புத்தக விமர்சனம் : The Indian Clerk
Book
- The Indian Clerk
- David Leavitt
- Bloomsbury, USA. 2007
- https://www.amazon.com/dp/B004DI7IOQ?btkr=1
இப்படியெல்லாம் கணிதச் சமன்பாடுகளை இடையிடையே போட்டு நாவல் என்று கையில் கொடுத்தால் படிக்க முடியுமா என்றுதான் முதலில் தோன்றியது. ஒன்றிரண்டு அறிவியல் புதினங்களைத் தவிர நான் சமன்பாடுகளைப் பெரிதும் புதினங்களில் கண்டதில்லை. டேவிட் லெவிட்டின் தி இந்தியன் க்ளர்க் நாவல் அற்புதமான புனைகளத்தைக் கொண்டது. முதலாம் உலகப் போருக்குச் சற்று முந்தைய காலத்திலிருந்து இந்தச் சரித்திர நாவல் துவங்குகிறது. சரித்திர நாவல்களில் நாம் பெரிதும் கண்டவை உண்மை நிகழ்வுகளினூடாக புனைவு மாந்தர்கள் உலவும் களங்களைத்தான். கற்பனை கதாபாத்திரங்கள் உண்மை சரித்திர நிகழ்வுகளில் பங்குபெறுவார்கள் (புலிநகக் கொன்றை நாவலில் கண்ணனும், நம்பியும் பெரியார் பேருரையைக் கேட்பதைப் போல). தொட்டுக்கொள்ள ஊறுகாயாக உண்மை சரித்திர நாயகர்கள் அவ்வப்போது வந்துபோனாலும் கதையின் மையமாக கற்பனை மாந்தர்களே பெரிதும் இருப்பார்கள். வேறொருவகையான சரித்திரப் புதினத்தில் உண்மைக் கதாமாந்தர்கள் கற்பனை சம்பவங்களில் இடம்பெறுவார்கள். (இருந்தபோதும் கதையின் பெரும நிகழ்வுகள் பெரிதும் சரித்திர சம்பவங்களை ஒத்திருந்தாக வேண்டும்). இந்த இரண்டாம் வகை சரித்திரப் புனைவுகள் அதிகம் எழுதப்படுவதில்லை. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளை அதிகம் மாற்றமுடியாது, உண்மைக் கதைமாந்தர்களின் பிம்பத்தைப் பெரிதும் சிதைக்கமுடியாது என்ற புனைவு நெருக்கடிக்களுக்கு இடையில் கதாசிரியனுக்கான எல்லைகள் குறுகிச் செல்ல, கதாமாந்தர்களின் உளவியல், தனிப்பட்ட சம்பவங்கள், ஒன்றிரண்டு புனைவுப் பாத்திரங்களின் கோப்பு ஆகியவைமட்டுமே இதில் சாத்தியம். இத்தனைச் சிக்கல்களுக்கிடையில் டேவிட் லெவிட் இந்தப் புதினத்தை எழுதியதே ஒரு சாதனையாகத்தான் தோன்றுகிறது.
கதையின் களம் முதல் உலகப்போர் காலத்திய கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம். கதாமாந்தர்களாக இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமூளைகளாக அறியப்படும் ஹெரால்ட் ஹார்டி, ஜான் லிட்டில்வுட், ஶ்ரீநிவாஸ ராமானுஜன், தத்துவமேதையும் அரசியல்வாதியுமான பெர்ட்ராண்ட் ரஸல், ஜி.ஈ. மூர், பொருளாதார நிபுணர் ஜான் மெய்னார்ட் கெய்ன்ஸ், கூடவே ஆஸ்திரியாவிலிருந்து வருகைதரும் தத்துஞானி லுட்விக் விட்ஜென்ஸ்டைன், எழுத்தாளர் டி.ஹெச். லாரனஸ் என்று அந்தக் காலத்தின் உலகப் பெரும்மேதைகள் உலாவருகிறார்கள். முதலாம் உலகப்போரின் நிகழ்வுகள் கதையின் போக்கை நங்கூரமிடுகின்றன. இப்படி உயர்ந்தபட்ச சவால்கள் நிறைந்த கதையமைப்பை டேவிட் லெவிட் திறமையாகவே கையாண்டிருக்கிறார்.
