May 6, 2026 in அறிவியல் 9 minutes
இந்த நீலி இதழில் வெளியான என் கட்டுரையின் மீதான உரையாடல்கள்
கட்டுரையை வாசிக்க: எல்லைகள் தாண்டி விரிந்த பெருங்கனவு
உரையாடல்களுக்கு நன்றி: நிர்மல் குமார், விவேக் சுப்பிரமணியன்
ஜானகி அம்மாளைப் பற்றிய இந்தக் கட்டுரையை நாம் ஏன் கவனமாக வாசிக்க வேண்டும்? “பெண் விஞ்ஞானியின் கதையை” சொல்கிறது என்பதற்காக அல்ல. அத்தகைய வாசிப்பு மிகவும் மேலோட்டமானது; இன்னும் சொல்லப்போனால் பயனற்றது. இந்தக் கட்டுரை அதற்கும் ஆழமான ஒரு தளத்தில் இயங்குகிறது. தனித்துவமான ஆளுமை, எப்படி வரலாற்றின் ஊடாகவும், குறிப்பாக முரண்களின் ஊடாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது என்பதை இக்கட்டுரை அலசுகிறது. இந்த முரண்களை கவனிக்கத் தவறினால், வெறும் வாழ்க்கை வரலாறாகச் சுருங்கிவிடும். அது ஒரு பெரும் பிழையாகவும் அமையும்.
கட்டுரையின் தொடக்கத்திலேயே டெலிச்சேரியில் 1897-இல் அவர் பிறந்த சூழலும், அங்கிருந்த சிக்கலான குடும்பப் பின்னணியும் முன்வைக்கப்படுகின்றன. ஜானகி அம்மாள் பல உலகங்களின் சந்திப்பில் நிற்கிறார்: காலனிய இந்தியா, சாதிய படிநிலைகள், பாலினக் கட்டுப்பாடுகள் மற்றும் எவ்வித அடையாளத்திற்குள்ளும் அடங்காத கலப்புப் பாரம்பரியம். அவரது அறிவியலைப் பேசுவதற்கு முன்னால், அவர் இருந்த அந்த நிலையற்ற சூழலை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை இந்தக் கட்டுரை உணர்த்துகிறது. அந்த நிலையற்ற தன்மை குறைபாடு அல்ல; அதுவே அவரது உருவாக்கத்தின் அடிப்படை விசை.
கட்டுரையில் நுட்பமான வாதம் இழையோடுகிறது: அறிவுத்தளத்தில் நிகழும் அசல் படைப்புத்திறன் Intellectual originality எப்போதும் பாதுகாப்பான மையங்களிலிருந்து உருவாவதில்லை. அது விளிம்புகளிலிருந்தே உதிக்கிறது என்பது . ஜானகி அம்மாள் நிறுவனத்தால் வளர்த்தெடுக்கப்பட்டவர் அல்ல; மாறாக, அவரை முழுமையாகத் தன்னுள் செரித்துக்கொள்ள முடியாத சமூக அமைப்பால் அவர் உருவாக்கப்பட்டவர். அவர் பாரம்பரிய இந்தியச் சமூக ஒழுங்கிற்குள்ளும் இல்லை, காலனிய பிரிட்டிஷ் கட்டமைப்புக்குள்ளும் முழுமையாகப் பொருந்தவில்லை. இந்த in-betweenness அவருக்கு சுதந்திரத்தை வழங்குகிறது. கட்டுரை இதை மிகைப்படுத்திக் காட்டாமல், அதன் வலிகளையும் உராய்வுகளையும் யதார்த்தமாகவே சித்திரிக்கிறது. குறிப்பாக, பாலினக் கட்டுப்பாடுகளை இந்தக் கட்டுரை கையாளும் விதம் மிக நேர்த்தியானது. எங்கும் பிரசங்கம் செய்யவில்லை; மாறாகக் கட்டமைப்பின் வழியாகவே அதைப் புரிய வைக்கிறார். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியலுக்குள் நுழையும் ஒரு பெண், தனக்காக உருவாக்கப்படாத ஒரு களத்தில் பயணிக்கிறார். அங்கு அவரது சமூகப் பின்னணியும் சேரும்போது, அது நேர்க்கோட்டுப் பயணமாக இல்லாமல் ஒரு பெரும் போராட்டமாக மாறுகிறது. ஜானகி அம்மாளை ஒரு குறியீடாக மட்டும் சுருக்காமல், சிக்கலான ஆளுமையாகத் தான் கட்டுரை மதிப்பது பாராட்டுக்குரியது. ஜானகி அம்மாள் தடைகளைத் தாண்டி அறிவியலுக்குள் வந்தவர் மட்டுமல்ல; Cytogenetics மற்றும் தாவர இனப்பெருக்கத்தில் அவர் நிகழ்த்திய மாற்றங்கள் மகத்தானவை. குறிப்பாக இந்தியாவின் கரும்பு ரகங்களை மேம்படுத்துவதில் அவரது பங்கு முக்கியமானது. இந்த விவரங்கள் இல்லையென்றால், வாசகருக்கு அவர் மேல் ஒரு வியப்பு ஏற்படுமே ஒழிய, ஒரு புரிதல் ஏற்படாது.
