இலக்கணக் கல்வியின் தேவை

September 17, 2025 in இலக்கியம் by வெங்கட்ரமணன்5 minutes

செப்டம்பர் 7, 2025 அன்று டொராண்டோ நகரில் கனேடிய தொல்காப்பிய மன்றத்தில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்

அவையோர்கள் அனைவருகும் என் மனமார்ந்த வணக்கங்கள்!

ஆன்ற அறிஞர்கள் நிரம்பியிருக்கும் இந்த அவையில் தலைமைபீடத்தில் அமர்வதற்கான தகுதிகள் எனக்கு ஏதுமில்லை என்பதை நான் நன்றாக அறிவேன். எனக்கு இந்த கௌரவத்தை அளித்த விழா அமைப்பாளர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். உங்கள் அன்புக்கு நான் எப்பொழுதும் நன்றியுடையவன்.

நான் தொழில் முறையில் ஒரு அறிவியலாளன். எனக்குத் தமிழ்ப் புலமை கிடையாது. புலமை என்ற வார்த்தையே இங்கு மிகையானதுதான். சொல்லிக்கொள்ளத்தக்க தமிழறிவு கிடையாது என்பதுதான் சரியாக இருக்கும். நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சராசரி நாளின் பெரும்பாகத்தில் வேற்று மொழியிலேயே புழங்கிக் கொண்டிருப்பவன். எனவே இங்கிருக்கும் குழந்தைகளைப் போல நானும் ஒருவகையில் தமிழுக்கு ஒரு அந்நியன்தான். எனவே மாணவர்களே, உங்களில் ஒருவனாக நான் ஏன் தமிழில் ஆர்வம் கொள்கிறேன், அந்த ஆர்வத்தை வளர்த்தெடுக்க எப்படியெல்லாம் முயல்கிறேன், அதில் இலக்கணத்தின் தேவை என்ன என்று கொஞ்சம் பேசலாம் என்றிருக்கிறேன். அவையில் இருக்கும் அறிஞர்களிடம் உரை நிகழ்த்த எனக்குத் தகுதியில்லை என்பதால் அடுத்த தலைமுறையிடம் நேரடியாகப் பேச முயல்கிறேன்.

தமிழில் புலமை கிடையாது, ஆனால் ஆர்வம் நிறையவே உண்டு. தொடர்ந்து தமிழை வாசித்துக் கொண்டிருக்கிறேன். செவ்வியல் இலக்கியங்களில் தொடங்கி சமகால படைப்புகள்வரை எனக்கு எல்லாவற்றிலுமே பேரார்வம் இருந்து கொண்டிருக்கிறது. தமிழில் எழுதத் தலைப்படுகிறேன். இயன்ற அளவுக்கு என் அறிவியல் பின்புலத்தை ஒட்டிய கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிவருகிறேன். அன்றாடம் நான் வேலைசெய்யும் சூழலில் முற்றிலும் ஆங்கிலத்திலேயே செயல்படுகிறேன். ஒருவகையில் தமிழைக் காட்டிலும் ஆங்கிலம் மிக எளிதாகத் தோன்றுகிறது. எனக்கு எழுதவேண்டும் என்று ஆர்வமிருந்தால் அதை ஆங்கிலத்திலேயே எழுதிவிட்டுப் போகலாம்தானே! வாசிப்பதற்கும் ஆங்கிலத்தில் பல படைப்புகள் எளிதில் கிடைக்கின்றன. ஆனாலும் ஏன் வலித்து தமிழில் வாசிக்கிறேன்? ஏன் தமிழில் எழுதத் தலைப்படுகிறேன்? என்னை நானே கேட்டுக்கொள்ளும் கேள்விகள் இவை. கூடவே எனக்கு அனுக்கமான தமிழர்களும் பிற இந்தியர்களும் தொடர்ந்து என்னைக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தக் கேள்விகளுக்குப் பல வகைகளில் பல விடைகள் புலப்படுகிறன. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது எனக்கான அடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்ளுதல். தமிழை மறந்தால் எனக்கான அடையாளத்தைத் தொலைத்தவன் ஆவேன்.

மாணவர்களே, என்னைவிட நீங்கள் அடையாளச் சிக்கலை மிகக் கடுமையாக எதிர்கொள்கிறீர்கள். தமிழ் கற்றுக் கொள்ள, தமிழில் பேச உங்களைப் பெற்றோர்கள் கட்டுப்படுத்தக்கூடும். அதற்கான நியாயங்கள் அவர்களுக்கு உண்டு என்று பல வருடங்களுக்குப் பிறகு உங்களுக்குப் புலப்படக்கூடும். தாங்கள் இழந்த அடையாளத்தை, தங்களிடமிருந்து வலுவில் பறிக்கப்பட்ட அந்த அடையாளத்தைத் தங்களுக்கு அடுத்த தலைமுறைக்கு அவர்களுடைய மாபெரும் சொத்தாகக் கையளிக்க அவர்கள் விரும்புகிறார்கள். ஒரு வகையில் அதுவே அவர்களுடைய வாழ்க்கையின் நோக்கமாகவும் ஆகிப்போகிறது.

