பின் நவீனத்துவம் - ஜப்பானியக் கழிவறைத் தொழில்நுட்பத்தின் மீதான ஒரு ஆய்வு
ஜப்பானிய இல்லங்களுக்கு நீங்கள் வருகை தந்தால் அவர்களிடம் உள்ள எண்ணிலடங்காத தொலை இயக்கிகளைக் கண்டு வியக்க நேரிடும் தொலைக்காட்சி, இசைப்பெட்டி, அறைக்குளிரூட்டி, அறைக் காற்றாடி, ஒளி-ஒலிக் குறுந்தகடு, மின் அடுப்பு, நுண்ணலை அடுப்பு என எல்லாவற்றுக்கும் தொலை இயக்கிகள். இவற்றில் சில 80 பொத்தான்களுக்கு மேல் கொண்டவை இவற்றை எல்லாம் எது எதற்கென நினைவில் வைத்துக்கொண்டு இயக்குவது ஒரு புத்திசாலிக்கே சவாலாகும். பொதுவில் ஜப்பானியர்களுக்கு சாதனங்களின் மீது அளவிட முடியாத மோகம் எல்லாவற்றையும் இயந்திரமயமாக்குதலிலும், அந்த இயந்திரங்களைச் சிறியனவாக்குதலிலும் அவர்களுக்கு இணை இவ்வுலகில் யாரும் இல்லை. ஏன் அவர்களுக்கு இந்த மோகம்? இதற்கான விடை அவர்களது தோல்வியில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அணுகுண்டுகளால் நாசமாக்கப்பட்ட உயிர்களையும் உடமைகளையும் கண்டு அளவிட முடியாத துயரம் கொண்ட அவர்கள் எடுத்த முடிவு - நாம் தோல்வியடைந்தது தொழில் நுட்பக் குறைவினால், இதிலிருந்து மீள ஒரே வழி நம் தொழில்நுட்பத் திறனை மற்றவர்களால் எட்டாத அளவிற்கு உயர்த்துதல்தான். அப்பொழுது தொடங்கிய அவர்களின் அந்த வைராக்கியம் இன்றைக்கு அமெரிக்காவிற்கு அடுத்தபடியான பெரிய பொருளாதார சக்தியாக அவர்களை உயர்த்திவிட்டிருக்கின்றது.
நிற்க. இந்தக் கட்டுரையின் நோக்கம் இப்படியெல்லாம் சரித்திர, சமூக ஆய்வில் ஈடுபடுவது இல்லை. இது மிகவும் ‘பின்னடைந்த’ ஒரு தொழில்நுட்பத்தைப் பற்றியது. ஜப்பானியக் கழிவறைகளில் கோலோச்சும் அவர்களது தொழில்நுட்பத்தைப் பற்றிய கட்டுரை. பொதுவில் தொழில்நுட்ப சாதனங்களின் மீது அளவிட முடியாத காதலை உடையவன் நான். கிட்டத்தட்ட ஜப்பானியர்களின் மனோபாவத்துடன் என்னைப் பெரிதும் அடையாளம் காணமுடிகின்றது. ஆனாலும், என்னுடைய இரண்டாண்டுகால தோக்கியோ வாழ்வில் என்னைப் பயமுறுத்திய அசாத்திய தொலை இயக்கியைப் பற்றி உங்களிடம் சொல்லியே ஆகவேண்டும்.
