நூலறிமுகம்: நரிக்குறவர் இனவரைவியல்
(நரிக்குறவர் இனவரைவியல், கரசூர் பத்மபாரதி, முதல் பதிப்பு, டிசம்பர் 2004, தமிழினி, சென்னை -14, விலை ரூபாய் 160)
தமிழில் இனவரைவியல் (ethnography) நூல்கள் அதிகம் வெளிவருவதில்லை (பொதுவில் சமூகவியல் நூல்கள் தமிழில் பதிப்பிக்கப்படுதல் மிகக் குறைவு), இந்த நிலையில் செல்வி பத்மபாரதியின் புதுச்சேரி பல்கலைக்கழக பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையை முழு இனவரைவியல் நூலாகப் பதிப்பித்திருப்பது முதலாகப் பாரட்டப்பட வேண்டிய காரியம். தொல்குடியினரான நரிக்குறவர்கள் வேளாண் கலாச்சாரத்திற்கு முந்துபட்ட வேட்டைக் கலாச்சாரத்தை அடியொற்றி வாழ்பவர்கள். வடக்கிலிருந்து (குஜராத்) தமிழகத்திற்குப் புலம்பெயர்ந்தவர்கள். புலம்பெயர்ந்த சூழலில் வந்துசேர்ந்த கலாச்சாரத்துடன் தங்களை முழுமையாக இணைத்துக்கொள்ளாது சில நூறு ஆண்டுகள் ஆனபின்னரும் தனித்த அடையாளம் கொண்டு நிற்கிறார்கள். வாக்ரிபோலி என்ற வரிவடிவமில்லா பேச்சு மொழியைக் கொண்டவர்கள். இவர்களது உடையுடுத்தல் இவர்களைத் தனித்துக் காட்டுகிறது. உள்ளினத் திருமணங்கள், தனிப் பஞ்சாயத்துகள், வழிபாட்டு முறைகள் என்று கலாச்சார தனிமை கொண்டிருந்தாலும் தமிழகம் முழுவதும் அனைத்துப் பகுதியிலும் விரவி வசிப்பவர்கள் இவர்கள். இவர்களைப் பற்றிய ஒரு முழுமையான தகவல் நூலாக அமைந்திருக்கிறது இந்தப் புத்தகம்.
புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் மானிடவியல் பேராசிரியர் பக்தவத்சல பாரதி அணிந்துரை வழங்கியிருக்கிறார். தமிழில் இனவரைவியல் ஆய்வுகளுக்கான ஒரு சிறிய, தெளிவான அறிமுகமாக அமைந்திருக்கிறது அவருடைய அணிந்துரை. இந்தியாவில் முதன்முதலில் இன்வரைவியலை மேற்கொண்டவர்கள் ஆங்கிலேயர்கள்தாம். காரணம் வந்த இடத்தின் குடிகளைத் தமது ஆளுகைக்கு உட்படுத்த அவர்களுக்கு இந்தத் தரவுகள் முக்கியமானவையாக இருந்திருக்கின்றன. இதே காரணத்திற்காகத்தான் அவர்கள் குடிக்கணக்கையும் துவக்கினார்கள். விடுதலைக்குப் பிறகு பத்தாண்டுக்கொருமுறை குடிக்கணக்கு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. ஆனால் இனவரைவியல் ஆய்வுகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவில்லை.
இனவரலாறு, சமூக அமைப்பு, புழங்கு பொருட்கள், பொருளாதாரம், திருமணம், சடங்குகள், சமயம், பஞ்சாயத்து (நீதி முறை), மருத்துவம், சமூக மாற்றம், வழக்காறுகள் என்று பதினோறு தலைப்புகளில் ஆழமான தகவல்களை உள்ளடக்கியிருக்கிறது. இனவரைவியல் ஆய்வை மேற்கொள்பவர்கள் கையாள வேண்டிய முறைகளாகப் பின்வருவனவற்றைச் சொல்வர்கள்: உடனிருந்து பழகல், படம், ஒலி/ஒளிப்பதிவுகள் மூலம் ஆவணப்படுத்தல், நேர்முகம் காணல், பிற ஆவணங்களை அலசல் இவற்றுடன் கூட ஊடுறுவலின்றி உற்று நோக்கலும் மிக முக்கியமானது. பத்மபாரதி இந்தப் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகள் அனைத்தையும் திறமையாகக் கையாண்டிருப்பது இந்த நூலின் வழியே புலப்படுகிறது. வேற்று இணத்தவர் தொல்குடிகளுடன் நெருங்கிப் பழகி தகவல்களைப் பெறுதல் என்பது மிகவும் சிக்கலான காரியம். இதைச் செய்வதற்குத் திறமையும் பொறுமையையும் நிறைய தேவை.
