விவேக் சுப்ரமணியன் (நீலி)

(நீலி சஞ்சிகையில்) 01 ஃபெப்ருவரி 2026

வரலாறு என்பது பல நேரங்களில் சில ஆளுமைகளை மிகைப்படுத்துவதும், அவர்களுக்கு நிழலாக இருந்தவர்களை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்வதுமான ஒரு விசித்திரமான போக்கைக் கொண்டது. ஆனால் அப்படி அநீதி இழைக்கப்பட்டதாக சொல்லும் ஆளுமைகளில் உண்மையும் மிகைப்படுத்துதலும் உண்டு. இந்த வரலாற்றுப் பிழையைச் சுட்டிக்காட்டி, அறிவியலின் பிதாமகன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் புகழுக்கு பின்னால் மறைந்து கிடக்கும் ஆளுமையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது “ஐன்ஸ்டைனின் மனைவி மிலேவா” என்ற கட்டுரை. இக்கட்டுரையின் அடிநாதமாக அமைவது 1905-ஆம் ஆண்டு ஐன்ஸ்டைன் நிகழ்த்திய அந்த அற்புத ஆண்டு (Annus Mirabilis) சாதனைகள் ஆகும். அந்த ஒரே ஆண்டில் அவர் வெளியிட்ட நான்கு ஆய்வுக் கட்டுரைகள் நவீன இயற்பியலின் போக்கையே மாற்றின. ஒளிமின் விளைவு மூலம் ஒளியை ஆற்றல் பொட்டலங்களாக அவர் விளக்கியது குவாண்டம் இயற்பியலுக்கு வித்திட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது விசேடச் சார்நிலைக் கோட்பாடு காலம் மற்றும் வெளி குறித்த மனிதனின் புரிதலை தலைகீழாக மாற்றியது. இதிலிருந்து பிறந்த E=mc^2 என்ற சமன்பாடு அணுசக்தி யுகத்தின் திறவுகோலாக அமைந்தது.

கட்டுரை எழுப்பும் மிக முக்கியமான கேள்வி: இந்தச் சாதனைகளில் மிலேவா மாரிச்சின் பங்கு என்ன? ஜுரிச் பாலிடெக்னிக்கில் இயற்பியல் பயின்ற ஒரே பெண், கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர் என்ற மிலேவாவின் பின்னணி, இந்தச் சிக்கலான அறிவியல் சமன்பாடுகளின் பின்னால் அவரது உழைப்பு இருந்திருக்கக்கூடும் என்ற வாதத்தை ஆராயும் Narrative Justice போன்றது இக்கட்டுரை. குறிப்பாக, சார்பியல் கோட்பாட்டின் கணித நுணுக்கங்களில் மிலேவாவின் பங்களிப்பு இருந்ததா என்ற கேள்வி சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது. ஐன்ஸ்டைனுக்கும் மிலேவாவுக்கும் இடையிலான காதல் கடிதங்களில் தென்படும் “நம் ஆய்வுகள்” “நம் முடிவுகள்” என்ற குறிப்புகள், மிலேவா வெறும் இல்லத்தரசி அல்ல, அவர் ஐன்ஸ்டைனின் சமமான அறிவுத் துணை என்பதை வாசகர்களுக்கு முதலில் உணர்த்துகின்றன. ஒரு திறமையான பெண் தனது கனவுகளைக் குடும்பத்திற்காகவும், கணவனின் வளர்ச்சிக்காகவும் பலிகொடுக்கும்போது, அந்தப் பலியின் மீதுதான் ஒரு மேதையின் கோபுரம் கட்டப்படுகிறது என்று தோன்றுகிறது.

இருப்பினும், கட்டுரையின் பின்பகுதியை ஆழமாக வாசிக்கும்போது, உரிமைகளுக்கும் கடினமான வரலாற்றுச் சான்றுகளுக்கும் இடையிலான இடைவெளி புலப்படுகிறது. ஐன்ஸ்டைன் தனது நோபல் பரிசுத் தொகையை மிலேவாவிற்கு வழங்கியதை “மௌனத்திற்காக” பார்க்கத் தோன்றினாலும், வரலாற்று ரீதியாக அது விவாகரத்து ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும், குழந்தைகளின் வாழ்வாதார உறுதிமொழியாகவுமே அறியப்படுகிறது. மிலேவா ஒரு சிறந்த அறிவுஜீவி என்பதில் ஐயமில்லை, ஆனால் சார்பியல் கோட்பாட்டின் இறுதி வடிவத்திலோ அல்லது அதன் கணிதத் தீர்வுகளிலோ அவர் நேரடியாகப் பங்களித்தார் என்பதற்கான எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. இறுதியில், இக்கட்டுரை மிலேவாவை ஒரு இணை கண்டுபிடிப்பாளர் என்று நிறுவுவதை விட, ஒரு மேதையின் உருவாக்கத்தில் பெரும் தியாகத்தைச் செய்த, ஆனால் உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு உன்னதமான அறிவுத் துணை என்றே நம்மை ஏற்கச் செய்கிறது.

எனது விருப்பமான நூல் வால்டர் ஐசக்சன் தனது ‘Einstein: His Life and Universe’ முன்வைக்கும் கருத்துக்கள் இந்த மதிப்பாய்விற்கு ஒரு சமநிலையை வழங்குகின்றன. ஐசக்சன், மிலேவாவை ஐன்ஸ்டைனின் வெறும் மனைவியாகவோ அல்லது ஒரு சராசரிப் பெண்ணாகவோ சித்தரிக்கவில்லை. மாறாக, ஐன்ஸ்டைனின் இளமைக் காலத்தில் அவரது சிந்தனைகளைச் செதுக்கிய Intellectual Sounding Board என்று தான் மிலேவாவை அவர் உயர்த்திப் பிடிக்கிறார். ஐசக்சன் ஒரு வரலாற்று ஆசிரியராக அவரின் புத்தகத்தில் சார்பியல் கோட்பாடு அல்லது ஒளிமின் விளைவு போன்ற நுணுக்கமான கணிதக் கட்டமைப்புகளில் மிலேவா நேரடியாகப் பங்களித்தார் என்பதற்கான தகவல்கள் எதுவும் இல்லை.

ஐன்ஸ்டைன் ஒரு தந்தையாகத் தன் கடமைகளைச் செவ்வனே ஆற்றினார் என்பதே எனது புரிதல். வால்டர் ஐசக்சனின் புத்தகத்தில் , அவரது மகன் ஹான்ஸ் ஆல்பர்ட் தன் தந்தையைப் பற்றி நினைவுகூரும்போது, ‘என் தந்தை தீக்குச்சிப் பெட்டிகளையும் நூல்களையும் கொண்டு எனக்காக விளையாட்டு ரயில்களைச் செய்து தருவார்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருப்பார்.எனவே, செர்பிய வரலாற்றாசிரியர்கள் வாதிடுவது போல, மிலேவாவுடனான மணமுறிவை intellectual Theft என்று என்னால் நம்ப இயலவில்லை. ஐன்ஸ்டைன் ஒரு கண்ணியமான வாழ்வையே மேற்கொண்டார். ஹான்ஸ் ஆல்பர்ட் பிறந்த தருணத்தில், அவரது மாமனார் வழங்க முன்வந்த 10,000 பிராங்க் வரதட்சணையை அவர் மறுத்த செய்தியும் ஐசக்சனின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களின் முதல் குழந்தையைப் பற்றிய தகவல்கள் காலவெளியில் மறைந்து போனது என்பது வரலாற்றின் ஈடு செய்ய முடியாத ஒரு சோகமே.

இதேபோல் (கட்டுரையில் அல்ல) அணுக்கரு பிளவு Nuclear Fission கண்டுபிடிப்பில் லிஸ் மெய்ட்னரின் பங்கு புறக்கணிக்கப்பட்டு, ஓட்டோ ஹானுக்கு மட்டும் நோபல் பரிசு வழங்கப்பட்ட வரலாற்று அநீதியும் இங்கே நினைவுகூரத்தக்கது.

ஶ்ரீதர் நாராயணன்

(ஃபேஸ்புக் தளம்), 8 ஃபெப்ருவரி 2026

“ஐன்ஸ்டீன் அவருடைய பள்ளி கூடைப்பந்து அணியில் தேர்வாகவில்லையாம். அதனால் ஏமாற்றமுற்று விளையாட்டை விட்டு இயற்பியலில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்” இப்படி ஒரு துணுக்கு செய்தி உலா வருவதைப் படித்திருப்பீர்கள். பொதுவாக நிரூபணம் உள்ள விஷயங்களை விட, இது போன்ற வாய்வழி பொய்யான செய்திகளுக்கு ஆயுளும், வீச்சும் அதிகம். சார்பியல் கோட்பாடு போன்ற அறிவியல் பாடங்களின் மீது மலைப்பும், ஒவ்வாமையும் கொண்டிருப்பவர்களுக்கு, அதன் தொடர்பான இது போன்ற ஆதாரமற்ற ட்ரிவியாக்கள் இலகுவான பேசுபொருள்களாக அமைந்து விடுகின்றன. ஏதோ ஒரு கணத்தில் இந்த அற்ப சங்கதிகளின் பொய்மை அம்பலப்பட்டுப் போனாலும், அதை விடாப்பிடியாக கைப்பிடித்துக் கொண்டு உயிரூட்டி வைத்துக் கொண்டிருப்பார்கள்.

Urban Legends என்று சொல்லப்படும் கட்டுக் கதைகள், நாம் குழுவாகக் கூடி விவாதிக்கும் போது சரமாரியாக வந்து விழுந்தவண்ணம் இருக்கும். தற்போது இணைய சர்ச்சைகளும், குறிப்பாக வாட்சப் ஃபார்வேர்டுகளும் இந்த கதைகளின் சுவாரசியத்தில்தான் உயிர்த்திருக்கின்றன. அக்கதைகளின் அடித்தளத்தை கேள்விக்குட்படுத்தும் விளக்கங்களுக்கு அவ்வளவு சுவாரசிய பலன் இருப்பதில்லை.

பள்ளிக்கூட கூடைப்பந்து அணித் தேர்வை விட, ஐன்ஸ்டீனின் காதல் வாழ்க்கையையோ, அல்லது அவருடைய அறிவு நேர்மையையோ பற்றிய கட்டுக்கதைகள் கிடைத்தால் சுவாரசியம் கூடுதலாக அமையும்தானே. ஆனால் அறிவியலின் வழி, எதையும் தர்க்கபூர்வமாகவும், பாரபட்சமுமின்றியும் சிந்தித்து முன்னேறுவது.

நீலி மின்னிதழில், நண்பரும் அறிவியலாளருமான Venkat Venkataramanan அத்தகையை கட்டுக்கதைகளை கட்டாக குவித்து, மொத்தமாக கட்டுடைக்கும் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். ஐன்ஸ்டீன் தன்னுடைய இளவயதிலேயே, இயற்பியலில் அற்புத கண்டுபிடிப்புகளை வெளியிடத் தொடங்கிவிட்டார். தன் காதலிக்கு எழுதும் காதல் கடிதத்தில் கூட “சீக்கிரமே நாம் மணந்து கொள்வோம். அப்பொழுது தடைகள் ஏதுமின்றி, குறுக்கீடுகள் இல்லாமல் நாம் இயற்பியலில் மூழ்கிக் கிடக்கலாம்” என்றுதான் எழுதியிருக்கிறார்.

தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் மிலோவா-வின் (ஐன்ஸ்டீனின் மனைவி) பெயர் இருட்டடிப்பு செய்த அறிவு நேர்மையற்றவர் ஐன்ஸ்டீன் என்று பல தரப்புகளில் இருந்து சொல்லப்படும் கதைகளை, மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் அணுகி, ஆய்ந்து எழுதப்பட்ட கட்டுரை.

நாஜிக்கள் தலையெடுக்கும் முன்பான ஜெர்மானிய அரசில் பிறந்த ஐன்ஸ்டீன், அறிவுத் தேடலுடன் ஸ்விட்சர்லாந்து படிக்கப் போனது போல, அக்காலத்தில் மேரி க்யூரியும் போலந்து நாட்டில், பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டதால், அறிவுத்தேடலுடன் பாரிஸுக்கு சென்றவர். இயற்பியல், வேதியியல் என்று இரண்டு துறைகளிலும் நோபல் பரிசு பெற்ற மேரி க்யூரியை ஃப்ரெஞ்சு ஊடகங்கள் படு மோசமாக விமர்சித்தது, அவர் வீட்டின் முன் திரளாக மக்கள் நின்று மிரட்டியது போன்ற தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அப்போது மேரி க்யூரிக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஆறுதலாக கடிதம் எழுதியது அதே இளவயது ஐன்ஸ்டீன்தான்.

ஐன்ஸ்டீன் மீதான அவதூறுகள் பற்றிய தெளிவான விளக்கங்களுடன் அறிவியலாளர் வெங்கட் அவர்கள் எழுதியக் இக்கட்டுரையுடன் ஐன்ஸ்டீனின் அக்கடிதத்தையும் இணைத்துப் படிக்க வேண்டியது அவசியம்.

o0O0o

“உயர்மதிப்பிற்குரிய திருமதி க்யூரி அவர்களுக்கு,

பொருட்படுத்தும்படி சொல்ல ஏதுமில்லாமல் உங்களுக்கு எழுதுகிறேன் என்று என்னைப் பார்த்து சிரிக்காதீர்கள்.

தற்பொழுது, பொதுமக்கள் எவ்வளவு கீழ்மையான முறையில், உங்கள் மீது அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பதால் மிகவும் கோபமடைந்திருக்கிறேன். அதற்கு ஒரு வெளிப்பாடு கொடுக்காமல் இருக்க முடியவில்லை.

இருப்பினும், நீங்கள் இந்தக் குப்பை கும்பலை, அவர்கள் அடிபணிந்து அளவிற்கதிமான மரியாதையை பொழிந்த போதும், தங்களுடைய பரபரப்பு வேட்கையை தீர்த்துக் கொள்ள முயலும்போதும், தொடர்ந்து வெறுத்தே வந்திருக்கிறீர்கள் என உறுதியாக நம்புகின்றேன். உங்கள் அறிவுத்திறன், துடிப்பு, நேர்மை முதலியவற்றின் மீது எவ்வளவு மதிப்பு கொண்டிருக்கிறேன் என்பதை சொல்ல உந்தப்படுகிறேன். பிரஸ்ஸல்ஸில் உங்களுளுடன் தனிப்பட்ட அறிமுகம் அமைந்ததற்கு என்னை அதிர்ஷ்டசாலி என எண்ணுகிறேன்.

இந்த இழிபிறவிகளில் இல்லாத எவரும் தம்மிடையே உங்களையும் லான்ழவானையும் (Langevin) போன்ற ஆளுமைகள் இருப்பதை எண்ணி எப்போதும் போல மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். தொடர்பில் இருப்பதையே பெருமையாக உணரும் அசலான மனிதர்கள் நீங்கள். இந்த கும்பல் தொடர்ந்து உங்களைப் பற்றியே அலடட்டிக் கொண்டிருந்தால், அந்த பொருளற்ற குப்பைகளை வாசிக்காமல், எந்த இழிபிறவிகளுக்கென எழுதப்பட்டதோ அவர்களுக்கே விட்டுவிடுங்கள். உங்களுக்கும், லாங்ழவானுக்கும், பெர்ரினுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளுடன்,

உங்கள் உண்மையான, ஐன்ஸ்டீன்

பின்குறிப்பு: “ப்ளாங்கின் (Plank) கதிர்வீச்சு புலத்தில் ஈரணு மூலக்கூற்றின் இயக்கத்திற்கான புள்ளியியல் விதியை, இயற்கை கட்டுப்பாட்டின்படி அந்தக் கட்டுமானத்தின் இயக்கம் நிலையான இயக்கவியல் விதிகளை பின்பற்றும் என்று வேடிக்கை நகைச்சுவை வழியாக நிர்ணயித்தேன். ஆனால், நடைமுறையில், இந்த விதி செல்லுபடியாகும் என்கிற நம்பிக்கை எனக்கு மிகக் குறைவுதான்” o0O0o

ஏதோ ஒரு காரணத்திற்காகவோ, அல்லது பிழையான புரிதலினாலோ ஒருவர் மீது தவறான அபிப்ராயத்தை சிலர் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த புரிதல் பிறருக்கு ஒரு சுவாரசிய வம்புப் பேச்சாகவும் அமையலாம். அதில் சில ஆதாயங்களும் அவர்கள் அடையலாம்.