கடந்த முறை தோக்கியோவின் நகர்மையத்திலிருக்கும் ஒரு அரசாங்க அலுவலகத்திற்குப் போய் பொழுதைக் கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மக்கள் நெருக்கமும், பரபரப்பும் மிக்க தோக்கியோவில் அந்தரங்கமாகப் பொழுதைக் கழிக்கக் கழிவறைகள் சிறந்த வடிகால்கள். கழித்தலும், முழக்கலும் முடிந்து உலகம் பழித்ததை ஒதுக்கித் திரும்புகையில் கைப்பிடிக்கருகில் ஒரு தொலைஇயக்கி பொருத்தப்பட்டிருந்தது. பெரும்பாலும் ஜப்பானியப் பொதுவிடங்களில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இயக்குவிதிகளைக் காண்பது அரிது. எனவே பொதுவிடங்களிலெல்லாம் இங்கு ‘காய்ஜின்’ என்று அறியப்படும் வெளிநாட்டவர்கள், ஜப்பானிய சமூக விதிகளுக்குக் கட்டுப்படுவதில்லை (உதாரணமாக, ஜப்பானில் பொதுவிடங்களில் சாப்பிடுவது அநாகரீகம். பார்த்தீர்களா, எதையோ பேசிக்கொண்டிருந்த நான் சாப்பாட்டுக்கு வந்துவிட்டேன், மன்னிக்கவும், பின்னால் செல்வோம்). ஆனால் நகர்மைய அரசு அலுவலகம், அதுவும் காய்ஜின்களோடு சம்பந்தப்பட்டது என்பதால் அங்கு ஆங்கில வழிமுறைக் கையேடு ஒன்று இருந்தது. அந்தத் தொலைஇயக்கி நாம் வந்த காரியத்தை முடித்துவிட்டுச் செல்கையில் தொலைவிலிருந்து கழிவறைப் பொந்தைச் சுத்திகரிக்க நீரைப் பாய்ச்சுவதற்கானது. இதற்கான பயன்கள் என்னவாக இருக்கமுடியும் என சிந்தித்தபொழுது எனக்கு இரண்டுதான் தோன்றியது.
- தன்னுடைய கழிபயன்களின் நாற்றம் பொறுக்க முடியாதவர்கள் விரைவாக அவ்விடத்தைவிட்டு அகன்று தொலைவிலிருந்து தன் இறுதிப்பணியைச் செவ்வனே நிறைவேற்ற உதவுவது.
- குறும்புசாலிகள் அந்தத் தொலைஇயக்கியைக் கையோடு எடுத்துச் சென்று, சிறிது நேரம் கழித்து வந்து பிறிதொருவர் ஆழ்ந்த மோனநிலையில் இருக்கும்பொழுது பின்னின்று தாக்குதல் நடத்துவது.
என்னுடைய வாழ்நாளில் தொழில்நுட்ப வளர்ச்சியால் மன அமைதி பாதிக்கப்பட்டது முதன்முறையாக அன்றுதான். கூட்டம் நிறைந்த தோக்கியோவில் தனியாக சிலமணித்துளிகள் நிம்மதியாகக் கழிக்க இருந்த ஒரே இடமும் பறிக்கப்படுவதாக உணர்ந்தேன். ‘முக்கிய’ பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது ஒரு குறும்புக்காரப் பள்ளிச் சிறுவன் என்மீது திரவத் தாக்குதல் நடத்துவதாகக் கனவுகண்டு அடுத்த இரண்டு நாட்கள் தூக்கத்திலிருந்து அலறிக்கொண்டு எழுந்ததாக என் சகதர்மினியின் குற்றப்பத்திரிக்கை.
