சொல்லப்படாதவர்களின் வரலாறு
(Prashad, Vijay. The Darker Nations: A People’s History Of The Third World, The New Press Leftword Books, New York)
உலகதத்தின் வரலாறு பெரிதும் உடையோர்களில் வரலாறாகவே எழுதப்படுகிறது. காலங்கள் மன்னர்களின் பெயரால் அறியப்படுகின்றன; தேசங்களை இயக்கும் சராசரி மாந்தர்கள் வரலாற்றில் சொல்லப்படாமலேயே மறைந்துபோகிறார்கள். தகவல் நுட்ப காலமான இன்றோ உலகம் வல்லரசுகளைப் பற்றியதாகவும், வல்லரசுகளின் வார்த்தைகளிலுமே சொல்லப்படுகிறது. பின்காலணியாதிக்க, இரண்டாம் உலகப்போரின் பிறகான வரலாற்றில் அமெரிக்கா பின் திரண்ட மூலதனத்துவ நாடுகளையும், சோவியத் பின் திரண்ட கம்யூனிஸ நாடுகளையும் மாத்திரமே உள்ளடக்கியதாகவும், அவற்றின் நிகழ்வுகள் மாத்திரமே உலகின் போக்கைச் செலுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் உலகின் மக்கள் தொகையில் நான்கில் மூன்று பங்கு இந்த நாடுகளைச் சேர்ந்ததில்லை. இவற்றின் நிகழ்வுகளின் வாயிலாக உலக வரலாற்றைச் சொல்கிறார் பேராசிரியர் விஜய் பிரசாத். இவர் அமெரிக்காவின் கனெக்டிகெட் மாநிலத்தின் ட்ரினிடி கல்லூரியில் தெற்காசிய வரலாறு மற்றும் பன்னாட்டியல் துறையின் பேராசிரியராக இருக்கிறார்.
The Darker Nations: A People’s History of the Third World என்று தலைப்பிடப்பட்ட நூலில் மூன்றாம் உலகம் என்ற அரசியல் கருத்துருவாக்கப் பரிசோதனையின் வடிவாக வரலாற்று அரசியல் வரைவுகளை மிக விரிவாக அலசுகிறார் விஜய் பிரசாத். நம்பிக்கையினூடான வளர்ச்சி, பின்னர் நம்பிக்கைச் சிதைவால் வீழ்ச்சி என்று சுருக்கிவிடக்கூடிய ஐம்பதாண்டுகால வரலாற்று இது. மூன்றாம் உலக நாடுகளில், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நடப்புகளின் வாயிலாக தொடர்ச்சியான வரலாற்றுச் சொல்லாடல்களை விளக்குவதில் பிரசாத் பெருவெற்றி பெற்றிருக்கிறார் என்றே தோன்றுகிறது.
பிரசாத்தின் இந்தப் புத்தகம் ஐரோப்பிய அமெரிக்கா சார்பு உலக வரலாற்றுச் சிந்தனைகளை மறுவிசாரிப்பு செய்யத் தூண்டுகிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் வலதுசாரி மூலதனச் சார்ந்த நாடுகளின் வளர்ச்சியும், கம்யூனிஸம் சார்பு நாடுகளின் வளர்ச்சி, பின்னர் சிதைவையும் தீர்க்கமாக முன்னெடுக்கப்பட்ட அரசியல் பரிசோதனைகளாக வரலாற்றாளர்கள் முன்வைக்கிறார்கள். இவற்றின் பின்புலத்தில் அணிசேரா நாடுகளின் நடப்புகள் எதேச்சையானவையாகவும், எந்த ஒரு கருத்துருவாக்கப் புலமும் இல்லாமல் தன்னேர்வான சீரில்லா இயக்கம் கொண்டதாகவும் தத்துவம் சார்ந்த முக்கியத்துவம் இல்லாமல் புறந்தள்ளப்படுகின்றன. பிரசாத்தின் இந்தப் புத்தகத்தில் மூன்றாம் உலக நாடுகளின் அணிசேராமையும் தீர்க்கமான நோக்கஞ்சார்ந்த வரலாற்று சோதனையாக முன்னிருந்த்தப்படுகிறது. அணிசேரா நாடுகளின் நிகழ்வுகள் முன்னேறிய நாடுகளின் நிகழ்வுகளுக்கு (குறிப்பாகப் பனிப்போர்) மறுவினையானவை மாத்திரமல்ல, வளர்நிலை நாடுகள் தமக்குள்ளேயான நிகழ்வுகளின் ஊடாக உலக அரங்கில் தம்மை நிலைநிறுத்திக்கொள்ளவும் காலணியாதிக்கச் சீரழிவுகளிலிருந்து மீண்டெழ மேற்கொண்ட முயற்சிகளுமாகவும் இருண்ட நாடுகளின் வரலாற்றியக்கம் நிகழ்ந்தது.
