September 13, 2025 in இலக்கியம் by வெங்கட்ரமணன்5 minutes
மஹாகவி பாரதியைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெற அவருடைய உரைநடைகளை வாசிப்பது முக்கியம்
கதைத்துளிகள், சிறுகதைகள், குறுநாவல்கள் - 400 பக்கங்களுக்கும் மேலாக.
பாரதியைப் பற்றிய ஒரு ஒட்டுமொத்தப் புரிந்துணர்வுக்கு பாரதியின் உரைநடையை வாசிப்பது முக்கியம்.
வேடிக்கை கதைகள், நவதந்திரக் கதைகள், சின்ன சங்கரன் கதை, ஞானரதம், ஸ்வர்ணகுமாரி, போன்ற பலகதைகளை எழுதியிருக்கிறார்.
சந்திரிகையின் கதை, சின்ன சங்கரன் கதை என்று முழுமையடையாத கதைகளும் உண்டு.
வேடிக்கைக் கதைகள் - இரண்டிலிருந்து ஐந்து பக்கங்கள் வரையானவை. மிக அதிகமாக - கிட்டத்தட்ட முப்பத்தைந்து கதைகள் இந்த வகையில் அடக்கம்.
ஆனைக்கால் உதை, கிளிக்கதை, அந்தரடிச்சான் சாஹிப் கதை, குதிரைக் கொம்பு, காக்காய்ப் பார்லிமெண்ட், மிளகாய்ப் பழச் சாமியார் உள்பட பல கதைகள் இந்த வேடிக்கைக் கதைகளில் அடக்கம்.
ஆனைக்கால் உதை என்ற கதையில் ஆனைக்கால் உள்ள ஒருவன் எழுந்து உதைக்க வந்தால் என்னவாகும் என்று அவனிடம் பிள்ளைகள் பயப்படுகிறார்கள். உண்மையில் அப்படியொருநாள் உதைக்க வேண்டிய சந்தப்பம் வருகையில் அவனால் காலை அசைக்கக்கூட முடியாதபொழுதுதான் குழந்தைகளுக்கு தாங்கள் இவ்வளவு நாட்களும் பயந்ததைக் கண்டு வியப்பு உண்டாகிறது. மலைபோலிருக்கிறது என்று நாம் எண்ணும் கஷ்டங்கள்கூட நெருங்கிவருகையில் அவற்றின் வீரியம் குறைவதைச் சொல்வதற்காக பாரதி இந்த வேடிக்கைக் கதையைப் பயன்படுத்தியிருக்கிறார்.
காக்காய்ப் பார்லிமெண்ட் என்ற் கதையில் காகங்கள் பேசும் மொழி பாரதியாருக்குப் பிடிபடுகிறது. உலகமெங்கும் இருப்பதைப் போலவே தனக்கும் பிற காகங்களின் சம்பாத்யத்தில் ஒரு பகுதி வேண்டும் என்று அரசனாக இருக்கும் கிழக்காக்கை கேட்கிறது. தனக்கும் கொஞ்சம், அரசனைவிடக் குறைவாக இருந்தால் போதுமென்று மந்திரிக் காகம் கேட்கிறது. இரண்டுபேராலும் எந்தப் புண்ணியமும் இல்லை இவர்களை அடித்துத் துறத்த வேண்டும் என்று இன்னொன்று சொல்ல குழப்பம் உண்டாகிறது. அப்பொழுது மனிதன் ஒருவனுக்கு - பாரதிக்கு - தாம் பேசும் விஷயங்கள் புரிகின்ற என்று ஒரு காகம் உணர்த்த எல்லா காக்கைகளும் கலைந்து போகின்றன. வெளிப்பார்வைக்கு ஒற்றுமையாக இருக்கும் காங்களுக்கும் அவைகளுக்குள்ளே பிரச்சனைகள் உண்டு. அதாவது வெள்ளைக்காரர்களுக்கும் தங்களுக்கிடையே பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சனை இருக்கிறது என்பதை காக்கைகள் என்ற உவமை கொண்டு பாரதியார் விளக்குகிறார்.
