இருத்தலின் தாளவியலா எடையின்மை

M. Kundera
இன்றைக்கு ராயர் காபி கிளப்பில் நாகரெத்தினம் கிருஷ்ணா தன் பிரஞ்சு எழுத்தாளர்கள் வரிசையில் குந்தெராவை அறிமுகப்படுத்தியிருக்கிறார். நா.கி மிலன் குந்தெரா-வை பிரஞ்சுக்காரராக சுவீகரித்துக் கொண்டுவிட்டது (அலுவலகத்தில் எனக்கு அடுத்த இருக்கையில் இருக்கும்) என் நண்பன் மிலாஷ் குசேரா (Milos Kucera) காதில் விழுந்தால் அவரைச் சும்மா விடமாட்டான். :) (குந்தெரா செக்-கில் பிறந்தவர் என்பதைத் தவிர எங்கள் குசேராவுக்கு அவரைப்பற்றி ஒன்றும் தெரியாது).

நோபல் பரிசுக்குத் தகுதியானவர்கள் பட்டியலில் குந்தெரா நிரந்தர உறுப்பினர்.

நான் குந்தெராவை அதிகம் படித்தது கிடையாது; ஆனால் நான் படித்த ஒரே கதையான “இருத்தலின் தாளவியலா எடையின்மை” (The Unbearable lightness of Being) மறக்க முடியாத நாவல். 1968ல் செக்கொஸ்லோவாக்கிய நாட்டை சோவியத் ஆக்கிரமிக்கு முன்னர் நடப்பதாக புனையப்பட்ட கதை இது.

நாயகன் தோமஸ் ஒரு மருத்துவன். அவனது கொள்கை “காமம் பிற இணைப்புகளையும், உணர்வுகளையும் கடந்தது”. அதைத் தேடுவதே அவன் இருத்தலின் இலக்காகிப் போகிறது. முதலில் கிட்டத்தட்ட காமத்தின் மீதான அவனுடைய கொள்கையைப் பிரதிபலிப்பவளாக இருக்கும் ஸபீனாவுடன் அவன் இலக்குகள் ஏதுமின்றி காமத்தைத் தேடுகிறான். விரைவில் அவர்கள் தங்களுக்கு உறுப்புகளின் பிணைப்பைக் கடந்து ஏந்தவிதமான ஒருமையும் இல்லை என்பதை அறிந்துகொள்கிறார்கள். கிராமம் ஒன்றுக்குச் செல்லும் தாமஸ் அங்கு தெரஸா என்பவளைப் பார்க்கிறான்; கண்டதும் மையல் கொள்கிறான்.

ஒரு நாள் சற்றும் எதிர்பாராத வகையில் அவள் அவனுடைய பிராஹா நகர இல்லத்திற்கு வருகிறாள். உறவுகளற்று இருக்க வேண்டுமென்ற அவனது இலட்சியத்திற்கு எதிராக அவளை அவனுடன் தங்க வைத்துக் கொள்கிறான். தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். தாமஸ் தனது கொள்கையைக் காற்றில் விடுகிறான். தெரஸா பிராஹா நகரில் புகைப்படக் கலைஞராகப் வேலை செய்கிறாள். அப்பொழுது சோவியத் கொடுமைகளைப் பற்றிய படங்களை வெளிநாடுகளுக்கு இரகசியமாக அனுப்புகிறாள்.

தாமஸ்-தெரஸா இருவரும் செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து தப்பி ஜெனீவா வருகிறார்கள். அங்கிருக்கும் ஸபீனாவுடன் மிண்டும் தன் “இலக்கற்ற காமம்” இலட்சியத்தை தாமஸ் தொடருகிறான். தாமஸின் இந்த நடவடிக்கையால் ஏமாந்துபோகும் தெரஸா தானும் இலக்கற்று களிக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறாள். ஆனால் தெரஸாவின் இயல்புக்கு அது ஒத்துப்போவதில்லை. இடையில் ஸபீனாவைக் கண்டதும் காதல் கொள்கிறார் ஒரு பேராசிரியர். அப்பொழுது ஸபீனாவுக்குப் போராட்டம்; தன்னைக் காதலிப்பவருடன் ஓடிப்போகலாமா அல்லது தாமஸ் தனக்குப் போதித்த இலக்கற்ற காமம்; எல்லையற்ற இன்பம் கொள்கையைத் தாமஸைவிட அதிகம் கடைபிடித்து அவனைத் தோற்கடிப்பதா?

இந்நிலையில் தெரசாவிற்கு ஒரு சஞ்சிகைக்குத் நிர்வாணப் பெண் படம் தேவையாக இருக்கிறது; அவள் ஸபீனாவை நாடுகிறாள். இருவரும் ஒருவரையருவர் படம் எடுக்கிறார்கள் - அப்பொழுது அவர்களிடையே தன்னிச்சையாக இலக்கற்ற காமம் வழிந்தோடுகிறது.


