ஐன்ஸ்டைனும் பிக்காஸோவும் குறித்து விவேக்

March 12, 2026 in அறிவியல், கலைகள் 5 minutes

சொல்வனத்தில் வெளியாகியிருக்கும் ஐன்ஸ்டைனும் பிக்காஸோவும் குறித்த என் கட்டுரைக்கு விவேக் சுப்ரமணியன் எழுதிய கருத்து.

இருபதாம் நூற்றாண்டின் இரு பெரும் ஆளுமைகளான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் மற்றும் பப்லோ பிக்காஸோ ஆகியோரை, பொதுவான கலாசார மாற்றத்திற்குள் பேராசிரியர் வெங்கட் பொருத்திப் பார்க்கிறார். இயற்பியலையும் கலையையும் தனித்தனித் துறைகளாகப் பார்க்காமல், அது இணையும் இடத்தில் இவ்விரு துறைகளும் எவ்வாறு எதிர்வினையாற்றின என்பதை இக்கட்டுரை வாதிடுகிறது. நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவிய அறிவுசார் சூழல் குறித்த நுட்பமான அவதானிப்பு இக்கட்டுரையின் முக்கிய அம்சமாகும். நியூட்டனின் absolute space and time என்ற கோட்பாட்டை ஐன்ஸ்டைனின் ஆய்வுகள் தகர்த்ததையும், அதற்குப் பதிலாக காலம் மற்றும் வெளி என்பது ஒரு பார்வையாளரின் frame of reference என்ற புதிய கட்டமைப்பை அவர் உருவாக்கியதையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்த அறிவியல் மாற்றம், Cubism பாணி ஓவியத்தின் உத்தியுடன் மறைமுகமாக ஒப்பிடப்படுகிறது. கியூபிசத்தில் ஒரு பொருள் ஒரே நேரத்தில் பல கோணங்களில் இருந்து சித்தரிக்கப்படுகிறது. செவ்வியல் இயற்பியலும் செவ்வியல் ஓவிய முறையும் யதார்த்தத்தை நிலையான உண்மையாகக் கருதின; ஆனால் நவீன அறிவியலும் நவீன கலையும் perception என்பது சார்புடையது என்பதை வெளிப்படுத்தத் தொடங்கின என்று இக்கட்டுரை உணர்த்துகிறது.

அக்காலத்தில் ஐரோப்பாவில் உலாவிய கணித மற்றும் தத்துவக் கருத்துக்களையும் இக்கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. வடிவியல் மற்றும் வெளி குறித்த விவாதங்களை முன்னெடுத்த ஹென்றி பாய்ன்கரே போன்ற சிந்தனையாளர்களை இது குறிப்பிடுகிறது. இந்தக் கருத்துக்கள் மாரிஸ் பிரின்செட் போன்ற கணிதவியலாளர்கள் மூலம் பாரிஸின் நவீனக் கலை வட்டாரங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் விளைவாக, non-Euclidean geometry மற்றும் 4th dimension போன்ற கருத்துக்கள் அறிவியல் இதழ்களோடு நின்றுவிடாமல், கலைஞர்களின் கற்பனையிலும் ஊடுருவின. கியூபிச ஓவியர்கள் பொருட்களை நிலையான வடிவங்களாகப் பார்க்காமல், காலம் மற்றும் பல கோணங்களின் வழியாக உணரப்படும் ஒன்றாகப் பிரதிபலிக்க முயன்றனர்.

இந்தத் துறைசார்ந்த ஒருங்கிணைந்த பார்வை இக்கட்டுரையின் மிகச் சிறந்த பங்களிப்பாகும். ஒரு குறிப்பிட்ட துறையில் ஏற்படும் பெரிய மாற்றங்கள் பெரும்பாலும் தனித்தனியாக நிகழ்வதில்லை என்பதை வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. அறிவியல் புரட்சிகள் பல நேரங்களில் தத்துவம், இலக்கியம் மற்றும் கலை உலகில் நிகழும் மாற்றங்களோடு இணைந்து தோன்றுகின்றன; அவை ஒருவருக்கொருவர் நேரடி காரணங்களாக இல்லாவிட்டாலும், ஒரே காலகட்டத்தின் சூழலைப் பகிர்ந்து கொள்கின்றன. ஐன்ஸ்டைனையும் பிக்காஸோவையும் அருகருகே வைத்து பார்க்கும் போது, நவீனத்துவம் என்பது வெறும் அறிவியல் முன்னேற்றம் மட்டுமல்ல; அது மனிதர் உலகைப் புரிந்துகொள்ளும் முறையிலும், அதைப் பார்க்கும் பார்வையிலும் ஏற்பட்ட ஒரு விரிவான மறுசீரமைப்பாக இருந்தது என்பதை இக்கட்டுரை நினைவூட்டுகிறது.

