February 23, 2023 in இந்தியா by வெங்கட்ரமணன்4 minutes
தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்காக இதுபோன்ற ஒரு வார்த்தை விளையாட்டை வடிவமைத்தால் என்ன என்று தோன்றியது. மனதில் தோன்றியவற்றைப் பட்டியலிட்டேன். இது கடுமையான சிற்றிதழ் வட்டாரக் கூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். அதே விதிகள்தான்; வார்த்தைகளின் பட்டியல்தான் மாறுகிறது.
சில நாட்களுக்கு முன்னால் இந்திய அணுசகதித் துறை (அது என்னமோ தெரியவில்லை எழுதும்போதெல்லாம், அணுசகதித் துறை என்றே விழுகிறது. என்னுடைய விசைப்பலகைக்கு அசது (இதுகூட கிட்டத்தட்ட அசடு போலத்தான் இருக்கிறது) வின் உண்மையான சொரூபம் தெரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.) பற்றி எழுதினேன்.
இன்றைக்கு நான் வேலை பார்த்த பொழுது நடந்த ஒரு சுவாரசியாமான சம்பவம் பற்றி; அது 1996. இந்தோர் Centre for Advanced Technology (We used to fondly call it as Centre for Adverse Technology)-ல் ஒரு உத்தரவு வந்தது. அன்று முதல் வெளியிலிருந்து பணமாகக் கொடுத்து வாங்கப்படும் பொருள்களை ஆய்வகத்தின் உள்ளே எடுத்துவரும் பொழுது, வாயிற்காப்போனிடம் திறந்து காட்டிவிட்டு வரவேண்டும். அண்ணார், அதற்கான இரசீதில் பொருள் உள்ளே எடுத்துவரப்பட்டது என்று இலச்சினை இட்டுத் தருவார். அப்படி இல்லையென்றால், நீங்கள் சமர்ப்பிக்கும் இரசீது எடுத்துக் கொள்ளப்படாது (நீங்கள் செலவழித்த கைக்காசு திரும்பவராது).
நீங்கள் ஏன் கைக்காசை செலவழிக்க வேண்டும்? ஆய்வகத்தில் பல சமயங்களில் சிறிய பொருள் ஒன்று இல்லாமல் (உதாரணமாக, நுண்ணோக்கியில் காமெராவிற்குத் தேவையான கருப்பு-வெளுப்பு படச்சுருள்) வேலை நின்று போகும். பொதுவாக மையத்தின் கிடங்கில் இதுபோன்ற சமாச்சாரங்களை வாங்கி வைத்திருப்பார்கள். குழுத்தலைவர் அனுமதியுடன் அங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம். இது கொள்கையளவில்தான்; பெரும்பாலான சமயங்களில் தேவையானவை இருக்காது. எனவே, மதிய உணவு இடைவேளை அல்லது இரவு நேரங்களில் நாங்கள் கடைக்குச் சென்று கைக்காசைச் செலவழித்து வாங்கி வருவோம். இரசீதை குழுத்தலைவர் அனுமதிக்க, கணக்குப் பிரிவில் சமர்ப்பிக்கப்படும். பின்னர் அது கிடங்கு மேலாளருக்குப் போகும், அவர் “ஆமாம், அந்தச் சாமான் அன்றைய தினம் கிடங்கில் இருக்கவில்லை” என்று சான்றிதழ் கொடுத்த பின்னர், அது திரும்ப கணக்குப் பிரிவுக்குப் போய், அவர்கள் அதற்குரிய காசோலையைத் தயாரித்து, குழுத்தலைவருக்கு அனுப்புவர்கள். அவர், அதைப் பெற்றுக்கொள்ள அவருடைய அறைக்கு அழைத்து என்னமோ எங்களுக்குப் பெரிய உபகாரம் செய்வதைப் போல கொடுப்பார். சமயத்தில் இந்த பெரிய உபகாரத்தை அவர் செய்வதை எல்லோருக்கும் தெரியவேண்டும் என்பதற்காக ஆய்வகத்தின் நடுவில் நின்று “அரே, வெங்கட், மே ஆப்கோ பைஸா தேதூங்” என்று ஏதோ பிச்சைக்காசு கொடுப்பதைப்போல பறைசாற்றுவார். இந்த அவமானமெல்லாம் வேலை தடையில்லாமல் நடக்க வேண்டும் என்பதற்காகக் பொறுத்துக் கொள்வோம்.