கதையின் இரண்டு முக்கிய பாத்திரங்கள் கேம்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியர் ஹெரால்ட் ஹார்டியும், அவரால் புழுதியிலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்டு பட்டைதீட்டப்பட்ட வைரமான ஶ்ரீநிவாஸ இராமானுஜனும். இராமானுஜனின் மறைவுக்குப் பல வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் பேராசிரியர் ஹார்டி ஆற்றும் உரையிலிருந்து கதை துவங்குகிறது. ஹார்டி அவருடைய கணிதக் கண்டுபிடிப்புகளைப் பற்றியோ, வாழ்வனுபவங்களைப் பற்றியோ பேச அழைக்கப்படவில்லை. ஹார்வர்ட் கேட்க விரும்பியது ராமானுஜனைப் பற்றி. வெள்ளையர்களின் அடிமையில் இருந்த இந்தியாவின் மூலையில் கும்பகோணம் என்ற சிறிய ஊரில் வளர்ந்தவர் ராமானுஜன். யாராலும் பயிற்றுவிக்கப்படமலேயே உயர்கணிதத்தின் பல உண்மைகளைத் தனக்குத்தானே வருவித்துக் கொண்டவர்; கூடவே உலகம் அறிந்திராத புதிய உண்மைகளையும் சமன்பாடுகளையும் வரையறுத்தவர். எதேச்சையான ஒற்றைக் கடிதம் மூலம் ஹார்டி ராமானுஜனின் மேதைமையை அடையாளம் கண்டார். தனது முப்பத்துமூன்றாவது வயதில் மரித்துப் போன இராமானுஜன் இன்றளவும் மிகவும் முக்கியமான கணித மேதைகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.
டேவிட் லெவிட் மூன்றாம் மனிதனாக நின்று படர்க்கையில், நிகழ்காலத்தில் இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார். இந்தப் புத்தகம் குறித்த பேட்டியொன்றில் அந்த உத்தியின் தெரிவு குறித்து விளக்கியிருக்கிறார். நிகழ்காலத்தின் வர்ணனை வரலாற்றுப் புதினத்தை ஒரு அருங்காட்சியகத்தின் பழமையிலிருந்து விலக்கி நிகழ்வின் சுவாரசியத்திற்கு இட்டுச் செல்கிறது. வாசித்த எனக்கும் அப்படித்தான் தோன்றியது. இறந்தகால வர்ணனையாக இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருந்தால் அதன் நான்கின் ஒரு பகுதியைக்கூடத் தாண்டியிருக்க முடியாது. இடையிடையே ஹார்டியின் ஹார்வர்ட் பேருரைகளைக் கொண்டு ஹார்டியின் பார்வையில் நேரடி அனுபவப் பகிர்வாகவும் கதையை நகர்த்திச் செல்கிறார். இராமானுஜனுக்கும் ஹார்டிக்கும் இருக்கும் வித்தியாசங்கள் அதிகம். இராமானுஜன் முறையான கணிதப் பயிற்சியில்லாதவர், சுயம்புவாகக் கற்றுக் கொண்ட அவருக்கு கணிதத்தின் அசைக்கமுடியாத நிரூபணமுறையின் தேவையும் அவசியமும் தெரிந்திருக்கவில்லை. சுயேச்சையாக எண்களுக்குள்ளே உள்ள அற்புத ஒற்றுமைகளை அடையாளம் கண்டுகொண்டு அடுத்த அற்புதத்திற்கு நகர்ந்துவிடுவார். மறுபுறத்தில் ஹார்டி ஆழமான நெறிமுறைகளின் கட்டமைப்பின்மீதான கணித முறைகளில் வேறூன்றியவர். தெள்ளத் தெளிந்த உண்மைகளைக்கூட நிரூபணத்தின் மூலம் ஆணித்தரமாக உறுதிப்படுத்தும் அறிவியல்முறையைச் சேர்ந்தது அவருடைய வழிமுறை. இருந்தபோதும் முப்பது பக்கங்களுக்கு, எந்தவிதான நிரூபணங்களும் இல்லாமல், கிறுக்கித் தள்ளப்பட்ட கணிதச் சமன்பாடுகளிடையே இராமானுஜத்தின் ஞானத்தை ஹார்டியால அடையாளம் காணமுடிகிறது. கூடவே அவருடைய சகாவான லிட்டில்வுட் அதை உறுதிசெய்ய இராமானுஜனை கேம்ப்ரிட்ஜ்க்கு அழைக்க முடிவெடுக்கிறார் ஹார்டி. வைதீகத்தில் ஊறிப்போன குடும்பத்திலும், சமூகத்திலும் கடல்கடந்து செல்ல அவருக்குத் தடைகள். இராமானுஜனின் தாயாரின் கனவில் வெள்ளைக்காரர்களுக்கு நடுவில் கோட்டு-சூட்டுப் போட்டு இராமானுஜன் அமர்ந்திருப்பதைப் போன்ற தோற்றத்தில் புலப்பட, அது கடவுளின் ஆக்ஞை எனக்கொள்ளத் தடைகள் நீங்குகின்றன. இராமானுஜனை இங்கிலாந்து வரவழைப்பதில் இந்தியாவிற்கு வருகைதரும் கேம்ப்ரிட்ஜின் இன்னொரு பேராசிரியரான எரிக் நெவில்-ம் அவரது மனவை ஆலிஸ் நெவிலும் நிறைய உதவி செய்கிறார்கள்.
