கண்விரியக் குழந்தை சொல்லும் கதைகள்

May 23, 2009 in இலக்கியம் by வெங்கட்ரமணன்3 minutes

வாழ்வின் மிகச் சிக்கலான தருணங்களையும், அவலங்களையும் அதிகபட்சமாக வறட்டுப் புன்னகையுடன்தான் முத்துலிங்கம் சொல்கிறார். மறுபுறத்தில் நம்பிக்கை, நியாயம், அன்பு என்று நேரிடையான விஷயங்களுக்கு அவரிடம் பஞ்சமே கிடையாது.

a.muttulingam

முத்துலிங்கத்தின் ஐம்பதாண்டு இலக்கியப் பணியைக் கொண்டாடும் நிகழ்வில் நீங்களும் பேச வேண்டும் என்று செல்வம் கேட்டுக் கொண்டார். நான் அதிகம் மேடைகளில் பேசுபவனல்லன் என்று தயங்கினேன். ஆனாலும் முத்துலிங்கத்தைப் பற்றி பேச ஒரு சர்ந்தர்ப்பம் என்று அடிமனதில் ஒரு மகிழ்ச்சி. நான் கனடாவிற்குப் புலம்பெயர்ந்தவுடன் என் வீட்டிற்கு முதன்முதலாக வந்தவர் முத்துலிங்கம். அதற்கு முன்னர் அவரைக் கண்டதில்லை, சொல்லப்போனால் அவருக்கு முதல் மின்னஞ்சலை எழுதியதே நான் ஜப்பானைவிட்டு நீங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னால்தான். இரண்டேயிரண்டு மின்னஞ்சல்கள் மாத்திரமே எனக்கும் அவருக்கும் இருந்த தொடர்பு. வந்தவரை அமரச்சொல்ல அன்றுதான் நான் குடிபெயர்ந்திருந்த அடுக்ககததில் ஒரு ஓலைப்பாய்கூடக் கிடையாது. எனக்கருகில் வெறுந்தரையில் அமர்ந்து ஒரு மணிநேரம் கதைத்துவிட்டுப் போனார். போகும் பொழுது காலத்தில் வெளியிடுவதற்காக என் கட்டுரை ஒன்றையும் கேட்டுவிட்டுச் சென்றார். நீண்ட தயக்கத்திற்குப் பிறகு அவரிடம் கொடுத்த அந்தக் கட்டுரைதான் நான் அச்சில் கண்ட என் முதல் படைப்பு. அன்று தொடங்கி இன்றுவரை - என் எழுத்தில் உருப்படியாக என்ன இருக்கிறதோ தெரியவில்லை - என்னைத் தொடர்ந்து எழுதச் சொல்லி ஊக்குவித்துவருபவர் என்ற முறையில் நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டவன். நேரிடை ஊக்குவிப்பு மாத்திரமல்லாது தன் எழுத்துக்கள் வழியேயும் என்னை வழிநடத்தி வருபவர் முத்துலிங்கம்.

அடிப்படை அறிவியல் பயிற்சி பெற்றதாலோ என்னவோ என்னைப் புனைவுகளைவிட புனைவிலிகளே பெரிதும் கவர்கின்றன. நான் வாசிக்கும் நான்கு புத்தகங்களில் (துறை தவிர்த்த பொது நூல்களில் மாத்திரம்) மூன்றாவது புனைவு தவிர்த்த கட்டுரைகளாக இருக்கும். புனைவில் கரைகண்டவர்கள்கூட பெரிய சவாலாகவும் படைப்பில் திருப்தி தருவனவாகவும் தங்கள் புனைவு தவிர்த்த எழுத்துக்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதில் கப்ரியோல் கார்ஷியா மார்க்குவெஸ், ஹோஸே ஸரமாகோ, ஓர்ஹான் பார்முக், நைப்பல், சல்மான் ருஷ்டி, நம்மூரில் சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன் எனப் பலரும் தொடர்ச்சியாகப் புனைவு தவிர்த்த படைப்புகளைத் தந்துவருகிறார்கள்.