அது அரசாங்க அலுவலகம். எனவே, ஊழல் இல்லாமல் இருக்க முடியுமா? வேலை செய்யும் பலர், வெளியில் கடைகளில் வெற்று இரசீதைப் பெற்றுவந்து, துறைத்தலைவர்களின் கையொப்பத்தைப் பெற்று காசாக்கிக் கொள்வார்கள் (சில தலைகளுக்கும் அதில் பங்குண்டு). இதைத் தடுக்கவேண்டும் என்று செய்த முடிவில்தான், உள்ளே வரும் பொருள்களைக் காவலரிடம் காட்டி அவர் இரசீதின் பின்னால் உள்ளே பொருள் எடுத்து வந்ததாக சான்றளிக்க வேண்டும் என்று விதி மாற்றப்பட்டது.
இதை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் ஆள் நான்தான்.
இம்மாதிரி அவசரச் செலவுக்கு ஒரு உச்ச வரம்பு உண்டு; ஐம்பது ரூபாய். அதற்குமேல் செலவு செய்தால் செல்லாது, அப்படிப்பட்ட பொருள்கள் தேவையான பட்சத்தில் எங்களுக்கு இரண்டு வழிகள்தான் உண்டு. ஒன்று அது வேறு எந்த ஆய்வகத்தில் இருக்கும் என்று கண்டுபிடித்து அங்கு போய் நாங்கள் கிடங்கு வழியாக வரவழைக்கும் வரை இரவல் பெற்று வருவது. அது சாத்தியமில்லாத நிலையில் - காத்திருப்பது. இந்த இரண்டாம் வழிதான் மூன்றில் இரண்டு பங்கு அசது பணியாளர்களின் தாரக மந்திரம்.
(இதே நிலையில் நான் ஆராய்ச்சி மாணவனாக ஐஐஎஸ்ஸி பெங்களூரில் இருந்தபோது எங்களுக்கு வேறு வழிகளும் உண்டு. அங்கு கைச்செலவு உச்சவரம்பு மாணவர்களுக்கு நூறு ரூபாய், பேராசிரியர்களுக்கு ஐநூறு ரூபாய், எனவே பெரும்பாலான அவசரங்கள் எளிதில் சமாளிக்கப்படும். ஆசிரியர் சட்டையிலிருந்து நூறு ரூபாய், மாணவர்கள் ஒவ்வொருவரும் நூறு ரூபாய் (ஆய்வகத்தில் ஐந்து மாணவர்கள்), இதைத் தவிர நட்புள்ள பிற ஆசிரியர்கள் நான்கு பேர்களிடமிருந்து இரண்டாயிரம் வரை பெயரும். இப்படி அவசரகால உச்சவரம்பை நாங்களாகவே, மூவாயிரம் ரூபாய்கள் வரை உயர்திக் கொள்ள முடியும். செலவழித்த இரண்டாம் நாளே கணக்குப் பிரிவிலிருந்து திரும்பப் பணம் வந்துவிடும்).
அசது பெரும்பாலும் தன்னுடைய ஊழியர்களை நம்புவதில்லை. எனவே, சராசரி அசது ஊழியரும் அதற்கேற்றபடி நடந்து கொள்ளுவார்.
நான் ஏன் எதிர்த்தேன் என்ற விஷயத்திற்கு வருகிறேன். இப்படி மேலதிக விதிகளை விதிப்பதால் தடைபடப்போவது ஆய்வக வேலைகள்தான். அதாவது, நான் வாங்கிவரும் சாமானை அடையாளம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் (கட்டாயம் முடியாது, ஏனென்றால் அசது-யில் வாயிற்காப்போனாக வேலைகிடைக்க நீங்கள் எட்டாம் வகுப்பிற்கு மேல் படித்திருக்கக் கூடாது. அப்படி எட்டாம் வகுப்பைக் கோட்டை விட்டவரால் ஆய்வுக்காக நாங்கள் வாங்கிவரும் பொருள்களை எப்படி அடையாளம் கண்டுபிடிக்க முடியும்). இது மீண்டும் வரிசையை நீட்டிக்கும், எனவே, நாங்கள் கைக்காசு செலவு செய்து வேலையை நகர்த்துவைத் தவிர்ப்போம். இது பொதுவில் அசது-க்கு நல்லதில்லை.
