முழுநீலத் தமிழ்ப் படங்கள்

வெங்கட்ரமணன்
சில விஷயங்களைப் பற்றி எழுத சற்றும் புலமையும் தேர்ச்சியும் தேவையில்லை. நீலப்படங்கள் அவற்றில் ஒன்று. இதில் கண்டவர் விண்டிலர். அதிகம் நீலப்படங்களைப் பார்ப்பவர்கள், அதுபற்றி பேசுவதோ, விவாதிப்பதோ இல்லை. இவர்கள் காரண, கருவி, காலங்களைக் கவனிக்காமல், காரியத்தையே பெரிதும் கவனிக்கின்றார்கள். இதனால், அந்தப் படங்களில் அதிகம் காணப்படும் நகைச்சுவையையோ, அரிதாகத் தோன்றும் அழகுணர்ச்சியையோ தவறவிடுகின்றார்கள். சற்றும் உணர்ச்சி வசப்படாமல்(!!) நீலப்படங்களைப் பார்ப்பவர்களுக்கு அவற்றில் ரசிக்கத்தக்க விஷயங்கள் நிறையத் தென்படும். என்னுடைய நீலப்பட அனுபவம் சராசரி இந்தியனைக் காட்டிலும் மும்மடங்கு அதிகம். (சராசரி இந்தியன் தன் வாழ்நாளில் 0.78 நீலப் படங்களைப் பார்ப்பதாக அடையாளம் தெரிவிக்காத அறிக்கை ஒன்று கூறுகின்றது). எனவே விஷயமறியாத என்னுடைய நண்பர்களுக்கு இது குறித்து கூற ஆசை.
நீலப்படங்களை அடைவதற்கே மிகவும் அதிக நுட்பம் தேவைப்படுகின்றது. எனக்கு முதல் அனுபவ மூட்டிய நண்பர் இந்த விஷயத்தில் பெரிய கில்லாடி. மேற்க்கொன்டு இந்த பத்தியில் வரும் விஷயங்கள் என் நண்பரின் அனுபவத்திலிருந்து கேள்வி ஞானமே. முதலில் அதுமாதிரி கடைகளை அணுகவே நல்ல முதிர்ச்சி தேவை (அந்த வயதில் என்னுடைய ஒரே கவலை, மீசை ஒழுங்காக முளைக்கவில்லை என்பதே). தேர்ந்த துப்பறியும் நிபுணரைப்போல் காலம் பார்த்து கடையை அணுக வேண்டும் (காலை 11 - 12 மதியம் 2.30 - 4.00, மிகவும் வசதியானது). கடையில் சென்று நேரடியாக அதைக் கேட்டு விடக்கூடாது. முதலில் யாருமே பார்க்காத, அல்லது பார்க்கத் துணியாத (பகவதிபுரம் ரயில்வே கேட், கரிமேடு கருவாயன்) படங்களின் காஸெட் இருக்கிறதா என்று கேட்க வேண்டும். இது போன்ற தோற்றுவாய்களுக்குப் பிறகு, அவரே, என்ன சார், தனியாகப் பார்கிறா மாதிரி படம் வேணுமா, என்பார். இதற்குப் பிறகு உரையாடலில் புழுக்கம் தேவையில்லை. இன்னொரு முக்கியமான விஷயம், இந்தக் காஸெட்டுகளில் தலைப்பு எதுவும் கிடையாது. எனவே, முதல் சம்பவத்தையோ, அல்லது குறிப்பிடத்தக்க நிகழ்வு(!!) ஒன்றையோ நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. இது பார்த்த படங்களையே திரும்பப் பார்ப்பதைத் தவிர்க்க உதவும். பலநூறு காஸெட்டுகளுக்கு நடுவிலிருந்து, நம் கடைக்காரர் அதைச் சரியாகத் தேர்ந்தெடுத்து காதலுக்கு மரியாதை போன்ற சற்றும் சந்தேகம் வராத படத்தின் உறையிலிட்டுத் தருவார். கா.ம. பெரும்பாலும் உறையில்லாமல் விநியோகிக்கப்படும். என் நண்பர் அருகிலிருந்த டீக்கடையில் காத்திருந்த என்னிடம் வந்தபோது கையில் தாய் சொல்லைத் தட்டாதே படத்தின் காஸெட்.