புத்தகத்தின் அத்தியாயங்கள் உலகநாடுகளின் முக்கிய நகரங்களை முன்னிருத்திச் சொல்லப்படுகின்றன. அத்தியாயத்தின் விவரணை தலைப்பு நகர்களை மாத்திரமே சார்ந்தவையல்ல என்றபோதும் நடப்புகளின் முக்கியத்துவத்தை நிர்ணயிப்பத்தில் நகர்களின் பங்கை நங்கூரமிட்டுக் காட்ட இந்த அமைப்பு பெரிதும் உதவியிருக்கிறது. அணிசேரா நாடுகளின் ஆரம்பகாலத் தலைவர்களான நேரு, நாஸர், டிட்டோ, காஸ்ட்ரோ, சுகர்னோ போன்றவர்களுக்கு அணிசேராமை, நாடுகளின் சுய முன்னேற்றம், ஆயுதக் குறைப்பு போன்ற உன்னதங்களில் பெரும் நம்பிக்கையிருந்தது. பேரழிவான இரண்டாம் உலகப்போர் மற்றும் பின்னெழுந்த பனிப்போர் இவற்றிந் எதிர்வினையாக இந்த உன்னதகங்கள் மாத்திரமே சாத்தியமானவையாகவும் இருந்திருக்கக்கூடும். ஆனால் இரண்டு தலைமுறைகளுக்குப் பிறகு உள்நாட்டு நிகழ்வுகளை எதிர்கொள்ளும் முறையில் இவர்கள் வேறுபடத் தொடங்கினார்கள். வல்லரசுகளை ஆயுதபாணியில் வெற்றிகரமாக எதிர் கொண்ட வியட்நாம், அல்ஜீரியா, போன்ற நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு க்யூபா அதேரீதியில் அமெரிக்காவை எதிர்கொள்ளத் தலைப்பட்டது, இது ஆரம்கால அமைதிக் கனவுகளை சிதைத்தழித்தது. மறுபுறத்தில் புவியியல்-ரீதியாக மூலதனத்துவம் மாத்திரமே சாத்தியமான சிங்கப்பூர், தென்கொரியா நாடுகளின் அசுர வளர்ச்சி எல்லைகள் கடந்த சந்தைப் பொருளாதாரத்தை உயர்த்திப் பிடித்தது. உழைக்கும் சமூகங்களின் திருப்தியின்மையை எதிர்கொள்வதிலும், சித்தாந்த வேறுபாடுகளை ஒடுக்குவதிலும் அணிசேரா நாடுகளினிடையே பெரு வித்தியாசங்கள் தலைப்படத் தொடங்கின. அவற்றின் சரிவு அங்கிருந்தே துவங்கியது.
ஏழைகளுக்கிடையே எல்லைகளைக் கடந்த சகோதரத்துவம் என்ற கனவும் கலையத் தொடங்கியது. கெய்ரோ, ஜகார்த்தா உள்ளிட்ட பல அத்தியாயங்களின் வாயிலாக விரிவாக இந்தச் சிதைவை பிரசாத் விளக்குகிறார். இந்தோனேஷியாவில் சுகர்னோ, எகிப்தில் நாஸர், தான்ஸானியாவில் ஜூலியஸ் நைரேரே போன்ற தலைவர்கள் தமது இனங்களை முன்னிருத்தி தேச எல்லைகளை வரையறையாகக் கொண்ட தனித்தேசியத்தை வளர்தெடுத்தார்கள். இது இவர்களுக்கு மேல்-நின்று வறட்டுத்தனமான சமயச் சார்பின்மையயை முன்மொழிய வசதியாக இருந்தது. சொல்லப்போனால் இவர்கள் தூண்டியெழுப்பிய தேசிய உணர்வுகளின் பின்னால் கட்டமைக்கப்பட்ட தொழிலாளர் ஒற்றுமை மற்றும் இடதுசாரி கம்யூனிஸ ஒழிப்பு இரண்டுமே முக்கியமான அடிநோக்ககங்களாக இருந்தன.
அணிசேரா நாடுகள் என்ற சோதனையின் வீழ்ச்சியைக் காட்டும் அத்தியாங்கள் இந்தப் புத்தகத்தின் மிக முக்கியமானவை. அரசியல் சிந்தனைச் சரிவுகள் மற்றும் பொருளாதார சார்பு மாற்றங்கள் வீழ்ச்சியின் இரண்டு பக்கங்களாக மிக விரிவாக விளக்கப்படுகின்றன. எழுபதுகளில் மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவின் தொடர்ச்சியாக பன்னாட்டு நிதி மையம் (IMF) என்ற ஐக்கிய நாடுகளின் நிதியமைப்பின் வாயிலாக மூன்றாம் உலக நாடுகளை நிரந்தரமாகக் கடன்காரர்களாக்கும் அமெரிக்க முயற்சி துவங்கியது. தளையற்ற சந்தைகள் மாத்திரமே வளர்ச்சிககான ஒரே வழி என்ற சித்தாந்த்தை முன்னிருத்திய தலைவர்கள் ஜமைக்கா, இந்தோனேஷியா, எகிப்து, பெரு போன்ற நாடுகளில் வலிமை பெறத் தொடங்கினார்கள். இந்த வளர்ச்சிக்கு அடிப்படை இயற்கை வளங்கள் ஏதுமில்லாமல் (இன்னும் சரியாகச் சொன்னால் இயற்கை வளங்கள் இல்லாததினால்) சந்தைப் பொருளாதாரம் சார்ந்து அசுர வளர்ச்சி பெற்ற சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகள் முன்னுதாரணமாகச் சொல்லப்பட்டன. இதையே இலங்கை, பாக்கிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் தாரக மந்திரமாகக் கொள்ளத் தலைப்பட்டன.