ஆனால் இம்முறையும் வழக்கம்போல சாதனத்தால் கவரப்படுவதைத் தடுக்க இயலவில்லை. விளைவாக நான் சேகரித்த சில உண்மைகளை இங்கு தொகுத்து வழங்குகின்றேன். எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு இங்கே மிகவும் பிடித்த ஒன்றைப்பற்றி முதலில் சொல்லியாக வேண்டும் பிறருடைய இடத்தில் ஆக்கிரமிப்பு செய்யும் சில சமூகவிரோதிகளைத் தவிர சாதாரணர்களாகிய நம் எல்லோரையும் கவலைப்படச் செய்வது - பலர் அமரும் ஒரு இடத்தில் அமரவேண்டியிருப்பது. அந்தவகையில் உலக மரங்கள் அழிக்கப்படுவதைப் பற்றிய என்னுடைய சுற்றுசூழல் கவலைகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, தாரளமாகக் கழிவறைக் காகதங்களைப் பரத்தியே அமருவேன். (நண்பர் ஒருவர் கம்யூனிச நாடுகள் க்ளாஸ்நாஸ்டுக்குப் பிறகு உலகப் பொருளாதாரத்தில் தங்களை இருத்திக் கொள்ளவேண்டி சந்தைப்போட்டியில் ஈடுபட்டு பிரிட்டிஸ் ஏர்வேஸின் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கிற்கு பல்கேரிய விமானத்தில் பயணித்தபொழுது சந்திக்க நேர்ந்த காகிதமின்மையையும், அதைத்தொடர்ந்து சோபியா விமானநிலையத்தில் அன்றைய பல்கேரிய நாளிதழை வாங்கவேண்டி நேர்ந்ததையும், கண்ணிர்மல்க விவரித்த கதையைப் பின்னொரு நாளில் உங்களுக்குச் சொல்கிறேன்). ஜப்பானின் பொருளாதாரம் இறங்குமுகமாக இருந்தாலும் அவர்கள் ‘பின்னால் வருவதைப்’ பற்றி மிகவும் கவலைப்படுபவர்கள். பல கழிவறைகளில் ஒரு பொத்தானை அழுத்தினால் போதும் கஷ்மீரப் பட்டுக்கு இணையான மெல்லிய சரன்ராப் காகித உறை ஒன்று உங்கள் பின்னிடத்திற்கும் பொதுவிடத்திற்கும் இடையில் ஒரு திரையிட்டு, தாக்கவரும் நுண்ணுயிரிகளிடமிருந்து உங்களுக்குப் பாதுகாப்பு வளையம் வழங்கும். வருமுன் காக்கும் இத்தகைய காகிதக் கவசங்கள் பிற நாடுகளில் இருப்பதாகத் தெரியவில்லை.
தொத்தோ லிமிட்டெட் (Toto Limited) ஜப்பானில் மிகவும் பிரபலமான ஒரு நிறுவனம். கழிவறை மற்றும் குளியலறைச் சாதனங்களைத் தயாரிப்பதில் முன்னிருப்பவர்கள் இவர்கள். தொடர்ச்சியான தொழில்நுட்ப ஆராய்ச்சியாலும் நுகர்வோர் (இந்தச் சொல் இவ்விடத்தில் சரியானாதா?) ஆய்வுகளின் மூலமாக அவர்களின் தேவைகளை உணர்வதாலும் கழிவறைகளில் பல புதுமைகளைப் புகுத்தியவர்கள். ஜப்பானியர்கள் தங்களின் பொழுதை இனிதே கழிக்க இவர்களின் பங்களிப்புகள் குளிர்காலத்திற்கென சூடேற்றப்பட்ட இருக்கைகள் (இருக்கைகள் சூடாவதால் மலம் இளக்கம் அடைவதாக இவர்களுடைய விளம்பரம் தகவல் அளிக்கிறது), புறக்கழுவலுக்காக அதிவேக, இளஞ்சூட்டு நீர்பீய்ச்சிகள், பின்னர் உலரவைப்பதற்காக இளஞ்சூடான காற்றாடிகள், ஆள் உள்ளே வருவது தெரிந்தவுடன் மெல்லிய இதமான நறுமணத்தைப் பரப்பத் தானியங்கி