ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் - வாசக அனுபவம்

(ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - சி. புஸ்பராஜா, அடையாளம் 2003)

Pushparaja Book

இந்தியாவை விட்டுத் தொலைவில் வசிப்பதில் இருக்கும் பல சங்கடங்களில் இதுவும் ஒன்று. புத்தகம் வந்தவுடன் இந்தியாவிலிருந்து யாராவது ஒருவர் பரபரப்பாக விமர்சனம் எழுதியிருப்பார். உடனே அதை வாங்கிப் படிக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் முயற்சி எடுத்து அதை அடைவதற்குப் பலமாதங்கள் தேவைப்படும். இன்றைய அவசர யுகத்தில் இப்படி ஆறிப்போய் வரும் புத்தகத்தை உடனே கையிலெடுக்கவும் முடியாது. பல சமயங்களில் முக்கியமான புத்தகத்தைவிட நேற்று முன்தினம் நிகழ்ந்த சாமியார் கைது நம்முடைய நேரத்தை அதிகம் இழுத்துக் கொள்ளும். இதுதான் புஸ்பராஜாவின் புத்தகத்துக்கும், என்னைப் பொருத்தவரை, நிகழ்ந்திருக்கிறது. காலம் கடந்துவரும் இந்த வாசிப்பு அனுபவப் பகிர்வு இன்னும் சிலருக்காவது ஆர்வமூட்டும் என்று நம்புகிறேன்.

இதில் நுழைவதற்கு முன்னால் ஈழத்தைப் பற்றிய எனது மிகக் குறைந்த புரிதலை நான் வெளிப்படையாகச் சொல்லியாக வேண்டும். இதற்கு முக்கிய காரணம் விலகாத விமர்சன நிலையிலிருந்து ஈழப்போராட்டத்தை அணுகி எமக்குச் சொன்னவர்கள் மிகக் குறைந்தவர்களே. இந்தியாவிலிருந்து ஈழத்திற்கு ஆதரவாக ஒரு வார்த்தை சொல்ல முற்படுபவர்களுக்கு, ஒரு காலத்தில் கொல்லப்பட்ட அவர்களது பிரதமரின் உருவம் ஒருகனம் வந்துபோவது தவிர்க்க முடியாதது. அதேபோல ஈழத்திலிருந்து இந்தியாவின் நிலையைப் பார்ப்பவர்களுக்கு சிலகாலம் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்கள் பொங்கியெழுவதும்தான். இரண்டையும் தவிர்த்து வெளியிருந்து எழுதுபவர்களுக்கென்னவோ கொஸவோ, பாலஸ்தீனம், ஏன் கஷ்மீர் அளவுக்குக் கூட இலங்கை முக்கியமானதாகத் தோன்றாத அலட்சியப் போக்கு இருந்திருக்கிறது. இந்த நிலையில் ஈழத்தின் போராட்ட வரலாறு கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்படாமலிருக்க தொடர்புடையவர்கள் நேரடியாக அதைப் பதிவு செய்வதும் முக்கியம். அந்த வகையில் புஸ்பராஜாவின் இந்த நூல் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.

அறுநூறு பக்கங்களுக்குச் சற்று அதிகமான இந்த நூலை என்னால் ஐந்து நாட்கள் காலை-மாலை அலுவல்-வீடு இரயில் பயணங்களில், கிட்டத்தட்ட எட்டு மணி நேரத்தில் வாசித்து முடிக்க முடிந்திருக்கிறது. இதற்கு இந்த நூல் எழுதப்பட்ட நேரடி அனுபவ நடை மிகவும் முக்கியமானதாக இருந்திருக்கிறது. 1950-60 களில் பூசலாகத் தோன்றிய தமிழர் உரிமைப் போரட்டத்திலிருந்து நூல் துவங்குகிறது என்றாலும் புஸ்பராஜா மாணவராக இருந்த காலங்களில் தமிழ் மாணவர் பேரவையின் தோற்றம், செயல்பாடுகள் குறிந்த நேரடி அனுபவங்கள்தான் நூலின் ஆரம்பமாகக் கொள்ளப்பட வேண்டும். பின்னர் தமிழ் இளைஞர் பேரவையின் தோற்றம், தமிழர் கூட்டணியின் துவக்கம், செல்வநாயகத்தின் செயல்பாடுகள், இளைஞர் பேரவையின் பிளவு, விடுதலைப் புலிகளின் தோற்றம், ஈபிஆர்எல்எ·பின் தோற்றமும் வளர்ச்சியும், உள்ளிட்டுப் பல இயக்கங்களின் வரலாறுகள் ஆரம்பகாலத்திலிருந்து பதிவு செய்யப்பட்டிருக்கிறன. இவற்றினூடாக, வங்கிக் கொள்ளை, போலிஸ் அதிபர் கொலை, சிறையில் சித்திரவதை அனுபவங்கள், நூலக எரிப்பு, ஜனாதிபதிகள் கொலை, சகபோராளிகளின் அழிவுகள், என்று சம்பவங்களின் கோர்ப்புகள் பெரும்பாலான இடங்களில் நேரடிப் பார்வையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னர் ஒரு காலகட்டத்தில் போராட்டத்தை விட்டு நீங்கி ஐரோப்பாவில் போராளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதும் விளக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த நூலை ஒரு முக்கியமான காலகட்டத்தின் நேரடி வரலாற்றுப் பதிவாகக் கொள்ள வேண்டும்.