டிரினிடி கல்லூரிக்கு வந்த இராமானுஜனுக்கு நிரூபண முறையின் அவசியத்தை ஹார்டி பயிற்றுவிக்கிறார். ஹார்டி தீவிர நாத்திகர், இராமானுஜனோ கணக்கு கனவுகளில் அவர் நாவில், தெய்வமான நாமகிரித் தாயாரால் எழுதப்படுகிறது என்று நம்புகிறார் (அல்லது ஹார்டியின் கூற்றுப்படி அவரைச் சேர்ந்தவர்கள் அவரை அப்படி நம்பவைக்கிறார்கள்). முன்னரே சொன்னபடி ஹார்டி அறுதியான நிருபண கணித வழி வந்தவர். மறுபுறத்தில் இராமானுஜன் எதேச்சையாக கடற்கரையில் சிப்பிக்களைப் பொறுக்குவதைப் போல கணிதத்தின் முத்துக்களைப் பொறுக்கியெடுத்துக் கோர்க்கிறார். லிட்டில்வுட்டின் கூற்றுப்படி “ஹார்டி புழக்கத்தில் இல்லாத தற்பாலர்” (Hardy is a non-practising homosexual). திருமணம் செய்துகொள்ளாத லிட்டில்வுட் கேம்ப்ரிட்ஜ்க்கு வெளியே திருமணமான ஒரு பெண்ணுடன் நிரந்த உறவு கொண்டவர். உலகம் போற்றும் தத்துவ ஞானியான ரஸல் பெண்களிடம் போதைகொண்டவர். வைதீகக் கூட்டுக்குள்ளிருந்து வெளியேவரும் இராமானுஜனை இந்தக் கலாச்சார அதிர்வுகள் முற்றாகத் தனிமையில் ஆழ்த்துகின்றன.
இதுவரை சொன்ன கதாபாத்திரங்களும் பெரும நிழ்வுகளும் முற்றிலும் உண்மையானவை. இவற்றுடன்கூடப பல கற்பனை பாத்திரங்களும், சம்பவங்களும் கோர்க்கப்பட்டிருக்கின்றன. ஹார்டியின் முன்னாள் தற்பால் காதலான (தற்கொலை செய்துகொண்ட) கேய் ரிச்சர்ட்ஸ் அவ்வப்பொழுது ஹார்டியின் ஆழ்மனத்துடன் தீர்க்கமான சர்ச்சைகளில் ஈடுபடுகிறான். இராமானுஜனின் கணக்கு மட்டுமே புலப்படும் ஹார்டியின் கண்களுக்கு அந்நிய தேசத்தில் இராமானுஜன் பரிகொடுக்கும் இளம் மனைவியையும், அவர் இழந்துதவிக்கும் இல்லத்தின் பாதுகாப்பையும் அறியமுடிவதில்லை. மாறாக ஆலிஸ் நெவில் ஒரு தாயின் பரிவுடன் இராமானுஜனைப் பராமரிக்க முற்படுகிறாள். மிகுந்த பிரயாசையுடன் இராமானுஜனுக்காக சைவச் சமயலைக்கற்றுக் கொண்டு அவருக்கு “வெஜிட்டேரியன் கூஸ்” தயாரிக்கிறார். ஒரு கட்டத்தில் ஆலிஸ் இராமானுஜன்மீது மையல்கொண்டு முத்தமிடுகிறாள். சராசரி இல்லறத் துணைவியாக இருக்கும் ஆலிஸ் இரண்டாம் உலகப்போரின்போது தனது இல்லற சுகங்களைவிட்டு இலணடனில் சென்று பத்திரிக்கையில் மொழிபெயர்ப்பளராகிறார். முதிர்கன்னியான ஹார்டியின் சகோதரி கெட்ரூட்டிடம் இராமானுஜனின் இழப்புகளைப் பற்றிய விசனங்களை எழுதுகிறாள்.
