பொய்யாய், வெறுங்கனவாய்ப் போனவன்

May 15, 2026 in ஆளுமை 5 minutes

கணேஷ் சுவாமிநாதன்

“ஏய், நீ குள்ளமா இருக்க, மொத பெஞ்சுல வந்து ஒக்காரு.” ஆண்களுக்கேயான பள்ளிகளில் மாத்திரமே அதுவரை படித்துவிட்டு முதன் முறையாக ‘இங்கிலீஷ் மீடியத்தில்’ சேர்ந்து, இருபாலரும் படிக்கும் வகுப்பிற்கு வந்திருக்கும் பதின்ம வயது மாணவனுக்கு, முதல் நாள் அளிக்கப்பட்ட அந்தக் கட்டளை எந்த அளவுக்கு அதிர்ச்சியையும், அவமானத்தையும் தந்திருக்கும் என்பதை எளிதில் ஊகிக்கமுடியும். நான் என் புத்தகப்பையைச் சுமந்துகொண்டு, அதைவிடப் பலமடங்கு கனமான வெறுப்புடன் இடைவழியில் நடந்து முதல் பெஞ்சில் போய் உட்கார்ந்தேன். என் வாழ்க்கையின் மிக முக்கியமான பேரதிருஷ்டம் அது. அதற்காககப் பதினோறாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் வி. வைத்தியநாதனுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவன்.

புத்தகங்களை வைத்துவிட்டு உட்கார்ந்த நொடியில் அடுத்த இருக்கையிலிருந்து ஒரு கரம் நீண்டது; “நான் கணேஷ்” அந்த கணேஷ்தான் இன்று காலை இறந்துபோனான்.

அன்று நீண்ட கரம் என்னைவிட்டு ஒருநாளும் அகலவில்லை. அதற்காக நாங்கள் தினசரி பேசிக்கொள்வோம் என்றில்லை. ஆனால் என் மனதில் அவனை நினைக்காத நாட்கள் மிகக் குறைவே; அவனும் அப்படித்தான் என்று எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். நான் இந்தியாவில் இருந்தபோது அவன் சுவிட்ஸர்லாந்திலும் பெல்ஜியத்திலும் இருந்தான். நான் இந்தியாவை விட்டுச் சென்ற நேரம், அவன் திரும்ப இந்தியாவிற்கு வந்துவிட்டான். இடைப்பட்ட காலங்களில் நேரடித் தொடர்புகளுக்குச் சாத்தியமில்லை. அதன் தேவையையும் நாங்கள் உணர்ந்ததில்லை. ஆனால் அதன்பின் ஒவ்வொரு முறையும் நான் இந்தியா போகும்போது அவனைச் சந்தித்திருக்கிறேன். ஒவ்வொரு சந்திப்பையும் என் வாழ்நாளுக்கான பெரும்நினைவுகளாக மனதில் தேக்கியிருக்கிறேன்.

+2 வகுப்பில் என் இலக்கு அவனை எட்டுவது அல்லது விஞ்சுவதுதான்; அது சாத்தியமில்லாதது என்று சில மாதங்களிலேயே தெரிந்தும், அந்த இலக்கை மூர்க்கத்துடன் துரத்தியிருக்கிறேன். கணக்கிலும், இயற்பியலிலும் அவனை எட்டிப் பிடிப்பது எனக்குச் சாத்தியமாகவில்லை. ஆனால் வேதியியலிலும், உயிரியலிலும் நான்தான், இதற்கு அவனுக்கு அந்தப் பாடங்களில் அதிக ஆர்வம் கிடையாது என்பதுதான் உண்மையான காரணம். “நான் இஞ்னியரிங் போவேன், நீ மெடிக்கல் சேரப்போகிறாய்” என்று சொல்வான். அதில் முதல்பாதி நிச்சயமான உண்மை என்று எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும்; மறுபாதி நான் சந்தேகப்பட்டதுபோலவே பொய்த்துப் போனது. ஆனால், பாடத்தில் மதிப்பெண் வாங்குவது எங்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. ஒருமுறை இயற்பியல் ஆசிரியர் பாடப்புத்தகத்தில் Van de Graaff generator படமும் விளக்கமும் தவறானவை என்று வகுப்பில் சொல்லிக்கொடுத்தார். அன்று மாலை புத்தகத்தில் சரியாகத்தான் இருக்கிறது என்று சொல்ல நான் அவன் வீட்டுக்கும் அதேநேரம் அதையே சொல்ல அவன் என் வீட்டுக்கும் போயிருக்கிறோம். அடுத்த சில வாரங்களுக்கு எங்கெங்கோ தேடித்தேடி Sears and Zemansky, Halliday and Resnick என்று ஒவ்வொரு புத்தமாகக் கொண்டுபோய் அவரிடம் வாதம் செய்திருக்கிறோம். ஒரு கட்டத்தில் நான் வரைந்தபடி படத்தை வரையாவிட்டால் உங்களுக்கு மார்க்கு கிடையாது என்று சொன்னார். பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வரும்போது நானும் அவனும் மார்க்கு கொடுக்காவிட்டால் பரவாயில்லை, சரியான படத்தைத்தான் வரையப்போகிறோம் என்று எங்களுக்குள் உறுதி எடுத்துக்கொண்டோம்; அடுத்த மாதத் தேர்வில் அப்படியே செய்து அவருக்கு எரிச்சலூட்டியிருக்கிறோம். பின் சில மாதஙக்ள் கழித்து அவர் புத்தகத்தில் இருக்கும் விளக்கம் சரிதான் என்று ஒத்துக்கொண்டார். பள்ளியில் படிக்கும்போது அவன் அக்காவின் கல்லூரிக் கணிதப்பாடங்களைச் செரித்துக் கொண்டிருந்தான். அவனுடன் சேர்திருந்ததால் அது புல்லுக்குமாக எனக்கும் பொசிநது கொண்டிருந்தது.