வெற்றி பெற்ற புனைவிலி எழுத்துக்களை அடையாளம் காண நான் பின்வரும் அளவுகோல்களைப் பயன்படுத்துகிறேன்;

  1. சொல்லப்பட்ட விடயத்தின் ஆழம் வாசிக்கும் வேகத்தை மட்டுப்படுத்துகிறதா? புனைவு சமாச்சாரங்களில் இது அதிமுக்கியமில்லை; பத்திகளை விரைவாகக் கடந்து விடயத்தை உட்கிரக்கிக்கமுடியும். தேர்ந்த எழுத்தாளரின் கட்டுரைகளில் ஒவ்வொரு வரியும் தவிர்க்க இயலாததாக இருக்கும், அதே நேரத்தில் அவற்றை மிக எளிதாக வாசித்து உட்கிரகிக்க முடியும். மேதாவிலாசத்தைக் காட்ட வாக்கியங்களை ஒடித்துப்போடுவதும், பத்திகளை அடர்த்தியாக்குவதும் கட்டுரைகளில் சாத்தியமில்லாதது.
  2. பிற எழுத்தாளர்கள் இதே கருத்தை எப்படி எழுதியிருக்கக்கூடும்? அவற்றிலிருந்து இது தனிப்படுகிறதா? அவற்றிலிருந்து இது எப்படி மேம்படுகிறது?
  3. சொல்லும் தன்மை சொல்லவந்த விடயத்தைப் பாதிக்கிறதா? வெற்றிகரமான எழுத்தாளர்களே இதில் பெரிதும் சறுக்கிவிடும் சாத்தியம் இருக்கிறது.
  4. எழுத்து எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது?
  5. இதிலிருந்து எந்தக் கருத்தை நாம் உள்வாங்கி மற்றவருக்குச் சொல்ல முயற்சிப்போம்?

இந்த ஐந்து முக்கிய அளவீடுகளையும் ஒவ்வொரு வாசிப்பின் இறுதியிலும் இட்டுப் பார்த்தால் முத்துலிங்கம் முழு வெற்றியுடன் வெளியேவருகிறார். உதாரணமாக சிலவற்றைச் சொல்கிறேன்;

சொல்லப்படும் விஷயகனம் வாசிப்பின் வேகத்தை மட்டுப்படுத்துகிறதா என்ற கேள்வி முத்துலிங்கத்தின் எந்த ஒரு கட்டுரையை முடித்தபின்னும் எழுந்ததில்லை, அவர் கணினி வைரஸ் பரவும் வேகத்தைச் சொன்னாலும், புதிதாகக் கண்டெடுத்த ஒரு ஆங்கில எழுத்தாளரை அறிமுகப்படுத்தினாலும், கனடா வாழ்வின் அற்புதத்தையும் அபத்தங்களையும் சொன்னாலும் - எதுவாக இருந்தாலும் அவரது கட்டுரைகள் பந்தயக் குதிரையின் கதியில்தான் பயணிக்கின்றன. சிறுகதையின் வடிவமைப்பிலிருக்கும் தனது அற்புத பரிச்சயத்தை அப்படியே புனைவற்ற எழுத்துக்களுக்கும் அசகாயமாகப் புலம்பெயர்த்துக்கொண்டு வருகிறார். இந்த அளவிற்குக் கட்டுரை வடிவத்திலும் சொல்லடக்கத்திலும் செய்நேர்த்தியிலும் தேர்ச்சிபெற்றவர்கள் தமிழில் மிகச் சிலர்தாம்.

‘இலக்கியப் பற்றாக்குறை’ என்றொரு கட்டுரை. மொழிப்பயன்பாடு, மொழியாளுமை குறித்து பல புத்தகங்களையும் கட்டுரைகளையும் நாம் வாசித்திருப்போம். ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியைப் போல விரலைப் பிடித்து ஆனா எழுதச் சொல்லிக் கொடுப்பவர்கள் இருக்கிறார்கள், என்னுடைய எட்டாம் வகுப்பு வாத்தியார் ஜான் டேவிட்-ஐப் போல மேசையில் கைவைக்கச் சொல்லி முட்டியில் பிரம்பால் அடிக்கும் மொழியாளுமைப் பாடங்களும் உண்டு. முத்துலிங்கத்தின் உத்தி இவற்றைக் கடந்தது. தொலைக்காட்சியில் முதியவருக்கான நிகழ்ச்சிக்குப் “பழமுதிர்ச்சோலை’ என்று பெயர்வைப்பதிலும், கணவனின் தங்கச்சி அவருக்கு முன்னால் வீடு வாங்கிவிட்டதாகச் சொல்லி மோவாய்க்கட்டையில் இடித்துக் கொள்ளும் மனைவியின் வார்த்தை வழியாக வீடு வாங்க தங்களிடம் அழைக்கும் விளம்பரத்தில் இருக்கும் அபத்தததையும் போகிற போக்கில் சொல்கிறார் முத்துலிங்கம். வாசிப்பு முழுவதிலும் உதட்டில் புன்முறுவல் தரிப்பதைத் தவிர்ப்பது கடினம். வாசித்து நிறுத்தியவுடன் நாம் எப்படி எழுதுவோம், நம் எழுத்தில் என்ன அபத்தங்கள் இருக்கும் என்று திகிலடைவது தவிர்க்க இயலாது. இதுதான் முத்துலிங்கத்தின் வெற்றி. கட்டுரை முழுவதிலும் இப்படி எழுதவேண்டும் என்று கையைப் பிடித்துச் சொல்வதில்லை; கட்டுரை முழுவதிலும் இப்படி எழுதக்கூடாது என்று கையில் பிரம்படி போடுவதில்லை. ஆனால் மொழிப்பிரயோகத்தில் கவனம் வேண்டும் என்ற பாடத்தை நாமாகக் கற்றுக்கொள்கிறோம்.

