January 30, 2023 in அறிவியல் by வெங்கட்ரமணன்6 minutes
நேற்று யாகூ தளத்தில் வந்த ஒரு செய்தியின்படி துருக்கியர்கள் ஒரு புதிய களிம்பைக் கண்டுபிடித்திருக்கிறார்களாம். அதைத் தடவிக்கொண்டால் 'நின்று விளையாட' முடியுமாம்.
நண்பர் பிரகாஷ் என்னுடைய பின்னூட்டப்பெட்டியில் கேட்டிருந்த கேள்வி தொடர்பாக. (அந்தப் பதிவின் தலைப்புக்குத் தொடர்பில்லாதது என்ற வகையில் இதைத் தனியே போடுகிறேன்).
பொதுவாக அறிவியல் விஷயங்களைப் பற்றிப் பேசும் போது, ‘நீங்கள் அனைவரும்’ , எதற்காகவோ, ஒரு இறுக்கமான நடையைக் கையாள்கிறீர்கள். இசை பற்றியோ, சினிமா பற்றியோ, மற்ற பொது விஷயங்கள் பற்றியோ எழுதும் போது, இருக்கும் இளகலான, தோள்மீது கைபோட்டு அணைத்துச் செல்லக்கூடிய பாவனையை, அறிவியல் கட்டுரைகள் எழுதும் போது, வேண்டுமென்றே கழற்றி வைத்து விட்டு, கையில் பிரம்புடன் நிற்கும் கண்ணாடி போட்ட வாத்தியார் பிம்பத்தை அணிந்து கொள்ளுகிறீர்களோ என்று நினைக்கிறேன். இது உங்கள் கட்டுரைகளை, சிற்றிதழ்களில் படித்து வரும் ( இணையத்துக்கு எல்லாம் வராத ) என் நண்பர்கள் சிலரின் அபிப்ராயமும் இதுதான்.[இது மாதிரியெல்லாம் கூட தமிழ்லே வருதா.. என்று வியப்பது வேறு விஷயம்]
நான் கடந்த நான்கு வருடங்களாக அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறேன். சில விமர்சனங்களையும் பொதுவில் ஊக்குவிப்புகளையும் பெற்றுவருகிறேன். நிறைய பாராட்டுகளும் வருகின்றன. (ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்ற விதத்திலேதான் இந்தப் பாராட்டுகளைப் பெற்றுக் கொள்கிறேன்).
சென்ற வாரம் பதிப்பாளர் தமிழினி வசந்தகுமார் என்னுடைய முதல் புத்தகமான “குவாண்டம் கணினி” முழுவதும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்று சந்தோஷமாக எழுதியிருந்தார். மனதுக்குள் மத்தாப்பாகத்தான் இருந்தது. என்னை நம்பி பதிப்பித்த வசந்தகுமாரை ஏமாற்றவில்லை என்ற நிம்மதி எல்லாவற்றையும்விட முக்கியமாக. ஒரு வயது/நான்கு வயது பிள்ளை மாத்திரமே இருந்தபொழுது இந்த விபரீத விளையாட்டுகளுக்கெல்லாம் நேரம் கிடைத்ததைப் போல நான்கு வயது/எட்டு வயது ரெட்டை வால்களை வைத்துக் கொண்டு சாத்தியமாவதில்லை. இப்போதைக்குக் காலச்சுவடில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை நானோ நுட்பத்தைப் பற்றிய தொடர்கட்டுரையை மாத்திரமே ஒப்புக் கொண்டு எழுதிவருகிறேன். முன்னொரு காலத்தில் எழுதிவைத்த லினக்ஸ், தளையறு மென்கலன், திறமூலங்கள் பற்றிய கிட்டத்தட்ட முக்கால் புத்தகத்திற்கான சமாச்சாரத்தை இப்பொழுது தமிழினிக்காகச் செப்பனிட்டு விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறேன். தகுதி இருக்கிறதா இல்லையா என்று தெரியாது. நம்மூர் மக்களுக்கு இதெல்லாம் பற்றி வேறு யாரும் சொல்ல முயலாத நிலையில், நானாவது முயற்சி செய்யலாமே என்று தோன்றுகிறது.