நான் சிறிய சாவித்துளையின் வழியே மாத்திரமே கண்டிருந்த உலகிற்குக் கதவைத் திறந்து அழைத்துச் சென்றது இந்த நூல் என்று சொன்னால் அது மிகையில்லை. குஜராத்திலிருந்து பெயர்ந்து பல இடங்களுக்குக் குடிபெயர்ந்த இந்த இனக்குழுவிற்கு வங்காளத்தில் ‘சிங்களன் ‘ என்று பெயரிருப்பது விநோதம். வழிபாட்டு முறையில் சிவனை முழு முதற் கடவுளாகக் கொண்டாலும் (தாதாஜி) சடங்குகளில் காளி, ஈஸ்வரி, மாரியம்மன், துர்க்கை என்று பெண் கடவுளர்களுக்கே முக்கிய இடமிருக்கிறது. சடங்குகளின் அர்ப்பணிப்பு தேவியரையே சேருகிறது. அதேபோல தேவியரே குறிசொல்லும் பூசாரியில் தோன்றி சனங்களுக்குத் தீர்வு வழங்குகிறாள். நரிக்குறவர்களிடம் இருக்கும் இன்னொரு முக்கியமான வழிபாட்டு முறை – எருமைப் பலியிடல். ஒரு காலத்தில் நம் சமூகமெங்கும் பரவலாக இருந்த கொற்றவை வழிபாடும் அதனையொட்டி வரும் எருமைப் பலியிடலும் இப்பொழுது பெரும்பாலும் வழக்கொழிந்து போயிருக்கின்றன. (நானறிந்த வகையில் காரைக்கால் பகுதியின் அம்பகரத்தூரில்தான் இந்தப் பலியிடும் வழக்கம் தொடர்ந்து வந்தது. நவீன கலாச்சார போலீசார் இதை இன்னும் விட்டுவைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை). ‘த்ராங்டு ‘ (சாமி சொத்து) என்று சொல்லப்படும் வழிபாட்டு விக்ரகங்கள், சடங்குக் கருவிகள் அடங்கிய துணிப்பொதி தலைமுறைகளாகப் பெறப்பட்டு பெரு மரியாதையுடன் பாதுகாக்கப்படுகிறது. நரிக்குறவர்களைப் பொறுத்தவரை த்ராங்டு எல்லாவற்றுக்கும் மேலான மதிப்பும் மரியாதையும் உடையது. பிறப்பு, பெயரிடுதல், காதணி, பூப்பு, திருமணம், இறப்பு போன்ற சடங்குகள் மிக விரிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் சில முற்றாக வேறுபட்டிருந்தாலும் பெரும்பாலானவை தமிழரின் பெருவழக்குகளோடு ஒத்துப் போகின்றன.
நரிக்குறவர்களின் பொருளாதார முறை, பஞ்சாயத்து மூலம் நீதி வழங்கல், குடும்ப உறவுகள், திருமண முறைகள், திருமண விலக்கு பெறுதல் (விலக்கு பெற்ற பெண் மறுமணம் செய்ய எந்தத் தடையும் இல்லை) என்று நூலில் பல அற்புதத் தகவல்கள் இருக்கின்றன. மிகவும் நுணுக்கமாக பல விபரங்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. இந்த ஆய்வுகள் பெரும்பாலும் புதுச்சேரி பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களிடையே மாத்திரமே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, தமிழகத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர்களின் வாழ்முறைகளுடன் ஒப்பீடு எதுவுமில்லாதது இதன் பெரிய குறைபாடாகத் தோன்றுகிறது. அதேபோல நானறிந்த வகையில் நரிக்குறவர்கள் பெரும்பாலான உயிரியல் மருத்துவ ஆய்வுக்கூடங்களுக்கு ஆராய்ச்சிகளுக்காக வெள்ளெலிகளையும் பிற மிருகங்களையும் பிடித்து விற்கிறார்கள் (சொல்லப்போனால் ஆய்வுக்கூடங்கள் விலங்குகள் தேவைக்கு முற்றுமுழுதாக நரிக்குறவர்களையே சார்ந்து நிற்கின்றன). இந்தத் தகவல் பதிவு செய்யப்படவில்லை.