Ganesh Swaminathan
கணேஷ் சுவாமிநாதன்

அவன் கோயம்புத்தூருக்குப் மின்பொறியியல் படிக்கப்போனான். நான் கும்பகோணம் அரசுக் கல்லூரி இயற்பியலில் தேங்கிப்போனேன். ஒவ்வொருமுறை ஊருக்கு வரும்போதும் அடுத்த சில மணிக்குள் என் வீட்டு வாசலில் நிற்பான். ஒவ்வொரு முறையும் அவன் இயற்பியலையும் நான் மின்னணுவியலையும் சிலாகித்துப் பேசுவோம். எனக்கு உண்மையிலேயே மின்னணுவியல் மீது பெரிய ஈர்ப்பு இருந்தது. அவன் என்னைத் தேற்றுவதற்காகத்தான் என்னிடம் இயற்பியலைத் துதிபாடுவதாகத் தோன்றும். ஆனால் பல வருடங்கள் கழித்துதான் அவனுக்கு உண்மையாகவே பெரும் ஆர்வமுண்டு என்று எனக்குத் தெரியவந்தது. (அது என்னைத் தேற்றுவதற்காக என்று தொடங்கி, அவனில் வளர்ந்திருக்கக்கூடும் என்று நான் இப்போதும் நம்புகிறேன்.)

பின் நான் பெங்களூர் ஐஐஎஸ்ஸியில் ஆராய்ச்சியாளனாகச் சேர்ந்தேன். அதே நேரம் அவன் இந்தியத் தொலைபேசி நிறுவனத்தில் (Indian Telephone Industries) மின்னணுப் பொறியாளனாக வந்துசேர்ந்தான். என்னுடன் நேரம் கழிக்கலாம் என்பதற்காகவே ஐஐஎஸ்ஸியில் மாலைநேர வகுப்புகளில் சேர்ந்தான். வாரத்தில் மூன்று, நான்கு நாட்கள் தவறாமல் சந்திக்க முடிந்தது. அப்போது நான் என் சித்தி வீட்டிலும், அவன் அவனுடைய அத்தையுடனும் தங்கியிருந்தோம். இருவரும் ஒன்றாக அறை எடுக்கலாம், மேற்படிப்புக்காக அமெரிக்கா போகலாம் என்று திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருந்தோம். சற்றும் எதிர்பாராமல் அவனுக்குக் கிடைத்த வாய்ப்பினால் கணினித் துறைக்கு மாறினான். சில மாதங்களிலேயே அவன் சுவிட்சர்லாந்துக்கு அனுப்பப்பட்டான். சுவிஸ் ஏர்லைன்ஸில் பயணச்சீட்டு, சாமான் பொதிகள் நிர்வாகத்தை முதன்முறையாக கணினியாக்கம் செய்தது அவனுடைய குழு. தொடர்ந்து பெல்ஜியத்தில் SWIFT என்னும் வங்கிகளுக்கிடையேயான பணப்பரிமாற்றம் செய்யும் சங்கேத அமைப்புகளைச் செய்து முடித்தான். பல வருடங்களுக்குப் பின் இந்தியா திரும்பிவந்து சில நிறுவங்களில் முதன்மை நுட்பப் பணிகளில் இருந்து அந்த நிறுவனங்களின் வளர்ச்சிகளுக்கு முக்கிய காரணியாக இருந்தான். அவனுக்குள் எப்போதுமே ஒரு வாய்ப்பு மறுக்கப்பட்ட ஆசிரியர் குடிகொண்டிருந்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சக ஊழியர்களுக்கு சங்கேதப் பரிமாற்றம், செயற்கையறிவு, குவாண்டம் கணிப்பு, என்று பாடங்களைச் பயிற்றுவித்துக் கொண்டிருந்தான்.