இது போன்ற படங்களைப் பார்க்கும் நிகழ்வு மிகவும் அரிதானது என்பதாலும், அதற்கான காலம், இடம், பொருள் தேர்வு மிகவும் சிரமமென்பதாலும், பொதுவாக அது அனைத்து நண்பர்களுக்கும் தெரிவிக்கப்படும். அவரவர் வீட்டில் அவசியத்திற்கேற்ப கோவிலுக்குப் போவதாகவோ, கிரிக்கெட் விளையாடப் போவதாகவோ, கெமிஸ்டரி நோட்ஸ் வாங்கப் போவதாகவோ சொல்லிவிட்டு, குறிப்பிட்ட இடத்தை அடையவேண்டும். இதில் நேரம் தவராமை மிகவும் முக்கியம்.
மேற்கொன்டு விபரங்களுக்குச் செல்லுமுன் ஒரு முக்கியமான விளக்கம். நீலப்படமென்பது என்ன? இதன் வரையறை கலாச்சார, புவியியல் அமைப்புகளுக்கு உட்பட்டு பெரிதும் மாறுபடும். இத்தாலிய எழுத்தாளர், உம்பர்த்தோ ஈக்கோவின் வரையறைப்படி1, ‘ஒரு குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க (எ.கா. நண்பர் வீட்டிலிருந்து நண்பி வீட்டிற்கு அதிவேகப் பந்தயக் காரில் போய்ச்சேர) அல்லது சாதாரணமான ஒரு காரியத்தில் ஈடுபட (ஐந்தாறு நண்பர்கள் அல்லது/மற்றும் நண்பிகள் உணவருந்த) பொதுவாக நாம் பார்க்கும் திரைப்படங்களைவிட மிக மிக அதிக நேரம் தேவைப்பட்டால் அது நீலப்படம்.’ என்ன இருந்தாலும் அது, மற்றும் அது-சார்ந்த காரியங்களில் ஈடுபட அதிக நேரம் தேவைப்படுவதில்லை. நமது கலாச்சாரச் சூழலில் ஈக்கோவின் வரையறை எல்லாம் எடுபடாது. எனக்குத் தெரிந்த வகையில் எந்த ஒரு வீடியோ காஸெட்டை அடைய அளவுக்கு அதிகமான தேர்ச்சியும் கவனமும் தேவைப்படுகிறதோ, அதுவே நம்மூரில் நீலப்படம். நமது ஊரில் விலங்கியல் விதிகளுக்குக் கட்டுப்பட்டு ஒரே இனமாக இருத்தல் அவசியம். ஐரோப்பிய நாடுகளைப்போல் அல்லாது இங்கு, விலங்குகள் தேவர் மற்றும் இராம. நாராயணன் படங்களைத்தவிர வேறெங்கும் அனுமதியில்லை. மேலைய நாடுகளின் பலர்-பால் புணர்ச்சி விதிகள் நம்மூருக்குச் சற்றும் ஏற்பாடு இல்லாதது. ஒருவனுக்கு ஒருத்தி என்பது இங்கு பண்பாட்டு விதி. நேரடி பாலுணர்ச்சி தவிர்த்த ஒருபால் சேர்க்கை இன்னபிற விஷயங்கள் நம்மூரில் கிடையாது. ஸ்கான்டிநேவியப் படங்களின் மலையும் மலை சார்ந்த காட்சியமைப்பும் இங்கு இயலாதது. நம்மவை எல்லாம் ஒரு (லாட்ஜ்) அறைக்குள்ளே நடப்பவை.