இக்கட்டுரை சில கேள்விகளையும் எழுப்புகிறது. பிக்காஸோவின் ஓவிய வளர்ச்சியை விளக்கும்போது, மட்டீஸ் மற்றும் செஸான் போன்ற கலைஞர்களின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர் விளக்குகிறார். ஆனால் சார்பியல் தத்துவத்திற்கும் கியூபிசத்திற்கும் இடையிலான தொடர்பு பெரும்பாலும் ஒரு கருத்தியல் ஒப்பீடாகவே முன்வைக்கப்படுகிறது; அது வரலாற்றுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நேரடித் தாக்கமாக விளக்கப்படவில்லை. மேலும் இயற்பியல், உயிரியல், கணிதம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளுக்கு கட்டுரை விரைவாக நகர்வதால் அதன் மைய வாதம் சற்றே நீர்த்துப்போகும் அபாயம் உள்ளது. பிக்காஸோவின் ஓவியங்களைப் போலவே, ஐன்ஸ்டைனின் குறிப்பிட்ட எழுத்துக்கள் அல்லது அறிவியல் வாதங்களையும் இணைத்து ஒரு ஆழமான ஒப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால், இந்த ஒப்பீடு இன்னும் வலுவாக இருந்திருக்கும்.

இந்தக் கட்டுரையில் ஒரு collective shift of consciousness என்ற உணர்வை நான் காண்கிறேன். ஐன்ஸ்டைனும் பிக்காஸோவும் ஒருவரை ஒருவர் அறியாமலேயே தத்தமது துறைகளில் எல்லைகளை உடைத்தெறிந்தனர். இந்த ஒத்திசைவு தற்செயலான சம்பவமாக மட்டும் பார்க்க முடியாது; அது 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான நவீனத்துவ சிந்தனையின் பரவலான மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த அம்சத்தை கட்டுரை மேலும் விரிவாகத் தொட்டிருந்தால், இப்புரட்சிகள் தனிநபர் சாதனைகளாக மட்டுமல்லாமல், ஒரு பரந்த பண்பாட்டு மாற்றத்தின் வெளிப்பாடாக வாசகர்களுக்கு இன்னும் தெளிவாக உணர்த்தியிருக்கும். அதே நேரத்தில், இது தனியாக விரிவாக விவாதிக்க வேண்டிய ஒரு பெரிய பொருள் என்பதால், வெங்கட் அதை இந்தக் கட்டுரையில் விரிவுபடுத்தாமல் விட்டிருந்தால் அதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

அறிவுசார் புரட்சிகள் பல துறைகளில் ஒரே காலகட்டத்தில் நிகழ்கின்றன என்பதே இக்கட்டுரையின் மிக முக்கியமான சாராம்சமாகத் தோன்றுகிறது. அறிவியல் பிரபஞ்சத்தை நாம் புரிந்துகொள்ளும் முறையை மாற்றுகிறது; கலை அதையே நாம் காணும் மற்றும் உணரும் முறையை மாற்றுகிறது. இந்த இரு மாற்றங்களும் ஒரே நேரத்தில் நிகழும்போது, அவை தனித்தனி துறைகளின் சாதனைகளாக மட்டுமல்லாமல், மனிதச் சிந்தனையில் ஏற்பட்டுள்ள ஒரு ஆழமான பரிணாம மாற்றத்தின் அடையாளங்களாகத் திகழ்கின்றன. பால் செஸான் மற்றும் மட்டீஸ் போன்ற முன்னோடி கலைஞர்களின் தாக்கத்தை ஏற்றுக்கொண்டபோதும், அவர்களைப் பின்பற்றாமல் தன்னை வேறுபடுத்திக் கொள்ளும் முயற்சி பிக்காஸோவின் படைப்பாற்றலை காட்டுகிறது. அவர்களின் திறந்த வெளி காட்சிகளைப் போலல்லாமல், அவின்யானின் யுவதிகள் போன்ற படைப்புகளில் அவர் ஒரு புதிய கலைச் சோதனையை முன்வைத்தார். பிக்காஸோ வரையப்பட்ட பெண்கள் வெறும் அழகியல் உருவங்கள் அல்ல. அவை சமூக வாழ்க்கையின் சிக்கல்களையும் மனித நிலையின் கடினத்தையும் வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக விலைமாதுக்களின் வாழ்க்கை நெருக்கடியை காட்டும் வகையில் உருவங்கள் நெருக்கமாக அமைக்கப்பட்டுள்ளன.

