திறந்த அணுக்க அறிவியல் சஞ்சிகைகள்

September 14, 2025 in அறிவியல் by வெங்கட்ரமணன்4 minutes

ஒரு சிறிய பதிப்புத் தொகையைக கொடுத்துவிட்டால் போதும் அறிவியல் கட்டுரைகளை நீங்கள் எந்த வகையிலும் பயன்படுத்தலாம். இந்த திறசஞ்சிகைகள் தங்கள் தளத்திலேயே இவற்றை இலவசமாக விநியோகிக்கின்றன. தேவையானால் ஒரு இணைப்பு கொடுத்தால் போதும், முழு கட்டுரையும் வாசகர்களுக்குக் கிடைக்கும். இது பதிப்புத் துறையில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. .

Open Access

நேற்று முன்தினம் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தன்னுடைய ஆராய்ச்சியாளர்களுக்குத் திறந்த அணுக்க சஞ்சிகைகளில் (Open Access Journals) பதிப்பிக்க வேண்டியதைக் கட்டாயமாக்கியிருக்கிறது. அது என்ன திறந்த அணுக்க சஞ்சிகைகள்? கண்டுபிடிப்புகளைத் திறந்த வகையில் பகிர்ந்துகொள்வது அறிவியல் துறையில் (பொதுவில் எந்த அறிவுத் துறைகளிலும், இந்தப் பதிவில் அறிவியல் என்ற இடங்களிலெலாம் பொதுவில் அறிவுத் துறைகள் என்று கொள்ளவும்)) முக்கியமான ஒன்று. அறிவியலாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளை ஆய்வுக் கட்டுரைகளாக எழுதி துறைசார் சஞ்சிகைகளுக்கு அனுப்புவார்கள். அங்கே அது தகைவுள்ள சக-அறிஞர்களால் சரிபார்க்கப்பட்டு பதிப்பிக்கப்படும். இவற்றை ஆதாரமாகக் கொண்டு மேலதிக ஆய்வுகள் நடத்தப்படும். இப்படி அறிவியலை முன்னெடுத்துச் செல்ல பதிப்பித்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதுபோன்ற துறைசார் ஆய்வுக்கட்டுரைகளைப் பதிப்பிக்கவென்றே நிறுவனங்கள் இருக்கின்றன. ஒருவகை அறிவியல் கழகங்களே நடத்தும் சஞ்சிகைகள், இதற்கு உதாரணம். Physical Review Letters, Journal of Chemical Physics,.. மற்றவை முற்றிலும் தனியார் துறையைச் சார்ந்தவை (தனியார் என்றாலும் இவற்றின் ஆசிரியர் குழுவும் முற்றிலும் துறைசார் வல்லுநர்களான உலகப்புகழ் அறிவியலாளர்கள்தாம். Elsevier (Advances in Cardiac Surgery, Optics Communications,…), MacMillan (Nature,Gene Therapy..). இணையத்திற்கு முந்தைய காலங்களில் இவற்றின் அச்சுப்பதிப்பை பல்கலைக்கழக நூலகங்கள் சந்தா செலுத்தி வாங்கும். இணையத்தின் வரவுக்குப் பின்னும் அச்சிட்ட சஞ்சிகைகளில் சந்தாக்கள் தொடந்தாலும், ஆய்வாளர்கள் பெரும்பாலும் இணையம் வழியே மின்சஞ்சிகை வடிவிலேயே இவற்றை வாசிக்கிறார்கள். விரைவாகத் தேட முடிவது இதன் முக்கிய காரணம்.

வாசிப்பவர்களுக்கான சந்தாவைத் தவிர பதிப்பிக்கும் ஆய்வாளர்களும் சில முக்கியமான சஞ்சிகைகளுக்குப் பக்கச் செலவு (Page Charge) என்று ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்த வேண்டும். இதுபோன்ற பதிப்புச் செலவுகள் பெரும்பாலும் தன்னார்வச் செலவுகள் என்றாலும் சில சஞ்சிகைகள் இவை $2,000 வரைச் செல்லும். இவற்றை பல்கலைகழக ஆசிரியர்களிடம் கட்டாயப்படுத்தி வாங்காவிட்டாலும் தனியார் ஆய்வுத் துறையைச் சேர்ந்தவர்கள் வெளியீடுகளுக்கு இவை கட்டாயப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக மைக்ரோஸாஃப்ட் ஆய்வகத்திலிருந்து ஒரு கட்டுரை வெளியானால் பெரும்பாலும் அவர்கள் பதிப்புச் செலவை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