படங்கள் எல்லாம் ஒரு பத்து ஆண்டுகளுக்கு முந்தைய தொழில்நுட்பங்களுடன் எடுக்கப்பட்டிருக்கும். பார்க்கப்போனால், படம் சம்மந்தப்பட்ட அனைத்துமே ஒரு தலைமுறை காலப்பிழையில் இருக்கும். கதாநாயகி பெரும்பாலும் பேரிளம்பெண்ணாக இருப்பார். இன்றைய நாகரீக வெளிப்பாடுகளுக்குச் சற்றும் பொருந்தாத விதத்தில் புடவை அணிந்திருப்பார் (வேறு எப்படி அதைத் தமிழ்ப் படமாக்குவது?). இன்றைய அழகு குறித்த விதிகளுக்கு (மெல்லிய இடை, மெலிந்த தேகம், வெளிறிய நிறம், நீளங்குறைந்த பலவண்ணக் கூந்தல்) சற்றும் ஒவ்வாமல் பருமனான தேகம், உருண்டை முகம், மாநிறத்திற்குச் சற்றுக் குறைவு, சராசரி தமிழ்ப் பெண்ணின் நீளங்கொண்ட கருங்கூந்தல் போன்ற சாமுத்திரிகா லட்சணங்களுடன் இருப்பார். கதாநாயகனைப் பற்றி அதிகம் சொல்வதற்கு இல்லை. அவனை யாரும் கவனிப்பது இல்லை. ஆண்களால் ஆண்களுக்காக எடுக்கப்படும் இந்தப் படங்களில் கதாநாயகன் முக்கியமற்ற, ஆனால் தவிர்க்க முடியாத ஒன்று. கருப்பு-வெள்ளை அல்லது வெளிர் பிங்க் (அதற்குத் தமிழில் என்ன பெயர் - திருவிளையாடல் படக்கலர்?) பிலிம்களால் எடுக்கப்பட்டிருக்கும். காமெரா தொழில்நுட்பம் (மன்னிக்க) பல நேரங்களில் சலிப்பையும், சில நேரங்களில் எரிச்சலையும் ஊட்டும். காமெராமேன் மிகவும் சிரத்தையுடன் முதலில் அறையிலிருக்கும் நாட்காட்டியில் தனது குவியத்தைச் சரி செய்வார். அந்த ஒரு சமயத்தில் மட்டும் தெளிவாகத் தெரியும் போக்கஸில், ராணிமுத்து காலண்டரில் முருகன் தனது இருபது வருட புன்சிரிப்புடன் இருப்பார். எடிட்டிங், மிக்ஸிங், இன்னபிற தொழில்நுட்ப சமாச்சாரங்கள் இத்தகையப் படங்களில் தேவைப்படாது. பின்னனி இசை அவசியமான ஒன்று. பெரும்பாலும் நமக்குத் தெரியாத, அதிகம் உறுத்தாத எதாவது ஒரு இந்திப்பாடலின் மெட்டு கீபோர்டில் வாசிக்கப்பட்டுக்கொன்டிருக்கும். சற்றே இசைஞானம் உள்ள நம் அன்ர்பகள் இதில் முற்றிலும் அபஸ்வரம் இருப்பதை அறியலாம். கதைப்படி(?) முக்கியமான தருணங்களில் இந்தக் கீபோர்ட் நண்பர் வாத்தியத்தை மாற்றி சற்றே அதிகமான உந்துதலுடன் தனது பரந்த இசைஞானத்தை வெளிக்காட்ட எத்தனிப்பார்.