அவரது சமூகப் பின்னணியை வாசிக்கும் போது அவரது அறிவியல் பங்களிப்புகளை உள்வாங்கிக் கொள்வதில் வாசிக்கும் நமக்கு ஒருவிதச் சமநிலையின்மையை உருவாக்கிவிடுகிறது. எனக்கு கட்டுரையை வாசித்து தொகுக்கும்போது இந்த முரண் இயல்பாக எழுந்தது. ஒருவகையில், அவரது ஆளுமையின் பிரம்மாண்டமே அவரது அறிவியல் நுணுக்கங்களை மறைத்துவிடுகிறதோ என்று தோன்றுகிறது. Janaki Ammal-Scientific Methodology என்று தனியாக நீங்கள் எழுதவேண்டும் போல.
அதே சமயம், இக்கட்டுரையின் மெய்யியல் பார்வை ஆழமானது. அறிவு என்பது வரலாற்றிலிருந்து தனித்து இயங்குவது அல்ல. அது அடையாளம், அதிகாரம், ஏற்பு மற்றும் நிராகரிப்பு ஆகியவற்றோடு பிணைக்கப்பட்டது என்பதை இது உணர்த்துகிறது. இங்கு ஜானகி அம்மாள் வெறும் வரலாற்று நாயகியாக அல்லாது புறக்கட்டுப்பாடுகளிலிருந்து ஒரு மனம் எப்படி விடுபட்டுத் தன்னைச் செதுக்கிக் கொள்கிறது என்பதற்கான ஒரு Case study.
அவர் தடைகளைத் தாண்டினார் என்று மேலோட்டமாகச் சொல்லமுடியாது. அவர் எங்குமே முழுமையாகப் பொருந்தவில்லை, அந்த ஒவ்வாமையே அவரது சுதந்திரமான சிந்தனைக்குக் களம் அமைத்துக் கொடுத்தது என்பதே கட்டுரையின் மூலமாக எம்முடைய அவதானிப்பு. அவர் அமைப்புகளைச் சமாளிக்கவில்லை; மாறாகத் தனது அறிவுத் திறத்தால் அந்த அமைப்புகளையே பொருளற்றதாக்கினார்.
காலனிய நவீனத்துவத்தைப் பற்றிய பார்வையும் இதில் முக்கியமானது. அறிவியல் என்பது தற்போதைய காலக்கட்ட நடுநிலையான தளம் அப்போது அல்ல; ஏகாதிபத்தியத்தின் ஒரு அங்கமாகவும் இருந்தது. அத்தகைய இடத்திற்குள் ஜானகி அம்மாள் நுழைவது என்பது வெறும் தொழில்முறை நகர்வு அல்ல; Crossing of epistemic boundaries . ஜானகி அம்மாளின் வாழ்க்கை வரலாறு, அடையாளம் மற்றும் அறிவுத்திறன் ஆகிய மூன்றின் அடிப்படையிலேயே இக்கட்டுரை சிறந்த வரைபடத்தைத் நமக்கு தரும். சிறந்த சிந்தனையாளர்கள் இக்கட்டான சூழல்களால் மட்டும் உருவாவதில்லை; சில நேரங்களில் அத்தகைய சூழல்களே அவர்களைச் சாத்தியமாக்குகின்றன. ஜானகி அம்மாள் அத்தகையதொரு சிந்தனையாளர் தான்.
