அல்லிக் குளத்தருகே

January 29, 2023 in நனவோடை by வெங்கட்ரமணன்4 minutes

கருங்குழிக்குக் கரையெல்லாம் கிடையாது. ஐப்பசியில் நிறைந்திருக்கும் குளம் ஆடியில் பாதியாகக் குறைந்து போயிருக்கும். கரையிலிருக்கும் ஒற்றை அரச மரமும் துவைக்கப் போடப்பட்டிருக்கும் கருங்கல்லும்தான் குளியல் துறைக்கான வரையறைகள்.

karunguzhi

என் சிறுவயது நினைவுகளில் அல்லி, ஆம்பல் குளங்களுக்கு நிறையவே இடமுண்டு. நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும்பொழுது குளிக்கக் குளத்திற்குச் செல்லும் அப்பாவுடன் கூடப்போவது வழக்கம். அதிகாலை எழுந்தவுடன் அம்மா தரும் கோதுமை அல்லது கேழ்வரகுக் கஞ்சியைக் குடித்துவிட்டு நானும் அப்பாவும் குளத்திற்குக் கிளம்புவோம். வீட்டிலிருந்து கிட்டத்தட்ட நான்கு மைல் தொலைவிலிருக்கும் குளம் அது. அதைவிட அருகில் மூன்று குளங்கள் உண்டு. ஆனாலும் ஊருக்கு வெளியே இருக்கும் கருங்குழி என்ற அந்தக் குளத்திற்குத்தான் அப்பா செல்வார்.

வழிமுழுகக் கேள்விகளும், பதில்களுமாய் நிறைந்திருக்கும். ஒரே வளைக்குள் நண்டும் பாம்பும் குடித்தனம் நடத்துமா? வாய்க்காலும், வரப்பும் காய்ந்து கிடக்கும் வயலில் முதல் மழை வந்தவுடனே எப்படி மீன்கள் வந்து நிறைக்கின்றன? குளத்திற்கும், வயலுக்கும் எந்த நீரிணைப்பும் இல்லையே, அப்படியானால் கோடையில் இந்த மீன்கள் எங்கே போயிருந்தன?

விவாதங்களும் கூடவே. வயலில் இருக்கும் கெண்டைகள் யாருக்குச் சொந்தம்? அவனவன் வயலில் இருப்பது அவனுக்குத்தான் சொந்தம்! ஆனால் நெல்லைப்போல அவர் போட்டு வளர்வதில்லையே கெண்டைகள். இத்தனை விதண்டாவாதங்களுக்கும் பொறுமையாகப் பதில்வரும். இன்னும் சில நாட்கள் ரெண்டு பேர் ஒரு காரியத்தைச் செய்யப் பத்து நாள் ஆகும்னா நாலுபேர் அதே காரியத்தைச் செய்ய எத்தனை நாளாகும் - ரீதியில் சொல்லிக் கொடுக்கப்படும் கணக்குகள். போகும் வழியெல்லாம், அதிகாலை இளங்குளிரில் விரியாமலிருக்கும் எருக்குப் பூக்களின் மொட்டைச் சொடுக்கி ஒலியெழுப்பிக் கொண்டே போவேன். வரப்பிலிருக்கும் நெருஞ்சி முட்கள் செருப்பில்லா காலில் தைக்க ஒற்றைக் காலில் நின்று பிடுங்கி எறிய வேண்டும். வயலில் கிடக்கும் தண்ணீர்ப் பாம்புகளைப் பார்க்கப் பயமாக இருக்கும்.

