September 16, 2025 in அறிவியல் by வெங்கட்ரமணன்5 minutes
மின்னூல்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவர்களும், கேலி செய்பவர்களும் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து போகிறார்கள். அதன் எதிர்காலம் 17 அங்குலத் திரைகளில் இல்லை. அது கைக்கணினிகளில் இருக்கிறது.
இப்பொழுது தமிழில்(தமிழிலும்) மின்புத்தகங்கள் வரத்தொடங்கிவிட்டன. புத்தகங்களை எழுதுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். அவர்களுக்கு இதனால் பல நன்மைகள் உண்டு. பதிப்புச் செலவு மிகவும் குறைவு, விரைவாகப் பதிப்பிக்கலாம், மின்புத்தகம் என்பதால் விநியோகச் செலவும் குறையும். இப்பொழுது தமிழ் புத்தகங்களுக்கு தமிழ்நாட்டுச் சந்தைக்கு இணையாக வெளிநாடுகளிலும் இருப்பதால் (டொராண்டோ நகரில் கிட்டத்தட்ட பத்து தமிழ்ப் புத்தக வியாபாரிகள் இருக்கிறார்கள்) அந்த வாசகர்களை இணையம் மூலம் எளிதாகச் சென்று அடையமுடியும். புத்தகங்களைக் கருப்பு-வெளுப்பு தவிர வண்ணங்களிலும் வெளியிடலாம். புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துவிடும் சங்கடம் கிடையாது. ஆசிரியருக்குத் திருத்தம் வேண்டுமானால் உடனடியாக இன்னொரு பதிப்பை வெளியிட்டுக் கொள்ளலாம். வாசகன் புத்தகத்தில் வார்த்தைகளை எளிதாகத் தேட முடியும். இப்படிப் பல சௌகரியங்கள்.
ஆனால் சௌகரியங்களைப் பார்க்க சிரமங்கள்தான் அதிகம் இருக்கின்றன. பத்துவரிக்கு எழுதப்பட்ட கடுதாசியாக இருந்தால் பேப்பரில் படிப்பதைக் கணினியில் படிப்பது எந்த விதத்திலும் சிரமமில்லை, ஆனால் ஒரு புத்தகத்தை தொடர்ச்சியாகத் திரையில் பார்த்துக் கொண்டிருப்பது முடியாத காரியம். ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலைக் கணினியில் படித்து முடித்தால் ஸ்பீல்பெர்க் படத்தில் வரும் ஈ.டி யைப் போல முழி வெளியே வருவது நிச்சயம். இன்னொரு கஷ்டம், தேவைப்பட்ட இடத்திற்கெல்லாம் புத்தகத்தை எடுத்துச் செல்லமுடியாது. தாம்பரத்திலிருந்து சேத்துப்பட்டு வரும்வரை இரயிலில் படிப்பதற்கு கணினிகள் சரிவராது. மடிக்கணினியானாலும் தடிக்கணியாக இருப்பதால் படுக்கையில் வைத்துக் கொண்டு படிக்க முடியாது என்கிறார் நண்பர் பத்ரி. இப்படிப் பல தொந்தரவுகள். இது சரிப்பட்டு வருமா?
ம்- என்றுதான் நான் சொல்வேன். ஏனென்றால் கடந்த மூன்று வருடங்களாக மின்புத்தகங்களைத் தொடர்ந்து படித்து வருபவன் நான்.
மின்னூல்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவர்களும், கேலி செய்பவர்களும் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து போகிறார்கள். அதன் எதிர்காலம் 17 அங்குலத் திரைகளில் இல்லை. அது கைக்கணினிகளில் இருக்கிறது. தற்சமயம் வாராவராம் படிக்கும் Time, Newsweek, தினசரி மேயும் The Newyork Times, Sydney Morning Herald, ஆவிபறக்கக் கிடைக்கும் BBC News, CNN என்று பல சஞ்சிகைகள் என்று பலவும் என் கைக்குள் சுருங்கிப் போய்விட்டன.
{
இந்த மின்னஞ்சலை கொஞ்சம் சுருக்கிக் கீழே போடவும்.