இந்த முயற்சிகளைப் பற்றி என்னிடம் கதைப்பவர்களைச் சரியாக இரண்டு பாதியாகப் பிரிக்கலாம். ஒரு சாரார் நீங்கள் எளிமையாகச் சொல்கிறீர்கள், சொல்வது புரிகிறது, இப்படியே தொடருங்கள் வகை. இன்னொரு சாரார் “ஏன்னங்க, அறிவியல்னு வந்தாலே நீங்க இப்படிப் புரியாத பாஷைல எழுதிறீங்க” என்று சொல்பவர்கள். இவர்களில் பலர் புண்படுத்த வேண்டாமே என்று “நீங்க எழுதறது புரியுது, இன்னும் கொஞ்சம் ஈஸியா படிக்கிறா மாதிரி எழுதினா நல்லா இருக்கும்” என்று சொல்வார்கள்.
என்னைப் பொருத்தவரை நான் தமிழில் அறிவியல் எழுத முன்னோடிகளாகக் கருதுபவர்கள் யார்? வானொலி மாமா தொடங்கி, மணவை முஸ்தபாவரை, கலைக்கதிர் தொடங்கி தமிழக அரசுப் பாடநூல்கள் வரை தமிழில் நான் படித்த பல நடைகள் என்னுள் இருக்கின்றன. New Scientist, Science, Nature, Scientific American, Wired இங்கெல்லாம் வரும் பொதுமக்களுக்கான கட்டுரைகளின் பாதிப்பும் இருக்கிறது. இன்றைக்குத் தமிழில் இதெல்லாம் எழுதத் தலைப்படுபவர்கள் யாரும் சுஜாதாவை ஒதுக்கிவிட முடியாது. தமிழில் அறிவியல் கட்டுரைகளைப் பாமரர்களுக்காக எழுதி அங்கீகரிக்கப்பட்ட வெற்றியைப் பெற்றவர் அவர்தான். முதன் முதலாகப் பெரிய அளவில் வாரப் பத்திரிக்கைகளில் தொழில்நுட்ப (இவர் உண்மையான அறிவியலைப் பற்றி சொல்லிக் கொள்ளும்படி எழுதவில்லை என்பது எ.தா.அ). சமாச்சாரங்களை எழுதியவரும் சுஜாதாதான். இவருக்கு இயற்கையாக வாய்க்கப்பெற்றிருந்தது இவருடைய சுலபமான நடை. இந்த நடை பெரும்பாலும் ஆங்கிலத்திலிருந்து வருவது (இது தமிழுக்கு அவர் அளித்த பெரிய கொடை என்பதும் எ.தா.அ). இதைச் சிரத்தையெடுத்துக் கொண்டு இன்னும் கூராக்கிக் கொண்டார். நில்லுங்கள் ராசாவே, பத்து செகன்ட் முத்தம் போன்றவற்றுக்குப் பயன்படுத்தும் அதே நடையைத் தன்னுடைய நுட்பக் கட்டுரைகளிலும் பயன்படுத்தினார். இதுவே அவரை ஒரு அளவுக்கு மீறி ஆழமான விஷயங்களைப் பேசுவதற்குத் தடையாக இருக்கிறது. இந்த நடையில் படித்த தகவலைப் பரிமாறிக்கொள்ளும் ஆர்வம் இருக்குமேயொழிய தான் சிந்திப்பதைப் பற்றி பிறருக்குச் சொல்லி புரிதலை ஆழமாக்கும் நோக்கம் இருக்காது. இணையம் அகலப்பாட்டை போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்துவிட்ட இன்றைக்கு இன்னொரு சுஜாதா தேவையில்லை. எனவே என் நடையை சுஜாதாவிற்கு மாறாக வரையறுத்துக் கொள்கிறேன் (இதுவே அவரைப் படித்ததற்கு நான் செய்யும் உண்மையான மரியாதை என்று கருதுகிறேன்).