இந்தவகைக் கதைகளைப் பெரும்பாலும் Fable என்று சொல்லப்படும் நீதிநெறிக்கதை வகையில் அடக்கலாம். இந்த வடிவம் பாரதி காலத்திலேயே தமிழுக்குப் பரிச்சயமாகியிருந்தது.
புதிய கோணங்கி என்று ஒரு வேடிக்கைக் கதை. அதில் ஒரு ஆங்கிலத் துரையின் கம்பெனியில் சேர்ந்து ஐரோப்பாவெங்கும் வேடிக்கைக் காட்டச் சென்று மீண்டும் இந்தியாவில் வந்து தன் பூர்வீக வேலையைத் தொடருகிறான் ஒரு குடுகுடுப்பைக்காரன். அவன் குறிசொல்கையில்;
குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு நல்ல காலம் வருகுது; நல்ல காலம் வருகுது; ஜாதிகள் சேருது; சண்டைகள் தொலையுது சொல்லடி சொல்லடி சக்தி மாகாளி வேதபுர்த்தாருக்கு நல்லகுறி சொல்லு! தரித்திரம் போகுது, செல்வம் வருகுது படிப்பு வளருது, பாவம் தொலையுது படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான் வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான் சாத்திரம் வளருது, சூத்திரம் தெரியுது யந்திரம் பெருகுது, தந்திரம் வளருது மந்திர மெல்லாம் வளருது, வளருது குடுகுடு குடுகுடு குடுகுடு குடுகுடு…
ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று…
என்று வரவிருக்கும் சுதந்திரத்தைச் சர்வநிச்சயமாக, தீர்க்கமாகக் கொண்டு கூத்தாடுவதைப் போலவே, ஜாதிகள் சேருது, சண்டைகள் தொலையுது, தரித்திரம் போகுது செல்வம் வருகுது என்று தன்னுடைய உள்ளக் கிடக்கையை தீர்ந்துவிட்ட முடிவாகச் சொல்லும் பாங்கு அவனுடைய உரைநடையிலும் தெரிகிறது. சுதந்திரம், சாதிகள் ஒழிதல், தொழிலாளி முன்னேற்றம், வியாபாரப் பெருக்கம் போன்றவையெல்லாம் அடிமை இந்தியாவிற்கு அடுத்த கணத்தில் நிகழவிருக்கும் சாத்தியங்களாகத்தான் பாரதி எப்பொழுதுமே நம்பிவந்திருக்கிறான். ஒருவகையில் பாரதியின் உரைநடையை, சிறுகதைகளை, கட்டுரைகளை அவனுடைய வீரியமிக்க கவிதைகளின் மறுபிரதியாகத்தான் பார்க்க முடிகிறது.
பாரதியின் கதைகளின் ஆகக் கூடிய சிறப்பம்சமாகச் சொல்லவேண்டியிருப்பது அவற்றில் தேங்கி நிற்கும் அதீத நகைச்சுவையைத்தான். இதைச் சின்ன சங்கரன் கதை என்ற நெடுங்கதையைக் கொண்டு கொஞ்சம் விரிவாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.
