நாய் வண்டி

இதனால் சகலமானவர்களுககும் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், வருகின்ற அக்டோபர் மாதம், பதின்மூன்றாம் தேதி, வியாழக்கிழமை, கும்பகோணம் பிள்ளையார் கோவில் தெரு, டபீர் வட்டாரம், பாணாதுறை, மற்றும் சுற்றுப்பிரதேசத்தில் இருக்கும் நாய்கள் எல்லாம் வயதுக்கு வரவேண்டும், அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் அதைப் பகிரங்கமாக மனிதர்களுக்கு நிரூபித்துக் காட்டவேண்டும்" என்று மீன் கொடித் தேரில் வரும் மன்மதராசா, பட்டுத்துணியில் எழுதிக் குஞ்சம்வைத்த கட்டையில் சுற்றி பூலோகத்திற்கு அனுப்புவார் என்று நினைக்கிறேன். எப்படித்தான் திடீரென அவ்வளவு நாய்கள் தங்களுடைய இனப்பெருக்க உச்சத்திற்கு வரும் என்று தெரியாது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் தெருவில் நாய்களின் தொல்லை தாங்க முடியாது. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கிருஷ்ணபரமாத்மா அறிவிக்க, “அதுக்கென்ன கொண்டாடினா போச்சு” என்று நாய்கள் உற்சாகம் கரைபுரண்டோட வீறுகொண்டு எழும். சராசரி விலங்கினங்களுக்கு விதிக்கப்படும் சல்லாப விதிகள் எதுவே நாய்களிடம் செல்லுபடியாகாது. முதலில் என்னமோ, இருத்தலும் இருத்தல் நிமித்தமுமாகத்தான் எல்லாம் தொடங்கும். கண்களில் தாபம் பொங்கத் திருவாளர், திருவாட்டியை நெருங்குவார். அம்மையார் ஊடல் நிமித்தமாக விலகிச் செல்வார். இப்படி இலக்கணப்புத்தக வரிசைப்படிச் சென்றுகொண்டிருக்கும் விளையாட்டில் விரைவில் புணர்ச்சி விதிகள் புறக்கணிக்கப்படும். வலித்தல் விகாரம், நீட்டல் விகாரம், தன்னொற்றிரட்டல், முன்னின்ற மெய்திரிதல், இணைதல், இனமிகல் என்று பலவின்பால் காமம் கரைபுரண்டோடத் தொடங்கும். கிருஷ்ணபட்ச துவாதசி, வெள்ளிக்கிழமை, அரையாண்டு கணக்குப் பரிட்சை தினம், நகராட்சி உயர்நிலைப்பள்ளியின் கேட்டுக்கருகில், போன்று கால தேச வர்த்தமானங்கள் எல்லாவற்றையும் கடந்து… சுருக்கமாகச் சொன்னால் - அது வேறு உலகம்.

பொறுக்க முடியாத பரோபகார புண்ணியாத்மா ஒருத்தர் ‘சித்த ஸ்ரமத்தப் பாக்கம நடந்து’, காவேரிக்கரை ஓரமாக, பாணாதுறைல இருக்குமே அந்த நகராட்சி அலுவகத்திற்கு மனுப்போட்டுவிடுவார். குடந்தை நகராட்சி என்று பெயர்போட்ட பிரவுன் வண்டியில் வந்து நாயைப் பிடித்துக்கொண்டு போவார்கள். தெருவில் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டு நாய் பிடிப்பதைப் பார்ப்போம். முதலில் வண்டியைக் கொண்டுவந்து இரண்டு தெருக்களுக்கு அந்தப்புறம் நிறுத்திவைப்பார்கள். பின்னர், இரண்டு/மூன்று நாய்பிடி வீரர்கள் மொதுவாக இறங்கி வருவார்கள். இவர்கள் உடம்பிலிருந்து வீசும் நாற்றம் கட்டாயம் நாய்களுக்கு எச்சரிக்கை கொடுத்துத் துரத்திவிடும். (நெடுநல்வாடை என்று எங்களால் செல்லப்பெயரிடப்பட்ட கிருஷ்ணமூர்த்தி வாத்தியார் அளவுக்குக் கிடையாது என்பதையும் சொல்லியாகவேண்டும்). அதையும் மீறி சில நாய்கள் எப்பொழுது போனாலும் பெங்களூர் எம்ஜி ரோட்டில் ரெக்ஸ் தியேட்டர் முன்னால் கம்பியில் சாய்ந்து சில பணக்கார பசங்கள் நிற்பார்களே, அதேமாதிரி சர்வ அலட்சியத்துடன் குப்பைத்தொட்டி அருகில் நின்று கொண்டிருக்கும்.