படிக்கவேண்டிய கட்டுரை, நம் உழைப்பை கோரும் கட்டுரையும் கூட.

என் மறுவினை

விரிவான, ஆழமான மறுவினைக்கு நன்றி, விவேக்.

இந்தத் துறைசார்ந்த ஒருங்கிணைந்த பார்வை இக்கட்டுரையின் மிகச் சிறந்த பங்களிப்பாகும். ஒரு குறிப்பிட்ட துறையில் ஏற்படும் பெரிய மாற்றங்கள் பெரும்பாலும் தனித்தனியாக நிகழ்வதில்லை என்பதை வரலாறு நமக்கு நினைவூட்டுகிறது. அறிவியல் புரட்சிகள் பல நேரங்களில் தத்துவம், இலக்கியம் மற்றும் கலை உலகில் நிகழும் மாற்றங்களோடு இணைந்து தோன்றுகின்றன;

மானுட அறிவு தொடர்ச்சியாக விரிவடைதல் இயற்கை. அந்த விரிவடைவதன் கூடவே அது பகுப்படைவதும் தவிர்க்கமுடியாதது. எட்டாம் வகுப்பில் அறிவியல் > பதினொன்றாம் வகுப்பில் இயற்பியல் > இளங்கலையில் ஒளியியல் > முதுகலையில் லேசர் ஒளியியல், ஆய்வில் > நேரிலி/குவாண்டம் ஒளியியல்- என் கல்வியின் பாதை. ஒவ்வொரு கட்டத்திலும் வரலாறு, விலங்கியல், வேதியியல், அணுத்துகள் இயற்பியல் என்று முன்னர் கற்றுக் கொண்டிருந்தவை கொஞ்சம் கொஞ்சமாக அந்நியப்பட்டுப்போயின. ஆனால் ஒரு நிலையில் இப்பொழுது என் தினசரி வேலைக்கு மருத்துவம், நானோ வேதியியல், மின்னணுக் கருவிகள், கணினிகள், என்ற வடிவஙக்ளில் எல்லாமே மீண்டும் வந்து சேர்ந்துவிட்டன. நாம் தொடர்ச்சியாகக் குதிருக்குள் (Silos) அடைபட்டுக்கொண்டாலும், ஒரு குதிருக்குள் நடப்பது இன்னொன்றைக் கட்டாயம் பாதிக்கிறது. மற்ற குதிர்களுக்குள் என்ன நடக்கிறது என்ற விழிப்புணர்வு நம் குதிருக்குள் நம் வேலையைச் சிறப்பாகச் செய்ய அவசியமாகிறது. இதையே நீட்டித்தால் தத்துவம், இலக்கியம், ஓவியம், அறிவியல் எல்லாமே எல்லா காலகட்டங்களிலும் ஒன்றையொன்று பாதித்து, முற்செலுத்திக் கொண்டுதான் இருந்திருக்கின்றன என்ற பிணைப்பை அனுபவ ரீதியாக உணரமுடிகிறது. (ஜெ ஒரு பதிவில் இலக்கிய வாசிப்பு அனுபவம் எப்படி ஒருவருக்கு சந்தைப்படுத்தலில் உதவியது என்று எழுதியிருப்பார்.) நான் சொல்வனத்தில் எழுதிய தொடர் சில மானுட சிந்தனைகளின் சந்திகளை அடையாளம் காணும் சிறிய முயற்சி.

இக்கட்டுரை சில கேள்விகளையும் எழுப்புகிறது. பிக்காஸோவின் ஓவிய வளர்ச்சியை விளக்கும்போது, மட்டீஸ் மற்றும் செஸான் போன்ற கலைஞர்களின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகளுடன் ஆசிரியர் விளக்குகிறார். ஆனால் சார்பியல் தத்துவத்திற்கும் கியூபிசத்திற்கும் இடையிலான தொடர்பு பெரும்பாலும் ஒரு கருத்தியல் ஒப்பீடாகவே முன்வைக்கப்படுகிறது; அது வரலாற்றுப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட நேரடித் தாக்கமாக விளக்கப்படவில்லை.