ஆனால், உங்களுக்கு…? தினசரி பள்ளியில் பழகும் ஆசிரியகளிடமோ, சக மாணவ நண்பர்களிடமோ இது தேவையில்லாமல் இருக்கிறது. ஒரு வகையில் தொந்தரவானதாகவும்கூட. கனடா போன்ற பல்கலாச்சார சமுதாயத்தில் எந்த ஒரு இனக்குழுவும் தங்கள் மொழிதான், தங்கள் கலாச்சாரம்தான் உயர்ந்தது என்று பிறரிடம் எளிதில் தூக்கிப் பிடிக்க முடியாது. அதற்கான முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடியும். நீங்கள் அன்றாடம் புழங்கும் சமூகத்திடமிருந்து மேலும் அந்நியப்பட்டுப் போகக்கூடிய அபாயமும் இருக்கிறது. புலம்பெயர் வாழ்வு தமிழ்ச் சமூகத்திற்கு மிகச் சில பத்தாண்டுகளுக்குள்ளேதான். மாறாக, யூதர்கள், சீனர்கள், ஐரிஷ், போலிஷ் மக்களுக்குப் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியான புலம்பெயர் வாழ்வு தந்த அனுபவ அறிவு இருக்கிறது. அவர்கள் இன்னும் தங்கள் மொழியை, பண்பாட்டை, வரலாற்றைத் தொடர்ச்சியாகப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை மிக அற்புதமாக வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அடையாளங்களைக் கொண்டே தங்கள் பெருவெற்றிகளைக் கட்டி எழுப்பியிருக்கிறார்கள். இவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன.

யூதர்களுக்கோ, சீனர்களுக்கோ சற்றும் குறைந்ததல்ல தமிழ் மொழி, இசை, கலாச்சாரம், வரலாறு போன்றவை. இவற்றில் நாம் காலுன்றி நின்று நமக்கான அடையாளத்தைச் சரியாக நிறுவிக்கொள்ள முடியும். இதற்கு முதல் கட்டமாக நம் மொழியையும் இசையையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். உங்களில் எத்தனை பேர் வரும் காலத்தில் ஒரு தமிழ்ப் பேராசிரியராகவோ அல்லது ஒரு தமிழ் நாவலாசிரியராகவோ வருவீர்கள் என்று யோசித்தால் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவாகவே தென்படும். சொல்லப்போனால் நீங்கள் ஒரு தமிழ்ப் பேராசிரியராகவோ எழுத்தாளராகவோதான் உருவெடுக்க வேண்டும் என்பது உங்கள் பெற்றோர்களின் கனவாகக் கூட இருக்காது. மாறாக, அவர்கள் நீங்கள் வாட்டர்லூ சென்று தகவல் நுட்பம் படிக்க வேண்டும், அல்லது டொராண்டோ பல்கலைக்கழகம் சென்று மருத்துவராக வேண்டும் என்றுதான் பெரிதும் கனவு கண்டுகொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு நீங்கள் தமிழ் மொழியைச் சரிவரக் கற்றுக்கொண்டு அதன் வழியே தமிழ் இலக்கியத்தையும் பண்பாட்டையும் நீங்களாகவே உங்களுக்குக் கண்டெடுத்து அதன் இனிமையையும் மேன்மையையும் தூய்க்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது; அளவிட முடியாத விருப்பம். இதைத்தான் யூதர்களும், சீனர்களும் தொடர்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். தாங்கள் சென்ற இடங்களுடன் தங்களை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொள்ளும் அதே நேரத்தில் மொழி வழியாகவும், கலாச்சாரத்தின் வழியாகவும் தங்கள் அடையாளங்களை, தங்கள் தனித்தன்மைகளை அவர்கள் தொடர்ச்சியாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் வழியாகவே அவர்களுக்கான வெற்றிகளையும் ஈட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