இப்படி நேரடி வரலாற்றுப் பதிவில் ஈடுபடுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. அதுவும் சம்பவங்களில் தொடர்புள்ள ஒருவர் அதைப் பதிவு செய்தால் தன்னை முன்னிலைப்படுத்தியாக வேண்டும். அதுவும் இந்த நூலில் இருக்கிறது. இந்த நூலை மாத்திரமே படிக்கும் ஒருவருக்கு ஈழப் போராட்டத்தில் புஸ்பராஜாவின் பங்கு மிகைப்படுத்தப்பட்டுத்தான் காட்சியளிக்கும். பல இயக்கங்களைத் துவக்கியது, ஆரம்ப நாட்களிலேயே மலையகத் தமிழர்களின் நலனை மனதில் கொண்டு செயல்பட்டது, பின்னாளில் மிக முக்கியமான தலைவராகக் கருதப்பட்ட பத்மநாபாவைப் பின்னின்று இயக்கியது உள்ளிட்டுப் பல விஷயங்களில் தன்னை முதன்மைப்படுத்தியிருக்கிறார் புஸ்பராஜா. தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டதைப் போலவே தான் சார்ந்திருந்த ஈபிஆர்எல்எ·ப் இயக்கத்தையும் உயர்த்திப் பிடித்திருக்கிறார். தமிழீழ விடுதலைப் புலிகளின் செயல்பாடுகள், பிரேமதாசாவும் விடுதலைப் புலிகளும் என்று ஒருசில தனி அத்தியாயங்களில் புலிகளைக் குறித்த தன்னுடைய விரிவான விமர்சனங்களை முன்வைத்த புஸ்பராஜா, தான் சார்ந்திருந்த இயக்கத்தைப் பற்றியும் தன்னுடைய நிலைப்பாடுகளைத் தெளிவாக எழுதியிருக்கலாம். ஈபிஆர்எல்எ·ப் தொடங்கி சில வருடங்களிலேயே ஈழத்தைவிட்டு வெளியேறிவிட்ட புஸ்பராஜாவுக்கு பல இடங்களில் அந்த இயக்கத்தின் வெற்றிகளுடனும், நேர்மையான வழிமுறைகளுடனும் தன்னை அடையாளம்காணும் ஆர்வம் இருக்கிறது. ஆனால் விட்டேத்தியாகச் சில இடங்களில் எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று உணர்த்தவும் தன்னுடைய சாட்சியத்தில் பாடுபடுகிறார். உதாரணமாக, அமைதிப்படை காலங்களில் ஈபிஆர்எல்எ·ப்-பின் நாட்களில் அவர்கள் பாதுகாப்புடன் ஈழத்தைச் சுற்றிவரும் புஸ்பராஜா அங்கு தன் இயக்கத்தவர்களால் நடத்தப்படும் கொடுமைகளைப்பற்றி போகிறபோக்கில் மாத்திரமே எழுதிவிட்டுப் போகிறார். எண்பதுகளின் பிற்பகுதியில் ஆட்சியிலிருந்த தன் இயக்கத்தினரின் செயல்கள் தனக்குப் பிடிக்காமல் போனது பற்றியும், பிரசைகள் தொண்டர் படை என்ற பெயரில் அவர்கள் சிறுவர்களைப் போர்க்களத்தில் புகுத்தியமையும் பற்றி மேம்போக்காகப் பதிவு செய்திருக்கும் புஸ்பராஜா, 1993ல் பிரேமச்சந்திரனால் ஈபிஆர்எல்எ·ப்பிலிருந்து நீக்கப்படும்வரை அவர்களுக்குத் தொடர்ந்து செயல்பட்டதன் நோக்கங்கள் என்ன என்பதைத் தெளிவுபடுத்தவில்லை.

சில இடங்களில் புஸ்பராஜாவின் பார்வை அதிசயிக்கக்கூடியதாக இருக்கிறது.