Ethical and Morality தளத்தில் ஜானகி அம்மாள் மீது எனக்கு விமர்சனம் எழுகிறது. கேரளாவின் சூழியல் அழிவிற்கு குரல் கொடுத்த அவர் The Evolution of Man and Society நிறவெறி புத்தகம் எழுதிய பின்பும் அவரின் டார்லிங்டன் மீதான ஈர்ப்பு அவருக்கு இருந்தது முரணாக உள்ளது. சித்தார்த் முகர்ஜியின் The Gene: An Intimate History புத்தகத்தில் செல் ஆராய்ச்சி வரலாற்றை குறித்து எழுதும்போது human populations through selective breeding or genetic manipulation பற்றி சொல்லியிருப்பார். அதைப் பற்றி பின்னொரு சமயத்தில் விவாதிக்க வேண்டும்.
விவேக், கட்டுரையை நான் எழுதும்போது இருந்த மனநிலைக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். இது எனக்கு நிறைவைத் தருகிறது. ஜானகியம்மாள் திட்டமிட்டுத் தன் ஆளுமையை உருவாக்கிக் கொள்ளவில்லை. சூழல் அவர் போக்கைத் தொடர்ச்சியாக நிர்வகித்துக் கொண்டிருந்தது. பள்ளத்தில் பாயும், மேட்டில் தேங்கும், ஏன் கோடையில் வரண்டுபோகும் நதியாகத்தான் அவரை என்னால் பார்க்கமுடிகிறது. அந்த நதி பல படகுகளை அக்கரை சேர்க்கும்; சில அவற்றின் சுழிப்பால் கவிழக்கூடும். ஒட்டுமொத்தமாக அவர் வாழ்வையும் பங்களிப்புகளையும் பார்க்கும்போது அவருடைய மையம்-தவிர்க்கும் அறிவியல் முறைமை துலக்கமாக வெளிப்படுகிறது.
சிரில் டார்லிங்டனுக்கும் ஜானகிக்கும் இருந்த உறவை எந்த வகையிலும் எளிதில் புரிந்துகொள்ள முடியாது. ஒருபுறம் சிரில், இன்றைக்கு எந்த நிறுவனத்திலும் எளிதாகப் பதவி நீக்கம் செய்ய சாத்தியமான, நெருங்கிய உறவைத் தன் அதிகாரத்தினால் உருவாக்கி வளர்த்திருக்கிறார். இருவரும் பரஸ்பரம் காதலின் விளிம்பில் தெறிக்கும் வார்த்தைகளாலான கடிதங்களை கிட்டத்தட்ட ஐம்பது வருடஙகளுக்குப் பரிமாறிக்கொண்டிருந்திருக்கிறார்கள். மறுபுறம் ஒரு வேலைக்கான பரிந்துரை தேவைப்பட்டபோது சிரில், “ஜானகி ஒரு தேர்ந்த நுண்ணோக்கித் தொழில்நுட்ப வல்லுநர் மட்டும்தான், அவருக்கு அறிவியல் மேதைமை கிடையாது” என்று சக-ஆங்கிலேய ஆய்வாளருக்கு எழுதியிருக்கிறார். இதே சிரிலின் முக்கிய பங்களிப்பாகச் சொல்லப்பட்ட Chromosome Atlas of Cultivated Plants தொகுப்பு ஜானகியின் முதன்மை பங்களிப்பால்தான் சாத்தியமாகியது (பல வருடங்கள் கழித்து அதன் விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு வந்தபோது இருவருக்கும் பிணக்கு ஏற்பட ஜான்கியின் பெயரில்லாமல், சிரில்-ன் வேறொரு மாணவியின் பெயரைத் தாங்கி வெளிவந்தது. அப்போது இருவருக்குமிடைய இருந்த கடிதப் பரிமாற்றத்தில் ஜானகி தன் சீற்றத்தை மறைக்க எந்த எத்தனத்தையும் மேற்கொள்ளவில்லை. அவருடைய வார்த்தைகள் மிகக்கூர்மையாக வெளிப்பட்டிருக்கின்றன. கட்டுரையின் நீளம் கருதி நான் இவற்றை நீக்கிவிட்டேன்.). ஜானகி “Dearest Cyril, … “yours passionately” என்றெல்லாம் எழுதியது அதற்குப் பல வருங்களுக்குப் பின்தான். முதுமையில்கூட இருவரும் பிரிவாற்றாமை தொனிக்கும் கடிதங்களைப் பரிமாறிக்கொண்டிருக்கிறார்கள்.