மிகச் சிறிய வயதில் “புலமையில்’ அதிலும் மதனகவிபாடும் புலமையில் தேர்ச்சிபெறுகிறான் சங்கரன். அவன் ஜமீந்தாரின் அரசவைப் புலவனாகிறான். எப்படிப்பட்ட ராஜா:
காலை எட்டு அல்லது எட்டரை மணி வேளைக்கு எழுந்து கைகால் சுத்தி செய்துகொண்டு ஒன்பது மணியானவுடன் பழையது சாப்பிட உட்காருவார். பழையதுக்குத் தொட்டுக்கொள்ள தமது அரண்மனையிலுள்ள கறிவகை போதாதென்று வெளியே பல வீடுகளிலிருந்து பழங்கறிகள் கொண்டுவரச் சொல்லி ரசமாக உண்பார். காலை லேகியம் முடிந்தபிறகு இந்த அபினிலேகியம் உருட்டிப் போட்டுக்கொள்ளாமல் ஒரு காரியங்கூடத் தொடங்கமாட்டார். பார்ப்பார் எடுத்ததற்கெல்லாம் ஆசமனம் செய்யத் தவறாதிருப்பதுபோல. பழையது முடிந்தவுடன் அந்தப்புரத்தை விட்டு வெளியேறி இவருடைய சபா மண்படபத்துக்கு வந்து படுத்துக் கொள்வார். ஒருவன் கால்களிரண்டையும் பிடித்துக் கொண்டிருப்பான். இவர் வெற்றிலைப் போட்டு காளாஞ்சியில் துப்பியபடியாக இருப்பார்…
ஒருவகையில் பாரதிதான் சின்ன சங்கரன். சிறிய வயதிலேயே கவிபாடும் திறமைபெற்று பிழைப்புக்கு எட்டையபுரத்து சமஸ்தான ஜமீனை அண்டியிருக்க வேண்டியிருந்த தன்னுடைய விதியைத்தான் எள்ளலும் விடம்பனமும் துள்ள பாரதி சின்ன சங்கரன் கதையில் விவரிக்கிறார்.
ஆனால் முப்பது வருஷங்களுக்கு முன் நான் தமிழ் நாட்டில் இருந்தபோது அங்கே சின்ன சங்கரனுக்கு மேலே உயர்ந்த வகுப்பைச் சேர்ந்த ‘கவி’ நான் பார்த்தது கிடையாது. தேசமோ உலகத்துக்குள்ளே ஏழை தேசமாச்சுதா? பதினாயிரம் ரூபாயிருந்தால் அவன் தமிழ்நாட்டிலே கோடிஸ்வரன். பத்து வேலி நிலமிருந்தால் அவன் ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்டன். ஒரு ஜமீனிருந்துவிட்டால் அவன் ‘சந்திரவம்சம்’ ‘சூர்யவம்சம்’ ‘சனீசுர வம்சம்’ ‘மஹாவிஷ்ணுவின் அவதாரம்’ - பழைய பன்றி அவதாரத்துக்குப் பக்கத்தில் சேர்க்கப்பட வேண்டியது. இந்தத் தேசத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களெனக் கணக்கு சொல்கிறார்கள். நான் நாலைந்துபேரைக்கூடப் பார்த்தது கிடையாது. அது எப்படி வேண்டுமானாலும் போகட்டும். ஆனால் இந்த முப்பத்து முக்கோடி தேவர்களிலே எனக்குத் தெரிந்தவரை நம்முடைய மஹாவிஷ்ணுவுக்குத்தான் சிரமம் அதிகம். பன்றி விஷ்ணுவின் அவதாரம். அனிபெஸண்ட் வளர்க்கிற (நாராயணய்யர் இடங்கொடாத) கிருஷ்ணமூர்த்திப் பையன் அதே அவதாரம்.
குதிரை வண்டியில் போனால் குதிரை கீழேதள்ளிவிட்டுப் போய்விடக்கூடிய அபாயம் இருப்பதால் ஆட்டுவண்டியில் செல்வதாக வருணிப்பது ஒன்றே கவுண்ட மகாராஜரின் வீரத்தைச் சொல்லப் போதுமானதாக இருக்கிறது.
கவிதை நடையில் வாசகனைக் கட்டிபோட நிறைய விஷயங்கள் சாத்தியம். பாரதியின் அந்தத் திறனில் யாருக்கும் இரண்டாம் கருத்துக்கு இடம் கிடையாது. ஆனால் தமிழுக்குப் புதிதான உரைநடைக் கதையில் அசாத்திய நகைச்சுவையால் வாசிப்பவனை இழுத்துச் செல்லும் திறமையும் பாரதிக்கு நிறையவே சாத்தியமாகியிருக்கிறது.