உங்களுக்காக நீங்கள் கண்டெடுக்கும் அந்த இனிமையையும் மேன்மையையும் இங்கே உங்களுடன் வசிக்கும் பல்லின மக்களுக்கும் அறிமுகப்படுத்துவீர்கள் என்பது நிச்சயம். மாறாக நீங்கள் இப்பொழுது உங்களுடன் இருக்கும் பிற கலாச்சாரங்களை நகலெடுக்கத் தொடங்கினால் அது பெரும்பாலும் தோல்வியிலேயே முடியக்கூடும். அவர்கள் ஜீன்களுடன் பிணைந்து வரும் அந்த அடையாளங்களை முதலில் அச்சாக நகலெடுத்துப் பின்னர் அதில் அவர்களைத் தோற்கடித்து வெற்றியாளராக உங்களை நிறுவிக்கொள்ள ஒரு வாழ்நாள் போதாது. மாபெரும் அறிவியல் மேதை ஐன்ஸ்டைன் தனக்கான யூத அடையாளத்தை ஒருபோதும் இழக்கவில்லை. அவர் ஜெர்மானிய மொழியிலேயே அறிவியலைச் சிந்தித்தார். அந்த மொழியிலேயே உலகத்தையே முழுதுமாகப் புரட்டிப்போட்ட தன் ஆய்வுக்கட்டுரைகளை எழுதினார்.

உங்கள் அடையாளம் உங்கள் மொழியுடன் பிணைந்தது. உங்கள் வெற்றியும் அந்த அஸ்திவாரத்திலேதான் சாத்தியமாகும்.

சரி, மொழியைக் கற்றுக்கொள்ள இலக்கணம் ஏன் அவசியம்? இதற்கான விடையைத் தெரிந்துகொள்ள இலக்கணம் எப்படி உருவாகிறது என்று கொஞ்சம் பார்க்கலாம். நான் தமிழ் நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவன். நீஙகள் பொன்னியின் செல்வன் திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அதே நிலத்தில்தான் நானும் வளர்ந்தேன்; அதே மாட்டு வண்டிகள், மனிதக் கூட்டங்கள். எனக்குத் தெரிந்து எங்கள் கிராமத்திலிருந்து நேரடியாக அடுத்த கிராமத்திற்குப் போக வழியில்லாமல்தான் இருந்தது. இரண்டுக்கும் இடையே சிறிய காடு, கொஞ்சம் மணல்மேடு, ஒரு சிறிய ஆறும்கூட, அதில் மழைக்காலத்தில்தான் நீர் ஓடும். நான் சிறுவனாக இருக்கும்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக அங்கே இருந்த புதர்களை வெட்டி ஒரு ஒற்றையடிப் பாதையை உருவாக்கினார்கள். கோடைக்க்காலத்தில்தான் இது சாத்தியம். பின் அதே வருடம் மழைக்காலத்தில் மீண்டும் முள் செடிகள் வளர்ந்து அந்தப் பாதை மூடிக்கொள்ளும், மணல்மேடு சரிந்து போகும். ஆனாலும் அடுத்த வருடம் மீண்டும் செடிகளை வெட்டுவார்கள். இப்பொழுது கொஞ்சம் சுலபம், ஏற்கனவே வெட்டப்பட்டிருந்த எல்லா இடங்களிலும் முள் செடிகள் வளர்ந்திருக்காது. இப்படிச் சில வருடங்களில் கொஞ்சம் நிரந்தரமான ஒற்றையடிப்பாதை உருவானது. பின்னர் அந்த வழியில் ஆடு மாடுகளை ஓட்டிச் சென்றார்கள். அவற்றின் கால்கள் அழுந்த, பாதை இன்னும் கொஞ்சம் வலுவானது. பின்னர் அதே வழியில் மாட்டு வண்டிகளை ஓட்டிச் சென்றார்கள். ஒரு பத்து வருடத்துக்குள்ளேயே நல்ல நிரந்தரமான வண்டிப்பாதை உருவானது. இடையில் இருந்த ஆற்றின் மீது ஒரு சிறிய பாலத்தையும் கட்டினார்கள். சில சமயங்களில் அதன் ஓரமாக நாங்கள் கிரிக்கெட் விளையாடியிருக்கிறோம். பின்னர் இரண்டு கிராமங்களுக்கு இடையில் வேகமாகச் செல்ல பேருந்து வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டினார்கள். ஏற்கனவே வண்டிப்பாதை இருந்ததால் பேருந்துச் சாலை கட்டுவது எளிதாக ஆனது. சென்ற மாதம் நான் ஊருக்குச் சென்றிருந்தேன். இப்பொழுது அதே இடத்தில் மூன்றும் மூன்றும் ஆறு ஒழுங்கைகளாக ஒரு தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. வாகனங்கள் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்கின்றன.

