January 16, 2024 in சமூகம் by வே. வெங்கட்ரமணன்3 minutes
நினைவுகளைச் சுவையோடு சொல்லி நம்மையும் பின்னுக்கு இழுத்துச் செல்வதில் செல்வராஜ்-க்கு இணை தமிழ் வலைப்பதிவுலகில் யாரும் இல்லை. அவருடைய புண்ணியத்தில் நானும் கொஞ்சம் அசைபோடுகிறேன்.
பொங்கல் நினைவுகள்
நான் வளர்ந்தது முழுக்க தஞ்சை மாவட்டம். அறுவடைத் திருநா கொண்டாட்டம் அங்க கொஞ்சம் அமக்களமாகவே இருக்கும். எங்க ஊர்ப்பக்கம் போகிக்கு பழச எல்லாம் போட்டுக் கொளுத்தும் பழக்கம் கெடயாது. அதேமாரி தம்பட்டம் அடிக்கற வழக்கமெல்லாமும் இல்ல. இத நான் மொத தடவையா சென்னை வந்தப்பதான் பாத்துருக்கேன். செவுத்துல காவிப்பட்டை சுன்னாம்புப்பட்டை அடிப்போம். (ஒருக்கா அது தேர்தல் சமயம்; வெள்ள அடிச்சு காயுறதுக்குள்ள ‘பசுவும் கன்றும்’ அப்புடீன்னு யாரோ கிறுக்கிட்டுப் போனது இப்பயும் நெனச்சா ஆத்திரமா வருது)
மார்கழி முழுக்க வாசல்ல கோலம் போட்டாலும், போகியன்னிக்கு கொஞ்சம் அதிகமாவே இருக்கும். பசுஞ்சாணி போட்டு மொழுகின வாசல்தரைல கொஞ்சம்கூட எடமில்லாம சின்னதும் பெருசுமா கோலம் நெறஞ்சு கெடக்கும். ரொம்ப நாள் வரைக்கும் கோலத்துல கலர் போட்றதுக்கெல்லாம் எல பூதான் பயன்படுத்தினோம். (காஞ்ச வாதநாராயணன் எல பச்ச கலரு, மஞ்ச பொடி அரைக்குறச்ச சலிச்சு எடுத்த கப்பி மஞ்சளுக்கு, காஞ்ச டிசம்பர் பூவெல்லாம் ஊதா… அரிசி மாவுல மஞ்சளையும் சுண்ணாம்பையும் போட்டு ஆசிட்-பேஸ் ரசவாதத்துல பளிர்னு செவப்பு, …). அப்புறம் கொஞ்ச வருஷம் கழிச்சு எல்லா கலர்லயும் பிளாஸ்டிக் கவருல அடைச்சு கல் கோலமாவுன்னு மாறிப்போச்சு. போகியன்னிக்கு அம்மா சேமியா பாயசம், போளி, பருப்பு வடை தவறாம செய்வா. அது என்ன கட்டாயம்னு தெரியாது. ஆனா வருஷம் தவறாம இதுதான்.
போகியன்னிக்கு சந்தைக்குப் போய் கரும்பு வாங்கறது ஒரு முக்கியமான வேல. ஒரு கட்டுல பத்து கரும்பு இருக்கும் (இது சின்ன கட்டு. பெருசுல இருபது இருக்கும்). நல்ல தடியான கரும்பு, கணு தள்ளித்தள்ளி இருக்கெறமாதிரி பாத்து வாங்கறது முக்கியம். வாங்கி எப்பயாவது கெடைக்குற வாடகை சைக்கிள்ள வச்சு அண்ணா தள்ளிகிட்டு வருவான். நான் பின்னாடி ஒரு கை பிடிச்சுகிட்டு வரணும். நீளமா கரும்பு சைக்கிளுக்கும் மீறி தோகை முன்னாடி வழிஞ்சுகிட்டு ஆடிக்கிட்டே வர்றது நல்லா இருக்கும். இந்தக் கரும்பு ஒரு ருசின்னா, மார்கழி, தை மாசத்துல எங்க ஊர்லேந்து வடபாதிமங்கலம் சக்கர பாக்டரிக்கு ட்ராக்டர்லயும், லாரிலயும் ஆலைக்கரும்புங்கற வெள்ளைக் கரும்பு வேற ருசி. தெருவுல நம்ம பசங்க ட்ராக்டர் மேல ஏறி வேகமா போகுறச்ச கட்டை அசைச்சு உருவிப் போட்டுக்கிட்டே இருப்பாங்க, நாங்க பின்னாடி ஓடிஓடி பொறுக்கிக்கிட்டு வருவோம். பல இதுல வண்டி ஓட்றவருக்குத் தெரியறத்துக்குள்ள குதிச்சுக் கீழ எறங்குறதுலதான் சாமத்தியம்.