பிடிப்பவர்கள் கையில் நாய்பிடி வளையம் இருக்கும். மூங்கில் கழி, கிட்டத்தட்ட பாய் ஸ்கவுட்டில் சேர்ந்தா காக்கி டவுசரோடக் கொடுப்பாங்களே அதே நீளத்திற்கு இருக்கும். அதன் முனையில் கம்பியால் ஆன வளையம் இருக்கும். இந்த வளையத்தில் சுருக்கு முடிச்சு போடப்பட்டு இருக்கும், நேரடியா நாய் கழுத்தில் நுழைத்தால் இலகுவாகப் போகக்கூடிய வளையத்தை சற்றே திசைமாற்றி விட்டால் நாய்க்கு அதிலிருந்து வெளிவருவது கஷ்டம். இழுப்புச் சுருக்கு நாய் முரண்டுபிடித்தால் மேலும் இறுகிக் கழுத்தை நெறிக்கும். ஒரு வியூகம் அமைத்துக்கொண்டுதான் நாயை அணுகுவார்கள். இரண்டு பேர் நாய்க்கு இரண்டுபுறமும் தெருவில் நின்று கொள்வார்கள், மூன்றாமவர் மெதுவாக நாயை அணுகுவார். போதுமான தூரம் அருகே வந்தவுடன், முதுகில் மறைத்துவைத்திருக்கும் கழியை விசுக்கென்று உருவி, நாயைப் பிடிக்க எத்தனிப்பார். இவரிடமிருந்து நாய் தப்ப முயலும் நாய் இலக்கின்றி ஓட முயற்சிக்கும், அப்பொழுது மற்ற திசையில் இருப்பவர், மிக எளிதாக அதன் கழுத்தில் வளையத்தை நுழைத்து விடுவார். பிறகுதான் ஜீவமரணப் போராட்டம் துவங்கும். விடலை வயதில் ஒருபுறம் இதைப் பார்க்க ஆர்வமாக இருக்கும், மறுபுறம் பாட்டி சொல்லும் பைரவர் கதைகளும், தினசரி காய்ஞ்ச நார்த்தங்காய் - மோர் சாதத்துடன் புகட்டப்பட்ட உயிர்க்கருணை போதனைகளும், லிட்டில் பிளவரில் படிக்கும்பொழுது பாதர் குரியகோஸ் சொல்லிய ஜீவகாருண்யப் பிரசங்கங்களும் அதைத் தடுக்கும். இறுதியில் வழக்கம்போல மனித மனதின் வக்கிரங்கள் வெற்றிகொள்ள, அடுத்ததாக அடிக்கவேண்டிய காஜியை மறந்து மட்டையச் சுவற்றில் சாய்த்து வைத்துவிட்டு, நாய்-பிடியாள் போராட்டைத்தை இரசிக்கத் தொடங்குவோம்.