ஒருபுறத்தில் ஹார்டியால் இயக்கப்படும் இயந்திரமாக கணிதக் கண்டுபிடிப்புகளை உருவாக்கிறார் இராமானுஜன். ஹிண்டூ கால்குலேட்டரின் புகழ் ஐரோப்பாவைத் தாண்டி அமெரிக்காவுக்கும் பரவுகிறத்து. மறுபுறம் இரசம், அப்பளம் போன்ற சின்னசின்ன இழப்புகளுக்காக இராமானுஜன் ஏங்குகிறார். அடையாளம் காணமுடியாத வியாதியால் உருக்குலைகிறார். லிட்டில்வுட் பிரிட்டன் இராணுவத்துடன் போரிட இணைகிறார். பெர்ட்ராண்ட் ரஸலில் அமைதிப் பிரச்சாரங்கள் அவரது கேம்ப்ரிட்ஜ் வேலையை இழக்கச் செய்து சிறையிலிடுகின்றன. சாதனைகள் சாத்தியமற்ற சராசரிக் கணிதரான எரிக் நெவில் வேலையை இழக்கிறார். தாளமுடியாத மன உளைச்சலுக்கு ஆளாகும் இராமானுஜன் இரயிலின் முன் குதித்துத் தற்கொலை செய்துகொள்ள மேற்கொள்ளும் முயற்சி தோல்வியில் முடிவடைகிறது. உடல்நலம் குன்றி எலும்புருக்கி நோயாளிகளுடன் நிரந்தரப் படுக்கையில் இராமானுஜன் வீழ்கிறார். ஹார்டி தனிமையில் வாடுகிறார். இந்தியா திரும்பும் இராமானுஜனின் மறைவுடன் கதை முடிகிறது.
இப்படி அற்புதமான சம்பவக் கோர்வைகள், ஆழமான (உண்மைப) பாத்திரங்கள் என்று பல சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் கதையின் ஓட்டம் பரபரப்பாக இல்லை. பல இடங்களில் வறட்டுச் சம்பவ வர்ணனைகளாகவே நீண்டு செல்கின்றன. கதையில் இராமானுஜனின் பார்வையில் எதுவுமே சொல்லப்படாதது ஆழ்ந்து சிந்தித்த முடிவு என்று டேவிட் லெவிட் சொல்கிறார். யாராலும் அறியமுடியாத அந்த மனத்தின் போக்கை வாசிப்பவரின் ஊகத்திற்கே விட்டுவிடுகிறார். இது மிக நல்ல உத்தியாகவே தோன்றுகிறது. ஹார்டியின் பாத்திரம் ஓரளவுக்கு நன்றாகவே வந்திருக்கிறத்து. செரிவாக்கப்பட்ட சுயசரிதையாக ஹார்டி எழுதிய புத்தகத்தில் (A Mathematician Apology, Harold Hardy, Cambridge University Press, 1961) ஹார்டி மிகப் புத்திசாலித்தனமான, தன்னுள்ளியாக (Introvert) ஆனால் அதேசமயத்தில் தீர்க்கமான மதிப்பீடுகளைக் கொண்டவராக வெளிப்படுகிறார். இந்த நாவலிலும் ஹார்டியின் பாத்திரமாக்கம் அப்படியே அமைந்திருக்கிறது. ஆனால் மறுபுறத்தில் ஆழமாக ஆய்ந்தே முடிவுகொள்பவரான ஹார்டி, இந்தியாவைப் பற்றி எந்தவித முழுமையான புரிதலுமே இல்லாத நிலையில் இராமானுஜனின் தாயாரை மிகக் கொடுரமானவளாக, சுயநலமியாகத் தன் ஹார்வர்ட் பேருரைகளில் வர்ணிப்பவதாக வருவது முரணாக இருக்கிறது. நாவலை எழுதத் தான் மேற்கொண்ட ஆழமான ஆராய்ச்சிகளைப் பற்றி இறுதியில் லெவிட் பட்டியலிட்டிருக்கிறார். ஆனால் இராமானுஜனின் வாழ்க்கை வரலாறாக இதற்குமுன் ராபர்ட் கனிஜெல் (The Man Who Knew Infinity: A life of the Genius Ramanujan, Robert Kanigel, Scribner, 1991) எழுதிய அற்புதமான புத்தகத்துடன் ஒப்பிடும்பொழுது இதற்கான ஆராய்ச்சி மிகச் சாதாரணமாகத் தோன்றுகிறது. ஒரு வாழ்க்கை வரலாறு எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு ராபர்ட் கனிஜெல்லின் புத்தகம் மிக நல்ல உதாரணம். அந்தப் புத்தகத்தில் அதற்காக அவர்மேற்கொண்ட ஆராய்ச்சி, நேரில் சென்று தமிழ்நாட்டில் அவர் பார்த்தவை என்று பல மிக அற்புதமாக வெளிப்படும். இதற்கும் மேலாக