அணிந்துரை

உலகப் பெரிய மருந்து தயாரிக்கும் நிறுவனம் பைஸர். எட்டு ஆண்டுகளாக மார்பு நெரிப்புக்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சி செய்தது. ஆனால் அது தோல்வியின் விளிம்பில் இருந்தது. கடைசி முயற்சியாக, தன்னார்வலர்களுக்கு 300 பவுண்டு தந்து, மருந்தும் கொடுத்து, அவர்கள்மீது ஆய்வு செய்தது. அவர்களுக்குக் கொடுத்த பின்னூட்டப் படிவத்தில் இறுதிக் கேள்வியாக, ‘வேறு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?’ என்று கேட்டது. ஒருவர் மட்டும் பதில் எழுதினார். அது அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்த்திராதது. அந்தப் பதில்தான் வயகராவைக் கண்டுபிடிக்க உதவியது. உலக வரலாற்றில் வயகரா அளவுக்கு வெற்றிகரமாக விற்பனையான மருந்து எதுவும் இல்லை.
17ம் நூற்றாண்டில் ஐஸக் நியூட்டன் சூரிய ஒளியை முக்கோணப் பட்டகம் கொண்டு பிரித்து சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், ஊதா, ஆரஞ்சு என ஆறு நிறங்களைக் கண்டார். ஆனால் அவருக்கு அது சரியாகப் படவில்லை. இசையில் ஏழு ஸ்வரங்கள். வாரத்தில் ஏழு நாட்கள். ஆகவே நிறங்களிலும் அவர் இண்டிகோவைச் (கரு நீலம்) சேர்த்துக்கொண்டார். இண்டிகோ நிறம் நியூட்டன் உலகத்துக்குத் தந்த கொடை. ஆனால் அறிவியலுக்கு நியூட்டன் அளித்த இந்தக் கொடைதான் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களை அடிமைகளாக்கி பலிகொண்ட காலனியாதிக்கத்தின் கருவியாக மாறிப்போனது.
இந்தத் தொகுப்பில் பதினோரு அறிவியல் கட்டுரைகள் உள்ளன - பதினோரு ரத்தினங்கள். வயகரா முதல் வேர்ட்ஸ்வேர்த் வரை; காலம் முதல் காலனியாதிக்கம் வரை; யந்திரன் முதல் ஐன்ஸ்டைன் வரை; பாக்டீரியாக்கள் முதல் பறவிகள் வரை பல சுவாரஸ்யமான, ஆழமான தகவல்கள் இந்தத் தொகுப்பில் கிடைக்கின்றன. இதை எழுதியவர் வெங்கட்ரமணன் - பல்துறை அறிவியலாளர். பல ஆண்டுகளுக்கு முன் சுந்தர ராமசாமி இவரிடம் ’நிறைய எழுதுங்கள்’ என்று சொன்னார். இருபத்து ஐந்து வருடங்களாக நான் வெங்கட்டிடம் ’எங்கே தொகுப்பு?’ என்று கேட்டபடியே இருந்தேன். இப்பொழுது ’ஒளியிலிருந்து இருளுக்கு’ என்ற தலைப்பில் தொகுப்பு வெளிவந்துவிட்டது. ஒவ்வொரு அறிவியல் மாணவர் கையிலும் இந்தத் தொகுப்பு இருப்பது அவசியம்; அல்லாதவர் கையில் இருப்பது அதனினும் அவசியம்.
அ.முத்துலிங்கம்
எழுத்தாளர், கனடா.