… இப்படி இந்திய மக்களும் அதிகாரிகளும், பொலிசாரும் எம்முடன் ஒரு காலத்தில் எவ்வளவு மரியாதையாகத் தமது உத்தியோகத்தையும் வெறுத்து சலுகைகள் தந்து பழகினர். அவர்களுக்கு நாங்கள் செய்த கைங்கரியங்களின் பிரதிபலன்தான் இன்று இலங்கையர் இந்தியாவில் படும் அவமானங்கள் அவதிகள் என்று சொன்னால் மிகையாகாது. (பக்கம் 315)

இயக்கங்கள் தீவிரமடைவதற்கு முன்னால் இந்தியாவில் இருந்தவர் என்ற முறையிலும், அமைதிப்படை காலங்களில் ஆட்சி செலுத்திய ஈபிஆர்எல்எஃப் இயக்கத்தைச் சார்ந்தவர் என்ற முறையிலும் புஸ்பராஜாவின் இந்தப் பார்வை புரிந்துகொள்ள முடிவதாக இருக்கிறது. இன்றைக்கு இந்தியாவைக் குறை சொல்வது மாத்திரமே சாத்தியம் என்றான நிலையில் இவ்வளவு தெளிவாகத் தன் எண்ணத்தைப் பதிவு செய்யும் துணிவு ஆச்சரியமளிக்கிறது.

கும்பகோணத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் ஈபிஆர்எல்எ·ப் இயகத்தின் சிலரை நான் நேரில் கண்டிருக்கிறேன். பள்ளி இறுதியிலும் கல்லூரித் துவக்கதிலும் இருந்த காலங்கள் அவை. அந்த வயதில் பத்மநாபாவை கும்பகோணத்தின் பல உணவுவிடுதிகளிலும் தெருக்களிலும் நான் கண்டிருக்கிறேன். 1981ல் கும்பகோணத்தில் நடந்த ஈபிஆர்எல்எ·ப் துவக்கவிழா பல நாட்களுக்கு என் பள்ளி நண்பர்கள் மத்தியில் பேசப்பட்டது. இதற்குத் தலைமைதாங்க லண்டனிலிருந்து பத்மநாபா என்று ஒருவர் வந்திருப்பதாகப் பல மாணவர்கள் பேசிக் கொண்டனர். அந்தவயதில் ஒரு இனம்புரியாத கதாநாயகன் மதிப்பு அவர்மீது எனக்கும் என் நண்பர்களுக்கும் இருந்தது உண்மை. நான் வசித்த கும்பகோணமும் (ஈபிஆர்எல்எஃப்), என் உறவினர்கள் வசித்த ஒரத்தநாடு (பிளாட்), வேதாரண்யம்-கோடியக்கரை (புலிகள்), பல ஈழப் போராளிகளுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த நாட்கள் அவை. முதலில் மோட்டார் சைக்கிள் திருட்டு, தனி நபர்கள் வீட்டில் கொள்ளை, மிராசுதார் கொலை என்று துவங்கிய அனுபவம், பின்னர் பரபரப்பான சென்னை பாண்டி பஜாரில் பிளாட் உமாமகேஸ்வரனைப் பிரபாகரன் சுட்டுக் கொன்றது, சூளைமேட்டில் பத்மநாபா கொலை என்று போராளிகள் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ள தமிழகத்தைத் தேரிந்தெடுத்தமை தொடர்பாகப் பொதுவில் போராளிகளின் மீது இருந்த ஆர்வம் சிதைந்துபோயிற்று. பல சமயங்களில் ஏன் இவர்கள் ஒருவரை ஒருவர் கொல்கிறார்கள் என்று தெரியாத நிலையில், அது ஏன் இங்கே நடக்க வேண்டும் என்ற கேள்வியும் எழத் தொடங்கியது. அந்த நிலையில் ஈழப் போராட்டங்களுடன் தங்களைச் இனங்காணப் பலர் தயங்கினர். பின்னர் ரஜீவ் காந்தி கொலையில் இதுவே எதிர்ப்புணர்வாக மாறியது. அந்தக் காலங்களில் இவர்களின் ஆரம்ப வரலாறுகள், பிரிவுகள், பிளவுகள் இவை தெரியாத நிலையில் போராளிகள் எமக்கு ஒரு புதிராகவே இருந்தனர். இப்படியொரு விரிவான வரலாறு அந்த நாட்களில் கிடைத்திருக்கக் கூடாதா என்று தோன்றுகிறது. உண்மையில் சொல்லப்போனால், இன்றுவரை மொழியாலும் கலாச்சாரத்தாலும் ஒன்றுபடும் தமிழகத்தினர் - ஈழத்தினர்களுக்கு இடையில் ஒருவரை ஒருவர் ஆழப் புரிந்துகொள்ளும் ஆர்வமும் அதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவாகவே இருப்பதாகத் தோன்றுகிறது. இரு பிரிவினருக்கும் நம்பகத்தன்மை குறித்த விரக்தியும், இனம்புரியாத கவர்ச்சியும் மாறிமாறித் தலையெடுத்துக் கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.

