ரிச்சர்ட் ரைட் - பிங்க் ஃப்ளாய்ட் கீபோர்ட் கலைஞர்

Richard Wright
ராக் இசையுலகின் வரையறைகளை மாற்றி எழுதிய பிங் ஃப்ளாய்ட் இசைக்குழுவின் கீபோர்ட் கலைஞர் ரிச்சர்ட் ரைட் நேற்று காலமானார். பெருமளவில் ராக், ஜாஸிலிருந்து வேர்கள், கொஞ்சம் மேற்கத்திய செவ்வியல் இசை, நிறைய போதை மருந்துகள் இவற்றின் துணையுடன் பிங் ஃப்ளாய்ட் 1965 தொடக்கம் கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு இசையின் உச்சத்தையும் இரைச்சலின் துவக்கத்தையும் வேறுபடுத்திப் (இணைத்து?) பார்க்க நமக்கு உதவியது. ஸிட் பாரெட் (Sid Barret)-ஆல் துவக்கப்பட்ட இந்தக் குழுவில் ஆரம்பக் காலந்தொட்டே ரிச்சர்ட் ரைட் இருந்தார். இவர்கள் இருவருடன் ரோஜர் வாட்டர்ஸ் (பாஸ்) மற்றும் நிக் மேஸன் (ட்ரம்ஸ்) இணைந்த இந்தக் குழுவின் முதல் பெயர் ஸிக்மா 6. பின்னர் இது பாரெட்டால் பிங் ஃப்ளாய்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அத்துடன் போதை மருந்துகள் தூண்டும் பிழற்வுநிலை இசையொலிகள் இந்தக் குழுவின் அடையாளமாகவும் மாறியது. பின்னர் 1968-ல் டேவ் கில்மர் இதில் இணைந்து கொண்டார். ஸிட் பாரெட்டின் மரணத்திற்குப் பிறகு ரோஜர் வாட்டர்ஸ், ரிச்சர்ட் ரைட், டேவ் கில்மர், நிக் மேஸன் என்ற நால்வர் குழுவாக இசையின் உச்சங்களை எட்டியது பிங்க் ஃப்ளாய்ட்.

எனக்கு பிங்க் ஃப்ளாய்ட் அறிமுகமானது 1985-ல். கும்பகோணம் போன்ற ஊர்களில் அந்தக் காலங்களில் அதிகபட்சம் ‘இங்கிலீசு பாட்டு’ போனி எம்மின் ‘இடித்துச் சலித்தலும்’ அ-பாவின் நர்ஸரி பாடல்களும்தான். ஆனால் கல்லூரியில் படிக்கும்பொழுது சிற்றலை வானொலியின் அறிமுகம் எனக்குப் பல வழிகளில் புதிய உலகைத் திறந்துவிட்டது. பிபிஸி உலகச் சேவை, ஆஸ்திரேலிய வானொலி இவற்றினூடாக அன்றைய மேற்கத்திய ராக், பாப் இசையை அறிமுக விளக்கங்களுடன் கேட்க முடிந்தது. ரேடியோ மாஸ்கோ, ரேடியோ ப்ராக் போன்றவை பெத்தோவெனையும், ஹண்டலையும் அறிமுகப்படுத்தின. வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா லூயி ஆம்ஸ்ட்ராங், ஸ்டீவி வொண்டர் என்று வேறு உலகைக் காட்டியது. முதல் முறையாக பிங்க் ப்ளாய்ட்டைக் கேட்டது சிற்றலை வானொலியில் என்பதால் அதன் இரைச்சலிருந்து இந்த நவீன இசையை என் காதுகளால் வேறுபடுத்தி அறியமுடியவில்லை. பின்னர் பெங்களூர் வாசம் துவங்கியபின் ஐஐஎஸ்ஸியில் துல்லியமான இசைத்தட்டிலும், அப்பொழுது பரவலாக வெளிவந்துகொண்டிருந்த ஒலிநாடாக்களிலும் ஃப்ளாய்ட்டின் ஆல்பங்களை ஒவ்வொன்றாகக் கேட்கத் தொடங்கினேன். இன்றளவும் அவர்களின் The Dark Side of the Moon, Wish you were here, The Wall இசைகள் எனக்கு ஆர்வத்தையும் கவர்ச்சியையும் தந்துகொண்டிருக்கின்றன.

