மிலன் குந்தெரா

July 16, 2023 in இலக்கியம் by வெங்கட்ரமணன்1 minute

குந்தெரா எந்த ஒரு சித்தாந்ததையும்விட கலையே உன்னதமானதும் நிரந்தரமானதுமாகும் என நம்பினார். அதை நிறுவத் தன் எழுத்துக்களின் வழியே அயராது உழைத்தார்.

kundera
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படும் மிலன் குந்தெரா ஜூலை 11, 2023 ஆம் ஆண்டு தன் 94-ஆம் வயதில் காலமானார். செக்கோஸ்லாவாக்கிய நாட்டில் பிறந்த குந்தெரா எந்த ஒரு சித்தாந்ததையும்விட கலையே உன்னதமானதும் நிரந்தரமானதுமாகும் என நம்பினார். அதை நிறுவத் தன் எழுத்துக்களின் வழியே அயராது உழைத்தார்.

அந்த நாட்களின் எல்லா இளைஞர்களையும் போலவே குந்தெரா தனது பதினெட்டாவது வயதில் கம்யூனிஸக் கட்சியில் சேர்ந்தார். நாஸிசத்தையும் ஹோலோகாஸ்டையும் எதிர்க்கக் கம்யூனிஸமே அவருக்குச் சிறந்த வழியாகத் தோன்றியது. அந்த நாட்களில் “கம்யூனிஸம் எனக்கு சர்ரியஸிஸக் கலைகளைப் போல, ஸ்ட்ராவின்ஸிகியின் செவ்விசையைப் போல அற்புதமானதாகத் தெரிகிறது” என்று புளகாங்கிதப்பட்டார். பின்னர் செக்கோஸ்லாவாக்கியா கம்யூனிஸ நாடாகவும் சோவியத்தின் கைப்பாவையாகவும் மாறிப்போக, அவருடைய நம்பிக்கைகள் நீர்த்துப்போயின. ஐம்பதுகளில் கட்சி எதிர்ப்புக்காக கம்யூனிஸ்ட்கள் அவரைத் தம்மிடமிருந்து விலக்கினார்கள். தொடர்ந்து அவருடைய எழுத்துக்கள் கம்யூனிஸ நாடுகளில் தடைசெய்யப்பட்டன. 1968-ல் நடந்த ப்ராஹ் வசந்தம் எழுச்சியின்போது பிற முன்னணி எழுத்தாளர்களுடன் இணைந்து தீவிர அரசு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். பின்னர் நிரந்தரமாக பிரான்ஸ் நாட்டுக்குக் குடியேறினார்.

1967-ல் எழுதப்பட்ட ‘The Joker’ நாவல் அடுத்த வருடமே தடைசெய்யப்பட்டது. அதன் பின்னர் அவருடைய படைப்புகள் எல்லாமே பிரான்ஸிலிருந்துதான் வெளியாயின. அவருடைய மிகப் பிரபலமான ‘The Unbrearable Lightness of Being’ நாவல் 1982-ல் எழுதப்பட்டு 1984-ல் பிரசூரமானது. அந்த நாவல் உடனடியாக உலக அளவிலான கவனிப்பைப் பெற்றது. 1987-ல் பிலிப் கௌஃப்மானால் திரைப்படமானத் தயாரிக்கப்பட்டு பெருவெற்றி பெற்றது. (இந்தத் திரைப்படத்தைப் பற்றிய என் பழைய விமர்சனம்). Life is Elsewhere, The Book of Laughter and Forgetting, Ignorance The Festival of Insignificance இவருடைய பிற நூல்கள்.

ஐரோப்பாவின் ஒன்றுபட்ட கலாச்சார அடையாளத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கைக் கொண்டவராகக் குந்தெரா இருந்தார். அவரைப் பொருத்தவரை அந்த அடையாளம் நாடுகளின் எல்லைகளைத் தாண்டி காலாச்சார ஒற்றுமையால் இணைந்தது. இதையே நீட்டித்துக் கலாசாரமே உலகை ஒருங்கிணைக்கும் மாபெரும் சக்தி என்று அவர் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டிருந்தார்.