இளையராஜாவின் திருவாசகம் - முதல் மதிப்பீடு
ஒரு வழியாக நேற்று கேட்டேன். சில நாட்களாகவே இதைக் குறுவட்டாக வாங்கிய பிறகுதான் கேட்க வேண்டுமா இல்லை எம்பி3-ல் கிடைத்தவுடனே கேட்டுவிடலாமா என்ற மனப்போராட்டம். கவனிக்கவும் - குறுவட்டு வாங்கலாமா வேண்டாமா என்பதைப்பற்றியல்ல. கட்டாயமாக நான் இதை வாங்கத்தான் போகிறேன். எனக்கு மட்டுமல்ல, நண்பர்களுக்குப் பரிசாகத் தரவும்தான். குறைந்தபட்சம் அரை டஜனாவது வாங்க வேண்டியிருக்கும். ஆனால், இணையத்தில் இதை எம்பி3 ஆகக் கேட்க வேண்டாமென்று பலத்த வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டதனால் கொஞ்சம் மனப்போராட்டம். இதிலிருந்து விடுபட ஒரே வழியாக என் நண்பனைவிட்டு இதைச் சென்னையில் வாங்கி என் அப்பாவிடம் கொடுக்கச் சொன்னேன். இரண்டுக்கும் இடையில் இதை எம்பி3 ஆக மாற்றி என்னுடைய வழங்கியில் போடச் சொன்னேன். எந்தவிதமான குற்ற உணர்வுகளும் இல்லாமல் உடனடியாகக் கேட்க முடிந்தது.
நான் வழக்கமாக இதைப்பற்றியெல்லாம் அதிகம் கவலைப்படாமல் எம்பி3 கேட்பவன்தான். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்பவன்தான் (ஆனால் கவனிக்கவும் என் ஆர்வம் இன்றைக்கு வெளியாகும் படங்களின் மீதல்ல, அதிகம் கவனிக்கப்படாமல், விற்பனையில் இல்லாமல் இருக்கும் பழைய முத்துக்களின் மீதுதான். இதைத்தான் நான் நண்பர்களிடமிருந்து பெறுகிறேன். பகிர்ந்துகொள்கிறேன்). ஆனால் இந்த முறை எந்தவிதமான நிறுவனங்களின் முதலும் இல்லாமல் இது இசையில் ஆர்வம் கொண்டவர்களிடமிருந்தும், இளையராஜாவின் மீது மதிப்பு கொண்டவர்களிடமிருந்தும் சில்லரையாகப் பணம் வசூலிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டம். இது வெற்றி பெற வேண்டும். பெற்றால் வணிக ரீதியாக இல்லாமல் இதுபோன்ற கலைமுயற்சிகளுக்கு ஊக்கம் கிடைக்கும். இதற்கு வணிக ரீதியாக ஆதரவு தராமல் (இதன் வணிக சாத்தியங்களைச் சிதைக்காமல் என்றும் படிக்கலாம்) பகிர்ந்துகொள்வது முறையற்ற செயல் என்பது என் தீர்மானம். இந்த முன்னோட்டங்களெல்லாம் கிடக்கட்டும். இசைக்கு வரலாம்.
மொத்தம் ஆறு பாடல்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றைப்பற்றியும் விரிவாகப் பின்னால் எழுதவிருக்கிறேன். எனவே இப்பொழுது இரண்டே இரண்டுமுறை இசையைக் கேட்டுவிட்டு உடனடியாகத் தோன்றிய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்தத் திட்டத்தைப்பற்றிய எதிர்பார்ப்புகள் நிறைய இருந்தன. கமலஹாசனும், ரஜினியும் போற்றுகிறார்கள். சுஜாதா வாயைப் பிளந்தார், அப்துல் கலாம் நிமிர்ந்து நின்றார் போன்ற ஜல்லியடிகள் காரணமல்ல. என்னைப் பொருத்தவரை இளையராஜா தனக்குத் திருப்தியில்லை என்று தன் முதல் மேற்கத்திய இசை முயற்சியை (Illayaraja - Unfinished Symphony No.1, with London Philharmonic Orchestra) வெளியிட மறுத்துவிட்டார். (அல்லது தயங்கிக் கொண்டிருக்கிறார்,… நீண்ண்ண்ண்ட தயக்கம்). ஆனால் இதைப் பெருமையுடன் வெளியிடுகிறார் என்ற ஒரு விஷயமே என் எதிர்பார்ப்பைத் தூண்டிவிட்டது.