ஆனால் பிழையான புரிதல்களை, அவதூறுகளை, எவ்வித கடப்பாடுமற்று மறுத்து குரல் எழுப்புவதற்கு மனிதர்களிடையே ஒரு சிலருக்குத்தான் அறவுணர்ச்சி வாய்க்கப் பெறுகிறது. அவர்களையே ‘கனவான்கள்’ என்று அழைக்கிறோம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை அழைப்பது போல.

வ.ந. கிரிதரன்

கிரிதரனின் தளத்தில் பதிப்பிக்கப்பட்ட மூல வடிவம் - 11 ஏப்ரில் 2026

அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் ‘ஒளியிலிருந்து இருளுக்கு’ நூல் பற்றிய குறிப்புகள்! - வ.ந,கிரிதரன்

[காலம்’ செல்வத்தின் ஏற்பாட்டில் இன்று டொரோண்டோ, கனடாவில் நடந்த ‘வாழும் தமிழ் நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் ’ ‘ஒளியிலிருந்து இருளுக்கு’ நூல் பற்றி ,நேரக்கட்டுப்பாடு காரணமாக நான் கூறவிருந்த் எல்லா விடயங்களையும் என்னால் கூற முடியவில்லை. அதனால் கூற விருந்த ஏனைய விடயங்களையும் ஓரளவு முழுமையாக்கி இப்பதிவில் தந்திருக்கின்றேன்.]

அறிவியல் நூல்களின் அவசியம் ஏன்? அறிவை மக்களைச் சென்றடைய, தவறான தகவல்களைத் தடுக்க, அதாவது சரியான தகவல்களை அறிய, அறிவியல் சிந்தனையை வளர்க்க, சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்த, மூட நம்பிக்கைகளைக் குறைக்க, அரசின் முடிவுகள் சரியாக ,அறிவு பூர்வமாக அமைய, மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்த, சிந்தனையைத் தூண்ட, ஏன் என்று கேள்விகளைக் கேட்கும் ஆற்றலை வளர்க்க, அறிவியல் தொழில் நுட்பத்தை , அதன் நன்மை, தீமைகளை அறிந்து கொள்ள அறிவியல் கட்டுரைகள் , நூல்கள் எழுதப்பட வேண்டும். அறிவு பகிரப்பட வேண்டும். அதனைச் சாத்தியமாக்குபவை அறிவியல் எழுத்துகள்.

எனக்கு அறிவியல் துறையில் வானியல், வானியற்பியல் மிகவும் பிடிக்கும். என் பால்ய பருவத்தில் , வவுனியாவில், வீட்டு முற்றத்தில் அப்பாவின் சாறத்தைத் தொட்டிலாக்கி, நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு வானைப்பார்த்ததிலிருந்து என் ஆர்வம் தொடங்கியது என்பேன். அக்காலகட்டத்தில் கல்கியில் ‘பொன்னியின் செல்வன்’ நாவலும் மீண்டும் தொடராக வெளியாகத்தொடங்கியிருந்தது. ஓவியர் வினுவின் அழகான ஓவியங்களுடன் வெளியான நாவலில் அப்போது அடிக்கடி வானில் தோன்றிக்கொண்டிருந்த தூமகேது பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்பொழுதுதான் அவ்விதம் குறிப்பிடப்பட்டிருப்பது வால்வெள்ளி என்பதை அறிந்தேன். நாவல் நடைபெறும் காலத்தில் நடக்கப்போகும் துர்ச்சம்பவமொன்றினை எதிர்வு கூறுவதாகத் தூமகேது சித்திரிக்கப்பட்டிருக்கும். அதே காலகட்டத்தில் கல்கியில் வாண்டுமாமாவின் ‘ஓநாய்க்கோட்டை’ என்னும் சித்திரக்கதையொன்றும் வெளியாகிக்கொண்டிருந்தது.அதில் வரும் தூமகேது பாத்திரமும் பயங்கரமானதோர் ஆளுமையாகச் சித்திரிக்கப்பட்டிருந்த பாத்திரம். அதனால் தூமகேது என்னும் பெயரும் எம்மைப் பயப்படுத்துமொரு பெயராக அக்காலகட்டத்திலிருந்தது. அத்துடன் அக்காலகட்டத்தில் அடிவானில் தென்பட்டுக்கொண்டிருந்த வால்வெள்ளியும் நினைவுக்கு வருகின்றது. அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணன்

அறிவியல் அறிஞர் வெங்கட்ரமணனின் ‘ஒளியிலிருந்து இருளுக்கு’ நூலின் ‘என்னுரையில்’ தன் சிறுவயதில் பூதக்கண்ணாடியுடன் அலைந்து திரிந்த அனுபவத்தை விபரித்திருப்பார். அதை வாசித்தபோது எனக்குப் பழைய நினைவுகள் மீள் எழுந்தன. கலகி சஞ்சிகையின் அளவில் சிறுவர்களுக்கான அறிவியல் புத்தகமொன்று ‘நீங்களும் விஞ்ஞானியாகலாம்’ என்னும் பெயரில் அல்லது அது போன்றதொரு பெயரில் வெளியாகியிருந்தது. யாழ் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்த நூல்களிலொன்று. பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவில் திரியும் சிறுவனொருவனின் சித்திரம் போன்ற சித்திரங்களுடன் வெளியாகியிருந்த அந்த நூலை அடிக்கடி எடுத்து வாசித்திருக்கின்றேன். மிகவும் எளிய தமிழ்லில் எழுதப்பட்டிருந்த நூலும், சித்திரங்களும் நெஞ்சில் கிளர்ச்சியை ஏற்படுத்தின. அதனைக் கலைக்கதிர் நிறுவனம் வெளியிட்டிருக்கலாம். சரியாக நினைவிலில்லை. அதை வாசித்து விட்டு , வெங்கட்ரமணன் போல் நானும் பூதக்கண்ணாடியுடன் வீட்டு வளவு முழுவதும், என்னை ஓர் அறிவியல் அறிஞராகக் கருதிக்கொண்டு அலைந்துதிரிந்தேன்.

ஆல்பேர்ட் ஐன்ஸ்டைனுக்கு இவ்விதமான ஆர்வத்தை, அவரது பால்ய பருவத்தில் அறிவியல்பால் தூண்டியது அவருக்கு மாமாவோ , சித்தப்பாவோ கொடுத்த திசையறி கருவி , கொம்பாஸ் என்று வாசித்தது நினைவுக்கு வருகின்றது.

மிஷிய கஹோ அவரது Hyperspace நூலின் ஆரம்பத்தில் எழுதியிருப்பதும் நினைவுக்கு வருகின்றது - சிறுவனாக, சான் ஃபிரான்ஸிஸ்கோவிலுள்ள Japanese Tea Garden செல்கின்றார். அங்குள்ள சிறு தடாகமொன்றில் , நீருக்குள் நீந்திக்கொண்டிருந்த கெண்டை மீன்கள் அவ்ரது சிந்தனையைத் தட்டி விடுகின்றன. அந்த மீன்களுக்கு அந்த நீர் மட்டத்துக்கு மேல் இன்னுமோர் உலகம் இருப்பது தெரியுமா என்ற சிந்தனை அவரிடத்தில் எழுகிறது. .. அது போல் ஐன்ஸ்டைனின் மறைவுச் செய்தி மூலம் அவரது மேதாவிலாசத்தை அறிகின்றார். அதுவும் அவ்வயதில் அவர் பின்னர் இயற்பியல் தத்துவவாதியாக வருவதற்குக் காரணங்கள் என்று குறிப்பிடுகின்றார்.

இவ்விதமாக அறிவியல் அறிஞர்கள் தம் பால்யப் பருவத்து அனுபவங்களை விபரித்து எழுதுகையில் அவ்வகையான எழுத்துகள் என்னை மிகவும் கவர்ந்து விடும் தன்மை மிக்கவை. இதயத்தைத் தொட்டு அவ்வெழுத்துகளுடன் ஒன்றிட இவ்வகையான அனுபவங்கள் உதவுகின்றன. வெங்கட் ரமணனின் இந்நூலுடனும் மனதொன்றிட ஆசிரியது இவ்வனுபவ விபரிப்பு உதவியது என்பேன்.

மேலும் ‘என்னுரை’யிலும், முதலாவது கட்டுரையின் இறுதியிலும் அவர் கூறும் கூற்றுகள் நூலைப் படிக்கும் ஆர்வத்தை அதிகமாக்கும் தன்மை மிக்கதுடன், நூலை அணுகுவதையும் இலேசாக்கின்றன.

தமிழில் இவ்விதமான சாதாரணப் பொதுமக்களுக்கான அறிவியல் அறிஞர்களின் நூல்கள் அரிது. சுஜாதா போன்றவர்கள் வெகுசன ஊடக வாசகர்களுக்காக எழுதுவதைப் பிரதான நோக்கமாகக் கொண்டு , சுவையாகத் தகவல்களைத் தருவதுடன் நின்று விடுவார்கள். ஆனால் நான் குறிப்பிட்ட மேனாட்டு அறிவியல் அறிஞர்களின் நூல்கள் எளிமையானவை, ஆனால் ஆழம் மிகுந்தவை. முதல் வாசிப்பில் வெங்கட்ரமணனின் இந்நூலையும் அவ்விதமான அறிவியல் அறிஞர்களின் நூல்களைப் போன்றதாக உணர்ந்தேன்.

‘ஒளியிலிருந்து இருளுக்கு’ அட்டை ஓவியம் பற்றி…

கிரேக்கத் தொன்மக் கடவுள் ‘புரூமிதியஸ்’ ( Prometheus) - கடவுள்களிடமிருந்து தீயைத் திருடி மனித குலத்திற்குக் கொடுத்தான். தீ அறிவு, தொழில்நுட்பம், நாகரிகம் ஆகியவற்றின் அடையாளம். கடவுள்களின் தலைவன் ஜீயஸ் ப்ரோமிதியஸின் இந்தச் செயலைக் கண்டு மிகவும் கோபமடைந்தார். கடவுள்களின் அதிகாரத்திற்கு எதிராகச் செயற்பட்டதற்காகவும், மனிதகுலத்திற்கு நெருப்பைக் கொடுத்ததற்காகவும் ப்ரோமிதியஸுக்கு கடுமையான தண்டனை வழங்கினார். ‘புரூமிதியஸ் காக்கசஸ் மலைத்தொடரில் ஒரு பாறையுடன் சங்கிலியால் பிணைக்கப்பட்டார். கடுமையான சித்திரவதை: ஒவ்வொரு நாளும் ஒரு கழுகு வந்து அவரது கல்லீரலைக் கொத்தித் தின்னும். இரவு முழுவதும் அவரது கல்லீரல் மீண்டும் வளர்ந்துவிடும், அடுத்த நாள் மீண்டும் அதே சித்திரவதை தொடரும். இது ஒரு முடிவற்ற தண்டனையாக இருந்தது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஹெர்குலிஸ் (Hercules) என்ற வீரன் ப்ரோமிதியஸை விடுதலை செய்ததாகக் கூறப்படுகிறது.

‘புரூமிதிய’ஸைக் கழுகு கொத்துவதை வெளிப்படுத்துகிறது அட்டை ஓவியம். ஓவியம் மனித குலத்துக்கு அறிவினைக் கொடுத்த புரூமதியஸ்ஸை வெளிப்படுத்துகின்றது. அவன் மனித குலத்தின் மீது வைத்திருந்த அன்பை வெளிப்படுத்துகின்றது. அதன் காரணமாக அவன் அடைந்த சித்திரவதையை வெளிப்படுத்துகின்றது.

நூலின் தலைப்பு என்ன கூறுகின்றது? ஒளியிலிருந்து இருளுக்கு…. அறிவியல் என்பது அறியாமை இருளைப் போக்குவது. அறிவொளியைத் தருவது. புரூமிதியஸ் செய்ததும் அதைத்தானே. ஆனால் தலைப்பு ஒளியிலிருந்து இருளுக்கு என்று ஏன் அதற்கு எதிர்மாறான கருத்தை விளைவிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது?

உண்மையில் நூலின் அட்டைப்படமும், தலைப்பும் மிகவும் சிறப்பாக இந்நூலை வெளிப்படுத்துகின்றன. நூலிலுள்ள கட்டுரைகள் அறியாமை இருளை நீக்கி , அறிவென்னும் ஒளியைத்தந்தால், அக்கட்டுரைகள் இன்னுமொரு விடயத்தையும் வெளிப்படுத்துகின்றது. அது அறிவியல் அறிஞரான வெங்கட்ரமணன் அறச்சீற்றம். அறிவியல் எவ்விதம் பொருளை அடிப்படையாகக்கொண்ட மனித சமுதாயத்தில் தொழில் அதிபர்களால், அரசுகளால் மனித குலத்துக்கு எதிரான வகையில், பொருள் மீதான அதீத பற்று, இன, மத, மொழி, தேசிய , வர்க்க நலன்களுக்காகப் பாவிக்கப்படுகின்றது. மனித வாழ்வின் ஒளியைப் பாய்ச்ச வேண்டிய அறிவியல் இருளை, அழிவை ஏற்படுத்தப் பாவிக்கப்படுகின்றது . இதனால் விளைந்த அறச்சீற்றம்.

இவ்வகையில் சிறப்பான தலைப்பும், அட்டை ஓவியமும் இந்நூலுக்கு அமைந்துள்ளன இந்நூலின் அட்டையும், தலைப்புமே இந்நூலுக்கான மிகச்சிறந்த விமர்சனம்.

முதலாவது கட்டுரை- விழைந்ததும் விளைந்ததும்

நல்லதொரு கவித்துவம் மிக்க தலைப்பு. இத்தொகுப்பின் பல கட்டுரைகள் இவ்விதமான கவித்துவம் மிக்க தலைப்புகளைக் கொண்டவை. ‘ஒளியிலிருந்து இருளுக்கு’, ‘உள்ளிருந்து இயக்கும் உயிர்க்கடிகாரம்’, ‘முனைவாக்கம் , மூலக்கூறு, மூலதனம்’ (மோனை பொருந்து வருபவை) , ‘ஆளற்ற போர்முனைகளில் முகமற்ற போர்வீரர்கள்’ இவையும் கவித்துவம் மிக்க தலைப்புகள். கருத்துச் சிறப்பு மிக்க தலைப்புகளைக் கவித்துவம் மிக்கவையாக ஆக்குவதும் கதாசிரியரின் தனித்திறமை.

இந்தக் கட்டுரை மூன்று பகுதிகளைக் கொண்டது. முதலாவது பகுதியில் ஃபைசர் நிறுவனம் எவ்விதம் வயாகரா மருந்தைக் கண்டு பிடித்தது என்பதைப்பற்றி விபரிக்கின்றது. இருதய நோய்க்குச் செய்த ஆராய்ச்சியின் விளைவு தோல்வியடைந்தது. ஆனால் அதற்காக உருவாக்கிய மருந்து ஏற்படுத்திய பக்க விளைவான ஆண் குறி விறைப்பு வயாகராவைக் கண்டு பிடிக்க உதவியது. நீலக்குளிசை (Blue Pill) ஃபைசர் நிறுவனத்துக்குப் பல பில்லியன் டொலர்களை ஈட்டிக்கொடுத்தது. கொடுக்கின்றது.

இவ்விதம் ஃபைசரின் பிரிட்டன் கிளையில் ஆய்வாளர்கள் மார்பு நெரிப்பு வலிக்கான (Angina) மருந்தாக ஹிரி 0 92,480 என்னும் குறிப்புப் பெயர் இடப்பட்ட ஸ்ல்டெனஃபில் ( Sildenafil) வேதிப்பொருளை எட்டு ஆண்டுகள் ஆராய்ந்தார்கள். எவ்விதப் பலனுமற்ற நிலையில் ஆய்வினை நிறுத்தி விடத் தீர்மானித்தபோது டேவிட் ப்ரெளன் என்னும் தலைமை ஆய்வாளர் ஒரு தடவை அதனைப் பரீட்சித்துப்பார்க்க அனுமதி பெறுகின்றார். அதற்காக வேல்ஸ் நகரிலிருந்த கனிமச் சுரங்கத்தில் வேலையிழந்திருந்த சுரங்கத் தொழிலாளர்களில் மார்பு நெரிப்பு வலியினால் பாதிக்கப்பட்டிருந்த தொழிலாளர்களில் சிலரைத்தேர்ந்தெடுத்து , அவர்களுக்கு இம்மருந்தின் அதிகரித்த அளவைக் கொடுக்கின்றார். அவர்களுக்குக் கேள்வித்தாள் ஒன்றும் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் மருந்தினால் பலன் உண்டா, தூங்க முடிகின்றதா போன்ற கேள்விகளுடன் இறுதியாக வேறெதாவது கூற விரும்புகின்றீர்களா என்றும் கேட்கப்பட்டிருந்தது. ஆய்வில் பலன் எதுவும் கிட்டவில்லை. ஆனால் ஒருவர் மட்டும் கடைசிக்கேள்விக்கு ‘மருந்தால் நெஞ்சு வலி குறையவில்லை. ஆனால் , ஆண் குறி விறைத்திருந்ததால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார். இதனை அக்கேள்விகளுக்கான பதில்களைத் தொகுத்துக்கொண்டிருந்த பெண் ஆய்வாளர் ஒருவர் அவதானித்து, மிகுந்த வெட்கத்துடன் ப்ரெளவுனுக்குத் தெரியப்படுத்துகின்றார். ப்ரெளன் அதன் அடிப்படையில் அம்மருந்தைப்பாவித்த ஏனையவர்களிடமும் இது பற்றிக் கேட்கின்றார். அவர்களும் தமக்கும் இவ்வித அனுபவம் ஏற்பட்டதாகக் கூறுகின்றார்கள்.