வெறும் கருத்தியல் ஓப்பீடுதான் சாத்தியம் என்றே நினைக்கிறேன். எந்த ஒருவகையிலும் கலையை அறிவியலைக் கொண்டு விளக்கிவிட/வரையறைப்படுத்த முடியாது. ஃப்ராய்ட்-ன் தாக்கம் குஸ்தாவ் கிளிம்ட்டின் ஓவியங்களில் காணப்படுகிறது என்றோ நுண்ணுக்கியால் அறியப்பட்ட உயிரிகளின் வடிவங்களிலிருந்து வாஸிலி கண்டின்ஸ்கி எப்படி புது உத்திகளைப் பெற்றார் என்றோ முழுமையாக நிறுவுவது சாத்தியமில்லை, ஆனால் அவை தொட்டுச்செல்லும் புள்ளிகளை நிச்சயம் கண்டெடுக்கலாம். ஐன்ஸ்டைனுக்கு பிக்காஸோவின் சதுரவியத்தில் ஆர்வமே இல்லை (அவருக்கு செவ்வியல் ஓவியங்களில் ஓரளவுக்குப் பரிச்சயம் உண்டு), மறுபுறத்தில் பிக்காஸோ எந்த அறிவியல் புரிதலும் என்னைச் சதுரவியத்திற்கு இட்டுச் செல்லவில்லை என்று தீர்க்கமாக மறுத்திருக்கிறார். ஆனால் முப்பரிமாணத்தைக் கடந்த வெளியும், நேரொழுக்கிலில்லாத காலமும் இரண்டுபேருக்கும் கிரியா ஊக்கிகளாக இருந்தது சர்வ நிச்சயம். ஒருவகையில் அந்த மேதைகளுக்குத் தம்மை சுயம்புகள் என்று நிறுவிக்கொள்வது அவசியமாக இருந்திருக்கிறது.

இந்த அம்சத்தை கட்டுரை மேலும் விரிவாகத் தொட்டிருந்தால், இப்புரட்சிகள் தனிநபர் சாதனைகளாக மட்டுமல்லாமல், ஒரு பரந்த பண்பாட்டு மாற்றத்தின் வெளிப்பாடாக வாசகர்களுக்கு இன்னும் தெளிவாக உணர்த்தியிருக்கும். அதே நேரத்தில், இது தனியாக விரிவாக விவாதிக்க வேண்டிய ஒரு பெரிய பொருள் என்பதால், வெங்கட் அதை இந்தக் கட்டுரையில் விரிவுபடுத்தாமல் விட்டிருந்தால் அதையும் புரிந்துகொள்ள முடிகிறது.

நிச்சயமாக இதை ஒரு முழுப்புத்தகம் அளவுக்கு எழுதமுடியும். சால்வடோர் டலி நாற்பரிமாண டெஸராக்ட் (tesseract)டின் புரிதலை எப்படி தன் ஓவியங்களில் பயன்படுத்தினார். ஜார்ஜ் ப்ராஹ் எப்படி முக்காலங்களையும் இருபரிமாணத்துக்குள் அடைக்க முற்பட்டார், ஆஸ்திரிய ஓவியர்களுக்கும் உளவியல் மேதைகளுக்கும் இருந்த பிணைப்பு, ரெனெ மக்ரீட் பார்வை அறிமுறை கருத்துகளை எப்படி ஓவியமாக்கினார், பாக்-கின் இசைக்கும் கணிதத் தொடர்களுக்கும் இருக்கும் ஒப்புமை,… இந்தக் கட்டுரைத் தொடரை விரிவுபடுத்துவதில் எனக்குப் பிரச்சனையில்லை. இதை இந்த அளவுக்குச் சுருக்கத்தான் பெரும்பாடுபட வேண்டியிருந்தது :) வாசிப்பவர்கள் அந்நியப்பட்டுப் போகக்கூடாதே என்ற பயம் எனக்குத் தொடர்ச்சியாக இருக்கிறது.

மீண்டும், நிர்மல் மற்றும் உங்கள் ஆழ்ந்த வாசிப்புக்கும் செறிவான கருத்துகளுக்கும் என் நன்றிகள்!