ஒட்டுமொத்தமாக - இளையராஜா இந்தத் தீக்குளிப்பில் காயம் ஏதுமின்றி வெளிவந்திருப்பதாகத்தான் தோன்றுகிறது. சொல்லப்போனால் இதில் அவருக்கு வெற்றிதான்.
முதலில் இதன் ஏமாற்றங்கள் குறித்து;
புற்றில்வாழ் அரவும் அஞ்சேன் - பாடலின் ஆரம்பத்தில் இளையராஜா கேணத்தனமாக “ஆஹா, இதுதான் சிம்பனி ஆர்க்கெஸ்ட்ராவா, இதுல நம்ம மாணிக்கவாசகரப் பாடினா எப்படி இருக்கும்” என்று பேசுகிறார். இது கொஞ்சமும் தேவையில்லாதது. யாரை ஏமாற்றும் வேலை இது? என்னமோ ராஜா இதற்கு முன்னால் சிம்பொனி குழுவையே பார்த்ததில்லை, கேட்டதில்லை ரீதியில் வரும் வெட்கங்கெட்ட விளம்பரமாகத் தோன்றுகிறது. அருமையான இசைக்கு நடுவே இது மிக, மிகத் துன்புறுத்துகிறது. இதைப்பற்றிய விவரண டிவிடியையும் வெளியிடுகிறார்கள் (நான் இன்னும் பார்க்கவில்லை). அதில் இதற்கெல்லாம் நிறையவே இடமிருக்கிறது. அதில் ராஜா புல் தரையில் படுத்துக் கொண்டு பேசலாம், மோட்டுவளையை அண்ணாந்து பார்த்து கொட்டாவி விடலாம். ஆனால் பாடல்களுக்கு நடுவில் இசைத்தட்டில் இதுமாதிரி வரும்பொழுது எரிச்சல்தான் மிஞ்சுகிறது.
ஒருபாடலைத்தவிர பிற அனைத்தையும் ராஜாதான் பாடியிருக்கிறார். சில இடங்களில் அற்புதமாகப் பொருந்தும் அவருடைய குரல் (குறிப்பாக சிறுமை நீங்கி, பக்தியுடன் தாழும் இடங்கள்), ஆனால் பக்தியில் பணிவு மாத்திரமல்லாமல் பரவசமும் ஒரு முக்கிய உணர்வுதான். அந்த இடங்களில் குரல் எழும்ப முடியாமல் திணறுகிறது. மேற்கத்திய இசையில் பரவசத்தை அற்புதமாகக் கொண்டுவரலாம். பல வாத்தியக் கருவிகளின் ஒன்றிணைந்த ஹார்மனியில் இது அழகாக மேலெழும்பி வரும். ராஜாவின் குரலைத் தாண்டி இங்கே நிறைய போகமுடியும். அது நடக்கவில்லை. நான் ராஜாவின் குரலை இரசிப்பவன்தான். ஆனால் இந்தத் தொகுப்பில் சில இடங்களில் வேறு குரல் இருந்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை. பவதாரிணி பரவாயில்லை. நிறைய முன்னேறியிருக்கிறார்.
எல்லாமே கொஞ்சமாக இருப்பதைப் போன்ற உணர்வு. I am left longing for more. குறிப்பாக சிவபுராணப் பாடலில் இன்னும் நிறைய இசைக்கு இடமிருக்கிறது. ராஜா வெறும் அலைகளின் மீது தோணியோட்டி மீன் பிடித்திருக்கிறார். ஆழக்கடலில் போய் முத்தெடுக்க முயலவில்லை. ஏக்கம்தான் மிஞ்சுகிறது.
தனித்தனியாகப் பாடல்களைப் பற்றி விரிவாகப் பிறகு எழுதுவேன். முதல் உணர்வில் முத்துநற் தாமம் பாடல் முழுவதும், பொல்லா வினையேன் பாடலின் இறுதிப்பகுதியிலும் நெக்குருகிப்போகும் இசை இருக்கிறது. பாடல் தெரிவுகளும் நன்றாக இருக்கிறன. இசைக்குழு அருமையாக ஒத்துழைத்திருக்கிறது. பொல்லா வினையேன் பாடலின் இடையில் ஆங்கில வரிகள் கலப்பும், அதற்கான குரலும் பிரமாதமாக இருக்கிறது (அதனுடன் ஒப்பிடத்தான் ராஜாவின் குரல் சோடைபோகிறது).
