January 17, 2023 in இசை by வெங்கட்ரமணன்2 minutes
பெரும்பாலான டெக்னோ இசைகளில் ஒருவித மந்தத் தன்மை இருக்கும். தப்லா பீட் ஸயன்ஸின் இசைத்தொகுப்புகளில் தப்லாவின் அற்புதமான உயிரோட்டம் அதை முறியடித்து, டெக்னோ ஓசைகளுக்கு ஒருவித வானாந்திர சூழலைத் தர அதன் முன்னே தாளவாத்தியங்கள் வனதேவதையின் ஆட்டத்தைப் போல உக்கிரம் காட்டுகின்றன
தாள வாத்தியங்களில் இந்தியக் கருவிகளுக்கும், இசைக்கும் உலகில் ஒரு உயர்ந்த இடமுண்டு. என்னுடைய மிகப் பெரிய ஆச்சரியங்களில் ஒன்று ஹார்மனியை அடிப்படையாகக் கொண்டு ஒரு சாஸ்திரிய இசையை வடித்த மேற்கிசை விற்பன்னர்கள் எப்படி அதில் தாளத்திற்கு முக்கிய இடம் கொடுக்காமல் போய்விட்டார் என்பது. மாறாக கர்நாடக இசையும், ஹிந்துஸ்தானி இசையும் ஸ்வரத்திற்கும் தாளத்திற்கும் கிட்டத்தட்ட சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கின்றன. இவற்றுக்கிடையில் கர்நாடகத்தில் இன்னும் தாளத்தின் முக்கியத்துவம் அதிகம். (கர்நாடக இசையில் தாளவாத்தியக் கலைஞர்களும், தந்திக் கருவிகளை இசைக்கும் பக்க வாத்தியக்காரர்களுக்கும் தனியாவர்த்தனம் தருவதுபோன்ற வழக்கம் ஹிந்துஸ்தானியில் அதிகம் கிடையாது). வரும் நாட்களில் தாளங்களைப் பற்றி (எனக்குத் தெரிந்தவகையில்) இன்னும் சொல்ல முற்படுகிறேன். நான் இசையைப் பற்றி பேசினால், உமையாள்புரம் சிவராமன், பாலக்காடு மணி ஐயர், பாலக்காடு ரகு, டி.கே மூர்த்தி, ‘விக்கு’ விநாயகராம், சிவமணி, ஜாக்கிர் ஹ¤சேன், அல்லா ரக்கா, ஸ்வப்பன் சௌத்ரி போன்றவர்கள் பெயர் அடிக்கடி வரும்.
Music
இன்றைய தெரிவாக வருவது தாளவாத்தியக் கருவியை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட நவ இசை. 1980களில் டெட்ராய்ட் நகரைச் சுற்றிய இடங்களில் தோன்றிய டெக்னோ எனப்படும் எலெக்ட்ரானிக் கருவிகளை அடிப்படையாகக் கொண்ட இசை புதிதாக உருவெடுத்தது. பின்னர் இது Tangerine Dream, Kraftwerk போன்ற குழுக்களின் மூலம் ஜெர்மனியில் வேர் கொண்டது. பின்னர் இந்த இயக்கம் மெதுவாகத் தொய்வடைந்து போய்விட்டது. இன்றைய தெரிவான இசையில் ஹிந்துஸ்தானி தாளங்களும், பாஸ் கிடாரும், டெக்னோ இசையும் இணைந்துவருகின்றன. வளம் மிக்க இந்திய தாளவாத்தியங்களை எலெக்ட்ரானிக் சிந்தஸைஸர்களுடன் இணைப்பது நான் அறிந்தவகையில் இதுதான் முதல் முயற்சி.
ஹிந்துஸ்தானி தாளவாத்தியக் கலைஞர் ஜாக்கிர் ஹ¤சேன் உலக அளவில் பல முன்னணி இசைக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். பாரம்பரிய இந்திய இசையை உல அரங்கிற்கு எடுத்துச் சென்றவர்களில், ரவி ஷங்கர், எல் சங்கர், எல் சுப்ரமணியம், விக்கு விநாயகராம், திர்லோக் குர்து இவர்களுடன் ஜாக்கிர் முக்கியமானவர்.
இங்கே கர்ஷ் காலேயின் ட்ரம்ஸ், ஜாக்கிர் தப்லா இவற்றுடன் இணைந்து முக்கோணத்தின் மூன்றாவது பக்கமாக வருவது பில் லாஸ்வெல்லின் பாஸ் கிட்டார் இசை மற்றும் எலெக்ட்ரானிக் இசைக் கலவை. பெரும்பாலான டெக்னோ இசைகளில் ஒருவித மந்தத் தன்மை இருக்கும். தப்லா பீட் ஸயன்ஸின் இசைத்தொகுப்புகளில் தப்லாவின் அற்புதமான உயிரோட்டம் அதை முறியடித்து, டெக்னோ ஓசைகளுக்கு ஒருவித வானாந்திர சூழலைத் தர அதன் முன்னே தாளவாத்தியங்கள் வனதேவதையின் ஆட்டத்தைப் போல உக்கிரம் காட்டுகின்றன (குறிப்பாக Triangular Objects இசையின் இறுதி ஒரு நிமிடத்தைச் சொல்லலாம்). தப்லா பீட் ஸயன்ஸ் குழுவில் ஜாக்கிரைத் தவிர இந்தியாவின் முன்னணி ஜாஸ் இசைக் கலைஞர் திர்லோக் குர்து, உஸ்தாத் சுல்தான் கான் போன்றவர்களும் தப்லா வாசிக்கிறார்கள். பொதுவில் ட்ரம்ஸ் வாசிக்கும் கர்ஷ் காலே கூட சில சமயங்களில் தப்லாவில் இணைந்துகொள்வது உண்டு. இந்தக் குழுவை உருவாக்கியவர் பில் லாஸ்வெல். இவர் டெக்னோ ஜாஸ், பங்க் மற்றும் ஹிப்-ஹாப் இசை உலகில் மிகவும் பிரபலமானவர். இதற்கு வெளியிலும், பீட்டர் கப்ரியேல், கார்லோஸ் ஸண்டானா, மிக் ஜாகர் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். இருந்தபோதும் இவருடைய துவக்கம் டெட்ராய்ட் வட்டார டெக்னோ இசைதான். அந்த டெக்னோ ஜாஸ் இசையை பாரம்பரியம் மிக்க இந்திய தாளவாத்தியங்களுடன் இணைப்பதில் நல்ல வெற்றி கண்டிருக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. இந்தக் குழுவின் முக்கியமான இசைத்தட்டு Live in Stern Grove அதில் இவர்களுடன் ஆப்பிரிக்கப் இசைக் கலைஞர்களும் இணைந்திருக்கிறார்கள். இதிலிருந்து ஒரு தெரிவை இன்னொரு நாளில் இட முயற்சிக்கிறேன்.
முதலில் பதிப்பிக்கப்பட்டது : 27 நவம்பர் 2004