Ethical and Morality ரீதியில் ஜானகி மிக மென்மையான விமர்சனங்களைத்தான் சிரிலுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். இதைப் புரிந்துகொள்வது மிகச் சிக்கலானது. வெள்ளை-மலையாளி கலப்பின வழித்தோன்றலான அவர் இரண்டு இனக்குழுக்களுடனும் தன்னை மாறிமாறி அடையாளம் கண்டிருப்பார் என்பது நிச்சயம். நான் கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னதைப்போல ‘வெள்ளைத் தீயன்களுக்கு’ தம்மை வெள்ளையருடன் நெருக்கமான இனங்காணுவது ஒன்றே upward mobility -க்கான வழியாகத் தெரிந்திருக்கிறது. மாறாக மிச்சிகனிலும் இலண்டனிலும் பெரிய நெற்றிப்பொட்டுடனும் பளீரிடும் மஞ்சள்-அரக்குப் பட்டுப் புடவையிலும் உலாவித் தன்னை அந்நியப்படுத்திக் கொண்டிருக்கிறார். அந்தக் காலத்தில் அந்தப் பட்டுப்புடவை மிச்சிகனில் எவவளவு பெரிய பேசுபொருளாக இருந்திருக்கும்!
இப்ப 21ம் நூற்றாண்டில் இருக்கும் தமிழ் இளைஞனிடம் சிரில் டார்லிங்டன், ஜானகி உறவை பற்றி சொன்னால் அவங்க லவ் பண்ணாங்க, கமிட் பண்ணிக்கவில்லை என சொல்வார்கள். இது போல தன் துறை சார்ந்து முழு விசையுடன் இயங்குபவர்கள், கமிட் ஆகாமல் , காதலில் இருப்பதை இன்றைய தலைமுறை எளிதில் எடுத்துக் கொள்கின்றது. ஜானகிக்கு அடுத்து வந்த நம் தலைமுறையில் கண்ணகி, மணிமேகலை, மாதவி என பத்தினி, துறவி, கலை வாழ்வு என ஆர்க்கிடைப் பார்த்து வளர்ந்த தலைமுறைக்கு சிக்கலாக இருக்கலாம்.
அறிவியலில் ரேசிசம் ஒரு காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, ஆய்வு செய்ப்பபடும் விஷயமாகவேதானே இருந்தது. ப்ரான்சிஸ் கால்டன், ப்ரோகோ போன்றவர்களும் உதாரணமே.
“Mainstream Science on Intelligence” statement 1994ல் கூட வந்ததே.
ஜானகி அறிவியலாளர். ஆகவே அவர் சிறிலின் பார்வையை அறிவியல் பார்வையாக பார்த்திருக்க நிறைய வாய்ப்புண்டு.