எல்லாருக்கும் பொங்கல்னா பொங்கல், கரும்பு தான் ஞாபகத்துக்கு வரும். எனக்கு பொங்கலுக்கு முக்கியமா நெனப்பு இருக்கறது வாழப்பழம். வருஷத்துல அன்னிக்கு ஒரு நாள்தான் கொலையோட வாழப்பழம் வாங்குவோம். பெரும்பாலும் அது பூவம்பழமாத்தான் இருக்கும். (சில சமயம் கற்பூரவள்ளி). பொங்கல் சமயத்துல ஊர் முழுக்க வாழப்பழம் பழுத்துக் கெடக்குங்கறதால வாத்தியார் வீட்டுக்கு எல்லாரும் ஒரு சீப்பு வாழப்பழமாவது கொடுப்பாங்க. சில பேர் கரும்பும் கொடுப்பாங்க. சில சமயம் நெல்லோட வரப்புல போட்டுருந்த பயருகூட வீட்டுக்கு வரும். எல்லாத்தையும் வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு தெரியாம வீடு வீடா போய்க் கொடுத்துட்டு வருவோம். பூவன், மொந்தம்பழம், தேன்கதளி, செவ்வாழ, பேயன் அப்புடீன்னு வகைவகையா பழம் வீட்டுல குவிஞ்சுப் போயிடும். போகவற உரிச்சு உள்ள தள்ளிக்கிட்டே இருப்போம். (கடங்கார தின்னுன்டே இருக்காதடா, பேதி பிச்சுக்கும்).
கரும்புக்கு அப்புறமா மஞ்சக் கொத்து, இஞ்சிக் கொத்து முக்கியம். அப்புறம் மத்த சாமான்லாம் அலஞ்சு திரிஞ்சு சேக்கனும். தும்பப்பூவு காலங்காத்தால பறிச்சுகிட்டு வந்துடுவோம், ஆவாரந்தழையெல்லாம் முழுத்தெருவுக்கும் மொத்தமா யாராவது ஒருத்தர் அலக்குப் போட்டு இழுத்துத் தருவாரு. வயக்காட்டுப் பக்கம் போனா பீளத்தழயும் கெடைக்கும் (செல்வராஜ்-க்கு - பீளத்தழ படம் போட்டுருக்கேன். இதுதானான்னு சரியான்னு சொல்லுங்க). ரொம்ப சின்ன வயசுல வருஷாவருஷம் புதுப்பானை வாங்கி பொங்க வச்சுக்கிட்டு இருந்தோம். அப்புறம் வெங்கலப்பானைன்னு ஆச்சு. மொதல்லலாம் வீட்டு வாசல்ல கோலத்து மேல கல்லு அடுப்பு கட்டி பானை ஏத்துவோம். அடுப்புக்கல்லுல காவிப்பட்டை சுண்ணாம்புப்பட்ட அடிப்போம். அடுப்புக்குப் பக்கத்துல பசுமாட்டு சாணில அருகம்புல்லு சொருகி வைச்சு, எருக்கம்பூ, தும்பப்பூ போட்டு புள்ளையார் பண்ணி தீபம் காட்டிட்டுத்தான் பொங்கப்பானை வைப்பாங்க. பானை கழுத்துல மஞ்ச கொத்து இஞ்சிக்கொத்து கட்டியிருக்கும். சக்கர பொங்கலோட வெண்பொங்கலும் உண்டு. பொங்கல் சமயத்துல காய்கறியும் நெறையா கடைக்குங்கறதால எல்லா காய்கறியும் போட்டு ஒரு கூட்டுக்குழம்பு வைப்பா அம்மா. அந்த ருசிக்கு ஈடு எதுவுமே கெடயாது. கொழம்பு இருக்கறதால தெகட்டாம சக்கர பொங்கல திங்கலாம்.
பழசு எல்லாம் கெடக்கட்டும் இன்னிக்கு. என் வீட்டுக்காரி காலைல ஆறரை மணிக்கு வேலைக்குப் போயாகனும். அதுனால எல்லாம் சாயந்தெரம்தான். வடதுருவக் குளிருக்குப் பயந்து சூரியன் நாலரைக்கெல்லாம் மலையேறிப்போய்விட்டான். கேஸ் அடுப்புல கண்ணாடி மூடி போட்ட பாத்தெரத்துல அரிசி கொதிக்க பக்கத்துல பிரஷர் குக்கர்ல பருப்பு, அப்புறம் கொஞ்சம் மைக்ரோவேவ். ஆனா என்ன அடுப்புல பொஙகல் பொங்குறப்ப பசங்க பொங்கலோ பொங்கல்ன்னு கத்தினப்ப என்னையும் அறியாம கண்ணுல தண்ணி வந்துடிச்சு.
இந்த வருஷம் பொங்கல் விசேஷம்தான். சின்னவன் வருண் பள்ளிக்கூடத்துல Festivals of Ethnic Cultures அப்படீங்கற தலைப்புல இன்னிக்கு பொங்கல் பத்தி முழு வகுப்புக்கும் சொல்லிக் கொடுத்துருக்கான். சும்மா சொல்லக்கூடாது இதுக்காக நெறையவே படிச்சான். கிறிஸ்துமஸ் லீவுலேந்து தயாரிப்பு. What are the differences between Rangoli and kOlam? ரீதியான தொடர் கேள்விகள். கொஞ்சம் கையால எழுதி, கொஞ்சம் பவர்பாயிண்ட், 2005-ல இந்தியா போனப்ப கொண்டாடின பொங்கல் படம் பெரியப்பாவை அனுப்பச் சொல்லி,…
அவனோட உழைப்புல நான் கத்துக்கிட்ட விஷயமும் உண்டு. உலகெங்கும் கொண்டாடப்படும் அறுவடை விழாக்களில் சிலவற்றின் பெயர்: Yam, Crop over, Kwanzaa, Mehregan, Tomat, Baisaki, Valencia, Tas, Marinnas, Min, Sukkah, Keshogatshu, Lughaassa,
முதலில் பதிப்பித்தது: 15 ஜனவரி 2008