உணர்வுப்பதிவுவாதம்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய உணர்வுப்பதிவுவாதம் கலையுலகில் ஒரு பெரும்புரட்சியை உண்டுபண்ணியது. பாரிஸ் மாநகரக் கலைஞர்கள் இதை முன்னின்று நிகழ்த்தினர். பெருநகரின் அதிவேக வாழ்வுக்கு எதிர்வினையாக உணர்வுப்பதிவுவாதம் தோன்றியது. பயிலக முறைகளுக்கு நேரெதிரான திசையில் கலைஞர்கள் பயணிக்கத் தலைப்பட்டனர். சிறப்பான தூரிகை வீச்சுகளாலும் பளீரிடும் வண்ணங்களாலும் இவ்வோவியங்கள் உருவாக்கப்பட்டன. ஓவிய அறைகளைவிட்டு வெளியே வந்து கலைஞர்கள் பொதுவிடங்களில் வரைந்தார்கள். அன்றாட நிகழ்வுகளையும் இயற்கை நிலப்பரப்புகளையும் அவர்கள் ஓவியக் களங்களாகக் கொண்டார்கள். ஓவியத்தின் மையக் கருத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்களோ அதேயளவுக்கு ஒளியையும் கவனப்படுத்தினாரகள். கலைஞர்கள் குழுக்களாக இணைந்து காட்சிக்கூடங்களுக்கு வெளியே பொதுவிடங்களில் படைப்புகளைக் காட்சிப்படுத்தினார்கள்.

காலம்

பொதுயுகம் 1860 முதல் 1890 வரை.

முதன்மைக் கலைஞர்கள்

  • க்ளாட் மோனே - Claude Monet 1840–1926
  • எட்கார் தேகா - Edgar Degas 1834–1917
  • கமீல் பிஸ்ஸாரோ - Camille Pissarro 1830–1903
  • அகுஸ்தே ரென்வார் - Auguste Renoir 1841–1919
  • பால் செஸான் - Paul Cezanne 1839–1906