எங்கிருந்துதான் இரண்டடி நாய்க்கு அந்த அசுரபலம் வரும் என்று தெரியாது. கிட்டத்தட்ட ஐந்தரையடி உயரமுள்ள மனிதனை உண்டு இல்லையென்று செய்துவிடும். முதலில் கழுத்துச் சுருக்கிலிருந்து விலக முற்படும். தன்னுடைய அனைத்து பலத்தையும் திரட்டி இழுத்துப் பிய்த்துக் கொண்டு போகத்தொடங்கும். சுருக்கு இன்னும் இறுகிப்போக எதிர்த்திசையில் எத்தனிப்பதில் பலனில்லை என்பதை உணரத் தொடங்கும் நாய், மரணவெறியுடன் பிடிப்பவரைத் துரத்தத் தொடங்கும், அவரைக் கடிக்க மேலே பாய முயற்சிக்கும். பிடிப்பவரின் சாதுரியம் அதிக தொலைவு ஓடத் தேவையில்லாமல், அதே நேரத்தில் நாயை அருகில் வரவிடாமல் போதுமான தொலைவில் வைத்திருப்பதில்தான் இருக்கும். எனக்குத் தெரிந்து ஒருமுறை தார் ரோட்டில் நாய் எதிர்புறம் இழுத்துப் பின்னர் அதன் வலுவைத் தளர்த்தப் பிடியாள் கால் வழுக்கிக் கீழே விழுந்துவிட்டார். அவர் மேலே பாய்ந்த நாய் குறைந்தது நான்கு ஐந்து முறையாவது அவரைக் கடித்துக் குதறிவிட்டது. ஆனால் பொதுவில் இப்படி நடப்பதில்லை. இரண்டாவது ஆளின் துணையுடன் நாய் எளிதில் பிடிக்கப்படும், சில வேளைகளில் கோணிப்பையையும் பயன்படுத்துவதைப் பார்த்திருக்கிறேன். பிடிபட்டவனைக் காட்சிப்பொருளாக்கக் கூடாது என்று இருக்கும் சர்வதேசப் போர்க்கைதிகளுக்கான விதிமுறைகளுக்கெல்லாம் அமெரிக்கா எந்த அளவு மதிப்பு தருகிறதோ, அந்த அளவிற்குச் சற்றும் குறையாமல் நாய்கள் நடு ரோட்டில் தரதரவென இழுத்துச் செல்லப்படும். சில வேளைகளில் கழுத்தில் கம்பி இழுக்க இரத்தம் கசிவதைப் பார்க்கக் கொடுமையாக இருக்கும். வலி தாங்கமுடியாத நாய் சீக்கிரமே இழுத்த இழுப்புக்கு வரத்தொடங்கும்.

Guantanamo Prisoners

இதில் எப்பொழுதுமே எனக்குப் புரியாத இரகசியம் இதுதான்; வண்டிக்கு அழைத்துச் செல்லப்படும் நாயின் கழுத்திலிருந்து சுருக்குக் கம்பியை எப்படி விடுவிக்கிறார்கள்? அருகில் சென்று பார்க்க ஒருமுறையும் வாய்ப்புக் கிடைத்ததில்லை (தைரியம் இருந்ததில்லை என்பதுதான் உண்மை). அல் கெய்டா கைதிகளை அமெரிக்கா க்வாண்டனாமோ பேயில் பிடித்துவைத்திருக்கிறார்களே அதேபோல் கம்பிக்கு அப்பால் பரிதாபமாக நான்கைந்து நாய்கள் நின்றுகொண்டிருக்கும். பிடித்துக் கொண்டு போகும் நாய்களையெல்லாம் என்ன செய்வார்கள் என்பது பற்றி, அந்த கால ஏ.என்.சிவராமன் தினமணியில் தலைப்பில் வருமே, அதே “ஹேஷ்யங்கள்” எங்களுக்குள் நிறைய இருந்தன. ஒரு முறை டவுன் ஹைஸ்கூலில் +2 படிக்க்கும் பொழுது இந்தப் பேச்சுவர பழனியப்பன் “இது தெரியாதாடா, வட்டிபுள்ளையார் கோவில் தாண்டி ஒரு ஸ்லாட்டர் ஹவுஸ் இருக்கு, அங்க போய் இந்த நாயெல்லாம் அருவாளால ஒரே வெட்டா வெட்டிடுவாஙக” என்று சொன்னான். உடனடியாக அருகில் இருந்த நாகப்பன், “டேய் அப்படி வெட்ட மாட்டாங்கடா, அங்க மரவாடில இருக்குல்ல அதே மாறி ஒரு இரும்பு பெல்ட் மெசின் இருக்கு, அது ஸ்பீடா சுத்திக்கிட்டே இருக்கச்சே, நாயோடக் கழுத்தப் புடிச்சு அதுலகாட்டி ஒரு செகண்ட்ல அறுத்துப்புடுவாங்க” என்று கிராபிக்கலாகக் கதைவிட்ட பொழுது அருகில் இருந்த கே.ஆர்.உஷா என்னோட சட்டையில் ‘புளுக்’ என்று வாந்தியெடுத்தாள். இன்னும் ஒரு நாள் வேறு சந்தர்ப்பத்தில் இதே பேச்சு வந்தது. இந்த முறை வெட்டப்படும் நாய்களின் பயன்களைக் குறித்த சந்தேகங்கள். “அது தெரியாதாடா, நாய்க்கறி திங்கறவங்க இருக்காங்க, அவுங்க வாங்கிக்கிட்டுப் போவாங்க. ஆனா நாயெலும்பு வெல அதிகம். அதைக் காயவைச்சுப் பொடிபண்ணி நாட்டுச் சக்கரையை தீட்டி வெள்ளையாக்கப் பயன்படுத்துவாங்க” என்று முத்துச்சாமி சொல்லப்போக நானே வாந்தியெடுத்திருக்கிறேன்.

