October 7, 2025 in அறிவியல் by வெங்கட்ரமணன்3 minutes
ஆப்பிள் நிறுவனம் முதல்முறையாக ஒரு செல்பேசியை வெளியிடுகிறது
அற்புதங்கள் அடிக்கடி நிகழ்வதில்லை; அடிக்கடி நிகழ்பவை அற்புதங்களல்ல. இன்றைக்கு சாதனங்கள் உலகில் அற்புதம் நிகழ்திருக்கிறது. இது செல்பேசிகளை நாம் பாவிக்கும் வகையை மாற்றியெழுதும் என்று நம்புகிறேன்.
இன்றைக்கு ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய வரவிருக்கும் சாதனங்களைப் பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இவற்றில் மிகவும் கவர்ச்சிகரமானது ஐ-ஃபோன். இது ஐபாட், செல்பேசி மற்றும் கைக்கணினி இவை மூன்றும் ஒன்று சேர்ந்த ஒரு ஒருங்கு சாதனம் (convergence device). இன்னும் சொல்லப்போனால் இந்த மூன்று தனித்தனி சாதனங்களாகப் பார்த்தால்கூட இவற்றில் அற்புதமான முன்னேற்றங்கள் புதிய ஐஃபோனில் இருக்கின்றன.
4 கிகாபைட் மற்றும் 8 கிகாபைட் அளவுகளில் வரவிருக்கிறது; அந்த வகையில் இது சந்தையிலிருக்கும் ஐபாட் நானோ-க்களை ஒத்தது. கைக்கு அடக்கமான அளவில் இருக்கிறது (11.5 செமி உயரம், 6.1 செ.மி அகலம், 1.16 செமி தடிமன்). நான் இரண்டு வாரங்களுக்கு முன் கிறிஸ்துமஸ் சமயத்தில் புதிதாக வாங்கி 80 கிகாபைட் விடியோ ஐபாடை விடக் கொஞ்சம் உயரம்தான் பெரியது (10.4 செமி : 6.2 செமி : 1.4 செமி), மற்ற அளவுகள் குறுகியிருக்கின்றன. . ஆனால் திரையளவு கணிசமாக அதிகரித்திருக்கிறது. இன்றைய ஐபாட் 2.5 அங்குலம்தான் புதிய ஐஃபோன் 3.5 அங்குலத்தில் அமையும்.
இரண்டு வாரங்களுக்கு முன்னால் என்னுடைய புதிய ஐபாடை வாங்கும் பொழுது அதில் விடியோக்கள் பார்ப்பது என்னுடைய முக்கியமான நோக்கமில்லை; பெருகிப் போயிருக்கும் என்னுடைய இசைக்கோப்புகளை தேக்க 80 கி.பை அளவு தேவை என்றுதான் வாங்கினேன். வீட்டில் இருக்கும் 42 அங்குலத் திரையிலேயே அதிகம் பார்க்காத நான் 2.5 அங்குலத் திரையில் கண்ணைக் குறுக்கிக்கொண்டு படம் பார்க்கமுடியும் என்ற நம்பிக்கையில்லை. ஆனால், ஆச்சரியமாக அதன் விடியோ தரத்தினால் வாங்கியபிறகு தினமும் 30-45 நிமிடங்கள் அதில் விடியோ பார்த்துக் கொண்டிருக்கிறேன். (National Geographic, Discovery, Nasa, BBC-News,..). இத்தனைக்கும் பெரும்பாலான பாட்காஸ்ட்கள் அகலத்திரை வடிவிலிருப்பதால் முழுத்திரையையும் நிறைப்பதில்லை. எனவே 3.5 அங்குலத்திரை கட்டாயம் விடியோ தரத்தை உயர்த்தும். அந்த வகையில் இது ஐபாடில் கட்டாயமாக முன்னேற்றம்தான்.
சிங்குலர் நிறுவனத்துடன் இணைந்து செல்பேசி மற்றும் இணையச் சேவைகள் வழங்கப்படவிருக்கிறது. வழமையான செல்பேசிகளைப் போல இதில் எண்களுக்கான பொத்தான் கிடையாது. திரை தொடு உணர்வு கொண்டது. (எனவே ஐபாடின் பிரசித்திபெற்ற சக்கரமும் கிடையாது). கனடாவில் சிங்குலர் நிறுவனம் கிடையாது, எனவே வேறு வழங்கு நிறுவத்தின் மூலம் வரலாம். நான் கேள்விப்பட்டவரை அமெரிக்காவில் சிங்குலரின் சேவையைப் பற்றி அவ்வளவாக யாரும் மகிழ்சி கொண்டதாகத் தெரியவில்லை. அவர்கள் கட்டணமும் சற்று அதிகம் என்று சொல்கிறார்கள்.