அறிவியல் சஞ்சிகைகளில் வரும் ஆய்வுக்கட்டுரைகளில் தலைப்பு மற்றும் கட்டுரைச் சுருக்கம் உள்ளிட்ட தகவல்களைப் பல தரவுத்தளங்கள் தொகுக்கின்றன. இவற்றிலிருக்கும் பில்லியன் கணக்கான கட்டுரைகளிடையே தனக்கு வேண்டியதைத் தேர்ந்தெடுப்பது மின்னுரை வடிவில் கிடைக்கும் தகவல்களால் சாத்தியமாகின்றன. Google Scholar போன்ற சேவைகள் இவற்றை எளிதாக்கியிருக்கின்றன. மின்னூடகத்தின் வரவால் காகித வடிவில் அச்சில் பதிப்பிக்கப்படாத முற்றிலும் மின்வடிவமான சஞ்சிகைகளும் உருவாகியிருக்கின்றன (Optics Express,..). அறிவியல் சஞ்சிகைகளின் ஆண்டுச் சந்தா மிகமிக அதிகம். சில சஞ்சிகைகளின் சந்தா பல ஆயிரம் டாலர்கள்வரைச் செல்கிறது. அச்சில் பதிப்பித்த காலத்தில் பதிப்புச் செலவு, அஞ்சல் செலவு போன்றவை இருந்ததால் இதுபோன்ற மிக அதிக விலையை பல்லைக் கடித்துக்கொண்டு நூலகங்கள் தாங்கிக் கொண்டன. மறுபுறத்தில் மின் பதிப்பால் பதிப்பகங்களுக்குச் சில செலவுகள் குறையத் தொடங்கின, உதாரணமாக தங்கள் கையெழுத்துப் பிரதிகளைத் தாங்களாகவே பதிப்புவடிவாக்கம் செய்வதால் பதிப்பாளர்களுக்கு அச்சுக்கோர்ப்பு செலவு மீதமாகிறது. மின்னூடகத்தின் வசதியால் வண்ணப்படங்களைப் பயன்படுத்துவது, தேவையான இடங்களில் சலனப்படங்களைச் சேர்ப்பது போன்றவை மின் சஞ்சிகைகளில் (மாத்திரமே) சாத்தியம்.

வேறுவகையில் பதிப்பாளர்களுக்குச் சில அச்சுறுத்தல்களும் வரத்தொடங்கின. பண்டை காலங்களில் பதிப்புச் செலவை ஏற்றுக்கொள்பவர்களுக்கு பதிப்பகம் 25 முதல் 100 வரை இலவசப் பிரதிகளைத் தரும். ஆராய்ச்சியாளர்கள் தங்கள் துறையில் இருக்கும் நெருக்கமானவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள். மேலதிகப் பிரதிகள் வேண்டுமென்றால் ஒரு பிரதிக்குப் பத்து முதல் இருபது டாலர்கள் வரை செலுத்தி பதிப்பகத்திடமிருந்து பெறமுடியும். மின்வடிவில் வந்தபின் இந்த வருமானம் பதிப்பகங்களின் கையைவிட்டுப் போய்விட்டது. ஒரு பிடிஎஃப் கோப்பை எத்தனை பிரதி வேண்டுமானாலும் எடுக்கலாம்தானே!

எது எப்படியிருந்தாலும் பதிப்புச் செலவுகள் வெகுவாகக் குறைந்திருப்பது உண்மை. கூடவே பதிப்பகங்கள் புதிய கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தத் தொடங்கினார்கள். உதாரணமாக, என்னுடைய ஆராய்ச்சி முடிவுகளை நான் எழுதி வெளியாகியிருக்கும் கட்டுரையை என் இணையதளம் வழியே பிறருக்கு இலவசமாகத் தரமுடியாது. இது பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது. பதிப்புச் செலவை (அல்லது அவர்கள் பரிந்துரைத்த ஒருபகுதியை) நான் ஏற்றுக்கொண்ட பிறகு என் ஆய்வு முடிவுகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள எனக்குத் தடைவிதிக்க அவர்களுக்கு என்ன உரிமையிருக்கிறது?