வாசனைக் குப்பிகள், சங்கடமான சமயங்களில் ஏற்படும் பலத்த இடியுடன் கூடிய மழையைப் பற்றிய தகவல்களை வெளியிருப்போரிடமிருந்து மறைக்க பீத்தோவனின் ஆறாம் சிம்பொனி, பீட்டில்ஸின் மஞ்சள் நீர்மூழ்கிப் பாடல், ஜென்னிபர் லேபஸின் பாப் பாடல், டூபாக் ஷக்கூர் ராப், மெட்டாலிக்காவின் பேரிரைச்சல் சங்கீதம் என அவரவர்கள் தேவைக்கென பாடல்களை ஒலிபரப்பும் இசைக்கருவி (நாட்டுப்பற்று மிக்க ஜப்பானியர்களுக்கு டா பம்ப், மார்னிங் முசுமே போன்றவையும், பெருமைவாய்ந்த தைக்கோ பறையொலி, கபூகியில் இசைக்கப்படும் பாடல்களும் உண்டு). இவையெல்லாவற்றையையும் உங்கள் இருப்பிடத்தில் இருந்தே இயக்கப் பதினெட்டு பொத்தான்களைக் கொண்ட தொலைஇயக்கியும் உண்டு. கிட்டத்தட்ட ஒரு அதிவேக சூப்பர்ஸானிக் விமானியின் மனநிலைக்கு உங்களைக் கொண்டு செல்லும் அவைகளிடமிருந்து மீண்டுவருதலுக்கு உங்களுக்கு அளவுகடந்த சுயகட்டுப்பாடு தேவை. இத்தகைய அளவுகடந்த செல்வாக்குகளில் மூழ்கியிருந்த நாளொன்றில், இருக்கைக்கடியில் பொருத்தப்படும் சூடேற்றிகளின் தரக்கட்டுப்பாட்டையும், அவற்றின் மின்காந்த அதிர்வுகளால் ஏற்படக்கூடிய அடிப்படை விளைவுகளைப் பற்றியும், களஆய்வு நடத்தும் வெள்ளை அங்கி அணிந்த, மூக்குக்கண்ணாடி கொண்ட, தொத்தோ நிறுவனத்தின் ஆராய்ச்சிப்பிரிவின் ஒரு ஜப்பானிய இளம் ஆராய்ச்சியாளைக் கற்பனை செய்து பார்த்து அடியேன் சிரித்த சப்தம் கேட்டு, தன் கற்பனைகள் பாதிக்கப்பட்ட- அடுத்த அறை பயணாளி அதிகோபத்துடன் கனைத்தது உண்மை.
இவர்களுடைய ஆராய்ச்சி இப்படி உங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி கிளுகிளுப்பை ஊட்டுவதுடன் நின்றுவிடுவதில்லை. தொத்தோ நிறுவனத்தின் முதிய மேலாளர்களில் ஒருவரான திரு நவோமி இத்தோவின் சமீபத்திய பேட்டியொன்றில் அவர்களின் கழிவுநீர் வாய்க்கால்களின் அடிப்படை ஆய்வுகளின் மூலம் கழிவு நீக்கத்திற்குப் பயன்படும் நீரளவைப் பாதியாக் குறைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இராமனாதபுரம் போன்ற இடங்களில் இதனால் விளையக்கூடிய அடிப்படைத் தண்ணிர்த் தேவைக் குறைவுகளை நினைத்து நான் ஆனந்தக் கண்ணிர்விட்டதை என்னுடைய மூன்றுவயது மகன் ஒருமாதிரியாகப் பார்த்ததை உங்களிடமிருந்து மறைக்க விரும்பவில்லை. பிறந்தது முதல் சூடேற்றப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து வளரும் அவனுக்கு, நம்முடைய பாழ்பட்ட சமூக அவலங்களை அறிய சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இதுபோன்ற சுற்றுச் சூழல் கவலைகளிலும் அதற்கான தீர்வுகளைக் கண்டறிவதிலும்தான் கழிவறைத் தொழில்நுட்பத்தின் எதிர்காலம் இருக்கிறது என்பது அசைக்கமுடியாத உண்மை.
