January 18, 2023 in இசை by வெங்கட்ரமணன்2 minutes
தொன்னூறுகளில் தமிழ்த் திரையுலகில் ஸ்வர்ணலதா மிகவும் முக்கியமான பாடகி. ஓய்ந்துவரும் இளையராஜாவின் ஆதிக்கம், வெகுவாக வளர்ந்து வரும் ரகுமான் இருவருக்கும் அந்தக் காலங்களில் ஸ்வர்ணலதா முக்கியமான பாடகி.
இரவு உறங்கச் செல்லும்பொழுது நாளைய நாளை அமைதியாகக் கழிக்க வேண்டும். இயன்றவரை மனதுக்குப் பிடித்தமான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு படுக்கச் செல்வது வழக்கம். குறிப்பாக நீண்ட நாட்களாக வேலையின் பளு நெருக்கிக் கொண்டிருக்கும்பொழுது ஒரு வார இறுதியை இப்படிக்கழிக்கலாமே என்ற ஆதங்கம் இயல்பானது. நேற்று அப்படித்தான் நினைத்திருந்தேன். இன்று காலை விடிந்ததும் என் கண்ணில்பட்ட முதல் செய்தி “பாடகி ஸ்வர்ணலதா மறைவு”.
மனதுக்குப் பிடித்த விஷயங்கள் என்றால் இசை கேட்பது, புத்தகம் வாசிப்பது இரண்டும் முக்கியமானவை. எனவே இன்று கேட்கவேண்டும் என்று நினைத்திருந்த பாடல்கள் 1990களில் வந்தவை. தொன்னூறுகளில் தமிழ்த் திரையுலகில் ஸ்வர்ணலதா மிகவும் முக்கியமான பாடகி. ஓய்ந்துவரும் இளையராஜாவின் ஆதிக்கம், வெகுவாக வளர்ந்து வரும் ரகுமான் இருவருக்கும் அந்தக் காலங்களில் ஸ்வர்ணலதா முக்கியமான பாடகி. அந்தக் காலங்களில் இளையராஜாவின் இசையில் கேப்டன் பிரபாகரன் படத்தில் ஆட்டமா தேரோட்டமா பாடல், தளபதியில் ராக்கம்மா கையத்தட்டு, சின்னத் தம்பியில் - போவோமா ஊர்கோலம் மூன்றும் மிக முக்கியமான பாடல்கள். இளையராஜாவின் இசையில் இன்னும் பல பாடல்கள் இவரால் மெருகூட்டப்பட்டவை
பின்னர் ரகுமானில் வருகையில் ஸ்வர்ணலதாவுக்கு மேலும் அற்புதமான பாடல்கள் கிடைத்தன. குறிப்பிடத்தக்கவை
பாடல்கள் ரகுமானின் இசையில் ஸ்வர்ணலதா மெருகூட்டியவையாக உடனடியாக நினைவிற்கு வருகின்றன. ரகுமானை இந்தித் திரையுலகில் அடையாளம் காட்டிய ஹை ராமா (ரங்கிலா) பாடலை அற்புதமாகப் பாடியதற்கு அவர் ஸ்வர்ணலதாவை என்றென்றும் நன்றியுடன் நினைவுகூறுவார் என்றே நினைக்கிறேன். தேவா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், கார்த்திக் ராஜா என்று பல இசையமைப்பாளர்களுடனும் இணைந்து இனிமையான பாடல்களை வழங்கியிருக்கிறார்.
சுசிலா, வாணி ஜெயராம், ஜானகி, சித்ரா என்று முதல்வரிசைப் பாடகிகளுடன் இணைத்துப் பேசப்பட வேண்டியவர் ஸ்வர்ணலதா. திறமையான பாடகி என்றால் எல்லாவிதமான உணர்ச்சிகளையும் முழுமையாக வெளிக்கொணரத் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில் துள்ளல் (ஆட்டமா, ராக்கமா), சோகம் (போறாளே பொன்னுத்தாயி, பூங்காற்றிலே), ஏக்கம் (எவனோ ஒருவன்,) என்னுள்ளே என்னுள்ளே (விரகம்) இப்படிப் பல உணர்ச்சிகளை அற்புதமாக வடித்திருக்கிறார். இன்னொரு முக்கியமான தகுதி - அப்பழுக்கில்லாமல் வார்த்தைகளைத் துல்லியமாக உச்சரிப்பது. அந்த வகையில் சமீபத்தியப் பாடல்களைக் கேட்கும்பொழுது அவருடைய இழப்பு இன்னும் பெரிதாகத் தெரிகிறது. என்னுடைய மனங்கவர்ந்த இன்னொரு பாடகியான ஷ்ரேயா கோஷால் கிட்டத்தட்ட ஸ்வர்ணலதாவின் மறுவடிவாகவே எனக்குத் தோன்றுகிறார்.
மிகச் சிறியவயதிலேயே திரையிசைக்கு வந்தவர் ஸ்வர்ணலதா. 37ஆம் வயதில் மரித்துப் போனது அபஸ்வரம் இல்லாத வாழ்க்கையின் அபத்த முடிவு.
முதலில் பதிப்பிக்கப்பட்டது : 12 செப்டம்பர் 2010