இப்படி ஒவ்வொரு அளவுகோல்களிலும் முத்துலிங்கத்தின் கட்டுரைகள் பெருமதிப்பெண்களைப் பெறுகின்றன. தாம் கண்டந்த அற்புதங்களைக் கண்விரியப் பிறரிடம் சொல்வது சிறு குழந்தைகளுக்கு மாத்திரமே முழுவதும் சத்தியமாகிறது. வளர வளர நாம், நம்மைப்பற்றிய மாபெரும் உன்னத பிம்பத்தைக் கட்டியெழுப்பிக் கொள்கிறோம். அந்தப் பிம்பம் அற்புதங்களைக் கண்டடைய குழந்தைக்கு இருக்கும் ஆர்வத்தைச் சிதைக்கிறது. அது அற்புதங்களை நேரிடையாகப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளத் தடையாகின்றது. வாழும்வரையில் வானம் வரையில் கண்ணை விரித்து இயற்கையையும் வாழ்க்கையையும் வாசிப்பது சிலருக்கே சாத்தியமாகின்றது. என்னைப் பொருத்தவரையில் அந்த அற்புத வரம் முத்துலிங்கத்திற்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது. அவர் அனுபவப் பகிர்வுகள் வாயிலாக அது நம்மைப் போன்ற புல்லுக்கும் கொஞ்சம் பொசிந்துவருகிறது.

முத்துலிங்கத்தின் எழுத்தில் சோகம், தவிப்பு, கோரம், ஏக்கம், இவற்றை நேரடியாகக் காண்பது அரிது. எங்காவது, எப்போதாவது அவை தலையெடுக்கக்கூடும். வாழ்வின் மிகச் சிக்கலான தருணங்களையும், அவலங்களையும் அதிகபட்சமாக வறட்டுப் புன்னகையுடன்தான் முத்துலிங்கம் சொல்கிறார். மறுபுறத்தில் நம்பிக்கை, நியாயம், அன்பு என்று நேரிடையான விஷயங்களுக்கு அவரிடம் பஞ்சமே கிடையாது. இன்றைய அவலங்களைத் தாங்கிக்கொள்ள, கடந்து செல்ல மானிடத்தின் மீதான தேயாத நம்பிக்கையும், பரஸ்பர மனித நேயமும் அத்தியாவசியத் தேவைகளாக இருக்கின்றன. அவற்றை ஐம்பது வருடங்களாக அளப்பரியாது அள்ளி வழங்கி வருபவர் என்ற ரீதியில் முத்துலிங்கம் நமக்குக் கிடைத்த கொடை.

புனைவிலி எழுத்துக்களை முன்வைத்து இன்றைக்கு முத்துலிங்கத்தைப் பற்றிச் சொல்லியாகிவிட்டது. உலகம் விரிந்த பயணம், வாசிப்பு, வசிப்பு, நட்பு இவற்றினூடாகத் தமிழ்ப் புனைவிற்கு முத்துலிங்கத்தின் பங்களிப்பு அளப்பரியது. அவரின் புனைவுலகத்தைப் பற்றிப் பேச வேறொரு சந்தர்ப்பம் இருக்கிறது. அதற்கு அவரது எண்பதாண்டு விழா வரும்.