கழிக்கும் கனநேரத்தையும் பலனுள்ளதாகக் கழிக்க வேண்டும் என்பது சுறுசுறுப்புக்குப் பெயர்போன ஜப்பானியர்களின் அடிப்படைக் குணம். அந்த வகையில் செலவிடும் ஒவ்வொரு முறையும் தங்கள் கழிவுகள் வினாவதை அவர்கள் விரும்பவில்லை. நேஷனல் எனும் பெயரில் கையடக்க வானொலி முதல் இயந்திரமனிதன் வரை விற்பனை செய்து வரும் நுகர்வோர் பெருநிறுவனமான மட்சூவழித்தா தங்கள் கவனத்தை மனிதக் கழிவுகளில் செலுத்தியது. விளைவு - மருத்துவப் புரட்சி. நீங்கள் இருக்கையில் அமர்ந்த உடன் கழிவறையில் பொருத்தப்பட்ட லேசர் சிறுநீர் ஆய்வுக்கருவி உங்கள் வெளியீடுகளைக் கூர்ந்து நோக்கும். காரியத்தை முடித்துவிட்டு நீங்கள் எழுந்தவுடன் இருக்கையின் பின்னால் உள்ள சிறுதிரையை இயக்கி உங்கள் சிறுநீரிலுள்ள சர்க்கரை, உப்பு மற்றும் பிற பொருட்களின் அளவை அறிந்து கொள்ளாலாம். தேவையானால் அந்தத் தகவல்களை நெகிழ்வட்டில் பதிவுசெய்து எடுத்துக்கொண்டு உடனே உங்கள் மருத்துவரிடம் ஒடலாம். (ஜாவா விற்பன்னனான என் நண்பன் ஒருவன் ஜாவா இணைய வசதிகளைப் பயன்படுத்தி தகவல்களை இணையம் மூலம் இணைத்து உடனடியாக உங்கள் மருத்துவரை அறியச் செய்யலாம் எனக் கூறுகின்றான் இதன்மூலம் மருத்துவர் அவராகவே கழிவறைக்கு ஆம்புலன்சை அனுப்பி உதவும் சாத்தியங்கள் உள்ளன என்பதை அறியும் பொழுது நம் மருத்துவத்தின் (மற்றும் கழிவறைத் தொழில்நுட்பத்தின்) வளர்ச்சி பிரமிப்படையச் செய்கின்றது. ஜாவா இணைப்பு இல்லாத சாதாரண மருத்துவக் கழிவறை ஏற்கனவே தோக்கியோவில் விற்பனைக்கு உள்ளது. இது ‘புத்திசாலி இல்லம்’ எனும் கருத்தின் அடிப்படையில் அமைந்துவரும் வருங்கால வீடுகளின் ஒருபகுதி, மேலதிக விபரங்களை http://www.etown.com/news/article.jhtml?articleID=1117 எனும் கட்டுரையில் அறியலாம்).
தொழில்நுட்பத்தில் மாத்திரம் வாழ்வின் உன்னதம் இல்லை என்பதை ஜப்பானியர்கள் மெல்ல உணர்ந்து வருகின்றார்கள். வேலை, வேலை என்று காலங்கழித்த முந்தைய தலைமுறைக்கும் வெள்ளி, வெளிர்மஞ்சள், கருநீலம் எனத் தலைமுடியை வண்ணமயமாக்கி வாழ்வின் மறுபக்கத்தை ஆராயும் இன்றைய தலைமுறைக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பது மறுக்கமுடியாத உண்மை. பொதுவில் பரபரப்பான வாழ்வை விட்டோடும், கலைகலையும் - வாழ்வையும் நேசிக்கும் பாங்கு அண்மையில் இவர்களிடம் தலைப்பட ஆரம்பித்திருக்கிறது. இதன் தாக்கங்களைப் பலவழிகளிலும் காணமுடிகின்றது. பரந்த வெளிகளையும் இயற்கையையும் நேசிக்கும் அவர்களின் பூர்வீக ஷிண்டோ மதத்தின் தாக்க்ம் வெளிப்பட்டு வருகின்றது. வயது முதிர்ந்த ஜப்பானியர்கள் கோல்ப் விளையாடத் தொடங்கியிருக்கின்றார்கள். இளைஞர்கள் மின்னணு சாதனங்களைச் சற்று மறந்து வெளியில் கால்பந்து விளையாடுகின்றார்கள். செய்யும் ஒவ்வொரு வேலையையும் கலையார்வத்துடன் செய்யவேண்டும் எனும், கிட்டத்தட்ட, வெறியில் இருக்கிறார்கள். இந்த வகையில் என்னை அசர வைத்தது, நிஷஷி அஸாபு எனும் இடத்தில் உள்ள ஷாண்டோ டைனிங் எனும் உணவகத்தின் ஆண்கள் கழிவறை. மூன்று சுவர்களிலும் பொருத்தப்பட்ட ஆளுயரக் கண்ணாடிகள் மூலம் நீங்கள் செய்யும் அதே காரியத்தை நூற்றுக்கணக்கானவர்கள் அதேமாதிரி செய்வதை அறியமுடிகின்றது, அதைத் தெரிந்து கொள்வதால் உங்களுக்கு ஏற்படும் இளமுறுவல் எல்லோரையும் தொற்றிக் கொள்கிறது.
