந்தியாவில் சென்ற ஆண்டு 58 ஆயிரம் குழந்தைகள் மருந்து எதிர்ப்புத்திறன் கொண்ட பாக்டீரியாக்களால் ஏற்பட்ட நோய்களினால் இறந்துபோனதாக அதிர்ச்சிதரும் செய்தியை வெளியிட்டது. கர்ப்பக்காலத்தில் முறைகேடாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உட்கொள்வதால் உடலில் தேங்கிப் போன பாக்டீரியாக்கள் சிசுக்களில் நோயை விளைவிக்கின்றன. மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட இவற்தை எதிர்த்து போராட உடலில் வலுவில்லாததாலும், திறன்வாய்ந்த மருந்துகள் இல்லாததாலும் சிசுச் சாக்காடு அதிகரிக்கிறது.

என்ன செய்யலாம்?

அடிப்படை சுகாதாரம் எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமானது. நோய்பரவலைத் தடுத்தல் மருந்துகளின் தேவையைக் குறைக்கும்.

பொதுவில் நுண்ணுயிர் எதிர்ப்பிக்ளை மிகவும் நாசுக்காக கையாள வேண்டும். மருந்துவர்கள் மிகத் தெளிவான தேவை இருந்தாலேயொழிய இவற்றைப் பரிந்துரைப்பதைக் குறைக்க வேண்டும்.

மருத்துவர் பரிந்துரைக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை முழுவதுமாகப் பரிந்துரைத்தபடி உட்கொண்டு முடிக்க வேண்டும். சிறார்கள், வயோகிதர்கள், உடல் வ்லுவற்றவர்கள் ஆகியோருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அவசியம் தேவைப்ப்டும். மருந்துவர் பரிந்துரைக்கும்பொழுது அவற்றை உட்கொள்வது அவசியம்.

எக்காரணத்தைக் கொண்டும் பரிந்துரைக்கப்பட்ட நுண்ணியிர் எதிர்ப்பிகளைப் பாதியில் நிறுத்தக்கூடாது. இது தடைத்திறன் கொண்ட பாக்டீரியாக்கள் உடலில் பெருகுவதைத் தடுக்கும். மேலும் மருந்துகளை மிச்சப்படுத்தி பின்னொரு தருணத்தில் நோய் அறிகுறிகள் காணப்படும் பொழுது பயன்படுத்துவது முற்றிலும் தவறு. மருந்த்துவர் பரிந்துரையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கையாளக் கூடாது.

மருந்துகளின் பரிந்துரை, பயன்பாடு, விளைபலன்கள் போன்றவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்வதன் மூலம் இவற்றை விரயமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க முடியும்.

நோய் மூலங்களைக் கண்டறியும் புதிய சோதனைகளும் கருவிகளும் தேவை. இவை தோற்றுவாய் அறிந்து சரியான மருந்துகளைப் பரிந்துரைக்க உதவும். இதன் மூலம் தேவையற்ற நுண்ணியிர் எதிர்ப்பி பயன்பாடு கட்டுக்குள் வரும்.

பெருகிவரும் உலகாளாவிய மக்கள் நெருக்கம் தொற்றுநோய்களை அதிகரிக்கிறது. மூலிகைகள், கைமருத்துவம், நாட்டு மருத்துவம் உள்ளிட்ட நாமறிந்த எந்த ஒரு மருந்துமுறையும் நுண்ணியிர் எதிர்ப்பிகளின் திறனில் நூற்றில் ஒரு பங்குகூட தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டவையல்ல. நுண்ணுயிர் எதிப்பிகள் நம் மருத்துவ வரலாற்றின் உச்ச சாதனைகளுள் ஒன்று. இவற்றைப் பலனிழக்கச் செய்வது நாம் செய்யும் மிகப்பெரிய தவறாக இருக்கக்கூடும். இந்த விழிப்புணர்வு இக்காலகட்டத்தின் உச்சத்தேவைகளுள் ஒன்று.

மேலதிகத் தகவலுக்கு

  1. Antimicrobial Resistance, Global Report on Surveillance, World Health Organization, 2014

  2. Antibiotic Resistance Threats in the United States, Centre for Diseases Control and Prevention, United States, 2013

  3. ’Superbugs’ kill India’s Babies and Pose and Overseas Threat, Gardiner Harris, New York Times, December 3, 2014.