உங்கள் இன்டெர்னெட் எக்ஸ்ப்ளேரர்/நெட்ஸ்கேப் நாவிகேட்டர்/தமிழா/மோஸிலா உலாவியைத் திறக்கவும்.
திண்ணைப் பக்கம் http://www.thinnai.com/pal0417.html க்குச் செல்லவும்.
'கைப்பிடியளவு கணினி' என்ற என்னுடைய பழைய கட்டுரையைப் படித்திருக்கிறீர்களா?
( ஆம்: இந்த வளையத்தை விட்டு வெளியே செல்லவும்.
இல்லை: சிரமத்தைப் பார்க்காமல் அதை ஒருமுறை படிக்கவும்.
)
}
அந்தக் கட்டுரை மூன்றரை வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டது. அதில் சொல்லப்பட்டிருக்கும் கைக்கணினிச் சாத்தியங்கள் பல புழக்கத்துக்கு வந்துவிட்டன. ஆனால், மின்னூல் இன்னும் பிரபலமாகவில்லை.
கைக்கணினி-மின்புத்தகம் இணைப்பைப் பார்த்த உடனேயே புரிந்திருக்கும். மேலே சொல்லப்பட்ட (நிமிர்ந்து உட்கார்ந்து படித்தல், பயணம், சயனம்) ஆதார சந்தேகங்கள் எளிதாகத் தீர்க்கப்பட்டு விட்டது. சொல்லப்போனால் கைக்கணினி மின்புத்தகத்தில் சில கூடுதல் வசதிகளும் உண்டு, படுக்கை அறையின் விளக்கை அணைத்துவிட்டு, புத்தகத்தின் பின்னொளியைக் கூட்டிக்கொண்டு இருட்டில் படிக்க முடியும். அடுத்த பக்கத்தைத் திருப்பாமல் ஐந்து நிமிடங்களானால் (1) உங்களைத் தட்டியெழுப்பி மிண்டும் படிக்கச் சொல்ல (2) தானே சமர்த்தாக அணைந்துபோய் சக்தியைச் சேமிக்க புத்தகத்தை வடிவமைத்துக் கொள்ள முடியும்.
“தெவச மந்திரங்களை எல்லாம் நடு நடுவிலே போட்டு விசிப்பலகை சைஸ்க்கு எழுதப்பட்ட விஷ்ணுபுரத்தின்” காகிதப் பதிப்பைவிட கைக்கணினியின் பரிமாணங்கள் சிறியவை. மேற்குத் தொடர்ச்சிமலைக் காடுகளைவிட எலெக்ட்ரான்கள் விலை மிகவும் குறைவு. நான் ஏற்கனவே சொன்னதுபோல் பல வண்ணத்தில் அச்சிட(?) முடியும். புத்தகத்திற்குத் தேவையான படங்களை பிளாக் செய்து அச்சிடத் வேண்டியிருப்பதால் பல புத்தகங்கள் படங்களின்றி வருகின்றன (தொடர்கதையாக வந்த அனிதா இளம் மனைவியைப் புத்தகத்தில் படிப்பது அவ்வளவு சுவாரசியமில்லாமல் போனதற்குக் காரணம், ஜெயராஜின் கைவண்ணத்தில் தெரியவந்த இளம் மனைவியின் பரிமாணங்களை சிக்காமல் போனதுதான்). படங்களை இணைப்பதில் மின்புத்தகங்களில் எந்த விதமான சிரமமும் கிடையாது. கூடவே, இளம் மனைவிக்கு உயிருட்டிக் காட்டக்கூடிய சாத்தியங்களும் உண்டு. தேவையில்லாதவர்கள் படங்களை முழுவதுமாகத் தவிர்த்துவிட்டுப் படிக்கமுடியும். இதைப் போலவே, வாசகனுக்குத் தகுந்த எழுத்துக்களில், வண்ணங்களில், அளவுகளில் புத்தகத்தைப் படிக்க முடியும்.