ஆனால் இது வழமையான செல்பேசிகளைக் கடந்து செல்லக்கூடியது. கம்பியில்லா இணைய இணைப்பு (WiFi 802.1b/g, BlueTooth) இருப்பதால் ஸ்கைப் போன்ற மலிவான வாய்ப் (இணைய நடைவரையில் குரல் ஏற்றம் - Voice Over Internet Protocol) சேவைகளின் மூலம் இதன் பயனை நீடிக்க முடியும். (இப்படி வாய்ப் வசதிகொண்ட ஒரு கருவியை செல்பேசி வழங்கும் சிங்குலர் போன்ற நிறுவனம் வழியாக விற்பது ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகச் சாதனைதான்).
மூன்றாவதாக இது ஒரு கைக்கணினியும் கூட. நேரடி கம்பியில்லா இணைய இணைப்பின் மூலம் இதைக் கொண்டு இணையம் உலாவ முடியும்; மின்னஞ்சல் எழுதப் படிக்க முடியும். இணைய வசதியிருப்பதால் குறுஞ்செய்தி, செய்திகள் இன்னபிற பொழுதுபோக்கு வசதிகளுக்குப் பஞ்சமில்லை. இப்பொழுது மூலைமுடுக்கில் இருக்கும் டீக்கடைகள் (Starbucks,…) எல்லாவற்றிலும் இலவச இணைய இணைப்பு இருப்பதாலும், இதைக் கொண்டு கூகிள் மேப் வரைபடங்களைப் பெற முடியும் என்பதாலும் இதை ஒரு குறைந்தபட்ச இடங்காட்டியாகப் (GPS) பயன்படுத்தமுடியும்.
இன்னும் சொல்லப்போனால், இது செல்பேசி என்பதால், எந்தவித இணைய இணைப்புகளும் இல்லாமலேயே தொடர்ச்சியாக இதன் இருப்பிடத்தை அறிந்துகொண்டு இதன் மூலம் செல்லிடச் சேவை (Location-aware service - அப்பாடா! ஆங்கிலத்தைவிடத் தமிழில் சுருக்கமாகச் சொல்லமுடிகிறது) கருவியாகப் பயன்படுத்த முடியும். உதாரணமாக, நீங்கள் இருக்கும் இடத்தின் அருகிலிருக்கும் உணவகம், அருகிலிருக்கும் திரையரங்கில் ஓடும் படம் போன்ற விஷயங்களை உடனடியாகப் பெறமுடியும்).
சொல்ல மறந்துவிட்டது - இதில் ஒரு 2 மெகாபிக்ஸல் காமெராவும் உண்டு. இதன் மூலமாக சிங்குலர் விடியோ செல்பேசிச் சேவையை வழங்கவிருக்கிறது.
இன்னும் சில விஷயங்கள் வெளிப்படையாக விளம்பரிக்கப்படவில்லை - உதாரணமாக மின்புத்தகப் படிப்பி. ஆப்பிளின் இந்த ஐஃபோன் வரவிருக்கும் விஷயம் அரசல் புரசலாகத் தெரிந்ததுதான் (அதிலும் சில வாரங்களுக்கு முன்னதாகவே சிங்குலர் நிறுவனத்துடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது உறுதியாக வெளியாகியிருந்தது). ஆர்வம் எல்லாம் அது எத்தகைய கருவியாக இருக்கும் என்பதுதான். பலருடைய எதிர்பார்ப்புகளையும் ஆப்பிள் தாண்டியிருக்கிறது என்று சொல்வது மிகையில்லை.
இந்தக் கருவியை வெளியிடுவதன் மூலம் ஆப்பிள் எத்தனை நிறுவனங்களுக்குச் சவால் விடுகிறது என்று பார்ப்போம்.
இப்படி பல முதலைகளை ஒரேசமயத்தில் ஆப்பிள் சந்திக்கவிருக்கிறது. இதில் வெற்றிபெற்றால் நான் ஆரம்பத்தில் சொன்னதைப்போல நம் செல்பேசி பாவனையையே மாற்றியெழுதும்.
நான்கு வருடங்களுக்கு முன் இதேபோலத்தான் ஐபாட் என்று ஒரு சாதனத்தை வெளியிட்டு நாம் இசையைத் துய்க்கும் விதத்தையே மாற்றியமைத்தது ஆப்பிள். எனவே இதுவும் சாத்தியம் என்றுதான் நம்புகிறேன். இன்னும் நம்பிக்கை வரவில்லை என்றால் இதைக் கொஞ்சம் கேளுங்கள் - சென்றவருடம் இதே நேரத்தில்தான் ஸ்டீவ் ஜாப், ஆப்பிள் கணினிகளில் இண்டெல் சில்லுக்கள் பயன்படுத்தப்படும் என்று சொன்னார். அடுத்த ஒருவருடத்திற்குள் அனைத்து ஆப்பிள் கணினிகளிலும் இண்டெல் இருக்கும் என்று சொன்னார் - ஆனால் அதற்கு ஒரு வருடம் தேவைப்படவில்லை. ஏழே மாதத்தில் ஆப்பிள் அதைச் சாதித்துக் காட்டியது.
இது மின்னணு உலகில் ஒரு யுகப்புரட்சி என்று என்னால் சவால் விட்டுச் சொல்லமுடியும்.
**
முதலில் பதிப்பித்தது: 09 ஜனவரி 2007