இலக்கணம் என்பது ஒரு வகையில் சாலை போடுவது. இயல்பாக வெளிப்படும் மொழியின் ஒழுங்கமைப்புகளை ஆராய்ந்து அவற்றுக்கான விதிகளை - எப்படி ஒரு வாகனம் செல்வதற்கு சாலை தேவையோ, அதே முறையில் உருவாக்கித் தருவது இலக்கணம். எப்படி ஒரே ஒழுங்கையில் பயணித்தால் விபத்துகளைத் தவிர்க்கிறோமோ அதேபோல் இலக்கண விதிகளை அனுசரித்தால் தவறின்றி மொழியைப் புழங்க முடியும். அந்த நிலையில் பிறர் சொல்வதை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியும். நம் கற்பனையில் தோன்றுவதை, மனத்தின் கருத்தைத் துல்லியமாக பிறருக்குச் சொல்ல முடியும். எதிரும் புதிருமான கருத்துகளைக் கொண்டிருந்தாலும் மோதல்கள் இல்லாமல் உரையாட முடியும். எனவே மொழியைச் சரியாகப் புழங்குவதற்கு அதன் இலக்கணத்தை அறிவது மிக முக்கியம்.

நம்முடைய நல்லதிருஷ்டமாக நம்மிடம் தொல்காப்பியம் போன்ற மிகத் துல்லியமான வரையறைகளைக் கொண்ட இலக்கண நூல் இருக்கிறது. இது தொல்காப்பியம் குறித்த விழா, எனவே இங்கே நான் தொல்காப்பியத்தின் பெருமைகளையும் அதன் முக்கியத்துவத்தையும் பற்றிச் சொல்லப்போவதில்லை. என்னைவிட அவற்றை மிகச் சரியாகச் சொல்லப் பல அறிஞர்கள் இங்கே இருக்கிறார். ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்ள ஆசை; தமிழ் உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. பன்னாட்டு மொழியியல் அறிஞர்களும் உலகில் தொடர்ச்சியாகப் புழக்கத்தில் இருக்கும் மிகப் பழைய மொழி தமிழ்தான் என்று ஏற்றுக்கொள்கிறார்கள். இந்தத் தொடர்ச்சிக்கான ஆதாரம், தமிழைத் துல்லியமாக எப்படிப் புழங்கவேண்டும் என்று வரையறுக்கும் இலக்கணம் - அதன் முதுநூல் தொல்காப்பியம். நடைபாதையாக, அல்லது வண்டிப்பாதையாக இருக்கும் வழியில் மீண்டும் புதர்கள் வளர்ந்து மூடப்படலாம், பெருமழையில் மணல் சரிந்து பாதை காணமல் போகலாம். ஆனால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே நமக்குக் கிடைத்தது தொல்காப்பியம் என்னும் நெடுஞ்சாலை. அந்தச் சாலைதான் நம்மை முறையாக வழிநடத்துகிறது. அதில்தான் தமிழ் வேகமாக வளர்ந்தது; வளர்ந்து கொண்டிருக்கிறது.

மாணவர்களே, நீங்கள் ஒரு முழுமையான கனேடியாராக ஆவதில் எந்தத் தவறுமில்லை. நம்முடைய கனேடிய அரசும் சமூகமும் தனக்கான பூர்வ அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டு தமிழ்க் கனேடியராக, சீனக் கனேடியராக, பஞ்சாபிக் கனேடியராக இருப்பதைத்தான் விரும்புகிறது, அதையே பரிந்துரைக்கிறது. அமெரிக்காவைப்போல் கொதிக்கும் பானையில் விழுந்து உருகித் தங்களுக்கேயான அடையாளங்களை முழுதுமாகத் தொலைத்து அமெரிக்கராகவேண்டும் என்று வற்புறுத்துவதில்லை. எனவே நல்ல கனேடியக் குடிமகனாக வளருங்கள். நாளை பாரளுமன்றத்தையும் நகரசபைகளையும் நீதிமன்றங்களையும் பல்கலைக்கழகங்களையும் நிறையுங்கள். அந்த நிலையில் மொழியையும் கலாச்சாரத்தையும் நன்றாக அறிந்த தமிழ்க் கனேடியராகுங்கள். ஏனென்றால் அப்படி ஆவதுதான் நம் பல ஆயிரம் ஆண்டு கலாச்சாரத்தையும் மொழியையும், இசையையும் இங்கிருக்கும் பல இனமக்களுக்கும் சொல்லிக் கொடுப்பதற்கான, அவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான ஒரே வழி. அவர்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போவது நாம் உன்னதம் என்று மதிக்கும் நம் கலாச்சாரத்தை அவர்களுக்கு அடையாளம் காட்ட, அவர்களுடன் பகிர்ந்துகொள்ள ஒருபோதும் உதவப்போவதில்லை. அதற்கான முதல் முயற்சியாக நம் மொழியை நீங்கள் சரிவரக் கற்றுக்கொள்ளுங்கள். நம்முடைய நல்லதிருஷ்டமாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே அதற்கான பாதையை நம் முன்னோர்கள் நமக்கு வடிவமைத்துத் தந்திருக்கிறார்கள்.