நான் அறிவியல்/நுட்ப சமாச்சாரங்களைப் பற்றி எழுத முற்பட்ட பொழுது இதைத்தான் என்னுடைய துவக்கமாகக் கொண்டேன். என்னாலானது இதற்கு அடுத்த கட்ட முயற்சியாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய துவக்க விதி. இது கட்டுரைகளின் உள்ளடக்கம் மாத்திரமல்லாது நடைக்கும் பொருந்தும். முதன் முதலாக நான் எழுதித் திண்ணையில் பதிப்பான அறிவியல் கட்டுரையின் துவக்கத்தில் இப்படி வருகிறது:
இது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஒருசெல் உயிரிகளும், உயிரியல் அமைப்புவரிசையின் அடித்தட்டில் இருக்கும் நுண்ணுயிரிகளுக்கும் இத்தகைய மரபுச் சொற்றொடர்கள் பல்லாயிரக்கணக்கான எழுத்துக்களைக் கொண்டவை இதில் ஒருசில உயிரிகளுக்கே தற்சமயம் முழுமையான மரபு வரைபடம் தயாராகியுள்ளது.
இதையே சுஜாதா எழுதியிருந்தால் இப்படி எழுதியிருக்கக் கூடும்
இதைச் செய்யறது ஜல்லியடி சமாச்சாரம் இல்லை. ஒருசெல் அமீபா, சிக்கலில்லாத மைக்ரோப்ஸ் இதுக்கெல்லாமே ஜீன் ஸீக்வன்ஸ் பல ஆயிரம் அட்சரம் இருக்கும். இப்போதைக்கு இந்த மாதிரி சிம்பிளான சில ஜீவராசிகளுக்குத்தான் ஜீன் மேப் ரெடியாகியிருக்கிறது.
இதைப் படிக்கும் ஆங்கிலம் தெரியாத வாசகனுக்கு ஜீன் ஸீக்வன்ஸ்னா என்னனு தெரிந்து கொள்வது சுலபமில்லை. அதைவிட முக்கியமாக மரபுச் சொற்றொடர் அப்படீன்னா உள்ளுணர்வினால் மரபு விஷயங்களை வாக்கியமா எழுதிவைப்பது என்று புரிய சாத்தியம் இருக்கிறது. (இதுதான் தாய்மொழி வழிக் கல்வியின் உன்னதம், உள்ளுணர்வினால் கற்றுக்கொள்வது மழுங்கடிக்கப்படாமல் வளர்க்கப்படும். இதைத் தெரியாத அஞ்ஞானபீடங்களை என்ன செய்வது என்று தெரியவில்லை).
குவாண்டம் கணினி என்ற கட்டுரையில்
ஒளியணுக்களுக்குத் (photons) திசைப்பண்பு உண்டு; அது அத்துகளின் முனைப்பு (polarization) எந்த திசையில் இருக்கிறது என்பது. இந்தக் கணினித் திரைக்குள்ளாகச் செல்லும் ஒளியணு இரண்டு திசைகளில் அதிரலாம் - ஒன்று இந்த வரி அமைந்த திசை (நெடுக்கு) அல்லது இவ்வரிக்குச் செங்குத்தாக (குறுக்கு). சோடிங்கரின் பூனையைப் போல இவற்றையும் நாம் அறிய முடியாது. ஆனால் ஒரு சோதனை வழியாக இதை அறிந்தால் (அறிய முடியும்; சில கண்ணாடிகள் குறுக்கு அதிர்வை முழுங்கிவிடும், நெடுக்குதான் வெளிவரும்), அதனுடன் வரும் (அல்லது கண்ணாடி வழியே வராமல் வேறு வழியே செல்லும்) இன்னொரு ஒளியணுவின் அதிர்வும் தீர்மானிக்கப்பட்டுவிடும். இதற்குத் ‘தொலைவிருந்து செயற்படுதல்’ (Action at a Distance) எனப் பெயர்.