ஸ்ல்டெனஃபில் இரத்த நாளங்களை விரிவு படுத்தும். இதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து, நெஞ்சு நெரிப்பு குறையும். இதுதான் ஆய்வாளர்களின் கருதுகோள். ஆனால் நடந்தது என்ன? வலி குறையவில்லை. அதிகரித்த இரத்த ஓட்டம் ஆண்குறியில் ஏற்பட்டு, அதனை விறைக்க வைத்தது. இது எதிர்பாராத விளைவு. இதனால் இதனை ஆண்களின் குறி விறைப்புச் செயலிழப்புக்கு ( Erectile Dysfunction) மருந்தாகப் பாவிக்கலாம் என்று ப்ரெளன் தன் மேலாளர்களுக்குப் பரிந்துரை செய்கின்றார். ஆனால் அவர்கள் அதைக் கவனத்திலெடுக்கவில்லை. ஏற்கனவே பல பில்லியன்களை விழுங்கி விட்டது அத்திட்டம். இதனை ஃபைசரின் அமெரிகக் குழு அறிந்தபோது அதன் முக்கியத்துவதை உணர்ந்து மேலும் சில மில்லியன்களைச் செலவழித்து நீலக்குளிசையினை உருவாக்கினார்கள். விளைவு? பல பில்லியன்களை ஃபைசருக்கு உழைத்துக் கொடுத்தது. கொடுக்கின்றது.

இத்துடன் வெங்கட்ரமணன் விட்டிருக்கலாம். ஆனால் அவர் இவ்விடயத்தில் இன்னுமொரு படி மேலே செல்கின்றார். இவ்விதம் உருவான நீலக்குளிசை சூழலுக்கு மிகுந்த பயனைத்தந்த விடயத்தை அறிந்து கொள்கின்றார். அது எப்படி?

வெள்ளைக் காண்டாமிருகங்கள் , பெங்கால் புலிகள் , பனிச்சிறுத்தைகள், பச்சைக் கடலாமைகள், கடர் குதிரைகள் எனப் பல மிருகங்கள் ஆண்களின் கலவித்திறனை மேம்படுத்த வேட்டையாடப்படுகின்றன. குறிப்பாகச் சீன மருத்துவத்தில் இவ்விதமான வழி முறைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவ்விதமான மிருக அழிப்பால அழிந்து கொண்டிருந்த மிருகங்களின் அழிவை வயாகரா பெருமளவில் குறைத்தது. வயகரா வழங்கிய நன்மையால் மிருகங்களை அழிக்கும் தேவை குறைந்து போனது.

இவ்விதம் விபரிக்கும் வெங்கட் ரமணன் இவ்விதமாக மிருகங்களை அழிப்பதற்கான காரணங்களை ‘ஆதாரமற்ற மூட நம்பிக்கைகள் ‘என்கின்றார்.

இரண்டாவது பகுதியில் பார்ஸிகளின் இறுதிக்கிரியைகள் பற்றி விபரிக்கின்றார். மும்பையில் பெருமளவில் வசிக்கும் பார்ஸிகள் இறந்ததும் தம் உடலைப் பிணந்தின்னிக் கழுகுகளுக்கு இரையாக்கி விடுவார்கள். மும்பாயின் மலபார் ஹில் பகுதியில் 57ஏக்கர் பரப்பில் அடர்த்தியான காடு அவர்களுக்குச் சொந்தம். அங்குள்ள அமைதிக்கோபுரங்களின் மேற் தளங்களில் இறந்த உடல்களை வைப்பார்கள். பிணந்தின்னிக் கழுகுகள் அவற்றை உண்ணும். எஞ்சிய எழும்புகளைக் கட்டடங்களின் மையங்கலிலுள்ள குழிக்குள் கொட்டி விடுவார்கள். ஆனால் திடீரெனப் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை குறையத்தொடங்கியது. ஒரு கட்டத்தில் 95% குறைந்து விட்டது.

ஏன்? சோதனைகள் கழுகுகளின் உடல்களில் யூரிக் அமிலம் அதிகரித்து,தேங்கிக்கிடந்ததை வெளிப்படுத்தின. காரணம்: கால் நடைகளுக்கும், மனிதர்களுக்கும் வலி நிவாரணியாகப் பாவிக்கப்பட்ட டைக்ளோஃபெனக் (Diclofenac). இதனை உருவாக்கிய மருந்து நிறுவனத்தின் பெயர் நோவார்டிஸ் (ஆரம்பத்தில் சிபா - கெய்கி) . இதனைப் பாவிக்கும் கால்நடைகளின் உடல்களில் தேவைக்கு அதிகமாகப் பாவிப்பதால் அது மேலதிகமாகத் தேங்கிப்போகின்றது. இவற்றை உண்ணும் பிணந்தின்னிக் கழுகுகளின் சிறு நீரகங்களை இது பாதிக்கின்றது. இதன் விளைவாகவே யூரிக் அமிலம் அவற்றில் தேங்கி விடுகின்றது

இதனால் ஏற்பட்ட ஏனைய எதிர்விளைவுகள்? போதிய பிணந்தின்னிக் கழுகுகள் இல்லாததால், அழுகிவிட்ட மிருகங்களின் உடல்களிலிருந்து ரேபிஸ் வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டது. இதனால் 5 இலட்சம் பேர் வரையில் இறந்திருக்கலாம் என்று ஆய்வுகள் மதிப்பிட்டன.

இவ்விதமான சூழல் தோன்றியதற்குக்காரணத்தைக் கட்டுரையாசிரியர் கடுமையாக விமர்சிக்கின்றார்.

‘இந்த விளைவுகளை அறிவியலாளர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதில் அறிவியலுக்கு என்ன பங்குண்டோ அதைவிட அதிகமான பங்கு அறிவியலாளர்கள் வரையறுத்த அளவுகளை மீறி அதிகளவில் வாங்கிக் கால்நடைகளுக்குப் பாவித்த பேராசைக்காரர்கள், வர்த்தகர்கள் , மருந்து நிறுவனங்கள் , இவற்றைக் கண்டும் காணாமல் இருந்த அரசுக்கும் உண்டு’ அவரது கடுமையான விமர்சனம் அமைந்திருந்தது.

கட்டுரையின் மூன்றாவது பகுதி மேலிரண்டு பகுதிகளின் அடிப்படையில் அறிவியல், நிறுவனங்கள், அரசுகள் மீதான விமர்சனங்களாக இருக்கின்றது. அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் முக்கிய கருத்துகள் இவை:

“‘இந்த விளைவுகளை அறிவியலாளர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதில் அறிவியலுக்கு என்ன பங்குண்டோ அதைவிட அதிகமான பங்கு அறிவியலாளர்கள் வரையறுத்த அளவுகளை மீறி அதிகளவில் வாங்கிக் கால்நடைகளுக்குப் பாவித்த பேராசைக்காரர்கள், வர்த்தகர்கள் , மருந்து நிறுவனங்கள் , இவற்றைக் கண்டும் காணாமல் இருந்த அரசுக்கும் உண்டு’ அவரது கடுமையான விமர்சனம் அமைந்திருந்தது. . "

இக்கட்டுரையின் தலைப்பு ‘விழைந்ததும் விளைந்ததும்’ எப்படி இந்தக் கட்டுரைக்கு இத்தலைப்பு பொருந்தும்?

ஃபைசர் நிறுவனம் ஆசைப்பட்டது , அதாவது விழைந்தது நெஞ்சு நெரிப்பு வலி நிவாரணி. ஆனால் விளைந்தது வயாகரா. ஆண்களின் குறி விறைப்புச் செயலிழப்புக்குகான தீர்வு. விளைவு இன்பத்தை அனைவருக்கும் தருவது.

நோவார்டிஸ் நிறுவனம் விழைந்தது அதாவது ஆசைப்பட்டது : மனிதர்களுக்கும், கால்நடைகளுக்குமான வலி நிவாரணி. ஆனால், விளைந்ததோ? - பிணந்தின்னிக் கழுகுகளின் அழிவு. ரேபிஸ் தோற்று நோய். அதனால் இலட்சக் கணக்கில் மடிந்த மனிதர்கள்.

இவ்விதம் எழுதப்பட்டிருக்கும் இக்கட்டுரை ஆய்வுச் சிறப்பு மிக்கது. எளிமையான நடையில் , தெளிவு மிக்கது. ஒவ்வொரு விடயத்தைப்பற்றியும் எடுத்துக் காட்டி, நன்மை தீமைகளைப்பற்றிய தனது விமர்சனங்களை முன் வைக்கின்றார். தர்க்கசசிறப்பு மிக்கது. விமர்சனங்கள் ஆசிரியரின் அறச்சீற்றங்களாக வெளிப்படுகின்றன.

கட்டுரை - ஒளியிலிருந்து இருளுக்கு.

தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் சிறிய கட்டுரை. ஆனால் தொகுப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பான தலைப்பு. கவித்துவம் மிக்க தலைப்பு. இக்கட்டுரையில் மின் விளக்குகள் உருவான வரலாறு, தொழில் நுட்பம் போன்றவை விபரிக்கப்பட்டிருந்தாலும் , மிகவும் கடுமையாக மின்விளக்குகளைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் திட்டமிட்டே தரங்குறைந்து அவற்றைத் தயாரிப்பதும், திட்டமிட்ட வழக்கறுத்தல் (Planned Obselescence) செய்வதும் , உற்பத்தியைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளை உருவாக்குவதும் (காப்புரிமைச் சமூகம், சர்வதேச விலைக்கட்டுப்பாட்டுக் கழகம் போன்ற) , அவற்றின் மூலம் தமக்குச்சார்பான விதிகளை அமுல்படுத்துவதைப்பற்றியும் தன் கடுமையான விமர்சனத்தை முன் வைக்கின்றார் வெங்கட்ரமணன். அவர்கள் ஆரம்பித்து வைத்த அந்த நடைமுறை இன்று வரை ஏனைய பன்னாட்டு நிறுவனங்களால் , நாம் பாவிக்கும் அலைபேசி , தொலைக்காட்சிப்பெட்டி எனபல்வேறு பொருட்களுக்கான உற்பத்தியிலும் பின்பற்றப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டுகின்றார்.

ஒளிதரவேண்டிய மின்விளக்கைத் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் இச்செயற்பாடுகளின் விளைவுகளால் பாவிக்கப்படுபவர்கள் பாவனையாளர்களான மக்கள். அவர்கள்தம் உழைப்பும் இவ்விதம் பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்துக்காகச் சுரண்டபடுகின்றது. இச்சுரண்டலையே இருளுக்கு உவமையாக்குகின்றார் ஆசிரியர்.

ஒரு விதத்தில் கட்டுரை சிறிதாக இருந்தாலும், கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என்பதற்கொப்ப, இக்கட்டுரையின் தலைப்பு இந்நூலின் தலைப்பாகவும் நன்கு அமைந்திருக்கின்றது. ஏனென்றால் இத்தொகுப்புக் கட்டுரைகள் அறிவியலின் ஆரோக்கியமான விளைவுகளை, அறிவியலின் அவசியத்தை எடுத்துக்காட்டும் அதே சமயம், எவ்விதம் அறிவியல் அறிவியல் மக்களின் பாவனைக்குப் பல்வகைப் பொருட்களாக வருகையில், அவற்றை உருவாக்கும் பன்னாட்டு நிறுவனங்களால் , அரசுகளால் எதிர்மறையாகக் கையாளப்படுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. அவ்விதத்தில் நல்லதொரு தலைப்பாகவும் இதனை நான் இனங்காண்கின்றேன்.

கட்டுரை : முனைவாக்கம் , மூலக்கூறு, மூலதனம்.

இது இத்தொகுப்பின் இன்னுமொரு கவித்துவம் மிக்க தலைப்பிலான கட்டுரை. மிகவும் சிறப்பாகச் சித்திரங்களுடன் விபரிக்கப்பட்டிருக்கும் கட்டுரை. இதில் விபரிக்கப்பட்டிருக்கும் தகவல்கள் சிக்கலான , இதுவரை நான் அதிகம் புரிந்திராத அறிவியல் கருத்துகளைப் புரிய வைத்த கட்டுரை.

முனைவாக்கம் மூலம் மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்படுவது பற்றிய அறிவியல் கருத்துகளைச் சிறப்பாக விபரிப்பதுடன், எவ்விதம் இவ்வறிவியல் கண்டு பிடிப்பினைத் தமது பொருளீட்டும் நோக்கிற்காக பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பாவிக்கின்றன என்பதைத் தெளிவாக விளக்கும் கட்டுரை.

கட்டுரையின் தலைப்பில் கவித்துவம் மோனைச் சொற்களில் , பொருளில் உள்ளது. மூலக்கூறு , மூலதனம் மோனை பொருந்தி வரும் சொற்கள். முவும் அதேயினச் சொல்தான்.

அடுத்தது தலைப்பையே ஒரு மணிக்கவிதையாகவும் எழுதலாம்:

முனைவாக்கம் மூலக்கூறு மூலதனம்!

கட்டுரை: காலம் - ஒரு அறிவியல் பார்வை (இலக்கண நக்கீரர்கள் ஓர் அறிவியல் பார்வை என்றல்லவா வந்திருக்க வேண்டும் என்று குற்றஞ்ச்சாட்டக் கூடும்.)

“இந்த நூற்றாண்டு என்று சொல்லும்போது கடந்துபோன அந்த நொடி உட்பட , எல்லாமே நிகழ்காலமாக மாறிப்போகின்றன. அப்படியென்றால் காலம் என்பதுதான் என்ன?” - அதெப்படி நிகழ்காலமாக மாறிப்போகின்றன. இந்த நூற்றாண்டு என்று கூறும்போது இந்த நூற்றாண்டின் இதுவரை கழிந்துபோன கடந்த காலத்தையும் உள்ளடக்கியதுதானே. உண்மையில் இந்த நூற்றாண்டு என்னும்போது இதுவரையான கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் உள்ளடக்கியது. இது சாதாரண வாசகர் ஒருவருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும் சொற்றொடர்.

கட்டுரையின் முதற் பகுதி பல் வகையான காலம் அளக்கப் பாவிக்கப்பட்ட வரலாற்றுரீதியிலான வழி முறைகளைப்பற்றிக் கூறுகின்றது. 4000 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தியர்கள் தரையில் நட்டப்பட்ட குச்சிகளின் நிகழ்ல்களைக் கொண்டு அளவிட்டதிலிருந்து , கோபுரங்களின் நிழல்கள், ஒழுகிச்செல்லும் நீரோட்டத்தின் அளவு, மேலிருந்து கீழ் சொரியும் மணற் கடிகை, கி.மு 1800இல் பாபிலோனியர்கள் மணி, நிமிடம், நொடிகள் மூலம் நாளை அளத்தல் பற்றிக் கூறுகின்றது.

எகிப்திய, சீன, பாபிலோனிய, இந்திய தொல்நாகரிகங்கள் சூரியன், சந்திரன் ,விண்மீன்களி ன் இருப்புகளை அடிப்படையாகக் கொண்டு காலத்தைக் கணித்திருக்கின்றார்கள்.

