இரான் போர் - பறவித் தாக்குதல்கள்

March 19, 2026 in சமூகம், தொழில்நுட்பம் 3 minutes

நடந்துகொண்டிருக்கும் இரான் - அமெரிக்கா+இஸ்ரேல் போரின் விளைவுகளும் முடிவும் முற்றிலும் இராணுவப் பறவிகளால் தீர்மானிக்கப்படவிருக்கிறது.

உலகெங்கும் வெகுவாகப் பரவிவரும் பறவிப் போர்களைக் (Drone Warfare) குறித்து நான் கவலை கொள்கிறேன். பறவி நுட்பம், மாறிவரும் போர் உத்திகள், மாற்றியெழுதப்படும் தார்மீக வரையறைகள் குறித்து என் சமீபத்திய ‘ஒளியிலிருந்து இருளுக்கு’ புத்தகத்தில் ‘ஆளற்ற போர்முனைகளில் முகமற்ற போர்வீரர்கள்’ என்ற கட்டுரையில் விரிவாக எழுதியிருக்கிறேன்.

அமெரிக்கா இரான் மீது தாக்குதல்களை நடத்துவதற்குமுன் செய்த கணிப்புகள் முற்றிலும் தவறானவையாக மாறியிருக்கின்றன. இந்தப் போரிலிருந்து அமெரிக்கா விரைவில் வெளியேறியாக வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இது தாமதமாகும் ஒவ்வொரு நாளிலும் அமெரிக்காவிற்குத்தான் இழப்புகள் அதிகமாகப் போகின்றன.

நடந்துகொண்டிருக்கும் இரான் - அமெரிக்கா+இஸ்ரேல் போரின் விளைவுகளும் முடிவும் (எப்போது முடியும்?) முற்றிலும் இராணுவப் பறவிகளால் தீர்மானிக்கப்படவிருக்கிறது. இரான் பெரும் எண்ணிக்கையில் ஷாஹேத்-131/136 (Shahed-131/136) பறவிகளைப் பயன்படுத்துகிறது. 131 அளவில் சிறியது, 700-900 கி.மி தொலைவிற்குச் செல்லக்கூடியது, 136 சற்று பெரியது, 2,000 கி.மி வரை செல்லும். இரண்டுமே ஏவிய பின்னும் போக்கை மாற்றிக்கொள்ளும் திறனுடையவை. இரான் முதன்முதலாக ஷாஹேத்-131-ஐ 2019 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவின் எண்ணெக் கிணறுகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது பயன்படுத்தியது. அதிலிருந்து தொடர்ச்சியாக அதன் வடிவமைப்பையும் திறனையும் மேம்படுத்தியிருக்கிறது. 2024 பெப்ருவரியில் இரான் 136 மாடல் பறவிகளை இரஷ்யாவுக்குக் கொடுத்தது, இரஷ்யா அவற்றை உக்ரெய்ன் போரில் தொடர்ச்சியாகப் பயன்படுத்திவருகின்றது. (இதற்குக் கைம்மாறாக இன்றைய போரில் இரானுக்கு இரஷ்யா கண்காணிப்புத் தகவல்களை அளிக்கிறது.) ஷாஹேத் பறவிகளின் விலை சராசரியாக $20,000 முதல் $50,000 வரை என்று மதிப்பிடுகிறார்கள். ஷாஹேத்-136 கொண்டு இரான் குவைத்தில் உள்ள அமெரிக்காவின் இராணுவதளங்கள், ரியாத் மற்றும் பாக்தாத்தின் அமெரிக்க தூதரகங்கள், அமீரகத்தில் (குறிப்பாக கத்தாரில்) உள்ள பல எண்ணெய்க் கிணறுகள், சுத்திகரிப்பு நிலையங்கள் போன்றவற்றின் மீது தாக்குதல்களை நடத்தி பலத்த இழப்புகளை உண்டாக்கியிருக்கிறது. இந்தப் பறவிகள்தாம் ஹோர்மூஸ் நீரிணைப்புப் (Strait of Hormuz) பகுதியிலும் இரானின் முக்கிய போர் உத்தியாக இருந்துவருகின்றன.