மறுபுறம். பொய் சொல்லும் ஊழியர்களுக்கு இது மிகவும் வசதியாகப் போய்விடும். அவர்கள் கட்டாயம் காவல்காரர்களையும் தங்கள் விளையாட்டில் சேர்த்துக் கொள்வார்கள். இப்பொழுது காவல்காரர்கள் பொருள் உள்ளே வந்தது என்று முத்திரை குத்துவதால் அவர்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் இருக்காது (நான் வசித்த வீட்டின் சொந்தக்காரர் இதுபோன்ற விஷயங்களில் கில்லாடி, அவர் சொன்னது “இனிமேல் பங்கு என்னுடைய அதிகாரிக்குத் தரவேண்டியதில்லை, காவல்காரனுக்குக் கொடுத்தால் போதும்.”
இதை நான் சொன்னபொழுது அங்கே ஒரு பூகம்பமே வெடித்தது. நான் என்னமோ விதிகளை உடைப்பவன் என்றும், திருட்டுக்குத் துணை போகிறவன் என்றும், குற்றப்பத்திரிக்கைகள் வந்தன. நானும் சளைக்காமல் இதுபோன்ற விதிகளில் திருட்டுக்கு எப்படி எளிதாக வித்திடும் என்று வாதிட்டேன். என்னுடைய பழைய ஐஐஎஸ்ஸி அனுபவங்களையும் அவை எப்படியெல்லாம் வேலைத்திறனை அதிகரிக்கும் என்றும் கூறிப்பார்த்தேன். ஐஐஎஸ்ஸியில் காவல் கிடையாது, உள்ளே வரும் வெளியே செல்லும் பொருட்களை யாரும் பரிசோதனை செய்யமாட்டார்கள். ஆனால், செலவிடப்படும் ரூபாய்க்கு ஐஐஎஸ்ஸியில் கிடைக்கும் ஆதாயத்தில் (ஆராய்ச்சித் திறமைகளில்) பத்தில் ஒரு பங்குகூட அசது-யில் கிடையாது.
ஐஐஎஸ்ஸிஐ முன்னுதாரணமாக எடுத்துப் பேசப்போக வாதம் மிகவும் சூடுபிடித்துவிட்டது. பல பெருந்தலைகள் பைத்தியம் பிடித்ததுபோல் கத்தத் தொடங்கினார்கள். அந்தநிலையில் எப்படி புதிய விதிகளுக்களுக்கு முற்றாக உட்பட்டு எப்படி ஒருவரால் திருடமுடியும் என்று விளக்கத் தொடங்கினேன்.
நான் ஒரு ரூபாய்க்கு ஒரு மின்தடை (Resistor) வாங்கிவிட்டு அதைக்காட்டி இது ஐசி (IC Chip) என்று சொன்னால் காவலனுக்குத் தெரியாது. தெரியக்கூடாது, ஏனென்றால் விதிப்படி விஷயம் தெரிந்தவர்கள் (படித்தவர்கள்) அசது-யில் காவலனாக வேலைபார்க்க முடியாது.
அதற்கும் மேல் ஒரு படி போய் நான் ஒரு வெற்று புகைப்பட ·பிலிம் பெட்டியைக் கொண்டுவந்தால் அவரால் ஒன்றும் செய்யமுடியாது. அதைத் திறக்க அவருக்கு உரிமையில்லை (திறந்தால் படச்சுருள் வீணாகப்போய்விடும்), திறக்காவிட்டால் அதனுள் நல்ல படச்சுருள் இருக்கிறது என்று ஒப்புக்கொண்டாக வேண்டும். (படக்கடைகளில் இதுபோல பழைய அலுமினிய டப்பாக்கள் நிறைய கிடைக்கும்). இந்த வாதம் நாங்கள் பாடத்தில் படித்ததுதான் இதற்கு ஷ்ரோடிங்கரின் பூனை (Schrodinger’s Cat) என்று பெயர்.
ஒட்டுமொத்தமாகப் பெருந்தலைகள் என்னைப் பார்த்து “நீ முதல்தர திருடனைப்போல யோசிக்கிறாய். இதிலெல்லாம் உனக்கு நல்ல அனுபவம் இருக்கும்போலிருக்கிறதே!” என்று ஏளனம் செய்தார்கள். நானும் சளைக்காமல் “முன்பெல்லாம் தெரியாது. திருடர் கூட்டத்தில் சேர்ந்தால், இதெல்லாம் எளிதாகப் பிடிபடுகிறது” என்று சொல்லிவைத்தேன். உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை, என்னுடைய அணுசக்தி வேலைக்காலம் அதிகநாள் நீடிக்கவில்லை.
முதலில் பதிப்பித்தது 27 அக்டோபர் 2003 Image courtesy: Wikimedia Commons, under GNU Free Documentation License, Version 1.2