நாவலின் இரண்டு முக்கிய பெண் பாத்திரங்கள் இரு வேறு செங்குத்து தளங்களில் பயணிக்கின்றன. தெரசா உண்மையான அன்பை விழைகிறாள்; அதற்கான அர்ப்பணிப்புகளுக்குத் தயாராக இருக்கிறாள். தோமஸின் மீது கொண்ட காதல், காதலுக்கு முழுவதுமாக கட்டுண்டு போகாமல் பிறரைத் தேடும் தோமஸினால் ஏற்படும் ஏக்கம், தன்னுடைய நாட்டின் மீது கொண்ட அன்பு, அது கம்யூனிஸ்டுகளால் சிதைக்கப்படுவதால் ஏற்படும் துயரம் என பல வழிகளில் தன்னுடைய அர்ப்பணிப்புகளின் சுமையால் வீழ்த்தப்படுகிறாள்.

மறுபுறம் ஸபீனா; கிடைத்த ஒரே சந்தர்ப்பத்தில் செக்-கை விட்டு ஓடிவந்து சுவிஸில் சௌகரியமாக வாழ்கிறாள். அவளுக்கு எப்படி தாய்நாட்டின்மீது பற்றிலையோ அது போலவே பல்வேறு வடிகால்களில் காமமும் அவளை சுதந்திரமாக்குகிறது. எந்தவிதமான குற்றவுணர்களும் இல்லாததால் எடையின்மையோடு தன்வழி செல்கிறாள். ஆனால் அவளுக்கும் தன்னை விரும்பும் ஒருவன் கிடைத்ததும், தோமஸ் போதித்த தளையறு தத்துவத்தைக் கையாண்டு தோமஸை வெற்றி கொள்வதா அல்லது கிடைத்திருக்கும் நட்புடன் வறட்டுச் சித்தாந்தங்களுக்கு முடிவுகட்டுவதா என்று தத்தளிக்கிறாள். எடையின்மையின் சுமை அவளை அழுத்துகிறது.

குந்தெரா இந்த நாவலை சோவியத் ஆக்கிரமிப்புகளின் பின்னனியில் புணைந்திருக்கிறார். ஒருபுறம் சமுதாய மாற்றம், போர் போன்ற கொந்தளிப்புகளும் மறுபுறத்தில் தனிமனிதன் தன் சுயத்தை மீட்டுருவாக்கும் முயற்சிகளும் என கதை போகிறது. மிகவும் வித்தியாசமான கதைதான். இதைப் பின்னர் திரைப்படமாகவும் பார்த்தேன். நாவலில் புரியாத சில பகுதிகள் திரைப்படத்தின் காட்சியமைப்புகளால் எளிதாகப் புரிந்தன.


முழு ‘நீல’ வண்ணப்படத்தைத் தர அனைத்து சாத்தியங்களும் குந்தெராவின் புனைவில் இருக்கின்றன. அவற்றைச் சற்றும் தவரவிடாமல் படத்தை இயக்கியிருக்கிறார் பிலிப் கௌ·ப்மான் (Philip Kaufman) ஆனால் படத்தைப் பார்க்கும்பொழுது விரசம் சற்றும் தலைதூக்கவில்லை. இந்தப் படத்தை இருவிதமாகப் பார்க்கலாம்.

  1. மிகவும் மெதுவாகச் செல்லும் திரைக்கதையை அதன் ஒட்டத்திலேயே விட்டுவிட்டு புனைவில் இருக்கும் நல்ல விஷயங்களைத் தேடலாம். (இதற்கு கிட்டத்தட்ட மூன்று மணி நேரமாகும். மிக நீண்ண்ண்ண்ண்ட திரைப்படம்)

  2. கையில் தொலை இயக்கியை வைத்துக் கொண்டு ‘அது மாதிரி’ காட்சிகளை மட்டும் பார்த்து முடிக்கலாம். (இதற்கு இரண்டே முக்கால் மணிதான் ஆகும்).

இந்தப் படத்தை எப்படிப் பார்க்கக் கூடாது :) என்பதையும் பற்றி;

  1. கட்டாயம் திரையரங்குக்குப் போய் பார்க்காதீர்கள். மூன்று மணிநேரத்திற்கு ‘எடையின்மையின் அழுத்தத்தைத்’ தாங்கக்கூடியவர்கள் மிகவும் குறைவு.

  2. இஷ்டமித்ரர்களுடன் பார்ப்பதென்றால் மேற்சொன்ன இரண்டாம் உத்தியைக் கையாளவும்.

  3. உறவினர்களைத் தவிர்க்கவும்.