‘அதிசயிக்கத்தக்க வகையில் இவை எல்லாமே கணிசமாகத் துல்லியமாக இருந்திருக்கின்றன. வெற்றுக் கண்களால் நட்சத்திரத்தின் இருப்பை அறிந்து , கால் மணி நேரப் பிழைக்குள்ளாக இரவில் நேரத்தைக் கணித்துச் சொல்லும் துல்லியம் பண்டைய விண்ணியலாளர்களுக்குச் சாத்தியமாகி இருந்திருக்கின்றது. " என்கின்றார் வெங்கட்ரமணன்.

உண்மையில் பிரமிப்பையும், அவர்களின் தேடல் மீதான மதிப்பையும் தருபவை அவை.

மேலும் உயிர்க்கடிகாரம் (Biological Clock), மலர்க்கடிகாரம் (ஸ்வீடிஸ் தாவரவியலாளர் கார்ல் லின்னேயஸ் (Carl Linnaeus) 1750 இல் அமைத்தது), சுருள் வில்களின் , பற் சக்கரங்களின் அடிப்படையிலான இயந்திரக் கடிகாரங்கள், உலோகக் கலவைகளின் மூலம் மேம்படுத்தப்பட்ட இயந்திரக் கடிகாரங்கள், மிகத்துல்லியமான அணுக்கடிகாரங்கள் (20 மில்லியன் வருடத்தில் 1 நொடி பிழைக்கும்) என்று பல்வகையான நேர அளக்கும் முறைகளை விபரிக்கின்றார்.

அடுத்து நேரம் பற்றிய நியூட்டன், ஐன்ஸ்டைனின் தத்துவங்கள் என்ன கூறுகின்றன என்பதை விரிவாக விபரிக்கின்றார்.

பொதுமை நேரம் - நியூட்டனால் வரையறுக்கப்பட்ட நேரம். புறக்காரணிகளால் மாறுவதில்லை. காலம் நிலையற்று ஓடிக்கொண்டிருக்கின்றது. நாம் அதை வேண்டும்பொழுது அளந்து கொள்கின்றோம்.

சார்நிலை நேரம் - நாம் அளப்பதால்தான் நேரம் இருக்கிறது. நாம் காலத்தை அளக்கவில்லை. காலமாறுபாட்டைத்தான் அளக்கின்றோம்.

நாற்பரிமாணமும், காலவெளியும் - செவ்வியல் இயற்பியலில் காலமும் , வெளியும் ஒன்றுக்கொன்று தொடர்பற்றவை. ஐன்ஸ்டைனின் ‘சிறப்புச் சார்பியற் தத்துவ’த்தின் அடிப்படையில் காலமும், வெளியும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. -காலவெளி

1905 - ஐன்ஸ்டைனின் சிறப்புச் சார்பியற் தத்துவத்தின்படி ஒளியின் திசை வேகம் முடுக்கம் பெறாமல் நகரும் எல்லாச் சட்டங்களிலும் ஒன்றாக இருக்கும். (*மாறா வேகத்தில் செல்லும் சட்டங்கள் என்றிருக்கலாம்)

இதற்கு அவர் காட்டும் உவமை சிறிது குழப்பத்தைத் தருகின்றது:

‘நான் நடுவில் நின்றுகொண்டு விளக்கை அசைக்கின்றேன் என்று கொள்வோம். உள்ளேயிருந்து பார்த்தால் ஒருவருக்கு இரயிலின் முதல் பெட்டியையும் கடைசிப்பெட்டியையும் ஒளி ஒரே சமயத்தில்தான் சென்றடையும் ஏனெனில் ஒளியின் வேகம் புறக்காரணிகளால் பாதிக்கப்படுவதில்லை. (கடைசிப்பெட்டி விளக்கை நோக்கி வருகின்றது. முதல் பெட்டி விளக்கிலிருந்து விலகிச் செல்கின்றது). இது மிகவும் குழப்பத்தை ஏற்படுத்துவது. உண்மையில் சீரான வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இரயிலின் உள்ளே நடுவிலிருந்து புறப்படும் ஒளி முதல் பெட்டியையோ அல்லது கடைசிப்பெட்டியையோ ஒரே சமயத்தில்தான் சென்றடையும். ஆச்சரியமில்லை. முதல் பெட்டி, கடைசிப்பெட்டி இரண்டுமே நடுவைப்பொறுத்தவரையில் ஒரே தூரத்தில்தான் இருக்கின்றன.

  • இது வாசகருக்குக் குழப்பத்தைத் தருவது. அதெப்படி கடைசிப்பெட்டி விளக்கை நோக்கியும், முதல் பெட்டி விளக்கை விட்டு விலகியுய் செல்கிறது. இரயில் மாறா வேகத்தில் செல்கிறது. கடைசிப்பெட்டி, விளக்கு, முதல் பெட்டி எல்லாமே அதே மாறா வேகத்தில் செல்கிறது. ஆக, விளக்கு , கடைசிப்பெட்டி, முதல் பெட்டி எல்லாமே அதே இடத்திலேயே இரயின் உள்ளே இருக்கும். வெளியிருந்து பார்ப்பவர்களுக்கு இரயில், உள்ளிருப்பவர்கள், உள்ளிருப்பவைகள் விலகிச் செல்லும்). உண்மையில் உதாரணத்தில் விளக்கிலிருந்து புறப்படும் ஒளியைப்பொறுத்தவரையில் முதல் பெட்டி விலகியும் ,கடைசிப்பெட்டி நோக்கியும் வந்தாலும் என்றிருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். உண்மையில் முதல் பெட்டி விலகிச் சென்றாலும் , கடைசிப்பெட்டி நெருங்கி வந்தாலுன் ஒலிக்கு ஏற்படுவதுபோல் டொப்ளர் விளைவு ஒளியின் வேகத்துக்கு ஏற்படுவதில்லை. ஒளி வேகம் மாறாமல் இருக்கும்.

சிறப்புச் சார்பியற் தத்துவம் - மாறா வேகத்துடன் செல்லும் சட்டங்களின் அடிப்படையிலானது. ஈர்ப்பு விசையினை உள்ளடக்காதது. அதனால் சிறப்புச் சார்பியற் தத்துவம். பொதுச்சார்பியற் தத்துவம் - ஈர்ப்பு விசையையும் உள்ளடக்கியது பொதுச்சார்பியற் தத்துவம்

கால நீட்சி, வேகம் பொருளின் நீளம், திணிவு, நேரத்தைப் பாதிப்பது பற்றிய சார்பியல் தத்துவக் கருதுகோள்கள் பற்றி கட்டுரை பேசுகிறது. கட்டுரையை இன்னும் எளிமையானதாக, ஒழுங்காக்கி இருந்திருக்கலாம் என்று தோன்றுகின்றது.

*உதாரணத்துக்குக் காலவெளி பற்றி இன்னும் விரிவாகப் பேசியிருந்திருக்கலாம். உண்மையில் இன்னுமொரு கட்டுரை சார்பியல் கோட்பாடுகள் பற்றி விரிவாக, எளிமையாக இருந்தால் அது இன்னும் பயனுள்ளதாகவிருந்திருக்கும் என்ற உணர்வு ஏற்பட்டது. இன்னும் விளக்கச்சித்திரங்களுடன் தெளிவை ஏற்படுத்தியிருந்திருக்கலாம்.

குழப்பமான சொற்றொடர்கள்:

வேகம் காலத்தை பாதிக்கிறது. கால நீட்சி பற்றி ஆசிரியர் குறிப்பிடுகின்றார். வேகம் கூடக்கூட கால நீட்சியும் கூடுகின்றது. ஒளிவேகத்தில் செல்லும் இரட்டையரில் ஒருவரின் காலம் , பூமியில் இருக்கும் அவரது அடுத்த சகோதரரின் காலம் இரண்டும் ஒன்றில்லை. ஒளி வேகத்தில் சென்று திரும்புவர் பூமிக்குத் திரும்புகையில் , பூமியில் இருப்பவரின் வயது பல வயது கூடியிருக்கும் அல்லது பல நூற்றாண்டுகளைக் கடந்திருக்கும். திரும்புவர் இன்னும் இளமையாக இருப்பார்.

இதன் பின் ஆசிரியர் “ஒளியின் வேகத்தில் பயணிப்பவர்களுக்குக் காலம் நீண்டு கொண்டே போவது ஒரு வகையில் காலப்பயணம் தானே?” இது ஒரு தந்திரமான தர்க்கம். ஏன் என்றால் ஒளி வேகத்தில் செல்லும் ஒருவருக்குக் காலம் சாதாரணமாகத்தான் செல்லும். அவருடன் இருப்பவர்களுக்கும் அப்படியேதான் இருக்கும். ஆனால் பூமியில் இருப்பவரின் காலம் பல ஆண்டுகள் முன்னோக்கிச் சென்றிருப்பதால் , பூமியில் இருக்கும் ஒருவரின் காலத்தின் அடிப்படையில்தான் காலப்பயணம் நடந்திருக்கின்றதே ஒழிய , ஒளி வேகத்தில் செல்பவரின் சட்டத்தில் அவர் எதிர்காலத்துக்குச் செல்லவில்லை. கேள்வி - ஒருவர் இருக்கும் சட்டத்தில் அவரால் எதிர்காலத்துக்கோ அல்லது நிகழ்காலத்துக்கோ செல்ல முடியுமா என்பதுதான். சார்பியல் தத்துவங்கள் அது சாத்தியமென்று எதிர்வு கூறினாலும் இதுவரை அது சாத்தியமாகவில்லை. இறுதியில் வெங்கட்ரமணன் கூறுவது போல் ‘காலம் வெளி புரிதலில் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டியிருக்கிறது.’

இன்னுமோரிடத்தில் பின்வரும் உதாரணம் வருகிறது:

“.. இந்தப் பெரும் குண்டு தன்னைச் சுற்றியிருக்கும் இரப்பர் மெத்தையின் பரப்பைக் குழிவானதாக ஆக்கும்.அந்த நிலையில் உருட்டி விடப்படும் கோலிக்குண்டு நேர் பாதையிலிருந்து விலகி பெரும் குண்டை நோக்கி வளைந்து வரும். இதைப் போன்ற பெரும் பொருண்மையுள்ள பொருளின் ஈர்ப்பு விசை ஒளியின் நேர்கோட்டுப் பாதையை வளைக்கும் திறம்.”

ஒளி சீரான வேகத்தில் நேர்கோட்டில் செல்கிறது. பொருண்மை கூடிய பொருளின் அருகாகச் செல்லும்போது அதில் சிறிதளவு வளைவு பொருளின் ஈர்ப்புச் சக்தியினால் ஏற்படுகிறது. ஈர்ப்புச் சக்தி அதிகமாகி கருந்துளையானால் ஒளி முற்றாகவே பொருண்மை கூடிய பொருளின் ஈர்ப்புச் சக்திக்குள் சிக்கி வெளியேற முடியாது போய்விடும் என்று இன்னும் சிறிது விளக்கம் கொடுத்திருக்கலாம். இல்லாவிட்டால் பொதுவான வாசகருக்கு ஏன் பூமி சூரியனை நோக்கிச் செல்லவில்லை என்றொரு குழப்பம் ஏற்படும்.

சூரியனின் பொருண்மையின் ஈர்ப்புச் சக்தியின் காரணமாக ஏற்படும் வளைந்த வெளியில் பூமி சீரான வேகத்தில் செல்கிறது. வளைவான கோளமொன்றின் வளைவில் நேர்கோட்டில் சென்றால் அது வட்டமாக அல்லது நீள்வட்டமாக இருக்கும். அதனால்தான் பூமி சூரியனைச் சுற்றி நீள்வட்டப் பாதையில் செல்கிறது.

மேலும் நியூட்டனின் விதிகளின் படி ஈர்ப்புச் சக்தி ஒரு விசை. ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவங்களின்படி அது ஒரு விசையல்ல. பொருளின் பொருண்மை தன்னைச் சுற்றியுள்ள வெளியை வளைப்பதன் காரணமாக, அவ்வளைவில் செல்லும் பொருளின் பாதை தீர்மானிக்கப்படுகின்றது.

இங்கு நீங்கள் ஈர்ப்பு விசை என்று கூறுவது நியூட்டனின் கோட்பாட்டின் அடிப்படையில். சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் ஈர்ப்புச் சக்தி விசை அல்ல. இவ்விதம்தாம் நான் புரிந்து வைத்திருக்கின்றேன். இதுவும் என்னைக் குழப்பியது. வெங்கட்ரமணனின் கருத்தை இது விடயத்தில் எதிர்பார்க்கின்றேன்.

இண்டிகோ - ஒரு நிறத்தின் வரலாறு

கருநீல நிறமான இண்டிகோவின் வரலாற்றின் பின் மறைந்திருக்கும் அதன் சாயத்தை உருவாக்க உழைத்த அடிமைகளின் வலியும், துய்ரமும் இருப்பதை வெளிப்படுத்தும் கட்டுரை. லெவி ஜீன்ஸ் ஆரம்பத்தில் உழைப்பாளிகளின் ஆடையாக அமெரிக்காவில் உருவாக்கபப்ட்டது, கரு நீலச் சாயம் இந்தியாவில் அவுரிச் செடிகளிலிருந்து உருவாக்கப்பட்டது, இந்தியாவின் அத்தொழில் நுட்பத்தைப் பாவித்து வட , தென் அச்சாயம் பெருமளவில் தயாரிக்கப்பட்டது, அதற்காக அடிமைகள் பாவிக்கப்பட்டார்கள் போன்ற விபரங்களை உள்ளடக்கிய கட்டுரை , இறுதியில் தென்னமெரிக்காவில் அவுரிச்செடிகளில் சாயத்தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் உரிமைகளுக்காக மகாத்மா காந்திபோராடியதையும், அப்போராட்டம் இறுதியில் காலனியாதிக்கத்திலிருந்து இந்தியாவை விடுவித்தது என்பதுடன் முடிவுக்கு வருகின்றது.

கருநீலச் சாயத் தயாரித்தல் பற்றிய அறிவியல் தகவல்களுடன், அதன் வரலாறு, அதன் பின் மறைந்திருக்கும் மானுடத்துயரம், வலி என்பவற்றையும் எடுத்துக்காட்டுகின்றது. தெளிவு, தர்க்க, ஆய்வுச் சிறப்பு , அறச்சீற்றம் மிக்கதாக அமைந்துள்ள, தொகுப்பின் முக்கிய கட்டுரைகளில் இதுவுமொன்று.

ஆளற்ற போர்முனைகளில் முகமற்ற போரவீரர்கள்

போர் எந்திரன்களானா சமரன்கள் , ஆளில்லாப் பறப்பிகள் இன்று டாங்கிகள், துப்பாக்கிக்ள் கொண்டு நடதப்படும் போர்முனையை முற்றாக மாற்றியுள்ளன. இவ்வகையான தொழில் நுட்ப மேம்பாடு ‘அணு ஆயுதங்களைப் போல் அடிப்படைப் போர்ச்சட்டத்தை மீளமைக்கும் ஆட்ட விதிகளை மாற்றியெழுதும் நுட்பம்’ என்கின்றார் வெங்கட்ரமணன். இவை போர்க்குற்றங்கள் எவ்வகையானவை என்னும் கேள்வியினையும் எழுப்புகின்றார்: “எந்திரன்கள் உணர்ச்சிகள் அற்றவை. போர் முனையில் அவற்றின் சகா கொல்லப்படும்போது அவை மனச்சிதைவு அடைவதில்லை. தொடர்ந்தும் தம் கால்களை முன் நகர்த்தியே செலின்றன’ என்றும் கூடவ் சுட்டிக்காட்டுகின்றார். அத்துடன் மாறியுள்ள இவ்வகையான போர்முனையானது கணனியில் வீடியோ விளையாட்டை ஆடுவதைப்போன்று செயற்படுகின்றது. வீடடியோ விளையாட்டில் நடைபெறும் கொலைகள், போர்கள் எல்லாமே குற்ற உணர்ச்சிக்குள்ளாக்குவதில்லை. விளையாட்டில் ஏற்படும் இன்பத்தை மட்டும் ஏற்படுத்தும் விளையாட்டுகள் அவை. நவீனப்போர்மூறையில் மனித உரிமைகள், குற்ற் உணர்ச்சிகள் மனிதரில் ஏற்படுத்தும் உணர்ச்சிப் பாதிப்புகள் அற்ற நிலை இவற்றைப் பற்றியெல்லாம் கேள்விக்குள்ளாக்கும் முக்கியமான தொகுப்புக் கட்டுரைகளில் இதுவுமொன்று.