இதையே
ஒவ்வொரு போட்டானுக்கும் ஒரு டைரக்ஷன் இருக்கும். போலரைசேஷன் (ஆதிசேஷன், அல்சேஷன் இல்லை)-னு சொல்லுவாங்க. இந்த சயின்டிஸ்டெல்லாம் இப்படி வாயில் நுழையாத பெயரை வைக்கக் கூடாது என்று யாராவது ஒரு அவசரச் சட்டம் போட வேண்டும். போட்டான் ரெண்டு திசைல அதிரலாம், ஒன்னு இந்த வரி இருக்கெற அதே திசைல, இன்னொன்னு இந்த மளிகை கடைல ஜாபிதா எல்லாம் ஒரு ஆணில குத்திவைச்சிருப்பாங்கள்ள அதே மாதிரி எழுதின எழுத்துக்கு செங்குத்தா இருக்கலாம். இதெல்லாம் சோடிங்கர் பூனை மாதிரி கண்கட்டுவித்தை. கண்டவர் விண்டிலர்னு திருமூலர் சொன்னா மாதிரி. ஸயின்டிஸ்டெல்லாம் சோதனை பண்ணி இதைக் கண்டுபிடிப்பாங்க. சில கிளாஸ்ல பாரலல் போலரைசேஷன்தான் வெளில வரும். பர்ப்பென்டிகுலர் கபளீகரம். ஆனா ஒரு போட்டானைக் கண்டுபிடிச்சா இன்னொன்னு என்னன்னு தெரிஞ்சுடும். இதுக்கு ‘ஆக்ஷன் அட் அ டிஸ்டன்ஸ்னு’ பேரு (ஜேம்ஸ் பாண்ட் பட டைட்டில் மாதிரி இருக்கில்ல).
என்றும் சொல்லலாம். ஆனால், அடிப்படை அறிவியல் சமாச்சாரங்களைச் சொல்ல முற்படும்பொழுது எளிமைப்படுத்தப்பட்ட நடை முழு அபத்தமாகப் போகிறது. அடுத்த கட்டத்திற்குப் போகாமல் சுஜாதாவை நிறுத்தி வைத்தது இதுதான். இதனால்தான் அவரால் தொழில்நுட்பங்களைப் பற்றி கிளர்ச்சியூட்டும் நடையில் எழுதமுடிந்தது. ஆனால், அடிப்படை அறிவியலைப் பற்றி எழுத முடியாமல் போனது.
உடனே அடுத்த கேள்வி வரும்; “உங்களுக்குத்தான் இப்படி ஜோவியலா எழுதவருதில்ல, ஆதிசேஷன், அல்சேஷன், ஜேம்ஸ்பாண்ட் அப்படீன்னு. உங்க தமிழ்கூடவே இதையும் சேத்துக்கிட்டா என்னவாம்?”
லாம் தான். ஆனால் உடனடியாக வாசகர் கவனம் சிதறடிக்கப்படும். ஆதிசேஷனைப் பற்றி சிந்திக்க்காமல் அல்சேஷனின் குரைப்பைக் கற்பனை செய்துகொள்ளாமல் கொஞ்சம் மனக்குதிரையை இருக்கிக் பிடித்துக் கட்டுரையில் சவாரி செய்யும் பேரன்பர்கூட திருமூலரிடம் திணறிப்போவார். அடுத்ததாக ஜேம்ஸ்பாண்ட் வந்தவுடன் அறிவியலைக் காற்றில் விட்டுவிட்டுப் போய்விடுவார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கிற்காகச் சினிமா, இசைபற்றி எழுதும் பொழுது பிரகாஷ் சொன்னபடி தோளில் கைபோடுவது சாத்தியமாகும்பொழுது அறிவியலை எழுதும்பொழுது (புரிதலுக்காக) இது சாத்தியமாவதில்லை. இசையையோ, அல்லது சினிமாவையோ பற்றி தீவிரமாக எழுதுபவர்களுக்கும் இதனால்தான் நடையை இறுக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனந்த விகடன் சினிமா விமர்சனத்திற்கும் உயிர்மையில் வரும் திரைப்படக் கட்டுரைக்கும் இதனால்தான் வேறுபாடு வருகிறது.