சந்திரிகையின் கதை, சின்ன சங்கரன் கதை இரண்டும் பாரதியால் எழுதி முடிக்கப்படவில்லை. இவற்றில் சின்ன சங்கரன் கதை பாரதியால் முடிக்கப்பட்டது என்றும் அதன் பின் பகுதிகளின் கையெழுத்துப் பிரதியை பிரிட்டிஷ் போலிஸ் கைப்பற்றிச் சென்றுவிட்டது என்றும் ஒரு கருத்து உண்டு. ஆனால் இதற்கு எந்தவிதமான ஆதாரமும் கிடையாது. மேலும் கதைகளைவிட வீரியம் மிகுந்த, நேரடியாக விடுதலையுண்ர்வைத் தூண்டிய பல கவிதைகளைக் கூட பிரிட்டிஷ்காரர்கள் பறிமுதல் செய்ததாகத் தெரியவில்லை. எனவே பாரதி இவற்றை முடிக்கவில்லை என்றுதான் கொள்ள வேண்டும். சின்னசங்கரன் கதை ஓரளவுக்கு எப்படிப் போகக்கூடும் என்பது கதையின் ஆரம்பத்திலேயே பாரதியால் கோடிகாட்ட்ப்பட்டிருக்கிறது. சிறுவயதில் காமக்கவிபாடும் அரசவைப் புலவனாகத் தொடங்கிய சின்னசங்கரன் இருளாயியைக் காதலிக்கத் துவங்கியதுவரைதான் பாரதியால் எழுதப்பட்டிருக்கிறது. சின்ன சங்கரன், சங்கரன், சங்கரய்யர், சங்கர நாராயணய்யர், சங்கர நாயாரண பாதிரியார் என்று கதையின் துவக்கத்திலேயே அதன் போக்கைக் கோடிகாட்டியிருக்கிறார் பாரதி. மதனகவி சங்கரன் பாதிரியாரானது எப்படி என்ற சுவாரசியமான கேள்விக்கு விடைகிடைக்காமலேயே போய்விட்டது சோகம்தான்.
சின்ன சங்கரன் கதையில் ஐரோப்பியர்கள் நாவல்கள் சிறுகதைகளில் எப்படி ஆதியோடந்தமாகச் சொல்லாமல் நேரடியாக விஷயத்திற்கு வருவார்கள் என்பதைப் பாரதி சொல்லியிருப்பதிலிருந்து அப்போதைக்கு உலகளவில் புதிய வடிவமான சிறுகதையின் வடிவமும் போக்கும் பாரதிக்கு எப்படி பிடிபட்டிருக்கிறது என்று தெரியவருகிறது. இருந்தபோதும் மேலைநாட்டுவடிவத்த்துடன் இந்தியாவின் விஸ்தாரமான கதைசொல்லும் காவியப் பாங்கையும் இணைக்கிறேன் என்று தெளிவாகவே சொல்லிவிட்டுத்தான் சின்னசங்கரனை விவரிக்கத்தொடங்குகிறார். சென்றிடுவீர் எட்டுதிக்கும் கலைச் செல்வங்கங்கள் யாவையும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று கட்டளையிட்டவன் அல்லாவா அவன்.
ஆனைக்கால் உதையில் ஒருவனுடைய ஊனத்தை மருளச் செய்யும் விதிக்கு ஒப்பிட்டிருப்பது இந்தக் காலத்து politically correct humour வகைகளுக்கு ஒவ்வாத விஷயமாக இருக்கும். இன்னும் விதவை மறுமணத்தை முன்வைத்து எழுதப்பட்ட சந்திரிகையின் கதையில்கூட அந்த விதவைக்கு மறுமணம் செய்ய கன்னி கழியாமல் இருக்கவேண்டியிருப்பதாகச் சொல்வது இந்தக் காலத்தில் பெண்கள் முன்னேற்றத்தை, பெண்விடுதலைக்கு ஒவ்வாத pre-conditions ஆக இருப்பதாகத் தோன்றும். ஆனால் இந்தக் கதைகள் எழுதப்பட்ட கால கட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு இவற்றை வாசிப்பதும் மதிப்பிடுவதும் முக்கியம்.
