ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு இயல் விருது’

July 26, 2026 in இலக்கியம்2 minutes

ஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்குக் கனடா இலக்கியத் தோட்டத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’

Iyal Viruthu for Trotsky Marudu

டிராட்ஸ்கி மருது நம் காலத்தின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவர். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாகப் பல்வேறு கலை ஊடகங்களில் இடையறாது இயங்கி, தனது தனித்துவமான கலைப் பரப்பை விரித்தவர். அவருடைய படைப்புகள் தமிழின அடையாளத்துடனான ஆழமான பிணைப்பை வெளிப்படுத்துவதோடு, மக்களிடம் தமிழ்ப் பண்பாட்டு மரபின் மீது பெருமித உணர்வை ஊட்டியுள்ளன.

தைலவண்ணம், துணி வடிவமைப்பு, விளக்கப்படம், உயிருட்டுப் படங்கள், அரங்க அமைப்பு, சுவரொட்டிகள், சித்திரக் கதைகள் எனப் பல்வேறு கலை வடிவங்களில் மருது சிறப்பாகப் பணியாற்றியுள்ளார். நவீன தமிழ் இலக்கியத்திற்கென ஒரு தனித்துவமான காட்சிமொழியை உருவாக்குவதில் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது. பொதுவில் ஓவியர்கள் புனைவின் ஒற்றைக் காட்சிப் பிரதிபலிப்பாகவே தம் ஓவியத்தை வரைவார்கள். மருது விதிவிலக்கானவர்; அவரது ஓவியங்கள் கதையின் சுயாதீனமான காட்சிவழி வாசிப்புகளாகத் தன்னியல்பாக இணைகின்றன. இதனால் காட்சி, உரை ஆகிய இரு வடிவங்களுக்கும் இடையில் படைப்பூக்கமிக்க உரையாடல் சாத்தியமாகிறது. அது வாசகரை இரண்டையும் விமர்சனபூர்வமாக அணுகத் தூண்டுகிறது. கலைஞரும் எழுத்தாளரும் கைகோர்த்து வாசகரின் அழகியல் அனுபவத்தை உயர் தளத்திற்குச் செலுத்தும் இச்சாதனை தனித்துவமானது.

மருதுவின் ஓவியங்கள் பரப்பிலக்கியம்-சிற்றிதழ், செவ்வியல்-நவீனம், வெகுஜனம்-தீவிரம் போன்ற இருமைகளை எளிதாக் கடந்துசெல்வன. குழந்தையின் களங்கமற்ற மனதோடும், தியான மரபில் கூறப்படும் “ஆரம்ப மனநிலை” என்னும் திறந்த உள்ளத்தோடும், பல்வேறு கலை வடிவங்களை அவர் இடையறாது ஆராய்ந்து வருகிறார். அதேவேளையில், தமிழர் பண்பாட்டுப் பிரதிநிதித்துவத்தின் பரிணாமத்தை மிகுந்த நுட்பத்துடனும் தீவிர ஆய்வுடனும் அணுகியுள்ளார். உதாரணமாக, தமிழத் திரையுலகில் மன்னர்களைக் காட்சிப்படுத்துவதில் நீண்டகாலமாக ஆதிக்கம் செலுத்திவரும் பார்சி நாடகப் பாரம்பரியத்தை மறுதலித்து, தமிழ்ச் சிற்பங்கள், இலக்கியங்கள் இவற்றின் அடியொற்றி, தமிழ்க் கதாமாந்தர்களின் அழகியலை மறுவரையறை செய்தவர் மருது. இந்த முற்றிலும் புதிய அணுகுமுறை, பண்பாட்டு ஆய்வாளர்களையும் கலை ஆர்வலர்களையும், வரலாறு, தமிழ் அழகியல், தனித்துவம் ஆகியவற்றை முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் அணுக அழைக்கிறது.

தமிழ்க் கலைக்கும் இலக்கியத்திற்கும் அவர் ஆற்றிவரும் தனித்துவமிக்க, உயரிய, நீண்டகால பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், டிராட்ஸ்கி மருதுவுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான அ.முத்துலிங்கம் இயல் விருதை வழங்குவதில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமிதம் கொள்கிறது. இயல் விருது விழா 18 அக்டோபர் 2026 அன்று டொராண்டோ நகரில் நடைபெறும்.