January 21, 2023 in நகைச்சுவை by வெங்கட்ரமணன்2 minutes
நேற்று யாகூ தளத்தில் வந்த ஒரு செய்தியின்படி துருக்கியர்கள் ஒரு புதிய களிம்பைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதைத் தடவிக்கொண்டால் 'நின்று விளையாட' முடியுமாம்.
துரித ஸ்கலிதம் நம்முரில் நிரந்தர வியாதி. எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து இன்றுவரை துரித ஸ்கலிதத்திற்கு நிவாரண விளம்பரம் இல்லாமல் துக்ளக் பத்திரிக்கை வெளிவந்ததே இல்லை. சோ கருணாநிதியைத் திட்டாமல் ஒரு இதழையாவது வெளியிடுவார். ஆனால் சொப்பன ஸ்கலிதம், நரம்புத் தளர்ச்சி, மூட்டுவலி, ஒற்றைத் தலைவலி, செயல்பாட்டில் ஊக்கமின்மை, நடுமுதுகில் வலி, கண் எரிச்சல் போன்ற ஆண்மை குறைவு சமாச்சாரங்களுக்கு ஒரு பக்கத் தீர்வில்லாமல் துக்ளக் ஒரு இதழ்கூட வெளிவராது. (ஒன்றைக் கவனித்திருக்கிறீர்களா, சிவராஜ் வைத்தியர் குடும்பத்தில் ஆண்மை குறைவை போக்கப் புறப்பட்டிருக்கும் ஏழாவது தலைமுறை வைத்தியருக்கு நாலு வயது கூட இருக்காது. அந்த வயதில் நாமெல்லாம் ‘வெல்லா’-வைக் காட்டிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்திருப்போம். இவரோ உலகத்தை உய்விக்கும் தனது பிறவிக்கடனில் முழ்கத் தொடங்கிவிட்டார். பிரமிப்பாக இருக்கிறது.)
அது கிடக்க, நேற்று யாகூ தளத்தில் வந்த ஒரு செய்தியின்படி துருக்கியர்கள் ஒரு புதிய களிம்பைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதைத் தடவிக்கொண்டால் ‘நின்று விளையாட’ முடியுமாம். இதைச் சோதிக்க 84 ஆண்களிடையே இந்த மருந்தையும், வயாகரா குளிகையையும், வெற்றுக் களிம்பையும் கொடுத்திருக்கிறார்கள். கண்டுபிடிப்பு: வெற்றுக் களிம்பால் 40 சதவீதம் பேரும், வயாகராவால் 55 சதவீதம் பேரும், துருக்கிக் களிம்பால் 77.3 சதவீதம் பேரும் நீடித்த ஆயுளை (அதுக்குத்தாங்க) பெற்றிருக்கிறார்களாம். வயகராவை விழுங்கி களிம்பையும் பூசிக்கொண்டவர்களில் 86.4 சதவீதம் பேர் வூடுகட்டி விளையாடியிருப்பதாகத் தெரிகிறது.
நல்ல சேதிதான். ஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. வயகராவை உட்கொண்டவர்களுக்குச் சோதனையின் போது தலைவலியும், பளீரென மின்வெட்டு போன்ற வலிகளும் வந்திருக்கின்றன. (நல்ல வேளையாக களிம்பில் இந்தச் சிக்கல்கள் இல்லை). சோதனையில் பாதியில் நிறுத்திவிட்டு அமிர்தாஞ்சனம் களிம்பைத் தேடிப்போனால் அந்த நேரத்தையும் விளையாட்டில் கணக்கில் கொள்வார்களா அல்லது டைம் அவுட் போலக் கழித்துவிடுவார்களா என்று தெரியவில்லை. அமிர்தாஞ்சனத்தைத் தொட்ட கையால் வேறெதையாவது தொடப்போக அங்கே எரிச்சல் வந்தால் விளையாட்டைப் பாதியில் நிறுத்தவேண்டியிருக்குமே! ஏற்கனவே வயகரா விழுங்கினால் கண் பார்வை குறைந்துபோகும் என்று தெரியவந்திருக்கிறது. எனவே கண் தெரியாமல் போய் தலைவலி மருந்தையும் தேட வேண்டுமென்றால் கொஞ்சம் கஷ்டம்தான்.
எல்லாம் இருக்கட்டும். இந்தக் களிம்பு Topical Anaesthetics வகையைச் சார்ந்ததாம். அதாவது தடவிக்கொண்ட இடத்தில் உணர்ச்சியற்று மறத்துப்போகும். இப்படியொரு களிம்பு இந்த விளையாட்டுக்கு உண்மையிலேயே தேவைதானா என்றும் சந்தேகமாக இருக்கிறது. வயகராவை முழுங்கி, களிம்பைப் பூசிக்கொண்டு தலைவலி மருந்து தேடப்போய் திரும்பி வருபவர், பாதியில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பரிசோதனை செய்யும் டாக்டரிடம் “ஆங், நா(ன்) இப்ப என்ன பண்ணனும் சார்” என்று அபத்தமாகக் கேட்டால்…?
(பின் குறிப்பு : 84 ஆண்களில் 77.3 சதவீதம், 86.4 சதவீதம் என்று துல்லியமாகக் கொடுத்திருக்கும் புள்ளிவிபரம் வேறு கொஞ்சம் இடிக்கிறது. அதெப்படி வயகராவுக்கும், வாசனைக்களிம்புக்கும் முழு எண்களும் தங்கள் களிம்புக்கு மாத்திரம் துல்லியமாகவும் சோதனையாளர்கள் வினைபுரிந்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. என் நண்பன் ஒருவன் புள்ளி விபரம் கொடுக்கும்பொழுது எப்பொழுதும் முழு எண்களாகத் தராதே, ஒருவரும் நம்பமாட்டார்கள். இந்தியாவில் 67.13 சதவீத ஆண்கள் வேறு பெண்களைத் தேடி அலைகிறார்கள் என்று சொன்னால் நம்புவோமா, 67 சதவீதம் என்று சொன்னால் நம்பிக்கை வருமா?).
முதலில் பதிப்பிக்கப்பட்டது: 30 மார்ச்சு 2006