ஸ்டானிஸ்லா லெம்
On this page
அஞ்சலி
அறிவியல் புனைகதைகள் என்றால் உஷ்… உஷ் என்று க்ராஃப்ட்வெர்க்கைப் பார்த்து சூடுபோட்டுக்கொண்ட அமானுஷ்ய சத்தங்களுடன் தலையின் கொம்பு அல்லது கவிழ்த்து வைக்கப்பட்ட சொம்பு போன்று விசித்திரமான உடையலங்காரங்களுடன் வௌவால்களைத் தொடும் கீச்சுக்குரலில் பேசுவது, மரமுருகி மனிதனாவது அல்லது மயிர் வளர்ந்து பாம்பாவது போன்ற அதிநுட்ப விட்டலாச்சார்யாவின் மறுவடிவம் என்றுதான் நம்மில் பலருக்கும் தெரியும்.
உண்மையான அறிவியல் புனைகதைகள் மானிடத்தின் இருப்பையும் சிந்தனை எல்லைகளையும் குறித்த கேள்விகளைக் கேட்பன. பிரபஞ்சத்தில் நம்மிடத்தையும் நாமும் பிரபஞ்சமும் நிகழ்த்தும் பரஸ்பர பாதிப்புகளையும் உரத்துச் சிந்தப்பன. இந்த வகை அறிவியல் புதினங்களில் வல்லவரான ஸ்டானிஸ்லா லெம் நேற்று மரித்துப்போனார். தற்பொழுதைய உக்ரேனிய நாட்டின் பகுதியாக இருக்கும் (பழைய போலந்து) ஒரு சிறிய ஊரில் பிறந்த யூதரான லெம், கத்தேலிக்கராக வளர்க்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் பொழுது ஹிட்லரின் சேனைகளிடமிருந்து போலி ஆவணங்களைத் தயாரித்ததன் மூலம் தன்னைத் தற்காத்துக்கொண்டார். 1961ல் இவர் எழுதிய Solaris என்ற நாவல் பத்து வருடங்களுக்குப் பின்னர் சோவியத் நாட்டின் இயக்குநர் மேதையான ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கியால் திரைப்படமாக்கப்பட்டது. இதன் மூலம் லெம் உலகப் புகழ் பெற்றார். உலகிலேயே மிக அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டது லெம்மின் ஸோலாரிஸ் என்று சொல்வார்கள். இதைத் தவிர இவரது படைப்புகள் தொலைக்காட்சி நாடகங்களாகவும், இசைக் கோர்வைகளாகவும் வடிவமாற்றம் பெற்றிருக்கின்றன.
கம்யூனிஸ அடக்குமுறைகள் தலைவிரித்தாடிய நாட்களில் லெம் அரசாங்கத்தை மறைமுகமாக விமர்சிக்க அறிவியல் புனைகதை வடிவத்தை மிகத் திறமையாகக் கையாண்டார். படைப்புகளுக்குப் பெரும் கட்டுபாடுகளையும் தணிக்கைகளையும் கொண்டிருந்த கம்யூனிஸ் நாடுகளில் இப்படிச் சிக்கலான அறிவியல் புனைவுகளுக்குள்ளே தம்மைக் குறித்த விமர்சனம் பொதிந்து கிடப்பது தெரியாமலேயே தணிக்கை அதிகாரிகள் லெம்மைத் தாராளமாக உலவவிட்டார்கள்.
ஸ்டானிஸ்லா லெம்மைப் பற்றிப் பேசினால் பலரும் ஸேலாரிஸ் கதையை முன்வைத்துத்தான் பேசுவார்கள். லெம்மை நான் முதலில் படித்தது Memoirs Found in a Bathtub என்ற நாவலில்தான். எனவே இந்த நாவலைப் பற்றி கொஞ்சம் விரிவாக. புதிதாக வேலைக்குச் சேருகிறான் சாதாரணன் ஒருவன். அது மிகவும் சிக்கலான, குழப்பமான உலகம். அங்கே ஒருவருக்கொருவர் மிஞ்சி நிற்கும் ஒரே சிந்தனை பரஸ்பர சந்தேகம் என்பதே. இவனுக்குக் கொடுக்கப்படுவதும் அதே வேலைதான்; இன்ன நாளில், இந்த நேரத்தில், இந்த இடத்தில் இன்னாரை ஒற்றாட வேண்டும். இந்த உலகில் நடப்பவை எல்லாமே இருமையானவை. புறத்தே தெரியும் மனிதர்களின் அகத்தின் எண்ணவோட்டங்களைப் பற்றிய சிந்தனை தலையெடுக்க இவன் தனது இருப்புக்கும் நடப்புக்கும் அர்த்தத்தைத் தேடத் தொடங்குகிறான். பரஸ்பர சந்தேகம் ஒன்றின் மூலமாகவே தம்மை வழிநடத்திக் கொள்ளும் அந்தச் சமூகம் சரித்திரக் குறிப்புகள் அனைத்தையும் அழித்துவிடுகிறது. இந்நிலையில் அயலின் நடப்பையும் சுயத்தின் இருப்பையும் எழுதிவைக்கும் அந்தச் சாதாரணனின் குறிப்புகள் மாத்திரமே அந்தக் காலத்தை நமக்குச் சொல்கிறது. நாவலின் முழுவது கொடுரமான நகைச்சுவை இழையோடிக்கொண்டே இருப்பதால் மேம்போக்காகப் படிப்பதற்கும் அலுப்பு தட்டாது. இதைத் தாண்டி இப்புதினம் விதைக்கும் கேள்விகள் படித்து முடித்த பல நாட்களுக்கும் நம் மனதை வதைத்துக் கொண்டிருக்கும்.