இவை தவிர, இஸ்லாமியக் கலைகளில் உயர்கணிதக் கோட்பாடுகள், பொய், ஐன்ஸ்ட்டைனி மனைவி, மருந்தெதிர்ப்பு நுண்ணுயுரிகள் ஆகிய ஏனைய் கட்டுரைகளும் வெங்கட்ரமணனின் ஆழத்துடன் கூடிய எளிமை, தர்க்கச்சிறப்பும் ஆய்வுச் சிறப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் கட்டுரைகள்

அச்சுப்பிழைத் தவறுகள் சில

தமிழினி நிறுவனம் செம்மையாக நூல்களைப் பதிப்பிக்கும் நிறுவனமென்ற பெயர் கொண்ட நிறுவனங்களில் ஒன்று. அதில் E=MCC சூத்திரம் போன்ற ஆங்கிலச் சொற்கள் எழுத்தின் உருமாற்றத்தின்போது இழைத்த தவற்றினால் தமிழில் இருப்பது , நுண்ணுயிரிகள் நுண்ணியிரிகள் என்ற் சில இடங்களில் வருவது போன்ற தவறுகள் தென்படுகின்றமை ஆச்சரியத்தைத் தருகின்றன.

மொத்தத்தில் நூல் தமிழில் வெளியாகியுள்ள முக்கியமான அறிவியல் நூல். எளிமை, ஆய்வு, தர்க்கம், அறச்சீற்றம் இவற்றின் அடிப்படையில் முக்கியத்துவம் மிக்கது. பொதுவாக அறிவியல் அறிஞர்கள்தம் அறிவியல் நூல்களில் அறச்சீற்றம் இருக்காது.அறிவியல்தான் இருக்கும். என்னைப்பொறுத்தவரையில் வெங்கட்ரமணன் வெளிப்படுத்தியிருக்கும் அறச்சீற்றம் முக்கியமானது,. காலத்தில் கட்டாயமும் கூட. நவீனத் தொழில் நுட்பத்தின் நன்மை தீமைகளை அறிவதன் மூலம் சரியாக அதனைக் கைக்கொள்ள உதவும். இதனால் சுய நலன்களுகாகப் பயனடையும் சக்திகளிடமிருந்து , மக்கள் நலன்களை நோக்கி அரசின், நிறுவனங்களின் திட்டங்களை மாற்றி அமைக்க உதவும். மக்கள் இவ்விடயத்தில் விழிப்புடன் இருந்தால் , திட்டங்களைச் சரியாக அறிந்து, அணுகி, மாற்றங்களை வற்புறுத்தலாம். இல்லாவிட்டால் அவ்விதம் செய்ய முடியாது.

இந்நூல் மூலம் நான் பல புதிய அறிவியல் விடயங்களைக் கற்றுக்கொண்டேன். குறிப்பாக முனைவாக்கம், நிறுவனங்களின் திட்டமிட்ட வழக்கறுத்தல், திட்டமிட்ட தரங்குறைத்தல், காப்புரிமைக்காக மருந்து நிறுவனங்கள் முனைவாக்கத் தொழில் நுட்பத்தின் மூலம் செய்யும் தந்திரங்கள் எனப் பல விடயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. வாசகர்களும் அறிந்து கொள்வார்கள்.

இங்கு சமூக, அரசியல செயற்பாட்டாளர்கள் பலர் இருக்கின்றீர்கள். உங்களுக்கும் இந்நூல் மிகுந்த பயனைத் தரும். அன்றாடம் நாம் பாவிக்கும் நவீனத்தொழில் நுட்பத்தின் பின்னால் இருக்கும் வலியினை, துயரத்தினை, மனித உரிமை மீறல்களை எல்லாம் தோலுரித்துக் காட்டுகினறது நூல்.

நூலின் மொழி நடை பற்றிக் குறிப்பிடுகையில் வெங்கட்ரமணன் நூலுக்கான என்னுரையில் “பொதுப்புரிதலுக்காக அறிவியல் கட்டுரைகள் எழுதும்போது எளிமைப்படுத்தலைத் தவிர்க்க முடியாது. என்னால் இயன்ற அளவுக்கு அதைக் குறைத்திருக்கின்றேன். " என்று குறிப்பிட்டிருக்கின்றார். கட்டுரைகள் எளிமையான மொழியில் கூறப்பட்டிருந்தாலும் இன்னும் எளிமைப்படுத்தப்படலாம்.ஆனால் அதே சமயம் கட்டுரைகளின் ஆழம் குறைந்துவிடக்கூடாது. இதுவே முக்கியம்.

எதிர்காலத்தில் வெங்கட்ரமணன் சார்பியல் தத்துவங்கள் பற்றி, குவாண்டம் இயற்பியல் பற்றித் தனித்தனி நூல்கள் பொது வாசகர்களுக்காக எழுத வேண்டும். அதிகமான விளக்கச் சித்திரப்படங்களுடன் அவை இருக்க வேண்டுமென்று ஒரு வேண்டுகோளினையும் இத்தருணத்தில் இங்கு முன் வைக்கின்றேன்.

கே.என்.சுவாமிநாதன்

மூலம்: நூல் அறிமுகம் செய்வோம் – ரூ.10000 பரிசு வெல்வோம்: வெங்கட்ரமணன் எழுதிய “ஒளியிலிருந்து இருளுக்கு” – நூல் அறிமுகம். - 17 எப்ரில் 2026

“ஒளியிலிருந்து இருளுக்கு” – இந்த நூலுக்கான அணிந்துரையில் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள், “ஒவ்வொரு அறிவியல் மாணவர் கையிலும் இந்தத் தொகுப்பு இருப்பது அவசியம்; அல்லாதவர் கையில் இருப்பது அதனினும் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.” இந்த நூலைப் படித்து முடித்தவுடன் அவர் கருத்தின் ஆழத்தை நான் உணர்ந்து கொண்டேன். இந்த நூலில் மொத்தம் 11 அறிவியல் கட்டுரைகள் இருக்கின்றன. நமக்குத் தெரியாத, மறைக்கப்பட்ட பல உண்மைகளை இந்த நூலின் மூலம் அறிய முடிந்தது.

எந்த கண்டுபிடிப்பிற்கும் தீவிர ஆராய்ச்சித் தேவைப்படுகிறது. சில சமயம், அந்த ஆராய்ச்சியில் நாம் முற்றிலும் எதிர்பாராதவை அரங்கேறுகின்றன. உதாரணத்திற்கு, பிரபல ஃபைஸர் மருந்து நிறுவனம், இருதயவலிக்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டது. அவர்கள் எதிர்பார்த்தப் பலன்கள் கிடைக்கவில்லை. பரிசோதனைக்காக இந்த மருந்தை உண்டவர்கள், அவர்கள் உடலில் இந்த மருந்தினால் ஏற்பட்ட மாற்றத்தைக் கூற, அது “வயாகரா” என்ற மாத்திரை கண்டுபிடிப்பிறகு வித்திட்டது. “நீலக் குளிகை” என்ற செல்லப் பெயர் கொண்ட இந்த மாத்திரை, பல பில்லியன்களை மருந்து நிறுவனத்திற்கு சம்பாதித்துக் கொடுத்தது. இதைப் பற்றியும் பிரபல வலி நிவாரணி டைக்ளோஃபெனக், ஒரு பறவை இனம் அழிவதற்கு எவ்வாறு காரணமாக இருந்தது என்பதை “விழைந்ததும் விளைந்ததும்” கட்டுரை விளக்குகிறது.

பொதுவாக நிறுவனங்கள் ஆராய்ச்சியின் மூலம் தங்கள் பொருட்களின் தரத்தை மேம்படுத்த முயற்சி செய்வது பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், “பீபஸ் கார்ட்டல்” என்ற பன்னாட்டு மின்விளக்கு நிறுவனங்களின் கூட்டமைப்பு, தங்கள் பொருட்களின் விற்பனையைக் கூட்டுவதற்கு, அவற்றின் தரத்தை குறைக்கச் செய்த சதியைப் பற்றி விவரிக்கிறது “ஓளியிலிருந்து இருளுக்கு” என்ற கட்டுரை. இந்த நிறுவனங்களை கூட்டுக் களவாணிகள் என்று சாடுகிறார் ஆசிரியர். இவர்கள் செய்த சதி என்ன? இவர்கள் தயாரிக்கும் விளக்குகளின் ஆயுள் இரண்டாயிரம் மணிகளுக்கும் மேலாக இருந்தன. விளக்குகள் விற்பனையை இரு மடங்காக்க, அவற்றின் ஆயுளை ஆயிரம் மணிகளாக குறைக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாத நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

பிரபல மருந்து நிறுவனங்கள் தங்கள் ஆராய்ச்சியின் வழியாக புதிய மருந்துகளை கண்டு பிடிக்கின்றன. அவற்றிற்கான காப்புரிமை 20 வருடத்திற்கு இருக்கும். இந்தக் கால கட்டத்தில், இவற்றை மற்ற மருந்து நிறுவனங்கள் உண்டாக்க முடியாது. ஆகவே, காப்புரிமை வைத்திருக்கும் நிறுவனம் சொல்கின்ற விலைக்கு மற்றவர்கள் வாங்க வேண்டும். ஆனால், காப்புரிமை முடிந்தவுடன், மற்றவர்களும் அந்த மருந்தை தயாரிக்க விலை குறையும். இதைப் பாதுகாக்க நிறுவனங்கள், காப்புரிமை குறையும் போது சில மாறுதல்கள் செய்து, புதிய மருந்து பழையதை விடவும் சக்தி வாய்ந்த மருந்து என்று விளம்பரம் செய்து தங்கள் சந்தையை தக்க வைத்துக் கொள்ளவும், விரிவாக்கவும் செய்கின்றன. இதைப் பல உதாரணங்களுடன் விளக்கியுள்ளார் ஆசிரியர் “முனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம்” என்ற கட்டுரையில்.

கருநீல வண்ணத்திற்கு இண்டிகோ என்று பெயர். இந்திய உற்பத்தியான இந்தக் கருநீலச் சாயத்திற்கு, இந்தியாவிலிருந்து என்று பொருள் அளிக்கும் “இண்டிகோ” என்று பெயரிட்டவர்கள் கிரேக்கர்கள். அடிமைகள் இந்தத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்திய இண்டிகோ சாத்தானின் உணவு என்று முத்திரையிடப்பட்டு, பிரிட்டிஷ் அரசால் 1532ஆம் வருடம் தடை செய்யப்பட்டது. 1700ஆம் ஆண்டில் ஜெர்மனி அரசு இண்டிகோ பயன்படுத்துபவர்களுக்கு மரணதண்டனை அறிவித்தது. இதைப் போன்ற பல சுவாரசியமான செய்திகளை ”இண்டிகோ – ஒரு நிறத்தின் வரலாறு” கட்டுரையில் காணலாம்.

இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மிகச் சிறந்த விஞ்ஞானியாக அறியப்படுகிறார். அவருடைய ஆராய்ச்சியில் அவருடைய முதல் மனைவி மிலேவாவிற்கு பெரும் பங்கு உண்டென்றும், ஆராய்ச்சியினால் ஐன்ஸ்டைன் அடைந்த புகழை மனைவிக்கு பகிர்ந்து அளிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. அதனைப் பற்றிய விரிவான விளக்கங்களை “ஐன்ஸ்டைன் மனைவி” என்ற கட்டுரையில் காணலாம். இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது என்று சான்றுகளுடன் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

இந்த தமிழ் அறிவியல் புத்தகத்தில் பாராட்டதக்க முக்கிய இரண்டு அம்சங்கள் :

பொதுவாக அறிவியல் புத்தகங்களைத் தமிழில் படிக்கும் போது சில நெருடல்களை சந்திக்க நேரிடும். சிலர் ஆங்கில வார்த்தைக்கு ஒப்பான தமிழ் வார்த்தையை எழுதுவார்கள். அந்த ஆங்கிலச் சொல் என்ன என்று மனம் யோசிக்கும். சிலர் ஆங்கில வார்த்தையை அப்படியே தமிழில் எழுதுவார்கள். இதற்கு ஒப்பான தமிழ் வார்த்தையை கொடுத்திருக்கலாம் என்று தோன்றும். ஆனால், ஆசிரியர் இந்த நூலில், தமிழ் வார்த்தையைக் கொடுத்து, அடைப்புக் குறியில் ஆங்கில வார்த்தையை அந்த மொழியிலேயே கொடுத்திருக்கிறார். கட்டுரையைப் புரிந்து கொள்ள இது மிகவும் உதவியாக இருந்தது. ஆசிரியர்க்கு பாராட்டுகள்.

எல்லாக் கட்டுரைகளின் முடிவில், மேலும் அறிய விரும்பும் வாசகர்களுக்கு, இதன் தொடர்பு ஆங்கில கட்டுரைகள், புத்தகங்கள் பட்டியலிட்டு அளித்துள்ளார்.

அனைவரும் படிக்க வேண்டிய அறிவியல் புத்தகம்

விவேக் சுப்ரமணியன் (அகழ்)

பன்முகத்தன்மை கொண்ட ஒரு பிரபஞ்சப் பார்வை

மூலம்: அகழ் தளத்தில்

அறிவியல் என்பது வெறும் தகவல்கள், சமன்பாடுகள் மற்றும் ஆய்வக அவதானிப்புகளின் தொகுப்பு மட்டுமே என்றொரு தவறான கருத்து ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆனால், மிகச்சிறந்த அறிவியல் நூல்கள் இப்பிரபஞ்சத்தில் மனிதன் தன் இருப்பைப் பற்றி எப்படிப் புரிந்துகொள்கிறான் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்ட முயற்சித்துள்ளன. அந்தப் பாரம்பரியத்தைச் சேர்ந்ததுதான் ஒளியிலிருந்து இருளுக்கு கட்டுரைத்தொகுப்பு. இயற்பியல், கணிதம், காலம், போர்முறை, ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றுக்கிடையே இயல்பாக நகரும் இந்த நூல், அறிவின் மீதும் தொழில்நுட்பத்தின் மீதும் மனிதன் கொண்டுள்ள நம்பிக்கையிலிருந்து ஒரு பயணத்தைத் தொடங்குகிறது. மெல்ல மெல்ல, உறுதியற்ற தன்மைகள், அறநெறிச் சிக்கல்கள் மற்றும் வாழ்வியல் சார்ந்த கேள்விகள் எனும் இருளை நோக்கி இந்தப் பயணம் அழைத்துச் செல்கிறது. பரிச்சயமற்ற நிலப்பரப்பில் ஒரு விளக்கை ஏந்திச் செல்லும் பயணியைப் போல, வாசகர் ஒவ்வொரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பின் போதும் ஒரு உண்மையை உணர்கிறார்: ஒவ்வொரு கண்டுபிடிப்பும் புதிய அறிவை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, வெளிச்சத்தின் விளிம்பிற்கு அப்பால் காத்திருக்கும் ஆழமான மர்மங்களையும் அது காட்டுகிறது.

இந்த அர்த்தத்தில், இந்நூல் அறிவியலைப் பற்றியது மட்டுமல்ல; தன் சொந்த நுண்ணறிவின் விளைவுகளை எதிர்கொள்ளும் மனித நிலையைப் பற்றியது. எனவே, ஒளியிலிருந்து இருளுக்கு என்ற இந்தப் பயணம் அவநம்பிக்கையை நோக்கிய வீழ்ச்சியல்ல; அறிவு என்பது உறுதியின் எல்லைகளைத் தாண்டி முன்னேறும்போது உருவாகும் அறியப்படாத பிரதேசங்களை நோக்கிய ஒரு தேடல். யதார்த்தத்தைப் புரிந்துகொள்வதில், மனிதகுலம் கண்டறிந்த மிக வெற்றிகரமான ஒரு வழிமுறை அநேகமாக அறிவியலாகத்தான் இருக்கும். அது மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டித்திருக்கிறது; தொழில்நுட்பத்தின் மூலம் கண்டங்களை இணைத்திருக்கிறது; பேரண்டத்தின் வயதை நமக்கு வெளிப்படுத்தியிருக்கிறது; மேலும், பருப்பொருள் மற்றும் விழிப்புணர்வின் ஆழமான உள்கட்டமைப்பிற்குள் நம்மை உற்று நோக்க அனுமதித்திருக்கிறது. மின்சாரம் முதல் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வரையிலும், விண்வெளி ஆய்வு முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலும் இருக்கும் ஒவ்வொரு நவீன வசதியும், பல நூற்றாண்டுகால அறிவியல் தேடலின் அடித்தளத்தில்தான் எழுந்து நின்று கொண்டிருக்கின்றன.