கருங்குழிக்குக் கரையெல்லாம் கிடையாது. ஐப்பசியில் நிறைந்திருக்கும் குளம் ஆடியில் பாதியாகக் குறைந்து போயிருக்கும். கரையிலிருக்கும் ஒற்றை அரச மரமும் துவைக்கப் போடப்பட்டிருக்கும் கருங்கல்லும்தான் குளியல் துறைக்கான வரையறைகள். அரச மரத்தில் இலைகளைவிட கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும் தொப்புள்கொடிகள்தான் அதிகமிருக்கும். குளிக்கும் துறையிலேயே முன்தினம் கட்டியிருந்த உடுப்பு துவைக்கப்படும். எங்கிருந்தோ பெயர்த்து எடுத்துவரப்பட்ட மைல்கல்தான் துவைகல். அசர்ந்தர்ப்பமாக அதையே குளக்கரையில் நட்டுவைத்தால் சிவபெருமானாக அவதாரமெடுக்கும் சாத்தியமும் உண்டு. பன்னிரண்டு வில்லைகள் கொண்ட சர்வோதயா நீலச் சவுக்காரத்தை இரண்டிரண்டாக வெட்டி வைத்திருப்பார், தினமும் ஒன்று குளத்திற்குப் போகையில் கூடவரும் முதல் நாள் மிஞ்சியது மறுநாளுக்கான சோப்புத் துண்டத்தின் மீது ஒட்டப்படும். இப்படி ஆறு நாட்கள் ஒட்டினால் எழாம் நாளுக்கான பாகம் தயாராகிவிடும். வருமானத்திற்குள் துல்லியமாக வரையறுத்துச் செலவு செய்பவர்கள் அம்மாவும், அப்பாவும். அப்பாவின் வேட்டியையை ஒற்றைக் கல்லில் அடித்துத் துவைக்கும் ஓசை வெற்று வெளியில் எதிரொலிக்கும். அதற்குப் பதில் சொல்வதைப் போல அவருடைய ஒற்றை முச்சிரைப்பு வந்துபோகும். துவைத்த வேட்டியின் ஒரு புறம் நான் பிடித்துக் கொள்ள மறுபுறத்திலிருந்து அவர் முறுக்கிப் பிழிவார். என்னுடைய பங்கைப் பற்றி அபரிமிதமான பெருமை பொங்கச் சிரித்துக் கொண்டிருக்கும்பொழுதே கைகளும் மெலிதாக முறுக்கப்பட, பிடி தளர்ந்து வேட்டியின் முனை நீரில் விழும். சிரித்துக் கொண்டே பற்றியெடுத்து இறுகப்பிழிவார் அப்பா. பின் இரண்டு கைகளையும் குழந்தையை ஏந்துவதுபோல ஏந்தி நிற்க பிழியப்பட்ட துணிகள் ஒவ்வொன்றாக என் கைகளில் இடப்படும். எல்லா துணிகளையும் பிழிந்தவுடன், மொத்தமாக வாங்கித் துவைக்கும் கல்லில் வைப்பார்.

என்னுடைய அரைக்கால் சட்டையும், அவருடைய இடுப்புத்துண்டையும் தவிர உடுத்தியிருக்கும் எல்லாவற்றையும் துவைத்து முடித்தபின் குளியல் தொடங்கும். நன்றாக நீச்சல் தெரிந்தவர் அவர். வேதாரணியத்தில் வளர்ந்தவர், சிறுவயதில் தினமும் கடலுக்குள் ஒன்றிரண்டு மைல்கள்வரை நீந்தியிருக்கிறார். ஒரு முறை ஒரு சாமியாருடன் சேர்ந்து கதிர்காமத்தில் தைப்பூசம் பார்க்க பாக் நீரிணைப்பைக் கடக்க முயன்றவர். பாதியில் பாட்டியைப் பற்றிய நினைவு வர சாமியாரை அந்தப்புறம் அனுப்பிவிட்டு வீடு வந்து சேர்ந்திருக்கிறார். ஆனாலும் எனக்கு அவர் நீச்சல் சொல்லிக் கொடுத்ததேயில்லை. சலனமெழுப்பாமல், மெல்ல குளத்திற்குள் நடந்து சென்று இடுப்பளவுத் தண்ணீருக்கு வந்தவுடன் என்னைத் தன் தோள்களில் ஏற்றி கொள்வார். அப்படியே அவருக்குக் கழுத்தளவு ஆழம் வரை நடந்து சென்று என்னை முன்புறமாக நீரில் தள்ளிவிடுவார். இந்த விளையாட்டு பெரும்பாலான நாட்களுக்கு உண்டு. பிறகு பின் வந்து என்னைத் தேய்த்துக் குளிப்பாட்டி கரைக்கு அனுப்புவார். துண்டையெடுத்து நானாகத் துவட்டிக் கொள்ள வேண்டும். ஒற்றைக் கோழிக்குஞ்சைப் போல இடுப்புத் துணியின் ஈரத்திலும் காற்றின் படபடப்பிலும் நடுங்கிக் கொண்டு நானிருக்க அப்பா குளித்து முடித்து வருவார்.