சமீபத்திய மின்புத்தக நிரலிகளில் புத்தகத்தைக் குறுக்குவாட்டிலோ நெடுக்காகவோ தேவைக்கு ஏற்றபடி படிக்க வசதிகள் இருக்கின்றன. ஆசிரியரின் சலவைக் கணக்கு என்றால் நெடுக்காகப் படிக்க முடியும். எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் இடையில் வந்தால் பொத்தானைத் தட்டிவிட்டு கைக்கணினியைப் படுக்கைவாட்டில் வைத்துப் படிக்க முடியும். மீயுரை (hypertext) போன்ற சாத்தியங்களைப் பயன்படுத்தி, மேலே திண்ணைக்குத் திருப்பிவிட்டதைப் போன்று குட்டி சப்ரொட்டீன் போட்டு வாசகனை ஓரமாகத் தள்ளிக்கொண்டு போகமுடியும். சிறுகதைத் தொகுப்பாக இருந்தால், பதிப்பாளரின் சௌகரியப்படிக்குப் போகாமல் வாசகனுக்கு ஏற்றவரிசையில் கதைகளை மாற்றிக் கொள்ளமுடியும்.
இன்னும் சில சில்லரைச் சௌகரியங்களும் உண்டு. பென்சிலால் கோடுபோட்டு வைத்துக் கொள்பவர்கள் தேவையில்லாத சமயத்தில் கோடுகளை முற்றிலுமாக ஒளித்துவைத்துக் கொள்ளலாம். சுட்டுவிரலைப் புத்தகத்தில் செருகிக்கொண்டு எதிரில் இருப்பவரிடம் பேசத் தேவையில்லை. வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது, கூடவே கரையானால் சீரணிக்கப்படாது என்றும் சேர்த்துக் கொள்ளலாம் (கணினி வைரஸ்களை வசதியாக மறந்து விடுவோம்). சிவசங்கரியின் தொடர்கதையை ஒரே சமயத்தில் நாத்தனார், மன்னியிலிருந்து நண்டு சுண்டு வரை படிக்கமுடியும். ராஜவேர்வை என்ற வார்த்தை காவியத்தில் எத்தனை முறை வருகிறது என்று கண்டுபிடிப்பது போன்று சுவாரசியமில்லாத புத்தகங்களுடன் வாசகன் புதிய வழிகளில் உறவு கொள்ள முடியும்.
பதிப்புச் செலவு குறைவதால் ஆசிரியர்களுக்குப் பதிப்பூதியம் அதிகரிக்கச் சாத்தியம் உண்டு. திருட்டுத்தனமாக பத்துப் பிரதிகள் எடுக்க முடியாமல் செய்ய ஏற்றபடி சங்கேதங்கள் வந்துவிட்டன. விற்றவுடன் ராயல்டி தருகிறேன் என்று ஏழை எழுத்தாளர்களைப் பதிப்பாளர்கள் ஏமாற்றாமல், விற்பனை ஆனவுடன் வாசகனின் கடன் அட்டையிலிருந்து கழிக்கப்படும் தொகையில் மூன்றில் ஒருபங்கு ஆசிரியரின் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடுமாறு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம். பத்து டாலர் பணம் கட்டினால் இணையத்தின் வழியே எப்படிக் கதை எழுதுவது என்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள், கற்றுக்கொள்ள மின்னஞ்சல் அனுப்பும் வாசகனின் கணினியில் அவருடைய புத்தகங்கள் பத்து இருந்தால் மூன்று சதவீதம் கழிவு தரமுடியும்.
மின்னஞ்சல், இணையத்தின் வரவால் ஆங்கில மொழியில் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன. உதாரணமாக, உணர்ச்சியற்ற திரையில் நகைப்பைக் காட்ட வந்த :) குறி, இப்பொழுது பல இடங்களில் சர்வசாதாரணமாக உபயோகிக்கப்பட்டு, காற்புள்ளி, அரைப்புள்ளியுடன் சங்கமித்திருக்கிறது. இதே போல மெதுவாக இந்த ஊடகத்தின் சாத்தியங்களும் பரவிவருகின்றன. உதாரணமாக, நான் தினமும் The Newyork Times ஐ இறக்கிக் கொள்ளும்பொழுது அதில் வரும் உள்ளூர் தகவல்கள், விளையாட்டு, போன்றவற்றைத் தவிர்க்க முடிகிறது. எனவே வருங்காலத்தில் தொடர்கதை எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு ஆனந்தவிகடனில் சந்தாவைக் குறைக்கப் பேரம் பேசும் சாத்தியங்கள் உண்டு.