எது எப்படியோ, அந்த வண்டிக்குப்பிறகு நாய்களின் பயணத்தைப்பற்றி இன்றுவரை எனக்கு மர்மமாகவே இருக்கிறது.

ஐயய்யோ, மன்னியுங்க. நாய் வண்டின்னு தலைப்புபோட்டு நான் எழுதவந்தது இதப்பத்தி இல்ல. அது வந்து…

வீட்டில் வளர்ப்பு மிருகங்களை வைத்துக்கொள்வது காலம் காலமாக எல்லா சமூகங்களிலும் இருந்துவருகிறது. தற்கால வளர்ச்சியடைந்த சமூகக் (ஐரோப்பா, வடஅமெரிக்கா, குறிப்பாக) குடும்பங்களில் வளர்ப்புப் பிராணிகளின் இடம் மிகவும் முக்கியமானது. எனக்குத் தெரிந்து ஒரிரண்டு குடும்பங்களில் குழந்தைகளுக்குப் பதிலாக நாயையும், பூனையையும் வளர்த்து வருகிறார்கள். இதில் குறிப்பாக பிரெஞ்சு பேசும் என்னுடைய நண்பர் ஒருவர் குடும்பத்தில் அவருடைய நாய்க்குச் செலவிடும் பணம், நான் என்னுடைய குழந்தை ஒருவனுக்குச் செலவிடுவதைவிட அதிகம். சென்ற கோடையில் ஒரு முழுப்பயணிக்கான செலவில் அவருடைய நாய் Pet Taxi என்று சொல்லப்படும் எடுத்துச்செல்லும் கூண்டில் பஹாமாஸ் பயணித்து வந்தது. காலை மாலை வேளைகளில் நாய்களை அழைத்துச் செல்பவர்கள் கையில் கூடவே ஒரு பாலித்தீன் பையைக் கொண்டு செல்வதைப் பார்க்கலாம். Stoop and Scoop என்பது எங்கள் உள்ளூர் விதி. சராசரியாக நாயுடன் நடப்பவர்களின் நடையும் முகபாவனைகளும் காலகட்டத்தில் அவர்கள் நாயைப் போலவே ஒருங்கமைகிறது என்பது புள்ளியியல் நிதர்சனம்.