ஆனாலும், அறிவியல் என்பது ஒருபோதும் வெறும் உண்மைகளின் தொகுப்பு மட்டுமல்ல. அது மனித ஆர்வம், பேராவல், பிழைகள் மற்றும் அவற்றின் விளைவுகளைப் பற்றிய ஒரு கதையும்கூட. கார்ல் பாப்பர் குறிப்பிட்டது போல, அறிவியல் என்பது அறுதியான நிச்சயத்தன்மையால் முன்னேறுவதில்லை; மாறாக, தன் சொந்தத் தவறுகளைத் தொடர்ச்சியாகத் திருத்திக் கொள்வதன் மூலமே அது வளர்கிறது. கோப்பர்நிக்கஸ் மனிதகுலத்தைப் பேரண்டத்தின் மையப்புள்ளியிலிருந்து இடமாற்றம் செய்தார். டார்வின் வாழ்க்கையைப் பற்றிய மரபான கருத்துக்களுக்கு சவால் விடுத்தார். குவாண்டம் இயக்கவியல் யதார்த்தத்தின் மிக அடிப்படையான தன்மையையே கேள்விக்குள்ளாக்கியது. அறிவியல் செயலாற்றலுக்கும் அறநெறிக்கும் இடையே நிலவும் இந்த இடைவெளி, கடந்த காலத்தின் அறியாமை மட்டும் அல்ல; நவீன அறிவியல் கட்டமைப்பின் தவிர்க்க முடியாத ஒரு சவாலாகும்.

ஒவ்வொரு ஒளியுடனும் ஒரு இருள் உண்டு. டிரினிட்டி என்ற உலகின் முதல் அணு ஆயுதச் சோதனை வெடித்த அந்தப் பெருங்கணத்தில், அதன் முதன்மை விஞ்ஞானி ராபர்ட் ஓப்பன்ஹீமர், “இப்போது நான் உலகங்களை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்” என்ற வரியையே நினைவு கூர்ந்தார். தன் வாழ்நாளின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பை நிகழ்த்திய அந்த உச்சக்கட்டத் தருணத்தில், ஒரு பேரறிஞன் வெற்றியைக் கொண்டாட முடியாமல் பிரபஞ்ச அழிவைப் பேசும் நிலைக்கு தள்ளப்பட்டான். தடுப்பூசிகளை உருவாக்கிய அதே அறிவியல் அறிவுதான் வேதி ஆயுதங்களையும் உருவாக்கியது. அணுவைப் பிளந்த அதே ஆளுமைதான் நமக்கு அணுசக்தியையும், கூடவே ஹிரோஷிமாவையும் தந்தது. இப்புத்தகம் புறக்கணிக்கப்பட்ட அந்தப் பரிமாணத்தை, அதாவது அறிவியல் வளர்ச்சியின் மற்றொரு பக்கத்தை விரிவாக ஆராய்கிறது. வெறும் கண்டுபிடிப்புகளை மட்டும் கொண்டாடுவதை விடுத்து, கடினமான கேள்வியைக் கேட்கிறது: “அறிவு என்பது பேரறிவை விடவும் வேகமாக நகரும் போது என்ன நடக்கும்?”ஒளியூட்டலுக்கும் அதன் விளைவுகளுக்கும் இடையே நிலவும் அந்தப் பதற்றத்திற்குள் தான், இந்தக் கட்டுரை முக்கியத்துவத்தைக் கண்டடைகிறது.

காலம் – ஒரு அறிவியல் பார்வை

காலத்தைப் பற்றிய பெரும்பாலான விவாதங்கள் கடிகாரங்களிலிருந்தே தொடங்குகின்றன. ஆனால், இந்த கட்டுரை மிகவும் அடிப்படையான கேள்வியோடு தன் பயணத்தைத் தொடங்குகிறது: “உண்மையில் கடிகாரங்கள் எதைத்தான் அளவிடுகின்றன?” இந்தக் கேள்வியின் மூலம், புனித அகஸ்டினின் இறையியல் சிந்தனைகள் தொடங்கி ஐன்ஸ்டீனின் விண்வெளி-காலத் தொடர்ச்சி வரை நீளும் அறிவார்ந்த பாதையை இக்கட்டுரை பின்தொடர்கிறது. அறிவியல் கோட்பாடுகளை விளக்குவது மட்டுமல்ல, மாறாக மனிதகுலத்தின் மிக நீண்ட தத்துவ விசாரணைகளில் ஒன்றை மீண்டும் கட்டமைப்பதுதான் இக்கட்டுரையை மிகவும் சுவாரசியமானதாக மாற்றுகிறது.

காலம் என்பது நிரூபிக்கப்பட்டு நிலைபெற்ற அறிவியல் பொருள் அல்ல, அது தொடர்ச்சியாகப் பரிணமித்து வரும் சிந்தனை என்பதை நிரூபிப்பதில்தான் இக்கட்டுரையின் மிகப்பெரிய பங்களிப்பு அடங்கியுள்ளது. இதில் நியூட்டன் மற்றும் லெய்ப்னிட்ஸ் ஆகியோருக்கு இடையே நிலவிய முரண்பாடுகள் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்தவை. நியூட்டனின் முழுமையான காலம் (absolute time) என்பது மரபார்ந்த இயற்பியலுக்கான (classical physics) அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்து, பிரபஞ்சத்திற்கான பொதுவான விதிகளைச் சாத்தியமாக்கியது. அதே சமயம், லெய்ப்னிட்ஸின் எதிர்ப்புகள் காலத்தைப் பற்றிய கேள்விகள் ஒருபோதும் வெறும் அறிவியல் சார்ந்தவை மட்டுமல்ல என்பதை வெளிப்படுத்துகின்றன; அவை இருப்பு , காரணம்-விளைவு மற்றும் யதார்த்தத்தின் உள்கட்டமைப்பு ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளாகவும் இருந்தன. தத்துவத்தைக் கைவிடுவதன் மூலம் நவீன இயற்பியல் உருவாகவில்லை, மாறாக அதன் வழியே பயணித்தலின் மூலமே உருவானது என்பதை இக்கட்டுரை மிக அற்புதமாக விவரிக்கிறது.

துல்லியமான அளவீட்டிலிருந்து கருத்தியல் ரீதியான நிச்சயமற்ற தன்மையை நோக்கி நகரும் விவாதமும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. அணு கடிகாரங்கள் நமக்கு அசாத்தியமான துல்லியத் தன்மையைத் தரக்கூடும், ஆனால் அதிகப்படியான துல்லியம் என்பது அதிகப்படியான புரிதலைத் தந்துவிடுவதில்லை. காலத்தை அளவிடுவதும், காலத்தை விளக்குவதும் முற்றிலும் வேறுபட்ட இரு வேறு முயற்சிகள் என்பதை இந்த கட்டுரை நமக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டுகிறது. ஐன்ஸ்டீன் இந்த விவாதத்திற்குள் நுழையும்போதுதான் இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானதாக மாறுகிறது. கால நீட்டிப்பும் (time dilation), நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடப்பதன் சார்பியல் தன்மையும் வெறும் அறிவியல் கண்டுபிடிப்புகள் மட்டுமல்லாது நமது அன்றாடப் பொது அறிவின் மீது பல கேள்விகளை உண்டாகியது என்றும் கூறலாம். இரண்டு வெவ்வேறு பார்வையாளர்கள் ஒரு குறிப்பிட்ட நிகழ்வுகளின் கால வரிசையைப் பற்றி பரஸ்பரம் மாறுபடலாம் என்ற புரிதல், நவீன சிந்தனை உருவாக்கிய மிக தீவிரமான உன்னதக் கருத்துக்களில் ஒன்றாக இன்னும் நீடிக்கிறது. இந்தக் கட்டுரையில் ஏதேனும் ஒரு குறைபாடு உண்டு என்றால், அது சமகால விவாதங்களின் ஆரம்பத்திலேயே தன் பயணத்தை முடித்துக் கொள்கிறது என்பதுதான். குவாண்டம் இயக்கவியல் , அண்டவியல் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த கோட்பாட்டைத் தேடும் முயற்சி ஆகியவற்றிலிருந்து எழும் சமகாலக் கேள்விகள் இதில் மிகச் சுருக்கமாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. இருப்பினும், அந்த முழுமையற்ற தன்மை ஒருவகையில் பொருத்தமானதுதான். காலம் என்பது இன்னும் தீர்க்கப்பட்ட ஒரு பிரச்சனை அல்ல; அது இயற்பியலும், தத்துவமும், மெய்யியலும்தொடர்ந்து சந்தித்துக் கொள்ளும், இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு அறிவார்ந்த எல்லை என்பதை இக்கட்டுரை இறுதியாக நமக்கு உணர்த்துகிறது.

ஐன்ஸ்டைனின் மனைவி

ஐன்ஸ்டைன் மனைவி பற்றிய கட்டுரை மிகவும் சுவாரசியமானது; ஏனென்றால், இது அடிப்படையில் ஐன்ஸ்டீனைப் பற்றியோ அல்லது மிலேவா மாரிக்கைப் பற்றியோ மட்டுமே பேசுவதல்ல. மாறாக, அறிவியல் வரலாற்றில் தொடர்ந்து எழும் ஒரு முக்கியமான கேள்வியைப் பற்றி இது பேசுகிறது: “ஒரு கண்டுபிடிப்பு என்பது கூட்டுழைப்பு, உரையாடல்கள், திருமணம் மற்றும் அறிவார்ந்த தோழமை ஆகியவற்றிலிருந்து வெளிப்படும் போது, அதற்கான அங்கீகாரத்தை நாம் யாருக்கு, எப்படி வழங்குவது?”ஆசிரியர் இதில் ஏதேனும் ஒரு பக்கச்சார்பான நிலையை எடுப்பதற்குப் பதிலாக, ஐன்ஸ்டீனின் ஆரம்பக்கால ஆய்வுகளில் மிலேவாவின் பங்களிப்பு இருந்ததாகச் சொல்லப்படும் கூற்றுகளுக்கான ஆதாரங்களை நடுநிலையோடு ஆராய்ந்து, அதை அறிவியல் வரலாற்றின் பின்னணியில் வைத்து மதிப்பிடுகிறார்.

ஆதாரங்களை இந்தக் கட்டுரை கையாண்டிருக்கும் விதம்தான் இதன் மிகச்சிறந்த பகுதியாகும். அறிவியல் மேதமையைப் பற்றியோ அல்லது பாலின அநீதியைப் பற்றியோ எந்தவொரு முன்கூட்டிய அனுமானங்களுடனும் தொடங்காமல், இந்தச் சர்ச்சைக்குப் பின்னால் இருக்கும் ஆதாரங்களை மிகவும் கவனமாக மதிப்பிடுகிறது. அவர்களுக்கிடையே பரிமாறப்பட்ட புகழ்பெற்ற காதல் கடிதங்கள், ஆப்ராம் இயோஃபேவின் சாட்சியம், ஐன்ஸ்டீனின் கல்விப் பதிவுகள் மற்றும் நேரடி ஆவண ஆதாரங்கள் இல்லாத நிலை ஆகியவற்றைப்பற்றிய விவாதம் ஒரு முக்கியமான ஒன்றை நமக்கு உணர்த்துகிறது: வரலாற்று ரீதியான கூற்றுகள் அவற்றின் உணர்ச்சிப்பூர்வமான ஈர்ப்பைக் கொண்டு மதிப்பிடப்படக் கூடாது, மாறாக அவற்றின் பின்னால் இருக்கும் ஆதாரங்களின் வலிமையைக் கொண்டே எடைபோடப்பட வேண்டும். இன்றைய நவீன விவாதங்கள் பெரும்பாலும் “தனித்த மேதை” என்ற கற்பிதத்திற்கும், அதற்கு இணையாகச் சொல்லப்படும் புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு கூட்டாளியும்தான் உண்மையான படைப்பாளி என்ற எளிமைப்படுத்தப்பட்ட கூற்றிற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த அணுகுமுறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அறிவார்ந்த பங்களிப்பிற்கும் , அறிவார்ந்த படைப்பாக்கத்திற்கும் இடையே இக்கட்டுரை காட்டும் வேறுபாடும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தது. மிஷேல் பெஸ்ஸோவை ஆசிரியர் இதில் கையாண்டிருக்கும் விதம் அதற்கு ஒரு சிறந்த உதாரணம். அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒருபோதும் தனிமையில் உருவாவதில்லை. உரையாடல்கள், விமர்சனங்கள், உணர்வுப்பூர்வமான ஆதரவு, தொழில்நுட்ப ரீதியான சரிபார்ப்பு மற்றும் கருத்தியல் தெளிவுபடுத்துதல் என எல்லாமே இங்கே முக்கியம்தான். ஆனால், இந்த ஒட்டுமொத்தப் பங்களிப்புகளும் ஒன்றிற்கு ஒன்று இணையானவை அல்ல. சார்பியல் கோட்பாடு முதன்மையாக மிலேவாவின் படைப்புதான் என்ற முடிவுக்கு வர வேண்டிய அவசியமில்லாமலே, அவரது பங்களிப்பு மிக முக்கியமானது மற்றும் அர்த்தமுள்ளது என்பதை இக்கட்டுரை வாதிடுகிறது. அந்தத் துல்லியமான வேறுபாடுதான் கட்டுரைக்கு சிறந்த பகுப்பாய்வு தன்மையை அளிக்கிறது. ஐன்ஸ்டீன் உடன் அவர் மனைவி மிலேவா மாரிக்

இருப்பினும், அறிவியல் துறையில் பெண்களின் நிலையைப் பற்றிப் பேசும்போது இக்கட்டுரை இன்னும் ஆழமாக பேசியிருக்கலாம் என்று தோன்றியது. மேரி கியூரி மற்றும் பிற அறிவியல் தம்பதிகளுடன் ஒப்பிட முயலும்போது, வெவ்வேறு நிறுவனங்கள், நாடுகள் மற்றும் சூழ்நிலைகளில் பெண்கள் எதிர்கொண்ட கட்டமைப்பு ரீதியான தடைகளை சில நேரங்களில் குறைத்து மதிப்பிடும் அபாயத்தைக் கொண்டுள்ளது. அந்தச் சமூக யதார்த்தங்களை இன்னும் சற்று ஆழமாக அணுகியிருந்தால் இந்த ஆய்வு இன்னும் வலுவடைந்திருக்கும். அறிவியல் வரலாறு என்பது எப்போதுமே புனிதர்களுக்கும் வில்லன்களுக்கும் இடையே நடக்கும் ஒரு போராட்டம் அல்ல என்பதுதான் இதன் மையக் கருத்து. அது பெரும்பாலும் திறமை, வாய்ப்பு, ஆளுமை, உறவுகள் மற்றும் வரலாற்றுச் சூழ்நிலைகள் ஆகியவற்றுக்கு இடையே நடக்கும் மிகவும் சிக்கலான வினையாகவே இருக்கிறது.

பொய்

பொய்களைப் பற்றிய ஒரு மேலோட்டமான அலசலாக இக்கட்டுரையை நாம் சுருக்கிவிட முடியாது. உண்மைக்கும் அதன் பயன்பாட்டுக்கும், அறநெறிக்கும் அரசியலுக்கும், மதத்திற்கும் அறிவியலின் பரிணாம வளர்ச்சிக்கும் இடையே உறைந்திருக்கும் முரண்பாடுகள்தான் இதன் மையப்பொருள். ‘பொய் என்றால் என்ன?’ என்ற மிக எளிய புள்ளியிலிருந்து தொடங்கும் ஆசிரியரின் சிந்தனை, ‘தவறான சித்தரிப்புகளும் மாயைகளும் இல்லாமல் மனித சமூகங்கள் பிழைத்திருக்க முடியுமா?’ என்ற அசாத்தியமான கேள்வியை நோக்கி நகர்கிறது. இந்தத் தத்துவார்த்த விஸ்தரிப்புதான் இக்கட்டுரையின் ஆகச்சிறந்த பலம்.

“உண்மையைப் பேசுவதை ஒரு மாறாத, முழுமையான நற்பண்பாக அணுக மறுப்பதுதான் இக்கட்டுரையின் மிக முக்கியமான தனித்துவமாகும். ‘புரைதீர்ந்த நன்மை பயக்கும்’ பொய்மை பற்றிய வள்ளுவத்தின் குறள் தொடங்கி, மத ரீதியான விதிவிலக்குகள், அரசியல் சொல்லாடல்கள், பரிணாம வளர்ச்சி சார்ந்த உருமறைப்புகள் மற்றும் அன்றாடச் சமூகத் தொடர்புகள் வரை தன் விவாதத்தை ஆசிரியர் விரிவுபடுத்துகிறார். அதன் மூலம், மனிதனால் உருவாக்கப்பட்ட அத்தனை நிறுவனங்களும் ஏதோ ஒரு புள்ளியில் பொய்மையோடு நடைமுறைச் சமரசம் செய்துகொண்டுதான் இயங்குகின்றன என்பதை அவர் திட்டவட்டமாக நிரூபிக்கிறார்.