இதில் குறைந்தபட்ச சாத்தியம் தோளில் கைபோட முடியாவிட்டாலும், கைகோர்த்துக் கொண்டு பக்கத்தில் நடப்பது. என்னுடைய இலக்கை இப்படித்தான் நான் நிர்ணயித்துக் கொண்டிருக்கிறேன். தொடர்ச்சியாக என்னுடைய நடையைக் கூடியவரை எளிமைப்படுத்திக் கொண்டு வருகிறேன். ஆனால் கொச்சைப் படுத்திவிடக்கூடாது என்ற கவனம் அதிகம் இருப்பதால் இந்த மாற்றம் மிக மிக மெதுவாகத்தான் நடக்கிறது.
என்னுடைய குவாண்டம் கணினி புத்தகத்தின் முன்னுரையில் இப்படி எழுதினேன்,
… தமிழில் அறிவியல், தொழில்நுட்பம் எழுதும் ஒருசிலரும் தனக்குத் தெரியும் என்று காட்டிக் கொள்வதற்காகவோ, சேதி சொல்வதற்காகவோதான் எழுதுவதாகத் தோன்றுகிறது.
இந்த நிலையில் அவர்களுக்கு பிரமிப்பூட்டுவதோ, கிளுகிளுப்பூட்டுவதோதான் இலக்காக ஆகிப்போகிறது. இப்படி மீச்சிறு வகுத்தியின் எல்லைக்குள்ளே வாசகனை நிறுத்திவைத்தும், காலம் காலமாக அந்த எல்லையைக் குறுக்கிக் கொண்டும், கனமான விஷயங்களே நம் மொழியில் இல்லாமல் போக்கிவிட்டார்களோ என்ற அச்சம் அயர்வைத் தருகிறது. இதற்குச் சற்று வெளியில் நின்று விஷயத்தைப் புரியவைக்க முயற்சி செய்திருக்கிறேன்.
எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்ள ஆர்வமும் உழைப்பும் தேவை, சிரமமில்லாமல் ஒன்றையும் கற்றுக் கொள்ள முடியாது. சற்றே ஆழமான புரிதலுக்காக எழுதப்பட்ட இக்கட்டுரைகளுக்கும் அது பொருந்தும். என்னைப் படிப்பவர்களை அப்படிச் சிரத்தையில்லாதவர்களாக வரித்துக்கொள்ள எனக்கு முடியவில்லை. புரியாத விஷயங்களை அவர்கள் முயற்சி செய்து கற்றுக் கொள்வார்கள் என்று எனக்கு நம்பிக்கையிருக்கிறது. …
கொசுறு: என்னுடைய தொழில் ரீதியாக அறிவியலை எழுதினால் நான் இப்படி எழுதுவேன்.
The recent realization of distributed feedback intersub-band Quantum Cascade Lasers enable accessing mid-infrared wavelengths wtih high peak power and transverse mode stability. Unlike the bipolar diode lasers that involve transition between the conduction and valence bands, in QCLs the electron is recycled through interband tunneling into the conduction band of the next cascade stage.
இதுதான் இறுக்கமான நடை. முழுக்க குழூஉக்குறிகளால் ஆன ஒரிஜினினல் நாகப்பட்டணம் நெய் மிட்டாய். சந்தை மாறும் பொழுது சரக்கும் மாறும். ஆனால் நாட்டுச் சர்க்கரை போட்டு நல்லெண்ணையில் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் அதற்கு நெய்மிட்டாய் என்று பெயர் வைக்கக் கூடாது.
முதலில் பதிப்பித்தது 05 நவம்பர் 2005