பரந்துபட்ட வெளியை நேசிக்கும் அவர்களின் ஆர்வம் சற்றே விபரீதமாகப் போகின்றது. உதாரணமாக, அஸாகுசா எனும் பரபரப்பான இடத்திலுள்ள அசாகி டவர் கட்டிடத்தின் இருபத்திரண்டாம் மாடி. அவ்விடத்தின் கீழுள்ள சுமிடா ஆற்றில் சுழித்துக்கொண்டு ஓடும் நீரோட்டம் பிறருக்கு எப்படியோ, எனக்கு உடம்பில் எல்லாவற்றையும் இழந்ததுபோல் சோர்வளித்தது.
நிற்க (மன்னிக்கவும், நின்றுதான் ஆகவேண்டும் என்று அவசியமில்லை), இதுபோன்ற தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்பட்டால் நம்மூரில் நடக்கக்கூடிய விபரீதங்களின் சாத்தியக்கூறுகளைச் சற்றே ஆராய்ந்து பார்ப்போம். முதன்முறையாக பெங்களுருக்கு வந்த என்னுடைய பெரிய தாத்தா, ‘ஆக்குற எடத்துக்கு அண்டையிலேயே இருக்குற எடங்கட்டாறாங்களே’ என்று ஆதங்கப்பட்டு தனது யோகப் பயிற்சியை எங்களுக்கு உணர்த்த, இருந்த நான்கு நாட்களுக்கும் ‘இருக்காம இருந்தது’ நினைவுக்கு வருகின்றது. அத்தகைய உறுதிகொண்ட நெஞ்சினரைத் திருப்திப்படுத்த சூடேற்றப்பட்ட இருக்கைகள் எந்த மூலை; அவர்களுக்குக் குறுகுறுப்பூட்ட அருகம்புல் வளர்ப்பது எப்படி? பரந்துபட்ட வானத்தையே கூரையாகக் கொண்டு தங்கள் கடன்களை முடிக்கும் அவர் போன்றவர்களைத் திருப்திப்படுத்த மாய மெய்மை வசதிகள் கொண்ட கூரைகளை எப்படி வேய்வது. அப்படியே இருந்தாலும் காலத்தில் மழை பெய்யா அந்த வானத்தின் பொய்மையைக் கண்டுபிடிக்க அவருக்கு இரண்டு நாட்களுக்கு மேலாகாது.
நாம் தொழில்நுட்பத்திற்குத் தயாராகவில்லை (அ) நமக்குத் தொழில்நுட்பம் தயாராகவில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை.
கட்டுரையின் பொருள் கருதி பின்குறிப்பும் பிற்சேர்க்கையும் தவறாது வழங்கப்படுகின்றன.