நூலின் அணிந்துரையில் பேரா. பக்தவத்சல பாரதி இந்திய சனத்தொகையில் பழங்குடிகளின் பங்கு 7.76% (1981 குடிக்கணக்கின்படி) என்று காட்டுகிறார். ஆனால் தமிழகத்தில் இவர்களின் பங்கு 1.07% தான். நரிக்குறவர்கள் கல்வியாலும், பொருளாதாரத்தாலும் மிகப் பின் தங்கியவர்கள். சில துறைகளில் வளர்ச்சியின்மை காரணமாக இவர்களிடையே குழந்தைகள் மணம், சுகாதாரக் குறைவான பழக்கங்கள் போன்றவை காணப்படுகின்றன. இந்த நிலையில் இவர்களுக்கு கல்வியிலும் வேலையிலும் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை ஓரள்வுக்கேனும் விஷயமறிந்த யாரும் ஒத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்களுக்குத் தமிழகத்தில் ‘அட்டவணை பூர்வ குடியினர் ‘ தகுதி வழங்கப்படவில்லை. (கர்நாடகம், குஜராத், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இவர்கள் பூர்வ குடியினராக அடையாளம் காணப்படுகிறார்கள்) எனவே . தமிழகத்தில் இவர்களுக்கு ‘மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி ‘ என்ற வரையறைதான் இருக்கிறது (இந்தப் பிரிவில் வரும் பிற சாதியினரின் கல்வி, பொருளாதார, சமூக, அரசியல் அந்தஸ்து, அவர்களின் நிரந்த சொத்துக்கள் போன்றவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்). இந்த நிலையில் இவர்களுக்கு கடுமையான சமூக அநீதி இழைக்கப்படுவதைக் குறித்து எந்தத் தமிழ்க் குழுக்களும் பெரிதாகக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
இனவரைவியலை ஒரு முற்றுமுழுதான ஆராய்ச்சி வடிவாகப் பார்க்க வேண்டும் என்பார்கள். சரித்திரம், சமூகம், பொருளாதாரம், தொடங்கி குழுக்கதையாடல்கள் வரை எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்பொழுதுதான் ஒரு இனத்தைப் பற்றிய சரியான புரிதல் ஏற்படும். உதாரணமாக, இன்றைக்கு இந்தியாவில் வழக்கொழிந்து போயிருக்கும் எருமைப் பலியிடலையும், பச்சை இரத்தம் குடிப்பதையும் மாத்திரமே தனித்துப் பார்ப்பவர்களுக்கு நரிக்குறவர்கள் காலத்தால் உறைந்துபோன காட்டுமிராண்டிகள் என்ற அபத்தக் கருத்து உருவாகலாம். ஆனால் மறுபுறத்தில் தெளிவாக உருவான குடும்ப அமைப்பு முறை, சகோதர-சகோதரி பாசம், புரிந்துணர்வு, பொருளாதரத்தைத் தாண்டி நிம்மதியான நிறைவை நாடும் மனப்பாங்கு ஆகியவை நரிக்குறவர் இனத்தை முன்மாதிரியாகக் கொள்ளத் தூண்டுகின்றன. அந்த வகையில் பத்மபாரதியின் இந்த இனவரைவியல் நூல் முழுமை பெற்றிருக்கிறது.
மானுடவியலின் நான்கு கூறுகளில் கலாச்சார மானுடவியல் (Cultural Anthropology) மிகவும் முக்கியமானது. பத்மபாரதியின் இந்த இனவரைவியல் மூலம் நரிக்குறவர்களைப் பற்றிய இந்த கலாச்சாரப் புரிதல் துவங்கியிருக்கிறது. இதனை அடியொற்றி பிற மாணவர்கள் இயல்சார் (Physical) மானுடவியல், மொழிசார் (Linguistic) மானுடவியல், தொல்பொருளியல் (Archeology) போன்ற ஆய்வுகளை மேற்கொள்ள முன்வருவார்கள் என்று நம்புவோம்.
- திண்ணை, 06 ஜனவரி 2006