டேவிட் லெவிட் எந்த ஆழமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது. சில இடங்களில் வார்த்தைகள் கனிஜெல்லின் புத்தகத்திலிருந்து நேரடியாகவே உருவப்பட்டிருக்கின்றன. நாவலை எழுதிய டேவிட் லெவிட் ப்ளோரிடா பல்கலைக்கழத்தின் பேராசியர். இதற்கு முன் தற்பாலர்களை முன்வைத்து பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். அவர் எழுதிய மாபெரும் கணிப்பியல் மேதையான அலன் டூரிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்து விரிவாக எழுதவேண்டும். தன்னுடைய நாவல் ஒன்றில் வேறு புத்தகத்திலிருந்து வார்த்தைகளைச் சேர்த்தார் என்பதற்காக வழக்குத் தொடரபபட்டு குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் அந்தப் புத்தகத்திலிருந்து மூன்று பக்கங்கள் நீக்கப்பட்டன. இந்த நாவலையும் ராமானுஜன் சுயசரிதையோடு ஒப்பிட்டு அலசினால் நிறைய சிக்கலகள் வெளிவரும் என்றே தோன்றுகிறது. சில இடங்களில் வரலாற்றுப் பிழைகள் இருக்கின்றன. உதாரணமாக ரஸல் ‘தமிழ்நாடு’ என்ற காலவழுவான பதத்தைப் பயன்படுத்துகிறார். ராமானுஜனை முத்தமிட நெருங்கும் ஆலிஸ் நெவில் அவர் உதடுகளில் தேநீரின் வாசனையை நுகர்வதாக வருகிறது. ராமானுஜன் தேநீர் அருந்தியவரல்லர். இந்த நாவலில் கூட அவர் ஊக்கத்துடன் தயாரிக்கும் மெட்றாஸ் காஃபியைப் பற்றிய வர்ணனைகள்தாம் வருகின்றன.
மற்றொரு கணிதமேதையான ஜான் நாஷ்-ன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டு (A Beautiful Mind: The Life of Mathematical Genius and Nobel Laureate John Nash by Sylvia Nasar ) புத்தகமாகவும் திரைப்படமாகவும் பெறுவெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதேபோல சுவாரசியமான ஆளுமையான இராமானுஜனின் வாழ்க்கையைத் திரைப்படமாக்குவதில் பலருக்கும் ஆர்வம் இருக்கிறது. நான் அறிந்தவரையில் ராபர்ட் கனிஜலின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்திற்கான ஆயத்தங்கள் நடக்கின்றன. (இது குறித்த முந்தைய பதிவு). இப்பொழுது இந்தப் புத்தகத்தையும் திரைப்படமாக்கும் முயற்சி இருப்பதாகத் தெரிகிறது. இந்தப் புத்தகம் திரையில் வந்தால் அது முழுமையாக இராமானுஜனைப் பற்றியதாக இருக்காது; அந்தக் காலத்தின் கேம்ப்ரிட்ஜ் உலகைப் பற்றியதாகத்தான் இருக்கும்.
இப்படியொரு புத்தகம் தமிழில் சாத்தியமா என்று சந்தேகமாக இருக்கிறது. ராஜாஜி, பெரியார், காமராஜர், அண்ணாத்துரை, என்.எஸ். கிருஷ்ணன், எம்.ஆர். ராதா, தியாகராஜ பாகவதர், எம்.எஸ். சுப்புலெட்சுமி என்று ஒரு காலத்தின் மாந்தர்களை மையமாகக் கொண்டு, புனைவுச் சம்பவங்களால் தமிழில் ஒரு நாவலைக் கோர்ப்பது இன்றைய சூழலில் சாத்தியமில்லாத ஒன்று என்றே தோன்றுகிறது. ஏதாவது ஒரு குழுவிலிருந்து வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவது சர்வநிச்சயம். கதையாடல் மிகச் சாதாரணமானது என்றபோதும் அற்புதமான நிகழ்களனையும், சுவாரசியமான சம்பவங்களையும், தீர்க்கமான ஆளுமைகளையும் கொண்டது என்ற வகையில் இந்த நாவலைத் தாராளமாக வாசிக்கலாம்.
Image Courtesy: Wikimedia Commons