வீடும் திரும்பும் வேளை, வீட்டில் கட்டிக் கொள்வதற்கான நான்கு முழ வேட்டியினை இரண்டாக மடித்துக் கொடுப்பார். தோளுக்கு மேல் கையுயர்த்திப் பற்றிக்கொண்டே நடப்பேன். அதேபோல் வேலைக்குக் கட்டிக் கொள்வதற்கான எட்டுமுழ வேட்டியை அப்பா உயர்த்திப் பிடித்து வருவார். காற்றில் படபடக்கும் வேட்டிகள் குளங்கடந்து வரப்புகளில் நடந்துவரும்பொழுது உலர்ந்து கொண்டே வரும். சாலை சேரும் நேரத்திற்குள் காய்ந்து முடித்திருக்கும். மதகடியில் நிறுத்தி மடித்துக் கையில் கொடுத்துவிடுவார். குளித்து முடித்துவிட்டுத் வரும்பொழுது

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலம்தரம் செயும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும் வலம்தரும் மற்றும் தந்திடும், பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்

போன்ற அற்புதமான பாக்கள் மனனம் செய்வதற்காகத் தினமும் சொல்லப்படும். திருமங்கை ஆழ்வார் மனதில் நின்றவுடன் “திருவினும் திருவாய்த் தெளிவினும் தெளிவாய்” என்று உமறுப்புலவரோ, சிவவாக்கியாரோ அந்த இடத்திற்கு வந்து சேர்வார்கள்.

வயலில் வேலை செய்பவர்கள் வாத்தியாருக்காக ஒரு நிமிடம் களைபறிப்பதை நிறுத்திவிட்டுத் தலையை நிமிர்த்தி முகம் மலரச் சிரிப்பார்கள். சில நாட்கள் நிற்கச் சொல்லி அங்கேயே வரப்பில் விளைந்திருக்கும் கருணைக்கிழங்கு, சேம்பு இலை, பயத்தங்காய் போன்றவற்றைப் பறித்துக் கொடுப்பார்கள். சில சமயங்களில் எனக்காக மடியில் கட்டிக் கொண்டுவரப்பட்ட நெல்லிக்காய், காரைப்பழம், கிளாக்காய் அல்லது சமையலுக்கு அகத்திக்கீரை, முருங்கைக்காய் போன்றவற்றைக் கொடுப்பார்கள். நாங்களாக வயலுக்கருகில் முளைத்துக் கிடக்கும் வல்லாரை, பொன்னாங்கன்னிக் கீரைகளைப் பறித்துவருவதும் உண்டு. சிலபொழுது அம்மாவுக்கு அறைத்துத் தலையில் தேய்த்துக் கொள்ள கரிசலாங்கன்னிக் கீரையும் பறிப்போம். அப்பா அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் நேரம் வரப்பில் பூத்துக் கிடக்கும் தும்பைப் பூக்களை அம்மாவின் பூஜைக்காகத் திரட்டிக் கொள்வேன்.

இந்தக் குளியலுக்காகத் தினசரி இரண்டு மணி நேரம் செலவாகும். இன்றைக்குக் காலை குளிக்கும்பொழுது தண்ணீரைத் திறந்துவிட்டு முப்பது நொடிகளாகியும் குழாயில் வெந்நீர் வராமல் போக ஏதோ யுகம் கடப்பதைப் போல இருந்தது. பொறுமையின்மையும், எரிச்சலும் சுட்டுப் பொசுக்கின. அந்த முப்பது நொடிக்குள்ளே தினமும் செல்லும் வண்டியைத் தவறவிடுவதைப் போன்ற பிம்பம் வந்துபோயிற்று.

என்ன ஆயிற்று நம் வாழ்வுக்கு? எங்கே தொலைத்துவிட்டோம்?


முதலில் பதிப்பித்தது: 16 பெப்ருவரி 2005

Water Lily, Photo by Alfred Schrock on Unsplash