பனிப்போர் காலத்தில் அமெரிக்காவும் சோவியத்தும் தமது குடிகளுக்குள்ளே விதைத்துக்கொண்டிருந்த பரஸ்பர சந்தேகத்தைக் குறித்த அற்புதமான விமர்சனம் இந்த நாவல். ‘நாகரீகக் கலாச்சாரத்தின் மீதான போர்’ என்றும் ‘விடுதலைக்கான போர்’ என்றும் தம்மையும் எதிரிகளையும் பிரித்து ஒற்றைப்படையான எண்ணங்களை விதைப்பது தொடர்ந்துகொண்டிருக்கும் இன்றைக்கும் அற்புதமாகப் பொருந்தும் விமர்சனம் இது. அறிவியல் என்ற படிமத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட பின் நவீனத்துவ (Postmodern) புதினங்களில் உச்சங்களைத் தொட்டவர் ஸ்டானிஸ்லா லெம்.
இனி ஸோலாரிஸ் படத்தைப் பற்றி; இந்தப் படத்தை பனிப்போர் காலங்களில் அமெரிக்காவின் ஸ்டான்லி குப்ரிக் என்ற மேதைக்கு சோவியத்தின் ஆந்த்ரே தார்க்கோவ்ஸ்கியின் பதில் என்று சொல்வார்கள். கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளிவந்த ஹாலிவுட்டின் செழிப்பில் எடுக்கப்பட்ட A Clockwork Orange சோவியத்தின் கட்டுப்பாடுகளுக்குளே எடுக்கப்பட்ட Solaris படத்தையும் (கி.பி இரண்டாயிரத்திற்குப் பிறகு வந்த ஹாலிவுட் ஸோலரிஸ் இல்லை) அடுத்தடுத்துப் பார்க்க சுவாரசியமாக இருக்கும். உலகெங்கிலும் தார்க்கோவ்ஸ்கியின் படமாக்கலைப் புகழ்ந்த சமயத்தில் லெம் அதை வெறுத்தார். தனது வெறுப்பை வெளிப்படுத்தவும் தயங்கவில்லை.
பொதுவில் மேற்கின் அறிவியல் புனைகதைகளில் இருக்கும் கவர்ச்சிகளையும் மேம்போக்குத்தன்மையையும் கடுமையாக விமர்சித்தவர் லெம். சாயம் தீட்டபப்ட்ட தேவதைக் கதைகளின் மறுவடிவமே அமெரிக்க அறிவியல் புதினம் என்றார் லெம். லெம்மின் விமர்சனக் கடுமைகள் பலமாக விவாதிக்கப்பட்ட போதும் நேர்மையான விமர்சகர்களால் லெம்மைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அமெரிக்க அறிவியல் புனைவாளர்களைக் கடுமையாக விமர்சித்ததால் லெம்மை அந்தக் குழுவே வெறுத்தது. பிலிப் கே டிக் லெம் கம்யூனிஸ உளவாளி என்று தூற்றியது இதன் உச்சம். (ஆனால் பிலிப் கே டிக் ஒருவர்தான் அமெரிக்காவில் நல்ல எழுத்தாளர் என்று லெம் பாராட்டியிருக்கிறார்). இப்படி முரண்பாடுகளின் உச்சமாக வாழ்ந்த லெம், பின்னாட்களில் இவற்றிலிருந்து முழுமையாக ஒதுங்கிப் போனார்.
ஆழ்ந்த படிமங்களைக் கொண்ட கதைகளை வறட்டு நகைச்சுவையின் மூலம் விறுவிறுப்பாக்கிவர் லெம். அந்தத் துறையில் அவரது உச்சத்திற்கு வேறுயாரும் ஈடில்லை எனலாம்.
லெம்மைப் போன்ற மேதைகளின் அறிவியல் புனைகதைகளை (காலம் கடந்துபோனாலும்) தமிழில் மொழிபெயர்க்க வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் நாம் எதை இழந்திருக்கிறோம் என்பதை அடையாளம் காணமுடியும். அதெல்லாம் சரியா வராதுங்க, சயின்ஸ் ஃபிக்ஸனைத் தமிழ்ல சொல்றது கஷ்டம் என்று மொண்ணையாகப் பேசிப் பேசியே காலத்தை ஓட்டிவிட்டோம். முயற்சி செய்வதன்மூலமே அதற்கான மொழியை வளர்த்தெடுக்க முடியும். லெம்மின் மிகப் பிரபலமான ஸோலாரிஸின் ஆங்கில வடிவம் உண்மையில் போலிஷ் மொழியிலிருந்து சுருக்கப்பட்டு பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டு, பின்னர் பிரஞ்ச்சிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதுத்தான். அங்கிருந்து தமிழுக்கும் மொழிபெயர்த்தால் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது.
போலிஷ் மொழியில் அறிவியல் புதினம் எழுதமுடியும், அதை ஆங்கிலத்தில் சுவை குன்றாமல் மொழிபெயர்க்க முடியும் என்றால் தமிழில் ஏன் முடியாது என்று லெம்மின் மரணத்தை அடியொற்றி நாம் கேள்விகளை எழுப்ப வேண்டியது அவசியம்.
என்னாலான சிறு முயற்சியாக லெம்மின் ஒரு சிறுகதையை சென்ற வருடம் டொராண்டோ பல்கலைக்கழத்தில் நடந்த மொழிபெயர்ப்புப் பட்டறையில் முயற்சித்துப் பார்த்தேன். லெம்மின் வறட்டு, கோர நகைச்சுவையை மொழிபெயர்ப்பது எளிதாக இல்லை. இருந்தபோதும் இந்த முயற்சி சுவாரசியமாகத்தான் இருந்தது.
முதலில் எழுதப்பட்டது: 28 மார்ச்சு 2006