பின்குறிப்பு:
பனாசோனிக்கின் தானியங்கி இருக்கை உயர்த்தி பற்றி அறிய http://www.thefactoryoutlet.com/toilet seat lifter.htm
பிற்சேர்க்கை:
தவிர்க்க முடியாத காரணங்களால் ஜப்பானியக் கழிவறைகளை நாடவேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாபவர்களுக்கான அவசரக் கையேடு
வகை -1 தானியங்கிக் கழிவறை
- நுழைந்த உடன் குழந்தையை அதற்கென உள்ள படுக்கையில் இடவும். தவறாது, அங்குள்ள இருக்கை நாடாவால் பிணைக்கவும். இது மிகவும் முக்கியம் ஜப்பானில் எந்த நேரத்தில் இயற்கையின் சீற்றத்தால் நிலநடுக்கம் ஏற்படும் என யாராலும் அறுதியிட முடியாது. வருங்காலத்தில் இத்தகையக் கழிவறைகளைப் பயன்படுத்த வளரும் குழந்தைக்கு ஒரு ‘காண்போம் கற்போம்.’
- 1அ. குழந்தை இல்லாதவர்கள் எடுத்துச் சென்று ருசிக்கப் பையில் வாங்கிய மாக்டொனால்ட் ஹாம்பர்கரை அவ்விடத்தில் வைக்கலாம். இதை இறுக்கிக் கட்டுவதும், கட்டாது விடுவதும் உங்கள் மனநிலையைப் பொருத்தது.
- ஒட்டோஹிமே (ஒலியெழுப்பி) பொத்தானை அழுத்தவும். தங்களுக்குப் பிடித்தமான (அ) தேவையான வகை சங்கீதத்தைத் தெரிவு செய்யவும்.
- ஆண் அல்லது பெண் பொத்தானைத் தெரிவு செய்யவும். இது கழிவுப்பிறையின் இருக்கை அல்லது-மற்றும் மூடியைத் திறக்கும்.
- கைக்கொண்ட அளவு கழிவறைக் காகிதத்தைச் சுருட்டவும். அதை வைக்கப்பட்டுள்ள வாசனை கலந்த கிருமிநாசினியில் தோய்த்து இருக்கையைச் சுத்தம் செய்யவும். (ஒன்றுக்கு மேற்பட்ட வாசனைத் தெரிவுகள் இருந்தால் உங்களுக்குப் பிடித்தமானதைத் தெரிவுசெய்யவும்).
- சிலவிடங்களில் நாம் முன்குறிப்பிட்ட சரன்ராப் பிளாஸ்டிக்/காகித உறை வந்து பரவும்.
- இருக்கையில் அமரவும். இது மருத்தவ ஆய்வுக்கான லேசரை இயக்கும்.
- இருக்கையின் வெப்பநிலையைக் கைப்பிடியில் பொருத்தப்பட்டுள்ள இயக்கியின் மூலம் தங்களுக்கு ஏற்ற வகையில் கட்டுப்படுத்திக் கொள்ளவும்.
- தங்கள் வந்த காரியத்தை மேற்கொள்ளவும். மறக்காமல் ஒட்டோஹிமேவை இயக்கவும் அதன் ஒலியளைவைத் தேவையான அளவு அதிகரித்துக் கொள்ளவும்.
- காரியத்தை முடிப்பதாக உணர்ந்தால், ‘அதிக அழுக்கு’ பொத்தானை இயக்கவும். எதிர்(சரியாகச் சொல்வதானால் பின்) வரவிருக்கும் அதிவேக நீருக்கு மனதைத் திடப்படுத்திக்கொள்ளவும். இந்த கட்டத்திலிருந்து இறுதிவரை ஒட்டோஹிமே தேவை/தேவையின்மை உங்களைச் சார்ந்தது.
- அது, அவ்வாறாக நீங்க, மெல்லிய புன்முறுவல் செய்யவும்.
- பின்னர் ‘அழுக்கு நீக்கி’ பொத்தானை இயக்கவும் இது மெல்லிய இதமான நீரைப் பீச்சும். நிறுத்தவும்.
