சிவதாசனின் குற்ற ஆலம்

October 5, 2025 in இலக்கியம் by வெங்கட்ரமணன்3 minutes

காலம் வாழும் தமிழ் ஒழுங்கமைத்த அசை சிவதாசனின் 'குற்ற ஆலம்' சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டில் நான் ஆற்றிய உரை

நண்பர்களுக்கு வணக்கம்!

நான் ஒரு மேடைப்பேச்சாளன் இல்லை. வாசிக்கத் தெரியும், வாசித்ததைப் பற்றி சகநண்பர்களுடன் உரையாடப் பிடிக்கும். ஆனால் மைக் என்னும் இந்த அசுரசாதனத்தின் முன்னால் நின்றால் வாயடைத்துப் போகும். என்னை நம்பி இன்று வெளியிடப்படும் சிறுகதைத் தொகுப்பைப் பற்றி பேச அழைத்த காலம் செல்வத்துக்கும் சிவதாசனுக்கும் என் நன்றிகள்! கூடவே என் மன்னிப்பும்.

வாசிக்கத் துவங்கியபின் குறுகிய நேரத்திலேயே முழுதும் வாசிக்க முடியும் தொகுப்பு இது. எளிய, சரளமான நடை; ஒரு தேர்ந்த எழுத்தாளனுக்கே, அதற்கும் மேலாக, ஒரு பரந்துபட்ட வாசிப்புடையவருக்கே சாத்தியமாவது இந்த நடை. நண்பர் சிவதாசனின் வாசிப்புப் புலத்தைப் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவருக்கு அருகிலேயே வசித்தாலும், இருபத்தைந்து வருடங்களாக நெருங்கிய தொடர்பிலிருந்தாலும் நான் அவருடைய ஓரிரு கதைகளைத் தவிர பிற புனைவெழுத்துக்களைத் தவறவிட்டிருக்கிறேன். எனவே இதை முதல் வாசிப்பிற்குப் பிறகான மனவோட்டம் என்று கொள்ளுங்கள். நான் இதைத் தெளிவாகச் சொல்வதற்கான காரணம் இருக்கிறது. இந்தத் தொகுதி மீள்வாசிப்பைக் கோரும் தகுதியை உடையது. இன்னொருநாள் இதை நான் ஊன்றி வாசிக்கையில் எனக்குப் புதிய திறப்புகளைத் தரும் சாத்தியத்தை உடையது.

சிவதாசனின் கதைகளில், பதிப்பாசிரியராக செல்வம் அண்ணன் சொல்வதைப்போல, புங்குடுதீவும் ஸ்கார்பரோவும் மாறிமாறி வருகின்றன. அவர் ஸ்கார்பரோ மூளையுடன் புங்குடுதீவையும், புங்குடுதீவின் மனத்துடன் கனடாவையும் பார்க்கிறார்.
இதில் ஏக்கம் இல்லை, இழப்பு குறித்த கண்ணீர் இல்லை. இந்தக் கதைகள் புலம்பெயர் வாழ்வின் அடுத்த கட்ட அவதானக் கதைகள். ஒரு தேர்ந்த வாசகனின், எழுத்தாளனின் அவதானம். பார்த்ததைப் பார்த்தபடியே சொல்லிவிட்டுப் போகும் கதைகள்.


முதலில் சொல்ல வேண்டியது சிவதாசனின் மொழி, சில இடங்களில்

“தொப்பி அணியாத சீக்கியர் திருவள்ளுவரைப்போல் காட்சியளித்தார்.”

போன்ற பகடிகள் நமக்கு முறுவலை வரவைக்கின்றன. மறுபுறத்தில்,

“தென்னம் தோப்புகள் தலைமுடியுதிர்ந்த முதியவர்கள்போல் பிரபஞ்ச அழைப்பின் நாளுக்காகப் பெருவெளியைப் பார்த்தவண்ணமிருந்தன.”

என்று கவித்துவமாக வெளிப்படுகின்றது.

“பிள்ளையாரும் களையிழந்து தொழுவாரற்று தனிமையில் வாடிக்கொண்டிருந்தார். எப்போதாவது ஐயர் ஒருவர் வந்து விளக்கேற்றி மணி அடிக்கும்போது மட்டும் கிராமம் விழித்துப் பார்க்கும். வழக்கம்போல வெளியே நிற்கவைக்கப்பட்ட குலத்தவர்களுக்கு ஐயர் தனது வீபூதியை எட்டிக் கொடுப்பார். அனுமதிக்கப்பட்டோர் எல்லோரும் வெளிநாடுகளில் தஞ்சம் பெற்றுவிட்டதால் உள்வீதியோ மண்டபமோ ஆளரவமற்றுப் போயிருந்தது.”