இனி விஷயத்திற்கு வருவோம். கதாநாயகி காமெராமேனைப் (இயக்குனரும் அவரேதான்) பார்த்து என்ன என்று கேட்பார். காமெராமேனின் முகந்தெரியாத கட்டளைக்கு கதாநாயகி மறுப்பு தெரிவிப்பார். பின்னர், தனது உடைகளக் களையத் தொடங்குவார் (புடவை அணிந்திருப்பது எவ்வளவு முக்கியம்). களையப்பட்ட அந்தப் புடவையினை மெதுவாக மடித்து அருகிலிருக்கும் மேசையின்மீது வைப்பார். இப்போது நாயகி நம் சராசரி குடும்பப் படத்தில் கதாநாயகனின் தங்கை கல்லூரிக்கு அணிந்து செல்லும் உடையில் இருப்பார். காமெராமேனின் அடுத்த கட்டளைக்குத் தனது வழக்கமான எதிர்ப்பைத் தெரிவித்துவிட்டு, கதாநாயகி நம் சராசரி படக் கதாநாயகி கனவுப் பாடல், இன்னபிற குளியல் காட்சிகளில் தோன்றும் உடையளவுக்கு மாறியிருப்பார். தொடர்ந்து களையப்பட்ட உடைகளைக் கவனமாக மடித்துப் புடவையின்மேல் வைப்பார், இதில் ஒரு அசாத்தியச் செயல் ஒழுங்கு தென்படுவதைக் கவனிக்காமல் விடமுடியாது. இதுபோன்ற காட்சியில் இயக்குனர் ஒரு தேர்ந்த கலைப்படத்தின் நுட்பத்துடனும் நிதானத்துடனும் பணியாற்றியிருப்பது புரியும். பிறகு நாயகி காண்பிக்கப்பட்ட குளியலறக்குள் புகுவாள். அருகில் படுத்துக்கொன்டு படம் பார்க்கும் நமது நண்பன் தலைகாணியைச் சரிசெய்வார்.
உடல்தூய்மை செயல்பாட்டுக்கு அவசியம் என்பது இல்லை. எனினும் நம் வெகுஜன திரைப்பட கிளர்ச்சி விதிப்படி இது நீலப்படங்களுக்கும் அவசியமான ஒன்று. மேலும், இந்தக் காட்சிக்காகச் செலவிடப்படும் அதீத நேரம் முற்ச்சொல்லப்பட்ட உம்பர்ட்டோ ஈக்கோவின் நீலப்பட வரையறையை உறுதி செய்யும். இத்தகைய படங்கள் பெரும்பாலும் லாட்ஜ்களிலேயே எடுக்கப்படுவதால், வாஸ்து சாஸ்திரப்படி நமது தமிழ் இல்லங்களில் அதிகம் காணப்படாத பாத்ரூம்-கம்-லெட்ரினாக இருக்கும். கைப்பிடி ஷவர்கூட இருக்கக்கூடும். ஆர்வம் அதிகமுள்ள நமது கீபோர்ட் நண்பர் இப்போது நமக்குத் தெரிந்த எதாவது தமிழ்ப்பட குளியலறைப் பாடலுக்கு மாறியிருப்பார். கதாநாயகி தண்ணீர் தட்டுப்பாடுள்ள சென்னையில் தனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதிக அவசரமில்லாமல் நீண்ட நேரம் குளிப்பார். பலபட அனுபவசாலி நண்பர், இந்தக் காட்சியைப் பயன்படுத்தி பால்கனிக்குச் சிகரெட் புகைக்கச் செல்வார். நுரைவளம் மிக்க சந்திரிகா, நிர்மா பாத் சோப்களே அதிகம் பயன்படுத்தப்படும். யாக்கையின் புறத்துறுப்புகளை எல்லாம் நாயகி ஆசைதீர சோப்பிட்டு அனுபவிப்பாள். இதேபோன்ற காட்சிகளில் வெகுஜன தெலுங்குப் படங்களில் கிளர்ச்சியூட்ட கதாநாயகனும் தன் பங்களிப்பை ஆற்றக்கூடும். துரதிருஷ்டவசமாக வாழ்க்கையின் உண்மை நிலையைத் துல்லியமாகப் பிரதியெடுக்கும் நம் நீலப்படங்களில் நாயகியின் குளியல் முற்றிலும் தனிமையிலேயே அமையக்கூடும்.
