February 16, 2023 in ஆளுமை by வெங்கட்ரமணன்1 minute
மின்னணுத் தகவல்நுட்பம், கணிதம், தமிழ் இலக்கியம், கர்நாடக இசை, ஆன்மீகம், என்று அவருக்கு ஆர்வமிருந்த ஒவ்வொரு துறையிலும் அவருக்கிருந்த அளப்பறிய மேதைமை குறிந்து இன்னொரு நாள் எழுதலாம். இப்போதைக்கு ஒரு மாமனிதரை, மூத்த நண்பரை இழந்து நிற்கும் வெறுமைதான் மிஞ்சுகிறது.
இன்று காலை பேராசிரியர் பசுபதியின் இறுதிச் சடங்கு முடிந்தது.
பசுபதி மறைந்த செய்தி திங்கட்கிழமை டாக்டர் இரகுராமன் வழியாகத்தான் கிடைத்தது. அந்த நேரத்தில் நான் நார்த் யார்க் மருத்துவமனையின் எமெர்ஜென்ஸியில் என் மாமனாரைக் கவனித்துக் கொண்டு இருந்தேன். (இன்னும் அங்கேதான்). கடந்த ஐந்து நாட்களாக சி.டி ஸ்கேன், எக்ஸ்ரே, இரத்தப் பரிசோதனை, இடையே கோவிட் தற்காப்புக்காக, தலைமுதல் கால்வரை கால்வரை பாதுகாப்பு உடையுடன் மருத்துவனையெங்கும் நடந்துகொண்டிருக்கிறேன். ஆனால், மனம் வேறெங்கோ இருக்கிறது.
பேரா. பசுபதி இல்லை என்றால் நான் கனடா வந்திருப்பேனா என்று தெரியாது. ஜப்பானில் என்னுடைய இரண்டுவருட ஃபெல்லொஷிப் முடியும் பொழுது பாஸ்டன், வாண்டர்பில்ட், டெக்ஸாஸ்/ஆஸ்டின், டொரண்டோ இவற்றுக்கிடையே முடிவெடிக்கத் திணறிக்கொண்டிருந்தபொழுது, முகம் தெரியாத என்னை “நீ இங்கே வா, எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று உரிமையோடு அழைத்துக்கொண்டார். டொராண்டோவில் இறங்கியதிலிருந்து ஒரு மாதம் அவர் வீட்டில் தங்கவைத்தார். எனக்காக வீடுதேடி தன் மனைவியுடன் அலைந்திருக்கிறார். “அடுத்த வருஷம் நீ வேற எங்க வேணும்னாலும் போய்க்கோ, மொத வருஷம் அவருடம் என் வீட்லேந்து ஐஞ்சு கிலோமீட்டர் சுத்துக்குள்ளதான், அப்பத்தான் ஒன் கொழந்தைகளுக்கு, உனக்குன்னு ஏதாவது உதவி வேணும்னா என்னால் வர முடியும்” என்று அவரே முடிவெடுத்துவிட்டார். பின் கிடைத்தவீட்டில், வரவிருக்கும் என் குழந்தைகளுக்காக, குடும்பத்திற்காக சாமான்களை வாங்கி நிரப்ப உதவியிருக்கிறார். காலை காஃபியில் தொடங்கி, ஒன்றாக வேலைக்குப் பயணித்து, ஒன்றாக இரவுணவு என அந்த ஒரு மாதமும் அவருடைய அரவணைப்பில் இருந்திருக்கிறேன். அந்த நேரங்களில் எங்கள் பொது ஆர்வங்களைக் குறித்து இடைவிடாது உரையாடியிருக்கிறோம். அந்தப் பெருங்கருணைக்கு நான் என்ன பாக்கியம் செய்திருக்கிறேன் என்று இன்றுவரை தெரியவில்லை; எந்தப் பிறவியில் கைம்மாறு செய்வேன் என்று திகைக்கிறேன்.
மின்னணுத் தகவல்நுட்பம், கணிதம், தமிழ் இலக்கியம், கர்நாடக இசை, ஆன்மீகம், என்று அவருக்கு ஆர்வமிருந்த ஒவ்வொரு துறையிலும் அவருக்கிருந்த அளப்பறிய மேதைமை குறிந்து இன்னொரு நாள் எழுதலாம். இப்போதைக்கு ஒரு மாமனிதரை, மூத்த நண்பரை இழந்து நிற்கும் வெறுமைதான் மிஞ்சுகிறது.
படம்: நன்றி, சொல்வனம் மின்னிதழ்.