பிங்க் ஃப்ளாய்டின் வெற்றிக்கு ரோஜர் வார்ட்டர்ஸ், ஸிட் பாரெட், டேவ் கில்மர் என்று யார் முக்கியம் என்ற சர்ச்சை இன்றளவும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், இசையில் அவர்கள் தொட்ட உச்சங்களில் ரிச்சர்ட் ரைட்டின் கீபோர்ட்-க்கு முக்கியமான பங்கு உண்டு. பல பாடல்கள் ரைட்டின் பல அடுக்குகளைக் காட்டும் கீ போர்ட் துவக்கத்துடன்தான் வருகின்றன. பாடலுக்கான மனநிலையை உருவாக்க மெதுவாகத் தொடங்கி முடுக்கிச் செல்லும் ரைட்டின் கீபோர்ட் உத்தி மிகவும் முக்கியமானது என்பது என் எண்ணம். குழுவின் பல மிகப் பிரபலமான பாடல்களை ரைட் எழுதி உருவாக்கியிருக்கிறார். அந்தக் காலங்களில் (ராக் இசையின் பொற்காலம்) தி ஹூ, லெட் ஸெப்ளின், பீட்டில் (அவர்களுடைய பரீட்ச்சார்த்த இசை மாத்திரமே), ஜிம்மி ஹெந்ட்ரிக்ஸ், இவர்களின் இசைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக பிங்க் ஃபளாய்டின் இசை இருந்தது. அந்த மாறுபாட்டுக்கு வேறெந்த குழுவிலும் அதிக முக்கியத்துவம் இல்லாத கீபோர்ட் வாத்தியம் இவர்களுக்குப் பெரிதும் உதவியிருக்கிறது. அந்த வகையில் பிங்க் ஃப்ளாய்டின் ஆதார ஒலி ரிச்சர்ட் ரைட்டின் கீபோர்ட்-தான் என்று தோன்றுகிறது.

ராக் உலகில் முக்கியமான பத்து ஆல்பங்கள் என்று யாராவது பட்டியலிட்டால் அதில் The Dark Side of the Moon கட்டாயம் இருக்கும். அந்த ஆல்பத்தின் முதுகெலும்புகளான The Great Gig in the Sky, Us and Them பாடல்கள் ரைட்டின் பங்களிப்பு. இவற்றைத் தவிர Shine on You Crazy Diamond, உள்ளிட்ட பல பாடல்கள் ரைட்டின் அற்புதப் படைப்புகள். மாபெரும் வெற்றிகளைத் தொடர்ந்து ஃபளாய்டின் இன்னொரு மைல்கல் ஆல்பமான The Wall 1982-ல் வெளியானது. மார்க்கரெட் தாட்சரின் அரசியல், அன்றைய சில சமூக நிகழ்வுகள் போன்றவற்றைக் கருவாகக் கொண்ட இந்த ஆல்பத்தின் இசைக் கோர்ப்பின்பொழுது ரோஜர் வாட்டர்ஸ்-க்கும் ரிச்சர்ட் ரைட்க்கும் இடையே வேறுபாடுகள் துவங்கின. தொடர்ந்து ரைட்டின் பங்கு ஃபளாய்டில் வெகுவாகக் குறைந்தது. இதன் தாக்கத்தை 1987-ல் வெளியான A Momentary Lapse of Reason ஆல்பத்தில் அறியமுடியும். இதற்குப் பிறகு ரோஜரும் ப்ஃளாய்ட் குழுவிலிருந்து வெளியேறினார். டேவ் கில்மரும் நிக் மேஸனும் கொஞ்சம் நாட்களுக்குத் தனியாக இசைத்துக் கொண்டிருந்தார்கள். விரைவில் ரைட் குழுவில் திரும்ப வந்தார். இவரது வருகைக்குப் பிறகு 1994-ல் The Division Bell ஆல்பத்தில் மீண்டும் பிங்க் ஃப்ளாய்டின் பழைய அற்புத ஒலிகள் திரும்ப வந்தன.

2005 ஆம் ஆண்டில் லைவ் 8 என்ற சமூக அறக்கட்டளைக்குப் பணம் சேர்க்கும் நிகழ்வில் - கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரோஜர் வாட்டர்ஸ், நிக் மேஸன், ரிச்சர்ட் ரைட், டேவ் கில்மர் நால்வரும் மேடையில் ஒன்றாகத் தோன்றி பாடினார்கள் (இந்த நிகழ்ச்சி அமெரிக்காவின் பொதுச்சேவை ஒளிபரப்பான PBS-ல் பல முறை இப்பொழுதும் ஒளிபரப்பப்படுகிறது). இதன் பெரு வெற்றிக்குப் பிறகு இவர்கள் மீண்டும் ஒன்றாக வரக்கூடும் என்ற ஊகங்கள் எழுந்தன. ஆனால் ரோஜர் வாட்டர்ஸ் இது சாத்தியமில்லை என்று சென்ற வருடம் சொல்லிவிட்டார். இப்பொழுது ரிச்சர்ட் ரைட்டின் இடம் வெற்றிடமாகியிருக்கிறது.

ரிச்சர்ட் ரைட் எழுதி, பிங்க் ப்ளாய்டின் மிகப் புகழ் பெற்ற பாடல்களில் ஒன்றான The Great Gig in the Sky (The Dark Side of the Moon ஆல்பம்). இப்படித் துவங்கும்: ‘I am not frightened to die’. பயங்களை அறியாது இசையின் உச்சங்களைத் தொட்ட ரைட்-க்கு அஞ்சலிகள்.

Image Courtesy: Deep Schism @ Flickr - https://www.flickr.com/photos/one_schism/284585912/, Licensed under CC BY 2.0