எனவே, ‘மனிதர்கள் பொய் சொல்கிறார்கள்’ என்பது இக்கட்டுரையின் மைய வாதமல்ல; மாறாக, ‘ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத பொய்மைகளுக்கு இடையிலான எல்லையை, ஒவ்வொரு சமூகமும் தனக்குள்ளேயே தொடர்ச்சியாக எப்படி மறுவரையறை செய்து கொள்கிறது என்பதுதான். ‘பொய் சொல்வது தவறு’ என்ற வழக்கமான தார்மீகப் போதனைகளை விட, இது நமக்குள் மிக ஆழமான உரையாடலைத் தொடங்கி வைக்கிறது.”

அறிவியலைப் பற்றிய விவாதம் இவ்வுரையின் மிக வலுவான தத்துவப் பிரிவாக அமைகிறது. இந்த இடத்தில், பிழைக்கும் ஏமாற்றுதலுக்கும் இடையே உள்ள ஒரு முக்கியமான வேறுபாட்டை ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். அறிவியல் கோட்பாடுகள் திருத்தப்படலாம், பலவீனமடையலாம் அல்லது முற்றிலும் மாற்றப்படலாம்; ஆனால், அது அவற்றை பொய்களாக மாற்றிவிடாது. திட்டமிட்ட பொய்மைகளைத் தன் எல்லைக்கு வெளியே நிறுத்துவதனாலும், அதே சமயம் தன்னைத்தானே திருத்திக்கொள்ளும் தன்மையைக் கொண்டிருப்பதனாலும்தான் அறிவியல் முன்னேறுகிறது என்ற வாதம் இக்கட்டுரையின் மிக முக்கியமான நுண்ணறிவுகளில் ஒன்றாகும். இந்த வாதம், விவாதத்தை வெறும் உளவியல் மற்றும் நெறிமுறைகளுக்கு அப்பால் கொண்டு சென்று, அறிவதூயியல் அதாவது அறிவு என்பது எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பது பற்றிய ஆய்வு என்ற தளத்திற்கு உயர்த்துகிறது.

கட்டுரை மதம், அரசியல், குழந்தை உளவியல், டார்வினிய பரிணாம வளர்ச்சி, மொழியியல் மற்றும் நரம்பியல் அறிவியல் என பல துறைகளுக்கு இடையே மிக வேகமாக நகர்கிறது. இந்த உதாரணங்கள் பெரும்பாலும் ஈர்க்கக்கூடியதாக இருந்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் மைய வாதம் ஆழமாக வளர்வதற்கு முன்பே இவை மிக விரைவாகக் குவிந்துவிடுகின்றன. ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு துறைகளை மட்டும் இன்னும் சற்றுத் தொடர்ச்சியாகவும் விரிவாகவும் ஆராய்ந்திருந்தால், அது இன்னும் ஆழமான பகுப்பாய்வுத் தன்மையைத் தந்திருக்கும். எளிமையான தார்மீகக் கட்டமைப்புக்கு அது விடுக்கும் சவாலில்தான் கட்டுரையின் நிலையான பங்களிப்பு அடங்கியுள்ளது. உண்மையும் பொய்மையும் எதிரெதிர் துருவங்களாக இங்கே வெளிப்படவில்லை; மாறாக, சூழல், அதிகாரம், நோக்கம் மற்றும் விளைவு ஆகியவற்றிற்கு ஏற்ப அவற்றின் அர்த்தங்கள் எவ்வாறு மாறுகின்றன என்ற கருத்தியலாகவே வெளிப்படுகின்றன.

விளைந்ததும் விதைத்ததும்

மேலோட்டமாக பார்க்கும்போது, இந்தக் கட்டுரை ஒன்றோடொன்று தொடர்பில்லாத சில அறிவியல் கதைகளின் தொகுப்பைப் போலத் தோன்றலாம். வயக்ரா எதிர்பாராதவிதமாக அழிந்து வரும் வனவிலங்குகளைக் காப்பாற்றுவது, மருத்துவ வெற்றியின் விளைவாகவே உருவான நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன், மற்றும் போர்முறையின் தன்மையையே மாற்றியமைக்கும் தன்னாட்சி இராணுவத் துரோன்கள் இவை ஒவ்வொன்றும் முற்றிலும் வேறுபட்ட துறைகளைச் சேர்ந்தவையாகவே நமக்குத் தெரிகின்றன. ஆனால், இந்த மூன்று உதாரணங்களுக்குள்ளும் ஊடாடி ஓடும் ஒரு பொதுவான வடிவத்தை வெளிப்படுத்துவதில்தான் இக்கட்டுரையின் உண்மையான சாதனை அடங்கியுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒருபோதும் அவற்றைப் படைத்தவர்களின் நோக்கங்களுக்குள் மட்டுமே சிறைப்பட்டுப் போவதில்லை. அவை சமூகத்திற்குள் விடுவிக்கப்பட்டவுடன், பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், மனித ஆசைகள் மற்றும் நிறுவன அதிகாரங்களால் கட்டமைக்கப்பட்ட மிகவும் சிக்கலான ஒரு சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் நுழைகின்றன. எனவே, அறிவியல் வரலாறு என்பது வெறும் கண்டுபிடிப்புகளின் வரலாறு மட்டுமல்ல, அது எவராலும் முன்கணிக்கப்படாத விளைவுகளின் வரலாறும்கூட.

அறிவியல் வளர்ச்சியைப் பற்றிய எளிமைப்படுத்தப்பட்ட புரிதலுக்கு அது விடுக்கும் சவால்தான் இவ்வுரையின் மிக முக்கியமான பங்களிப்பாகும். பொதுவான விவாதங்கள் பெரும்பாலும் தொழில்நுட்பத்தை இரண்டு வகைகளாகப் பிரித்துவிடுகின்றன: மனிதகுலத்திற்கு உதவும் கண்டுபிடிப்புகள், மற்றும் மனிதகுலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் கண்டுபிடிப்புகள். ஆனால், யதார்த்தம் ஒருபோதும் இவ்வளவு எளிமையானதாக இருப்பதில்லை என்பதை இக்கட்டுரை நிரூபிக்கிறது. வயக்ரா ஒரு குறிப்பிட்ட மருத்துவப் பிரச்சனைக்காக உருவாக்கப்பட்டது, ஆனால் அது மறைமுகமாக அழிந்து வரும் விலங்கினங்கள் வேட்டையாடப்படுவதைக் குறைப்பதில் போய் முடிந்தது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மருத்துவ வரலாற்றின் உன்னதமான சாதனைகளில் ஒன்றாக மாறி, மனிதனின் ஆயுட்காலத்தை நீட்டித்து, தொற்றுநோய்களால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைத்தன; ஆனால், அவற்றின் அதிகப்படியான பயன்பாடு அதே சமயம் மருந்துகளை எதிர்க்கும் பாக்டீரியாக்கள் பரிணமிப்பதற்கான சூழலையும் உருவாக்கியது. இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே அறிவியல் மாறாமல் அப்படியேதான் இருந்தது; ஆனால், அந்த அறிவியல் எந்தச் சமூக மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குள் அறிமுகப்படுத்தப்பட்டதோ, அந்த அமைப்புகள்தான் மாறின.

நுண்ணுயிர் எதிர்ப்புத் திறனைப் பற்றிய விவாதமே இவ்வுரையின் அறிவார்ந்த மையப்புள்ளியாக அமைகிறது; ஏனென்றால், அது ஒரு ஆழமான அறிவியல் விதியை விளக்குகிறது: “மனிதனின் தலையீடுகளுக்கு இயற்கை எப்போதும் எதிர்வினையாற்றுகிறது.” மருந்துகளை எதிர்க்கும் பாக்டீரியாக்களின் தோற்றம் என்பது ஏதோ ஒரு தற்செயலான தோல்வி அல்ல, அது டார்வினிய பரிணாம வளர்ச்சியின் மிகத் துல்லியமாக முன்கணிக்கக்கூடிய ஒரு விளைவுதான். அந்த வகையில், அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒன்றும் மனிதகுலத்திற்கு இயற்கை விதிகளிலிருந்து விலக்கு அளித்துவிடுவதில்லை என்பதை இக்கட்டுரை வாசகர்களுக்கு நினைவூட்டுகிறது. மாறாக, அந்த இயற்கை விதிகள் தொடர்ந்து செயல்படுவதற்கான புதிய சூழல்களை மட்டுமே அவை உருவாக்குகின்றன. இந்தப்பகுதியை ஒட்டுமொத்தத் தொழில்நுட்ப நாகரிகத்திற்கான ஒரு பரந்த உருவகமாகக் கூட நாம் வாசிக்க முடியும். ஒவ்வொரு தீர்வும் ஒரு புதிய சூழலை உருவாக்குகிறது; அந்தச் சூழல் புதிய சிக்கல்களைத் தோற்றுவிக்கிறது; அந்தச் சிக்கல்கள் மேலும் புதிய தீர்வுகளைக் கோருகின்றன. எனவே, அறிவியல் வளர்ச்சி என்பது இறுதி வெற்றிகளின் ஒரு தொடர் வரிசை அல்ல, அது இயற்கையோடு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு முடிவற்ற உரையாடல்.

தன்னாட்சிப் போர்முறையைப் பற்றிய இறுதிப் பகுதி, விவாதத்தை உயிரியலில் இருந்து அரசியல் தத்துவம் நோக்கி விரிவுபடுத்துகிறது. இந்த இடத்தில், ஆசிரியர் இக்கட்டுரையின் ஆகச்சிறந்த, மனதை உலுக்கும் ஒரு கேள்வியை எழுப்புகிறார்: “தொழில்நுட்பமானது ஒரு செயலையும் அதன் விளைவையும் மேன்மேலும் பிரித்துக்கொண்டே போகும்போது என்ன நடக்கும்?” மனித வரலாறெங்கும், போரினால் ஏற்படும் உடல் ரீதியான மற்றும் உணர்வு ரீதியான இழப்புகள் வன்முறைக்கு ஒரு இயற்கையான எல்லையை வகுத்து வைத்திருந்தன. ஆனால், துரோன் போர்முறையும் தன்னாட்சி அமைப்புகளும் முடிவெடுப்பவருக்கும் அதன் பலியாவருக்கும் இடையே (முன்னெப்போதும் இல்லாத) தூரத்தை உருவாக்குவதன் மூலம் அந்த எல்லைகளுக்குச் சவால் விடுகின்றன. இக்கட்டுரையின் கவலை வெறும் தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமல்ல, அது தார்மீகம் சார்ந்தது. இந்தத் தானியங்கிமயமாக்கல், மனிதர்கள் தங்கள் பொறுப்புணர்வு, குற்ற உணர்ச்சி மற்றும் கடமைப்பாடு ஆகியவற்றை உணரும் உளவியல் வழிமுறைகளைப் பலவீனப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளதா என்ற கேள்வியை இது எழுப்புகிறது.

இந்த கட்டுரையில் ஏதேனும் ஒரு குறைபாடு உண்டு என்றால், அது தனித்தனியாகவே ஒரு முழுக் கட்டுரையாக எழுதப்பட வேண்டிய தலைப்புகளுக்கு இடையே மிக வேகமாக நகர்கிறது என்பதுதான். இதன்பரப்பு வியக்கத்தக்கதாக இருந்தாலும், சில தலைப்புகள் குறிப்பாக இராணுவ நெறிமுறைகள் மற்றும் தன்னாட்சி ஆயுதங்கள் மாற்றுப் பார்வைகளுடனான இன்னும் ஆழமான விவாதத்தைக் கோருகின்றன. இந்த வாதம் சில இடங்களில் விரிவான பகுப்பாய்வை நம்பியிருப்பதற்குப் பதிலாக, உதாரணங்களை மட்டுமே அதிகமாகச் சார்ந்துள்ளது. இருப்பினும், இது சிறிய குறைதான். கண்டுபிடிப்புகளுக்கும் அவற்றின் இறுதி விளைவுகளுக்கும் இடையே உள்ள தூரம் என்ற, அறிவியல் வரலாற்றில் இதுவரை புறக்கணிக்கப்பட்ட ஒரு பரிமாணத்தின் மீது நம் கவனத்தைத் திருப்புவதால் இக்கட்டுரை தன் இலக்கில் முழுமையாக வெற்றி பெறுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் அவற்றின் அசல் நோக்கத்துடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. அவை சமூகத்திற்குள் இடம்பெயர்ந்து, மனிதனின் பேராசைகளுடனும் அச்சங்களுடனும் கலந்து, பெரும்பாலும் எவராலும் கணிக்க முடியாத விளைவுகளையே உருவாக்குகின்றன. எனவே, இவ்வுரையின் மைய நுண்ணறிவு வயக்ராவைப் பற்றியோ, நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பற்றியோ அல்லது துரோன்களைப் பற்றியோ ஆனது அல்ல. அது அறிவுக்கும் அதிகாரத்திற்கும் இடையே நிலவும் முன்கணிக்க முடியாத உறவைப் பற்றியது; மேலும், ஒரு கண்டுபிடிப்பு ஆய்வகத்தை விட்டு வெளியேறி இந்த உலகிற்குள் நுழைந்த பிறகு, என்ன நடக்கும் என்பதைக் கட்டுப்படுத்துவதில் இருக்கும் நீடித்த பேராபத்தைப் பற்றியது ஆகும்.

இஸ்லாமிய கலைகளில் உயர்கணித கோட்பாடுகள்

இந்தக் கட்டுரையில் உள்ள மிக சுவாரசியமான சிந்தனைகளில் ஒன்று இஸ்லாமியக் கலையின் உன்னதம் என்பது அதன் வெறும் அழகியல் கவர்ச்சியில் மட்டும் இல்லை, மாறாக அதன் ‘வடிவியல் கற்பனைத் திறனில்’ தான் அடங்கியுள்ளது என்பதாகும். இஸ்லாமியக் கட்டடக்கலை மற்றும் அலங்காரங்களின் தனித்துவ அடையாளங்களான சிக்கலான பலகோணக் கட்டமைப்புகள், மீண்டும் மீண்டும் வரும் சமச்சீர்நிலைகள் மற்றும் முடிவில்லாமல் விரிவடையும் வடிவங்கள் ஆகியவை வெறும் அலங்காரக் கூறுகள் மட்டுமல்ல. அவை ஒரு தத்துவ மொழியாகவே செயல்படுகின்றன. இந்த வடிவங்கள் தங்களின் தொடர்ச்சியான ஆவர்த்தனங்கள் மற்றும் விரிவாக்கங்களின் மூலம், எல்லையற்ற தன்மையை அதாவது இறைவனின் எல்லையற்ற ஆற்றல், ஒருமை மற்றும் பெருங்கருணையை பிரதிபலிக்க முயல்கின்றன.

இந்தப் பார்வையில் அணுகும்போது, இஸ்லாமிய வடிவியல் என்பது பரந்த மனித வரலாற்றின் அங்கமாக மாறுகிறது. வரலாறெங்கும் பல்வேறு நாகரிகங்களில், கணிதம் என்பது வெறும் நடைமுறைத் தேவைகளுக்காகத் தோன்றியதல்ல, மாறாக பிரபஞ்சம் சார்ந்த தத்துவ வினாக்களிலிருந்தே அது பிறந்துள்ளது. இந்தியாவின் மண்டலங்கள், கோவில் கட்டடக்கலை மற்றும் வாஸ்து மரபுகள் போன்றவையும் பிரபஞ்சத்தின் ஒழுங்கமைவை வெளிப்படுத்துவதற்காக இத்தகைய வடிவியல் வடிவங்களையே பயன்படுத்துகின்றன. இந்த இடங்களில் வடிவியல் என்பது வெறும் தொழில்நுட்பக் கருவி அல்ல; அது மனித மனதிற்கும் பிரபஞ்சக் கட்டமைப்புக்கும் இடையே பாலம் அமைக்கும் ஒரு புள்ளியாக மாறுகிறது.

