February 7, 2023 in நகைச்சுவை by வெங்கட்ரமணன்3 minutes
தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்காக இதுபோன்ற ஒரு வார்த்தை விளையாட்டை வடிவமைத்தால் என்ன என்று தோன்றியது. மனதில் தோன்றியவற்றைப் பட்டியலிட்டேன். இது கடுமையான சிற்றிதழ் வட்டாரக் கூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். அதே விதிகள்தான்; வார்த்தைகளின் பட்டியல்தான் மாறுகிறது.
இவர்கள் பம்மாத்துக்கு ஒரு முடிவே கிடையாது. வாரம் தோறும் திங்கட்கிழமை காலையில் ஒன்றரை மணி நேரம் மார்க்கெட்டிங்க் கூட்டம். பல சமயங்களில் வேலைகளைத் தவிர்த்துவிட்டு இந்த இரங்கல் கூட்டத்திற்குப் போயாக வேண்டும். போகவில்லை என்றால் தெய்வ குற்றம். சக பிரிவினர்களுடன் இணக்கம் காட்டுவதில்லை என்று குற்றம் சாட்டுவார்கள். அதாவது கல்யாணத்தை தவறவிட்டாலும் விடலாம், கருமாதியை விடக்கூடாது. இந்தக் கூட்டத்தில் பெரும்பாலும் இவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்; நாங்கள் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். இதைக் கேட்டுக் கொண்டிருப்பது அப்படியொன்றும் எளிதான செயல் இல்லை. திரும்பத்திரும்ப ஒரே மாதிரியான வார்த்தைகள் வந்து விழும். அதே வார்த்தைகளை மாற்றி மாற்றிப் போட்டு எந்தவிதமான அர்த்தமும் இல்லாமல் ஒரு மணி நேரத்திற்குக் கதைப்பார்கள்.
இணையத்தில் Bullshit Bingo என்று ஒரு வார்த்தை விளையாட்டு இருக்கிறது. இத்தகைய சந்தை அலசல்கள் இன்னபிற நிர்வாகக் கூட்டங்களின்போது தூக்கம் வராமல் இருப்பதற்காக ஒரு புண்ணியவான் உருவாக்கிய விளையாட்டு இது. இதை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விளையாட முடியும். கூட்டத்திற்குப் போகும்போது ஒரு தாளில் கீழ்க்கண்ட வார்த்தைகளை எழுதி எடுத்துச் செல்ல வேண்டும்;
bottomline, synergy, revisit, paradigm, bandwidth, hardball, value-added, value-driven, proactive, win-win, think outside the box, out of the loop, strategic fit, client focus, … மார்க்கெட்டிங் ஆசாமிகள் பேசும்போது உற்றுக் கேட்க வேண்டும், அவர்கள் இந்த வார்த்தைகளைச் சொன்னதும் தாளில் இருக்கும் பட்டியலில் இருந்து அதை அடித்து விடவேண்டும். இப்படியாக முதல் பத்து வார்த்தைகளை யார் கண்டுபிடிக்கிறார்களோ அவர்கள் இரண்டு கைகளையும் இரகசியமாக உயர்த்த வேண்டும், அல்லது எழுந்து நின்று கால்சட்டையை சரி செய்ய வேண்டும். அவரே அன்றைய கூட்டத்தில் வெற்றியாளர். இதை இன்னும் சுவாரசியமாக்க பணப் பரிசுகளை வைத்துக்கொள்ளலாம். (இதில் இன்னொரு ஆதாயமும் இருக்கிறது, மார்க்கெட்டிங்க் கூட்டங்களால் பைசா பிரயோசனமில்லை என்று யாரும் சொல்லிவிட முடியாது).
சென்ற வாரம் மார்க்கெட்டிங்க் கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது, தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்காக இதுபோன்ற ஒரு வார்த்தை விளையாட்டை வடிவமைத்தால் என்ன என்று தோன்றியது. அடுத்த மாதத்திற்கான மார்க்கெட்டிங்க் இலக்கு பற்றி அவர்கள் கொடுத்திருந்த தாளில் நிறையவே இடம் இருந்தது. மனதில் தோன்றியவற்றைப் பட்டியலிட்டேன். இது கடுமையான சிற்றிதழ் வட்டாரக் கூட்டங்களுக்கு மாத்திரமே பொருந்தும். அதே விதிகள்தான்; வார்த்தைகளின் பட்டியல்தான் மாறுகிறது. குறிக்க வேண்டிய வார்த்தைகள்;
விழுமியம், விகசிப்பு, விந்நியாசம், சொல்லாடல், புனைவோட்டம், அனுபவ நெருக்கம், ஒழுங்கமைவு, விவரனை உத்தி, படைப்பூக்கம், சூட்சுமங்கள், மறைபொருள், சார்நிலைகள், ஒலிக்குறியீடு, சாத்தியப்பாடுகள், படிமம், குறியீடு, உள்வாங்கல், பிரதிபலிப்பு, விரவிக்கிடத்தல், கட்டுடைப்பு, பிரக்ஞாபூர்வம், உயிர்ப்பு நிலை, மொழிமாற்றுத் தன்மை, உதிரிப்படிமங்கள், யதார்த்த தள நீட்சிப்பு, வார்த்தைப் பிரயோகம், இளகல், பன்முக வாசிப்பு, அர்த்தச் செறிவு, பரீட்ச்சார்த்த உத்தி, பரிமாணம், பரிணாமம், முரணியக்கம், பூடகம், புறவயம், நிகழ்தொடர்வு, ஒற்றைப்படை, வடிவநேர்த்தி, தட்டையானது, செய்நேர்த்தி.
இதே போல ஒவ்வொரு கூட்டங்களுக்கும் செல்வதற்கு முன்னால் தகுந்த வார்த்தைத் தொகுப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம். உதாரணமாக அரசியல் கூட்டங்களுக்கு, … செல்வாக்கு, இலட்சியம், … தொடங்கி… சோமாறி, பேமானி என்ற வகையில் பட்டியல் இருக்கலாம். விளையாட்டு உத்திகளையும் சற்றே மாற்றிக் கொண்டால் சுவாரசியமாக இருக்கும். அரசியல் கூட்டங்களில் முதல் பத்து வார்த்தைகளைக் கண்டுபிடிப்பவர் உடனடியாக அடுத்தவரின் வேட்டியை உருவிக் கழுத்தில் போட்டுக் கொள்ளலாம்.
முதலில் பதிப்பிக்கப்பட்டது: 28 செப்டம்பர் 2003