மறுபுறத்தில் மன்னாராட்சியைத் தக்கவைத்துக் கொள்ள உருவாக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதம் சௌதி அரேபியாவில் தொடங்கி, பெரும்பாலான நாடுகளுக்குப் புற்று நோயைப் போலப் பரவத் தொடங்கியது. இதன் மறுதலையாக இந்து தேசியத்தின் வாயிலான வலுமையான பாரதம் என்ற கருத்துருவாக்கம் பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு இந்தியாவில் உதவியது. வலுமையான தேசியத்தை முன்னிருத்தும் இந்த மதச்சார்பு அடிப்படைவாதிகளுக்குத் தம் தேசத்தின் சொத்துகளை அடகுவைத்து, அமெரிக்கப் பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளுக்குக்காகக் கையேந்தி நிற்பதில் வெட்கமேதுமில்லை என்பது வியத்தகு நகைமுரண்.
அணிசேரா நாடுகளின் தோற்றமும் வளர்ச்சியும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் வரலாற்றுடன் பெரிதும் தொடர்பு கொண்டது. ஆரம்பகாலம் முதலே மாற்றுக் குரல்களைத் திறமையாக ஒடுக்கவும் புறந்தள்ளவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகள் முயற்சி செய்தன. இந்த முயற்சியில் இவற்றுக்குக் கிடைத்த வெற்றியே சோவியத் சார்ந்த கம்யூனிஸத்தை உடைக்க இவற்றுக்குப் பேருதவியாக இருந்தது. மறுபுறத்தில் நேரடியாக தம் சித்தாந்தம் சாராத அணிசேரா நாடுகள் குறித்த்து சோவியத் அசிரத்தையாகவே இருந்திருக்கிறது. தோழமை, சமத்துவம், சகோதரத்துவம் போன்றவை தம்மைச் சார்ந்தவர்களுக்கே என்றது கம்யூனிஸ நடப்பு. ஒடுக்கப்பட்டவர்கள் என்ற பரிதாபம் கடந்தும் தமக்குத் தேவையற்றவர்களாக ஏழை நாடுகளை புறந்தள்ளியதன் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பில் தார்மீகக் குரல் எழவிடாமல் செய்யத் தானும் காரணமாக இருந்தது. வரலாற்று ரீதியாக அணிசேரா நாடுகள் அல்லது ஐக்கிய நாடுகள் அமைப்பு இரண்டில் ஒன்று மாத்திரமே நிலைபெறுவது சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அணிசேரா நாடுகளின் அழிவின் மூலம் தனக்கான தார்மீகக் குரலை இழந்து ஜீவனற்ற சடலமாகத்தான் ஐக்கிய நாடுகள் அமைப்பால் இன்றைக்கு நிலைத்திருக்க முடிகிறது.
புத்தகம் ஐரோப்பிய மையவாதத்தைக் கட்டியெழுப்பும் கருதுகோள்களை தீவிர மறு விசாரணைக்கு உட்படுத்துகிறது. அதில் புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட குரல்கள் மேலெழுந்து வருகின்றன. அணிசேரா நாடுகள் என்ற பரிசோதனை முற்றிலுமாகத் தோல்வியடைந்துவிட்ட நிலையிலும் இந்தப் புத்தகம் ஏழை நாடுகள் கைகொள்ள வேண்டிய நம்பிக்கையைத் தீவிரமாக வலியுருத்துவதில் முழு வெற்றியடைகிறது. கடந்த காலத்தின் முள்வேலிகளைத் தகர்த்தெரிந்து ஆரத் தழுவிக்கொள்ளும் இன்றைய ஐரோப்பிய நாடுகளையும் கவனத்துடன் பார்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒருவகையில் இந்தப் புத்தகம் இன்றைய பேருவகை நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகக்கூடத் தெரிகிறது. தென்னமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா என்ற முப்பெரும் கண்டங்களையும் உலகின் மூன்றில் இரண்டுபங்கு மக்கள் தொகையையும் கடக்க முற்பட்டு எல்லைகளற்ற பன்னாட்டு தேசியம் காண்பதில் அணி சேரா நாடுகள் அடைந்த தோல்வியால் எந்த அவமானமும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அரசியல் ரீதி காலணியாதிக்கம் இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஓய்ந்துபோன நிலையில் முகங்களற்ற, ஆன்மாவற்ற வர்த்தகம் சார்ந்த காலணித்துவம் வலுத்துவரும் இந்த நூற்றாண்டு துவக்கத்தில் எல்லைகளைக் கடந்த, தனித் தேசியங்கள் சார்பற்ற சமத்துவக் குரலுக்கான அவசியத்தை இந்நூல் அற்புதமாக முன்வைக்கிறது.