பார்ஸி இடுகாட்டின் கழுகுகள்

April 25, 2026 in அறிவியல், இலக்கியம் 2 minutes

விழைந்ததும் விளைந்ததும் கட்டுரை - தொடர்பான புணைவு

நன்றி: விவேக் சுப்பிரமணியன்

பேராசிரியர் வெங்கட் எழுதிய “ஒளியிலிருந்து இருளுக்கு” புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறேன். விழைந்ததும் விளைந்ததும் என்ற கட்டுரையில் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பிணந்தின்னி கழுகுகள் குறைந்ததற்கான அறிவியல் பூர்வமான சான்றுகளை வழங்கியிருக்கிறார். அக்கட்டுரை அறிவியல் தாண்டி, அறிவியலின் சிறு செயல்கள், அதன் மூலம் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள், அந்த மாற்றங்கள் எப்படி ஒரு சூழலியல் மண்டலத்தைச் சிதைக்கின்றன என்பதை விலாவாரியாக விளக்குகிறது. அறிவியல் மீது தீராப் பற்றுகொண்ட எனக்கு இப்புத்தகம் தமிழில் வந்தது மிக்க மகிழ்ச்சி.. பிணந்தின்னி கழுகுகளுக்கும் அறிவியலுக்கும் என்ன சம்பந்தம் என்பதை மதிப்புரை எழுதும்போது விரிவாக எழுதுகிறேன்.

பார்ஸி சமூகத்தின் மரபுவழி இறுதிச் சடங்கு இடமான தாக்மா (Tower of Silence) என்பது ஜொராஷ்ட்ரிய மதத்தின் தனித்துவமான தத்துவங்களைப் பிரதிபலிக்கும் மரபு. நிலம், நீர் மற்றும் நெருப்பு ஆகிய இயற்கை கூறுகளைத் தெய்வீகமாகப் போற்றும் பார்ஸிகள், இறந்த உடல் சிதையும்போது வெளியாகும் அசுத்தங்கள் இந்தப் புனிதமான கூறுகளைத் தீட்டுப்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். இதன் காரணமாகவே அவர்கள் உடலை எரிப்பதையோ அல்லது புதைப்பதையோ தவிர்த்து, உயரமான மலைக்குன்றுகளில் வட்ட வடிவில் கட்டப்பட்ட தாக்மாக்களில் சடலங்களை வைக்கின்றனர். இந்த அமைப்பில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எனத் தனித்தனி அடுக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. தொக்மேநாஷினி எனப்படும் இம்முறையில், சடலங்கள் சூரிய ஒளிக்கும் பிணந்தின்னிக் கழுகுகளுக்கும் வெளிப்படுத்தப்படுகின்றன. கழுகுகள் சதையை உண்ட பிறகு, சூரிய ஒளியில் உலர்ந்து வெண்மையாகும் எலும்புகள் கோபுரத்தின் மையத்திலுள்ள குழியில் தள்ளப்பட்டு மட்கச் செய்யப்படுகின்றன. ஒரு மனிதன் இறந்த பிறகும் தன் உடலை மற்ற உயிரினங்களுக்கு உணவாகத் தந்து ஈகையைப் பூர்த்தி செய்கிறான் என்பதும், பணக்காரர் முதல் ஏழை வரை அனைவரும் இறுதியில் ஒரே இடத்தில்தான் இயற்கையோடு கலக்கிறார்கள் என்ற சமத்துவமுமே இதன் அடிப்படை நோக்கம். இருப்பினும், தற்காலத்தில் கழுகுகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், சூரிய வெப்பக் கருவிகளைப் பயன்படுத்துவது போன்ற மாற்றங்களை இச்சமூகம் மேற்கொண்டு வருகிறது. ஒரு சமூகத்தின் ஆழ்ந்த ஆன்மீக நம்பிக்கையையும், இயற்கையைப் பாதுகாக்கும் அக்கறையையும் தாக்மா இன்றும் மும்பையில் (மலபார் ஹில் ) உள்ளது .

இதையொட்டி Ali Imam Naqvi எழுதிய புகழ்பெற்ற உருது கதை ஒன்று உள்ளது. கதையின் பெயர் “The Vultures of the Parsi Cemetery“ பேராசிரியர் வெங்கட்ரமணன் அறிவியல் மூலம் இதைச் சொல்கிறார். அதே பிணந்தின்னி கழுகுகள் குறைந்ததைப் பற்றி எழுத்தாளர் Ali Imam Naqvi புனைவில் சொல்கிறார். இருவேறு பார்வைகள். அக்கதை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழினி இதழில் வெளியாகியுள்ளது. என்னிடம் உள்ள தமிழினி சிறுகதைத் தொகுப்பில் இக்கதை உள்ளது.

கதையின் நாயகர்களான பெரோஸ் மற்றும் ஹோர்மோஸ் ஒரு சடலத்தைக் கொண்டு வரும்போது, வழக்கத்திற்கு மாறாக ஒரு கழுகு கூட அங்கு இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைகின்றனர். இறுதியில், நகரில் வெடித்துள் கலவரத்தால் தெருக்களில் பிணங்கள் குவிகின்றன என்றும், அங்குக் கிடைக்கும் பெரிய விருந்துக்காக கழுகுகள் அனைத்தும் இடுகாட்டை விட்டு வெளியேறிவிட்டன என்றும் தெரியவருகிறது.

https://tamizhini.in/2020/05/16/பார்ஸி-இடுகாட்டின்-கழுகு/