ஜானகி அம்மாளின் ஆளுமை என்பது எவ்வித அங்கீகாரத்தையும் எதிர்பாராத, அறிவியலுக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்த தூய்மையான வடிவம். ஆனால், அவருக்கும் டார்லிங்டனுக்கும் இடையிலான உறவு எந்த ஒரு வரையறைக்குள்ளும் அடங்க மறுக்கிறது. I have to read their letters, Thanks for pointing out) அவர்களின் உறவு அறிவு பரிமாற்றமோ அல்லது உணர்வுப்பூர்வமான பிணைப்போ மட்டுமல்ல; அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த, அதே சமயம் அதிகார சமநிலையின்மையால் உருவான சிக்கலான வெளி. ரிச்சர்ட் வாக்னரின் இசையை நாம் அணுகும் அதே மனநிலைதான் இங்கும் தேவைப்படுகிறது. வாக்னரின் இசை கலைரீதியாக உன்னதமானது, அதே சமயம் அதன் பின்னால் உள்ள யூத எதிர்ப்பு (சிலர் அப்படி இல்லை என்கிறார்கள் ) கருத்தியல் ஒரு கறையாக நீடிக்கிறது. இதில் ஒன்றை நீக்கிவிட்டு மற்றொன்றைப் பார்க்க முடியாது; இரண்டும் ஒரே சட்டகத்திற்குள் எப்படி முரண்பாடின்றி இயங்குகின்றன என்பதைப் புரிந்துகொள்வதே சவால்.
ஜானகியின் வாழ்வும் இத்தகைய வாசிப்பையே கோருகிறது. அவரது அறிவியல் நேர்மை விவாதத்திற்கு அப்பாற்பட்டது. இருப்பினும், டார்லிங்டனுடனான அவரது பிணைப்பில் அன்பு, சார்ந்திருத்தல், அதிகாரம் மற்றும் எதிர்ப்பு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் செயல்படுகின்றன.
லிஸ் மெய்ட்னர் - ஓட்டோ ஹான் மற்றும் ரோசலிண்ட் ஃபிராங்க்ளின் - மாரிஸ் வில்கின்ஸ் ஆகிய இணைகளைப் போலவே, இங்கும் மேற்பரப்பில் collaboration என்று தோன்றுவது, ஆழத்தில் சமச்சீரற்ற தன்மையை மறைத்து வைத்திருக்கிறது. இந்தச் சமச்சீரற்ற தன்மையே ஒருவரின் அங்கீகாரத்தையும், குரலையும், அவர் விட்டுச்செல்லும் வரலாற்றையும் தீர்மானிக்கிறது. ஜானகியைப் புரிந்துகொள்வது என்பது இந்த முரண்பாடுகளைத் தீர்ப்பதல்ல; மாறாக, அந்த முரண்பாடுகளை அப்படியே ஏற்றுக்கொள்வதுதான். அறிவியலில் திளைத்த ஒரு மனம், நடுநிலைத்தன்மையற்ற ஒரு சமூகச் சூழலில் நகரும்போது, தனது நேர்மையைத் தக்கவைக்க அதிகாரத்துடன் எத்தகைய சமரசங்களையும் போராட்டங்களையும் நிகழ்த்த வேண்டியிருந்தது என்பதையே இது காட்டுகிறது. அங்கீகாரம் மற்றும் அதிகாரம் ஆகியவற்றுக்கு இடையே ஜானகி அம்மாள் எனும் ஆளுமை ஒரு பெரும் போராட்டமாகவே மிளிர்கிறார். கட்டுரைக்கு நன்றி. நீங்கள் எழுதவில்லை என்றால் இதுபோன்ற ஆளுமையை அறிந்துகொள்ளாமலே போயிருக்கும்.
உண்மைதான், நிர்மல். அந்தக் காலங்களில் Human racial purity through selective breeding ஒரு legitimate ஆய்வுத் தலைப்புதான. ஜானகி, சிரில் இருவருமே உண்மையில் எந்தவிதமான மனச்சாய்வுகளும் இல்லாமல (அந்த நாளையின் புரிதலின்பாற்பட்ட) அறிவியல் உண்மையாகவே அதை ஏற்றுக்கொண்டிருக்கலாம். அதுதான் முதல் விளக்கம். இரண்டாவதாகத்தான் நான் சொன்ன கலப்பின மனநிலை.