எண்பது வருடங்களுக்கு முன்னால் பாரதி எழுதியது;
“… தெருவிலே கண்டவர்களையெல்லாம் மூன்று காசுக்காகப் புகழ்ந்து பாடுவது. பெண்களுடைய மூக்கைப் பார்த்தால் உருளைக்கிழங்கைப் போலிருக்கிறது; மோவாய்க்கட்டையைப் பார்த்தால் மாதுளம் பழம் போலிருக்கிறது; கிழவியுடைய மொட்டைத்தலையைப் பார்த்தால் திருப்பாற்கடலைப் போலிருக்கிறது என்று திரும்பத்திரும்ப காது புளித்துப்போகிறவரை வர்ணிப்பது. யமகம், திரிபு, பசுமூத்ர பந்தம், நாகபந்தம், ரதபந்தம், தீப்பந்தம் முதலிய யாருக்கும் அர்த்தமாகாத நிர்ப்பந்தங்களைக் கட்டி அவற்றை மூடர்களிடம் காட்டி சமர்த்தனென்று மனோராஜ்யம் செய்வது, இவைதான் அந்தக் காலத்தில் கவிராயர்கள் செய்த தொழில்.”
Magical Realism பாணியில் அரசூர் வம்சம் கதைசொல்லும் இரா. முருகன், கிட்டத்தட்ட சின்னசங்கரனுடைய கவுண்டனூர் மன்னர் ராமசாமிக் கவுண்டரைப் போலவே முருகனுடைய அரசூர் ஜமீன்தாரும் :
யமகம், பின்முடுகு, முன்புடுகு, திரிபு என்றெல்லாம் எழுத்தெண்ணி, நீட்டி முழக்கிப் பாடி சிருங்கார ரசம் தளும்பப் பதம் பிரித்து பொருள்சொல்லும் வித்வான்களோடு சல்லாபம் செய்யலாம். - என்று ஆசைப்படுகிறார்.
“பகல் ஒன்றரை மணிக்குத்தான் ஸ்நானம் தொடங்கும். வெந்நீரிலேதான் ஸ்நானம் செய்வார். ராமசாமிக் கவுண்டர் ஸ்நானஞ் செய்வதென்றால் அது சாதாரணக் காரியமன்று. ஜலத்தையெடுத்து ஊற்றுவதற்கு இரண்டு பேர், உடம்பு தேய்க்க இரண்டுபேர், தலை துவட்ட ஒருவன், உடம்பு துடைக்க ஒருவன். வேறு வேஷ்டி கொண்டு அரையிலுடுத்த ஒருவன். நேபாளத்து ராஜாவின் பிரேதத்துக்குக்கூட இந்த உபசாரம் கிடைக்காது”
மிக விஸ்தாரமாக ஜமீன்தாரின் நித்தியக் குளியலை விவரிக்கும் அரசூர் வம்சம் கதையிலும்கூட ஜமீந்தாருக்கு குளிக்க இதேபோலத்தான் நாலுபேரின் ஒத்தாசை தேவைப்படுகிறது. எண்பது வருடங்களுக்குப் பின்னால் நவீன கதைபாணியான மேஜிக்கல் ரியலிசத்திற்கு ஆதர்சமான வர்ணனைகள் உரைநடையின் ஆரம்பகாலத் துவக்கமான பாரதியின் சின்னசங்கரன் கதையில் கிடைக்கிறது என்றால் அது ஒன்றே போதும் நவீன உரைநடை கதை சொல்லுவதில் பாரதியின் வெற்றியைக் காட்ட.
முதல் பதிப்பு: 18 நவம்பர் 2007