தன்னிச்சைப் போர்ப்பறவிகளின் முதல் கொலை

June 10, 2026 in சமூகம், தொழில்நுட்பம் by வெங்கட்ரமணன்2 minutes

கொல்லத் துவங்கியிருக்கும் தானியங்கிப் பறவிகள்

முழுவதும் தன்னிச்சையான, மனித மேற்பார்வை ஏதுமற்ற போர்ப்பறவிகள் (Autonomous War Drones) முதல் முறையாக ஒரு இராணுவ வீரனைக் கொன்றிருப்பது இன்று வெளியாகியிருக்கிறது (செய்தி இணைப்பு கீழே). 1 இது போர்நுட்ப வரலாற்றில் ஒரு முக்கியமான நகர்வாக வருங்காலத்தில் சொல்லப்படப்போகிறது. இந்தத் தகவலின் அடிப்படையில் இரண்டு வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது இந்தச் சோதனை. பத்து, முழுமையாகச் செய்யறிவினால் மாத்திரமே இயக்கப்பட்ட, யுக்ரேய்னியப் பறவிகள் ஒரு இரஷியப் போர்வீரனைக் கொன்றன.

இந்தப் பறவிகள் ஏவப்பட்ட பின்னர் எந்தவிதமான மனிதக்கட்டுப்பாடுகளுக்கும் அப்பாற்பட்டவை. முழுவதும் செய்யறிவினால் வழிநடத்தப்பட்டும் இவற்றுக்குக் ‘காணும் எதையும் சுட்டுக் கொல்லக்’ கட்டளை அளிக்கப்பட்டிருந்தது. அதாவது அதில் பொருத்தப்பட்டிருக்கும் பல்வேறு உணரிகளின் அடிப்படையில் இலக்குகளை அடையாளம் கண்டு, அவை அழிக்கப்படவேண்டியவைதான என்று தாமாகவே முடிவெடுத்து, அந்த இலக்குகளின்மீது தாக்குதல் நடத்துவதுவரை அனைத்துமே மனிதக்கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு இயந்திரங்களாலேயே நிர்வகிக்கப்பட்டன. இது வரலாற்றில் முதன்முறை: ஒரு மனிதனைக் கொல்லவேண்டுமா என்று முடிவெடுப்பது இயந்திரங்களிடம் கையளிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

ஏவப்பட்டபின் இவை எந்த வகையிலும் கண்காணிக்கப்படவில்லை; அது சாத்தியமும் இல்லை. எனவே ‘எல்லாம் முடிந்தபின்’ மனிதக் கட்டுப்பாட்டால் இயக்கப்படும் வேறு பறவிகளைக் கொண்டு இலக்குகளை ஆராய்ந்து அதில் ஒரு இராணுவ வீரனும் இரண்டு வாகனங்களும் அழிக்கப்பட்டிருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கிறது.

போரில் இலக்குகளை அடையாளம் காணுவதன் திறம் நுட்பரீதியாகத் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. துல்லியமான உணரிகளும் (sensors) செய்யறிவும் இதைத் தொடர்ச்சியாக மேம்படுத்திக்கொண்டே வருகின்றன. 2023-ம் ஆண்டே யுக்ரெய்ன் பற்விகள் (இரஷ்யப் பறவிகளும்கூட) இலக்குகளைத் தன்னிச்சையாகத் தாக்கிவருகின்றன. ஆனால் அவற்றுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது இராணுவ வாகனங்கள் மாத்திரமே. மனிதர்கள்மீது தாக்குதல் நடத்த வேண்டுமா என்பது குறித்த இறுதி முடிவு இதுநாள் வரை மனிதர்களால் மட்டுமே எடுக்கப்பட்டு வந்தது. இப்போது முதன்முறையாக இந்தச் சமன்பாட்டில் மனிதன் முற்றாக நீக்கப்பட்டிருக்கிறான்.

யுக்ரேய்னிய இராணுவம் இதைச் சோதனை-ரீதியாகத்தான் செய்துபார்த்தோம். இது முழு வெற்றி என்றபோதும் தொடர்ந்து முழு அளவில் இதை நாங்கள் பயன்படுத்தவில்லை என்று சொல்கிறது. தொடரும் போரினால் நலிந்த பொருளாதார நிலையில் இருக்கும் யுக்ரெய்னால்கூட எழுப்பச் சாத்தியமான இந்தத் ‘தன்னிச்சைக் கொலைப்படை’, Palantir போன்ற பேரளவுத் தகவல் அடிப்படையிலான செய்யறிவின் கைகளில் அமெரிக்காவால் ஒப்படைக்கப்பட்டால், அல்லது அதேபோன்ற (அல்லது அதற்கும் மேம்பட்ட) திறன்கொண்ட சீன இராணுவம் முயன்றால், அவை எந்த எல்லைகளுக்கு நம்மை இட்டுச் செல்லக்கூடும் என்பது திகைப்பூட்டுகிறது.

நான் திரும்ப்த் திரும்பச் சொல்லிவருவது இதைத்தான்: தானியக்கமும் செய்யறிவுக் கொண்ட பறவிகளாலும், போர் எந்திரன்களாலும் கொலைகள் நிகழும்போது போர்க்குற்றம் என்பதற்கான வரையறை என்னவாக இருக்கும்?

அணு ஆயுதப் பரவலைவிட மிகச் சிக்கலானது தானியங்கிப் போர்நுட்பம். மிகக் குறைந்த விலை, எளிதில் கிடைக்கும் பாகங்களும் மூலப்பொருட்களும், வெகுவாக மேம்பட்டுவரும் செய்யறிவு போன்றவை முன்னெப்போதுமில்லாத பேரழிவுச் சாத்தியங்களை நம்முன் வைக்கின்றன. இதுபற்றிய தொடர் உரையாடலை முன்னெடுக்காமல் நாம் இன்னமும் ஒத்திப்போடுவது நல்லதல்ல!


  1. Fully autonomous drones have killed human soldiers for the first time, Matthew Sparkes, NewScientist, 10 June 2026. ↩︎