ஒரு பக்கத்தில் சொல்லச் சாத்தியம் இருப்பதை, இரண்டு வரிகளில் சுட்டி உணர்த்தும் மொழி சிவதாசனுக்குச் சாத்தியமாகியிருக்கிறது.


கதைகள் பல களங்களில் விரிகின்றன:

கறுப்பி என்று தன்னை அவமதிக்கும் சக-தமிழ் மாணவர்களைப் பழிவாங்க கரிபியன் நண்பர்களோடு சேர்ந்து தானும் கரீபியனாகிறாள் ஒருத்தி.

பார்த்துப் பார்த்து சேமித்த காசைக் குறைந்த விலையில் வீடுவாங்க பஞ்சாபித் தரகரிடம் இழக்கிறான் ஒருத்தன்.

நண்பனுக்காகப் பல ஆயிரம் டாலர்கள் கைக்காசைப் போட்டு புத்தகம் பதிப்பித்து, வெளீயீட்டு விழா நடத்தி, தோற்றுப்போய் பின் மனைவியின் உபதேசத்தில் ‘புத்தகவெறி’-யிலிருந்து வெளிவருகிறார்கள்.

பிள்ளையார் சிலைக்கு மலம் பூசும் வெறியுடன் புறப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர், வாய்ப்பேச்சு இயக்க வீரராக மாறி, பின்னர் கால, தேசங்களைக் கடந்து கனடாவில் தன் சிங்கள மனைவியுடன் வசதியாக வாழ்கிறார். நண்பர்கள் பழசை எண்ணிச் சிரிக்கிறார்கள்.

இளம் மனைவியை ஊரில் விட்டுவிட்டு செல்வம் தேட கொழும்புவுக்குப் போனவர், மனைவிக்குப் பிறந்த குழந்தையை ‘உயிர்தந்த’ உண்மை அப்பனுக்குக் கொள்ளிவைக்க அனுப்பி வைக்கிறார். சோரம் போன தவறுக்கு மனைவி மட்டும் பொறுப்பில்லை, தானும்தான் என்ற முதிர்ச்சி அவருக்கிருக்கிறது.

இன்னொரு கதையில் கலியாணம் செய்துகொள்வதற்காக ஊரிலிருந்து மாமன் மகனை ஒரு பெண் கனடா வரவழைக்கிறார். பிறகு அவரைக் கலியாணம் செய்துகொண்டால் ‘ஜெனிடிக்’ குறைபாட்டுடன் குழந்தை பெறக்கூடும் என்று துரத்தியடிக்கிறார். அவர் இரயிலின் முன்னால் விழுந்து செத்துப்போக, உள்ளூர் நண்பனைத் திருமணம் செய்துகொண்டு பெற்றெடுக்கும் குழந்தைக்கு ஆட்டிஸம். தவறுக்குப் பொறுப்பேற்க கட்டியவனைத் திட்டித் துரத்திவிட்டுப் போதையில் முழ்குகிறார். அவனாவது நிம்மதியாக வாழட்டுமே என்ற உணர்வு. இந்தக் களங்கள் முற்றிலும் புதிதானவை.

இந்தக் கதைமாந்தர்களின் போக்கும் வித்தியாசமானவைதான்.

இதில் எங்குமே ஆசிரியர் தீர்ப்பு மொழியவில்லை. இதுதான் நான் பார்த்தது, உங்களிடம் சொல்லிவிட்டேன் இனி இதைப் புரிந்துகொள்வதும் தீர்ப்பு சொல்வதும், அல்லது முற்றாக மறந்துவிட்டு உங்கள் போக்கில் போவதும் உங்கள் பாடு என்பது சிவதாசனின் நிலைப்பாடு.


எல்லாவற்றுக்கும் மேலாக ஆச்சரியப்பட வேண்டிய விடயம்; இது நண்பர் சிவதாசனின் முதல் கதைத் தொகுப்பு. நான்கு தசாப்தங்களுக்கு மேலாகத் தொடர்ந்து எழுதிவரும் சிவதாசனின் எழுத்தக்கள் இப்பொழுதாவது தொகுக்கப்படுகின்றனவே என்ற ஆறுதல் மேலிடுகிறது.

இவற்றில் சில கதைகள் குறுநாவலாகவோ, முழு நீள நாவல்களாகவோ எழுத்தப்பட வேண்டிய அளவுக்கு நீண்ட, செரிவான களத்தைக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக முதல் கதையான ‘குப்பி’. நண்பர் சிவதாசன் இவற்றை இன்னொரு நாள் விரித்தெழுதுவார் என்று நம்புகிறேன். அவற்றையும் வாசிக்க ஆவலாக இருக்கிறேன்.

மீண்டும், வாய்ப்பளித்தற்கு நன்றிகள். நண்பர் சிவதாசனுக்கு வாழ்த்துகள்.