சென்ற வருடம் அவன் முதன் முறையாகத் தனக்கு இரத்தம் தொடர்பான அரிதான நோய் வந்திருப்பதாகச் சொன்னான்; நான் நிலைகுலைந்து போனேன். தொடர்ந்து பலமுறை குறுகிய அவகாசத்தில் இரத்தப் பரிமாற்றம் தேவைப்படுகிறது என்றும், மிகவும் களைப்பாக இருக்கிறது என்றும் சொன்னான். ஆனால் அடுத்த சில நாட்களில் குவாண்டம் கம்ப்யூட்டர்களின் பிரகாசமாக எதிர்காலத்தைப் பற்றிய அவன் கனவுகளைக் கட்டுரையாக எழுதினான். இயற்பியலாளனான எனக்கு குவாண்டம் கணிப்பின் சாத்தியங்கள் குறித்த நம்பிக்கையின்மைகள் உண்டு, மின்னணு நுட்பனான அவனுக்கு அதைப்பற்றிய பெருங்கனவுகள் எளிதில் சாத்தியமாயின.

ஆகஸ்டில் தனக்கு வந்திருப்பது Aplastic Anemia என்று உறுதிப்படுத்தினான். வழக்கம்போல அது குறித்த மிரட்சியும், கூடவே அதைப் புரிந்துகொள்ளும் ஆர்வமும் அவன் குரலில் தொனித்தது. சென்றமுறை இந்தியா போனபோது பார்க்கமுடியவில்லை. அவனில் நோய் எதிர்ப்புத் திறன் குறைந்திருப்பதாகவும், மருத்துவர்கள் சந்திப்புகளைத் தவிர்க்கப் பரிந்துரைத்திருப்பதாகவும் சொன்னான். எனக்கும் அதுதான் சரியென்று தோன்றியது. படிப்பு முடித்த முப்பது ஆண்டுகளில் தினசரி பார்த்துக் கொண்டிருந்தோமா என்ன? இந்த பெப்ருவரியில் எலும்பு மஜ்ஞை மாற்றீடு (bone marrow transplant) நடந்தது. அதிருஷ்டவசமாக அவனுடைய தங்கையின் எலும்பு மஜ்ஜை அவனுக்குப் பொருந்தியது. சிகிச்சையில் இருக்கும்போது இந்த வருடம் வெளியான என் புத்தகத்தை அவனுக்கு அனுப்பினேன். அதிலிருக்கும் அறிவியல் அவனுக்கு ஊக்கம் தருவதாக இருக்கும் என்ற நம்பிக்கை. அந்தக் கட்டுரைகளைப் பற்றி அவனுடன் விவாதிக்க பெரும் ஆசையிருந்தது. அவன் உடல்தேறி வந்தபின் பேசிக்கொள்ளலாம் என்றிருந்தேன். வழக்கம்போல அவன் பெரும் நம்பிக்கைகளுடனும் கனவுகளுடனும் இருந்தான். மாற்றீட்டுச் சிகிச்சைக்குப் பிறகு, இரண்டு மாதங்களுக்கு முன்கூட, அவன் துவக்கப்போகும் புது ஏ.ஐ நிறுவனத்தில் எங்களுடைய இன்னொரு வகுப்புத் தோழன் கணபதியையும் சேரவேண்டும் என்று அழைத்தான். அது குறித்த பெருங்கனவுகளையும் செயல்திட்டங்களையும் அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது அவன் கண்களும் கரங்களும் எவ்வளவு விரிந்திருக்கும் என்பது எனக்குத் தெரியும். அவன் நோய் நீங்கி வந்தவுடன் பல தொழில்நுட்பங்களைக் குறித்து அவனுடன் ஆழமாக உரையாடி, முடிந்தால் அவற்றை யூட்யூப் வீடியோக்களாகவோ, ஒலிக்கோப்புகளாகவோ வெளியிட வேண்டும் என்று விரும்பியிருந்தேன்.

அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் எந்த அளவுக்கு நம்பிக்கையோ அதற்குச் சற்றும் குறையாத இறைநம்பிக்கையும் அவனுக்கிருந்தது. பிரபஞ்சம் முழுவதையும் கிருஷ்ணனின் லீலையாகத்தான் புரிந்துகொண்டான். இறைவனின் அளப்பறிய ஆற்றலையும் அளவில்லா பெருங்கருணையையும் கூட அவன் கணிததின் முடிவிலியைக் (infinity) கொண்டுதான் வரையறுப்பான். சக்தி சிவத்தில் பாதியென்றாலும் இருவரும் அறுதியில்லா வல்லமை கொண்டவர்கள்தான், ஏனெனில் முடிவிலியை எப்படிப் பங்கிட்டாலும் கிடைப்பது முடிவிலிதானே என்று சொல்வான். ஏன் தன் அம்மாவின் அதிதிறமைகளை ஒரு கணிதச் சமன்பாடாக வரையறுத்துப் புரிந்துகொள்ள முற்பட்டான். வயதாக ஆக, கணிதத்தையும் இயற்பியலையும் இறையைக் கொண்டு புரிந்துகொள்ளத் தலைப்பட்டான். இக்கணத்தில்கூட கிருஷ்ண பரமாத்மாவிடம் அவருடைய கணக்கு தவறானது என்று வாதித்துக்கொண்டிருப்பான் என்று ஊகிக்கமுடியும். எதையும் தீர்க்கமாகச் சோதிக்கும் அறிவியல் சிந்தனையும், எந்தக் கேள்வியும் இல்லாமல் முழுவதுமாக இறைவனிடம் சரணாகதியடையும் பக்குவமும் அவனுக்கு ஒருசேர வாய்த்திருந்தது. அவனை அறிந்த முதல் நாளிலிருந்து அவன் யாரிடமும் கோபித்துக் கொண்டதையோ, அதிர்ந்து பேசியதையோ நான் கண்டதில்லை. ஏன், யாருக்கும் மனதளவில்கூட தீங்கு நினையாதவன். அவனுக்கு அந்த நோய் வந்த நாளிலிருந்தே, ‘ஏன்? ஏன் இவனுக்கு?’ என்ற விரக்தியும் வேதனையும் என்னைத் துளைத்துக் கொண்டிருந்தன. அவனுக்கும் அதே உளைச்சல் இருந்திருக்கும் என்பது நிச்சயம். அவனுக்கு இழைக்கப்பட்டது பெரும் அநியாயம்.

என்னுடைய ஒவ்வொரு வளர்நிலையையும் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டவன்; நான் அவனுடைய சாதனைகளையும், அதற்கும் மேலாக அவற்றை சாதாரணமாகக் கடந்துபோகும் உளச்சமநிலையையும் கண்டு பரவசப்படுவேன். முன்னர் சொன்னதுபோல்தான், இவற்றையெல்லாம் நாங்கள் ஒருவருக்கொருவர் சொல்லிகொள்ளத் தேவையில்லை. ஒருவகையில் அது எங்கள் தலைமுறை வளர்க்கப்பட்ட விதம். கடந்த சில வருடங்களாக நிறைய எழுதத் தொடங்கினான். நான் வாசித்ததாகச் சொன்னால் மகிழ்ந்தான்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது என் இலக்கு அவனை எட்டுவதாகத்தான் துவங்கியது. பின் ஒரு நிலையில் என் பாதையும் அவனதும் வெகுவாகப் பிரிந்துபோக நாங்கள் மற்றவன் கடக்கும் மைல்கற்களை சுயசாதனைகளாகக் கொண்டாடிக்கொண்டோம். வாழ்நாள் முழுவதும் அறுதியான முடிவுகளுடன் தன் இலக்குகளை நோக்கித் தீர்க்கமாகப் பயணித்துக் கொண்டிருந்தவன், ஒரு நாள் அதிகாலை வெறுங்கனவாய்க் கலைந்து போயிருக்கிறான்.

நம்பிக்கையைத் தவிர வேறெதையும் அறியாதவன் கணேஷ். இறுதிநாள் வரை அறிவியலும் தொழில்நுட்பமும் மானுடத்தை மேம்படுத்தும் என்ற அசாத்திய நம்பிக்கையைக் கொண்டிருந்தான். அவனுக்கு மிகவும் தேவைப்பட்டபோது மருத்துவம் போதுமான அளவுக்கு வளர்ந்திருக்காமல் அவனை அநியாயமாகக் கைவிட்டுவிட்டது.