பதிப்பித்தல் என்பதே அறிவியல் கண்டுபிடிப்புகளை மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம் என் ஆய்வின் திறத்தை துறையில் ஆர்வமும் நிபுணத்துவமும் உள்ள பிறரால் மதிப்பிட்டு அறியவும், அதற்கு அடுத்த கட்டமாக என் ஆய்வு முடிவுகள் மீது பிறருடைய ஆய்வுகளைக் கட்டியெழுப்ப வகைசெய்வதும் தானே. தகவல் பரிமாற்றம் எளிதான் இந்த நாட்களில் நான் இதை ஏன் ஒரு சிறிய இணைய இணைப்பு வழியே சாதிக்கக்கூடாது?

எல்லாவற்றுக்கும் மேலாக பெரும்பாலான ஆய்வுகள் அரசு மானியத்தில் (மக்களின் வரிப்பணத்தில்) நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் ஆய்வு முடிவுகளைத் திறந்த வகையில் பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டியது என் கடமையல்லவா? வரிப்பணத்தில் செய்த ஆய்வின் முடிவை ஒரு தனியார் (அல்லது ஒரு ஆய்வாளர்கள் கழகம்) பதிப்பு நிறுவனத்துடன் பிணைத்து முடக்க எனக்கு என்ன உரிமையிருக்கிறது?

இப்படியான பல கேள்விகளுக்கு விடையாக அறிவியலாளர்கள் “திறந்த அணுக்கச் சஞ்சிகைகளை” உருவாகத்தொடங்கியிருக்கிறார்கள். (இதை பண்புத்தொகையாக திறவணுக்கச் சஞ்சிகை என்று சொல்வதே சரி, Open Source என்பதை திறமூலம் என்று சொல்வதைப் போல). ஒரு சிறிய பதிப்புத் தொகையை (இதுவும் கட்டாயமில்லை) கொடுத்துவிட்டால் போதும் அறிவியல் கட்டுரைகளை நீங்கள் எந்த வகையிலும் பயன்படுத்தலாம் (இந்தத் தொகை சஞ்சிகையின் இணைய தளத்தை நிர்வகிக்கும் செலவுக்கு உதவுகிறது). இந்த திறசஞ்சிகைகள் தங்கள் தளத்திலேயே இவற்றை இலவசமாக விநியோகிக்கின்றன. தேவையானால் ஒரு இணைப்பு கொடுத்தால் போதும், முழு கட்டுரையும் வாசகர்களுக்குக் கிடைக்கும். இது பதிப்புத் துறையில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.

கொஞ்சம் கொஞ்சமாக பல பல்கலைக்கழங்கள் இவற்றை அங்கீகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. இதுபோன்ற சஞ்சிகைகளில் பதிப்பிப்பது வழமையானவற்றில் பதிப்பித்தலுக்குச் சமம் என்பது இந்த அங்கீகாரத்தின் அடிப்படை (பதிப்பித்தல் ஆய்வாளர்களுக்கு மிக முக்கிய்மான அளவுகோல். அவர்கள் பணி உயர்வு, அடுத்த ஆராய்ச்சிக்கான மான்யம் போன்றவை பதிப்புகளாலேயே பெரிதும் தீர்மானிக்கப்படுகின்றன).

பிப்ரவரி 13 அன்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்த முடிவு (இது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் பின் அறிவிக்கப்பட்டது) இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. இது திறவணுக்கச் சஞ்சிகைகளில் பதிப்பித்தலை முதன்மையாக்கியிருக்கிறது. அதாவது, துறையில் ஒரு திறவணுக்கச் சஞ்சிகை இருந்தால் அதில் பதிப்பிக்கவே முதல் முயற்சி மேற்கொள்ளப்படும். நாளதுவரை மற்ற பல்கலைக்கழகங்கள் “அவற்றிலும் பதிப்பிக்கலாம்” என்றுதான் சொல்லிவருகிறார்கள். ஹார்வர்ட் “அதில்தான் பதிப்பிக்க வேண்டும்” என்று சொல்கிறது.

திறந்த வகையில் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்வது அறிவியலை முன்னெடுத்துச் செல்ல மிக முக்கியமான ஒன்று. இன்றைய நவீன நுட்பங்களுக்கு ஏற்றவகையில் அதைத் திறமையாகச் செய்ய வழிவகுக்கும் ஹார்வர்ட்டின் இந்த முடிவு மிகவும் பாராட்டப்பட வேண்டியது.

முதலில் பதிப்பிக்கப்பட்டது - 15 பெப்ருவரி 2008