Eugenics ஒரு பெரிய தலைப்பு. இதில் Plato-வில் தொடங்கி Darwin, Francis Galton, J.B.S. Haldane, Francis Crick, Charles Davenport, William Shockley, Theodore Roosevelt, Emile Zola, John Maynard Keynes,… Rockefeller Foundation,…. Nuremberg trials,…. and Donald Trump to a good measure. இது தமிழில் எழுதப்படவேயில்லை. ஒருநாள் எழுத வேண்டும். ஒரு நாள் போதுமா? இன்றொருநாள் போதுமா.?…
துல்லியம், விவேக். ஜானகி அம்மாளைப் புரிந்துகொள்வதென்பது அவருடைய செயற்பாடுகளை விமர்சிப்பதால் (இன்றைய கண்ணோட்டங்களையும், விழுமியங்களையும் கொண்டு) சாத்தியமாகாது. மாறாக அவரை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொண்டு அவருடைய சூழலுடனும், மனநிலையுடன் அவர் செயற்பாடுகளை அனுகுவதால் மாத்திரமே இயலும்.
மெய்ட்னர்-ஹான், ஃப்ராங்க்ளின் - வில்கின்ஸ்/வாட்ஸன்-கிரிக், போலல்லாது ஜானகி - டார்லிங்க்டன் இணையில் இனச் சமச்சீரின்மை முக்கிய காரணி. கோயம்புத்தூர் கரும்பு ஆய்வு நிலையத்தில் வெங்கட்ராமனுடன் போரிட்ட அதே ஜானகிதான் டார்லிங்டனுடன் இயைந்து செல்லவேண்டியிருந்திருக்கிறார். ஆனால் அவர் அறிவியலில் தன்னை நிரூபித்தபின் டார்லிங்கடனுக்குச் சமமாக அவரகளின் இரண்டாம் பதிப்பு வெளிவரும்போது சணடையிடுதல் சாத்தியமாகியிருக்கிறது. அதன் உச்சத்தில் இரண்டாம் பதிப்பிலிருந்து தன் பெயரை நீக்கச் சொல்லியிருக்கிறார். டார்லிங்டனும் அதை எழுத்துபூர்வ சான்றாகக் கேட்டு வாங்கியபின் அதன் இன்னொரு மாணவியின் பெயரை அதில் இணைத்திருக்கிறார்.
நிஜ வாழ்க்கைக்கு புனைவு ஒருபோதும் ஈடாகாது.
நான் நீலி தொடருக்கான இன்னும் பல சுவாரசியமான ஆளுமைகளை வைத்திருக்கிறேன். எழுதத் துவங்கியதைவிட இப்போது எனக்குத் தொடரில் இன்னும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.
நான் படித்த ஐஐஎஸ்ஸி போன்ற இடங்களில் ஜானகியைப் போன்ற ஆளுமைகளை நிறையப் பார்க்கமுடியும். என் சீனியர் ஒருவர், அவருடைய பேராசிரியரால் ‘நீ சோம்பேறி, முட்டாள், ஆய்வு செய்யத் தகுதியில்லாதவன்’ என்னைவிட்டுப் போய்விடு என்று சொல்லப்பட, அவர் வேறொரு பேராசிரியரிடம் இணைந்துகொண்டார். அப்போது இரண்டாமவர் அவரிடம், “நான் பரிதாபப்பட்டு உன்னுடைய அறிவியல் வாழ்க்கையைக் காப்பாற்றத்தான் கைகொடுக்கிறேன். மற்றபடி நீ செய்யும் ஆய்வுக்கும் எனகும் சம்பந்தமில்லை, என்னால் எந்த வழிகாட்டலையும் உனக்குத் தரமுடியாது” என்ற எச்சரிக்கையுடன்தான் அவரிடம் சேர்த்துக்கொண்டார். அவனுக்கு கிடைத்த மாபெரும் வரம் அதுதான், இரண்டு வருடங்களுக்கு அவன் என்ன செய்தான் என்று யாருக்கும் தெரியாது. ஒருநாள் பதிப்புக்குத் தயாரான ஒரு ஆய்வுக்கட்டுரையின் வரைவைக் கொண்டுபோய் அவரிடம் கொடுத்தான், அவர் ஒருமுறை வாசித்துவிட்டு அதிலிருந்த தன் பெயரை அடித்துவிட்டுத் திரும்பக் கொடுத்தார். அடுத்த ஆறு மாதத்தில் அது நேச்சர் சஞ்சிகையில் வந்தது. அதற்கு முந்தைய இருபது ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து யாருமே நேச்சரில் பதிப்பிக்க முடிந்ததில்லை. ஏன் சி.வி.ராமன் காலத்திலிருந்தே இந்தியாவில் தனியாசிரிய (single author) நேச்சர் கட்டுரைகள் இந்தியாவில் கிடையாது. (இப்போது வேறேதும் உண்டா எனத் தெரியவில்லை. சாத்தியங்கள் மிகக் குறைவுதான்) அந்த ஒரு கட்டுரையுடன் அவன் பட்டம் பெற்று அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகத்திற்குப் போனான்.