இதேபோன்ற ஒரு உள்ளுணர்வு மேற்கத்திய இசையிலும் வெளிப்படுகிறது. எண்களுக்கு இடையிலான உறவுகளிலிருந்தே இசைவடிவத்தின் ஒத்திசைவு உருவாகிறது என்பதைப் பத்தகோரஸ் கண்டறிந்தார். ஆக்டேவ்கள் மற்றும் பிஃப்த்துகள் போன்ற இசை இடைவெளிகள் முற்றிலும் கணித விகிதங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளன. ஒலியின் வழியே நமக்கு அழகாகத் தோன்றும் ஒன்று, உண்மையில் மற்றொரு தளத்தில் எண்களின் ஒழுங்கமைந்த வெளிப்பாடுதான். இந்த மரபு, ஜோஹன் செபாஸ்டியன் பாக்கின் இசையில் தன் ஆகச்சிறந்த கலைவடிவத்தை அடைகிறது. அவரது இசைக்கோர்ப்புகள் அசாத்தியமான கட்டமைப்புச் சமச்சீரையும் கணிதத் துல்லியத்தையும் கொண்டவை; ஆயினும், அவை வெறும் கணக்கீடுகளாக உணரப்படாமல், அங்கே கணிதம் கலைக்குள் கரைந்து மறைந்துவிடுகிறது.

கணிதத்திற்கும் மெய்யியலுக்கும் இடையே நிலவும் இந்தத் தொடர்பு ஏதோ ஒரு குறிப்பிட்ட நாகரிகத்திற்கு மட்டும் உரித்தானது அல்ல. பத்தகோரஸ் போன்ற கிரேக்கச் சிந்தனையாளர்கள் தத்துவ விசாரணைகளின் மூலமே கணிதத்தை அணுகினர். இந்திய மரபுகள் வடிவியலைத் தங்களின் சடங்குகள் மற்றும் அண்டவியலோடு ஒருங்கிணைத்தன. மெசபடோமிய நாகரிகங்கள் வானியலையும் அளவீடுகளையும் மாற்றியமைத்த எண் முறைகளை உருவாக்கின. இஸ்லாமிய பொற்காலத்தில், அல்-குவாரிஸ்மி மற்றும் அல்-பிருனி போன்ற அறிஞர்கள் இயற்கணிதம் , முக்கோணவியல் மற்றும் வானியல் ஆகியவற்றை விரிவுபடுத்தி, உலகளாவிய கணித மரபைப் பாதுகாத்து வளர்த்தெடுத்தனர். இவை எல்லாவற்றிலுமே, கணிதம் என்பது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்பட்டதோடு மட்டுமல்லாமல், யதார்த்தத்தின் தன்மையைப் பற்றிய ஆழமான கேள்விகளுக்கும் விடையளிக்க முயன்றது.

இந்த இடத்தில்தான், பேராசிரியரின் இக்கட்டுரை ஒர்ஹான் பாமுக்கின் My Name Is Red நாவலோடு எதிர்பாராதவிதமாக இணைகிறது. அந்த நாவலின் மையப்பொருள் என்பது இரு வேறு கலைப் பார்வைகளுக்கு இடையே நடக்கும் மோதல்தான். பாரம்பரிய இஸ்லாமிய நுண்கலை ஓவியர்கள் தனிமனிதப் பார்வைகளைக் கடந்து, காலத்தைக் கடந்த தெய்வீக ஒழுங்கமைவைப் பிரதிபலிக்க விரும்புகிறார்கள். அதற்கு நேர்மாறாக, மறுமலர்ச்சிக் கால ஐரோப்பிய ஓவியக் கலை முப்பரிமாணப் பார்வை, தனித்துவ அடையாளம் மற்றும் பார்ப்பவரின் அகவயமான நோக்கு ஆகியவற்றைத் தழுவிக்கொள்கிறது. எனவே, இந்த மோதல் வெறும் கலை சார்ந்தது மட்டுமல்ல, அது தத்துவம் சார்ந்தது.

இஸ்லாமிய வடிவியல் வடிவங்கள் தனிமனித அடையாளத்தை எல்லையற்ற பிரபஞ்சப் பெருவெளியில் கரைத்துவிடுகின்றன. பாரம்பரிய நுண்கலை ஓவியமும் அதேபோல, ஒரு உன்னதமான உண்மையை அடைவதற்காகக் கலைஞனைத் தன் சுயத்தை முற்றிலுமாக அழித்துக்கொள்ளக் கோருகிறது. இங்கே கலைஞன் தன் சொந்த உணர்வுகளை வெளிப்படுத்த முயல்வதில்லை, மாறாகப் பிரபஞ்ச தரிசனம் ஒன்றில் தன்னை ஒரு புள்ளியாக இணைத்துக்கொள்ளவே விரும்புகிறான். இந்த உலகப் பார்வை, தனிமனிதப் புரிதலையும் யதார்த்தவாதத்தையும் மையமாகக் கொண்ட புதிய கலைக் கோட்பாட்டை எதிர்கொள்ளும்போது ஏற்படும் பதற்றத்தையே ஒர்ஹான் பாமுக்கின் நாவல் விரிவாக ஆராய்கிறது.

பேராசிரியரின் கட்டுரையும் சரி, பாமுக்கின் நாவலும் சரி, நம்மை ஈர்ப்பதற்குக் காரணம் அவை இரண்டுமே நம்மை ஒரே ஒரு கேள்வியை நோக்கி இட்டுச்செல்வதுதான். வடிவியல், இசை, ஓவியம், இலக்கியம், தத்துவம் அல்லது கணிதம் என எதுவாக இருந்தாலும், மனிதகுலம் மீண்டும் மீண்டும் ஒரே ஒரு தேடலை நோக்கியே திரும்புகிறது: “இந்த உலகின் வெளிப்படையான சிக்கல்களுக்குப் பின்னால், அனைத்தையும் பிணைக்கும் ஒரு பொதுவான ஒழுங்கமைப்பு இருக்கிறதா?” வெங்கட் ரமணன்

சில நாகரிகங்கள் இந்தத் தேடலை வடிவியல் கோலங்கள் மூலம் வெளிப்படுத்துகின்றன. மற்றவை இசையின் ஒத்திசைவு மூலம். வேறு சில தத்துவக் கோட்பாடுகள் அல்லது இலக்கியப் புனைகதைகள் மூலம். வடிவங்கள் மாறலாம், ஆனால் அவற்றின் பின்னணியில் இருக்கும் மனிதனின் உந்துதல் வியக்கத்தக்க வகையில் ஒன்றாகவே இருக்கிறது. கணிதம், மதம், கலை மற்றும் தத்துவம் ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்று பிரிந்த தனித்தனித் துறைகளே அல்ல போலும். அவை, மனிதன் தன் முன்னால் இருக்கும் அதே மகா ரகசியத்தைப் புரிந்துகொள்வதற்காகப் பயன்படுத்தும் வெவ்வேறு மொழிகளாகவே இருக்கலாம்.

ஆளற்ற போர்முனைகளில் முகமற்ற வீரர்கள்

இக்கட்டுரைத் தொகுப்புகளின் மிகச் சிந்தனைக்குரிய பகுதிகளில் ஒன்று, தன்னாட்சிப் போர்முறை மற்றும் இராணுவ ரோபாட் பற்றிய அதன் விவாதமாகும். துரோன்கள் மற்றும் ரோபோடிக் அமைப்புகளைப் பற்றிய ஒரு சாதாரண விவரிப்பாகத் தொடங்கும் இப்பகுதி, தொழில்நுட்பமானது போரின் தார்மீகக் கட்டமைப்பையே எவ்வாறு மாற்றியமைக்கிறது என்ற ஒரு ஆழமான விசாரணைக்குள் படிப்படியாகப் பரிணமிக்கிறது. வரலாறு முழுவதிலும், போரிடுபவர்கள் ஒருவரையொருவர் நேரடியாக எதிர்கொண்டனர்; அதன் மூலம் வன்முறையின் பேராபத்துகளையும் அதன் உளவியல் ரீதியான விளைவுகளையும் அவர்களே நேரடியாகச் சுமக்க வேண்டியிருந்தது. ஆனால், துரோன் போர்முறையும் தன்னாட்சி அமைப்புகளும், இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் போரிடுகிறாரகள்.

இந்த வாதத்தின் முக்கியத்துவம் வெறும் இராணுவத் தொழில்நுட்பத்தையும் கடந்து விரிவடைகிறது. ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப மாற்றமும் வெறும் செயல்பாட்டு முறைகளை மட்டும் மாற்றுவதில்லை, மாறாக அதனுடன் சேர்ந்து நமது தார்மீக அனுமானங்களையும் (சேர்த்து எழுதுகிறது) சேர்த்தே மாற்றியெழுதுகிறது?? என்பதை இவ்வுரை சுட்டிக்காட்டுகிறது. வெடிமருந்தின் வருகை போரின் தன்மையையே மாற்றியமைத்ததைப் போலவும், அணு ஆயுதங்கள் புவிசார் அரசியல் அதிகாரத்தை மறுவரையறை செய்ததைப் போலவும், தன்னாட்சி அமைப்புகள் போர்முறையில் பொறுப்பேற்றால் அர்த்தத்தையே முற்றிலும் மாற்றிவிடக்கூடும். ஒரு இயந்திரம் ஒரு இலக்கைத் தவறாக அடையாளம் கண்டு தாக்கினால், அதற்கான பொறுப்பு யாரிடம் சேரும் நிரலாளரிடமா , ராணுவ தளபதியிடமா, அதைத் தயாரித்த நிறுவனத்திடமா அல்லது அந்த இயந்திரத்திடமேதானா?

மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் , தன்னாட்சி துரோன்கள் மற்றும் போஸ்டன் டைனமிக்ஸ் போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்படும் ரோபோடிக் தளங்களின் எழுச்சியால் தற்போது இன்னும் அவசரமும் அவசியமுமாக மாறியுள்ள விவாதங்களை இக்கட்டுரை அன்றே முன்கூட்டியே ஊகித்திருந்தது என்பதுதான். எனவே, இக்கட்டுரை வெறும் இராணுவக் கருவிகளைப் பற்றியது மட்டுமல்ல; அது மனிதனின் தீர்ப்புத் திறனை இயந்திரங்களிடம் மேன்மேலும் ஒப்படைத்து வரும் போக்கைப் பற்றியதாகும். அது எழுப்பும் நீடித்த கேள்வி எப்போதும் நம்மை அச்சுறுத்திக் கொண்டே இருக்கும்: “தொழில்நுட்பமானது நமது முடிவுகளை நமக்காக மேன்மேலும் எடுக்கத் தொடங்கும்போது, அந்த முடிவுகளோடு சேர்த்து நமது மனிதத்தன்மையின் எந்த அளவை நாம் அவற்றிடம் தாராளமாகத் தாரைவார்த்துக் கொண்டிருக்கிறோம்?”

இறுதியாக இந்தக் கட்டுரைத் தொகுப்பு நம் நினைவில் நிலைநிறுத்துவது எதுவென்றால், இது உண்மையில் துரோன்கள், இராணுவ ரோபோக்கள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் அல்லது வயக்ராவைப் பற்றியது கூட அல்ல என்பதுதான். அவை எல்லாமே ஒரு பரந்த கேள்விக்குள் நுழைவதற்கான நுழைவாயில் மட்டுமே. அறிவியல் கண்டுபிடிப்புகள் பெரும்பாலும் சில குறிப்பிட்ட சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளாகவே தொடங்குகின்றன; ஆனால், அவை சமூகத்திற்குள் நுழைந்தவுடன் தமக்கான ஒரு தனித்துவமான சுய இயக்கத்தைப் பெற்றுக்கொள்கின்றன. பின்னர் அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், மனிதப் பேராசைகள் மற்றும் எதிர்பாராத விளைவுகளுடன் அவை பரஸ்பரம் வினையாற்றுகின்றன. எனவே, அறிவியல் வரலாறு என்பது வெறும் கண்டுபிடிப்புகளின் வரலாறு மட்டுமல்ல, அது வியப்புகளின் வரலாறும்கூட.

கட்டுரைத் தொகுப்பு முழுவதும் ஒரு பொதுவான வடிவத்தை நம்மால் பார்க்க முடிகிறது: இந்த உலகின் மீது தன் கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்காக மனிதகுலம் புதிய கருவிகளை உருவாக்குகிறது, ஆனால் அதே சமயம் ஒவ்வொரு புதிய கருவியும் புதிய நிச்சயமற்ற தன்மைகளையும் சேர்த்தே உருவாக்குகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆயுளை நீட்டிக்கின்றன, ஆனால் அவை பரிணாம ரீதியான அழுத்தங்களை முடுக்கிவிடுகின்றன. தன்னாட்சி அமைப்புகள் மனிதர்களுக்கான ஆபத்தைக் குறைக்கின்றன, ஆனால் தார்மீகப் பொறுப்புணர்வைச் சிக்கலாக்குகின்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது மிகச் சாதாரணமாகத் தோன்றும் கண்டுபிடிப்புகள் கூட, சுற்றுச்சூழல் அமைப்புகளை எதிர்பாராத வழிகளில் மாற்றியமைக்கக் கூடும். இதன் ஆழமான பாடம் என்னவென்றால், அறிவு என்பது ஒருபோதும் இறுதி இலக்கு அல்ல; அது எந்தவொரு தனிப்பட்ட விஞ்ஞானியாலும் முழுமையாக முன்கணிக்க முடியாத விளைவுகளின் முடிவற்ற சங்கிலித் தொடரின் ஆரம்பப்புள்ளி, அவ்வளவுதான்.

என்னைப் பொறுத்தவரை, இப்புத்தகத்தின் மிக மதிப்புமிக்க அம்சம் என்பது அறிவியல் உண்மைகளைக் கடந்து, அவற்றின் அடியில் மறைந்திருக்கும் தத்துவக் கேள்விகளை வெளிக்கொணரும் அதன் அசாத்தியமான திறன்தான். அறிவியல் என்பது ஆய்வகங்களுக்குள் மட்டும் நடத்தப்படும் ஒரு தனித்தனி முயற்சி அல்ல என்பதை இது நமக்கு நினைவூட்டுகிறது. இயற்கை, தொழில்நுட்பம், அதிகாரம் மற்றும் இறுதியாக மனிதன் தன்னோடு கொண்டிருக்கும் உறவை அவனே தொடர்ச்சியாக மறுபரிசீலனை செய்வதற்கான முதன்மை வழிகளில் ஒன்றாகவே அறிவியல் திகழ்கிறது. ஒரு வாசகர் தகவல்களைத் தேடி இந்தக் கட்டுரைகளை வாசிக்கத் தொடங்கலாம், ஆனால் பெரும்பாலும் அவர் இதை முடிக்கும்போது இதைவிடப் பரந்த ஒன்றைப் பற்றிச் சிந்திக்கத் தலைப்படுவார்: அதாவது, அறிவியல் எதைக் கண்டுபிடிக்கிறது என்பதல்ல, மாறாக அந்தப் புதிய கண்டுபிடிப்புகள் நம்மை படிப்படியாக எத்தகு மனிதர்களாக மாற்றியமைக்கின்றன என்பதுதான் அது.

ஒளியிலிருந்து இருளுக்கு வாசிக்கும் ஒரு இளம் வாசகர், வெறும் தகவல்களை மட்டும் பெறுவதில்லை; மாறாக, எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான கற்பனைத் திறனைப் பெறுகிறார். அதாவது, தெளிவான அறிவியலின் வெளிச்சத்தில் தொடங்கி, அதன் பின்னாலிருக்கும் சிக்கலான வரலாற்றையும், பயன்பாட்டையும், அது மனித குலத்தின் போக்கை எப்படி மாற்றியமைத்தது என்பதையும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் கட்டுரை தொகுப்புகள் அடங்கிய புத்தகம் இது. அந்த வகையில், இந்த நூல் அறிவியல் சிந்தனையை வளர்ப்பதில் தமிழில் மிக முக்கியமான ஒரு தொடக்கப்புள்ளியாகும். தமிழின் அடுத்த தலைமுறை, அறிவியலை வெறும் சூத்திரங்களாகவோ அல்லது தேர்வுக் கணக்குகளாகவோ பார்க்காமல், பன்முகத்தன்மை கொண்ட ஒரு பிரபஞ்சப் பார்வையாகக் காண வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம். ஒற்றைப் பரிமாண சிந்தனையிலிருந்து விடுபட்டு, அறிவியல் பூர்வமாகச் சிந்திக்கப் பழகும் சமூகமே நாளைய உலகின் படைப்பாளிகளாக இருக்கும். அந்த வகையில், தமிழில் இத்தகைய அறிவியல் நூல்கள் உருவாவது, அறிவுசார் தேடலின் மிக முக்கியமான ஒரு தொடக்கப்புள்ளியாக அமையும்.