தொகுப்பில் எல்லாமே இருக்கிறது. ஆனால் இதை மேற்கத்திய செவ்வியல் இசை என்று தலைப்பிடுவது எனக்கு ஒப்பானதில்லை. சாஸ்திரியமாக மேற்கத்திய இசையைப் பின்பற்றுபவர்கள் இதை முழுவதுமாக அவர்களின் செவ்வியல் இசைவடிவமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இதில் திராவிட நாட்டார் இசை இருக்கிறது (மிக, மிகக் கம்பீரமாக - முத்து நற்தாமம். செந்தமிழ் நாடென்னும் போதினிலே, இன்னும் சில நாட்டார் பாடல்களில் ஏதோவொன்றைக் கேட்கும் உணர்வுதான் வருகிறது - என்னதான் பிண்ணனியில் ஆர்கெஸ்ட்ரா இழைந்தாலும்), கர்நாடக இசையின் ஷண்முகப்ப்ரியா, சங்கராபரணம், சாருகேசி போன்ற இராகங்களின் சாயல்கள் வருகின்றன. சில இடங்களில் ஓப்ராவைக் கேட்பதைப் போல இருக்கிறது, மேற்கத்திய செவ்வியல் இசை அடிநாதமாக எல்லா பாடல்களிலும் இழையோடுகிறது. ஒருவிதத்தில் இவ்வளவு அதிகமான வீச்சைக் கொண்ட ஒரு இசைத்தொகுப்பை நான் கேட்டதில்லை என்று சொல்வேன். ஆனால் அதியற்புதமான விஷயம் என்னவென்றால் இது ஒரு வலிந்து செய்யப்பட்ட முயற்சி என்று தோன்றாமல் தன்னிச்சையாகச் சேர்ந்ததைப்போல மிக இயல்பாக இருக்கிறது. இதுதான் இந்த முயற்சியை வெற்றி என்று அடையாளம் காணச் செய்கிறது. மிகமிகச் சிக்கலான விஷயத்தை ராஜா எளிதாகச் சாதித்திருக்கிறார். பாடல்களில் ராஜாவின் திரையிசைச் சாயல்தான் வருகிறது என்று சிலர் சொல்லக்கூடும். அதில் உண்மையும் இருக்கிறது. ஆனால் இதை நான் குறையாகச் சொல்லவில்லை. ராஜா “மச்சானைப் பாத்தீங்களா” காலத்திலிருந்தே மேற்கத்திய செவ்வியல் இசைக்கூறுகளை உள்ளடக்கி, அப்படியொரு விஷயம் இருப்பதே தெரியாமல் நமக்கு அதைப் பரிச்சயமாக்கியிருக்கிறார். எனவே இந்த மாபெரும் இசைக்கோர்ப்பில் பழைய ராஜாவைக் காணமுடிவதில் வியப்பில்லை.
மேற்குத்தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகளின் இடையில் நடந்திருக்கிறேன். வானம் கறுத்துப் பலத்த காற்றடிக்கும்பொழுது ஒரு அற்புதமான உணர்வு தோன்றும். ஒருபுறத்தில் சுழன்றடிக்கும் காற்றின் ஓசை, இலைகளின் சலசலப்பு, அருகே ஓடிக்கொண்டிருக்கும் சிற்றோடையின் நீரசைவு, தூரத்தில் பிளிறும் யானையின் ஒலி, எங்கோ அகவும் மயிலின் ஏக்கக் குரல், இடையிடையே குயிலின் அற்புதமான கூவல், மனதில் ஒரு இனம்புரியாத பயம். சீக்கிரமாக இந்த இடத்தைவிட்டு ஓடிவிடவேண்டும் என்ற பயம். ஆனால் ஓடக்கூடாது என்று திமிறி நிற்கும் தைரியம். இதையெல்லாம் தனித்தனியாக ஒவ்வொரு இடத்தில் அனுபவித்திருந்தாலும், ஒருசேர இந்த உணர்வுகள் தாக்கும்பொழுது நான் என்ற அகந்தைவிட்டுப்போய் அந்த அகன்றவெளியில் ஒரு சிறுபுள்ளியாக, நிர்கதியாக நிற்பதைத்தான் நான் ஆன்மீக உணர்வாகக் கண்டிருக்கிறேன். அந்த உணர்வுகளுக்கு அருகில் அழைத்துச் செல்வதில் ராஜா வெற்றிகண்டிருக்கிறார் என்றுதான் தோன்றுகிறது.
முதலில் பதிப்பிக்கப்பட்டது: 05 ஜூலை 2005