Pet Stroller

வளர்பிராணிகளை (சிலருக்கு அவர்கள் செல்லத்தைப் பிராணி என்று சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது, அதற்கு, மன்னிக்கவும், அவன்/அவள் பெயரைச் சொல்லித்தான் விளிக்க வேண்டும்) இந்த நாடுகளில் பராமரிக்கும் முறைகளைப் பார்த்தால் நமக்குத் தலையைச் சுற்றும். அதற்கு டிசைனர் துணிகள், முப்பத்தாறுவித ஊட்டச் சத்துக்கள் பொதிந்து, “பாப்பா விரும்பிடுமே இதன் மொறமொறப்பை” என்று விளம்பரப்படுத்தப்படும் நம்ம ஊர் பார்லே குளுகோஸ் பிஸ்கெட்டெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் high protein, low-carb diet, calcium-rich milk, free from genetically modified ingredients, என்றெல்லாம் விளம்பரப்படுத்தப்படும் பிராணி உணவுகளின் ஒரு மாதச் செலவிட என்னுடைய எம்.எஸ்.ஸி படிப்பிற்கு என் அப்பா குறைவாகத்தான் செலவழித்திருப்பார் என்பது நிச்சயம்.

இப்பொழுது “வந்ததே உன்னதம், செல்லப்பிராணி உலகில்” என்று புதிதாக உதயமாகியிருப்பதுதான் தலைப்பில் இருக்கும் ‘நாய் வண்டி’. சுருக்கமாக, நடத்தி அழைத்துச் சொல்லும்பொழுது இருக்கும் கொசுத்தொல்லை, நடப்பதால் உண்டாகும் கால்வலி இவற்றிலிருந்து நாய்களைக் காப்பாற்ற வடிவமைக்கப்பட்டதுதான் இந்த வண்டி. கூடவே, அதன் எஜமானனின் சமூக அந்தஸ்தைப் பறைசாற்றிக் கொள்ளவும்தான். இதன் விசேட அம்சங்களை இப்படி விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள்;

  1. நகரத்தின் நெரிசல்களுக்கும், பூங்காக்களுக்கும், ஏன் சிக்கல் நிறைந்த மலைப்பாதைகளுக்கும், காடுகளுக்கும், கடற்கரைகளுக்கும் ஏற்றது.
  2. இதன் எட்டங்குல அகன்ற சக்கரம் எல்லா திசைகளிலும் எளிதாக வலிக்க ஏற்றது.
  3. எடையற்ற இதன் அடைகூட்டினைத் தனியாகப் பிரித்து வாகனப்பயணங்களில் செல்லப்பிராணிகளை எடுத்துச் செல்லமுடியும்.
  4. உங்கள் செல்லம் இடுப்பு மற்றும் மூட்டு உபாதைகளால் அவதிப்படும் நேரத்தில் எளிதில் மிருகவைத்தியரிடம் அழைத்துச் செல்ல உதவியானது.
  5. துருப்பிடிக்காத, நீடித்த உலோகத்தினாலும், உயர்ந்த ABS பிளாஸ்டிக்கினாலும், நீர்த்தடையுள்ள பிரத்தியேகத் துணிகளினாலும் செய்யப்பட்டது.
  6. அடைக்கூடு காற்றோட்டமுள்ள வலையிடப்பட்ட துணியாலானது, தேவையான சமயங்களில் உங்கள் செல்லத்தின் தனிமைக்கு ஏற்றதும் கூட.
  7. தவிர்க்க முடியாத நேரங்களில் சலவைத்துணி சுமக்கவும், மளிகை சாமன் வாங்கிவரவும் பயன்படுத்தலாம்.
  8. அதி சௌகரியமான ஒரு அங்குல, துவைத்துத் தூய்மையாக்கவல்ல மெத்தையும் உண்டு.
  9. வண்டியின் பின்புறப்பையில் வண்டியின் சாவி, கழுத்துப்பட்டை, தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வசதியாக எடுத்துச் செல்லலாம்.
  10. எளிதில் இயக்கவல்ல முன்/பின்புறக் கதவுகள்.
Advani Yatra

இதையெல்லாம் படிக்கும்பொழுது அத்வானியின் பாரத் உதய் யாத்ரா நினைவில் வருவது தவிர்க்க முடியாததாகிறது. ஒரே ஒரு வித்தியாசம், இதில் பயணிக்கும் நாய் அத்வானியைப் போலக் கூழைக் கும்பிடு போடவேண்டிய அவசியமில்லை.