மறுபுறத்தில் அமெரிக்கா (இங்கே எல்லா இடங்களிலும் அமெரிக்கா-இஸ்ரேல் என்று சேர்த்துப் பொருள்கொள்ளுங்கள்) RQ-4 Global Hawk என்ற உயர்பரப்புக் கண்காணிப்புப் பறவிகளைக் கொண்டு இரானின் பறவித்தாக்குதல்களைக் கண்காணிக்கிறது. இவற்றின் விலை குறைந்தது $130 மில்லியன். தொடர்ந்து இரான் பறவிகளைத் தடுக்க அவர்களுடைய பேட்ரியாட் மற்றும் தாட் (Terminal High Altitude Area Defense, THAAD) மறிப்பான்களைப் (Interceptors) பயன்படுத்துகிறது. தாட்-டிலிருந்து ஏவப்படும் மறிப்பான்களின் சராசரி விலை $12.6 மில்லியன் என்று மதிப்பிடப்படுகிறது. அதாவது, இரான் ஐம்பதாயிரம் விலைகொண்ட பறவியை ஏவினால் அமெரிக்காவுக்குக் குறைந்தபட்சம் 12 மில்லியன் டாலர் செலவாகிறது. இதுதான் சமச்சீரற்ற போரின் (asymmetric warfare) நிதர்சனம்.

இந்த சமச்சீரின்மையே எதிர்பார்த்தைப்போல யுக்ரெய்னை விரைவில் வீழ்த்தமுடியாமால் சிக்குண்டு தவிக்கும் இரஷ்யாவின் நிலைக்கும் காரணம். சமீபத்தில் நடந்த மிகச் சுருக்கமான இந்தியா-பாக்கிஸ்தான் சண்டை பெரிதும் பறவி யுத்தம்தான். அதை மிகச் சீக்கிரமாக முடித்துக்கொண்டதால் இந்தியாவோ பாக்கிஸ்தானே அதிக இழப்புகள் இல்லாமல் தப்பின. இது எப்பொழுதும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.

இரானின் ஷாஹேத் பறவிகள் ஏமனின் உள்நாட்டுக் கலவரத்தில் ஹௌத்தி என்று அழைக்கப்படும் அன்ஸார் அல்லாஹ் இஸ்லாமிய (ஷியா) மறுவுருவாக்கக் குழுவால் பயன்படுத்தப்படுகிறது. ஷாஹேத் பறவிகள் செலவிடப்படும் பணத்திற்கு மேலான பயனைத் தருகின்றன என்று உலகெங்குமுள்ள இராணுவ நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள் (அதாவது குறைந்த செலவில் நிறைய சேதம்). இது எந்த அளவுக்கு என்றால், தாக்குதலில் பிடிபட்ட ஷாஹேத் பறவிகளின் வடிவமைப்பை நகலெடுத்து அமெரிக்கா லூக்காஸ் Low-cost Uncrewed Combat Attack System (LUCAS) பறவிகளை உருவாக்கி அவற்றை இரானின் மீதே ஏவிவருகிறது.1 இது ஆளற்ற போர் உத்தியின் இன்னொரு விசித்திர, கவலைதரும் முகம். தொழில்நுட்ப மேன்மை என்பது மிகத் தற்காலிகமானதுதான். அதிகச் செலவில்லாத பறவிகளும் சமரன்களும் (war robot) எதிரியின் கையில் கிடைத்தால் மிகச் சுலபமாக அவற்றை நகலாக்கம் செய்யமுடியும்.

(எனக்குப் பொதுவில் அமெரிக்காவையோ இரானையோ குறித்த எந்த அக்கறையுமில்லை. ஆனால் பறவி, சமரன் போர்நுட்பங்கள் குறித்து அவ்வப்பொழுது பதினைந்து ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறேன். இதன் பெருக்கத்தைக் குறித்து விசனப்படுகிறேன். அமெரிக்க-சோவியத் பனிப்போர் காலத்தில் அணு ஆயுதப்பரவல் குறித்த பெரும் கவலையும் தொடர்ச்சியான உரையாடல்களும் இருந்தன. என்னைப் பொருத்தவரை சமரன், பறவிப் போர் அணுப்போரைவிட மிகவும் சிக்கலானதும், பேரழிவைத்தரக்கூடியதுமானது. இது குறித்த உரையாடகளை நாம் துவக்கியாக வேண்டிய நேரம் இது. ஆளில்லாப் போரின் சிக்கல்கள் குறித்து வரும் நாட்களில் இன்னும் எழுதலாமென்று இருக்கிறேன்.)