விமர்சனங்கள்

இந்தியா டுடே (தமிழ்)

தமிழ்ப் புலவர்களுக்கான அறிவியல் பாடங்கள்

நல்ல நோக்கத்தைவிட முக்கியம் நல்ல எழுத்து உத்திகள்.

திவாகர் ரங்கநாதன்

திண்ணை இணைய இதழில் எழுதத் தொடங்கி, இன்று தமிழ்ச் சிற்றிதழ்களிலும் அறிவியல் கட்டுரைகளை எழுதி வரும் வெங்கட்ரமணனின் 16 கட்டுரைகளின் (முன்னுரையைச் சேர்த்து) தொகுப்பு இது. உயிர்த் தொழில்நுட்பம், மென் பொருள்கள், இணையத்தில் தகவல் தேடுதல், இணைய கலாச்சாரம், கம்ப்யூட்டர் தொழில்நுட்பங்கள், ஆயுதத் தொழில் நுட்பங்கள் என்று அறிவியலின் பல கிளைத் துறைகளைப் பற்றிய கட்டு ரைகள் இவை. புத்தகம், சிறப்பான தாளில் அச்சிடப்பட்டிருக்கிறது.

அறிவியல் அறிவு என்பது சாமானிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற தனது உன்னதமான நோக்கத்தை முன் னுரையில் வெளிப்படுத்துகிறார் ஆசிரியர் “கண்ணைக் கட்டிவிடப்பட்டவன்போல சராசரி மனிதன் நில்லாமலிருக்க அவனைத் தெருட்ட எழுதப்பட்ட கட்டுரைகள் இவை” என்கிறார் வெங்கட்ரமணன். முன்னுரை மட்டும் ‘சராசரி’ நிலைக்கு மேல் உள்ளவர்களுக்காக எழுதப்பட்டது என்று தெரிகிறது (சராசரி வாசகரிடம் நீ சராசரி என்றா சொல்ல முடியும்?). இத்தகைய வாசகர்களுக்கு எழுதும்போது சொற் சிக்கனத்துடன், சுவையாக, தெளிவாக எழுதுவது அவசியம். இந்த எளிய விதி, எந்த மொழி எழுத்தாளருக்கும் பொருந்தும்.

வெங்கட்ரமணன் தொடும் தலைப்புகள் எல்லாமே அதிநவீனமானவை. பல, வேறு எந்த எழுத்தாளரும் முயற்சிக்காதவை (உதா ரணமாக, திறந்த நிரல் மென் பொருள் இயக்கம், ‘கொந்து’தல் (hacking/cracking), நேனோ தொழில்நுட்பம்). சராசரி வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள இவ்வளவு விஷயங்களை வைத்திருக்கும் ஆசிரியர், அவர்களுக்குப் புரியும் வகையில் சுவாரஸ்யமாக எழுதத் தவறிவிட்டார். அவரது நடையின் பல இடங்களில் பொதிகை டிவியின் திரை விமர்சனத் தொனி தென்படுகிறது. வினோதமான மொழிபெயர்ப்புகளை ஆங்காங்கே காண முடிகிறது (mobile computing நடைகணிப்பு: green house effect பச்சில்ல விளைவு; thumb rule - பெரு விரல் விதி; இன்னும் பல). தேவையில்லாமல் நிறையப் பத்திகள் (இவற்றை நீக்கினால் புத்தகத்தில் சுமார் 30 பக்கங்கள் குறையும். உதாரணமாக, ‘நகலாக்கம்’ என்ற கட்டுரையில் முதல் மூன்று பத்திகள் அநாவசியம்). பழைய தமிழ் நடை - ‘காமஞ் செப்பாது கண்டது மொழிமோ-மெய் காணலில் அறிவியல் வழி’ என்ற முதல் கட்டுரையே வாசகரை அலற வைக்கும்.

பல கட்டுரைகளில், சொல்கிற விஷயத்திற்கு எந்த அறிமுகமும் செய்து வைக்காமல் நேரடியாக அதைப் பற்றிப் பேசத் தொடங்கிவிடுகிறார் ஆசிரியர். ‘ஏன்’ என்பதற்கும் ‘எப்படி’ என்பதற்கும் தொடர்பு இருப்பதில்லை. எ.கா.: ‘கொந்தர்கள் போற்றுதும்; கொந்தர்கள் போற்றுதும்’ என்ற கட் டுரை. அபரிமிதமான கம்ப்யூட்டர் அறிவைக் கொண்டு பிரச்னைகளைத் தீர்த்துவைப்பவர்கள் (hackers). அதே அறிவால் மற்ற வர்களுடைய சர்வர்களில் அனுமதியின்றி நுழைந்து தகவல் திருடுபவர்கள் அல்லது அழிப்பவர்கள் (crackers). இந்த இரண்டு ரக நிபுணர்களையும் பற்றிப் பேசும் இந்தக் கட்டுரையில் கம்ப்யூட்டர் ஊடுருவல், ஊடுருவல்காரர்களின் கலாச்சாரம், ‘தீயரண்கள்’ (firewalls) உள்பட பல விஷயங்கள் சரியாக அறிமுகப்படுத்தப்படவில்லை. ஹாக்கிங், க்ராக்கிங் ஆகிய இரண்டையும் சேர்த்துக் குழப்பிய கட்டுரை இது. ‘தீயரண்களைத் துளையிடுதல்’ என்று எழுதினால் சராசரி வாசகருக்குப் புரியும் என்று தோன்றவில்லை. இந்தக் க்ராக்கிங் என்ற விஷயத்தைக் குறித்துப் பேசும் பல கதைசாரா புத்தகங்களும் கட்டுரைகளும் தகவலைச் சரியாக விளக்குவது மட்டுமின்றி விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்டிருக்கின்றன. அறிவியல் புனை கதை எழுத் தாளரான புரூஸ் ஸ்டெர்லிங் ‘The Hacker Crack down’ என்ற ஒரு புத்தகமே போதும். தகவல் பாதுகாப்பு என்பது ஒரு பெரிய, சுவாரஸ்யமான துறை. அதை சில கட்டுரைகளில் இலக்கு இல்லாமல் எழுதியிருக்கிறார் ஆசிரியர். கட்டுரைகளில் உள்ள வரை படங்கள் அதிகம் உதவுவதில்லை. ‘சராசரி வாசகனுக்கு மேலிருந்து நான் உபதேசம் வழங்க முற்படுவதாக அர்த்தமில்லை’ என்று முன்னுரையில் சொல்லும் ஆசிரியர், ‘சென்ற பத்தியை மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்’ என்பது போன்ற மேலிருந்து சொல்லித் தரும் நடையில்தான் எழுதி இருக்கிறார்.

சொல்ல வருகிற விஷயத்தைப் பற்றி எந்த அறிமுகமும் இல்லாமல் அதைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடுகிறார் ஆசிரியர்.

இந்தப் புத்தகத்தை யாராவது எடிட் செய்திருந்தால் இதில் சொல்லப்பட்டிருக்கும் அற்புதமான தகவல்கள், சேரவேண்டிய இலக்கைச் சென்று அடைந்திருக்கும்.

ஒளியிலிருந்து இருளுக்கு முகப்பு
கூகிள் லென்ஸ் உதவியுடன் உரையாக்கம் செய்யப்பட்டது