நான் ஜேவிபி மீது கொண்டிருந்த சில கருத்துக்களை இந்த நூல் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. பொதுவில் தமிழர்களுக்கு முற்றும் எதிரானவர்களாகவே அவர்களை நான் மதிப்பிட்டிருக்கிறேன். இந்த நூலின் சில பகுதிகளில் ஜேவிபியினருக்குப் போராளிகளுடன் புரிதலுக்கான முயற்சிகள் இருந்ததாகத் தெரிகிறது. இதைப்பற்றித் தெரிந்து கொள்ள நான் இன்னும் வாசித்தாக வேண்டும். இதன் மறுபக்கமாக இந்த நூலை வாசிக்கத்துவங்குமுன் ஈழப் போராட்டத்தின் போக்கைக் கட்டுப்படுத்தியதில் புத்த பிக்குகளுக்கு இருந்த பங்கைப்பற்றி தெரிந்து கொள்ளமுடியும் என்று நம்பியிருந்தேன். ஆனால் இந்தக் கோணம் இந்நூலில் ஆராயப்படவில்லை. தமிழ்ப் போராளிகளுக்குள்ளே இருக்கும் குழு உணர்வுகள், மாற்றுக் கருத்துக்கு மதிப்பின்மை இவற்றில் தொடங்கி சாதாரண மக்களிடமும் பரஸ்பர நம்பகத்தன்மை நீர்த்துபோனது குறித்த ஆதங்கம்தான் இந்த நூலின் அடிநாதமாகப்படுகிறது. அந்த வகையில் மிகத்தெளிவாக அந்த அவலத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் இந்த நூல் பதிவு செய்திருக்கிறது.

நூலின் குறைகளாக நான் காட்டிருப்பவற்றுக்கான புஸ்பராஜாவின் பதில் இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே இருக்கிறது. மிகத் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் “நான் சொல்ல நினைப்பது” அத்தியாயம் இந்த நூலின் நோக்கம், முக்கியத்துவம், இதற்கான எதிர்ப்பார்ப்புகள் இவற்றைச் சரியாக வரையறுக்கிறது. புஸ்பராஜாவே மாவை சேனாதிராஜா, பிரபாகரன் போன்றவர்களும் தங்கள் கோணத்தை முன்வைக்க வேண்டும் என்று வேண்டியிருக்கிறார். இது எனக்கும் மிகவும் அவசியமாகப்படுகிறது. இப்படிப் பல ‘சாட்சியங்களில்’ ஈரோஸ்-க்கும் பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்திற்கும் இருந்த தொடர்புகள், இந்தியாவின் ரா-உளவுப் படைக்கும் டெலோவிற்கும் நடந்த பரிவர்த்தனைகள், மாலத்தீவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, ஈரோஸ், ஈபிஆர்எல்எஃப், ப்ளாட் இயக்கங்களுக்கு ரா அளித்த பயிற்சிகள், ரா-வுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் நடந்த பரிமாற்றங்கள், பிரேமதாசாவும் புலிகளும் இந்திய அமைதிப்படையைத் துரத்த இணைந்தமை, போன்ற விபரங்கள் துல்லியமாகப் பதிவு செய்யப்பட வேண்டும். சுயச்சார்பு மற்றும் இயக்கப்பரிவு கொண்ட பார்வைகளாயினும் ஆர்வமுள்ளவர்கள் அவற்றின் மூலம் தங்களுக்கான வரலாற்றுப் பார்வையை உருவாக்கிக் கொள்ளமுடியும். அந்த வகையில் புஸ்பராஜாவின் சாட்சியம் மிகவும் முக்கியமானது. துரதிருஷ்டவசமாக இதற்கு வாய்ப்பில்லாமல் அமிர்தலிங்கம், நீலன் திருட்செல்வம், பத்மநாபா, சிறிசபாரட்னம், உமாமகேஸ்வரன், மாத்தையா, சாம் தம்பிமுத்து போன்றவர்கள் சகபோராளிகளாலேயே அழிக்கப்பட்டுவிட்டனர்.

முதலில் பதிப்பிக்கப்பட்டது : 07 திசம்பர் 2004


தொடர்பான கட்டுரை:

ஈழப்போராட்டம்: எழுச்சியும் வீழ்ச்சியும், “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” பிரதியை முன் வைத்து ஒரு வரைவு ஷோபா சக்தி, அநிச்ச மார்ச் 2006