- காற்று உலர்த்தி பொத்தானை இயக்கவும். உங்கள் பின்புறம் சிவபெருமான் கண்ட திரிபுரமாவதாக உணர்ந்தால் வெப்பத்தைக் குறைக்கவும். பொறுமையாக பல நிமிடங்கள் அமரவும். இந்தத் செயலைச் செவ்வனே செய்துமுடிப்பதில்தான் உங்கள் ஆடை ஈரமாதலைத் தவிர்க்கும் திறன் இருக்கிறது. கவலைப்பாடாதிர்கள், முற்றிலும் ‘உணர்ந்தவர்கள்’ யாரும் இல்லை.
- எழுந்து நிற்கவும். தானியங்கி நறுமணப் பரப்பி வெளியிடும் வாசனையின் சுகந்தத்தை அனுபவிக்கவும்.
- பொருத்தப்பட்டிருந்தால் தங்கள் சிறுநீரில் உள்ள சர்க்கரை, உப்பு வகைகளின் அளவை அறிந்து கொள்ளவும். தேவையானால் கழிவறைக் காகிதத்தில் அவற்றைக் குறித்துக் கொள்ளவும். (அவசரமானால் இந்த கட்டத்தில் பிறவற்றை மறந்து மருத்துவரிடம் விரையவும்). எல்லாம் நல்லபடியாக இருந்தால் தங்கள் இஷ்டதேவதைகளுக்கு நன்றி கூறவும்.
- தானியங்கி பொருத்தப்பட்டவற்றில் கழிவறை தானாக நீர்பாய்ச்சிச் சுத்தம் செய்யும். இல்லையெனில் அங்குள்ள தொலை இயக்கியை எடுத்துக் கொண்டு தேவையான தூரம் சென்று அதனை இயக்கவும்.
- எல்லா பொருள்களையும் ஒருமுறை சோதனை செய்துகொள்ளவும். மறக்காமல் திரும்பச் சென்று தொலைஇயக்கியை அதனிடத்தில் பொருத்தவும்.
- குழந்தை(அ)ஹாம்பர்கரை மறக்காமல் எடுத்துக் கொள்ளவும். மறந்தாலும் கவலை இல்லை. மறுநாள் வரை அவ்விடத்திலேயே இருக்கும் (இது ஜப்பான்). இருபத்திநான்கு மணிநேரத்திற்குப் பிறகு ஞாபகத்திற்கு வந்தால் கட்டிடத்தின் காவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளாலாம். குழந்தை அவசியம் பயன்படும். ஹாம்பர்கர் தங்கள் தேவையைப் பொறுத்தது.
- ஒரு விஷயம் சொல்ல மறந்துவிட்டது. செல்லுமுன் கதவுக்கருகில் பொருதப்பட்டுள்ள கடிகாரத்தில் செலவிட்ட நேரத்தின் அளவைத் (கதவு மூடியதுமுதல் திறந்தது வரையான) தெரிந்து கொள்ளவும். அவசியமானால் அதே காகிதத்தில் குறித்துக் கொள்ளவும்.
- ஒன்று முதல் பதினெட்டு வரையான படிநிலைகளைத் தங்களுக்கு அவற்றின் மீதுள்ள புதுமை(அ)மோகம் திரும்வரை திரும்பச் செய்துகொள்ளலாம்.
வகை-2: வழக்கமான (தொன்மையான ஜப்பானிய வகை) கழிவறை
இதற்கான குறிப்புகள் ஏதும் தேவையில்லை. நம்மூரில் உள்ளது போல்தான். ஒரே வார்த்தையில் சொல்வதானால் ‘குந்தியிருக்கவும்’. ஒரே ஒரு வித்தியாசம் - ஜப்பானியக் கழிவறைக் குழாய்களில் கட்டாயம் நீர் வரும் தங்கள் உடையைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.
காலம், சுந்தர ராமசாமி சிறப்பிதழ், மே 2001. டொராண்டோ, கனடா.