கருத்தியல் இயற்பியல் பகுதியில் எப்போதுமே ஆர்வமூட்டும், வியப்பூட்டும், அச்சமூட்டும் ஆளுமைகளைப் பார்த்திருக்கிறேன். ஒரு பேராசிரியருக்கு அசோகமித்திரன் என்றும் அவருடைய மாணவருக்கு ஜி.நாகராஜன் (எனக்குப் பல வருடங்கள் மூத்தவர்) என்றும் பெயர் வைத்திருந்தேன். உண்மையில் அவர்களுடைய ஆளுமைகள் எல்லா வகைகளிலும் அப்படித்தான். இரண்டுபேரும் ஜினியஸ்கள். ஒருநாள் தன் அசோகமித்திரப் பேராசிரியரை யாரோ குறைசொல்ல, மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஜி.நாகராஜ மாணவர் அந்த ஆளை சாப்பாட்டுக்கையால் செவுளில் அறைந்தது ஐஐஎஸ்ஸி காப்பிக்கடையிலும், நூலகத்திலும், கிரிக்கெட் கிரவுண்டிலும், முச்சந்திகளிலும், பெருங் காவியமாக பாடப்பெற்றது.

ஜானகி அம்மாள் தன் மாணவர்களுடன் 80 வயதில் இருக்கும் புகைப்படம் கட்டுரையில் உள்ளது. ஆசிரியருக்கு உள்ள கண்டிப்பும், அன்பும் புகைப்படத்தில் காண முடிந்தது. அது வெங்கட் ஜானகி அம்மாளை பற்றி எழுதியதில் இருந்து புகைப்படத்தில் எனக்கு காட்சியாக புலப்பட்டதா, புகைப்படத்திலேயே அது உள்ளதா என தெரியவில்லை. 80+ வயதில் ஆய்வு மாணவர்களுடன் நிற்கின்றார்.
Yes, I agree, eugenics is a complex and deeply troubling chapter in human history, and it deserves careful, detailed examination. If you write would be happy to read. Based on Dr.Mukherjee’s book The Gene: An Intimate History In 1904, Francis Galton presented his ideas at the London School of Economics, advocating for the production of “healthy children.” At first glance, the language appeared rational, even progressive, but it carried an embedded assumption that human value could be measured, ranked, and ultimately controlled. In fact Bertrand Russell, associated with these intellectual circles, recognized early the danger in reducing human worth to biological criteria and stood in opposition to such thinking. What began as an abstract notion of “improvement” did not remain neutral. Over time, the idea of “health” was reshaped and weaponized, most brutally under the Nazi regime, where it became synonymous with exclusion, purity, and systemic violence of disabled and elderly. This was not an abrupt deviation but a continuation of a flawed premise taken to its extreme where science ceased to question and instead served ideology.
Siddhartha Mukherjee explores this transformation, showing how the story of genetics is inseparable from the story of power, ethics, and misuse. I remember buying the book on its release in 2016 at Barnes & Noble, a reminder that these are not distant abstractions but ongoing conversations. Even in the United States 1970’s, advances in genome sequencing, gene editing, and DNA research triggered student-led resistance. This was not a rejection of science, but a response shaped by historical memory particularly the shadow of World War II and the catastrophic consequences of misapplied scientific authority. The core issue remains unchanged, the moment we begin defining what constitutes a “better” human being, we risk crossing the same ethical boundary that history has already shown to be dangerously fragile.