சற்றே ஈரத்துடன் வெளிவரும் நாயகி தன் உடையை (மேலுடையை) அணிய எத்தனிக்கையில் கதாநாயகன் பிரவேசம் நடைபெறும். காலணி தொடங்கி மேலே நிதானமாகக் காட்டப்பட்டு சேர்குரலிசையுடன் அறிமுகமாகும் வெகுஜன நாயகனைப் போல இல்லாமல், நம்மவர் பிரவேசத்தில் ஒரு செயலாற்றும் முக்கியத்துவமும் அதற்கான அவசரமும் இருக்கும். இவர் பெரும்பாலும் பின்னின்று நாயகியைத் தழுவுவார். நாயகியின் செயல்பாடுகளில் பதற்றமும் தவிப்பும் தெரியும். இந்தக் காட்சியிலிருந்து நாயகி காமெராமேனிடம் அடுத்த செய்கைக்கான கட்டளையை எதிர்நோக்க மாட்டார். பணக்காரத் திமிர்பிடித்த கல்லூரி மாணவியான வெகுஜன நாயகியைப் பலர் முன்னிலையில் கட்டியணைக்கும் (சமீபத்திய படங்களில் முத்தமிடும்) நமது வெள்ளித்திரை நாயகனின் தழுவலைவிட இங்கு அது சற்றே தளர்ந்திருக்கும். ஒருதலைமுறைக்கு முந்தைய பண்பாட்டை உடையவர் என்பதால் நமது நாயகி இதற்கே எதிர்ப்பு தெரிவிப்பார். முரட்டுத்தனமான வேகத்துடன் நாயகன் அவளைப் படுக்கையில் தள்ள, சிந்தஸைஸரில் டிரம்ஸ் வாத்தியம் சேர்த்துக் கொள்ளப்படும். பலாத்காரத்தால் உடை களையப்பட்ட நாயகி திமிறுவாள். பிறகு மறுப்பேதும் இல்லாமல் உணர்ச்சியற்று காணப்படுவார். (இரண்டுக்கும் இடையில் நாயகனின் உதட்டசைவை உற்றுக் கவனித்தால் பாக்கிப் பணம் மறுக்கப்படுவது தெரியும்). இதுவரை காட்சியமைப்புகளில் சற்றும் தென்படாத அவசரத்துடன் தங்களின் முக்கிய உறுப்புகள் எதுவும் முற்றிலும் தெரிந்துவிடாத கவனத்துடன், சங்ககாலம் தொட்டு இன்றுவரை நம்தமிழில் ஒருபோதும் விலாவரியாக எழுதப்படாத காரியத்தைச் செய்துமுடிப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் எதேனும் கூற எத்தனிப்பவர் சக பார்வையாளர்களால் அடக்கப்படுவார். தீர யோசித்துப் பார்க்கையில் நமது ஒளிப்பதிவு-இயக்குனர் நண்பர் ஒரே கோணத்தில் காமராவை இருத்திவிட்டு கதாநாயகன் பங்காற்ற வந்திருப்பது விளங்கும்.
இன்றைய நாட்களில் எற்பட்டுள்ள கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் மற்றும் தோற்றமாற்றம் (morphing) இத்தகைய புராதனமான நீலப்படங்களின் தொழில்நுட்பங்களையும் மாற்றியிருகக் கூடும். வளைகுடா நாடுகளில் உள்ள நமது நண்பர் யாரேனும் புதிய காஸெட் கிடைத்தால் அனுப்பிவைக்கவும். இதன் இரண்டாம் பகுதியை எழுத (மாத்திரமே) உபயோகமாக இருக்கும்
டோக்கியோ, 4 மே 1999.
Umberto Eco, “How to recognize a porn movie” From ‘How to Travel with a Salmon & Other Essays’, Houghton Mifflin Harcourt, 1994. ↩︎