நான் சிறியவனாக இருக்கும்பொழுது ஒரு செல்லநாய் இருந்தது. தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும், வேளாவோளைக்கு வீட்டிற்கு முன்வந்து நிற்கும். என் அம்மா இருக்கும் சாப்பாட்டில் அதற்கும் ஒரு கவளம் எடுத்துவைப்பாள் (அது மோர்க்குழம்பு, மிளகு ரசம், பழைய சாதம் என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்), “ம். கொட்டிக்க வந்துட்டியா, தின்னு தொலை” என்று சொல்லிவிட்டு தரையில்தான் போடுவாள், அவுக் அவுக்கென்று எச்சில் ஒழுகத் தின்றுவிட்டு, வாசலில் இரண்டு நிமிடம் நின்றுவிட்டு மறைந்துபோய்விடும். என்றைக்காவது இரண்டாவது காட்சி சினிமா பார்த்துவிட்டு வந்தால் அது என் வீட்டு வாசலில் சுருண்டு படுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதற்கும் எங்களுக்கும் இதைத்தவிர வேறு எந்தவிதமான நெருக்கமும் கிடையாது. என்றாலும் எங்கள் தெருவில் அதற்குப் பெயர் “வாத்தியார் வீட்டு நாய்”.

ஒரு நாள் வாத்தியார் விட்டு நாய், காய்ந்துகிடக்கும் காவிரியின் மணல் பரப்பில் மலத்தை முகர்ந்துகொண்டிருப்பதைப் பார்த்துவிட்டேன். அன்று இரவு, “டேய், இதக்கொண்டுபோய் அந்தக் கடங்காரனுக்குப் போட்டுட்டுவா, கையழிஞ்சு போறத்துக்குள்ள கத்தித் தீத்துடும் சனி” என்று சொன்ன அம்மாவிடம், “அம்மா, அத வீட்டுக்கிட்ட உடாத, மத்தியானம் டபீர் படித்தொறைக்குப் பக்கத்துல கக்கூஸ மோந்துண்டு நின்னுன்டுருந்தது” என்று சொன்னேன். “ஆமாண்டா, பெரிய இவன், கண்டுட்டான், நாய்ன்னா பீயத் திங்காம என்ன செய்யும், அதுக்காக நாம போட்ற கவளத்தை நிறுத்த முடியுமா” என்று கடிந்துகொண்டாள். சரியாகப் புரியாவிட்டாலும், அதன் குரைப்பை நிறுத்தலாம் என்று அம்மா கொடுத்த சோற்றைப் போய்ப் போட்டுவிட்டு வந்தேன்.

பல வருடங்கள் கழிந்த்து, இப்பொழுது என் அம்மாவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் புரிகிறது. மனிதனுக்கு குழந்தைக்கு மாற்றாகவோ, குழந்தைக்குப் பொம்மையாகவோ வேண்டியிருக்கிறது என்பதற்காகக் கயிற்றால் கட்டிப்போடுகிறோம். கட்டும் கயிறு முதலில் மணிக்கயிறாக மாறுகிறது. கழுத்துப்பட்டை நல்ல தோலால் செய்திருக்க வேண்டும், அதில் உலோகப் பொத்தான்கள் பதித்திருக்க வேண்டும் என்று தொடருகிறது. பின்னர், அது low-carb, high calcium உணவாகப் பரிணமிக்கிறது.

எட்டங்குலச் சக்கர வண்டியில், உலோகக்கலவைக் கைப்பிடியில், நீரில் நனையாத துணியை உடுத்திக்கொண்டு, நடைக்கு ‘இழுத்துச்’ செல்லப்படும் நாய்…? இதுதான் நாய்க்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்று இறுமாந்து பின்நடக்கும் மனிதன்…?

பரிணாமத்தில் மனிதன் இறுதியல்ல என்பதைத் தீர்மானமாக நம்புபவன் நான். நாளை தங்கக் கம்பி போட்ட இழுவண்டி மனிதனுக்குக் கிடைக்கக்கூடும்.


முதலில் பதிப்பிக்கப்பட்டது: 23 மார்ச்சு 2004