உரத்துப் பேசும் விருத்தங்களைக் கேலி செய்தும், புதுக்கவிதையின் மெளனத்தைச் சிலாகித்தும் தமிழில் நிறையவே பேசிவிட்டார்கள். தாளில் படிக்கும்பொழுது மௌனம் காட்டும் சாத்தியங்களைப் போலக் கவிஞனின் குரலின் இழைவிலும் கம்பீரத்திலும் உணர்த்தப்படும் சாத்தியங்கள் மின்னூடகத்தில் உருவெடுக்கும் (ஹரிகிருஷ்ணனின் குரலில் பாஞ்சாலி சபதத்தையும், மயில் விருத்தத்தையும் கேட்டிருக்கிறீர்களா?). அந்த நிலையில் ஒலிக்குறிப்புகள் மீண்டும் உயிர்த்தெழுந்து யாப்பருங்கலக்காரிகையைப் பலரும் படிக்கும் நிலை வரும். அதுபோலவே, ஒலி/படம்/சலனம்/மௌனம் போன்ற பல ஊடங்களின் சங்கமிப்பினால் வரும் புதிய சாத்தியங்களைக் கையாண்டு புதுவிதக் கலவைப் படைப்புகள் உருவெடுக்கும்.
பல தொழில்நுட்பச் சிக்கல்கள் இன்னும் தீர்க்கப்படவில்லை. உதாரணமாக, மின்புத்தகங்களை வாசகர்கள் பலவழிகளில் படிக்கச் சாத்தியம் உண்டு. மேசைக்கணினிகள், மடிக்கணினி, கைக்கணினி தவிர மின்னூல் படிப்பிகளும் உண்டு. வெளியிடப்படும் புத்தகம் எல்லாவற்றிலும் சீராக நல்ல முறையில் படிக்க ஏற்றதாக இருக்க வேண்டும். மைக்ரோஸாப்ட் வேர்ட்டில் எழுதி அடோப் அக்ரோபாட்டில் அச்சிடுவதெல்லாம் மின்புத்தகம் என்று சொல்பவர்களை ஏதாவது ஒரு சர்வதேசச் சட்டத்தில் பிடித்து உள்ளே போடவேண்டும். அச்சிடுவதை xml போன்ற குறியீடுகளில் வைத்துக் கொண்டு, வாங்கும் போது வாசகனுக்கு ஏற்ற வகையில் மாற்றித்தரும் வசதிகள் வரவேண்டும். அதற்கேற்ற வகையில் ஒரு தகுதரம் இன்னும் உருவாகவில்லை. இதுமாதிரி செய்தால் வருங்காலத்தில் வரும் புதிய கருவிகளிலும் படிக்க ஏற்றதாக இருக்கும்.
காடுகளை வெட்டி புத்தகங்களை அச்சிடும் முறை முழுதாக/உடனடியாக நின்று போய்விடுமா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் இதே ரீதியில் தொலைக்காட்சி வந்தவுடன் வானொலி/சினிமா, குறுவட்டு வந்தவுடன் ஒலிநாடா, எம்பி3 வந்தவுடன் குறுவட்டு என்று பல அல்பாயுசு ஜோசியங்களைக் கேட்டுச் சலித்துப் போயிருக்கிறோம். அச்சிடப்பட்ட புத்தகம் உங்கள் அலமாரியில் உட்கார்ந்து கொள்ள, கைக்கணினி உங்களுடன் படுக்கை, இரயில் வண்டி, விமானம், அலுவலகம் என்று பயனிக்கும் என்றுதான் தோன்றுகிறது. குறைபாடுகளை நீக்க வழிகள் இருப்பதாலும், புதிய சாத்தியங்களுக்கு இடமிருப்பதாலும் வருங்காலம் மின்புத்தகங்கள் பெருகும் என்று சத்தியம் பண்ணிச் சொல்லலாம்.
பி.கு: கடந்த சில வருடங்களாக நான் மின்னூல் வடிவில் படித்தவை (படித்து வருபவை)களில் சில;
முதலில் பதிப்பித்தது: 06 நவம்பர் 2003